ஆருக்கும்
அடங்காத
அப்பனுக்கு
அங்குசம் ஆகிறாள்
மகள்!
*
""சாப்டியளா?"" என்று
எல்லோரும்தான் கேட்கிறார்கள்!
என்றாலும்...
மகள் கேட்கையில்தான்
மனசு
வயிறு
கண்கள்
எல்லாம் நிறைகின்றன!
*
எல்லாக் கரங்களும்
உதறிவிட்டுக் கடக்கையில்
இறைவனின் கரம்போல்
இறுகப் பற்றுகிறது
மகளின் கரம்!
*
எல்லோரும்
நிராயுதபாணியாக்கித்
தாக்குகையில்
தன்னையே கவசமாக்கித்
தாங்குகிறாள்
மகள்!
*
உறவுகள் எல்லாம்
ஒத்த துருவங்கள்!
அப்பனும்
மகளும் மட்டுமே
எதிரெதிர்த் துருவங்கள்!
*
வார விடுமுறையில்
வெளியில் செல்கையில்
எல்லோரும்
அது வேண்டும்
இது வேண்டும் என்று
கேட்கிறார்கள்!
மகள் மட்டும்தான்
மெல்லிய குரலில்
கேட்கிறாள்...
""காசு இருக்காப்பா?"" என்று!
*
சரியை எல்லாம்
தவறாகப்
புரிந்து கொள்பவர்களுக்கு
மத்தியில்தான்
தவறுகளைக் கூடச்
சரியாகப் புரிந்து கொள்கிற
மகள்கள் இருக்கிறார்கள்!
*
அப்பன்
அவ்வப்பொழுது
வெற்றிலைக் கொடியாகத்
தளரும் பொழுதெல்லாம்
மகள்தான்
அகத்தியாகித் தாங்குகிறாள்!
*
மகளைப் பெற்றவனுக்கு
மெதுவாகத்தான் வரும்
மரணம்!
*
கோயில் வாசலில்
மகளைக் கொஞ்சுகிறான்
தந்தை!
அம்மன்
சன்னிதியில் இருந்து
சன்னமாய்க் கேட்கிறது
விசும்பல்!
-துஷ்யந்த் சரவணராஜ்