ஒரு விடுமுறை நாளன்று நிக்கோல்ஸ்கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறைவனை வழிபடுவதற்காகச் சென்றார்கள்.
செல்வந்தரின் கால்நடைகளின் தொழுவங்கள் இருக்கக்கூடிய இடத்தில் பசுக்களைப் பார்த்துக்கொள்பவளும் வயதில் மூத்த மனிதரும் குதிரைக்காரனும் எஞ்சியிருந்தார்கள்.
பசுக்களைப் பார்த்துக்கொள்பவள் நீர் எடுப்பதற்காக கிணற்றிற்கருகில் சென்றாள். கிணறு அந்த நிலத்தில்தான் இருந்தது. அவள் வாளியைத் தன்னை நோக்கி இழுத்தாள். ஆனால், அதைப்பிடிக்க முடியவில்லை. வாளி அவளிடமிருந்து விலகி கிணற்றின் ஓரப்பகுதியைத் தட்ட, கயிறு அறுந்துபோனது. அவள் குடிசைக்குச்சென்று முதியவரிடம் கூறினாள்:
"அலெக்ஸாண்டர்... கிணற்றில் இறங்கி வாளியை எடுத்துத் தாங்க. நான் வாளியை அங்கு விட்டுட்டேன்.''
"நீதானே வாளியை கிணற்றுக்குள் போட்டது?அதனால்... நீயே கிணற்றுக்குள் இறங்குவதுதான் சரியாக இருக்கும்'' அலெக்ஸாண்டர் கூறினார்.
உதவியாக இருக்கும்பட்சம், கிணற்றில் இறங்கு வதற்கு தனக்கு ஆட்சேபனை இல்லையென அவள் கூறினாள்.
அலெக்ஸாண்டர் சிரித்துக்கொண்டே கூறினார்: "சரி... நாம் போவோம்.எது எப்படியோ... உன் வயிற்றில் பெரிதாக ஒண்ணுமில்ல. அதனால்... உன்னை என்னால் தூக்கமுடியும். உணவு சாப்பிட்டு முடித்தபிறகு என்றால், என்னால் அதைச் செய்யமுடியாது.''
முதியவர் ஒரு கம்பில் கயிறைக்கட்ட, அதில் ஏறி அவள் கிணற்றுக்குள் இறங்க ஆரம்பித்தாள். நீர் எடுப்பதற்காக பயன்படுத்தும் சக்கரத்தை மெதுவாக திருப்பி அவளைக் கிணற்றுக்குள் இறக்கினார்.
கிணறுக்கு கிட்டத்தட்ட இருபதடி ஆழம் இருந்தது. அதில் மூன்றடி உயரத்திற்கு நீர் இருந்தது. கிணற்றில் இறக்கு வதற்கு இடையே அவர் கேட்டுக்கொண்டேயிருந்தார்:
"இன்னும் கொஞ்சம் வேணுமா?'' அப்போது அவள் கூறினாள்:
"இன்னும் கொஞ்சம் போதும்...''
திடீரென கயிறு அறுந்ததைப்போல இருந்தது. அவர் அவளை சத்தம் போட்டு அழைத்துப் பார்த்தார். பதில் வரவில்லை. அவர் கிணற்றுக்குள் பார்த்தபோது, அவள் தலைகீழாக... தலை நீரிலும் கால்கள் மேலேயும் இருப்பதைப்போல கிடப்பதைப் பார்த்தார்.
உதவி செய்வதற்காக அவர் உரத்த குரலில் அழைத்தார். ஆனால், எங்குமே யாருமில்லை.
அங்கிருந்த உதவியாளர் மட்டும் வந்துசேர்ந்தார்.
அலெக்ஸாண்டர் கிணற்றிற்கு மேலேயிருந்த சக்கரத்தை இறுக பிடிக்கும்படி உதவியாளரிடம் கூறிவிட்டு, கயிறைப்பிடித்து மேலே இழுத்து, அதிலிருந்த கம்பில் அமர்ந்தவாறு மெதுவாக கிணற்றுக்குள் இறங்கினார்.
உதவியாளர் மெதுவாக அலெக்ஸாண்டரைக்கீழ் நோக்கி இறக்கியபோதும் முன்பு நடைபெற்ற சம்பவம்தான் நடந்தது. பிடியைவிட்டு, அவர் பசுவை கவனிப்பவளின் மேலே போய் விழுந்தார்.
உதவியாளர் சத்தம்போட்டு கத்தினார். அதற்குப் பிறகு ஆட்களை அழைத்து வருவதற்காக தேவாலயத் திற்குச் சென்றார். வழிபாடு முடிந்து மக்கள் மெதுவாக வீடுகளுக்கு வரக்கூடிய நேரமாகி விட்டிருந்தது.
அனைத்து ஆண்களும் பெண்களும் கிணற்றிற்கருகில் ஓடினார்கள்.அவர்கள் அதைச் சுற்றி நின்றுகொண்டு கூப்பாடு போட்டார்கள். என்ன செய்யவேண்டும் என்று யாருக்குமே தெரியாமலிருந்தது.
இளைஞனான மர வேலை செய்பவனான ஐவான் ஆட்களின் கூட்டத்திலிருந்து வெளியே வந்து கயிறைப் பிடித்து கம்பின்மீது அமர்ந்து கிணற்றிற்குள் இறங்க விரும்பினான்.
ஐவான் தன் இடுப்புப்பட்டையை பயன்படுத்தி தன்னைக் கயிறுடன் சேர்த்துவைத்து கட்டினான்.
இரண்டு ஆண்கள் ஐவானை மெதுவாக கிணற்றிற்குள் இறக்கினார்கள்.
அப்போது மற்றவர்கள் கிணற்றிற்குள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.ஐவானுக்கு என்ன நடக்கும் என்பது புரிந்தது. நீருக்கருகில் நெருங்கியபோது கயிறிலிருந்த பிடிப்பைவிட்டு ஐவான் தலைகீழாக கிணற்றிற்குள் விழ இருந்தான். ஆனால், பெல்ட்டால் கட்டப்பட்டிருந்த காரணத் தால், விழவில்லை.
"அவனைப் பிடித்துத் தூக்குங்க...'' என்று அனைவரும் சத்தம்போட்டு கூறினார்கள்.
தொடர்ந்து ஐவானை மெதுவாக கிணற்றிற்கு வெளியே இழுத்து தூக்கினார்கள்.
இறந்து விட்டதைப்போல ஐவான் பெல்ட்டில் தொங்கிக்கொண்டிருந்தான். கிணற்றின் ஓரங்களில் அவனுடைய சரீரம் உரசியது. ஐவானின் முகம் இருண்டு போய் காணப்பட்டது.
அவர்கள் அவனை கயிற்றிலிருந்து விடுபடச்செய்து நிலத்தில் படுக்கச் செய்தார்கள். அவன் இறந்து விட்டான் என அவர்கள் கருதினார்கள். ஆனால், திடீரென ஐவான் நீண்ட பெருமூச்சை விட்டவாறு சத்தம் உண்டாக்கினான்.
உடனடியாக அவன் கண் விழிக்கவும் செய்தான். மற்றவர்களும் கிணற்றிற்குள் இறங்கவேண்டும் என நினைத்தார்கள். ஆனால், வயதான ஒரு விவசாயி, அவர்கள் கீழே செல்லமுடியாதென்றும், கிணற்றில் கெட்ட வாயு இருக்கிறது என்றும், ஆட்களின் உயிர் இல்லாமல்போனதற்கு அதை சுவாசித்ததுதான் காரணமென்றும் கூறினார். அதற்குப் பிறகு விவசாயி, கொக்கிகளைக்கொண்டு வந்து அலெக்ஸாண்டரையும் பசுவைப் பார்த்துக்கொள்பவளையும் கிணற்றிலிருந்து இழுத்து மேலே கொண்டுவர முயற்சித்தார். அலெக் ஸாண்டரின் தாயும் மனைவியும் கிணற்றிற்கருகில் நின்று அழுதார்கள். மற்றவர்கள் அவர்களை அமைதிப் படுத்த முயன்றார்கள்.
இதற்கிடையில் கொக்கிகளை பயன்படுத்தி இறந்த வர்களை வெளியே எடுப்பதற்கான முயற்சி தொடங்கி யது.
வயதான மனிதரை ஆடைகளில் இணைத்து பாதியளவு தூக்கினாலும், எடை அதிகமாக இருந்த தால் ஆடை கிழிந்து தரையில் போய் விழுந்தார்.
இறுதியாக இரண்டு கொக்கிகளை இணைத்துப் பிடித்துத் தூக்கினார்கள்.
தொடர்ந்து இளம்பெண்ணையும் இழுத்துத் தூக்கினார்கள்.
இருவரும் இறந்து விட்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கைக்குள் திரும்பி வரவில்லை.
தொடர்ந்து அவர்கள் கிணற்றை ஆழமாக சோதித்துப் பார்த்தபோது, அதற்குள் கெட்ட வாயு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.
அதிலிருந்த வாயுவிற்கு நல்ல அடர்த்தி இருந்தது. மனிதர்களாலோ மற்ற உயிரினங்களாலோ அங்கு ஒரு நிமிடம்கூட இருக்கமுடியாது. அவர்கள் ஒரு பூனையைக் கிணற்றிற்குள் இறக்கினார்கள்.
கெட்ட வாயு நிறைந்திருந்த இடத்தை அடைந்த போது, அந்தப்பெண் பூனை இறந்துவிட்டது. எந்த வொரு உயிரினத்தாலும் அங்கு உயிருடன் தொடர்ந்து இருக்கமுடியாது என்பது மட்டுமல்ல... அங்கு மெழுகுவர்த்தி எரிவதுமில்லை.பற்றவைத்த ஒரு மெழுகுவர்த்தியை அவர்கள் இறக்கிப் பார்த்தார்கள். கெட்ட வாயு நிறைந்திருந்த இடத்தை அடைந்ததும், அது அணைந்துவிட்டது.
இப்படிப்பட்ட வாயு நிறைந்திருக்கும் இடங்கள் பூமியில் இருக்கின்றன. ஒரு ஆள் அங்கு போய்ச் சேர்ந்தால், உடனடியாக இறந்து விழுந்துவிடுவான். அதனால், சுரங்கங்களில் பணியாற்றும் ஆட்களின் கையில் விளக்குகள் இருக்கும்.
இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்வதற்கு முன்னால் விளக்கைப் பற்ற வைப்பார்கள்.
விளக்கு அணைவதாக இருந்தால், பிறகு யாரும் அங்கு செல்லமாட்டார்கள். விளக்கு நன்றாக எரிவது வரை அவர்கள் அங்கு சுத்த வாயுவைச் செலுத்து வார்கள்.
நேப்பிள்ஸ் நகரத்திற்கருகில் இப்படிப்பட்ட ஒரு குகை இருந்தது. அதன் அடிப்பகுதியில் மூன்றடி உயரத்தில் அசுத்த வாயு நிறைந்திருந்தது.
அதற்கு மேலே வாயு நல்லதாக இருந்தது. ஒரு மனிதனால் அந்த குகையின் வழியாக நடக்கமுடியும். அந்த மனிதனுக்கு எதுவுமே நடக்காது. ஆனால், ஒரு நாய் அதற்குள் நுழைந்தவுடன் இறந்துவிடும்.
எங்கிருந்து இந்த அசுத்த வாயு வந்துசேர்கிறது? நாம் சுவாசிக்கும் நல்ல வாயுவினால்தான் அதுவும் உண்டாகிறது. ஒரு இடத்திற்கு சில ஆட்களை வரவழைத்து சேர்த்தபிறகு, கதவுகளையும் சாளரங் களையும் அடைத்து, சுத்த வாயு நுழையாமல் பார்த்துக் கொண்டால், கிணற்றிற்குள் இருக்கும் வாயுவைப் போன்ற அசுத்த வாயு அங்கு நிறைந்துவிடும். ஆட்கள் அங்கு இறந்து விழவும் செய்வார்கள்.
நூறு வருடங்களுக்கு முன்னால் ஒரு யுத்தத்திற்கு மத்தியில் இந்துக்கள், 146 ஆங்கிலேயர்களைப் பிடித்து பூமிக்கடியில் இருந்த ஒரு குகையில் அடைத்தார்கள். அதில் வாயு போக்குவரத்து சிறிதும் இல்லாமல் இருந்தது.
சில மணி நேரங்களில் அதற்குள் அடைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் ஒவ்வொருவராக இறந்து விழ ஆரம்பித்தார்கள்.
இரவு முடியும்போது, 123 பேர் இறந்திருந்தார்கள். மற்றவர்கள் அரை உயிருடன் இருந்தார்கள். முதலில் குகையில் சுத்த வாயு இருந்தது. அடைக்கப்பட்டவர் கள் அந்த சுத்த வாயுவை சுவாசித்து தீர்த்து விட்டார்கள்.
வெளியேயிருக்கும் சுத்த வாயு சிறிதும் அங்கு வரவுமில்லை. அதனால், அங்கிருந்த வாயு அசுத்தமான தாக ஆகி, கிணற்றுக்குள் நடந்ததைப்போல அவர்கள் இறக்கவும் செய்தார்கள்.
என்ன காரணத்தால் சில ஆட்கள் ஒன்றுசேரும் போது, நல்லவாயு கெட்டுப்போகிறது?
காரணம்- ஆட்கள் சுவாசிக்கும்போது, அவர்கள் சுத்த வாயுவை உள்ளே இழுத்து, அசுத்த வாயுவை வெளியே விடுகிறார்கள்.