நானும் ராஜனும் ஒன்றாகச் சேர்ந்து தங்கியிருந்தோம். அப்படி யென்றால்... ராஜனின் லாட்ஜில் நானும் போய்ச் சேர்ந்துவிட்டேன். நகரத்திற்கு வந்தபோது, எனக்கொரு வீடில்லை. அப்படி உண்டாக்குவதற்கும் வழியில்லாமல் இருந்தது. பர்ஸ் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. நான்கு நாட்கள் ஹோட்டலில் தங்கினேன்.
ஐந்தாவது நாளன்று வயிற்றில் உண்டான வேதனைக்கு சிறிது மருந்து சாப்பிட்டேன்.
"பகவானே... படுப்பதற்கும் இருப்பதற்கும் ஒரு இடத்தைக் காட்டுவாயா?' என்று வேண்டிவிட்டு, அங்கிருந்த சாலையின் வழியாக நடந்துசென்றபோது, கல்லூரியின் வாசலில் "பாரம் சுமக்கும் அனைவருக்கும் அபயமாக இருப்பவன் நான்' என்பதைப்போல நம் ராஜன் நின்றுகொண்டிருந்தான். என் மனதில் ஒரு குளிர்ச்சி வந்து சேர்ந்தது என்பதைக் கூறினால் போதாது... கும்ப மாதத்தில் ஒரு பெரிய மழை பெய்தது என்று கூறுவதே சரியாக இருக்கும்.
ராஜனை எனக்கு முன்பே தெரியும். பள்ளிக்கூட மாணவனாக இருந்த காலத்திலேயே... நான்கு முறை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஓடிப்போன... ஒரு வருடம்விட்டு ஒரு வருடம் தேர்வில் தோல்வியைத் தழுவும்... அனைத்தும் கடந்தபிறகு, வாழ்க்கையில் வெற்றியைக் கைப்பற்றிய மனிதன்! ஒரு நூல் கம்பெனியில் பணி. அதைப்பற்றி ராஜன் இவ்வாறு கூறுவான்:
"நான் என்னுடைய சேவையை நூல் கம்பெனிக்கு வழங்குகிறேன். நூல்கள் வெற்றிபெறட்டும்... நீடித்து வாழட்டும்....' சொல்லப் போனால்... மோசமில்லாத சம்பளத்தையும் வாங்குகிறான். "என் அன்பிற்குரிய உலகமே... நீ வருக... உன்னை நான் இறுகத் தழுவுகிறேன்' என்றவொரு முக வெளிப்பாட்டுடன்தான் எப்போதும் ராஜனைப் பார்த்திருக்கிறேன்.
இப்போதும் அந்த முக வெளிப்பாட்டில் மாறுதல் உண்டாகவில்லை. என்னைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டான். வழக்கமான திறந்த சிரிப்புடன் கேட்டான்: "என்ன நண்பா... சுழற்றி விடப்பட்ட தட்டைப்போல இங்கயே கிடந்து சுத்திக்கிட்டு இருக்கே?''
என்னுடைய தற்போதைய நிலையை விளக்கிக் கூறினேன். ராஜனுக்கு ஒரு கவலை... "ஓ... இதுதான் யானையைப்போல இவ்வளவு பெரிய விஷயமா? வா... நம்ம அரண்மனைக்கு வா... நமக்கொரு அமைச்சர் வேணும்னு கொஞ்ச காலமாவே நினைச்சிக்கிட்டிருக் கேன். உன்னை நான் நமக்குப் பிடிச்ச அமைச்சரா நியமிக்கிறேன். உத்தரவை ஏத்துக்கிட்டியா?''
"ஏத்துக்கிடேன்.'' நானும் கூறினேன். அதைத் தொடர்ந்து நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தோம். கம்பெனிக்குச் செல்லும் வரையில் ராஜன் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பான். அன்று வரை வெளிவந்திருக்கும் அனைத்துத் திரைப்படங் களிலும் உள்ள எல்லா பாடல்களும் அவனுக்குத் தெரியும். இனிமேல் வெளிவரவிருக்கும் திரைப்படங் களின் பாடல்களைக் கேட்டாலும் பாடுவான் என்று தோன்றும். அவற்றையெல்லாம் பாடி முடித்து, குளியலும் உணவும் முடிந்து அலுவலகத்திற்குச் செல்வான். திரும்ப வந்தால்... பிறகு ஆளைப் பார்க்கவே முடியாது. எங்கு போகிறான் என்பதையே கண்டு பிடிக்க முடியாது. ஒருநாள் அவன் மொட்டைமாடியிலிருந்து இறங்கி ஓடிவந்து என் தோளில் கையை வைத்தவாறு கேட்டான்:
"ஒரு கேள்வி...''
"கேளு.''
"காகம் நாம சொலறபடி கேக்குமா?''
"என்ன?''
"காகம் இருக்குல்ல... நம்மோட க்ரோ... அவன் சொன்னபடி கேட்பானா?''
"எந்தக் காலத்திலயும் நாம சொல்றதை காகம் கேட்காது.''
"உனக்கு எப்படி தெரியும்?''
"சொல்றபடி நடக்கக்கூடிய உயிரினமில்ல காகம். விஷயம் அதுதான்.''
"அதைக் கேட்கவைக்க நீ முயற்சித்திருக்கிறியா?''
"இல்ல...''
"பிறகு... அனுபவமில்லாத விஷயங்களைப் பத்தி எதுக்கு பேசறே?''
"நீ எதுக்கு லண்டனைப் பத்தி பேசறே? லண்டனைப் பார்த்ததில்லியே?''
அதற்கான பதில் இப்படி இருந்தது.
"காகம் சொல்றபடி நடக்கும். மனசுல வச்சிக்கோ.''
"சொன்னபடி நடக்காது.''
"சொல்றபடி நடக்கும்.''
இவ்வாறு வார்த்தைகள் முற்றின. கூறுகிறபடி காகம் நடக்கும் என்பதற்கு நூறு சான்றுகளை அவன் கூறினான்.
கூறுகிறபடி நடக்காது என்பதற்கு நூற்றியொரு சான்றுகளை நானும் தந்தேன்.
"சொல்றபடி நடக்காம காகம் இருக்காது.'' ராஜன் உறுதியான குரலில் கூறினான்.
"சொல்றபடி நடக்கவே நடக்காது.'' நானும் வாதம் செய்தேன். வாக்குவாதம் நீண்டு, அது ஒரு சண்டையில் சென்று முடிந்திருக்க வேண்டியது. அந்த சமயத்தில் எங்களின் பால்காரி தங்கம்மா கதவைத் தட்டி அழைத்தாள்.
"பால்...''
ராஜன் கதவைத் திறந்தான். பாலை வாங்கி வைத்துவிட்டு அவளிடம் கூறினான்: "பால் கொண்டு வர்றப்போ தினமும் ஒரு பருப்பு வடையும் கொண்டு வரணும்.''
"காசு...?'' அவள் கேட்டாள்.
"நான் தருவேன்.'' -ராஜன்.
"முன்கூட்டியே தரணும்.''
"தங்கம்மா... நீ இப்படி சொன்னதுக்கு என்ன அர்த்தம்? என்மேல நம்பிக்கை இல்லியா?''
"நம்பிக்கைக்கு எந்தவொரு குறையும் இல்ல. ஆனா யாரும் பருப்பு வடையை இலவசமா தரமாட்டாங்க.''
"தட் ஈஸ் நியூஸ்..." ராஜன் தங்கம்மாவையே வெறித்துப் பார்த்தான். தொடர்ந்து எட்டணாவை எடுத்து எறிந்தான்.
"கையில தரக்கூடாதா?'' என்று கேட்டவாறு அவள் எட்டணாவைப் பொறுக்கியெடுத்துப் புரட்டிப்புரட்டிப் பார்த்துப் புன்னகைத்தபோது, நான் ஒரு புதிய திட்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரு பருப்பு வடைக்கு எட்டணா கிடைப்பதாக இருந்தால், ஏன் பருப்பு வடை வியாபாரத்தை ஆரம்பிக்கக் கூடாது?
தங்கம்மா திரும்பிச் செல்ல முயன்றபோது, ராஜன் அழைத்தான்: "தங்கம்மா...''
"என்ன?'' தங்கம்மா திரும்பி நின்றாள். எண்ணெய் மினுமினுத்த அவளுடைய கறுத்த முகம் அப்போது புன்னகையால் பிரகாசித்தது.
"ஒரு கேள்வி...'' -ராஜன்.
"கேளுங்க.''
"தங்கம்மா... நீ பறவைங்களை கூர்ந்து கவனிச்சிருக்கியா?''
"புரியல...''
"கிளிங்களை கூர்ந்து பார்த்திருக்கியான்னு கேக்கறேன்.''
"என்ன?''
"கிளி..?''
"பார்த்திருக்கேனே!''
"வண்ணத்துப் பூச்சி..?''
"பார்த்திருக்கேன்...''
"வாலாட்டி குருவி..?''
"அவனைத் தெரியாது.''
"பொன்வண்டு..?''
"நிறைய பார்த்திருக்கேன்.''
"காகம்..?''
அதற்கு தங்கம்மா பதில் கூறவில்லை. சற்று குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். தொடர்ந்து மெல்லிய விரலை விரித்து, வாயைப் பொத்திக்கொண்டு நின்றாள்.
"தினமும் பார்க்கிறோம்னு அர்த்தம்..." ராஜன் அவளுடைய சிரிப்பிற்கு விளக்கம் கூறிவிட்டுத் தொடர்ந்தான்: "காகம் சொல்றபடி நடக்குமா?''
"நடக்காது.''
"வளைச்சா வளையுமா?''
"வளையாது.''
"ஏன்?''
"காகமா இருக்கறதால...''
"அது பறவைதானே? குஞ்சுகளைக் காப்பாத்துதில்ல? சாப்பிடுதில்ல? இறக்குதில்ல?''
"அதெல்லாம் சரி... ஆனா சொல்றபடி நடக்காதுன்றது மட்டுமே விஷயம்.''
"தங்கம்மா... உனக்கு பறவை அறிவியல்ல அறிவு போதாது. இருந்தாலும்...'' மார்பில் தட்டிக்கொண்டே ராஜன் கூறினான்: "இந்த ராஜன் சொன்னபடி நடக்கவைப்பான். என்ன நினைக்கிறே?''
தங்கம்மா சற்று புன்னகைத்தாள். சற்று நெளிந்தாள். மெல்லிய விரலால் வாயை மூடிக்கொண்டாள். பிறகு... அங்கிருந்து நகர்ந்தாள். ராஜன் திரும்பிப் பார்த்தபோது, கதவில் சாய்ந்தவாறு சீட்டியடித்துக்கொண்டு நின்றிருந்த என்னைப் பார்த்தான். "சொன்னபடி காகம் நடக்காது... அப்படித்தானே?''
அது ஒரு சவாலாக இருந்தது. நான் அந்த சவாலுக்கு பதில் கூறாமல் மீண்டும் சீட்டியடித்தேன். தினந் தோறும் பருப்பு வடையும் பாலும் தங்கம்மாவும் வந்தார்கள்... பருப்பு வடையை எடுத்துக்கொண்டு ராஜன் மொட்டைமாடிக்கு ஓடினான். ராஜன் திரும்பி வரும்வரை தங்கம்மாவின் கறுத்து மினுத்த முகத்தையும் மெல்லிய விரலையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ராஜன் துள்ளும் நெஞ்சுடன் திரும்பிவந்து தங்கம்மா விடம் மெதுவான குரலில் கூறியது காதில் விழுந்தது.
"தங்கம்மா... பெண்ணே... மனசுல வச்சுக்கோ... காகம் சொல்றபடி நடக்குது...''
அவள் மெல்லிய விரலால் வாயைமூடி சிரித்துக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.
மறுநாள் தங்கம்மாவிடம் ராஜன் கேட்டான்: "தங்கம்மா... உனக்கு நம்பிக்கை இல்லியா?''
"இருக்கு... சொல்றபடி காகம் நடக்கட்டும்.''
இவ்வளவும் நடந்தபிறகு, ராஜன் இல்லாத நேரத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மொட்டை மாடிக்குச் சென்றேன். நிறைய குப்பைகள் அங்கு சேர்ந்து காணப்பட்டன. அந்த மொட்டைமாடியின்மீது ஒரு பலாமரம் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது. அதன் கிளையில் ஒரு காகம்... கூர்ந்து கவனித்ததில் அந்த காகம் அங்கொரு கூடு கட்டியிருக்கிறது என்பதையும் நான் கண்டுபிடித்தேன். பிறகு... சுற்றிலுமிருந்த பகுதிகளைப் பார்த்தேன். பலாமரத்திற்குக்கீழே ஒரு வீடு இருந்தது. வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருப்பது யார்? சாட்சாத்... தங்கம்மா. அவள் மெல்லிய விரல்களால் பானை வைக்கக் கூடிய ஒரு தட்டியை உருவாக்கிக் கொண்டிருந்தாள். அந்த கறுத்த முகம் வெயில்பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது. பிறகு... நான் அதிகநேரம் காகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
மறுநாளிலிருந்து நானும் காகத்தைக் கூர்ந்து பார்க்கும் வேலையை ஆரம்பித்தேன்- மதிய வேளையில் ராஜன் இல்லாதபோது. மொத்தத்தில் சுமாரான ஒரு வேலை... காகத்தை கவனித்துக்கொண்டிருப்பது என்று கூறலாம்.
ஒரு நாள் மொட்டைமாடியிலிருந்து நான் இறங்கும் போது ராஜன் மொட்டைமாடிக்கு ஏறிக்கொண்டி ருந்தான். அவன் கண்களை உருட்டி என்னைப் பார்த்துவிட்டுக் கேட்டான்: "இங்க என்னடா..?''
"மொட்டைமாடிக்குப் போனேன்.''
"அவசியம்?''
"காகத்தைப் பார்க்கறதுக்கு....''
"நீ என் காகத்தை அங்கருந்து விரட்டப் பார்க்கற.
அப்படித்தானே? உன்னை நான் அடிச்சுக் கொன்னுடு வேன். ஞாபகத்துல வச்சுக்கோ...''
அடி வாங்கவேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. நான் இறங்கிச் சென்றேன். பிறகு... எப்போதாவது ரகசியமாகச் சென்று சற்று பார்த்துவிட்டு, உடனடியாகத் திரும்ப வந்துவிடுவேன்.
இப்படியே மூன்று மாதங்கள் கடந்தோடின. ஒருநாள் மொட்டைமாடியிலிருந்து இறங்கி வந்தபோது, ராஜனின் நெற்றியிலும் மார்பிலும் காயங்கள்... அவற்றி லிருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை அவன் கையை விரித்துத் துடைத்தான். கையிடுக்கில் வைத்திருந்த டார்ச்சின் கண்ணாடியின்மீதும் ஓரிரண்டு ரத்தத் துளிகள் விழுந்திருந்தன.
"என்னாச்சு?'' நான் பதைபதைப்புடன் கேட்டேன். அப்போது பின்னாலிருந்து தொடர்ந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது பால்காரி தங்கம்மா நின்றிருந்தாள்.
"ஏன் சிரிக்கிறே?'' நான் கேட்டேன்.
"நான் பார்த்தேன்.'' அவள் மெல்லிய விரல்களால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.
"என்ன பார்த்தே?''
"அய்யாவோட முகத்தை காகம் கொத்திப் பிடுங்கிச்சு. காகத்தின் கூட்டை நோக்கி டார்ச் அடிச்சா... பிறகு காகம் பறந்துவந்து கொத்தாதா?''
மீண்டும் தங்கம்மா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். கூட்டமாக மணிகள் குலுங்குவதைப்போல இருந்தது.
"இந்த அளவுக்கு எதுவும் சொல்றதுக்கில்ல.'' ராஜன் கூறினான்: "விருப்பமுள்ள இளம்பெண்கள் விருப்பமுள்ள இளைஞர்களை கிள்ளவும் அடிக்கவும் செய்வாங்க!''
அப்போது தங்கம்மா குலுங்கல் சிரிப்பை சற்று நிறுத்திவிட்டு, லேசாக புன்னகைக்க மட்டும் செய்தாள். நான் எதுவும் கூறவில்லை.
பிறகும் மொட்டைமாடிக்குச் சென்று, காகத்தை சொன்னபடி நடக்கவைக்கும் தொழில் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் தங்கம்மா திடீரென கதவைத் திறந்துகொண்டு வந்து ராஜனிடம் கூறினாள்: "வர்ற திங்கள்கிழமை எனக்கு இருபத்தஞ்சு ரூபாய் தரணும்.''
"அவசரத்துக்குக் காரணம்..?''
"பாலோட விலை...''
"வர்ற திங்கள்கிழமையே வேணுமா?''
"வேணும்.'' சற்று வெட்கத்துடன் தங்கம்மா தொடர்ந்து கூறினாள்: "புதன்கிழமை... என்னோட கல்யாணம்.''
"என்ன?'' ராஜன் பதைபதைத்து விட்டான்.
"என் கல்யாணம்னு சொன்னேன்.'' அவள் அழுத்த மாகக் கூறினாள்.
"தங்கம்மா....'' -ராஜன்.
"என்ன?''
"காகம் கீழ்ப்படிஞ்சி வருது.''
"அது... இனி கீழ்ப்படியாது'' என்று கூறிவிட்டு, பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவள் நடந்தாள்.
ராஜன் பற்களைக் கடிப்பதை நான் பார்த்தேன். அன்று மொட்டைமாடிக்குச் சென்றபோது, அவன் பருப்பு வடை யைக் கொண்டு செல்வில்லை. கொஞ்சம் கற்களைக் கையில் எடுத்தான். நான் பின்னால் பதுங்கிச் சென்றேன்.
அவன் பக்கத்து பலாமரத்தின் மீதிருந்த காகத்தின் கூட்டைநோக்கி கல்லையெறிந்தான். அது எவ்வளவு நேரம் நடைபெற்றதென்று எனக்குத் தெரியாது. இறுதியில் அவன் திரும்பிவந்து என்னிடம் கூறினான்:
"நீ சொன்னது சரி... காகம் எந்தக் காலத்திலும் அனுசரிச்சு
நடக்காது... எந்தக் காலத்திலும்!''
மனிதர்களிடம் அனுசரித்தும், அனுசரிக்காததுமான இரண்டு வகை உயிரினங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால், அதற்கு உயிரியல்ரீதியான அடிப்படை என்ன?
இந்த அளவுக்கு பலமான ஒரு சிந்தனைதான் அப்போது என் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தது.
--------------------------------------------------
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன் "சாவோபா என்ன தவறு செய்தான்?' என்ற கதை மணிப்புரி மொழியில் எழுதப்பட்டது.
இக்கதையை எழுதியவர் யும லேபாம் இபேம் மசாசிங். 1991-ஆம் வருடத்திற் கான தேசிய சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றவர் இவர். மணிப்புரி யின் மண்வாசனையுடன் எழுதப்பட்டிருக் கும் அருமையான கதை இது. அந்த மண்வாசனையை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்தக் கதையை மொழி பெயர்த்திருக்கிறேன்.
"பீருமேட்டிற்கான வழி' என்ற கதையை எழுதியவர் மலையாள நட்சத்திர எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான டி. பத்மநாபன். பீருமேட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மார்ட்டின் என்ற மனிதனையும், அவனுக்கு பல வருடங்களுக்கு முன்பு டி. பத்மநாபன் செய்த மறக்க முடியாத உதவியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. தன் வாழ்க்கையில் என்றோ நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதமுடியுமா? அருமையாக எழுதமுடியும் என்பதை செயல்வடிவில் காட்டியிருக்கிறார் டி. பத்மநாபன். காலவெள்ளம் பாய்ந்தோடுவதையும், மனிதர்களின் வாழ்வில் உண்டாகக்கூடிய மாறுதல்களையும் ஒரு சிறுகதையில் இவ்வளவு சிறப்பாகக் கொண்டுவர முடியுமா? உண்மையிலேயே டி. பத்மநாபன் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அற்புத பாடமிது.
"காகம்' என்ற சிறுகதையை எழுதியவர் மூத்த மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான உறூப். ராஜன், அவனது நண்பன், பால்காரி தங்கம்மா ஆகியோருடன் காகத்தையும் மையக் கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட மாறுபட்ட கதை. சில உயிரினங்கள் மனிதர்களை அனுசரித்தும், சில உயிரினங் கள் மனிதர்களை அனுசரிக்காமலும் இருப்பதென்பது உண்மையிலேயே ஒரு விந்தையான விஷயம்தானே? இதைக் கருவாக வைத்துக் கதை எழுதிய உறூப்பை கட்டாயம் நாம் பாராட்டவேண்டும்.
நான் மொழிபெயர்த்த இந்த மூன்று கதைகளும் உங்களை நிச்சயம் வெவ்வேறு உலகங்களுக்கு கையைப் பற்றி அழைத்துச் செல்லும். நான் விரும்புவதும் அதைத்தான்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்புப் படைப்பு களைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.