துயரம் பொங்கும் நெஞ்சோடு இந்தத் தலையங்கத்தை எழுதவேண்டியிருக்கிறது.

ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும்? என்ற கேள்விக்கு...

’வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு’

-என மதிப்புமிகும் பதிலைத் தருகிறான் வள்ளுவன்.

Advertisment

tuty

இதற்குப் பொருள்... அரசு என்றால், துணிவுடன் செயல்பட்டு குடிமக்களைப் பாதுகாக்கவேண்டும். அதோடு அறநூல்களைக் கற்கவேண்டும். அதன்படி அகிம்சையோடு செயல்படவேண்டும். புகழைச் சேர்க்க அயராத முயற்சி வேண்டும் என்பதாகும்.

Advertisment

இதில், துணிவோடு மக்களைக் காப்பதுதான் அரசுக்கான முதல்பணி என சுட்டிக்காட்டுகிறான் வள்ளுவன்.

ஆனால் இன்றைய சண்டாள அரசு, மக்களைக் காக்காமல், அறவழியில் செல்லாமல், தன் இமேஜைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், இதயத்தில் கொஞ்சமும் ஈரமில்லாமல், மக்களுக்கு சாவுமணி அடித்துக்கொண்டிருக்கிறது.

சண்டாள எடப்பாடி அரசின் கொலைவெறிப் போக்கு தமிழகத்தையே திகிலில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் தூத்துக்குடியில் அரசு நடத்திய நரவேட்டையால் மென்மையான மனம் கொண்ட வர்கள், தூக்கம் மறந்து தவிக்கிறார்கள்.

tutyfire

இவர்களின் இந்த வெறியாட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்தி ருக்கிறது.

தங்களைத் தட்டிக்கேட்க நாதியில்லை என்ற தைரியத்தில், தங்களுக்குப் படியளக்கும் ஸ்டெர்லைட் கம்பெனிக்காக, 14 பேரைத் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் கொலைகாரப் பாவிகள்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா? மணல் திருடர்களா? குவாரிக் கொள்ளையர்களா? லஞ்சம் வாங்கியவர்களா? சட்ட விரோதமாகச் சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்களா? கல்லூரி மாணவிகளுக்கு வலை விரித்தவர்களா?

எதுவுமே இல்லை.

இவர்கள் எல்லோரும் அப்பா விப் பொதுமக்கள்.

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி போராடிய ஒரே குற்றத்திற்காக இவர் களை அநியாயமாகச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் படுபாவி கள்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவாக வெளியேற்றப் படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், கடல் வாழ் உயிரினங்கள் எல்லாமும் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றன என்றும் ஆய்வாளர்கள் அறிவித்தார்கள். அதோடு இந்த நச்சு வாயுவால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பிரச் சினைகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தார்கள்.

இந்த கொடூர உண்மையை, புற்றுநோய் பரவியதன்மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்த தூத்துக்குடி மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வும் தங்கள் தலைமுறையைக் காப்பாற்றிக்கொள்ளவும் ஸ்டெர் லைட் ஆலையை மூடும்படி போராடினார்கள். அதில் என்ன தவறு?

tutyfire

புற்றுநோய் ஆலையான ஸ்டெர்லைட்டை மூடவேண்டும் என்ற கோரிக்கையோடு, அப்பகுதி மக்கள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகப் பலவேறு போராட்டங்களை நடத்தினார்கள். இதைக் கொஞ்சமும் மதிக்கவில்லை திமிரெடுத்த எடப்பாடி அரசு. எங்கோ தனக்கு சம்மந்தமில் லாத ஒரு தேசத்தில் ஏதோ நடக்கிறது என்பதுபோல, எடப்பாடி அரசு பொதுமக்களின் போராட்டத்தை அக்கறையில்லாமல் அலட்சியப் படுத்தியது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், இவர்களுக்காகக் குரல் கொடுத்தும்கூட, எழவெடுத்த எடப்பாடி அரசு செவிசாய்க்க வில்லை.

இரவு பகலாக தர்ணா, உண்ணாவிரதம் என்றெல்லாம் குடும்பம் குடும்பமாக போராடிப் பார்த்து அலுத்துப்போன மக்கள், அதன்பிறகுதான் தங்கள் போராட்டத்தின் 100-ஆவது நாளான 22-ஆம் தேதி "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்' என்று அறிவித்தனர்.

அப்போதாவது அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களை சமாதானப்படுத்த முன்வந்தார்களா என்றால் இல்லை.

போராடும் மக்களை சமாதானப்படுத்துவதற்கு பதில், அவர்களில் சிலரைக் கொன்று குவித்து பீதியூட்ட வேண்டும் என்ற கொடூர திட்டத்தை வகுத்தார்கள் பாவிகள்.

போராடும் மக்களை விரட் டிக் கலைக்கும் எண்ணம் அவர்களுக்குக் கொஞ்சமும் இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விருப்பப்படி, குறிபார்த்துச் சுடும் "ஸ்னைப்பர்ஸ் டீம்' என்கிற கொலைகாரப் படையை வரவழைத்தார்கள்.

அவர்கள் காவல்துறையோடு கலந்து நின்று... உயிரெடுக்கக் காத்திருந்தார்கள்.

22-ஆம் தேதி ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் முற்றுகை அறப்போருக்கு அணிவகுத்து வந்தபோது, காவல்துறையினரே பெட்ரோல் குண்டுகளை வீசியும் வாகனங்களுக்கு தீவைத்தும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடந்துகொண்டது போல் வெறியாட்டத்தில் இறங்கினார்கள். அங்கங்கே அவர்கள் தீவைத்துவிட்டு, அதை பொதுமக்கள் வைத்ததாகச் சொல்லி வக்கிரம் மிகுந்த துப்பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்பித்தார்கள். தெருத்தெருவாக மக்களை விரட்டிச் சென்று, குருவிகளைச் சுடுவது போல் குறிபார்த்துக் குறிபார்த்து உயிர்வேட்டை நடத்தினார்கள்.

இவர்களின் அத்தனை வெறியாட்டங்களையும் ஊடகங்கள்மூலம் நாடே பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்தச் சண்டாளர்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், அத்தனை கொலைவெறித் தாண்டவத்தையும் அரங்கேற்றினார்கள்.

தூத்துக்குடியையே படுபாவிகள் ரத்தச் சகதி நிறைந்த போர்க்களமாக்கிவிட்டார்கள்.

தூத்துக்குடியில் பிணங்கள் விழ ஆரம்பித்த நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு கண்துடைப்பு விசாரணைக் கமிஷனையும் அறிவித்தார்.

அந்த கமிஷன் அமைக்கப்பட்ட பின்னரும், அதற்கு மறுநாளே மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டை நடத்தி, மறுபடியும் அங்கே ஒரு உயிரை காவுகொண்டது இந்த கொலைகார அரசு. இப்படியொரு கொடுமை எங்கேனும் நடக்குமா?

14 பேரைக் கொன்று குவித்ததோடு நிற்காமல், வீடுவீடாய் நுழைந்து, கண்ணில்பட்டவர்களை எல்லாம் மிருகத்தனமாய்த் தாக்கி, தூத்துக்குடியையே ரத்தக் களறியாய் ஆக்கிவிட்டார்கள்.

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, தன்னிலை விளக்கம் கொடுத்த முதல்வர் எடப்பாடி, "நானே செய்தி சேனல்களைப் பார்த்துதான் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தெரிந்துகொண்டேன்' என்றார் அலட்டிக்கொள்ளாமல்.

அப்படியென்றால்... அங்கே துப்பாக்கிச் சூடு நடத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது யார்? ஸ்னைப்பர்ஸ் டீமை அங்கே வரவழைத்தது யார்? முதல்வர் உத்தரவிடவில்லை என்றால்... காவல்துறை தன்னிச்சையாய் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டதா? ஆம் என்றால்... காவல்துறை அரசின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா? இப்படி பல்வேறு கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. எதற்கும் தெளிவான விளக்கமோ? ஆறுதலான பதிலோ இல்லை.

ஆனால், தங்கள் கொடூரத்தை மறைக்க, விதவிதப் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறது எடப்பாடி அரசு.

யாருக்காக ஆட்சி? மக்களுக்காகத்தானே ஆட்சி?

மக்கள் போட்ட பிச்சைதானே இவர்கள் வைத்திருக் கும் அதிகாரம்.

மக்களிடம் ஓட்டுப்பிச்சை வாங்கித்தானே அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள்?

இதையெல்லாம் மறந்துவிட்டு, அதிகாரத்தைக் கொடுத்த மக்களையே, இதயத்தில் ஈரமில்லாமல் கொன்று குவித்திருக்கிறார்களே, இவர்களை என்னசெய்வது?

அன்பால், சாதனையால் மக்கள் இதயத்தைக் கொய்வதை விட்டுவிட்டு, துப்பாக்கி என்ற கொடிய ஆயுதத்தால் அவர்களின் இதயத்தை, மூளையைக் குதறியிருக்கிறார்களே, இந்தச் சண்டாளர்களை, மானம்கெட்ட மரண வியாபாரிகளை வரலாறு மன்னிக்குமா?

தூத்துக்குடியில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் கொலைகார சண்டாள எடப்பாடி அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

குடிமக்கள் தாங்கமுடியாமல் அழுது அரற்றி வடிக்கும் கண்ணீர், அரசையே அழிக்கும் என்பான் வள்ளுவன்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதை மறந்துவிடாதீர்கள்.

-ஆறா ரணத்தோடு...

நக்கீரன்கோபால்