கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
-என்பார் வள்ளுவப் பேராசான்.
இதன் பொருள், அறத்தை மறந்து குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலைகாரர்களைவிடக் கொடிய தன்மை கொண்டது என்பதாகும். இதன் பொருளைத்தான் மத்திய, மாநில அரசுகளின்மூலம் நாம் வலியோடு அனுபவித்துவருகிறோம்.
இப்போது, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் வரும் 19-ஆம் தேதிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23-ல் வாக்குகள் எண்ணப்படும்போது, இந்தியாவின் தலையெழுத்து எப்படியென்பது தெரிந்துவிடும். நம் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது. அது எப்படி நடத்தப்பட்டது?
ஜனநாயகத்தின் திருவிழாவாய் மகிழ்வோடு நடக்க வேண்டிய இந்தத் தேர்தலை, தன் அதிகாரத்தை வைத்து விருப்பம்போல் விளையாடி, ’ஏடாகூடக் கூத்தாக்கிவிட்டது மத்தியில் இருக்கும் மோடி அரசு. சொல்லப்போனால் ஜனநாயகத்தை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள்.
இங்கே நடப்பது மக்களாட் சியா? சர்வாதிகாரிகளின் கொடுங்கோலாட்சியா? என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கி றார் மோடி. மோடி ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்ச ஆட்ட மல்ல. விவசாயிகள் தொடங்கி வியாபாரிகள் வரை, சகல தரப்பு மக்களின் நிம்மதியையும் பறித்த ஆட்டம் அது.
இந்தியாவை இந்து நாடாக ஆக்கவேண்டும் என்று பா.ஜ.க. பலவிதங்களிலும் பஜகோவிந்தம் பாடிக்கொண்டிருக்கிறது. இன்னும்கூட பாபர் மசூதி முழுதாய் இடித்துவிட்டு அங்கே ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம் என்று அமித்ஷாவும் மத்திய மந்திரிகளும் சங்பரிவார் கும்பலோடு சேர்ந்துகொண்டு, சிறுபான்மை சமூகத்தினரை பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இது மதசார்பற்ற நாடு என்றபோதும், துணை ஜனாதிபதியாக இருக்கும் வெங்கையா நாயுடுவே, இந்துத்துவா வெறியை மறைமுகமாக போதிக்கிறார்.
கடந்த வாரம் சென்னை, வேல்ஸ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, "ஆர்.எஸ். எஸ்.சின் தாரக மந்திரமான ‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே இனம் என்பதே நமது முழக்கம்'’ என்று கூச்சமில்லாமல், தன் பொறுப்பை உணராமல் பிரகடனம் செய்திருக்கிறார்.
பல்வேறு இனங்களையும், மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட மக்கள், இங்கே சகோதர உணர்வோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் நிலையில்...
அதற்கு விரோதமாக, ’ஒரே இனம், ஒரே மொழி’ என்று சொல்லி இந்தியையும் இந்துத்துவாவையும் அவர் கொண்டுவரத் துடிக்கி றார். இப்படிப்பட்டவர் நாளை ஜனாதிபதியாக ஆனால் நாடு என்ன ஆகும்? சிறுபான்மை மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? ஒருமைப்பாடும் ஒற்றுமையும் எப்படி இங்கே தழைக்கும்? என்ற கவலை நம் மனதில் மேலோங்குகிறது.
*
ஜனநாயகத்தைக் காப்பாற்ற நமக்குக் கிடைத்திருக்கும் வலிமையான ஆயுதமே வாக்குச் சீட்டு. அதை உரிய வகையில் நாம் பயன்படுத்தினால், நாட்டின் முகவரியை நம்மால் மாற்றிவிட முடியும். அதன் வலிமையை ஜனநாயக விரோதியான மோடி யும் அறிவார். அதனால்தான் தன் ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், வாக்குச் சீட்டைத் தனக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள் என்பதையும் புரிந்துவைத்திருக்கிறார்.
அதனால்தான், மீண்டும் பிரதமராகும் வெறியில் அவர், தேர்தல் ஆணையத்தையே தன் கையில் எடுத்துக்கொண்டார். அதுவும் அதிகாரத்தில் அமர்ந் திருக்கும் மோடிக்கும், மோடிக்கு எடுபிடி வேலை பார்க்கும் எடப்பாடிகளுக்கும் கைப்பிள்ளையாகவே மாறி அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்கிறது.
தமிழகத்தில் எதிரணியான தி.மு.க. அணிக்கு செல்வாக்கு அதிகமுள்ள பகுதிகளைக் குறிவைத்து, அங்கே ஏராளமானவர்களுக்கு ஓட்டு இல்லை என்ற நிலையை அது உருவாக்கிவிட்டது. குறிப்பாகக் குமரி மாவட்ட மீனவர்கள், அதிகாரவர்க்கத்துக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன், அங்கே இருக்கும் 48 மீனவ கிராமங்களிலுள்ள பலரின் வாக்குகளையும் சத்தமில்லாமல் அது நீக்கிவிட்டது. இதேபோல் தமிழகம் முழுக்க கொத்துக் கொத்தாய் வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள். அதே நேரம் ஓட்டே இல்லாத நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்திருக்கிறார்கள் இங்குள்ள தேர்தல் அதிகாரிகள். இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது? ஆட்சியில் இருக்கும் பெருந்தலைகள் தேர்தல் விதிகளை வெளிப்படையாக மீறுவதால், அதை தைரியமாகத் தேர்தல் அதிகாரிகளும் பின்பற்றுகிறார்கள். தேர்தல் ஆணையமே ஆளும்கட்சிக் கூட்டணியில் சேர்ந்ததுபோல் செயல்பட்டது. செயல்படுகிறது;
*
எதிர்கட்சிகளை மிரட்ட வருமானவரித் துறையையும் கையில் எடுத்தது மோடி அரசு. அதனால் அது எதிர்கட்சியினரை மட்டுமே குறிவைத்தது. பிரச்சார நேரத்தில்கூட திடீர் ரெய்டுகள் நடத்தி, அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்தது. வேலூரில் தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமான ஒருவரின் மில்லில் ரெய்டுசெய்து, பணத்தைப் பறிமுதல் செய்த வருமான வரித்துறை, அவரைவிடப் பலமடங்கு வாரி இறைத்த ஆளும் கட்சித் தரப்பின் வேட்பாளர் சி.வி. சண்முகத்தின் தெருவழியாகக்கூட ஏன் போகவில்லை?
தூத்துக்குடியில் பா.ஜ.க. தமிழிசை தங்கியிருந்த திசைப்பக்கம் கூடப் போகாத வருமான வரித்துறைதான், தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வீட்டைக் கடைசி நேரத்தில் சோதனையிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கே ஒரு ரூபாயைக்கூட அவர்கள் கைப்பற்றவில்லை. மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு ரெய்டு. தேர்தலுக்கு முதல்நாள் வரை, எதிர்கட்சிகளையே சுற்றிச் சுற்றி வந்த வருமான வரித்துறை, அதிகாரிகள் துணையோடு தேனியில் ஓ.பி.எஸ். மகன் நடத்திய கரன்ஸித் திருவிழாவைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி அரசு எந்திரங்கள் அங்குள்ள மோடிக்கும் இங்குள்ள எடப்பாடிக்கும் வெட்கமே இல்லாமல் கைப்பாவை ஆகிக் காவடி தூக்கின.
*
இது போதாதென்று... மோடியும் எடப்பாடியும் மக்களை ஏமாற்ற கோயபல்ஸாக மாறி விதவிதமாகப் பொய்ப் பிரச்சாரத்தையும் சளைக்காமல் செய்தார்கள்.
மத்திய அரசோடு சேர்ந்துகொண்டு எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கொண்டுவந்து, ஏழெட்டு மாவட்டத்தில் இருக்கும் மக்களையும் விவசாயிகளையும் கதற வைத்தவர்தான் இந்த எட்டப்பர் எடப்பாடி. இந்தத் திட்டத்தின் ஓட்டை உடைசலைப் பார்த்த உயர்நீதிமன்றம், கையகப்படுத்த அரசு போட்ட ஆணையை ரத்து செய்தது. விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களை உடனே அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணையும் பிறப்பித்து, நிலம் இழந்த விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது. தேர்தல் வந்துவிட்டது என்றதும், "எட்டுவழிச்சாலைக்கான தடையை நீக்க, நாங்கள் மேல்முறையீடு செய்யமாட்டோம்' என்றார் எடப்பாடி. அதே நேரம் தேர்தல் பிரசாரத்துக்காக சேலம் வந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி, “"தமிழக முதல்வர் எடப்பாடி எட்டுவழிச் சாலையைக் கொண்டுவர வேண்டுமென்று அதிகமாக ஆசைப்படுகிறார். அதனால் விவசாயிகளைச் சம்மதிக்கவைத்து, அதைக் கொண்டுவருவோம்'’என்றார் அழுத்தமான குரலில்.
இதை அந்த மேடையில் இருந்த எடப்பாடியும் எதிர்க்கவில்லை. இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட பா.ம.க. ராமதாஸும் எதிர்க்கவில்லை. அப்படிப்பட்ட மகா நடிகர்கள்தான் அவர்கள். அடுத்துவந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், "உயர்நீதிமன்ற தடையாவது மண்ணாவது. எட்டுவழிச் சாலை உறுதியாகக் கொண்டுவருவோம்' என அதே மேடையில் எடப்பாடியை வைத்துக்கொண்டு சூளுரைத்தார். வாயையும் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருந்தார்கள் ஆட்சியாளர்கள். இதில் எத்தனை பித்தலாட்டம், ஏமாற்று. சே... காரித்துப்பத் தோன்றுகிறது. கடந்தவாரம் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய எடப்பாடி,’ "மே 19-ல் இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இருக்கிறது. அது முடிந்தபிறகு மேல்முறையீடு குறித்து முடிவெடுப்போம்'’ என்று சொன்னாராம். இப்படி ஓட்டு அரசியலுக்காக மக்களை இவர்கள் அநியாயமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே கொந்தளிப்பில் இருக்கிறது. இதைப் பார்த்த அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் வாய்ச்சவடால் விட்டது. இதைப் பார்த்த மத்திய மந்திரி பியூஷ் கோயல் "”நீட் தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.வை அதற்கு சம்மதிக்க வைப்போம்'' என சென்னையிலேயே பேட்டி யளித்தார். இப்படி ஏட்டிக்குப் போட்டியாய் அரசியல் செய்கி றார்கள்.
*
இதுமட்டுமா? பிரதமராக இருக்கும் மோடியே தேர்தல் விதிகளைத் தன் காலடியில் போட்டு மிதித்து, ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டின் பாதுகாப்புத் துறையையும் ராணுவத்தையும் இழுக்கக்கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால் மோடியோ, மகாராஷ்டிர மாநில லத்தூரில் பிரச்சாரம் செய்தபோது, "புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உங்கள் வாக்குகளை அர்ப்பணியுங்கள்' என்று, அநியாயமாகக் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து வாக்குக் கேட்டார். இது தொடர்பாக வழக்கறிஞர் மகேந்திரசிங் என்பவர் நீதிமன்றத்தில் மோடிமீது வழக்குப் போட்டிருக்கிறார்.
அதேபோல், தேர்தல் ஆணையம், சபரிமலை விவகாரத்தை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் தடை விதித்தது. ஆனால் மோடியோ, இங்குள்ள தேனியில் பிரச்சாரம் செய்தபோது "சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்டுகளும் முஸ்லிம்களும் ஆபத்தான விளையாட்டை விளையாடினார் கள். நாங்கள் சரிசெய்தோம்' என்று குரல் எழுப்பினார்.
இதைக்கண்டு அங்குள்ள சி.பி.எம். கட்சி அதிர்ந்துபோனது.
அதன்சார்பில் நிலோத் பால் பாசு, தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறார்.
இதேபோல் வயநாட்டில் பேசிய மோடி, "சிறுபான்மை மக்களின் வாக்குகளை நம்பி, டெல்லியில் இருந்து இங்கே ராகுல்காந்தி ஓடிவந்திருக்கிறார்' என்று தேர்தல் விதிக்கு எதிராக, இனத்தை மையமாக்கிப் பேசினார். இது தொடர்பாக காங்கிரசின் மூத்த வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி, தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருக்கிறார்.
இப்படி நிறைய அத்துமீறல்களில் ஈடுபட்டார் மோடி.
வாக்குப் பதிவின்போதும், பிரதமர் மோடி, தேர்தல் விதிமுறைகளை மதிக்கவே இல்லை. 23-ஆம் தேதி குஜராத் மாநில அகமதாபாத் நிஷான் உயர் நிலைபள்ளியில் ஓட்டுப் போடப்போனபோது, வழக்கமாகப் பயன்படுத்தும் குண்டு துளைக்காத காரை ஒதுக்கிவிட்டு, வாக்காளர்களை ஈர்க்க திறந்த வாகனத்தில் ஊர்வலம்போல் சென்றார் மோடி. ஓட்டுப்போடக் காத்திருந்தவர்களிடம் கையசைத்து மறைமுகமாக ஓட்டுக்கேட்டார். மேலும் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டபின், மை பூசிய தன் விரலை, அங்கிருந்தவர்களிடம் உயர்த்திக் காட்டியதோடு, அதே கோலத்தில் சிறிது தூரம் நடந்துவந்தார். அதுமட்டுமல்லாது அங்கே இருந்த பத்திரிகையாளர்களிடம் பேசும்போது... "நல்ல எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்' என்று மறைமுகமாக பா.ஜ.க.வுக்குப் பிரச்சாரமும் செய்தார்.
அவரோடு சென்று வாக்களித்த அமித்ஷாவும், மோடி பாணியிலேயே செயல்பட்டார்.
இதேபோல் 26-ஆம் தேதி வாரணாசியில் போட்டியிட மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கு முதல்நாளான 25-ஆம் தேதி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து பிரம்மாண்டமான பேரணியாகச் சென்று, அதிரடிப் பிரச்சாரம் செய்தார். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்ட எதிர்கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம்
அனுமதி தருமா? எல்லாம் மோடிக்காக நிகழும் மோடி வித்தைதான்.
*
இன்னொரு விவகாரத்தையும் கவனிக்கவேண்டும். தேர்தலுக்கு முன்பே, வாக்குப்பதிவு எந்திரங்கள்மீது பலத்த விமர்சனம் எழுந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசரமாக அறிவாலயம் வந்து, "மோடி ஆட்கள், அதிகாரிகள் துணையோடு ஓட்டு மெஷின்களில் குளறுபடி செய்யப் பார்ப்பார்கள். கவனமாக இருங்கள்' என்று அறிவுறுத்திவிட்டுப் போனார். அவர் சொன்ன மாதிரிதான் இங்கே எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.
18-ஆம் தேதி தமிழகம் முழுக்க மொத்தம் 2,680 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கியது. அன்று மதியத்திற்குள் அதில் ஏறத்தாழ 500 எந்திரங்கள் பழுதாகிவிட்டன. இதனால் பல இடங்களில் வாக்குப் பதிவில் குளறுபடி ஏற்பட்டது. இந்த லட்சணத்தில் வாக்குகளை எண்ணும்வரை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய வாக்கு எந்திரங்களும், பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கின்றன. மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள், அமைச்சர் செல்லூர் ராஜு தூண்டுதலில் கலெக்டர் நடராஜனுக்குத் தெரிந்து நள்ளிரவில், காவல் துறையின் பாதுகாப்புக்கு நடுவிலும் பெண் தாசில்தார் சம்பூரணம் என்பவர் சென்று மூன்று மணி நேரத்திற்கும்மேல் அங்கேயே இருந்திருக்கிறார். இந்த விவகாரம் இப்போது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, எண்ணப்படும் வரை மக்கள் போட்ட வாக்குகள் பத்திரமாக இருக்குமா? என்ற சந்தேகமும் அச்சமும் எழுந்திருக்கிறது.
*
இதையெல்லாம் பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா? நாம் எங்கே, எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்? என்ற கவலை இதயத்தைக் கவ்வுகிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.
இந்நிலையில்...
தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில், தங்கம் வென்று இந்தியாவிற் குப் பெருமை சேர்த்திருக்கிறார் நம் தமிழகத் தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து. அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கக்கூட எடப்பாடி அரசின் சார்பில் முக்கியப் புள்ளிகள் போகவில்லை.
ஒரு தாழ்த்தப்பட்ட பெண் என்பதாலும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும் மோடி அரசும் , நம் தங்கமங்கையை அலட்சியப்படுத்திவிட்டது. இப்படிப் பட்ட கொடுமைகளுக்கு என்ன தீர்வு?
-கவலையோடு
நக்கீரன்கோபால்