இரவில் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ள வில்லை. இடையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நான் ஓசை உண்டாக்காமல் வெளியே சென்று, வாய்க்காலிலும் வெளியேயிருந்த பாதையிலும் "டார்ச்' அடித்துப் பார்த்தேன். மகளின் ஒரு மெல்லிய குரலுக்காக... அசைவுக்காக காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு நின்றேன். ஆனால் அவளைப் பார்க்கவோ அவளுடையத் குரலைக் கேட்கவோ முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏமாற்றமடைந்தவனாகத் திரும்பிவந்து படுத்தபோது பயம் தோன்றியது. மனைவி உறங்காமல் படுத்திருப்பாளோ? அவள் என்னிடம் ஏதாவது கேட்பாளோ? கேட்டால் என்ன சொல்லி சமாதானப்படுத்துவேன்? இப்படி பல கவலைகளும் மனதிற்குள் இருந்தன. ஆனால் மனைவி எதுவுமே கேட்கவில்லை. எனினும்,
அவள் வெறுமனே கண்களைமூடிப் படுத்திருந்தாள். தூங்கவில்லை. அவளாலும் உறங்கமுடியவில்லை. அவளுடைய மனதிலும் மகளைப் பற்றிய நினைவு களும் கவலைகளும் இருக்குமென்பதில் எனக்கு உறுதியான கருத்திருந்தது.
இரவில் பல நேரங்களில் நான் படுத்துக்கொண்டே எங்கள் இருவருக்குமிடையிலிருந்த இடத்தில் தடவிப் பார்த்தேன். அது என்னுடைய வழக்கமான பழக்கமாகவும் இருந்ததே! அவளுடைய ரோமங்கள் நிறைந்த, மினுமினுப்பான முதுகில் சற்று வருடுவதற்காக... "படுத்திரு. என் மகளே... நீ சுகமா படுத்திரு' என்று அவளிடம் கூறுவதற்காக... அதுவும் இல்லாவிட்டால், அவளை மெதுவாகத் தூக்கியெடுத்து என் நெஞ்சில் வைத்து ஓசை உண்டாக்காமல் கொஞ்சுவதற்காக...
ஆனால், எங்கள் இருவருக்குமிடையே இருந்த இடம் காலியாகக் கிடந்தது.
காலையில் எழுந்து தேநீர் தயாரித்தபோதும் மனைவி எதுவுமே கூறவில்லை. நான் சமையலறையில்தான் இருந்தேன். தூக்கம் இல்லாததைப் போல, இல்லா விட்டால்- நீண்ட நேரம் அழுததைப்போல அவளுடைய கண்ணிமைகள் தடிமனாகி வீங்கிக் காணப்பட்டன. அவளுடைய செயல்கள் மிகவும் மெதுவாக நடந்துகொண்டிருந்தன.
நான் அங்கு... எங்கோ பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலையில் அவளுக்கு இளம் வெப்பத்திலிருக்கும் பாலை, அவளுடைய பாத்திரத்தில் ஊற்றிக்கொடுத்த பிறகுதானே நாங்கள் தேநீர் பருகுவோம்.
இன்றும் மனைவி அந்த வழக்கத்திற்கு பிரச்சினை உண்டாக்கவில்லை.
ஆனால், மீன்காரன் வந்தபோது எங்களுக்கிடையில் நிலவிக்கொண்டிருந்த மௌனம் இல்லாமற்போனது.
நான் கேட்டேன்:
""வாங்கணுமா?''
""நேத்து வாங்கியதுதான் ஃப்ரிட்ஜில இருக்கே...?'' மனைவி கூறினாள்.
""வாங்கலாம்... அவ வர்றப்போ நல்ல பசியா இருப்பா.''
என் முகத்தில் வெளிப்பட்ட சந்தேகத்தைப் பார்த்துவிட்டு, மனைவி உறுதியான குரலில் கூறினாள்:
""வாங்கணும்...''
தொடர்ந்து யாரிடம் என்றில்லாமல் கவலையுடன் இதையும் சேர்த்துக் கூறினாள்:
""இனிமே பயன்படுத்தலைன்னா நாய்களுக்குக் கொடுக்கலாமே?''
பிறகு நான் எதுவும் கூறவில்லை.
காலையில் பத்திரிகைகள் வாசலில் வந்து கிடந்தன. அவை ஒவ்வொன்றையும் வாசிப்பதற்கு எடுத்தாலும், கண்ணும் மனமும் எழுத்துகளில் பதிந்து நிற்கவில்லை. பொதுவாக காலையில் வாசலில்
அமர்ந்து பத்திரிகைகளை வாசிக்கும்போது, மகள் கால்பகுதியில் இருப்பாள். என் கால்களில் முகத்தை மெதுவாக உரசிக்கொண்டும், அருகிலேயே இளம் வெயிலில் கனவுகள் கண்டவாறு படுத்திருக்கும் நாய்களின் வால்களைப் பிடித்து இழுத்துக்கொண்டும், பின்னங்கால்களால் நிமிர்ந்து நின்று இரண்டு கைகளாலும் அவர்களுடைய முகங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் தந்துகொண்டும், பிறகு அவர்கள் விலகிச்செல்லப் பார்க்கும்போது என்னை நோக்கி ஓடிவந்து அவர்களை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துக்கொண்டும்... அப்படித்தானே தினமும் நடந்துகொண்டிருக்கும்.
அவளைப் பார்க்காமலிருந்த காரணத்தால் நாய்கள் மூவரும் அமைதியற்ற நிலையில் இருந்தார்கள். "எங்களுடைய அன்பிற்குரிய தோழி எங்கே?' என்று அன்பும் பதைபதைப்பும் நிறைந்த கண்களால் அவர்கள் கேட்டார்கள்.
சிறிது நேரம் அவர்களுடைய செயல்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்துவிட்டு நான் கூறினேன்:
""எங்களுக்கும் தெரியாது. அவ எங்க போனாளோ?
தெரியல. எங்கெல்லாமோ அவளைத் தேடிப் போனேன்ங்கற விஷயம் உங்களுக்கும் தெரியுமில்லியா? இனி அவ வருவாளா? வர்றதா இருந்தா, எப்போதுங்கற விஷயமெல்லாம் எனக்கு...''
நாய்கள் கவலையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் நான் கவனித்தேன்- காலையில் வைக்கப்பட்ட அவர்களுக்கான உணவு அப்படியே இருந்தது. யாரும் எதையும் சாப்பிடவில்லை.
நான் கேட்டேன்:
""ஏன் யாரும் எதையும் சாப்பிடல?''
அவர்கள் எதுவுமே கூறாமலிருக்க, நான் மீண்டும் கேட்டேன்:
""மக வந்த பிறகுதான் இனிமே எதையும் சாப்பிடுவோம்னு சொல்றீங்களா?''
நாய்கள் கவலையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் வெறுப்புடன் கூறினேன்:
""அப்படின்னா... இங்க... இப்படி கவலையோட இருக்காம எங்காவதுபோய் அவளைக் கண்டுபிடிச்சு, கொண்டுவரக் கூடாதா?''
என் வார்த்தைகளைக் கேட்டதும் அவர்களிடம் உண்டான மாற்றம் ஆச்சரியப்படக் கூடியதாக இருந்தது. நாய்கள் மூவரும் எழுந்து ஒரு நிமிடம் என்னையே பார்த்தவாறு நின்றிருந்துவிட்டு, மெதுவாக ஒன்றுக்குப் பின்னால் மற்றொன்றாக அவர்கள் முன்னோக்கிச் சென்றார்கள்.
முதுமையாலும் நோயாலும் நாய்கள் மூவரும் இயலாத நிலையில் இருந்தார்கள். ஓடுவதற்கோ மற்ற நாய்களுடன் சண்டை போடுவதற்கோ தேவையான சக்தி அவர்களுக்கு இல்லாமலிருந்தது. எனினும், அவர்கள் தங்களுடைய தோழியைத் தேடி வெளியே செல்வதைப் பார்த்து என் மனம் இளகியது.
அவர்கள் யாரும் இங்கு பிறந்து வளர்த்தவர்கள் அல்ல. நான் எங்கிருந்தோ இளம்வயதில் கொண்டுவந்து இங்கு கவனம் செலுத்தி வளர்த்தவர்களும் அல்ல. வாழ்க்கையின் முக்கால் பகுதி வேறு எஜமானர்களின் மீது அன்பு செலுத்தியும் நம்பிக்கை வைத்தும், அவர்களுடைய வீடுகளுக்கும் பொருட்களுக்கும் காவலாக நின்றவர்கள் அவர்கள். இறுதியில் முதுமை வந்து சேர்ந்தபோது, நோய் ஆக்கிரமித்தபோது, அழகு இழக்கப்பட்டபோது சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்கள். அபயம் தேடியவர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் இங்கு வந்து சேர்ந்தார்கள். நுழைந்து படுப்பதற்கு ஒரு இடமும், சாப்பிடுவதற்கு விருப்பம்போல் உணவும் மட்டுமல்ல- என் அன்பும் அவர்களுக்குக் கிடைத்ததே! இன்னும் சொல்லப்போனால்... வாழ்க்கையில் இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் கிடைத்திராத அளவுக்கு அன்பு...
அவர்களுடைய தோழி வந்து சேர்ந்தது, அதற்குப் பிறகு மிகவும் தாமதமாக அல்லவா?
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு... ஒரு இரவு முழுவதும்.. பிறகு... ஒரு பகலிலும் ஒரு பூனைக் குட்டியின் அழுகையை நான் கேட்டேன். எனக்கு மட்டும் அவ்வாறு தோன்றவில்லை. மனைவியின் காதிலும் அது விழுந்தது. மூன்றாவது நாளும் கேட்டாள். ஆனால், அது மிகவும் இடைவெளிவிட்டு இருந்தது. சத்தமாகவும் இல்லை.
முதல் நாளன்றே நான் நிலம் முழுவதையும் பார்த்தேன். மறுநாளும் பார்த்தேன். இறுதியில்... மூன்றாவது நாளன்று கூர்ந்து... அலசிப் பார்த்தபோது, நிலத்தின் தூரத்து மூலையில், பிறந்து அப்படியெதுவும் நாட்கள் அதிகம் ஆகியிராத, அதிகபட்சம் கண் திறக்க மட்டும் செய்திருந்த ஒரு பூனைக்குட்டி சருகுகளால் மூடப்பட்ட நிலையில்... எறும்புகள் பூனைக்குட்டியை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன.
நான் அதை கைகளுக்குள் எடுத்து, மார்போடு சேர்த்து அணைத்தவாறு வீட்டை நோக்கி ஓடினேன்.
பூனைக்குட்டியைப் பார்த்ததும், மனைவி கவலையுடன் கூறினாள்:
""தெய்வமே! இந்த பாவத்தை யார் செஞ்சது?''
நான் கூறினேன்:
""அதெல்லாம் இருக்கட்டும். நீ சீக்கிரம் கொஞ்சம் பாலைச் சூடுபண்ணு. இதை எப்படியாவது காப்பாத்தலைன்னா... நம்ம வீட்டுக்கு வந்திருக்குற விருந்தாளியாச்சே...''
இளம் வெப்பம் நிறைந்த பாலை மனைவி விருந்தாளிக்கு மெதுவாக ஊற்றிக் கொடுத்தாள். சிறிதளவு பருகினாலும், பெரும்பாலும் வெளியே வழிந்துகொண்டிருந்தது. அப்போது மனைவி கவலையுடன் கூறினாள்: "உயிரோட இருக்குமோ என்னவோ? அந்த அளவுக்கு சிறிய குட்டி... தாயில்லாமல் எப்படி...? எனக்குத் தெரியல...''
உயிருடன் இருக்குமா என்ற சந்தேகம் என் மனதிற்குள்ளும் இருந்தது. எனினும், நான் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. நான் கூறினேன்:
""ஏன்... வாழக்கூடாது? நிச்சயமா உயிரோட இருக்கும். பிறகு... தாய் இல்லைங்கறதுக்காக... இங்க நீ இல்லையா?''
பொதுவாக இப்படி ஏதாவது கூறினால்,
பொய்யான கோபத்தையாவது மனைவி வெளிக்காட்டுவாள்.
ஆனால் அன்று அது நடக்கவில்லை.
மரணத்தின் விளிம்பிலிருந்து மெதுவாக...
பின்னோக்கி நடந்துவந்த அந்த பூனைக்குட்டிதான் நாங்கள் கவனித்து வளர்த்தவர்களிலேயே மிகவும் அழகானவளாக வளர்ந்தாள்.
என்ன காரணத்தாலோ நாங்கள் அவளுக்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. "மகள்' என்று அழைக்க மட்டும் செய்தோம்.
உண்மையிலேயே அவள் எங்களுக்கு ஒரு மகளாகத்தானே இருந்தாள்.
ஆரம்ப நாட்களில் நாய்களால் மகளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் எங்களுக்கு இருந்தது. அதனால் நாங்கள் எப்போதும் ஒரு கண்ணை அவள்மீது வைத்துக்கொண்டே இருந்தோம். இரவில் என்றல்ல. பகலில்கூட. அவள் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. சிறிய குட்டி அல்லவா? நாய்களிடமிருந்து பலமான ஒரு காற்று வந்து மோதினால் போதுமே-
அவளுடைய கதை முடிவதற்கு! ஆனால்... பிறகும்...
எங்களுடைய கண்களை ஏமாற்றிவிட்டு அவள் வெளியேறிச் சென்று, மூன்று நாய்களுடனும் எந்தவொரு பயமுமில்லாமல் பழகினாள். பகல் வேளையில் அவர்களுடன் படுத்துத் தூங்கினாள். அவர்களின் வயிற்றில் தலைவைத்துதான்! பிறகு... அவர்களுடைய பாத்திரத்திலிருந்து அவர்களுடன் சேர்ந்து தின்னவும் குடிக்கவும் செய்தாள்.
இரவில் எங்களுடன் சேர்ந்து படுப்பதற்கு வரும்போது மட்டுமே அவள் நண்பர்களிடமிருந்து பிரிந்திருப்பாள்.
எனினும்... இப்போது...
நாய்கள் மூவரும் தோழியைக் காணாமல் கவலையுடன் திரும்பிவந்திருந்தார்கள். அவர்கள் என்னுடைய முகத்தைப் பார்க்காமல் வாசலிலிருந்த முருங்கை மரத்திற்குக்கீழே படுத்தார்கள்.
ஒரு வருடத்திற்கிடையில் அவளுக்கு உண்டான ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைப் பற்றித்தான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவள் நடக்கும்போது பலவேளைகளில் பின்னால் நின்றுகொண்டு அவளுடைய அழகை நான் ரசித்துக்கொண்டிருப்பேன். ஏன்... அவளுடைய வளர்ச்சியைப் பற்றி மட்டும் கூறுகிறேன்? அவளுடைய நிறம், அவளுடைய அழகு... இவை எதுவுமே வேறு எந்தவொரு பூனைக்கும் இல்லையே! வெள்ளை நிறத்தை நான் எவ்வளவோ பார்த்திருக்கிறேன்! ஆனால், இதைப் போன்ற ஒரு வெள்ளை நிறம்... நல்ல... பாலைப்போல இருந்ததே! பிறகு... அந்த வட்ட முகம்... கண்கள்...
வாலை உயர்த்தி வைத்துக்கொண்டும், சாமரத்தைப்போல விறைக்க வைத்துக்கொண்டும், அடிவைத்து... அடிவைத்து வந்து காலில் மெதுவாக உரசி, சிலவேளைகளில் மிகவும் மென்மையான ஒரு கடியையும் தந்து... என் கண்களையே ஒரு திருட்டுச்சிரிப்புடன் பார்த்து...
எவ்வளவு முறை அதன் அழகில் எதுவுமே பேசாமல் நின்றுபோயிருக்கிறேன்.
அப்போதெல்லாம் மனைவி கேட்பாளே! "என்ன இப்படி பார்க்குறீங்க?' என்று...
"அவளுடைய அழகைப் பார்த்துதான்' என்று கூறினால், மனைவி...
"இங்க பாருங்க... அவளுக்கு உங்க கண் பட்டுடக்கூடாதே!'
இப்படி என்னவெல்லாமோ...
மதியம் சாப்பிடுவதற்கு முன்பு மனைவி கூறினாள்:
""நாம கொஞ்சம் தண்ணி தொட்டியில பார்த்தா என்ன?''
நான் கேட்டேன்:
""எதுக்கு?''
மனைவி அதற்கு பதில் கூறவில்லை.
ஆனால், பிறகு... நான் கூறினேன்:
""ஒருவேளை... பார்ப்போம். இனி அங்க பார்க்கலைங்கற கவலை இருக்காதே!''
சட்டங்கள் போட்டு, இரண்டு பெரிய அலுமினியத் தகடுகளைக் கொண்டு நீர்த்தொட்டி மூடப் பட்டிருந்தது. நான் மிகவும் சிரமப்பட்டு ஒரு தகட்டினை ஒருபக்கமாக இழுத்துப்போட்டேன்.
எந்த வகையிலும் நீர்த்தொட்டிக்குள் நுழைந்து செல்வதற்கு மகளால் முடியாது என்ற விஷயத்தில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். எனினும், இல்லத்தரசியின் மன சமாதானத்திற்காக நான் அதைச் செய்தேன்.
உச்சி வெயிலில் நீர்த் தொட்டியில் நீரின் அடிப்பகுதிவரை பார்க்க முடிந்தது.
அங்கு எதுவுமே இல்லை.
பெயருக்கு சாப்பிட்டு முடித்தாகிவிட்டது என்ற நிலையை உண்டாக்கிவிட்டு, நான் அறையில் சென்று படுத்தேன். தூக்கம் வரவில்லை. இனி தூங்கலாமென்று நினைத்தால்கூட, அது நடக்காது. வெறுமனே கண்கள் மூடியவாறு, மல்லாந்து படுத்து ஒவ்வொன்றையும் நினைத்துக்கொண்டு...
எப்போதோ களைப்பின் காரணமாக சற்று கண்களை மூடியபோது, அந்த சத்தம் கேட்டது. படுக்கையில் ஏதோ வந்து விழுவதைப்போல இருந்தது. திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது...
மகள்!
மகள் மட்டுமல்ல; மகளின் வாயில் பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆகியிருக்கும் ஒரு குட்டியும் இருந்தது.
நான் ஆச்சரியத்துடனும் சந்தோஷத்துடனும் அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க, மகள் குட்டியை எனக்கு மிகவும் அருகில் போட்டுவிட்டு, வெளியே சென்றாள். போனதுபோலவே மிகவும் வேகமாக மீண்டும் ஒரு குட்டியுடன் திரும்பிவந்தாள். அந்த குட்டியையும் எனக்கு அருகில் போட்டுவிட்டு மீண்டும் வெளியே சென்று இன்னொரு குட்டியையும் கொண்டுவந்தாள்.
தொடர்ந்து சிறப்பாக எதுவும் நடக்கவில்லை என்பதுபோல பாதி கண்களை மூடியவாறு எனக்கு அருகில் மல்லாந்து படுத்தாள். குட்டிகள் ஆர்வத்துடன் அவளுடைய முலைக்கண்களைச் சப்பின.
நான் உரத்த குரலில் மனைவியை அழைத்தேன்.
""அடியே... இங்க வந்து இதைப் பாரு...''
அவள் வந்தபோது, மகள் கண்களைத் திறந்து சோர்வுடன் சிரித்தாள்.
மனைவி சந்தோஷமும் ஆச்சரியமும் பதை பதைப்பும் கலந்த குரலில் கூறினாள்:
""இருந்தாலும் என் மகளே... நீ... இந்த காரியத்தை...''
நான் கேட்டேன்.
""என்ன? அவ என்ன செய்துட்டாள்னு கேக்குறியா?''
மனைவி கூறினாள்:
""என்ன இருந்தாலும், நம்மகிட்ட எதையும் சொல்லாம...'' நான் கேட்டேன்:
""அதெல்லாம் அவளோட விருப்பமில்லியா?''
மனைவி இடையில் புகுந்து கூறினாள்:
""நீங்க அப்படியெல்லாம் சொல்லலாம். ஆனா...''
நான் கூறினேன்: ""ஒரு "ஆனாலும்' இல்லை. அவ தன்னோட விருப்பப்படி நடந்துகிட்டிருக்கிறா. அந்த விஷயத்தில் நாம எதுக்கு...''
மனைவி கூறினாள்:
""சரி... சரி... நான் எதுவுமே சொல்லல.''
தொடர்ந்து படுக்கையில் எனக்கருகில் அமர்ந்து அவள், மகளை ஒரு தாயின் பாசத்துடன் தடவிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் சென்றதும், மகள் தன் குட்டிகளை ஒவ்வொன்றாக ஸ்டோர் ரூமிற்கு அருகில் கொண்டு சென்றாள். அதற்கு முன்பு அவள் சிறிது பாலைப் பருகினாள்.
அப்போது மனைவி கூறிக்கொண்டேயிருந்தாள்:
"என்ன இருந்தாலும்... நாம ஊர்முழுக்க தேடிப் பார்த்துட்டும், இந்த பரண்ல ஏறிப் பார்க்கணும்னு தோணலையே. அவளோ ஒரு ஓசைகூட உண்டாக்கவும் இல்ல. திருடி!''
பொழுது அப்போது சாயங்காலம் ஆகிவிட்டி ருந்தது. நான் நிலத்தின் மேற்கு திசையிலிருந்த பாறைகளின் கூட்டத்தில் சென்று அமர்ந்தேன். மனைவி அப்போதும் மகளுக்கு என்னவோ அறிவுரைகளைக் கூறிக்கொண்டிருந்தாள். ஆனால், நான் அது எதையும் கவனிக்கவில்லை. மறையப் போகும் சூரியனின் களைத்துப்போன ஒளிக்கீற்றுகள் மரங்களின் கிளைகளுக்கு மத்தியில் தங்கி நிற்க முயற்சிப்பதைப் பார்த்தவாறு நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். இனிய ஒரு இசையின் அலைகள் என்னைச் சுற்றி அப்போது நடனமாடிக் கொண்டிருந்தன.