மாகாண எல்லைகளெல்லாம் மனிதர்களுக்குதான். இயற்கைக்கு அல்ல. அரிசோனா மாகாணத்திலிருந்து கிளம்பி அதன் எல்லையைக் கடந்து அருகேயுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் நவேடா எனும் பகுதியின் தேசியப் பூங்காவான மரணப் பள்ளத்தாக்கை அடைந்தோம். அப்பாலைநிலத்தைக் காண வழிகாட்டியாகக் கொடுத்திருந்த கையேட்டில் குறிப்பிட்டிருந்தபடி, சாகசமான பயணங்களைத் தவிர்த்துவிட்டு எளிதாக இருக்கின்ற பயணமாக மூன்று இடங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
முதல் பார்வையில் பெற்ற அனுபவங்களை, கடந்த கட்டுரையில் பகிர்ந்து கொண்டேன். பாலை நில இயல்புகளை அருகே சென்று ரசித்தும் கவனித்தும், அங்குள்ள பலகைகளில் கொடுக்கப்பட்டிருந்த தகவல்களை அறிந்தும் வியந்தபோது, பாலை நிலத்தைப் பற்றிய புரிதலில் ஆழமான பார்வை நம்மிடம் வந்துவிடுகிறது. கையேடுகளில் எச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் கொடுத்திருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கு என்பது மிகவும் தனிமையான இடம் என்பதால் நமது பாதுகாப்பிற்கு நாமே பொறுப்பாகிறோம். நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவு வரை செப்பனிடப்படாத பாதைகளில் வாகனத்தைத் தவிர்த்துவிட்டு பாதசாரியாக பயணம் செய்யலாம். நாம் எடுத்துச் செல்லும் வாகனம் சாலையில் மட்டுமே இருக்கவேண்டும்.
இங்குள்ள பாறைகள் வாகனத்தைப் புரட்டிவிட்டு மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதால் கவனமாக ஓட்டிச் செல்ல எச்சரிக்கிறார்கள். ஜி.பி.எஸ். சாதனங்கள் இப்பகுதியில் சரியாக வேலை செய்வதில்லை என்பதால் நமது தொலைபேசியைக் கொண்டு வரைபடத்தை நம்பி பயணம் செய்ய இயலாது. அப்படியே அது காட்டும் வழி நமக்குக் கிடைத்தாலும், அது சரியானதாக இருக்குமா என்பதில் நம்பகத்தன்மை இல்லவேயில்லை. எனவே தொழில்நுட்பத்தை நம்பி பயணம் மேற்கொள்ளாமல் அவர்கள் கொடுக்கின்ற வரைபடப் பாதையை மட்டுமே கையேடாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. மழை புயல்களின்போது, பள்ளத்தாக்குகளில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் உயரமான நிலத்திற்கு விரைவாக சென்றுவிட வேண்டும். வாகனங்கள் ஓட்டும்போது சாலைகளிலும் நீர் ஓடும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும்.
வெளிப்புறத்தில் கவர்ச்சியாக இருக்கின்ற விலங்குகளோ பூச்சிகளோ, பார்ப்பதற்கு அடக்கமாக இருப்பதுபோல தோன்றினாலும், அவற்றைத் தீண்டினால் நம்மைக் கடித்துவிடவும், நோய்களைப் பரப்பவும், ஆபத்தான காயங்களை ஏற்படுத்தவும் செய்யலாம் என்பதால் அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். இங்குள்ள தாவரங்கள்கூட தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக விஷத்தை உமிழும் தன்மையாக இருக்கலாம் என்பதால் அவற்றைத் தொடுவதும் கூடாது.
விஷ ஜந்துகளான சாரைப் பாம்பு, தேள், கருப்பு சிலந்தி போன்றவை நாம் கண்களால் பார்க்கமுடியாத இடங்களில் இருக்கலாம் என்பதால் அவ்வாறான பொந்துக்களில் நமது கை, கால்களை நுழைப்பதைத் தவிர்க்கவேண்டும். இவ்விடத்திற்கு நமது செல்லப் பிராணிகளை அழைத்து வர அனுமதி இல்லை. இயற்கையாக இங்கு வாழ்கின்ற பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவு கொடுப்பதையும் கட்டாயமாக தவிர்க்கச் சொல்கிறார்கள். அதனை சட்டத்திற்குப் புறம்பான தாக மரண தண்டனைக்கு ஒப்பானதாகப் பார்க்கிறார் கள். அதனை மீறி உணவு கொடுத்தால், ஒரு விலங்கினை அதன் உணவுச் சங்கிலியிலிருந்து பிரித்து, பிச்சைக்காரனாக மாற்றி, அதன் ஆரோக்கியத்தைக் கெடுத்து, நோய்க்கு ஆளாகும்வண்ணம் அதன் இயற்கையைச் சிதைத்துவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு இருக்கிறது.
இங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தும்படியாக போரக்ஸ் சுரங்கங்களை அமைத்து அத்தனிமங்களை சுரண்டியிருக்கிறார் கள். இப்பொழுது பயன்பாட்டில் இல்லாமல் விட்டுச்சென்றபடியால், அதிர்வில்கூட இடிந்து விழும்படி நிலையற்றதாகவும், விஷ வாயுக்களால் நிரம்பியும் இருக்கலாம் என்று அப்பகுதிக்குச் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறார் கள். பொதுவாக இப்பகுதியில் சில இடங்கள் கால வேறுபாடுகளில் உருவான மணல் குவியலா லான மலைப்பகுதிகளைப் போல உறுதியற்ற தன்மை யோடு எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்க லாம் என்பதால் எச்சரிக்கை தேவை. இங்குள்ள சிறு துரும்பைக்கூட எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அடுத்து வருகின்ற பார்வையாளர் கள் ரசிக்கும்படி, இருக்கும் இடத்திலேயே விட்டுச்செல்வதை வேண்டுகிறார்கள். குளிரைத் தாங்குவதற்கு முகாம்களில் வழங்குகின்ற தீக்குழி களில் மட்டுமே தீமூட்டிக் கொள்ளலாம்.
அங்குள்ள காய்ந்த சுள்ளிகளைக்கூட எவரும் சேகரிக்கக் கூடாது.
இவ்வாறான எச்சரிக்கைகள் எல்லாம் பார்வையாளர்களாக வருகின்ற நமக்குத் தெரிவிக்கும் படி ஆங்காங்கே பலகைகள் வைக்கப்பட்டிருக் கின்றன. இப்பகுதிவாழ் பழங்குடியினர்களான திம்பிஷா சோஷோன் எனும் பிரிவினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது மூதாதையரின் நிலங்களாக இங்கு மட்டும் இவர்களுக்கு இன்றளவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் உள்ள சிவப்புப் பாறைகளைக் குறிப்பிடும்படியாக இவர்களை திம்பிஷா என்று அழைக்கிறார்கள். நமது இந்திய பழங்குடிகளைப் போலவே இயற்கையை அழிக்காமல் அவற்றைப் பாதுகாக்கும் உணர்வோடு ஒன்றி வாழ்கின்ற மக்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
சுமார் மூன்று முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்த நீரின் ஓட்டம் மற்றும் பூகம்பங் களின் வன்முறையான நடவடிக்கைகளால் உருவாகி யிருக்கும் அந்த நிலத்தின் வறட்சியான காட்சியானது இன்றளவும் அப்படியே இருக்கிறது.
மலைகளும் பள்ளத்தாக்குகளும் மழை நீரால் நிரம்பியபடி, வண்டல்களையும் எரிமலை சாம்பல்களையும் அடித்துவந்து கீழ் பகுதிக்கு கொண்டுசேர்த்து தடித்த படிவுகளை உருவாக்கி யிருக்கிறது. அவ்வப்போது ஏற்படுகின்ற நில அதிர்வு செயல்பாடுகளும், மழைப் பொழிவுகளும் மென்மையான பாறைகளை அரிக்கும் நிலையில் இன்றைய அழகான நிலப்பரப்பாக மலையும் மடுவும் பரந்த வெளியாக அமைந்த பாலைவனமாக விசித்திரமாக இவ்விடம் காட்சியளிக்கிறது. இவ்வாறான தொடர்ந்த செயல்பாடுகளால் பூமியின் மேற்பரப்பு எப்பொழுதுமே மாறுதலுக்கு உட்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது. இங்குள்ள தரிசு மலைகள் பல்வேறு நிறங்களால் ஆனதாக இருக்கின்றன. எரிமலை செயல்பாடுகளால் வெளிப்படுகின்ற அதன் குழம்பிலிருந்து இதன் கரிய நிற அடுக்குகள் உருவாகி இருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து வெளியேறுகின்ற சூடான நீரில் போரக்ஸ், ஜிப்சம், கோல்மனைட் மற்றும் கால்சைட் போன்ற தனிமங்கள் வெளியேறி இங்கு படிவாக படிந்திருக்கின்றன.
இங்குள்ள தனிமங்களை சுரண்டுவதற்காக சுமார் 1882-ஆம் ஆண்டுகள் வாக்கில் உருவான சுரங்கங்கள் அதிக லாபங்களைக் கொடுத்திருக் கின்றன. பெரிய அளவில் திறந்தவெளியாக குழி களைக் கொண்ட இந்தச் சுரங்கங்களுக்கு அப்பகுதி யில் வாழ்கின்ற பொதுமக்கள் எதிர்ப்பைத் தெரிவித்த தால், 1996-ஆம் ஆண்டுவாக்கில் சட்டம் இயற்றப் பட்டு, இந்தச் சுரங்கங்களின் மீது நடவடிக்கை யெடுத்து, அதன் தொடர் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தியபின்பு, இப்பகுதியை தேசியப் பூங்காவாக அமெரிக்க உள்துறை அரசு அறிவித்திருக்கிறது.
பார்வையாளர்கள் இந்த இடத்தின் தன்மையை அறிந்துகொண்ட பிறகே பார்வையிட வேண்டும். ஒவ்வொரு 1000 அடி உயரம் செல்லச் செல்ல 5 டிகிரி பாரன்ஹீட் குளிராக இருப்பதாகவும், ஒவ்வொரு 300 மீட்டர் உயரமும் 3 டிகிரி செல்சியஸ் குளிராக இருக்கும் என்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொதுவாக கோடை நாட்களில் 120 டிகிரி பாரன்ஹீட் (49 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்றும் இரவு நேரங்களில் குறைந்தது 100 டிகிரி பாரன்ஹீட் இருப்பதாகவும் குறிப்பிட்டு, புவி வெப்பமடைவதால் இந்த மரணப் பள்ளத்தாக்கில் கோடை காலத்தின் வெப்பநிலை இன்னும் தீவிரமாக இருக்கிறது என்பதையும் அறிவிக்கிறார்கள். உலக சாதனை பதிவாக 1913-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவு வெப்பமாக, மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி பாரன்ஹீட் (57 டிகிரி செல்சியஸ்) இருந்ததாக பதிவு செய்திருக்கிறார் கள். உலகிலேயே லிபியாவில்தான் வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்றாலும் அந்த சாதனையும் இதனால் உடைக்கப்பட்டுவிட்டது.
பொதுவாக பாலைவனம் என்றாலே 10 அங்குலத்திற்கும் குறைவான மழைப்பொழிவைக் கொண்டிருக்கும். ஆனால் இங்கு இரண்டு அங்குலத் திற்கும் (5 செ.மீ) குறைவான மழைப்பொழிவைக் கொண்டு மிகவும் வறண்ட பாலைவனமாகத் திகழ்கிறது. சில ஆண்டுகளில் இங்கு மழையே இல்லாமலும் இருந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறான வறண்ட காற்று இங்குள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்களிடமிருந்து ஈரப்பதத்தை விரைவாக ஆவியாக்கும்படி இருக்கிறது. எனவே இங்கு நாம் நிழலில் இருந்தால்கூட ஒரு நாளைக்கு இரண்டு காலன் தண்ணீரை நமது உடம்பிலிருந்து இப்பகுதி வெளியேற்றி விடுகிறது. எனவே குளிர்காலங்களிலும் இங்கு நிறைய குடிநீரை எடுத்துச் செல்லவேண்டும். கோடை காலத்தின் மழைப் பொழிவு இங்கு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அச்சமயம் இப்பகுதியில் நடந்து செல்வதற்கு பரிந்துரை இல்லை.
மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் இங்கு உயிர்கள் வாழாமல் இல்லை. மணல் குன்றுகளில் நரிகள், கங்காருகள், எலிகள் போன்றவை வாழ்கின்றன. பாலைவனத்தின் நடுவிலுள்ள நீரூற்றுகளில் மீன்களும் வாழ்கின்றன. குறிப்பிட்ட உயரத்தில் இங்குள்ள மலைகள் பைன் மரங்களால் மூடப்பட்டுள்ளன. பிரிஸ்டல் கோன் (இழ்ண்ள்ற்ர்ப் ஸ்ரீர்ய்ங்) என்னும் பைன் மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இருக்கின்றன. குளிர்காலத்தில் சுற்றியுள்ள மலைகள் பனியால் மூடப்பட்டு, பிப்ரவரியில் பசுமையான மற்றும் வண்ணமயமான காட்டுப் பூக்கள் பூக்க ஆரம்பிப்பதையும் நாம் காணலாம். வெப்பமும் இங்கு நிலவும் வறட்சியும் மரணப் பள்ளத்தாக்கின் பாதிக் கதையை மட்டுமே கூறுகின்றன. இதமான வானிலை, வளமான நீரூற்று, உயர்ந்த மலைகள் ஆகியவற்றைக் கொண்ட நிலமாகவும் இது இருக்கிறது. நீர் இல்லாமல் இந்தப் பாலைவனம் உருவாகவில்லை.