மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்’
-என்கிறார் மகாகவி பாரதியார்.
நாம் பெற்றிருக்கும் மனம்தான் விலங்குகளில் இருந்து நம்மை வேறுபடுத்துகிறது. எனினும் வாழ்வில் நம்மைச் சூழும் சிக்கல்களும் பிரச்சினைகளும் நம் மனதை அழுத்துகின்றன. நிலைகுலைய வைக்கின்றன. அதனால் நாம் தடுமாறுகிறோம். பலவீனமாகிறோம். அதனால்தான், மனதில் உறுதி வேண்டும் என்றார் பாரதி.
ஆனாலும் நமக்கு வரும் நெருக்கடிகள், மன அழுத்தத்தை உண்டாக்குகிறதே என்கிறீர்களா? ’அழுத்தத்துக்கு ஆட்பட்ட கரித்துண்டு வைரமாவது போல், உங்கள் மனம் அழுத்தத்திற் கும் நெருக்கடிக்கும் ஆளாகும் போதுதான் வைரமாகிறீர்கள். வெற்றிக்குரியவராக மாறுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் எரிக் தாமஸ்.
மன அழுத்தம்- இந்த வார்த்தையை சொல்லாத வர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த கணிணி யுகம் மன அழுத்த யுகமாகவே பலருக்கும் இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னையின் அழுத்தத்தை விட ஸ்ட்ரெஸ்ஸால் ஏற்படும் பாதிப்பே பலரையும் மகிழ்ச்சியற்றுத் தவிக்கச் செய்கிறது.
வேலை, குடும்பம், பணம், படிப்பு என்று எதை எடுத்தாலும் அன்றாட வாழ்க்கையே அத்தனை நெருக்கடியாக இருக்கும்போது, இதில் எங்கிருந்து மனதில் மகிழ்ச்சி வரும் என்று கேட்பது இயல்பு. நீங்கள் அன்றாடம் செய்யக் கூடிய வேலையை விட அதிகமான வேலையை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், உடன் மூச்சுத் திணறி ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறீர்கள்.
ஏதோ ஒரு தருணத்தில், அலுவலகத்திலோ, படிக்கும் பள்ளியிலோ, அல்லது குடும்பத்தில் அப்பா, அம்மா, கணவன், மனைவி என்று யாராவது ஏதாவது கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுவிட்டால், நெஞ்சு படபடத்து முன் நெற்றியில் வேர்வை பிசுபிசுக்க நாக்குஉலர்ந்து மன கனத்தை உணர்கிறீர்கள். அந்த படபடப்பும் பரபரப்பும் மனதை அழுத்த, எனக்கு ஏதோ செய்கிறதே, ஏன் என் விதி என்னை இவ்வளவு சிரம்ப்படுத்துகிறது? என்று பதைபதைத்து பாதிப்புக்கு உள்ளாகிறீர்கள்.
ஆனால், மன அழுத்தம் உண்மையில் உங்களுக்கு நல்லது தான் செய்யும் என்கிறது அமெரிக்காவில் நடந்த நீண்டகால ஆய்வு ஒன்று. பல்லாயிரம் பேர்களிடம் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவில் ஸ்ட்ரெஸ் ‘நண்பனுக்கு நண்பன், விரோதிக்கு விரோதி’ என்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
நான் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறேன். இது என்னைப் பாதிக்கும் என்று மன நெருக்கடியை ஒரு விரோதி போல் நினைத்துப் படபடக்கும் மனநிலையே உடையவர்களை மட்டுமே அது பாதிக்கிறது, பல நோய்களுக்கும் மூல காரணமாகிறது. மன அழுத்தத்தால் எனக்குப் பாதிப்பில்லை என்று எண்ணக் கூடியவர்களுக்கு அது நன்மையே விளைவிக்கிறது, என்று மன அழுத்தம் பற்றி அந்த ஆய்வு ஆறுதலான புதிய தகவல் தருகிறது.
அதாவது,உண்மையில் உங்களுடைய எதிர்மறை எண்ணங்களே எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எந்த ஒரு வேலைப் பளுவும், பிரச்னைகளும் நேர்மறை எண்ணத்தோடு கையாளப்படும்போது அது உங்கள் செயல் திறனை அதிகப்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை வளப்படுத்தும்.
அதே நேரம், இந்த வேலை எனக்கு நெருக்கடி யாக இருக்கும், இது எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணம் உங்களுக்கு எழுந்தால் நிச்சயம் பாதிப்பும் எழுந்து விடும். சுருக்கமாகச் சொன்னால் மன நெருக்கடியில் இல்லை பாதிப்பு. அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
‘ஜீனோம்’ இயல் வளர்வதற்கு முன்னர் தான் மன அழுத்தம் என்றால் மனதை, உடலை பாதிக்கக் கூடியது என்ற தவறான நம்பிக்கை ஊடுருவி இருந்தது. இன்று டி.என்.ஏ.விலே இருக்கிற லோக்கல் அடாப்டேசன் சிண்ட்ரம் (ப்ர்ஸ்ரீஹப் ஹக்ஹல்ற்ஹற்ண்ர்ய்ள்ஹ்ய்க்ழ்ர்ம்ங்) பற்றித் தெரிய வரும்போது, நம்முடைய ஆழ்மனதின் ஆற்றல் அறியப்படும்போது, நம்முடைய சக்தி நம்முடைய தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப விரிவடையும் தன்மை வாய்ந்தது என்பது உணரப்படுகிறது.
உண்மையில், வேலையின் அளவோ, திடமோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதை நீங்கள் விரும்பி செய்கிறீர்களா, விரும்பாமல் செய்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அது நேர்மறை அழுத்தமாகவும், எதிர்மறை அழுத்தமாகவும் மாறுபடுகிறது. அதைப் பொறுத்தே உங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு வேலையை விரும்பிச் செய்யும் போது அந்த நேர்மறை அழுத்தம் உங்கள்லோக்கல் அடாப்டேசன் சிண்ட்ரத்தை விரிவடைய செய்து, அந்த வேலையை செய்வதற்கான ஆற்றலைத் தந்து விடும். அந்த ஆற்றல் உங்கள் செயல் திறனைக் கூட்டி நீங்கள் வேண்டியதை அடையச் செய்கிறது. அழுத்தமாகவும் நெருக்கடியாகவும் நீங்கள் எண்ணக்கூடிய ஒரு வேலை, நீங்கள் விருப்பத்தோடு செய்யும்போது மகிழ்ச்சி தரக்கூடியதாக மாறி விடுகிறது. நீங்கள் விருப்பமின்றி செய்யும்போது கடினமானதாக உங்களை பாதிக்கக் கூடியதாக உங்களை அழுத்துகிறது. ஆக, கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு உங்கள் மனநிலையை நீங்கள் மாற்றிக் கொண்டால் எந்த சூழ்நிலையையும் மகிழ்ச்சியானதாக மாற்றி விடலாம்.
"துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை'
- என்கிறார் வள்ளுவர். இதன் பொருள், துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றக் களமிறங்குங்கள். அது இன்பமாக முடியும் என்பதாகும்.
இது எப்படி சாத்தியம்?
ஹார்வர்ட் யுனிவெர்சிட்டியில் பல் வேறுவிதமான மாணவர்களிடம் திடீரென்று பரபரவென கேள்விகள் கேட்கப்பட்டது. அவர்கள் நிதானிப்பதற்குள் கேள்விகள் சரமாரியாக வந்து விழுந்தன. சுற்றிலும் பார்வையாளர்களும் ஆய்வாளர்களும் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, கேள்விகளால் திணறி ஒரு பிரிவு மாணவர்கள் முகம் சிவந்து அவமானமாக கூனிக் குறுகி, விழி பிதுங்கி வெலவெலப்பாக நடுங்கிப் போனார்கள். ஆனால் அதே சூழலில் இருந்த மற்றொரு பிரிவு மாணவர்கள் அதிக திறமையோடும், ஆற்றலோடும், எந்த கேள்விகளுக்கும் சமாளிக்கக் கூடிய வல்லமையோடு எல்லா கேள்விகளுக்கும் திறம் பட பதில் சொல்லிக் கைதட்டல்களை அள்ளிச் சென்றார்கள்.
சமூகம் சார்ந்த அழுத்தத்தின் விளைவுகளை அறிய ஹார்வர்ட் மாணவர்களிடம் பல்வேறு சரமாரி யான கேள்விகள் கேட்டு அன்று நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவு அழுத்தத்தின் பல்வேறு இரகசியங்களை உடைக்கிறது. அந்த ஹார்வர்ட் மாணவர்களை ஆராய்ச்சியாளர்கள் இரு பிரிவினராகப் பிரித்து, ஒரு பிரிவினரிடம், உங்களை பல கேள்விகள் கேட்டு பல்வேறுவிதமான மன நெருக்கடிக்கு உட்படுத்துவோம். உங்கள் நெஞ்சு படபடக்கும், உங்கள் முன் நெற்றியில் வியர்வை சுரக்கும், நீங்கள் மூச்சுத் திணறிப் போவீர்கள். ஆனால் புரிந்து கொள்ளுங்கள். உண்மையில், இந்த நெருக்கடியால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உங்கள் படபடக்கும் நெஞ்சமும், உங்கள் மூச்சுத் திணறலும் இந்த பரபர சூழலை சமாளிப்பதற்கேற்ப உங்கள் உடல், உங்களை தயார் படுத்துவதால் ஏற்படுவது.
இது இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடை. இதனால் உங்கள் மூளைக்கு அதிகம் உயிர்வளி எனப்படும் ஆக்ஸிஜன் செலுத்தப் படும், அதன் காரணமாக உங்களால் விரைவாகவும் அதே சமயம் கூர்மையாகவும் சிந்திக்க முடியும். இது கடினமான சூழ்நிலைகளில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக உங்கள் உடல் தன்னிச்சையாக செயல் படுத்தும் நிகழ்வு. அதனால் நீங்கள் நேர்மறை எண்ணத்தோடு இந்தச் சூழலை அணுகுங்கள் என்று விழிப்புணர்ச்சி கொடுக்கப்பட்டது.
அப்படி தயார் செய்து அனுப்பப்பட்ட மாணவர்கள் திடமாகவும் மிகுந்த ஆற்றலோடும் செயல்பட்டனர்.
அப்படி விழிப்புணர்ச்சி கொடுக்கப்படாத மற்றொரு பிரிவு மாணவர்கள் பயத்திலும், படபடப்பிலும் எதிர்மறை எண்ணத்திலும் நடுங்கி பாதிப்புக்கு ஆளானார்கள். ஆக.. பிரச்னையோ, சூழலோ, உங்களுக்கு எந்தக் கெடுதலையும் தராது. உங்கள் மனநிலை நேர்மறையாக இருந்தால் எதையும் சமாளித்து உங்கள் சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றிவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தோடு இருக்கும்போது உங்களுக்கு வேண்டியவர்களையோ, நண்பர்களையோ உங்கள் மனம் தேடிச் செல்லும். அவர்களின் அன்பான வார்த்தைகள் பெரும் ஆறுதலாக இருக்கும். இதற்கு அந்த பரபர நேரத்தில் பிட்யூட்டரி சுரப்பியை சுரக்கச் செய்யும் ஆக்ஜிடோசின் என்ற சுரப்புதான் காரணம்.
இந்த ஆக்சிடோசினுக்கு இன்னொரு பெயரே கேர்லிங் ஹார்மோன். இது நம்மை யாராவது கேர் பண்ண மாட்டார்களா என ஏங்க வைக்கும்.
அப்படி கிடைக்காத போது இன்னும் மன அழுத்தம் அதிகரித்து மனம் மகிழ்ச்சியற்று தவிக்கிறது.
இந்த நேரத்தில் உங்களுக்கு யாருடைய அன்பான கவனிப்போ அக்கறையோ கிடைக்கவில்லை என்றால் தயங்காதீர்கள். உடனே நீங்கள் யாருக்காவது விழிப் புணர்ச்சியோடு அக்கறை எடுத்து உதவி செய்யுங்கள். உங்கள் மனம் அமைதி அடையும். ஏனென்றால் இந்த ஆக்சிடோசின் ஹார்மோனுக்குத் தேவை அக்கறை.’ அது நீங்கள் பெறுவதாகவும் இருக்கலாம்.கொடுப்பதாகவும் இருக்கலாம்.
அன்றொருநாள்.. பர்மாவில் உள் நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் நாட்டை விட்டே தப்பித்தோம் பிழைத்தோம் என்று குடும்பம் குடும்பமாக வெளியேறுகிறார்கள்.
அடர்ந்த காடு, மலை மேடு, புதை மணல் என்பதாக அவர்கள் வேகவேகமாக தாண்டிச் செல்லும் போது, அந்த கூட்டத்தில் இருந்த வயதான தந்தை ஒருவர் மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாமல் தள்ளாடுகிறார். தன்னால் மற்றவர்கள் பாதிக்கப் பட வேண்டாம் என எண்ணிய அவர், தன் மகனை அழைத்து, ‘என்னால் அதிகம் நடக்க முடியவில்லை. என்னால் உங்களுக்கு சிரமம் வேண்டாம். நான் இப்படியே இங்கேயே இருந்து விடுகிறேன். என்னைப் பற்றிக் கவலைப் படாமல் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்’ என்று பிடிவாதமாக சொல்கிறார்.
தந்தையால் நடக்க முடியவில்லை தான். ஆனால் அவரை எப்படி தன்னந்தனியே அந்த நடுக்காட்டில் விட்டுச் செல்வது என்று யோசித்த மகன், தந்தையிடம் தன் மகனை, அவரின் சிறு பேரப் பிள்ளையைக் கொடுத்து, ‘அப்பா, இவனாலும் நடக்க முடியவில்லை. தூக்கிக் கொண்டு போவது எனக்கும் சிரமமாக இருக்கிறது. நீங்கள் இங்கேயே இவனை வைத்துக் கொள்ளுங்கள், இனி, இவன் உங்கள் பொறுப்பு’ என்று தன் மகனை தன் தந்தை வசம் கொடுக்கிறார்.
தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாத அந்த பெரியவர் பேரப் பிள்ளையை மகன் இங்கு விட்டுச் செல்ல போகிறான் என்றவுடன் பதைபதைத்துப் போகிறார். இந்த சிறு பிள்ளையை உன்னால் கூட்டிக் கொண்டு போக முடியவில்லை என்றால், நான் கூட்டி வருகிறேன் என்று சிறுவனை வாரி அனைத்துக் கொண்டு, அவனை பாதுகாக்க வேண்டுமே என உந்துதலோடு, வேகவேகமாக நடந்து, மற்றவர்களுடன் சேர்ந்து நாடு கடக்கிறார்.
இந்த உண்மைக் கதை நமக்கு சொல்வது ஒன்று தான்.
விருப்பமும் பொறுப்பும் இருந்தால் எதுவும் நெருக்கடி இல்லை. இருந்தாலும் அந்த நெருக்கடியால் நன்மையே விளையும். அது உண்மையில் உடலில் திடத்தையும் வேகத்தையும் அளித்து தனக்கு முன் எழும் எந்த சவாலையும் எதிர் கொண்டு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அதை நாம் புரிந்து கொள்ளும்போது, நம் மனநிலை நேர்மறையாக மாறும்போது எந்த சூழ்நிலையும் மகிழ்ச்சியானதாக மாறிவிடுகிறது.