தயாவின் காதலைப்பற்றி வீட்டிலிருப்பவர்கள் அறிந்தபோது, அவர்கள் செய்தது- அவளுடைய படிப்பை முடிவுக்குக்கொண்டுவருவதுதான். அத்துடன் ஹாஸ்டலிருந்து அவளை வீட்டிற்குக் கொண்டு போகவும் செய்தார்கள்.
அடுத்த மழை பெய்யும்வரை கல்லூரியின் சுவர்களில் அவளுடைய பெயரும், காதலனின் பெயரும் ஒரு இதய சின்னத்துடன் இணைக்கப் பட்டுக் கிடந்தன.
அந்த வயதிருக்கும் ஒரு இளம்பெண் செய்யக்கூடாதவற்றையெல்லாம் அவள் செய்தாள். மாலை நேரங்களில் தனியாக வெளியேறி நடந்தாள். சாயங்காலம் உதிர்ந்து விழக்கூடிய கால்பந்து மைதானத்தின் மூலையில், அவனுடைய சைக்கிளில் கைவைத்தவாறு சாய்ந்து குழைந்தாள். மார்பிலிருந்து விலகிச்செல்லும் புடவையை சரியாகப் போடாமல், முகத்தில் பறந்துவந்து சேரும் முடிச்சுருள்களை அவற்றின் போக்கில் விட்டவாறு...
வீட்டிற்கு வந்தபோது அவை அனைத்தும் நினைவுகளாக மட்டுமே ஆகிவிட்டன. தோழிகளின் கடிதங்களுக்கு ஒழுங்காக பதில் அனுப்பினாள். மேற்கு திசை வாசலில் இருள் பரவுவதையும், பனையோலைகளின் வழியாக பாலக்காடன் காற்று கடந்து வருவதையும் பார்த்தவாறு, ஒரு நதியையும் நதியுடன் தொட்டு நின்று கொண்டிருந்த பிரம்மாண்டமான கல்லூரியையும் மனதின் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்ந்தாள்.
அவனுடைய கடிதங்கள் அவளுடைய மோகங்களாக மாறின. காரணம்- அவை மட்டும் எந்தச் சமயத்திலும் வரவில்லை.
அவள் பகல்வேளை தூக்கத்தை தெற்குப் பக்கத்திலி−ருந்த அறைக்கு மாற்றினாள். அங்கு படுத்துப் பார்த்தால், சாளரத்தின் வழியாக கேட்டையும், கேட்டிற்கு மேலே படர்ந்து கிடக்கும் பெயர் தெரியாத கொடியையும் பார்க்கலாம்.
உச்சிப்பொழுதுகளில் அஞ்சல்காரர் தினமும் வந்தார். சாளரத்தின் வழியாக அவளுக்கும் தந்தைக்கும் வரக்கூடிய கடிதங்களைக் கொடுத்துவிட்டு, தன் இளிக்கும் சிரிப்புடன் திரும்பிச் சென்றார்.
அந்த காதல் உறவு நிறுத்தப்பட்டுவிட்டது என்றுதான் வீட்டி−ருப்பவர்கள் முடிவுசெய்தார்கள். மோகத்துடன் இருந்த அந்த பையனைப்பற்றி ஆரம்பத்தில் தாய் கூறிக்கொண்டிருந்த சாபவார்த் தைகள் குறைந்துகொண்டிருந்தன. படிப்படியாக அவை இல்லாமல் போயின.
ஒருநாள் அஞ்சல்காரர் அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். தலையணைக்குக்கீழே கடிதத்தை வைத்துவிட்டு, அந்த இளம்பெண் தலையணையின்மீது முத்தமிட்டாள். தூரத்தில் காய்ந்து வறண்டுபோய் காணப்பட்ட வயலி−−ருந்து உயர்ந்துவரும் லிவிவசாயிகளின் கூக்குரல்களும், மேற்கு திசை வாசலி−ன் விசாலமான மணல் பரப்பி−ருந்து வந்துகொண்டிருந்த கிளிகளின் சத்தமும், வராந்தாவி−ருந்து வந்த தந்தையின் பத்திரிகை வாசிக்கும் சத்தமும் ஒரு நிமிடம் இல்லாமல்போயின. கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது: "அனுப்பிய அனைத்து கடிதங்களும் கிடைத்தன. ஒன்றுக்குக்கூட பதில் எழுதாமல் இருந்தது- அப்படியாவது என்மீது வெறுப்பு தோன்றட்டுமே என்று நினைத்துதான்.
ஆனால், இனி என்னால் எழுதாமல் இருக்கமுடியாது. ஆனால், நான் என்ன எழுதுவது?'
கடிதம் நீண்டு சென்றது. அவள் அன்றே எட்டு பக்கங்களில் சிறுசிறு எழுத்துகளில் எழுதி, எழுதப்படிக்கத் தெரியாத வேலைக்காரியின் கையில் அஞ்சல் பெட்டியில் போடும்படி கூறி கொடுத்தனுப்பினாள்.
அத்துடன் வாழ்க்கைக்கு ஒரு புதிய நிறம் வந்துசேர்ந்தது. பனைமரக் கூட்டங்களைப் பார்த்தவாறு, மெதுவான குரலி−ல் பேசிக்கொண்டு தனியாக சிரித்தாள்.
நினைவு மண்டலத்தின் பழைய தாள்களிலி−ருந்து கல்லூரியும், சாயங்காலம் எரிந்து விழக்கூடிய கால்பந்து விளையாட்டு மைதானமும் உயிர்த்தெழுந்தன.
அவள் ஒருநாள் எழுதினாள்: "இனி எல்லா புதன்கிழமையும் எனக்கு கிடைக்கத்தக்க வண்ணம் எழுதவேண்டும். நான் எல்லா வெள்ளிக்கிழமையும் அங்கு வந்து சேரத்தக்கவண்ணம் பதில் எழுதுகிறேன். சரியா?'
அடுத்த கடிதத்தில் அவன் தன்னுடைய பயத்தை வெளியிட்டிருந்தான்: "இது இவ்வாறு தொடரலாமா? திருமணம் செய்வதற்கு சாத்தியமில்லாத ஒரு இளம்பெண்ணுடன் இந்த கடிதத் தொடர்புகள்...?'
அவள் கிண்டல் செய்தாள்: "ஒரு சாதாரண பெண்தானே! இந்த அளவுக்கு தைரியமில்லாமல் போய்விட்டதே! ஒரு தோழிக்கு எழுதுகிறோம் என்று மட்டும் மனதில் நினைத்தால் போதும்.'
பார்த்த திரைப்படங்களைப் பற்றி எழுதக்கூடாதா? வாசித்த புத்தகங்களைப் பற்றி எனக்குத் தெரிவிக்கக்கூடாதா?
என் காதல் மலரே...
அவனுக்கு ஒரு இளம்பெண்ணின் கண்களும் உருவமும் இருந்தன. அதைக்கூறி அவள் கிண்டல் செய்து எழுதினாள்: "அய்யய்யே... சீட்டி அடிக்கடிக்கூட தெரியாதா? இங்கு வா... நான் கற்றுத்தருகிறேன்.'
தனக்கு வந்துகொண்டிருக்கும் திருமண ஆலோசனைகளைப் பற்றியும், தன்னைப் பார்க்கவரும் "பையன்களை'ப் பற்றியும் அவள் அவனுக்கு எழுதினாள்.
"அனைவரும் கிழவர்கள்... அப்பாவின் டைரியிலி−ருந்து ரகசியமாகத் தெரிந்துகொண்டேன். என்னைவிட ஒரு... பத்து வயதுவரை அதிகமாக இருக்கும் மணமகன் எனக்கு வேண்டாமென்றுதான் நான் கூறுவேன்.'
பதில் கடிதங்களில் கவலை நிறைந்து நின்றன. அவன் தெரிவிப்பதற்கு ஒரு விஷயம் மட்டுமே இருந்தது: "காதலி−க்கிறேன். பிரிந்துவிட்டதற்கும், மீண்டும் பார்க்க இயலாததற்கும் மிகவும் அதிகமாகக் கவலைப்படுகிறேன். தயவுசெய்து வரக்கூடிய திருமண ஆலோசனைகள் எதற்கும் எதிராக நிற்கவேண்டாம்...'
அவள் அவன் கூறியபடி நடந்தாள். ஒரு வருடகாலம் ரகசியமாக அந்த கடிதத் தொடர்புகள் தொடர்ந்தபிறகு, ஒருநாள் எழுதினாள்: "எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்த மாதம் தாலி−கட்டும் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், பார்ப்பதற்கு வரவேண்டாம்!'
நான் போகட்டுமா?
"ஸியோனாரா!'
அவள் குறும்புத்தனம் கொண்ட பெண்ணாக இருந்தாள். அவளுடைய கடிதங்களிலும் குறும்புத் தனம் நிறைந்து நின்றது.
கணவன் இருபத்தாறு வயதுகொண்ட ஒரு கிழவன். தயாவுக்கு அவனைப் பிடித்திருந்தது. அவனுடைய பயங்கள், அவளுடைய கடந்த காலத்தைப் பற்றி உள்ள சந்தேகங்கள், நாய்களை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், அலுவலகத்தில் கீழே வேலை பார்ப்பவர்களிடம் வெளிப்படுத்தக் கூடிய வீரச் செயல்கள்- அனைத் தையும் ஆச்சரியப்படும் வகைகளில் அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. நகரத்தில் திரைப்படங்கள் மாறுவதை கவனித்துக்கொண்டும், திருமதி கம்மத் நடத்தக்கூடிய தையல் வகுப்பில் கற்றுக்கொண்டும் அவள் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள். எல்லா தம்பதிகளையும்போல அவர்களும் ஒரு தீர்மானமெடுத்தார்கள். முதல் இரண்டு வருடங்களுக்கு குழந்தைகள் வேண்டாம்...
ஒரு சாதாரண மனைவியைப்போல, திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆனபோது, அவள் கணவனிடம் கூறினாள்:
"எனக்கு...'
தொடர்ந்து அவளுடைய வயிறு பெரிதாகிக் கொண்டிருந்தது. அவளுக்கு பயமும் காரணமற்ற குழப்பங்களும் உண்டாயின. "நான்' என்று பயன்படுத்திக்கொண்டிருந்த இடத்தில் "நாம்' என்ற வார்த்தை அவளே அறியாமல் நுழைந்துவந்தது. தனிமையி−ருக்கும் மனதின் பயத்தி−ருந்து உண்டாகக்கூடிய பலவீனமும், செயலற்ற நிலையில் உதவியைத் தேடுதலும் மட்டுமே அவையெல்லாம் என்பதை அவள்கூட புரிந்திருக்கவில்லை.
ஒருநாள் நகரத்தில் திருவிழா நடைபெற்றபோது, அவனை எதிர்பாராமல் சந்தித்தாள். சந்தோஷம் உண்டாகவில்லை. அங்கு எதற்காக அவன் வந்தான்? அழகான கண்களும், சுருண்ட முடியும், கசங்கிய வாயில் ஜிப்பாவும்...
அவன் கவலையில் மூழ்கியிருந்தான். கேட்டவற்றிற் கெல்லாம் பதில் கூறினான். அவனுடைய சிரிப்பு பொய்யானதாக இருந்தது.
கணவன் அருகில் இல்லாமல் ஐந்து நிமிடங்கள் கிடைத்தபோது, அவன் தன்னையே அறியாமல் கூறினான்.
""எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. உன் திருமணம் என்னை வருத்தப்படச் செய்யவில்லை. நீ வேறொருவனுக்குச் சொந்தமானவள் என்று அறிந்து கொள்ளக்கூடிய விஷயத்தையும் தூரத்திருந்து என்னால் சகித்துக்கெள்ள முடிந்தது. ஆனால், உன்னுடைய எல்லா குறும்புத்தனங்களையும் அழகையும் சிறிதும் குறையாமல் பத்திரப்படுத்திக் கொண்டு, அவனுடைய கைகளைப் பிடித்தவாறு நடப்பதைப் பார்த்தபோது...''
அங்கு நிறுத்திவிட்டு, வெடித்துச் சிதறிய தன் மனதிற்குள் ஓடி நுழைந்துகொண்டு அவன் சத்தமே இல்லாமல் கூறிமுடித்தான்:
""என் பழைய அப்ஸரஸ்ஸே... என் பழைய மிஸ் தயா... நான் கவலைப்படுகிறேன்.''
அவள் பதிலெதுவும் கூறவில்லை.
""நீ ஏன் இந்த அளவுக்கு அருமையான புடவையை அணிந்தாய்? கணவனைப் பற்றி ஏன் நல்ல விஷயங்களை மட்டும் என்னிடம் கூறினாய்? நீயும் கவலையில் இருப்பாய் என்று நான் நினைத் திருந்தேன்.''
பிரிவதற்கு முன்னால் அவன் கேட்டான்: ""இதற்குள் என்ன இருக்கிறது?''
அவனுடைய கவலை நிறைந்த கண்கள் அவளுடைய ரவிக்கைக்குக் கீழே பதிந்து நின்றன.
""எனக்குத் தெரியாது. இன்னும் மூன்று மாதங்கள் கடந்தபிறகுதான் தெரியும்.''
""தெரிவிப்பாயா?''
""மேல் முகவரி என்ன என்பதைக் கூறினால்...''
அவன் கூறினான்: ""பழையதேதான். படிப்பை என்னாலும் நிறைவுசெய்ய முடியவில்லை. கல்லூரியில் கிண்டல்... இப்போது வீட்டிலேயே இருக்கிறேன்.''
அவன் சென்றுவிட்டான். போகும் நேரத்தில் கூறினான்: ""இன்னொரு மனிதனின் குழந்தையை நீ பெற்றெடுத்திருக்கிறாய் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும்போது, நான் என்ன செய்வேன் என்பதைக் கூறமுடியாது. எந்த அளவுக்கு கவலை இருக்கிறது! எனினும், தகவலைத் தெரிவிப்பதற்கு மறக்காதே.''
""தெரிவிக்கிறேன்.''
பிரசவமாவதற்காக தயா தன் சொந்த ஊரிலுள்ள வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள். பழைய சாளரமும், பெயர் தெரியாத கொடிகள் படர்ந்த டிரமும், அதிலி−ருந்த மலர்களும், கணவன் உடனில்லாத நிலையும், அவனுடைய கவலை நிறைந்த கண்களைப் பற்றிய நினைவும், பனிமூடிய மலைத் தொடர்களின் புலர்காலைப் பொழுதுகளும் அவளை அமைதியற்றவளாக்கி, உண்மையான ஒரு மனைவியைப்போல...
பிரசவம் நெருங்கி வந்தபோது, தயா தன் கணவனுக்கு நிறைய முட்டாள்தனமான விஷயங்களை எழுதி அனுப்பினாள்.
"எனக்கு பயம்...'
"அருகில் இருந்திருந்தால்...'
"நான் இறந்துவிடுவேனோ?'
சமாதானப்படுத்தக்கூடிய கடிதங்களும் ஒழுங்காக வந்துகொண்டிருந்தன.
ஒருநாள் பெற்றெடுத்தாள். கணவன் வந்து, குழந்தையைப் பார்த்துவிட்டு பணி செய்யும் இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.
தொடர்ந்து திரும்பத் திரும்ப நடக்கும் செயல்களின் வெறுப்பைத் தரும் வாசனையுடன் நாட்கள் நகர்ந்து போய்க்கொண்டிருந்தன. எழுந்து நடக்க ஆரம்பித்தபோது, அவள் மேற்கு திசை வாசலுக்குச் சென்று உலவ ஆரம்பித்தாள். பனையோலைகளின் வழியாக முன்புமாதிரியே காற்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது. விவசாயிகளின் தேக்குப்பாட்டு வய−−ருந்து நடுங்கி நடுங்கி வந்துகொண்டிருந்தது. நிலவுள்ள இரவுகள், பாலைப்பூக்களின் வாசனை, பஜனை மடத்திலி−ருந்து துறவிகளின் பாட்டுகள், பக்கத்துவீட்டைச் சேர்ந்த முரளி என்ற பையன் தேர்வுக்கு வாசிக்கும் இனிய சத்தம், இரவில் தூக்கத்திலி−ருந்து சிறுநீர் கழிப்பதற்காக கண் விழிக்கும் குழந்தையின் அழுகைகள், அன்னையின் சமாதானப்படுத்தல்கள், சூரன்போருக்குச் செல்லும் கரும்பு விற்பனையாளர்களின் தெளிவற்ற சத்தங்கள், அவர்களுடைய வண்டிச் சக்கரங்களி−ருந்து வெளிப்படும் கவலை நிறைந்த ஒப்பாரிகள்...
அவள் ஒரு சோம்பேறியாக மாறினாள்.
குழந்தையிடம் அவளுக்கு எந்தவொரு நெருக்கமும் தோன்றவில்லை.
இரண்டு வருடங்களுக்குமுன்பு நடந்ததைப்போல, மதியம் கடக்கும்போது அஞ்சல்காரர் நுழைந்து வந்தால்...
சென்ட்டின் வாசனை கொண்ட மெல்லி−ய சிவப்புநிறத் தாள்கள் வைக்கப்பட்டிருக்கும் கவர்களைத் தந்துவிட்டு, இளித்த சிரிப்புடன் திரும்பிச் சென்றிருந்தால்- ஒரு வார்த்தை கூறுவதற்கு மறந்து கிடந்தது. ஒருநாள் திடீரென்று ஞாபகம் வந்தபோது, அவசரமாக எழுதினாள்: "புதன்கிழமை கிடைக்கத்தக்க வண்ணம் நான் எழுதுகிறேன். மகனே, நான் பிரசவமாகிவிட்டேன். அவருடைய அச்சு அசல் உருவம்...' கீழே வெள்ளிக்கிழமை கிடைக்கத்தக்க வண்ணம் பதில் எழுதி அனுப்ப வேண்டுமென்று எழுதியிருந்தாள்.
அடுத்த வெள்ளிக்கிழமை அவளுக்கு பதில் கிடைத்தது.
நாய்க்கு பயந்து, அஞ்சல்காரர் கேட்டைத் தட்டினார்.
கேட்டைப் பார்த்துக்கொண்டிருந்த சாளரத்தின் வழியாக அவள் உரத்த குர−ல் கூறினாள்: ""நாயை அடைத்து வைத்திருக்கிறேன். உள்ளே வரலாம்.''
அனைத்தும் முன்பைப்போலவே... கவலை நிறைந்த ஒரு ஆனந்தம் தோன்றியது. அவளுடைய பெயரில் அறிமுகமற்ற கையெழுத்தில் ஒரு கவர்...
"என்னைத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு விஷயத்தைக் கூறவேண்டுமென்று, தம்பி தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தான். உங்களுடைய முகவரியையும் அவன் குறித்து வைத்திருந்தான். கடந்த புதன்கிழமை இரவில்...
அவளுக்கு பதைபதைப்பு உண்டானது. எவ்வளவு முயற்சிசெய்தும், மீதிப் பகுதியை வாசிப்பதற்கு முடியவில்லை. வடிவமற்ற எழுத்துகள், வளைந்து நெளிந்து செல்லும் மை அடையாளங்கள்... கடிதத்தின் மீதமிருந்த பகுதியின் எழுத்துகள் முழுவதும் அறியாத காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவை என்பதையும், இப்போது அவற்றுக்கு உயிரில்லை என்பதையும் ஒரு அதிர்ச்சியுடன் தயா புரிந்துகொண்டாள்.
___________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக நான்கு மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
"இவன்தான் ஒழுக்கசீலன்!' கதையை எழுதியவர் இலக்கியத்திற்கான உயர் விருதான "ஞானபீடம்' பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை. இந்த கதையின் கதாநாயகனைப் போன்றவர்களை நம் வாழ்க்கைப் பாதையில் அன்றாடம் சந்திக்கலாம். மனதிற்குள் ஆயிரம் ஆசைகள்...மோகங்கள்... ஆனால், அதை அடையக்கூடிய தருணம் வரும் போது தயக்கம், பயம்... ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை மையமாக வைத்து கதை எழுதிய தகழிக்குப் பாராட்டு!
"வசந்தா' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற நவீன மலையாள இலக்கியத்தின் நட்சத்திரமான எம். முகுந்தன். இதில் வரும் தினேஷன் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்!
யாரிடமும் வெளிப்படையாகப் பேசாமல்... அறைக்குள் அமைதியாக அமர்ந்து கொண்டு... எப்போதும் எதை யாவது வாசித்துக் கொண்டு... சாப்பிடுவதைக்கூட மறந்து... தன்னைத் தேடிவரும் அழகு தேவதையைக்கூட பொருட் படுத்தாமல்... இப்படியும் இளைஞர்கள் ஏன் இருக்கிறார்கள் என்பதே ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம். தினேஷனைக் கூர்மையாக செதுக்கிய முகுந்தனை நாம் மனம்திறந்து பாராட்டவேண்டும்.
"ஒரு மத்திய கோடைக்கனவு' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான டி. பத்மநாபன். நடக்காத விஷயத்தை, நடந்துவிட்டதாக கற்பனை செய்து வாழ்ந்துகொண்டி ருக்கும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை வைத்து எழுதப் பட்ட கதை. இந்த கதையின் இறுதிப் பகுதி நிச்சயம் வாசிப்போர் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்யும்.
"தயா' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், பிரபல திரைக்கதாசிரியரும், திரைப்பட இயக்குநருமான பி. பத்மராஜன். இது ஒரு கவித்துவ காதல் கதை. சரளமான நடையில் மிகவும் இயல்பாக சம்பவங்களை எழுதிச்செல்லும் பத்மராஜனின் பாணி அனைவரையும் நிச்சயம் கவரும். கதையின் இறுதிப் பகுதி நம் மனங்களில் ஆழமான கவலையை உண்டாக்கும் என்பது நிச்சயம்.
இந்த நான்கு கதைகளும், உங்களை நான்கு மாறுபட்ட களங்களுக்கு கைகளைப் பற்றி அழைத்துச்செல்லும்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங் களுக்கு என் இதயத்தின் அடித்தளத்தி−ருந்து நன்றி.
அன்புடன்
சுரா.