இருட்டில்.. எஸ்.கெ. பொற்றெக்காட் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/dark-sk-paoraraekakaata-tamil-cauraa

ன்பது வருடங்களுக்குமுன்பு நடைபெற்ற ஒரு சம்பவம்... காங்கிரஸ், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டத்தை அறிவித்து, ஏகாதிபத்திய ஆயுத பலத்தின் அனைத்து வகையான கொடுமைகளையும் தாங்கிக்கொள் வதற்குத் தயாராகி, ரகசிய செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம்...

காங்கிரஸில் ஒரு மறைந்து வாழும் போராளியாக கிராமப் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருந்த என்னுடைய ஒரு நண்பரைப் பார்த்து ஒரு அவசரத் தகவலைக் கூறவேண்டியதிருந்தது.

அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராளியாக நான் இல்லையென்றாலும், சில சந்தேகங்களுடன் காவல்துறை என்னைப் பின்தொடர்கிறது என்னும் விஷயத்தை நான் புரிந்துகொண்டிருந்தேன்.

சாயங்கால வேளையில் நான் "கு' கிராமத்தை அடைந்தேன்.

என் நண்பர் இருக்கும் இடத்திற்கு அங்கிருந்து பிறகும் நான்கு மைல் தூரம் நடக்கவேண்டும் என்பது மட்டுமே எனக் குத் தெரியும். எந்த வழியில் செல்லவேண்டும் என்பதைப் பற்றியோ, எங்கு விசாரிக்கவேண்டும் என்பதைப் பற்றியோ உறுதியாகத் தெரியாமலிருந்தது.

அந்தவழியே ஒரு பேருந்து செல்கிறதென்றும், பேருந்தில் ஏறி அங்கிருந்து ஏழாவது மைலில் இறங்கினால் நண்பரின் இடத்தை அரைமணி நேரத்திற்குள் அடைந்துவிடலாமென்றும் என் நண்பர்கள் கூறியிருந்ததை நினைத்துப் பார்த்தேன். பேருந்து வருவதை எதிர்பார்த்துக்கொண்டே சாலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.

மழைக்காலமாக இருந்தது. மாலை வேளையில் பொதுவாக பெய்யக்கூடிய கனமான மழை அன்றும் இருந்தது. ஆனால் நீண்ட நேரம் பெய்யவில்லை.

மரங்களின் உச்சியில் தங்கி நின்றிருந்த மழைத் துளிகள் அவ்வப்போது வீசிக்கொண்டிருந்த காற்றில் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய மரங்களும் புதர்களும் நிறைய வளர்ந்து காட்சியளிக்கும் நிலப் பகுதிகள்... அவற்றுக்கு மத்தியில் எதிர்பக்கத்தில் குன்றுகள் செயலற்று நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கலாம். இடையே ஆங்காங்கே நெல் வயல்களும் தோன்றிக்கொண்டிருந்தன.

வயலின் சேற்று நீருக்குள்ளிருந்து பெரிய தவளைகளும் குட்டித் தவளைகளும் பல வகையான ஓசைகளை எழுப்பிக் கொண்டிருந்தன. ஆழமான கிணற்றிலிருந்து மரத்தாலான உருளையில் கயிறைச் சுற்றி தொட்டிக்கு நீரைக் கொண்டுவரும் போது உண்டாகக்கூடிய ஓசை... பெரிய தந்தி அலுவலகத்திற்குள் நுழைந்தால் கேட்கக்கூடிய அந்த "கட்...கட...கட' சத்தத்தில் குட்டித் தவளைகளின் குரல்... கரையிலிருந்து பட்டுப்பூச்சிகளும் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன. அந்த குளிர்ந்த தனிமைச் சூழலில் நெருப்புப் பொறியைப் பறக்கவிட்டவாறு மின்மினிப் பூச்சிகள் பறந்து விளையாடிக்கொண்டிருந்தன.

ஒரு மணிநேரம் நான் நடந்தபிறகும், பேருந்து வருவதற் கான எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை. என் பதைபதைப்பு அதிகமானது. சிறிதும் பழக்கமே இல்லாத ஒரு கிராமத்தில் இரவுப் பொழுதை எப்படிக் கழிப்பது என்பதைப் பற்றி சிந்தித்தவாறு நான் அமைதியாக மேலும் முன்னோக்கி நடந்தேன். ஆகாயம் மீண்டுமொரு பேய் மழைக்குத் தயாரெடுப்பு கள் நடத்திக்கொண்டிருந்தது. மேகங்களின் முணுமுணுப்பு களும் மின்னல்களும்... சூழல் கருத்த திரையை அணிந்து கொண்டிருந்தது. தவளைகள் மேளச் சத்தத்தை ஓங்கி எழுப்பிக் கொண்டிருந்தன. ஒரு குளிர்ந்த தெற்குதிசைக் காற்று என்னை உரசிக்கொண்டே கடந்து சென்றது.

பின்னாலிருந்து ஒரு காலடிச் சத்தத்தைக் கேட

பின்னாலிருந்து ஒரு காலடிச் சத்தத்தைக் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். இருட்டில் ஒரு மனித உருவம் நகர்ந்து வந்துகொண்டிருந்தது.

பயப்படுவதா... நிம்மதிப் பெருமூச்சு விடுவதா... என்ன செய்வதென்பதைத் தீர்மானிக்கமுடியாமல் நான் தயங்கி நின்றேன்.

"யாரது?'' மங்கலான இருட்டில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் என் முகத்திற்கருகில் கழுத்தை நீட்டியவாறு, சிறிய ஒரு அதிகாரத் தொனியில் கேட்டார்.

"நான்தான்... ஒரு வழிப்போக்கன்.'' நான் பதில் கூறினேன்.

"இங்க... இதுக்கு முன்ன பார்த்த ஆளில்லன்னு தோணுது.''

"சரிதான்... இதுக்கு முன்ன வந்ததில்ல.''

"எங்கேயிருந்து வர்றீங்க?''

"மேற்குல இருக்குற நகரத்திலிருந்து...''

"எங்க போகணும்?''

"கிழக்கு திசையில அஞ்சாறு மைல்... நான் பேருந்தை எதிர்பார்த்து நடந்து போய்க்கிட்டிருக்கேன்.''

"இனிமேல் பேருந்து விஷயம் சந்தேகம்தான். நடந்துதான் ஆகணும்.''

என் மனம் நொறுங்கியது. ஆறு மைல் தூரம் நடந்து நள்ளிரவு வேளையில் சேர வேண்டிய இடத்தை அடைந்த பிறகும், ஆளைத் தேடிக் கண்டு பிடிப்பது சிரமமான விஷயமே... என்ன செய்வது?

"கையில பீடி இருக்குதா... ஒண்ணு தர்றதுக்கு?'' அவருடைய கேள்வி என்னைத் தட்டி எழுப்பியது.

"இல்லையே! ஒரு சிகரெட் தர்றேன். தீப்பெட்டி இல்ல...''

பேரமைதி...

"நீங்க நடக்கறதுன்னு தீர்மானிச் சிட்டீங்களா? பக்கத்தில தெரிஞ்ச வங்க வீடு எதுவுமில்லையா?''

அவர் கரகரத்த குரலில் கேட்டார்.

"இல்ல... எனக்கு இங்க யாரையும் தெரியாது.''

முன்னால் மங்கலான வெளிச்சத்தை வீசியவாறு ஒரு மோட்டார் லாரி இரைந்து கொண்டு வந்தது. அந்த பரவிய வெளிச்சத்தில் என் புதிய நண்பரின் முகத்தையும் சரீரத்தை யும் நன்றாகப் பார்க்க முடிந்தது.

மெலிந்து, உயரமான, சுமாரான முகத் தோற்றத்தைக்கொண்டி ருந்த ஒரு நடுத்தர வயது மனிதர்... வலை பின்னப்பட்ட பனியனை அணிந்திருந்தார். இடப்பக்கத் தோளில் ஒரு மேற்துண்டை மடித்து அணிந்திருந்தார். தலைமுடி ஒட்ட நறுக்கப்பட்டுக் காணப்பட்டது. நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டும் இருந்தது. லாரி விளக்கின் வெளிச்சத்தில் அவர் என்னையும் சற்று கூர்ந்து பார்த்தார்.

லாரி கடந்துசென்றது. மீண்டும் இருட்டு... எந்த நிமிடத் திலும் மழை பெய்யக்கூடிய அறிகுறியுடன் வானம் இருந்தது.

"இங்க... பக்கத்துல... ஏதாவ தொரு வீட்ல இரவைக் கழிக்கறதுக்கு ஒரு இடம் கிடைக்குமா?'' நான் அந்த கிராமத்து மனிதரிடம் கேட்டேன்.

"சிரமம்தான்...'' அவர் உடனடியாக பதில் கூறினார்.

"ரெண்டு நாழிகை தூரம் நடந்தா, ஒரு தண்ணீர் பந்தலைப் பார்க்கலாம்னாலும், சாப்புநாயர் உண்டாக்கிய அந்த தண்ணீர்ப் பந்தல் இடிஞ்சுவிழுந்து தரைமட்டுமே எஞ்சியிருக்கு...''

சிறிது நேரத்திற்கு அமைதி...

"உங்களோட பேர் என்ன?'' அவருடைய கேள்வி.

நான் பெயரை மாற்றிக் கூறினேன்.

"நானும் நாயர்தான். இங்க நாயர்களோட வீடுங்க ரொம்ப குறைவு... சரியா சொல்றதா இருந்தா... எங்களோட பழைய வீடு மட்டுமே இருக்கு. நீங்க என்கூட வர்றீங்களா?''

அந்த அழைப்பு ஒரு மின்னலைப்போல என் மனதைப் பிரகாசிக்கச் செய்தது.

"உங்களுக்கு இப்படி தோணுனதுக்கு ரொம்ப நன்றி. மழையிலயும் இருட்டுலயும் சிக்கி நான் படாதபாடு படவேண்டிய திருக்கும்.''

"அப்படின்னா வாங்க.'' அவர் முன்னால் நடந்தார்.

அப்போதுதான் எனக்குத் தெரிந்தது- என் நண்பரின் ஒரு கால் ஊனமடைந்திருந்தது.

"இதோ... இந்த ஒத்தையடிப் பாதையில திரும்பணும். பத்திரமா இறங்கணும்...'' இருட்டில் அவர் எனக்கு பாதையைக் காட்டினார்.

அடர்த்தியான இருட்டு. பாதை தெரியவில்லை.

ஆனால் அவருக்கு பாதை பற்றிய எந்தக் குழப்பமும் இல்லை. மண்சுவற்றில் கையை வைத்துக்கொண்டு காலால் பாதையைத் தேடிக் கண்டுபிடித்து நகர்ந்துகொண்டிருந்த எனக்கு உதவுவதற்காக அவர் தன் கையை நீட்டினார். அவருடைய முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் நான் கவனமாகக் கேட்டேன். "இதோ... இங்க ஒரு குழி இருக்கு... இங்க ஒரு இடைவெளி... கால் சிக்கிடாம பார்த்துக்கங்க... எங்களுக்கு இந்த பாதைங்க பழகிப் போனவை. இங்க... காலை கொஞ்சம் தூக்கி வைக்கணும். மண்சுவரைப் பிடிச்சிக்கிட்டு நடக்கவேணாம். பாம்புங்க இருக்கும். நீர் பாய்ஞ்சுவந்து உண்டாக்கிய ஒரு பள்ளம் இப்போ வரும். இதோ... இன்னும் கொஞ்ச தூரம்தான். இந்த நாசம் பிடிச்ச ஒத்தையடிப் பாதை முடியறதுக்கு...''

அந்த இரவைவிட பயங்கரமான அந்த ஒற்றையடிப் பாதையைக் கடப்பதற்கு அரை மணி நேரத்தைவிட அதிகம் தேவைப்பட்டது. இனி வயல்...

"இந்த வயலோட அந்தக் கரையில வீடு இருக்கு. ஒரு கூப்பிடு தூரத்தில...''

"நீங்க எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க. இல்லியா?'' நான் நன்றியுணர்வுடன் கூறினேன்.

"என்ன? எந்த கஷ்டமும் இல்ல. சந்தோஷம்தான். என் முப்பாட்டன் காலத்தில எங்களோட வீடு ஒரு சத்திரத்தைப்போல இருந்திருக்கு. அந்தக் காலமெல்லாம் போயிடுச்சு. குடும்ப சொத்துங்க எல்லாம் கடனை அடைக்கறதுக்காக விற்க வேண்டியதாயிருச்சு. ஆனா அந்த பெரிய வீடு மட்டும் எஞ்சியிருக்கு. குடும்ப உறுப்பினர்களும் அழிஞ்சிட்டாங்க. இப்போ நானும் என் சகோதரியும் மட்டுமே இருக்கோம்.''

ss3

வயலுக்கருகில்... சேறு புரண்ட சிறிய வரப்பின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தன்னுடைய குடும்பத்தின் பரிதாபத்திற்குரிய வரலாற்றின் சில அத்தியாயங்களை அவர் என்னிடம் கூறினார். வயலைக் கடந்து நாங்கள் மீண்டுமொரு ஒற்றையடிப் பாதையை நோக்கித் திரும்பினோம். பிறகு... ஒரு சரளைக் கற்கள் நிறைந்த நிலத்தில் நடந்து, ஒரு வீட்டின் சிறிய வாசலில் கால் வைத்தோம்.

"இதுதான் வீடு. உள்ளே போவோம்.'' அவர் அழைத்தார்.

அங்கு சத்தமோ வெளிச்சமோ எதுவுமில்லை. ஒரு அமைதியான உயிரற்ற சூழல் மட்டும்...

"ஜானு... ஜானு...'' அவர் கதவைத் தட்டி அழைத்தார். வடக்குப் பக்க சமையலறையிலிருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டது.

"மிஸ்டர்... அந்த திண்ணையில போய் உட்காருங்க. அங்க பாய் இல்ல... நாய் ஏறி படுத்துறக் கூடாதுங்கறதுக்காக உள்ளே எடுத்து வச்சிருப்பா...''

சிறிது நேரம் சென்றதும் பாதிக் கதவைத் திறந்து ஒரு உருவம் வெளியே எட்டிப் பார்த்தது.

"ஜானு... விளக்கைப் பத்த வை...''

பதிலில்லை.

அவர் கதவை நோக்கிச் சென்றார். சிறிது நேரம் அவர்களுக்கிடையே உரையாடல் நடந்தது. தொடர்ந்து அவர் எனக்கருகில் வந்து கவலை நிறைந்த குரலில் கூறினார்:

"என்னவொரு பிரச்சினை இது! இன்னிக்கு மண்ணெண்ணெய் கிடைக்கலையாம். இப்போ நான் போய் கொஞ்சம் பார்க்கறேன். அந்த குஞ்ஞாயனோட கடை பூட்டியாச்சோ என்னவோ? ஜானு... அந்த புட்டியை இங்க எடு...''

நான் கவலையுடன் கேட்டேன்: "இனி இந்த பாதைங்களை யெல்லாம் கடந்து சாலைக்குப் போகணுமே?''

"அது பரவாயில்ல. வெளிச்சமே இல்லாம இரவை எப்படி கழிக்கமுடியும்? நீங்க இங்கே சந்தோஷமா இருங்க. நான் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துருவேன்.''

அவர் புட்டியைக் கையிடுக்கில் வைத்தவாறு இருட்டிற்குள் மறைந்தார்.

நான் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தேன்.

அருகிலிருந்த புதருக்குள்ளிருந்து நரிகளின் கூட்டு ஊளைச் சத்தம் பேரமைதியைக் கிழித்தது. சிறிது நேரம் சென்றதும், பயங்கரமான இரைச்சலுடன் பேய் மழையும் பெய்தது.

நான் பலவற்றையும் சிந்தித்துப் பார்ப்பதற்கு முயற்சித்தேன். இயலவில்லை. இனம்புரியாத ஒரு பயம் என்னைச் சூழ்ந்தது. தனிமைச் சூழலில் மூச்சு அடைப்பதைப்போல தோன்றியது. நான் சமையலறையின் கதவையே வெறித்துப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணுருவம் கதவைப் பிடித்தவாறு அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தது. அவள் ஏன் அதே இடத்தில் தன்னைக் காட்டியவாறு வெளியே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறாள்? அவளுக்கு என்ன வேண்டும்?

பாதி திறக்கப்பட்ட கதவின் வழியாக சமையலறையின் மூலைப் பகுதியும், அடுப்பும், அடுப்பின் அடிப் பகுதியில் கிடக்கும் சில நெருப்புக் கனல்களின் மங்கலான நிழல்களும் கலந்த ஒரு காட்சி தெரிந்தது. அந்த நெருப்புத் துண்டைப் பார்த்ததும் எனக்கு சற்று புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் உண்டானது. நான் மெதுவாக சமையலறையின் கதவுக்கருகில் சென்றேன்.

"கொஞ்சம் நெருப்பு வேணும்'' என்று கூறினேன்.

அவள் அடுப்பிற்கருகில் நகர்ந்து சென்று குனிந்து அமர்ந்து, நெருப்பு பற்றாமல் அடுப்பிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த மூன்று நான்கு சுள்ளிக் குச்சிகளையும் காய்ந்த இலைகளையும் உள்ளே தள்ளிவிட்டு, முகத்தைச் சாய்த்து வைத்து சற்று ஊதினாள். கொஞ்சம் சாம்பல் அவளுடைய நெற்றியின் முன்பகுதியில் பறந்துவந்து ஒட்டிக்கொண்டது.

அவள் கன்னங்களைக் குவித்து சுளித்து மேலுமொருமுறை நீட்டி ஊதினாள்.

ஒரு நெருப்பு ஜுவாலை எழுந்தது. அதன் செம்புநிற வெளிச்சத்தில் அவளுடைய மெலிந்த, சோர்வுடன் காணப்பட்ட சிறிய முகம் தெளிவாகத் தெரிந்தது. ஒரு காய்ந்த இலையின் சாம்பல் அவளுடைய மூக்கின்மீது ஒட்டிக்கொண்டிருந்தது.

அந்த நெருப்பு ஜுவாலை உடனடியாக நிறைய நெருப்பு ஜுவாலைகளை உண்டாக்கியது. அந்த வெளிச்சத்தின் வட்டத்தில் அடுப்பின் மேடும் சுற்றுப்புறமும் அவளுடைய உருவமும் மேலும் தெளிவாகத் தெரிந்தன. வறுமை வரைந்து வைத்த பரிதாபத்திற்குரிய ஒரு ஓவியம்! ஒரு முறத்தில் அறுத்து சேர்த்துவைக்கப்பட்டிருந்த கீரை இலைகள்... அருகில் ஒரு காலி மண்சட்டி. அங்கு... அன்று அரிசியை கொதிக்கவைத்த எந்தவொரு அடையாளமும் இல்லை.

வறுமையை வெளிப்படுத்தும் அந்த பரிதாபத்திற்குரிய காட்சியிலிருந்து நான் மெதுவாக என் விழிகளை அவளை நோக்கித் திருப்பினேன். இரக்கத்திற்குரிய சிறையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்மை! ஆங்காங்கே கிழிந்திருக்கும் ஒரு பழைய சில்க் ரவிக்கையை அவள் அணிந்திருந்தாள். அது அவளுடைய ஒட்டிப்போன மார்புப் பகுதியில் சரிந்து தொங்கிக்கொண்டிருந்தது. சிரமப்பட்டு முழங்காலை மறைக்கக்கூடிய ஒரு வேட்டித் துணியை அவள் அணிந்திருந்தாள். அடுப்பின் வெளிச்சம் அவளுடைய முகத்தின் வெளிறிப்போன தன்மையை விழுங்கிவிட்டிருந்தாலும், அவளுடைய குழிவிழுந்த காரிய விழிகளில் கவலை புகைந்துகொண்டுதான் இருந்தது.

ஒரு சுள்ளிக்குச்சியின் உதவியுடன் ஒரு நெருப்புக் கனலை இறுகப் பிடித்தவாறு அவள் மெதுவாக கதவை நோக்கி வந்தாள்.

மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. பைத்தியம் பிடித்துவிட்டதைப்போல வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்றில் மரங்கள் அசையும் சத்தம்...

அவள் அந்த நெருப்புக் கனலை என்னை நோக்கி நீட்டி, என் முகத்தையே பரிதாபமாக ஒருமுறை பார்த்தாள். அதற்கான அர்த்தம்..?

"நீங்க சாப்பிட்டுட்டீங்களா?'' அவளுடைய பலவீனமான குரலில் வெளிவந்த கேள்வி என்னை சிந்தனையிலிருந்து தட்டி எழுப்பியது.

"இல்ல...'' நான் சிகரெட்டிற்கு நெருப்பு பற்றவைப்பதற்கு மத்தியில் கூறினேன்.

"இங்க... இன்னிக்கு உலை வைக்கல...''

அடுப்பில் நெருப்பு அணைந்தது. சமையலறையும் அவளுடைய உருவமும் மங்கலாயின.

"அண்ணன் இன்னிக்கு இனிமே வரமாட்டாரு. நீங்க தூங்கறதுக்காக படுக்குறீங்களா? நான் பாய் விரிச்சுப் போடறேன்.''

இருட்டிற்குள்ளிருந்து வந்த அவளுடைய வார்த்தைகள் என் இதயத்தில் ஒரு காயத்தை உண்டாக்கின. என்ன கூறுவதென்று தெரியாமல் நான் குழப்பமடைந்தேன்.

வறுமையின் ஆட்சியும் பசியின் கொடுமையும் விபச்சாரமென்ற அபய முகாமிற்கு இழுத்துச் செல்லப்படும் அந்த ஏழைப் பெண்மையை நான் இரக்கத்துடன் ஒருமுறை பார்த்தேன். பிறகு அங்கு ஒரு நிமிடம்கூட இருக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. நான் என்னுடைய பையில் கையைவிட்டு பர்ஸை எடுத்தேன். என் காங்கிரஸ் போராளிக்குக் கொடுப்பதற்காக தோழர்கள் என்னிடம் ஒப்படைத்திருந்த இருபத்தைந்து ரூபாய் அதில் இருந்தது. அந்த பர்ஸை நான் அப்படியே அவள் கையில் கொடுத்துவிட்டுக் கூறினேன்:

"சகோதரி... இந்த பணத்தை கையில வச்சிக்கோ. நான் கிளம்பறேன்...''

மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் நான் இருட்டிற்குள் இறங்கி நடந்தேன். அந்த சுடுகாட்டிலிருந்து வெளியேறிச் சென்றால் போதுமென்ற எண்ணமே எனக் கிருந்தது.

அடர்த்தியான இருட்டும் காற்றும் மழையும் என்னை வாசலிலேயே தடுத்து நிறுத்தியது. மின்னலின் வெளிச்சத்தில் வெறுமனே கிடக்கும் ஒரு பழைய பட்டறையை நான் பார்த்தேன். அங்கு கொஞ்சம் வைக்கோலும் இருந்தது. அங்கு நுழைந்து படுத்து சில மணி நேரம் இருக்கலாமென தீர்மானித்து, வைக்கோலை வைத்து ஒரு மெத்தையை உண்டாக்கி சுருண்டு படுத்தேன்.

சிந்தனையில் மூழ்கி எவ்வளவு நேரம் அங்கு படுத்திருந்தேன் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. சிறிது நேரம் கடந்ததும், மழை முற்றிலுமாக நின்றது. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பிரகாசிக்க ஆரம்பித்தன. நடுச்சாம நிலவும் மெதுவாக கிழக்கு திசையில் தோன்றி மேலே வந்தது.

நான் எழுந்து நடப்பதற்குத் தீர்மானித்தேன். பட்டறையின் மறுபக்கத்தில் வைக்கோல் விரிப்பில் ஒரு ஆள் படுத்து உறங்கிக்கொண்டிருப்பது நிலவு வெளிச்சத்தில் எனக்குத் தெரிந்தது. நான் மெதுவாகச் சென்று பார்த்தேன். அந்த மனிதரை நான் ஆச்சரியத்துடன் அடையாளம் தெரிந்துகொண்டேன். என்னை அங்கு அழைத்துவந்த மனிதர்தான்.

மண்ணெண்ணெய் புட்டியை அருகில் வைத்தவாறு, அந்த ஊனக்கால் மனிதர் சுகமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

என்ன ஒரு வினோதமான நாடகம்!

===

நான் என் காங்கிரஸ் போராளியையும், அவருக்குக் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய செய்தியையும் மறந்துவிட்டு, நேராக வீட்டிற்குத் திரும்பிவந்தேன். கம்பியை அறுப்பதற்கோ, பாலத்தை இடிப்பதற்கோ பயன்படுத்துவதற்காக திட்டமிட்டிருந்த இருபத்தைந்து ரூபாய் அந்தவகையில் வேறொரு வழிக்குச் சென்றுவிட்டது. அவர்களுக்கு மத்தியில் நான் ஒரு வஞ்சகனாகவும் ஆகிவிட்டேன்.

ப்

uday010522
இதையும் படியுங்கள்
Subscribe