வெளிப்புறப் படப்பிடிப்பில்
வீடுகள் புகுந்து நளனாக மாறியவன்
தானே தன்னைச் சமைத்து-
காலனின் பெரும்பசிக்கு- தன்னையும் ஒரு
கவளமாய்க் கொடுத்தவன்...
மடாதிபதிகளும் பீடாதிபதிகளும்
மறந்த பசியாற்றும் மருத்துவத்தை- ஒரு
மனிதனாய் இருந்து நடத்தியவன்!
சிதிலமடைந்து சீண்டப்படாமல் இருந்த
சிவன் கோயில்களை
சீரமைக்க முயற்சித்த அறநிலையத்துறை அவன்!
நடைபாதைக்கிழவிகளுக்கு நடுக்கம்போக்க போர்வைகள் ஈந்த நேசநெசவாளன் அவன்!
எழுத்துக்களால் "இரக்கம்' என்று சரியாக
எழுதத் தெரியாதவன்- ஒரு சின்ன இதய இடத்தில்
மிகப்பெரிய இரக்கத் தொழிற்சாலை நடத்தியவன்...
"தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை இவன்
தவறாமல் தாளம் விழுமே''- என்று
கண்ணதாசனுக்கே "கவி'' எழுதிய வரிகளை
கடன்வாங்கி-
வட்டியுடன் வார்த்தைகளாய்க் கொடுப்போம்...
மனிதனைப் பாடு மனமே!
மயில்சாமி மனிதனைப் பாடு மனமே!
எது மரணம்? எது ஜனனம்? இடையினில் இங்கே சிறு தருணம். -இந்தச் சிறு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக அடையாளப்படுத்தி இருப்பவர் மனிதர் மயில்சாமி... அவரை "நடிகர்' என்று மட்டும் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்ட போது அவர் பெற்ற வாக்குகள் ஆயிரத்துச் சில்லறைக் குள் அடக்கம்.
இன்று, இப்போது அவர் இறந்த பிறகு அவரை ஆதரித்து, புகழ்ந்து, பெருமை பேசுவோர் நினைத் திருந்தால் ஒரு நல்லவன் வெற்றிபெறக் காரணமாய் இருந்திருக்கலாம்...
அழுத கண்களுடன் கூட்டமாக தெருவெல்லாம் நின்று வடபழனி சுடுகாட்டிற்கு வழியனுப்பி வைத்த மக்கள், ஒரு முடிவெடுத்து மயில்சாமிக்கு வாக்களித்திருந்தால்- நம் சட்டசபைக்கு வழியனுப்பி வைத்திருக்கலாம்.
ஆக, இன்று இப்போது அஞ்சலி செலுத்த வந்த மக்கள் திரைப்பிரபலங்களைக் காண்த்தான் வந்தார்களா? -ஊடகங்கள் ஒன்றுகூடி அன்று ஒரு "மயில்சாமி'யை ஏன் மக்கள்முன் உயர்த்திக் காட்டவில்லை.
இறந்தபின் இப்படிப் புகழும் அப்பகுதி மக்கள்- இருக்கும்போது படுதோல்வியைக் கொடுத்து சாகடித்தவர்கள்தானே?
ஆளுயர மாலைகளை அந்திமச் சடங்கிற்காக கொண்டு வந்தோர் மயில்சாமி என்ற ஒரு நல்லவன் வெற்றிபெற "ஒற்றைப் பூவை'க்கூட தரமுன்வரவில்லை...
"மாமா.. மாப்ளே.. மச்சான்''- என்று உறவுமுறை கொண்டாடி ஊடகங்களுக்கு முன் கண்ணீர் விடுவோர்... நம் திரை உலகைச் சார்ந்த ஒரு "மனிதாபி மானி' சட்டசபைக்குச் செல்லட்டுமே என்று ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.
கட்சி, சாதி, பணபலம், சதி, வஞ்சகம், ஏமாற்று, புரட்டு ஏதுமற்ற ஒரு "மக்களின் சேவகன்' ஏன் தோற்றுப்போக வேண்டும்?
இதுதான் ஒரு கருணைமிக்கவனுக்கு நாம் தந்த பரிசா?
முகநூல், தொலைக்காட்சி, இணைய வழி ஊடகங்கள், அச்சிதழ்கள், தினசரிகள் எல்லாவற்றிலும் அவன் நிரம்பி வழிந்தானே? அதனால் அவனுக்கென்ன உற்சாகம் கிடைத்தது?
ஒப்பனைகளும், பாவனைகளும் ஓரங்க நாடகங் களும் பார்த்து விழித்திருந்தால் அவன் சத்தமிட்டுச் சிரித்து சதிராடி இருப்பான்.
இந்த மக்களுக்காகத்தானே அவன் வெள்ள அபாய நேரங்களில் விருந்து படைத்தான்? புயல் மழைக்காலங்களில் புகழிடம் க
வெளிப்புறப் படப்பிடிப்பில்
வீடுகள் புகுந்து நளனாக மாறியவன்
தானே தன்னைச் சமைத்து-
காலனின் பெரும்பசிக்கு- தன்னையும் ஒரு
கவளமாய்க் கொடுத்தவன்...
மடாதிபதிகளும் பீடாதிபதிகளும்
மறந்த பசியாற்றும் மருத்துவத்தை- ஒரு
மனிதனாய் இருந்து நடத்தியவன்!
சிதிலமடைந்து சீண்டப்படாமல் இருந்த
சிவன் கோயில்களை
சீரமைக்க முயற்சித்த அறநிலையத்துறை அவன்!
நடைபாதைக்கிழவிகளுக்கு நடுக்கம்போக்க போர்வைகள் ஈந்த நேசநெசவாளன் அவன்!
எழுத்துக்களால் "இரக்கம்' என்று சரியாக
எழுதத் தெரியாதவன்- ஒரு சின்ன இதய இடத்தில்
மிகப்பெரிய இரக்கத் தொழிற்சாலை நடத்தியவன்...
"தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை இவன்
தவறாமல் தாளம் விழுமே''- என்று
கண்ணதாசனுக்கே "கவி'' எழுதிய வரிகளை
கடன்வாங்கி-
வட்டியுடன் வார்த்தைகளாய்க் கொடுப்போம்...
மனிதனைப் பாடு மனமே!
மயில்சாமி மனிதனைப் பாடு மனமே!
எது மரணம்? எது ஜனனம்? இடையினில் இங்கே சிறு தருணம். -இந்தச் சிறு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக அடையாளப்படுத்தி இருப்பவர் மனிதர் மயில்சாமி... அவரை "நடிகர்' என்று மட்டும் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்ட போது அவர் பெற்ற வாக்குகள் ஆயிரத்துச் சில்லறைக் குள் அடக்கம்.
இன்று, இப்போது அவர் இறந்த பிறகு அவரை ஆதரித்து, புகழ்ந்து, பெருமை பேசுவோர் நினைத் திருந்தால் ஒரு நல்லவன் வெற்றிபெறக் காரணமாய் இருந்திருக்கலாம்...
அழுத கண்களுடன் கூட்டமாக தெருவெல்லாம் நின்று வடபழனி சுடுகாட்டிற்கு வழியனுப்பி வைத்த மக்கள், ஒரு முடிவெடுத்து மயில்சாமிக்கு வாக்களித்திருந்தால்- நம் சட்டசபைக்கு வழியனுப்பி வைத்திருக்கலாம்.
ஆக, இன்று இப்போது அஞ்சலி செலுத்த வந்த மக்கள் திரைப்பிரபலங்களைக் காண்த்தான் வந்தார்களா? -ஊடகங்கள் ஒன்றுகூடி அன்று ஒரு "மயில்சாமி'யை ஏன் மக்கள்முன் உயர்த்திக் காட்டவில்லை.
இறந்தபின் இப்படிப் புகழும் அப்பகுதி மக்கள்- இருக்கும்போது படுதோல்வியைக் கொடுத்து சாகடித்தவர்கள்தானே?
ஆளுயர மாலைகளை அந்திமச் சடங்கிற்காக கொண்டு வந்தோர் மயில்சாமி என்ற ஒரு நல்லவன் வெற்றிபெற "ஒற்றைப் பூவை'க்கூட தரமுன்வரவில்லை...
"மாமா.. மாப்ளே.. மச்சான்''- என்று உறவுமுறை கொண்டாடி ஊடகங்களுக்கு முன் கண்ணீர் விடுவோர்... நம் திரை உலகைச் சார்ந்த ஒரு "மனிதாபி மானி' சட்டசபைக்குச் செல்லட்டுமே என்று ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.
கட்சி, சாதி, பணபலம், சதி, வஞ்சகம், ஏமாற்று, புரட்டு ஏதுமற்ற ஒரு "மக்களின் சேவகன்' ஏன் தோற்றுப்போக வேண்டும்?
இதுதான் ஒரு கருணைமிக்கவனுக்கு நாம் தந்த பரிசா?
முகநூல், தொலைக்காட்சி, இணைய வழி ஊடகங்கள், அச்சிதழ்கள், தினசரிகள் எல்லாவற்றிலும் அவன் நிரம்பி வழிந்தானே? அதனால் அவனுக்கென்ன உற்சாகம் கிடைத்தது?
ஒப்பனைகளும், பாவனைகளும் ஓரங்க நாடகங் களும் பார்த்து விழித்திருந்தால் அவன் சத்தமிட்டுச் சிரித்து சதிராடி இருப்பான்.
இந்த மக்களுக்காகத்தானே அவன் வெள்ள அபாய நேரங்களில் விருந்து படைத்தான்? புயல் மழைக்காலங்களில் புகழிடம் கொடுத்தான்?
கொரோனாவில் சிக்கித்தவித்த குடும்பங்களை கரையேற்றப் போராடினான்?
தேநீர்க் கடைகளில், உணவகங்களில் வந்தமரும் உதவி இயக்குநர்கள் ஆரம்ப கால நடிகர்கள் சட்டைப் பாக்கெட்டுகளில் கேட்காமலே பணம்வைத்து கௌரவம் குறையாமல் "பசிப்பிணி' போக்கியவன் ஆபுத்திரன், மணிமேகலை, காயசண்டிகை வம்சமா? அவன் கைகளில் இருந்தது அட்சயபாத்திர அம்சமா?
"ஏனிந்த அவசரம் மயில்
ஏற்க முடியவில்லையே...'' -என்று நம் பிருந்தா சாரதி கொட்டிய எழுத்துக் கண்ணீரில் நானும் நனைந்து- சற்று பின்னோக்கி- சென்ற நூற்றாண் டின் 84-85-இல் தொடங்கி ஒரு மின்னலாய்த் தெரியும் நினைவுகளின் மீள்பதிவைப் புரட்டுகிறேன்.
வடபழனி ஏ.வி.எம். கார்டன் கம்ப்யூட்டர் டப்பிங் தியேட்டர்- ஸ்டுடியோ உள்ளே "யார்'' படத்தின் பின்னணிக் குரல் பதிவு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம்... நடிகர் அர்ஜுன் பிரபலமடையாமல் ஹோட்டல் பாம்குரோவில் அறை எடுத்து தங்கியிருந்த நேரம். அர்ஜுனுக்கு பின்னணிக்குரல் பதிவிற்காக ஒருவரைத் தேர்ந்தெடுத்து பேசவைத்துவிட்டோம். ஆனால் அவருக்கு சண்டைக்காட்சிகளில் "ஆஹ்... ஊஹ்'' என்று மெருகேற்றி குரல் கொடுக்க இயலவில்லை. என்ன செய்வது என்று பின்னணிக்குரல் பதிவு அனைத் தும் முடியும்வரை யோசித்துக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் ஒருநாள் புதிதாக ஒரு முகத்தை அழைத்துக்கொண்டுவந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். அந்த இளைஞரின் பெயர் "மயில்சாமி' என்றும் அதிரடி ஆக்ஷன் சண்டைக்காட்சிகளுக்கு "வாய்' அசைவின்மூலம் உயிர் தருவார் என்ற எதிர் பார்ப்பை எழுப்பி "மைக்' முன் நிறுத்தச் சொன்னார்... என்ன ஆச்சரியம்..? எங்களால் நம்பமுடியவில்லை... ஆனால் புதிதாக வந்த "மயில்சாமி'' என்ற இளைஞன் புகுந்து விளையாடினான் என்றுதான் சொல்லவேண்டும். "ஆக்ஷன்கிங்' என்று நாங்கள் அர்ஜுனை கட்அவுட் வைத்து விளம்பரப்படுத்த மறைந்த அமரர் ஜுடோரத்தினம் அவர்கள் ஒரு காரணம் என்றால், அந்த "ஆஃ, ஊ'' என்று ஒ- எழுப்பி அதிரடியாய் காதுகளில் படம் பார்த்தோர் காதுகளில் போய் இறங்கிய அந்தப் புதுமுகம் மயில்சாமியின் குரலும் ஒரு முக்கியமான காரணம்.
அதன்பிறகு மயில்சாமி மிகச் சிறந்த நகைச்சுவை நடிகராய் உருவெடுக்கத் தொடங்கினார்... எம்.ஜி.ஆர். பற்றி வெளியூர் விழாக்களில் பேச இதயக்கனி எஸ். விஜயன் மயில்சாமியையும் என்னையும் அடிக்கடி அழைத்து மயில்சாமியை நான் உணர ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்தார்.
ஒவ்வொரு பயண நேரத்திலும் நாம் இருக்குமிடம் தேடி... நல்ல தரமான உணவைக் கொண்டுவந்து- கொடுத்து சாப்பிடவைத்து அழகுபார்ப்பது அவருடைய இயல்பான குணமாய் இருந்தது...
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத உயரிய குணம் இருந்ததால் "வள்ளலாரின்' பசிப்பிணி போக்கும் பக்குவம் அவருடைய செயல்பாடுகளில் தெரிந்தது.
இயற்கை- இறைத்தன்மை இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற சிந்தனை படிப்பறிவில்லாத பாமரன் ஒருவனுக்கு ஞானிகளுக்குக் கிடைத்ததைப் போலவே கிடைத்தது. மயில்சாமிக்கும்!
கடவுள் மறுப்புக் கொள்கையும் நாத்திகமும் பேசும் பலர் பாஸிஸ எதிர்ப்பு, இடதுசாரி வலதுசாரி சிந்தனைகள் என்றெல்லாம் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், புத்தகம் போடுகிறார்கள். கருத்தரங்கம், ஆய்வுகள் எல்லாம் நடத்துகிறார்கள்...
ஆனால், புரட்சி என்றும் விழிப்புணர்வு என்றும் நாக்கால் நடனமிடும் இவர்கள் ஈகையையும் இரக்கத்தையும் தயாளகுணத்தையும் மக்கள் நலத்தையும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்த மேடைமினுக்கிகளுக்கு மத்தியில், எச்சில் கையில் காக்கையை ஓட்டாத ஏமாற்றுக்காரர்களுக்கு மத்தியில் அதிகம் எழுதப்படிக்கத் தெரியாத மயில்சாமியின் ஆன்மிக நம்பிக்கை யும் ஆலய நம்பிக்கையும் பல காய்ந்த வயிறுகளுக்கு கஞ்சி வார்த்திருக்கிறது. வயதான மூதாட்டிகளுக்கு புடவையும் போர்வையும் வழங்கி இருக்கிறது. பலர் பாக்கெட்டுகளை நிரப்பி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் நடிகர் இளவரசு மயில்சாமியைப் பற்றிக் கூறும் போது அழகான கவித்துவ நிகழ்ச்சி ஒன்றைச் சொல்கி றார்... நடிகர் செந்தில் வீடிருக்கும் சாலிகிராமம் பாஸ்கரன் காலனி ஸ்டேட் பேங்க் காலனி புற்றுக்கோவில் அருகில்- ஒரு குட்டையாய்க் கிடந்த இடத்தை மா. சுப்பிரமணியம் அவர்கள் மேயராய் இருந்த காலத்தில் அழகான நடைப்பயிற்சிக்கான இடத்துடன் கூடிய நீர்நிலையாக உருமாற்றித் தந்திருக்கிறார். அந்தக் குளத்தில் யாரோ ஒரு வாத்தை மட்டும் தனியே விட்டுச்சென்றிருக்கிறார்கள்... மயில்சாமி அந்த வாத்தை எடுத்துக்கொண்டு காரில் பயணம் செய்து பல இடங்களில் தேடி கே.கே. நகர் அங்காடி ஒன்றில் அது ஆணா பெண்ணா என அறிந்து அதற்கு ஒரு குடும்பத் துணையை விலை கொடுத்துவாங்கி ஜோடி வாத்துக்களை மீண்டும் குளத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.
முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியின் வரிசையில் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகன் எப்படி வந்து இருக்கை போட்டுக்கொண்டான்?
"அன்பே தெய்வம்''- என்பதை ஒரு சிவபக்தன்
அற்புதமாக அரங்கேற்றி இருக்கிறானே?
கோரமான ஒரு விபத்தில் இறந்த கணவனின் வேலையினை உடனடியாக ஒரு மனைவிக்கு வழங்கவேண்டும்? என்பதற்காக சம்பந்தமில்லாத அந்தக் குடும்ப நலன் கருதி மின்சாரத்துறை, பிறகு அமைச்சர் என்று அலைந்து தாழ்பணிந்து வேண்டி வணங்கி அந்த வேலையை அடுத்த மாதமே வாங்கிக்கொடுத்தவனை மனிதன் என்று சொல்லலாமா? "மகன்' -என்று சொல்லலாமா?
அருள் செய்கிறவனாய் அவனியில் இருப்பான் என்பதனால்தான் "சாமி'' என்கிற பெயர் இவனது பிறப்பிலேயே பிரகடனப்படுத்தப்பட்டதா?
"காசுபணம் பெரிதில்லை, நெஞ்சில் உள்ள காதல். பெரிதெனக்கு'' என்ற பாரதியை வாழ்வியலாக்கியவன்.
"காக்கை குருவி எங்கள் சாதி'' என்று வாத்துக்கு வாழ்க்கைத்துணை தேடித்தந்தவன் நண்பர்களைப் பார்க்கிறபோது- நடித்துச் சம்பாதித்த சம்பளப் பணத்தை பிரியமுடன் பிரித்துக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு சென்றவன்... எப்படி மரணிக்கமுடியும்?
வேகாத வெய்யிலும் வெட்டவெளிப் பொட்டலிலும் போகாத இடமெல்லாம் போய் உழைத்து- "இரக்கம்'' என்ற சொல்வைத்து உழைத்துவந்த பணத்தைக் கரைத்து- மக்கள் நலம் மக்கள் சேவை மக்கள் தொண்டு என்று மக்களோடு மக்களாகிவிட்டவன் எப்படி மரணிக்கமுடியும்?
அவன்- இன்டலக்சுவல் இல்லை.... ஆனால் இதயம் உள்ளவன்!
நான்கு சுவர்களுக்குள் ஒருவன் தன் குடும்பத்தோடு மட்டும் உட்கார்ந்து கொண்டு நான் எந்தக் கெட்டபழக்கங்களும் இல்லாதவன். என் வீடுண்டு என் குடும்பமுண்டு நான் உண்டு என்றபடி உண்டல் உறங்கல் உரைகலத்தல் என வாழ்நாளைக் கழிக்கிறவனைக் காட்டிலும்...
தன் ஊருக்காக தன் நாட்டுக்காக தன் சமுதாய மக்களுக்காக ஓடி ஆடி உழைக்கிற ஒருவன் "தள்ளாடிய படியே நடந்தால்கூட'' அவன்தன் குறிக்கோளில் கொண்ட கொள்கையில் "தள்ளாட்டம்'' இல்லாதவனாக மேம்பட்டுத் தெரிகிறான். இவனை இடைக்காடர், தன் சீடராக இந்த நூற்றாண்டில் வழிநடத்தி "வா வா''- என்று திருவண்ணாமலைக்கு அழைத்திருக்கலாம்.
எது உண்மையான ஆன்மிகம் என்பது மயில் சாமிக்கு துப்புரவாகத் தெரிந்திருக்கிறது... அர்ச்சனை, அபிசேகம், ஆராதனை செய்து உண்டியலில் பணம் போடுவதிலும் ஊதுபத்தி ஏற்றுவதிலும் கற்பூரம் காட்டுவதிலும் மட்டும் கடவுள் இல்லை என்பதை அறிந்தவன் அவன். அதனால்தான் பசித்த வயிறுகளில் பரமனைக் கண்டான்.
தான் செய்யவேண்டிய தானதர்மங்களை வடக்கிலிருந்து வந்த நடிகன் ஒருவன் சுனாமி நேரத்தில் செய்து கொண்டிருக்கிறான் என்று அறிந்தவுடன் மொழி தெரிந்து அவனுடன் இந்தி ஆங்கிலத்தில் பேச இயலாவிட்டாலும் தானே அவன் இருக்குமிடத்தை கோவிலாகக் கருதிச் சென்று- தான் கழுத்தில் அணிந்திருந்த எம்.ஜி.ஆர் டாலரை "அவருக்கு'' அணிவித்து நன்றியை அரையும் குறையுமான ஆங்கிலத்தில் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் நடந்தவன்...
அவனுக்கு ஆங்கிலமும் இந்தியும் தெரியாத மொழியாக இருக்கலாம். ஆனால் இரக்கம், ஈகை, அன்பு, கருணை போன்ற பல மொழிகளில் "முனிவர்'' பட்டம் பெற்றவனாகத் தெரிகிறனே...
ஒரு வெள்ளரிக்காய் கூடையைச் சுமந்து வந்த மூதாட்டி 50 ரூபாய்க்காவது மயில்சாமியிடம் சில வெள்ளரிப் பிஞ்சுகளை விற்பனை செய்யலாம் என்று பரிதாபத்துடன் கேட்கிறபோது ஒட்டுமொத்தக் கூடைக்காய்களும் என்ன விலை என்று மயில் கேட்க- 500 ரூபாய் என்று கிழவி சொல்லலி "இந்த வெயில்ல வேர்க்க விறுவிறுக்க தூக்கமுடியாம தூக்கிட்டு நடக்காதே... இந்தா 600 ரூபாய். இதை அப்பிடியே இங்க என்கூட வேலை செய்யுற அத்தனை பேருக்கும் ரெண்டு ரெண்டு குடு' என்று சுமையை தன் கையால் இறக்கி- கிழவியைப் புன்னகைக்க வைத்து அந்த முகத்தில் தெய்வத்தையே தேடியவன் அவன்!
இந்தத் திரை உலகத்திற்கும் மனித இனத்திற்கும் அவன் சொல்லிச்சென்றிருக்கிற ஒரு செய்தி- "உயிர் போனபிறகு ஒப்பாரி வைக்காதீர்கள்... இருக்கிறபோது, இதயத்தில் இடம்கொடுங்கள்... ஏற்றி வையுங்கள்''- என்பதுதான்.
2010-இல் நான் இயக்கிய "பௌர்ணமி நாகம்'' என்ற படத்தில் மயில்சாமி நடித்த காட்சிகளுக்கான பின்னணிக்குரல் சேர்ப்பு வேலை சாலிகிராமம் பரணி டப்பிங் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்- கண்ணன்ணே... ரொம்ப நேரம் பேசிப்பேசி பசிவந்துடுச்சு... என்கூட நீங்களும் கொஞ்சம் எதிரில் இருக்கிற கடைவரைக்கும் தயவுசெய்து வரணும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று அங்கே எதிரில் இருந்த திருநெல்வேலி டிபன் சென்டரில் பொடி, மிளகாய்ச் சட்னியோடு எண்ணெய் தோசை யும் மசால்வடையும் சாப்பிடும்போது மீண்டும் மீண்டும் என் இலைபார்த்து அண்ணனுக்கு ஒரு தோசை போடுங்க... சூடா இன்னொரு வடை குடுங்க...'' என்று உபசரித்து தானே வலுக்கட்டாயமாக பில் தொகையை கொடுத்துவிட்டு... அண்ணே மாரிமுத்து டீக்கடையில ஒரு டீ அடிச்சுட்டுப் போயிரலாம் என்று பக்கத்தில் இருந்த அவருக்கு பழக்கப்பட்ட டீக்கடைக்கு அழைத்துச்சென்று- "புது தூளா டீபோடுண்ணே கண்ணன் அண்ணனுக்கு''- என்று உத்தரவிட்டு அந்தத் தேநீர்க் கோப்பையை வாங்கி என் கைகளில் மயில்சாமி ஒரு பாசத்தோடு வாஞ்சையோடு ஒப்படைத்தபோது- "ஓஷோ'' என் கண் முன்னால் மயில்சாமி உருவத்திலும் வருவார் எனத் தோன்றியது.
திரை உலகிற்கு மிகவும் பரிச்சயமான அந்தத் திருநெல்வேலிக்கடை எண்ணெய் தோசை மசால் வடை, தேநீர் எல்லாவற்றிலும் ஒரு விலை தெரிகிறது. ஆனால் பரோபகாரம் பாசம், பணிவிடை, பண்பு இதற்கெல்லாம் என்ன விலையை நாம் நிர்ணயிக்க முடியும்?
அவனது மரணத்தில்கூட அன்று பல ஊடகங்கள் வாழ்ந்தன.
இறந்த நடிகனின்
இறுதி யாத்திரையைக்கூட
இரும்பு வியாபாரிகள்
எடைபோட்டு எடைபோட்டு
விறக் முயற்சித்தனர்.
ஓட்டுப்போடாத ஊர்மக்கள்
கூட்டம் கூட்டமாய்க்
கூடியது எதற்காக?
செல்விருந்தோம்பி வரும்விருந்து
பார்த்திருந்து-
நல்விருந்தாய்ப் போனவனைப் பார்த்து
கற்றுக்கொள்ளவேண்டும் ஒரு பாடம்!
வாழும்போதே ஒருவனை அடையாளம்
கண்டு ஆரத்தி எடுக்காத சமூகம்-
செத்தபிறகு, தங்கத்தாலும் வைரத்தாலும்
வாய்க்கரிசி போட்டு என்ன பயன்?
சராசரிகளுக்குத்தான் மரணம் சம்பவிக்கும்
சரித்திரங்களுக்கு மரணம் ஏது?
மயில்சாமி என் நெருங்கிய நண்பர். அவர் 23, 24 வயதில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருக்கும்போதே எனக்குத் தெரியும். அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அதைவிட மிகத் தீவிர சிவன் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். அப்போது நான் சினிமாத் துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவைப் பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றிதான் அவர் அடிக்கடி பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவன். நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தும்கூட நிறைய படங்கள் நடிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு சென்றுவிடுவார். அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்துவிட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். கடைசி முறை கார்த்திகை தீபத்திற்கு என்னைத் தொடர்புகொண்டார். நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை தொடர்பு கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை. அடுத்த முறை சந்திக்கும்போது, ஷஎன்னை மன்னித்து விடுங்கள் என்னால் பேச முடியவில்லை!' என்று சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அப்படியே நான் மறந்துவிட்டேன், இப்போ அவரே மறைந்துவிட்டார். நடிகர் விவேக், மயில்சாமி இந்த இரண்டு நகைச்சுவை நடிகர்களின் இழப்பு சினிமாத் துறைக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. அவர் இந்த சிவன் ராத்திரியில் இறந்தது தற்செயலாக நடந்த விஷயம் கிடையாது. அது சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தரை அவருக்கு உகந்த நாளில் எடுத்துக்கொண்டார்.