அவன் அந்த வீட்டை நெருங்கியபோது, மாலைவேளை கழிந்திருந்தது. ஊரில் உள்ளவர்கள் சொல்லிப் பரப்பிய ஒவ்வொரு கதைகளையும் நினைத்த போது, அவனுடைய மனதிற்குள்ளும் சிறிது பயம் எழுந்துவந்தது. அந்தக் கதைகள் உண்மைகளாக இருக்குமோ? அல்லது என்ன காரணத்திற்காக அந்த மதில்களுக்குப் பன்னிரண்டு அடி உயரம் இருக்க வேண்டும்? என்ன காரணத்திற்காக அந்த பிரம்மாண் டமான வெளிக்கதவின்மீது இரும்பினாலான இரண்டு பாம்புகளை ஏற்றிவைக்கவேண்டும்?
அவன் சிறிது நேரம் தயங்கி நின்றான். பிறகு... தைரியத்துடன் வெளிக்கதவைத் தள்ளித் திறந்து, தோட்டத்தின் வழியாகச் செல்லும் மணல்பாதையை மிதித்தவாறு வாசலை அடைந்தான். அதுவொரு பழமையான கட்டடம். திண்ணையில் பன்னிரண்டு தூண்கள் இருந்தன. மேற்கூரையும், மேல்தளமும், தூணின் மேற்பகுதியும் பலவிதமான கலை வேலைப்பாடுகள் கொண்ட மரத்தால் செய்யப்பட்டிருந்தன. பழமையின் காரணமாக அவை கறுத்து, ஒளிர்ந்துகொண்டிருந்தன. திண்ணையில், வாசல் கதவுக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த பழைய எண்ணெய் விளக்கின் திரி மெல்லிலிலிய காற்றில் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. சுவரில் தெரிந்த நிழல்களைக் கூர்ந்து பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது.
""இங்க யாருமில்லிலியா?'' அவன் உரத்த குரலில் கேட்டான். அதற்கு பதிலெதுவும் வரவில்லை. அவன் உள்ளே நுழைந்து, இருண்ட அந்த கூடத்தில் நின்றவாறு சுற்றிலும் கண்களை ஓட்டினான். அதற்கு சுமார் முப்பது அடி நீளம் இருந்தது. இடையில் ஒவ்வொரு அறைகளுக்குமான கதவுகள் தெரிந்தன. எங்கும் விளக்கில்லை.
""இங்க யார் இருக்கறது?'' அவன் கேட்டான். குரல் அந்தச் சுவர்களில் மோதி, சந்தோஷத்தைத் தராதவகையில் எதிரொலிப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. திடீரென்று யாரோ படிகளில் மெதுவாக இறங்கிக்கொண்டிருக்கும் சத்தத்தை அவன் கேட்டான். தனக்கு முன்னாலிருந்த கூடத்தின் எல்லையில் ஒரு படிக்கட்டு ஆரம்பிக்கிறது என்பதையே அப்போதுதான் அவனால் பார்க்கமுடிந்தது. யாரோ விளக்குடன் இறங்கி வந்துகொண்டிருந்தார்கள்.
அவன் கூர்ந்து பார்த்தான். ஒரு வட்டமான மஞ்சள் வெளிச்சத்தில், முதன்முறையாக இரண்டு பொன்னிறப் பாதங்களையும்... தொடர்ந்து... வெண்ணிறத் துணியால் மூடப்பட்டிருந்த கால்களையும் அவன் பார்த்தான். அவள் கீழே வந்தாள். பொன்னிறத்தைக் கொண்ட ஒரு பதினேழு வயதுக்காரி. அவளுடைய சரீரம் பொற்சிலையைப்போல அழகாக இருந்தது. கண்கள் விரிந்து காணப்பட்டன. உதடுகள் நடுங்க, அவள் கேட்டாள்:
""நீங்க யாரு?''
""நான் இங்க சமஸ்கிருதம் கத்துத்தர வர்ற ஆசிரியரோட மகன். அப்பாவுக்கு இன்னிக்கு முழுமையா உடல்நலமில்ல. அதனால இன்னைக்கு வரமுடியலைன்னு சொல்லிலி அனுப்பினாரு.''
தொடர்ந்து ஓரிரண்டு நிமிடங்கள் அவர்கள் இருவரும் மிக அமைதியாக நின்றிருந்தார்கள். மேலும், "பார்' என்று இதயங்கள் முணுமுணுத்தாலும், ஏதோ தேவையற்ற ஒரு வெட்கம் அவர்களின் கண்களைத் தாழ்வாக இருக்கும்படி செய்தது. இறுதியில் அவன் கூறினான்:
""நான் முதன்முறையா இங்க வர்றேன்.''
""ம்...''
""அங்க யார் இருக்கறது?'' மேலே எங்கோயிருந்து ஒரு குரல் கேட்டது.
அந்த இளம்பெண் திடீரென்று வெளிறிப் போனாள். அவள் தன் வலக்கையால் அவனிடம் போகும்படி சைகை காட்டியவாறு, மிகவும் வேகமாகப் படிகளில் ஏறி மறைந்துவிட்டாள். அவன் அசாதாரணமாகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்துடன், தன் வீட்டிற்குத் திரும்பினான்.
அன்றிலிருந்து அவன் நேரம் கிடைக்கும்போ தெல்லாம் அந்த வீட்டைச்சுற்றி அலைந்துதிரிய ஆரம்பித்தான். கோடை விடுமுறை முடிவடைந்து, மீண்டும் கல்லூரிக்குச் செல்லும்முன்பு மேலும் ஒருமுறை அவளைப் பார்க்கவேண்டுமென்று அவன் விரும்பினான். ஒரு நாள் அவன் தந்தையிடம் கூறினான்:
""அப்பா, நானும் உங்ககூட அங்கு வரட்டுமா?'
எனக்குப் படிக்க அங்க ஏதாவது புத்தகங்க இருக்குமான்னு விசாரிக்கறதுக்காக...''
""அதை மட்டும் சொல்லவேணாம். அங்க அவங்க யாரையும் நுழைய விடமாட்டாங்க... நான் வயசானவன். பார்வை இல்லாதவன். அதனால மட்டுமே எனக்கு இந்த வேலை கிடைச்சது. அவருக்கு எந்தவொரு ஆள்மேலயும் நம்பிக்கை கிடையாது.''
ஒரு சாயங்கால வேளையில் அவன் அந்த வாசற்படியில் வந்து நின்றான். மேலேயுள்ள படுக்கை யறைகளின் சாளரக் கதவுகள் அனைத்தும் மூடப் பட்டிருந்தன. அவளைப் பார்க்கமுடியவில்லை யென்றால், தான் இறந்துவிடுவோமென்றுகூட அவனுக்குத் தோன்றியது. ஆகாயம் இருள் நிறைந்த தாகவும், மென்மையானதாகவும் இருந்தது... அவன் வாசற்கதவைத் தள்ளித்திறந்து மணல் பாதையை அடைந்தான்.
""யாரது?'' உள்ளேயிருந்து அந்த முரட்டுத்தனமான குரல் மீண்டும் எழுந்தது. அவன் திரும்பி நடக்கத் தயாரானான். காரணங்களையும் பொய்யான வார்த்தைகளையும் கூறுவதற்கு தனக்குத் துணிச்சல் இல்லையென்ற விஷயம் அவனுக்குத் தெரியும். வெளிவாசல் கதவுக்கருகில் வந்தபோது, அவன் திரும்பிப் பார்த்தான். மேலேயிருந்த சாளரக் கதவுகளில் ஒன்று திடீரென்று திறந்து, பொன்னிறத்திலிலிருந்த ஒரு முகம் தெரிந்தது. அவனுடைய கால்களின் அசைவு நின்றது. அவள் அவனை வெறித்துப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்.
""யார் அங்க வாசல்கதவைத் திறக்கறது?'' அந்த குரல் மீண்டும் சத்தமாக ஒலிலித்தது. அவள் அவனிடம் போகும்படி சைகை காட்டினாள்.
அதற்குப்பிறகு அவன் அவளைப் பார்த்தது இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான்.. அந்த சமயத்தில் அவன் படிப்பும் பயிற்சியும் முடிவடைந்து ஒரு டாக்டராகியிருந்தான். பணியை ஆரம்பிப்பதற்குமுன் இரண்டு மாதகாலம் தன் ஊரில் தந்தையுடனும் தாயுடனும் இருக்கலாம் என்றெண்ணி அவன் வந்திருந்தான். ஒருநாள் உரையாடலுக்கு மத்தியில் தன்னுடைய திருமண விஷயம் வந்தபோது, அவன் தன் மனதிலிலிருந்த விருப்பத்தை தந்தையிடமும் தாயிடமும் வெளியிட்டான்.
""மந்திரவாதியோட மகளையா?'' தாய் பதை பதைப்புடன் கேட்டாள்: ""உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?''
அவள் பழைய கதைகளை மீண்டும் விளக்கிக்கூற ஆரம்பித்தாள். எவ்வளவோ வருடங்களாக மந்திரவாதத்தைக் கையாண்டுவரும் அந்த குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உயிருடன் இருப்பதில்லை என்றும், அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்துகொள்பவர்கள் எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் திடீரென்று இறந்துவிடுவார்கள் என்றும் அவள் கூறினாள்.
""செத்தவங்களை உயில் எழுதறதுக்காக மட்டும் ஒன்றோ இரண்டோ மணி நேரம் உயிர்ப்பித்துக் கொண்டுவர அந்த மனுஷனால முடியும்னு கேள்விப் பட்டிருக்கேன்.''
தாய் கூறினாள். அதற்குப்பிறகு அவன் பலருடைய வீடுகளிலிருந்தும் மந்திரவாதியைப் பற்றிய கதைகளைக் கேட்டான். மந்திரவாதி வீட்டில் வாசலைப் பெருக்குவதற்காகச் செல்லும் வயதான பெண் ஒரு நாள், தோட்டத்தில் வெளிறி மெலிந்துபோய்க் காணப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்ததையும், பிறகு அவளை எந்த சமயத்திலும் பார்க்க இயலாமல் போனதையும், ஒருநாள் ஒரு அறையிலிருந்து ஒரு பிஞ்சுக் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டத்தையும், வேறுபல விஷயங்களையும்...
அவை எவையும் ஆச்சரியத்தை உண்டாக்கும் விஷயங்கள் அல்ல... மந்திரவாதிக்கு ஏன் மனைவி இருக்கக்கூடாது? அந்த மனைவி ஏன் பிரசவத்தின்போது இறந்திருக்கக்கூடாது? ஆனால், அந்தக் கதைகளில் வீட்டு உரிமையாளரின் கெட்ட பெயரின் கரும்நிழல் விழுந்து கிடந்தது. மந்திரவாதியின் தொழுவத்தில் நின்றிருந்த கருத்த பசுக்களும், அவருடைய தோட்டத்தில் நடந்து திரியும் கருப்புநிற நாயும் சபிக்கப்பட்ட மனிதர்களே என்று சிலர் கூறினார்கள். சாயங்காலத்திற்குப்பிறகு ஒரு கழியைக் கையில் எடுத்துக்கொண்டு, நெற்றியின்மீது பற்றி ஒளிரும் ஒரு சிவந்த திலகத்துடன் மந்திரவாதி நடப்பதற்காக வெளியேறும்போது பாதையில் ஒரு ஆள்கூட அவருக்கெதிரில் நடந்துவர மாட்டார்கள்.
அனைத்தையும் கேட்டான். ஆனால், எதையும் நம்பவில்லை. நம் கதாநாயகனான டாக்டர் ஒருநாள் அந்த வீட்டிற்குள் நுழைந்து, மந்திரவாதியைப் பார்ப்பதற்கு விரும்பினான். ""யாரது?'' மேலேயிருந்து மந்திரவாதி கேட்டார். கதவைத் திறந்துவிட்ட பணியாள் ஒதுங்கினான்.
""நான்தான்... ஆசிரியரோட மகன்... சந்திரன்.''
படிகளில் இறங்கியவாறு மந்திரவாதி கேட்டார்:
""என்ன விஷயம்?''
""உங்களின் மகளைக் கல்யாணம் செய்துக்கணும்னு நான் நினைக்கிறேன். அதுக்கு சம்மதம் கேட்க வந்திருக்கேன்.''
மந்திரவாதி உரத்த குரலிலில் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். தொடர்ந்து பணியாளிடம் அவனை வெளியேற்றி கதவை அடைத்துப் பூட்டும்படி கூறினார்.
அதற்குப் பிறகும் பின்வாங்காமல், டாக்டர் அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதி, அஞ்சல் பெட்டியில் போட்டான். அதற்கு பதிலாக வந்தவை ஒரு ஆணின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த நான்கு வரிகள்...
"இனி நீ என் மகளுக்கு எழுதினால், நான் உன்னை அழித்துவிடுவேன்.'
அவ்வளவுதான்... அதை அவன் கிழித்தெறிந்தான். அழித்துவிடுவார் போலிலிருக்கிறது! எப்படி அழிப்பார்? இந்த காலத்தில் கொன்று அழிப்பதற்கு முடியுமா? ஊரைவிட்டுக் கிளம்புவதற்கு முந்தைய நாள் டாக்டர், மந்திரவாதியின் வீட்டிற்குச் சென்றான். நேரம் இரவு எட்டரை ஆகியிருந்தது. மந்திரவாதி ஒருவேளை... நடப்பதற்காக வெளியேறிச் சென்றுவிட்டு, திரும்பிவராமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிற தென்ற சிந்தனை அவனுக்குத் துணிச்சலைக் கொடுத்தது. கதவைத் திறந்தது அவள்தான். அவன் கேட்டான்:
""என்னோட வர்றியா? நீயில்லாம என்னால வாழமுடியாது.''
அவள் அவனுடைய கையைப் பிடித்து தன் கைகளில் வைத்து அழுத்தினாள். அவளுடைய கண்கள் நிறைந்து வழிந்தன. ஆனால், அவள் எதுவும் கூறவில்லை. அந்தச் சமயத்தில் வாசல்கதவு திறக்கப்படும் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.
அவன் கதவின் மறைவில் ஒட்டி நின்றான். மந்திரவாதி திரும்பி வந்தார். படிகளில் ஏறி, மேலே சென்றார். பின்னால் மகளும்.... உடனடியாக டாக்டர் வீட்டிற்குத் திரும்பினான்.
அவள் தன்னைக் காதலிலிக்கிறாள் என்பதையும், அவளுடைய வாழ்க்கையில் சந்தோஷமென்ற ஒரு விஷயமே இல்லை என்பதையும் அவன் உணர்ந்துகொண்டான்.
அதற்குப்பிறகும் இரண்டு வருடங்கள் கடந்தோடின. டாக்டரின் தந்தை மரணமடைந்துவிட்டார்.
அவன் சொந்த ஊருக்கு வந்து தாயின் அருகில் சிறிது நாட்கள் தங்கினான். ஒருநாள் தாய் கூறினாள்:
""மந்திரவாதிக்கு உடல்நலமில்ல. வெளியே வந்து நாலஞ்சு மாசங்களாயிடுச்சி.''
அவன் அன்றும் மந்திரவாதியின் வீட்டிற்குச் சென்றான். பணியாளின் அனுமதியே இல்லாமல் மேலே சென்றான். மந்திரவாதி படுத்திருந்த அறையை அடைந்தான்.
""யாரது?'' கட்டிலின்மீது போர்வையை மூடிப் படுத்த நிலையில் மந்திரவாதி கேட்டார்.
""என்னைத் தெரியலையா? சந்திரன்...''
""உனக்கு இங்க என்ன வேலை?''
""மீண்டும் உங்ககிட்ட சம்மதம் கேட்கறதுக்காக நான் வந்திருக்கிறேன். உங்க மகளைக் கல்யாணம் செஞ்சுக்கணும்ங்கற விருப்பம் எனக்கு இருக்கு.''
""ஹா! என் மகளை நீ கல்யாணம் செஞ்சுக்கப் போறியா? அவள் உன்னை எந்தச் சமயத்திலும் ஏத்துக்கமாட்டா...''
மந்திரவாதி கூறினார்:
""அவள் முழுமையான பெண். அவளுக்கு எந்தவொரு குறையுமில்ல. குற்றமுமில்ல. உனக்கு?''
""அவளுக்கு என்மேல காதல் இருக்குன்னு நான் நம்புகிறேன்.''
""எந்த சமயத்திலும் கிடையாது.''
""ம்... இங்கிருந்து வெளியேபோ...'' மந்திரவாதி கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தார். அவருடைய சரீரம் மிகவும் மெலிலிந்து, வெளிறிப்போய்க் காணப்பட்டது. இனம்புரியாத ஒரு பரிதாப உணர்வு அந்த கிழவரின்மீது டாக்டருக்கு உண்டானது. போரில் வீழப்போகும் எதிரியிடம் தோன்றக்கூடிய பொறுமையும்...
""நான் போறேன். ஆனா இன்னைக்கு இல்லைன் னாலும் நாளை... நீங்க இறந்தபிறகு... அவள் என் மனைவியாவா...''
டாக்டர் கூறினான்.
""சுவர்ணா!'' மந்திரவாதி அழைத்தார்: ""இங்க வா...
இவனை வெளியே போகச் சொல்லு. இவன் என்ன பைத்தியக்காரத்தனமான வார்த்தையெல்லாம் பேசறான்! உனக்கு இவன்மேல காதல் இருக்காம்! காதல்... ஹா... ஹா...''
வேறு அறைக்குள்ளிருந்து மகள் வெளியே வந்தாள்.
""ஆமாம்பா... நான் அவரைக் காதலிக்கிறேன். எப்போதும் காதலிச்சேன்.'' அவளுடைய குரல் பொன் நாணயங்களின் குலுங்கலைப்போல இருந்தது. டாக்டர் அவளின் முகத்தைப் பார்த்து நன்றியுடன் சிரித்தான்.
""உன்னை நான் கொன்னுடுவேன். நன்றி இல்லாதவளே!'' மந்திரவாதி வேகமாக எழுந்தார்.
ஆனால், அவர் திடீரென்று தளர்ந்து தரையில் விழுந்தார். தொடர்ந்து இங்குமங்குமாக உருண்டுகொண்டும் தேம்பி அழுதுகொண்டும் இருந்தார். போய்விடும்படி டாக்டரிடம் அவள் சைகை காட்டினாள். அவன் விருப்பமில்லா மனதுடன் விடைபெற்றான். தன் வீட்டிற்குத் திரும்பிவந்தான்.
பிறகு... தான் பணிசெய்யுமிடத்திற்கு தாய் அனுப்பிவைத்த ஒரு கடிதத்தை வாசித்தபோது, அந்த காட்சியை அவன் மீண்டும் நினைத்துப் பார்த்தான்.
"இரவு முழுவதும் அழுகைச் சத்தமும், பிற சத்தங்களும் கேட்டுக்கொண்டேயிருந்தன.' அம்மா எழுதியிருந்தாள்:
"யாரைக் கொன்றிருப்பார்கள்? இப்படியொரு வீடு இருப்பதே இந்த ஊருக்கு ஆபத்துதான்.'
என்ன நடந்திருக்கும்? அவளை அந்த மந்திரவாதி அடித்திருப்பாரோ? எதிர்த்திருப்பாரோ? இவ்வளவு தூரத்தில் வசிக்கும் தன் கையற்ற நிலையைப் பற்றி நினைத்துப் பார்த்து டாக்டர் மிகவும் கவலைப் பட்டான்.
ஒருநாள் மந்திரவாதியும் மரணமடைந்தார்.
அப்போது டாக்டருக்கு இருபத்தெட்டு வயது முடிந்திருந்தது. அவன் தாயைப் பார்ப்பதற்காக வந்தபோது, மீண்டும் தன் திருமண விஷயத்தைப் பற்றிப் பேசினான். அப்போது தாய் கூறிய வார்த்தைகள் அவனை அதிர்ச்சியடையச் செய்தன.
""அந்த மகள் செத்து எவ்வளவு காலமாச்சு! அவள் இல்லாமபோய் நாலஞ்சு வருஷங்களாச்சே...''
""செத்துட்டாளா? யார் சொன்னது?''
""யாரும் சொல்லல... ஆனா, யாரும் அந்தப் பெண்ணைப் பார்க்கல. செத்திருப்பான்னு நினைக்கிறாங்க.''
""அம்மா... அவ செத்திருக்கவெல்லாம் மாட்டா.''
அவன் ஒரு புதிய பட்டுச் சட்டையையும் வேட்டியையும் அணிந்து, அந்த வீட்டிற்குச் சென்றான். நேரம் சாயங்காலம் ஆகியிருந்தது. சாயங்காலப் பொழுதின் இருளில் அந்த வீடு சுருண்டு கிடக்கும் ஒரு கருப்புநிற நாயைப்போல இருந்தது. வாசலிலில் விளக்கில்லை.
அவன் நீண்டநேரம் வாசற்கதவைத் தட்டினான். இறுதியில் கதவைத் திறந்து வயதான பணியாள் கேட்டான்:
""என்ன விஷயம்?''
""நான் கவர்ணாவைப் பார்க்கணும்.''
""அவங்க இங்க இல்ல. எல்லாரும் போயிட்டாங்க... எல்லாரும் போயிட்டாங்க...'' அவன் வெறுமையான கண்களை வந்திருக்கும் மனிதனின் முகத்தில் பதித்தவாறு தளர்ந்துபோன குரலில் கூறிக்கொண்டிருந்தான்: ""எல்லாரும் போயிட்டாங்க...''
டாக்டர் அவனைத் தள்ளி ஒதுக்கிவிட்டு, படிகளில் ஏறினான். மேலே கூடத்தில் மெழுகுவர்த்தியைப் பற்றவைத்து, அதன் வெளிச்சத்தில் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள் அவனுடைய காதலி.
""சுவர்ணா... நான் வந்துட்டேன்.'' அவன் கூறினான். தன் கால்களின் ஓட்டம் நிரந்தரமாக நின்றுவிட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது.
அவள் புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு எழுந்தாள்.
""நான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்.''
அவள் கூறினாள். அவளுடைய முகம் பழமையான பொன் தகட்டையைப்போல இருந்தது. சரீரம் குளிர்ந்து மென்மையாக இருந்தது. அவள் அவனுடைய கைகளைப் பிடித்து தன் அறைக்கு அழைத்துச்சென்றாள்.
மறுநாள் காலையில் மிகவும் சீக்கிரமே படுக்கை யிலிருந்து எழுந்தமர்ந்த சந்திரன் கூறினான்:
""உன்னை கல்யாணம் செய்துக்கிட்டு, இங்கிருந்து உன்னை நான் கூட்டிட்டுப் போகப்போறேன்னு சொன்னப்போ நீ ஏன் அழுத? அதுல உனக்கு என்ன எதிர்ப்பு?''
அவள் தலையணையில் சாய்ந்து படுத்தவாறு சிரித்தாள்.
""ஏதாவது சொல்லு சுவர்ணா. இந்த வீட்டைவிட்டுப் போறதுல உனக்கு ஏன் இந்த அளவுக்குத் தயக்கம்?''
""இந்த வீட்லயிலிருந்து நான் எந்த சமயத்திலும் போகமாட்டேன்.''
""காதலுக்காகக்கூட...?''
அவள் தலையை ஆட்ட மட்டும் செய்தாள்.
அவன் அன்று தன் வீட்டை அடைந்தபோது, தாய் தூங்கிக்கொண்டிருந்தாள். அதனால் அவன் தான் மீண்டும் சந்தித்த விஷயத்தை ஒரு ரகசியமாகவே வைத்துக்கொண்டான். அன்றிரவிலும் அவன் அந்த வீட்டிற்குச் சென்றான். இரவில் மொட்டை மாடியில் நின்றுகொண்டு அவன் கூறினான்.
""நான் அதிர்ஷ்டசாலிலி... உன்னைப்போல பேரழகு படைச்ச ஒரு மனிதப் பெண் இந்த உலகத்தில இருப்பாள்னு நான் கனவில்கூட நினைச்சதில்ல.''
அவள் அப்போதும் சிரித்தாள். கீழே தொழுவத் திலிருந்தோ வேறு எங்கிருந்தோ பசுக்கள் சத்தமிட்டன. ஆந்தைகள் மரங்களிலிருந்து முனகின. தன் கைகளும் கால்களும் விறைப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் அவளைச் சேர்த்து நிற்கச் செய்தவாறு கூறினான்:
""உன் நிறம் பொன்னிறம்... உனக்கு இந்த நிறம் எப்படி கிடைச்சது?''
அப்போதும் அவள் சிரித்தாள்.
விடுமுறைக் காலம் முடிவுக்கு வந்தது. புறப்படு வதற்கு முந்தைய நாள் இரவு வேளையில்.. நள்ளிரவு நேரம் கடந்து ஒன்றோ இரண்டோ நிமிடங்களுக்குப் பிறகு அவன் திடீரென்று கண் விழித்து எழுந்து உட்கார்ந்தான். தான் நாளை இரவு அவளைப் பார்க்கப் போவதில்லை என்பதை நினைத்தபோது, அவனுக்கு மிகுந்த கவலை உண்டானது. மெழுகுவர்த்தியைப் பற்றவைத்து, அவன் மேஜைக்கு அருகில் நகர்த்தி வைத்தான். பிறகு... பொன்னிறத்தைக் கொண்ட அந்தப் பெண்ணை அழைக்க ஆரம்பித்தான்.
"'கண் விழி... கவர்ணா. எழுந்து உட்காரு... காலைவரை நாம பேசிக்கிட்டிருப்போம்.''
அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள். அவன் அவளுடைய தலைமுடி சுருள்களை ஒதுக்கினான்.
அவளுடைய உதடுகளை மெதுவாகத் தொட்டான்.
அதற்குப்பிறகும் அவள் கண் விழிக்கவில்லை. இறுதியில் அவன் தன் பட்டுத் துவாலையை எடுத்து குளிர்ந்த நீரில் முக்கி, அவளுடைய முகத்தைத் துடைத்தான். கையைப் பின்னால் இழுத்தபோது பார்த்த காட்சி அவனை அதிர்ச்சியடையச் செய்தது. அந்த முகம் வெறுமையாக இருந்தது. கண்கள் இல்லை... மூக்கு இல்லை.... எதுவுமே இல்லை. வெறும் வாய் மட்டும்... துவாலையின்மீது பொன் நிறசாயம் ஒட்டிருந்தது. அவன் துவாலையைத் தரையில் எறிந்துவிட்டு, பைத்தியம் பிடித்தவனைப்போல அறையிலிருந்து வெளியே ஓடினான். படிகளில் இறங்கத் தயாரானபோது, கட்டிலிலில் படுத்திருந்த உருவம் எழுந்து அவனைப் பின்தொடர்ந்தது.
""போகாதீங்க... தயவுசெய்து போகாதீங்க...''
அவள் பரிதாபமாக கெஞ்சினாள். அவன் திரும்பிப் பார்த்தான். படிகளுக்கு மேலே உருக்குலைந்த தோற்றத்துடன் அவள் நின்றுகொண்டிருந்தாள்.
ஆனால் முகம் இல்லை...
""அய்யோ...'' அவன் உரத்த குரலிலில் கத்தினான்: ""நீ ஒரு மனிதப் பிறவியே இல்ல.'' அவன் இலக்கே இல்லாமல் அந்த இருட்டில் ஓட ஆரம்பித்தான். கீழே கூடத்தில் சிறிதுகூட வெளிச்சம் இல்லை. கறுத்த நாய்கள் அங்கு வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றன என்பதாகவும், அவற்றின் மஞ்சள்நிறக் கண்கள் தன் முகத்தில் பதிகின்றன என்பதாகவும் அவனுக்குத் தோன்றியது.
அவன் வாசற்கதவினைத் தடவிப் பிடித்து திறந்து, வாசல் பகுதிக்கு வந்தான்.
""என்னைவிட்டுப் போகாதீங்க...'' அந்தப் பெண் குரல் அவனைப் பின்தொடர்ந்தது. ""நான் பேய்தான்... ஆனா, நான் உங்களை எல்லாத்தையும்விட அதிகமா காதலிக்கிறேன்.'' அவள் கூறினாள். அவன் திரும்பிப் பார்க்காமல், வாசல்கதவைத் திறந்து, வெளியே... சாலையின் வழியாகத் தன் வீட்டை நோக்கி ஓடினான். அப்போதும் முகமற்ற ஒரு பெண் வாசற்படியில் வந்துநின்று, அவனிடம் புலர்காலைப் பொழுதின் காற்றினைப்போல மென்மையான குரலில் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
""என்னை மன்னிச்சிடுங்க... நான் உங்களை எல்லாத்தையும்விட அதிகமா காதலிலிக்கிறேன். மன்னிச்சிடுங்க...''
ஆனால், அவன் மன்னிக்கவில்லை. பிறகு... எந்த சமயத்திலும் அவன் வீட்டின் வாசற்கதவைத் தள்ளித் திறந்து, துடிக்கக்கூடிய இதயத்துடன் அவளைப் பார்ப்பதற்காக வரவில்லை. அந்தவகையில் அவளும் நிழல் இல்லாத ஒரு உயிரானாள். இரவு வேளைகளில், இடிந்து விழுந்து கொண்டிருந்த சுவர்களைக் கொண்டிருந்த அந்த வீட்டிற்குப் பின்னாலிருந்து சரீரங்களற்ற பசுக்கள் கரைந்தபோது, மரங்களிலிருந்தவாறு ஆந்தைகள் முனகியபோது, தோட்டத்தில் நடந்தவாறு நாய்கள் சந்திரனைப் பார்த்து ஊளையிட்டபோது அவளும் அழுதாள். தன்னை ஒரு காலத்தில் காதலிலித்த ஆணின் பெயரைக் கூறி, இழக்கப்பட்டுவிட்ட அந்த சொர்க்கத்தை நினைத்து அவள் உரத்த குரலில் தேம்பியழுதாள்.