நமது அண்டை மாநிலமான மலையாளத் திரையுலகில், புதுமையான, புதிய கதை முயற்சிகள் அநேகம். அதேசமயம் மலையாளத் திரைப்படங்களில் எப்போதும் தமிழர் குறித்த எள்ளல் தொனியை பல படங்களில் காணமுடியும். (தமிழ்த் திரைப்படங்களிலும் இந்த அம்சம் ஓரளவுக்குண்டு) இது ஏன்? அத்தகைய மட்டம்தட்டும் போக்கின் பின்பு உறைந்திருக்கும் மனப்பாங்கு என்ன என விமர்சனப் போக்குடன் இந்தக் கட்டுரை அலசி ஆராய்கிறது ஓ.டி.டி. தளங்களின் வருகைக்குப் பிறகு மலையாள சினிமாவை ஆங்கில சப் டைட்டில் உதவியுடன் தமிழர்கள் அதிகளவில் பார்க்கிறார்கள். அதன் எளிமையின் வசீகரம் அவர்களைக் கவர்ந்திருக்கிறது. அரசியல், மத, சாதிய சித்தரிப்புகள் திகைப்பை ஏற்படுத்தியுள்ளன. மலையாள சினிமா தமிழர்களை சித்தரிக்கும் விதம் குறித்து பல ஆண்டுகளாக புகார்கள் இருந்துவரும் நிலையில், அது இப்போது இன்னும் அழுத்தமாக வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
மலையாள சினிமாவில் தமிழர்கள் குறித்த சித்திரம் பல வகைகளில் அமைகிறது. முதலாவது அவர்களின் பெருமிதங்களிலிருந்து எழுவது. மலையாளிகளுக்கு தாங்கள் உலகின் செழிப்பான நிலப்பரப்பைக் கொண்டவர்கள் என்ற எண்ணம் உண்டு. அவர்களின் நீர்வளத்தை தமிழகத்தின் நீர்ப்பற்றாக்குறையுடன் ஒப்பிட்டு கேலி செய்வது அவர்களுக்குப் பிடித்தமானது. ‘உடையோன்’ திரைப்படத்தில் தமிழரான சலீம் கௌஸ் மோகன்லாலிடம், 'தமிழ்நாட்ல மழை பெஞ்சா உங்க கிணத்துல தண்ணி' என்பார். ‘அதுக்கு உங்க ஊர்ல 'மழை பெஞ்சாதானே'என்று மோகன்லால் கிண்டலாக பதிலளிப்பார். அதே படத்தில் சலீம் கௌஸ், 'எங்க ஊரு கரும்பு தேன் மாதிரி இனிக்கும்"’ என்கையில், 'எங்க ஊரு தண்ணியே தேன் மாதிரிதான இருக்கும்'’ என்பார் மோகன்லால். கேரளாவின் நீர்வளத்தை முன்வைத்து தமிழர்களைச் சீண்டும் இதுபோன்ற காட்சிகளை மலையாள சினிமாவில் தாராளமாக பார்க்கலாம்.
தமிழர்களால் மலையாள மண்ணிற்கும், அவர்களின் மாணபிற்கும் கேடு விளைவதான மனப்பிராந்தியில வைக்கப்படும் காட்சிகள் இன்னொருவகை. ஷாஜி கைலாஷின் ‘தாண்டவம்’ திரைப்படத்தில் அந்நிய நாட்டு குளிர்பானங்களை தனது கிராமத்தில் நுழையவிடாமல் மண்ணின் பாரம்பரியத்தைக் காப்பவராக நெடுமுடி வேணு வருவார். அவருக்கு எதிராக கோக், பெப்சி போன்ற அயல்நாட்டு பானங்களை விற்கும் மனோஜ் கே.ஜெயன் தமிழராக சித்தரிக்கப்பட்டிருப்பார். நெடுமுடிவேணுவின் தம்பியான மோகன்லால் தமிழரான மனோஜ் கே.ஜெயனை அடித்துத் துரத்தி மலையாள மண்ணின் பாரம்பரியத்தை பாதுகாப்பார். நரன் திரைப்படத்தில், தமிழர்களால் மலையாளிகளுக்கு ஆபத்து என்று நேரடியாகப் பேசி நடித்திருப்பார் மோகன்லால். தமிழில் கடைப்பெயரை எழுதி வைத்தால் கடைக்கு தமிழர்கள் வருவார்கள், பிரச்சனை செய்வார்கள் என்று மோகன்லால் எச்சரிப்பார். அதை மீறி ஒரு டீக்கடைக்காரர் கடைப்பெயரை தமிழில் எழுதி வைக்க, அடுத்த காட்சியில் அந்தக் கடைக்கு டீ குடிக்க வரும் தமிழர்கள் பிரச்சனை செய்து, கடையை நாசமாக்குவார்கள். இந்த மனநிலையின் நீட்சியை இப்போதுள்ள திரைப்படங்கள் வேறுவகையில் முன்வைக்கின்றன. 36 வயதினிலே திரைப்படத்தின் ஒரிஜினலான ஹவ் ஓல்டு ஆர் யூ? திரைப்படத்தில், தமிழகத்திலிருந்து வரும் காய்கறிகள் பூச்சிக்கொல்லி மருந்தடித்து வருவதாக காட்சி வைக்கப்பட்டிருக்கும். அப்படத்தின் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூவின் இவிடம் சொர்க்கமாணு திரைப்படத்திலும் இதே கருத்து பேசப்பட்டிருக்கும்.
இவ்வகை சித்தரிப்புகளின் மையமாக இருப்பது, மலையாளிகள் தமிழர்களை குறிக்கும் பட்டப்பெயரான பாண்டி. இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. குளிக்காதவன், தூய்மை இல்லாதவன், யாசிப்பவன், அரசியல் புரிதல் இல்லாதவன், தனிமனித துதியை கொண்டவன்... இப்படி. 'பாண்டி லாரி அடிச்சு சாகப்போற' என்பது ஒருவகை வசை. தமிழர்கள் எவ்வித சிரத்தையும், கட்டுப்பாடும் இல்லாத தான்தோன்றிகள் என்பதிலிருந்து உருவானது,
தமிழர்களுக்கு மலையாளப் படங்களில் சூட்டப்படும் கதாபாத்திரப் பெயர்கள் பெரும்பாலும் பொன்னுசாமி, குப்புசாமி என்பதாக இருக்கும். ஒரு திரைப்படத்தில் தமிழர் ஒருவர் மணியம்பிள்ளை ராஜுவிடம், 'நீங்க பொன்னுசாமியா' என்று கேட்பார். ஏதோ சாணியை மிதித்தது போல் "என்ன பொன்னுசாமியா?' நான் நல்ல நாயர் தரவாட்டில் பிறந்தவனாக்கும்' என்பார்.
அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் எனப்படுவோர் பொன்னுசாமி, குப்புசாமி வகையறா வைச் சேர்ந்தவர்கள். அதாவது சமூக படிநிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள், மலையாளிகளின் பாரம்பரிய பெருமைக்கு ஒத்துவராதவர்கள். இதில் ஐயர்கள் மட்டும் விதிவிலக்கு. தமிழ் சினிமா வில் ஓர் அப்பாவியைக் காண்பிக்க, அவனது தோளில் பூணூலை மாட

அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் எனப்படுவோர் பொன்னுசாமி, குப்புசாமி வகையறா வைச் சேர்ந்தவர்கள். அதாவது சமூக படிநிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள், மலையாளிகளின் பாரம்பரிய பெருமைக்கு ஒத்துவராதவர்கள். இதில் ஐயர்கள் மட்டும் விதிவிலக்கு. தமிழ் சினிமா வில் ஓர் அப்பாவியைக் காண்பிக்க, அவனது தோளில் பூணூலை மாட்டி, நெற்றியில் விபூதி அடித்து விடுவதைப் போன்று, புத்திசாலியான நபர் என்றால் அவரை ஐயராக சித்தரிப்பது மலையாள சினிமா வின் வழக்கம். ஐயர் தி கிரேட், சி.பி.ஐ. டைரிக்குறிப்பு சீரிஸிஸ் வரும் சேதுராம ஐயர் என இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.
கேரளாவில் தமிழை எங்கு பார்க்க முடியுமோ இல்லையோ சுற்றுலாத் தலங்களில், கக்கூஸுக்கு செல்லும் வழி என்று தமிழில் எழுதிவைத்திருப்பார் கள். ஒப்பீட்டளவில் நம்மைவிட கேரளாவில் சுகாதாரம் மேம்பட்டது. அங்கு நினைத்த இடத்தில் ஜிப்பைத் திறந்து இயற்கை உபாதையை தணித்துவிட முடியாது. கால்வைக்க முடியாத அளவுக்கு ஆற்றங்கரைகளில் அவர்கள் கழித்து வைப்பதில்லை. ஐயப்ப சீசனில் தங்கள் இடத்தை அசிங்கப்படுத்தி விடுவார்கள் என முறைவைத்து மலையாளிகள் காவல் இருப்பதுண்டு. மேலும், கேரளாவில் பிச்சை எடுப்பவர்களில் கணிசமானவர் கள் தமிழர்கள். குறி சொல்பவர்கள், மேஜை துடைப்பவர்கள், இஸ்திரி கடை வைத்திருப்பவர்கள் என விளிம்புநிலை வேலைகளைச் செய்கிறவர் களாக தமிழர்கள் இருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே பனையேறவும், கட்டுமானப் பணிகளுக்காகவும் தமிழர்கள் கேரளா சென்றுகொண்டிருக்கிறார்கள். மலையாளிகள் பார்த்த, பழகிய அனேக தமிழர்கள் கடைநிலையில் இருப்பவர்கள். இதிலிருந்து அவர்கள் தமிழர்கள் குறித்த சித்திரத்தை உருவாக்கிக் கொண்டார்களா என்றால் ஆம் என்று சொல்லலாம். அதே வேளை யில் இதற்கெல்லாம் அடியாழத்தில் மலையாளி களின் கழிவிரக்கமும், பொறாமையும் அலையடித்துக் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
பிழைப்புக்காக கேரளா செல்லும் உதிரித் தமிழர்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழகம் மலையாளிகளின் உதவி இல்லாமல் தனித்தியங்கும் சுயசார்பைக் கொண்டது. கேரளம் அப்படியல்ல. காய்கறிகள், தானியங்கள், இறைச்சி வகைகள் முதற்கொண்டு அனைத்தும் தமிழகத்திலிருந்துதான் கேரளா செல்கிறது. இங்கே மூன்றுநாள் பந்த் நடத்தினால் அங்கே மலையாளிகள் பட்டினி கிடக்க நேரிடும். கேரளாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு தமிழ்த் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும். தமிழ்த் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். மலையாள சேனல் களில் தமிழ் சினிமாக்கள் தவிர்க்க முடியாதவை. வெள்ளிக்கிழமை எந்தச் சேனலை திருப்பினாலும் தமிழ்ப்படமே ஓடிக்கொண்டிருக்கும். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பத்து பாடல்கள் பாடப் பட்டால் அதில் நான்கு தமிழ்ப் பாடல்களாக இருக் கும். விஜய் படம் வெளியாகிறது என்றால் மலை யாளத்தின் முன்னணி நடிகர்களின் படங்கள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்படுவது பல ஆண்டு களாக நடந்துவரும் வழக்கம். கேரளாவில் அதிக ஓபனிங்கை பெற்ற ஐந்து திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அதில் இரண்டு விஜய் படங்களாக இருக்கும். இப்போது சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என பலரும் மலையாள நடிகர்களை வசூலில் பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தி ருக்கிறார்கள். மலையாளத்தின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுக்கு சென்னையில் வீடுகள் உள்ளன, அவர்களின் பிள்ளைகள் இங்குதான் படிக்கிறார்கள், வளர்கிறார்கள்.
இந்த சார்புநிலை மலையாளிகளின் ஈகோவை தொடர்ந்து காயப்படுத்தி வந்திருக்கிறது. கிடைக்கிற சந்தர்ப்பங்களில் தமிழர்களை மட்டம்தட்டி காயத்திற்கு மருந்திட்டுக் கொள்வார்கள். அக்கரே அக்கரே அக்கரே திரைப்படத்தில் அமெரிக்காவின் உயர்ந்த கட்டடங்களை வியந்து பார்க்கும் மோகன்லால் அருகில் நிற்கும் சீனிவாசனிடம், 'எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய்பிளக்கும் தமிழர்கள் இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவாங்களே' என்பார். 32 வருடங்களுக்கு முன் எல்.ஐ.சி. போலொரு உயர்ந்த கட்டடம் கேரளாவில் இல்லாததன் வெளிப்பாடே இந்த ஆற்றாமை. இதனைப் புரிந்துகொண்டால் ஒரு புன்னகையுடன் இந்த விமர்சனங்களை கடந்து சென்றுவிடமுடியும். மேலும், மலையாளிகளை நமது திரைப்படங்களில் எப்படி சித்தரித்து வந்திருக்கிறோம்? ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், ஷகிலா சைஸில் முண்டும் ஜாக்கெட்டும் அணிந்த நாயரின் மனைவி உதட்டைச்சுழித்து புட்டு வேணுமா என்று கேட்பார். இதைத்தாண்டி மலையாளிகளின் தனித்துவத்தை காட்சிப்படுத்திய தமிழ் சினிமா எத்தனை இருக்கிறது? விதிவிலக்காக மலையாளிகள் அதனைச் செய்திருக்கிறார்கள்.
பிளெஸ்ஸியின் தன்மாத்ரா திரைப்படத்தில், தனது பத்து வயதில் முதல்முறையாகப் பாடிய, காற்று வெளியிடை கண்ணம்மா பாரதியார் பாடலை மோகன்லால் நினைவுகூரும் தருணமும், அன்வர் ரஷீத்தின் உஸ்தாத் ஹோட்டலில் பேரன் துல்கர் சல்மானுக்கு நளபாக வித்தைகளை கற்றுத் தரும் பாட்டனார் திலகன் கடைசியாக மதுரையில் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் தமிழரிடம் அனுப்பி வைத்து உணவின் மகத்துவத்தையும், அதன் நோக்கத்தையும் அறிந்து கொள்ள வைக்கும் காட்சியும், தமிழர்களை பல திரைப்படங்களில் மட்டம் தட்டி வசனம், காட்சிகள் வைத்த சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் தனது ஹிருதயம் திரைப்படத்தில் சென்னையின் கடைக்கோடி மாணவர்கள் படிப்பிலும், குணத்திலும் உதாரண புருஷர்களாக இருப்பதை சொன்ன நேர்த்தியும் உணர்ச்சிகரமானவை.
ஆனால், இவையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான கூறுகள் மட்டுமே. இறுக்கமான விமர்சனச் சூழலை கொண்டிருக்கும் நாம் மலையாள சினிமாவை அணுக வேண்டிய கோணம் வேறு. சத்தியன் அந்திக் காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா திரைப்படத்தில் பஞ்சாயத்து அளவிலேயே வெடிகுண்டு வீசும் அரசியல்வாதியாக வரும் இன்னசென்ட், தமிழ்நாட்டிலிருந்து வரும் பார்த்திபனை விரட்ட தனது கட்சி ஆள்களுடன் சென்று வெடிகுண்டு வீசுவார். 'நான் கேரளா சிங்கம், நீ பரட்டைத் தமிழன், மலையாளியும், பெங்காலியும் புத்திஜீவிகள், தமிழன் கழுதைப் பால் குடிக்கிறவன், முல்லைப் பெரியாறில் இருந்து நீ தண்ணி திருடுவியா' என்று இன்னொரு வெடிகுண்டை வீசுவார். 'எதுக்கு இப்போ பட்டாசு வெடிக்கிற? இதே மாதிரி வெடி ரூபாய்க்கு மூணு சிவகாசியில் கிடைக்கும்' என்று சொல்லி இன்னசென்டையும், அவரது ஆள்களையும் பார்த்திபன் புரட்டி எடுப்பார். 'இங்க தமிழன் இல்லை மலையாளி இல்லை எல்லோரும் இந்தியர் கள்' என்று இன்னசென்டை தோப்புக்கரணம் போட வைப்பார். இன்னசென்ட் அழுது கொண்டே, 'முல்லைப் பெரியாறிலிருந்து எவ்வளவு தண்ணி வேணும்னாலும் எடுத்துக் குடிக்கவோ, குளிக்கவோ செய்' என்பார். ஒரு தமிழன் இத்தனை பேரை அடித்தால், பத்து தமிழர்கள் மொத்த மலையாளி களையும் அடித்து விரட்டிவிடுவார்களே என்ற வசனமும் அப்படத்தில் வரும்.
இந்தப் படங்களையெல்லாம் படமாக கடந்து சென்ற அதே கேரளாவில் விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
கேரளா முஸ்லீம்களை குண்டு வைப்பவர் களாக சித்தரித்ததை எதிர்க்காதவர்கள், ஆப்கான் தீவிரவாதத்தைக் காட்டிய விஸ்வரூபத்தை எதிர்த் தார்கள். காரணம் வேறொன்றுமில்லை. விஸ்வ ரூபத்துக்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் ஜுவாலை கேரளாவிலும் பதட்டத்தை உருவாக்கியது. எதிர்ப்புகள் எழுந்தன. நல்லவேளை யாக ஆரம்பத்திலேயே இந்தப் போராட்டங்கள் பிசுபிசுத்தன. இல்லையெனில் ஒவ்வொரு திரைப் படம் வெளியாகும்போதும் ஏதாவது ஒரு மதக் குழுவின் சம்மதத்திற்கு தயாரிப்பாளரும், இயக்குந ரும் கையேந்தி நிற்கும் அவலம் மலையாளத் திரையுலகுக்கும் ஏற்பட்டிருக்கும்.
கிறிஸ்தவ, முஸ்லீம்களைப் போலவே இந்துக்களின் குறிப்பாக நாயர், நம்பூதிரிகளின் மத, சாதிய செருக்கையும். அடாவடியையும் செலுலாயிட் போன்ற பல திரைப்படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. இந்தப் படங்கள் வெளிவந்த அதே காலகட்டத்தில்தான், நம்பூதிரிகளால் தலித்துகள் எங்ஙனம் ஒடுக்கப்பட்டார்கள் என்ற நாடகத்தின் ஒத்திகையை சீனிவாசன் நடத்திக் கொண்டிருக்கையில், நம்பூதிரியான மோகன்லால் பல நாள் பட்டினியில் கிடக்கும் தனது குடும்பம் வேகவைத்துத் தின்பதற்காக பச்சை வாழைக்குலையை இருட்டில் திருடி எடுத்துச்செல்லும் காட்சியை கொண்ட படமும் வெளியானது. அப்படி முப்பது வருடங்களுக்கு முன்பே சாதியை இரு திசைகளிலும் இயல்பாக அணுகி விமர்சித்திருக்கிறார்கள். இந்நிலையில், 2021 இல் மார்டின் ப்ரக்கட்டின் நாயாட்டு திரைப் படம் வெளியானபோது, தலித்துகளை கொச்சைப் படுத்திவிட்டார்கள், தலித்துகள் காவல்நிலையத்தில் அடாவடி செய்வதாக காட்டுகிறார்கள், அதிகார மையம் அவர்களுக்கு செவிசாய்ப்பதாக பொய்யாக காட்சி வைத்திருக்கிறார்கள் என தமிழகத்திலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. தலித்துகள் என்றால் எப்போதும் உயர்சாதிக்காரனுக்கு குனிந்து கொடுத்து அடிவாங்குகிறவனாக இருக்க வேண்டும் என்ற மனப் பதிவின் வெளிப்பாடு இது. எல்லா மனிதனுக்கும் இருக்கும் திமிரும், அகங்காரமும் தலித்துகளுக்கு மட்டும் இருக்காதா என்ன?
இன்றைய சூழலில், திரைப்படங்களின் சாதி அரசியலை இன்னும் நுட்பமாக அணுகவேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதியை போட்டுக்கொள்வதில்லை. திரைப் படங்களில் சாதி, மத அடையாளத்தை வெளிப்படை யாகப் பேசி காட்சிகளும் நம்மால் வைக்க முடிவதில்லை. கேரளாவில் மேனன், நாயர், குறுப்பு என பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்கிறார்கள். திரைப்படங்களில் சாதிப் பெயர் களை வைத்து கதாபாத்திரங்களை குறிப்பிடுகிறார் கள். இதில் கவனிக்க வேண்டியது. மேனன், நாயர் போன்று ஈழவ சமுதாய மக்கள் தங்கள் சாதியை பெயருக்குப் பின்னால் பெரும்பாலும் போட்டுக் கொள்வதில்லை. அதனால் திரைப்படங்களில் ஈழவ சாதிப்பெயரை வைத்து யாரையும் குறிப்பிடுவதுமில்லை. ஈழவர்கள் சாதியப் படிநிலையில் கீழ்மட்டத்தில் வைக்கப் பட்டவர்கள். சாதி அவர்களுக்கு அவமானம்.
மேனன், நாயர்களுக்கு சாதிப் பெருமி தம். இதுவே இந்த வேறுபாட்டிற்கான காரணம். எனினும், படத்தில் வரும் கொடூர வில்லனை எடோ நாயரே, எடோ மேனனே என்று சாதிப் பெயரை மட்டும் குறிப்பிட்டு அழைக்கிற சுதந்திரம் மலையாளத்தில் உள்ளது. அந்த சுதந்தி ரத்தை நம்மால் இப்போதைக்கு கனவிலும் நினைக்க முடியாது.
சாதி, மத, அரசியல் அடையாளங்களை திரைப் படங்களில் வெளிப்படையாக பேசி, விமர்சிக்கிற சுதந்திரத்தை மலையாளிகள் பொதுவெளியில் இருந்தே பெற்றுக்கொண்டார்கள். அங்கு ஒருவரை பகடி செய்யும் மிமிக்ரி முக்கியமான கலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜெயராம், கலாபவன் மணி, கலாபவன் ஷாஜன், திலீப் என ஏராளமான நடிகர்கள் மிமிக்ரி வழியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர்கள். அங்குள்ள அரசியல் தலைவர்களை நகல் செய்து, அவர்களைப் போலவே மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள்.
அச்சுதானந்தன், பினராயி விஜயன் போன்றவர்களை தோற்றத்திலும், குரலிலும் மிமிக்ரி செய்ய கேரளாவில் குறைந்தது நூறு பேர் இருப்பார்கள். அரசியல் தலைவர்களை, நடிகர்களை வைத்துக்கொண்டே மேடையில் அவர்களை பகடிசெய்வது கேரளாவில் சாதாரணம். படப்பிடிப்புத்தளத்தில் மம்முட்டி, மோகன்லால், திலீப், சுரேஷ்கோபி ஆகியோர் எப்படி நடந்துகொள்வார்கள் என நடிகர் ஜெய்சூர்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துக்காட்டினார்.
அத்தனை துல்லியமான நடிப்பு. மம்முட்டி எப்போதும் பொருளாதார சிந்தனையில் இருப்பவர். மோகன்லால் பெண்களிடம் அசடு வழிபவர். திலீப் எதனையும் விளையாட்டாக எடுத்துக்கொள்கிறவர், சுரேஷ் கோபி எதுவும் தெரியாத மண்டன் என அந்தந்த நடிகர் களைப் பற்றிய ஒருவரி விமர்சனத்தை ஜெய்சூர்யா வின் சில நிமிட நடிப்பிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள முடியும். இப்படி வேறு எந்த மொழி நடிகர்களையும் இன்னொரு நடிகரால் பகடி செய்ய இயலாது. .
கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 50 வருடங் கள் நிறைவடைந்ததை, அச்சுதானந்தன் தலைமை யிலான இடதுசாரி அரசு விழா எடுத்து கொண்டாடிய போது, மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அதனை எதிர்த்தது. மலையாளத்திலேயே 50 வருடங் களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கையில் கமலுக்கு விழா எடுப்பது சரியல்ல, இந்த விழாவை அம்மா புறக்கணிக்கிறது, தனிப்பட்ட விருப்பத்தில் நடிகர்கள் விழாவில் கலந்துகொள்ள தடை யில்லை என அம்மாவின் பிரசிடென்டான இன்னசென்ட் அறிவித்தார். அந்த விழாவில் நடத்தப்பட்ட காமெடி ஸ்கிரிப்ட் ஒன்றில் இன்னசென்ட் போன்று ஒப்பனை செய்த நடிகரிடம், நீ யார் என்று கேட்க, அம்மை யுடெ பிரசிடென்ட் என்பார். அம்மயுடெ நாயர்னு கேட்டுண்டு, அது எந்தாடா அம்மை யுடெ பிரசிடென்ட் என சக நடிகர் கிண்டல் செய்வார். அம்மயுடெ நாயர் என்பது ஒரு வகை மென் வசை. இது நடந்த பத்து தினங் களுக்குள் வேறொரு நிகழ்வில் அச்சுதானந்தனும், இன்னசென்டும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்தி ருந்தார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களிடம் திரைத்துறை எப்படி பவ்யமாக நடந்துகொண்டது என்பதை நினைவூட்டிக் கொண்டால் மலையாள திரைத்துறை எத்தகைய சுதந்திரத்துடன் செயல் படுகிறது என்பது ஆச்சரியமளிக்கும்.
அரசியலிலும், சினிமாவிலும் மலையாளிகள் முன்வைக்கும் விமர்சனமும், வெளிப்படைத்தன்மை யும் நம்மைவிட மேம்பட்டதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, நிச்சயம் நம்மிலிருந்து மாறுபட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த வேறு பாட்டை புரிந்துகொள்ளாமல் அல்லது கணக்கில் எடுக்காமல், நமது சூழலின் புரிதலில் இருந்தே மலையாளப் படங்கள் மீதான விமர்சனங்களும், புகார்களும் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இவை எவ்வகையிலும், நன்மை பயக்கப்போவதில்லை. சமீபத்தில் வெளியான புழு, மலையன்குஞ்ஞு திரைப் படங்கள் வழமையான மலையாளப் படங்களிலிருந்து மாறுபட்டிருந்தன. ஒருவகை ஹாலிவுட் தன்மையை அவை கொண்டிருந்தன. நாயகன் செய்யும் தவறை நியாயப்படுத்த, அவனுக்கொரு நெருக்கடியான பின்புலத்தை வைத்து சமன் செய்வார்கள். அமெரிக்கா வின் ஆக்கிரமிப்புப் போரை காட்சியப்படுத்திய அனைத்துத் திரைப்படங்களிலும் இதனைப் பார்க்க லாம். 2004-ல் ஆஸ்கர் வென்ற க்ராஷ் திரைப்படத்தில் நிறவெறியுடன் செயல்படும் போலீஸ்காரரின் தந்தை அதீத மூலநோயால் அவதிப்படுவதையும், அது போலீஸ்காரரின் வாழ்வை நெருக்கடியான ஒன்றாக மாற்றியிருப்பதையும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதன்வழியாக, வீட்டில் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியே போலீஸ்காரர் வெளியே வன்முறையுடன் செயல்பட காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருப்பார்கள். புழுவின் நாயகன் தங்கை மீது கொள்ளும் வெறுப்புக்கு, அவளது கலப்புத் திருமணத்தால் தாய் முடங்கிப்போகும் சம்பவம் ஒரு காரணமாக வைக்கப்பட்டிருக்கும். நல்லவேளையாக தனது தொழிலிலும் நாயகன் வன்மத்துடன் நடந்து கொள்கிறவன் என்பதை இயக்குநர் காட்டியிருப்பார். மலையன்குஞ்ஞுவிலும் இதேதான் களம். அங்கே மகள் கீழ்சாதிக்காரனை திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டிருப்பார்.
பொதுவாக மலையாளப் படங்களில் கதாபாத்திர சித்தரிப்புக்கு இப்படியொரு பின்புலம் பெரும்பாலும் இருப்பதில்லை. உதாரணமாக, தொண்டி, முதலும் தரிக்ஷ்க்சியும் படத்திலும் இதுதான் களம். கலப்புத் திருமணம் செய்த தம்பதியுடன் யாரும் தொடர்பில் இருக்கமாட்டார்கள். ஆச்சரியமாக ஒருநாள் பெண் ணின் தந்தையிடமிருந்து போன் வரும். இப்போதைக்கு ஊருக்கு வர வேண்டாம், பணத்தேவை இருந்தால் சொல், இரண்டு, மூன்று வருடங்கள் போனபிறகு அழைக்கிறேன் என மகளிடம் சொல்வார். அதற்கு அவள், எத்தனை வருடமானாலும் நீங்க என்னை கூப்பிடமாட்டீங்கன்னு தெரியும், உங்க திருவிழா கமிட்டி மெம்பர்கள் சுகம்தானே என்று கேட்பாள். இங்கே போன் பேசும் தந்தையுடன் இன்னொருவரும் உடனிருப்பார். மகளின் பதிலைக் கேட்டு திடுக்கிடும் தந்தை, கழுவேறிட மோள் என்று கெட்டவார்த்தையில் திட்டுவார்.
புழு, மலையன்குஞ்ஞு படங்களில் வரும் கலப்புத் திருமணங்களைப் போலவே இதிலும் கலப்புத்திருமண தம்பதியில் பெண் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவள். அவளது ஊரில் கோவில் திருவிழா நடக்கவிருக்கிறது. பலரும் வருவார்கள். கீழ்சாதிக்காரனை திருமணம் செய்த மகள் திருவிழாவுக்கு வந்தால் தந்தையின் அபிமானம் மற்றவர்கள் முன் சிறுமைப்படும். இது அவருடைய பிரச்சனை மட்டுமில்லை. அவர் சார்ந்த சாதிக்காரர்களின், அந்த சாதிக்காரர்கள் நடத்தும் கோவில் திருவிழா கமிட்டிக்காரர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனை. அதனால்தான் அவள், உங்க திருவிழா கமிட்டி மெம்பர்கள் சுகம்தானே என்று கேட்டதும் தந்தைக்கு அம்பலப்பட்டுவிட்டதன் கோபம் கெட்டவார்த்தையாக வெளிப்படுகிறது. இந்தக் காட்சிக்கு முன்புவரை அந்த தந்தைக் கதா பாத்திரம் சாதாரண ஷேர் ஆட்டோ ஒட்டும் எளிய மனிதராகவே வருவார். எவ்வித கூடுதல் பூச்சும் அவருக் குத் தரப்படுவதில்லை. மகள் ஓடிப்போனதை அறிந்து குமுறும்போதும் ஒரு சராசரி தந்தையாகவே தெரிவார்.
அப்படிப்பட்டவர் ஒரு சாதிவெறியர் என்பதை நாம் அறிகையில் துணுக்குற்றுப் போகிறோம். அது அந்த நபர் சாதி வெறியராக இருப்பதால் வந்த அதிர்ச்சி அல்ல. எத்தனை சாதாரண ஜனங்களுக்குள்ளும் சாதிவெறி இருக்கிறது, தேவைப்படும் இடங்களில் அது வன்மத்துடன் வெளிப்படுகிறது என்பதை அறிகையில் வரும் அதிர்ச்சி.
கராஷ், புழு, மலையன்குஞ்ஞு படங்களில் வரும் கதாபாத்திரங்களின் காரண காரியங்களுக்கு ஒரு பின்புலம் வைக்கையில் அந்த கதாபாத்திரம் சராசரித் தன்மையை இழந்து ஒரு தனித்துவமான, அரிதாக நாம் சந்திக்கும் சுதாபாத்திரமாகிவிடுகிறது. இவன் மட்டும்தான் இப்படி, மற்றபடி சமூகம் நார்மலாகத்தான் இருக்கிறது என மனம் சமாதானம் அடையும். மலையன்குஞ்ஞுவின் நாயகன் அனில்குட்டன், பிற சாதிக்காரன் தொட்ட குழம்புப் பாத்திரத்தை தட்டிவிடுவதன் மூலம் அவனது சாதி வெறியை இயக்குநர் தெரியப்படுத்துவார். நடைமுறை வாழ்க்கையில் அனில்குட்டன் பிற சாதிக்காரன் தொட்டவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் தினசரி பத்துப் பதினைந்து பாத்திரங்களையாவது தட்டிவிட வேண்டியிருக்கும். இந்தக் காட்சி சமூகத்தை பிரதிபலிக் காத ஒரு தனித்த கதாபாத்திரமாக அவனை ஆக்குகிறது.
இதனால்தான், அனில்குட்டன் பொன்னியின் மீது அன்பு கொள்வதாக படம் முடிகையில், அனில் குட்டனுக்கு பொன்னி மேல அன்பு வர்றதுக்காக, பொன்னியோட பெற்றோரை அநியாயமா இயக்குநர் கொன்னுட்டாரே என்ற நினைப்பே மேலோங்குகிறது.
இதுபோன்ற காரணங்களால் புழு, மலையன் குஞ்சு திரைப்படங்களை சற்று எட்ட நின்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது. பரியேறும்பெருமாள், அசுரன், கர்ணன், ஜெய்பீம் போன்ற தீவிர சாதிய விழிப்பு நிலையில் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் தாக்கம் இவ்விரு படங்களில் இருப்பதாக, ஒருவர் கருத வாய்ப்புள்ளது. தமிழ்ச் சூழலுக்கு அந்தத் தீவிர விழிப்புநிலை தேவையான ஒன்று. மலையாளத்துக்கு இதுவரை தேவைப்பட்டதில்லை. பிறகு ஏன் முன்னேறி வந்த பாதையில் திரும்பி நடக்கிறார்கள்? வரப்போகும் திரைப்படங்கள் இந்த எண்ணங்களை உறுதிசெய்ய லாம். இல்லை தவறென்று புரியவைக்கலாம்.