நாம் தை மாதம் கடந்து மாசிக்கு நகர்ந்திருக்கிறோம். ஆனாலும் கடந்த மாதம் நாம் கொண்டாடிய பொங்கல் திருநாளின் இனிப்பு நம் நெஞ்சிலேயே இருக்கிறது. மஞ்சளும் இஞ்சியும் இன்னும் நம் இதயத்தில் அதே பசுமையோடு அசைகிறது.

அறுவடை வாசம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. அந்தக் குதூகலமும் நம்மைச்சுற்றி வந்து இன்னும் கும்மியடிக்கிறது.

இன்றைய விஞ்ஞான உலகில் மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாகவும் இயந்திரங்கள் எல்லாம் மனிதர்களாகவும் மாறிச் சுழன்றுகொண்டிருக்கிற வேளையில் இன்று பல கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம்மிடம் இருந்து தொலைந்து போய்விட்டது.

இது வருத்தத்திற்குரியது.

Advertisment

தமிழன் தான் வாழுகிற நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரித்தான். அவரவர் நிலம் சார்ந்த விழாக்களை தமிழர்கள் கொண்டாடினர். வயலும் வயல் சார்ந்த நிலமும் உடையது மருத நிலம். தமிழ்நாட்டின் பெரும்பகுதி விவசாயம் சார்ந்தது.

தஞ்சை மாவட்டம் குறுவை சாகுபடி செய்யக்கூடிய மிகச்சிறந்த மாவட்டம். தமிழ்நாட்டின் சிறப்பு இது விவசாய பூமி என்பது தான். அதனால் தான் அறுவடைக் காலத்தைத் தமிழர்கள் மிகப் பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். தமிழினத் தின் ஒட்டுமொத்த பண்பாட் டின் அடையாளமாகக் கொண் டாடப்படுவது தான் "அறுவடைத் திருநாள்", "தமிழர் திருநாள்" என்று அழைக்கப்படுகின்ற பொங்கல் திருநாள். இதைத்தான் கடந்த மாதம் கொண்டாடி முடித்திருக்கிறோம்.

பொங்கல் திருநாளுக்கு சங்க இலக்கியச்சான்று உண்டா? என்று சிலர் கேட்கின்றனர்.

Advertisment

"தையில் நீராடி தவம் தலைப் படுவாயோ" என்று கலித்தொகை அன்றே தைத்திங்களைக் கொண்டாடி இருக்கிறது.

"மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" -என்று பொங்கல் விழாவைப் பற்றிய குறிப்பு சீவகசிந்தாமணியில் இருப்பதால் ஒன்பதாம் நூற்றாண் டிலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடி இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

கிறித்தவர்களின் காலம் காட்ட கிருத்துவ ஆண்டு கி.பி. என்று இருக்கிறது. முஸ்லிம்களின் காலம் காட்ட இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி என்று இருக்கிறது. ஆனால் தமிழர்களின் காலம் காட்ட இந்த தைத்திருநாள்தான் அடையாளமாக இருக்கிறது. தமிழ் மாதப் பிறப்பு சித்திரையா இல்லை தை தானா எனப் பல கேள்விகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும் இந்த இரண்டு விழாக்களுமே நம் மண்ணில் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

sa

ஆனால், ஊருக்கே உணவு தரும் உழவனுக்கு தை முதல் நாள் தான் புது வருடம். விவசாயிகளின் மனமும் வயிறும் நிறையக்கூடிய மாதம் தை மாதம். 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றவும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும் முடிவுசெய்தார்கள். 1939-ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றபோதும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்றும் அறிவிக்கப்பட்டது.

"தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர் தங்கள்

செம்மை வாழ்வின் சிறப்பு நாள்; வீடெல்லாம்

பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புது நெருப்பேறி அரிசியைப்

பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்

எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்ப நாள்!"

-என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தை முதல் நாள் தமிழருக்கு புது வாழ்வு பிறக்கும் நாள் என சிறப் பாகப் பாடியிருக்கிறார்.

"தை மகளே தை மகளே வருக!

எங்கள் குலம் விளங்க

மண் சிறக்க வருக!

கரும்பு மஞ்சள் இஞ்சி

எடுத்து வைத்தோம் உனக்கு!

நீ விரும்பும் வாழ்க்கை தந்திடுவாய் சிறப்பு!

கதிரவனை துணைக்கழைத்தோம்

உன்னை வரவேற்க!

புதுப்பானையிலே பொங்கல் வைத்தோம்

ஒன்று கூடி மகிழ!

தை மகளே தை மகளே வருக!

பொங்கல் போல மகிழ்ச்சி

இங்கு பொங்க வேணும் வருக!

கலைமகளும் திருமகளும்

உன் கை கோர்த்து வருக!

நாங்கள் நினைப்பதெல்லாம்

நடக்குமெனும் வரம் ஒன்று தருக!

என் சிரம் உன்னை வணங்கும்!

மனம் என்றும் நினைக்கும்!

மண் மணத்தை

தருவாய்! தன்மானம் காப்பாய்!

மறந்து போகும் தமிழனுக்கும்

உணவளிக்கும் தாயே!

தமிழன் மானம் காக்க

இன்று பிறந்த தைக் குழந்தை நீயே!

தை மகளே தை மகளே வருக!"

-என்று நாம் நம் இல்லங்களில் தைப்பாவையை வரவேற்கிறோம். வரவேற்றோம். வரவேற்போம்.

சாதி, இனம், மதம் தாண்டி கொண்டாடும் பொங்கல் என்றுமே சமத்துவப் பொங்கல்தான். மாரியும் மேரியும் முகமதுவும் வேறுபாடின்றி ஒன்றாகக் கூடி மகிழும் விழா தைப்பொங்கல் எனும் தமிழர் திருநாள்தான் என்றால் அது மிகையாகாது.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று நம் மக்கள் பொதுவாகச் சொல்லுவார்கள். ஏர் உழுது விதை விதைத்த உழவனின் வியர்வைக்குப் பரிசாகத் தானிய மணிகள் கிடைக்கும் தை மாதம்தான் விவசாயிகளின் உழைப்புக்கு வெளிச்சமூட்டக்கூடிய மாதம். அதனால் புதுப்பானையில் அறுவடை செய்த புத்தரிசி புதுப் பருப்பு புது வெல்லம் போட்டு பானையில் இஞ்சிக் கொத்து மஞ்சள் கொத்து கட்டி சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு பொங்கல் வைக்கிறார்கள்.

sss

நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழாதான் இந்த பொங்கல் திருவிழா. மார்கழி மாதம் கடைசி நாளில் கொண்டாடப்படுவதுதான் போகித் திருநாள். 'பழையன கழிதலும்; புதியன புகுதலும்' என்பதற்கேற்ப பழைய குப்பைகளை உபயோகமற்ற பொருட்களை நெருப்பில் இட்டு எரிக்கும் நாள். பொழுது விடியும் முன்பு வைகறைப் பொழுதில் பழையதை எரித்து ஒலியெழுப்பிக் கொண்டாடுவார்கள். 'போகி' என்றால் 'இந்திரன்' என்ற பொருளும் உண்டு. மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன். மழை தந்து வேளாண்மை செய்ய உதவும் இந்திரனுக்கு நன்றி சொல்வார்கள். சிலப்பதிகாரத்தில் இந்திரனுக்கு விழா எடுக்கும் நிகழ்வு அன்று இருந்ததாகவும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்திர விழா எடுத்து இந்திரனுக்கு நன்றி தெரிவித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில்

"திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!" என்று சந்திரனையும் "ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! என்று சூரியனையும் "மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான்"

-என்று மழையையும் வாழ்த்தி பாடியிருக்கிறார் இளங்கோவடிகள்.சந்திரன், சூரியன் மற்றும் மழையைத் தரும் வருணனையும் வணங்கும் வழக்கம் தமிழரிடம் இருந்திருக்கிறது என்பதை சிலப்பதிகாரம் குறிப்பிட்டிருக்கிறது என்பதே தமிழரின் பெருமை.

"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே"- என்று சூரியன் தான் எல்லாவற்றிற்கும் முதன்மையானவன் என்று முழங்கினான் முண்டாசுக் கவி பாரதி. அதனால் தான் சூரியக் கடவுளுக்கு அந்த வருட விளைச்சலுக்கு நன்றி சொல்லியும் வரப்போகும் வருடத்தில் நல்ல விளைச்சல் தர வேண்டுமென்று வேண்டியும் போகியின் மறுநாள் தை முதல் நாள் அன்று சூரியனுக்கு வாழ்த்துச் சொல்லி பொங்கல் வைப்பார்கள். அன்று வாசலில் புள்ளிகள் வைத்து கலர்கலராக பச்சரிசி மாவில் பெண்கள் கோலம் போடுவார்கள். பொங்கலுக்கு முன்பே வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள்.

பொங்கல் அன்று வடை பாயாசத்துடன் 21 வகையான காய்கறிகளை சமைத்து சூரிய பகவானுக்குப் படைப்பார்கள். திருமணமானவர்களுக்கு தலைப் பொங்கலன்று பிறந்த வீட்டிலிருந்து பொங்கல் வரிசை வைப்பார்கள். ஆயுள் காலம் வரை பிறந்த வீட்டிலிருந்து அந்தப் பெண்ணுக்கு 'பொங்கல் படி' கொடுப்பார்கள். புகுந்த வீட்டில் வாழும் அந்த பெண்ணுக்கு அம்மா வீட்டில் இருந்து வரும் 'பொங்கல் படி' மிகப்பெரிய கௌரவத்தையும் பெருமையையும் கொடுக்கும்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். நகரங்களை விட கிராமங்களில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழா மாட்டுப் பொங்கல். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்வதோடு அல்லாமல் நமக்குப் பாலைத் தரும் காமதேனுவாகிய பசுவுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மனிதனின் தேவைகளை நிறைவு செய்ய வண்டி இழுத்து உழவுக்கு உரமாகும் சாணத்தைத் தந்த மாட்டுக்கு நன்றி சொல்லும் திருவிழா மாட்டுப் பொங்கல். மனிதன் தனக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கத் தான் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறான். இவ் விழாவை கன்றுப் பொங்கல் என்றும் சொல்வார்கள்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு" -என்ற திருவள்ளுவர் வாக்குப் படி நன்றி மறவாது ஒழுகுதல் விலங்குகளிடமும் நாம் இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாட்டுப் பொங்கல். அப்படிப்பட்ட சிறப்பான மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு கொம்பு சீவி, வண்ணம் பூசி அதன் கொம்பின் கூரிய பகுதியில் குஞ்சம் கட்டி சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்தில் தோலிலான வார்ப் பட்டையில் சலங்கை கட்டிவிடுவார்கள். அன்று பொங்கல் பானை வைத்து கற்பூரம் காட்டி அனைத்து கால்நடைகளுக்கும் பிரசாதம் கொடுப்பார்கள்.

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை."

-என்று திருவள்ளுவர் சொன்னது போல் உழவுத் தொழில் தான் உலகின் தலையாய தொழில். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் மகாகவி பாரதியார். அந்த உழவருக்கான திருநாள் தான் மாட்டுப்பொங்கல்.

கிராமங்களில் ஏன் இன்றும்கூட நகரங்களில் சிலர் பொங்கலுக்கு மறுநாள் கணுப் பொங்கல் கொண்டாடு வார்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கிய மான நோன்பு நாள் இது. பெண்களும் குழந்தைகளும் தங்கள் உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று குடும்ப ஒற்றுமைக்காக கொண்டாடப்படுவது தான் கணுப் பிடி வைக்கும் விழா.

அன்றைய தினம் முதல் நாள் பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சளை எடுத்து பெரியவர்கள் கையால் நெற்றியில் தீற்றிக்கொண்டு அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். தன் உடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் இரண்டிரண்டு மஞ்சள் இலையை விரித்து வைத்து முதல் நாள் பிசைந்த தயிர் சாதத்தில் கொஞ்சம் எடுத்து மஞ்சப்பொடி கலந்த மஞ்சள் சாதம், கொஞ்சம் குங்குமம் கலந்த சாதம், வெள்ளை சாதம், சக்கரைப் பொங்கல் இப்படி நான்கு வகையான சாதம் வைப்பார்கள். மஞ்சள்கிழங்கு கொத்து இலையை விரித்து இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் இரண்டு துண்டு கரும்பு வைத்துவிட்டு இந்த சாதத்தை எல்லாம் ஏழு அல்லது ஒன்பது உருண்டைகளாகப் பிடித்து வைத்து கற்பூரம் காட்டி நெய்வேத்தியம் செய்வார்கள். அந்த உணவை காக்கைக்கும் குருவிக்கும் மகிழ்ச்சியாகக் கொடுப்பார்கள். கிராமத்தில் உள்ளவர் கள் ஆறு, குளம் மற்றும் ஊரணி என்று காக்கைக் குருவி சாப்பிட வசதியாக வைப்பார்கள். இன்றைய சூழலில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் நகரவாசி களுக்கு மொட்டை மாடியில் தான் கணுப்பிடி கொண்டாட்டம். கணுப்பிடி வைத்து நெய்வேத்தியத்தின் போது "காக்கா பிடியும் கணுப்பிடியும் கனிவாக நானும் வெச்சேன்!

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்!

மகிழ்ச்சி பொங்க விரிச்சு வெச்சேன்! காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணமுனு சொல்லி வெச்சேன்! கலர் கலரா சாதம் வெச்சேன்! கண்டிப்பா கரும்பும் வெச்சேன்! அண்ணன் தம்பி குடும்பம் எல்லாம் அமர்க்களமாய் வாழ வெச்சேன்! இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம் இதயத்தோடு எடுத்து வெச்சேன்! கூட்டு வெச்சேன் கூவி வெச்சேன்! கூட்டுக்குடும்பம் கேட்டு வெச்சேன்! பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்! பச்சை இலையை விரிச்சு வெச்சேன்! கற்பூரம் ஏத்தி வெச்சேன்!

கடவுளை நான் வணங்கி வெச்சேன்! ஆரத்தி எடுத்து வெச்சேன்! ஆண்டவனை துதித்து வெச்சேன்!"

-என்று பாடி காக்காய் கூட்டம்போல் எங்கள் கூட்டமும் கலையாம இருக்கணும் என்று கணுப் பொங்கல் கொண்டாடுவார்கள்.

நான்காவது நாள் வரும் காணும் பொங்கல் தொலைவிலிருக்கும் உறவுகளோடு கொண்டாடும் பொங்கல். உறவுகளையும் நட்புகளையும் காணச் செல்லும் மகிழ்ச்சிக்கான திருநாள்தான் காணும் பொங்கல். கிராமங்களில் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழர்களின் அடையாளமாகத் திகழும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள். உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு ஏறுதழுவல் போன்ற பல மண்சார்ந்த வீர விளையாட்டுகளை நிகழ்த்துவார்கள்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண இன்றும் மிகப் பெரிய கூட்டம் காத்திருக்கிறது. இதைத் தவிர சேவல்சண்டை, சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் ரேக்ளா ரேஸ் என்ற மாட்டுவண்டிப் பந்தயம் என பல வீர விளையாட்டுகள் நம் மண்ணின் பெருமையை பறைசாற்றுகின்றன. பல விளையாட்டுகள் நம் மண்ணில் காணாமல் போனாலும் தைப்பொங்கலை வரவேற்க இதைப் போன்ற சில வீர விளையாட்டுகள் நம் மண்ணை விட்டும் மனதை விட்டும் நீங்கவில்லை என்பதுதான் உண்மை. எத்தனை விழாக்கள் இம் மண்ணில் இருந்தாலும் தமிழனின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடையாளம் காட்டுவது நம் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்தான். இது போன்ற நம் பண்பாட்டுத் திருநாட்களை நாம் கை நழுவ விட்டு விடக்கூடாது. கைவிட்டால் நம் முகமும் முகவரியும் தொலைந்துவிடும்.