பக்குவப்படுதலின்
ஞானவெளி
கதவுக்கு வெளியே
எனை நிறுத்தியிருக்கிறது
அடைத்த கதவு திறந்து
மீட்டெடுக்க ஒப்புக்கொள்ளும்
தருணங்களின் பொறுமைக்காக
புடம் போடும் காலத்தின்
கட்டளைக்கு காத்திருப்பேன்
இருண்மைக்கும் இம்மைக்கும்
இடையே உழலும் பேரியக்கம்
நிபந்தனையென்ற பெயரில்
சுழலும் இப்பிரபஞ்சம் முழுதும்
அலுப்பற்ற
அன்பினைச் சொல்லும்படி
ஏவுகிறது என்னை
இடரினும் தளரிலா
பொழுதாக்கிக் கொள்ள
அமைதியையும்
பொறுமையையும்
போதித்த புத்தனை
எனக்கும் சிறிது இரவலாய்
தரக் கேட்கிறேன்
பதிலற்று இன்னும்
மௌனித்தே கடக்கிறான்.
மௌனம் வன்மையான ஆயுதம்
அதைக் கைக்கொள்வது
எப்படி என்றால்
ஓயாத புன்னகையை
வீசி வீற்றிருக்கிறான்.
-உமா மஹேஸ்வரி பால்ராஜ்