""லொக். லொக்...லொக்...
கொரோனா பாதிப்புகளை தவிர்க்க, காய்ச்சல், இருமல், சுவாசிக்க சிரமம், உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து, குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இருமல் பாதிப்புள்ளவர்கள், கைக்குட்டை அல்லது மருத்துவ முகமூடியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தொடுதல் மூலம் பரவுவதை தவிர்க்க, கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும். கைகளால் மூக்கு, கண்கள், வாய் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதிக்க வேண்டும். அல்லது, 011 23978046 என்ற உதவி மைய தொடர்பு எண்ணை அழைக்க வேண்டும்''’
-நாம் யாரையாவது செல்போனில் அழைக்க விரும்பி, அவர்கள் எண்ணைத் தொடர்பு கொண்டால்... மத்திய சுகதாரத்துறை அமைச்சகத்தின் இதுபோன்ற ரெக்கார்டிங் வாய்ஸ் விளம்பரம் தான் 30 வினாடிகளுக்குக் கேட்கிறது.
மக்களுக்குக் கொரோனா பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவே மத்திய மாநில அரசுகள், மக்கள் வரிப்பணத்தை அள்ளி இறைத்து இது போன்ற விளம்பரங்களைச் செய்துவருகின்றன.
இதற்கிடையே ""இந்த லொக் லொக்...'’ விளம்பரம், எங்களை பயமுறுத்துகிறது. மன நிலையைப் பாதிக்கிறது. அதனால் அதை நீக்கவேண்டும்'' என்ற ரீதியில் பொது நலவழக்கு ஒன்றும் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான்... தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரான ‘"தெர்மாக் கோல்'’புகழ் செல்லூர் ராஜு, கடந்த 28-ந் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அருகில் இருந்த அத்தனை பேரும் முகக்கவசம் அணிந்திருக்க, செல்லூர் ராஜு மட்டும் முகக்கவசம் அணியாமல் அமர்ந்துகொண்டு ""நாம் கொரோனா வோடு வாழப் பழகிக்கனும். நான் அப்படி தான் பழகிக்கிட்டேன். நான் முகக்கவசம் கூட அணியாமல் உங்களோடு பேசிக்கொண்டி ருக்கிறேன்'' என்று, கொஞ்சம் கூட கூச்சமில்லா மல் ஜம்பமடித்தார். சமூக இடைவெளியைக் கடை பிடிக்கக் கூட அவர் முயற்சிக்கவில்லை.
அப்படியென்றால் கொரோனா குறித்த அரசின் உபதேசமெல்லாம் மக்களுக்குத் தானா? இப்படிப் பட்ட அதிமேதாவித் தனத்தால்தான் செல்லூர் ராஜுவே அண்மையில் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி மீண்டார். இதன் பின்னரும் பொறுப்பில் லாமல், "நாம் மீண்டுவிட்டோம். அதனால் இனி நம்மை கொரோனா தாக்காது' என்ற தெனாவெட்டில் அமைச்சர் மக்களிடம் முகக்கவசம் இல்லாமல் விளையாட்டுக் காட்டுகிறார்.
இவர் சொல்வதை நம்பி, மக்கள் முகக் கவசத்தையும் சமூக விலகலையும் கைவிட்டால் என்ன ஆகும்? அவர்கள் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி, துயரத்தைச் சந்திக்க நேரும். அமைச்சருக்கு எவ்வளவு நல்ல எண்ணம்? அவர் மட்டும்தான் பொறுப்பில்லாமல் நடக்கிறாரா? என்றால் ஏறத்தாழ அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். கடந்த வாரம் , நாகை மாவட்டம் முடிகொண்டான் ஆற்றில், புத்தகரம் நீர்த்தேக்க குடி மராமத்துப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதில் சமூக இடைவெளி பற்றிக் கவலைப்படாமல், கைத்தறித்துறை அமைச்சரான ஓ.எஸ்.மணியம் பெரும்கூட்டத்தைக் கூட்டிக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயரும் கலந்துகொண்டார். இவர்கள் கொஞ்சம் கூட கொரோனாத் தொற்று குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை.
இதேபோல் சென்னை வளசரவாக்கத்திலேயே, கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வுசெய்த "போக்குவரத்துத் துறை' எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சமூக விலகல் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
அவர் கையால் வழங்கிய நலத்திட்ட உதவிகளுக்காக, பயனாளிகளை மிக நெருக்கமாக உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் கொடுக்கும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் பொருளுக்காக அப்பாவி மக்கள் கொரோனா ஆபத்தைச் சந்திக்க வேண்டுமா?
அமைச்சர்கள் மட்டும்தான் இப்படியா என்றால், இங்கே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக் கும் எடப்பாடியும் அப்படித்தான் இருக்கிறார். பொது மக்கள் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணம் என்றால் 50 பேர் மட்டும்தான் கலந்துகொள்ளலாம். துக்க காரியம் என்றால் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்று ஒரு பக்கம் அறிவித்துவிட்டு, எடப்பாடி தான் போகிற இடங்களில் எல்லாம் சமூக விலகல் பற்றிக் கவலைப்படாமல் பெரும் கூட்டத்தைக் கூட்டுகிறார்.
கண்ணில் படுகிற விவசாயிகளுக்கு 10 ரூபாய் முகக் கவசத்தைக் கொடுத்து விட்டு சீன் காட்டுகிறார்.
அரசியல் நிகழ்ச்சிகளோ பொது நிகழ்ச்சிகளோ நடத்தக் கூடாது என்று அறிவித்துவிட்டு, அவர் தொடர்ந்து மாவட்டம் மாவட்டமாக டூர் அடிக்கிறார்.
அவரது மேட்டூர் பயணத்தில் கலந்துகொண்ட அவருடைய போட்டோகிராபர் கொரோனாத் தொற்றுக்கு ஆளானார். முதல்வர் அலுவலகத் தனிச் செயலாளராக இருந்த தாமோதரன், கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார்.
இப்படி அவர் அருகிலேயே கொரோனா வைரஸ் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையிலும், அவர் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் நாளொரு நிகழ்ச்சி, பொழுதொரு மேடை என்று மக்களை பெருமளவில் கூட்டி, பயமுறுத்தி வருகிறார். அண்மையில் டெல்டா மாவட்ட சுற்றுபயணத்தை மேற்கொண்ட எடப்பாடிக்கு, கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஏராளமான கட்சியினரைத் திரட்டி வைத்துக்கொண்டு தடபுடலாக வரவேற்பு கொடுத்தார்.
அங்கே அ.தி.மு.க.வினர் முண்டியடித்த போது கூட முதல்வர் எடப்பாடி, அவர்களிடம் சுமூக விலகல் பற்றி அறிவுறுத்தவில்லை. இதே பாணியில் போகிற இடங்களிலெல்லாம் கூட்டத்தைக் கூட்டி, சமூக விலகலை கேள்விக்குறியாக்கி வருகிறார் எடப்பாடி.
இப்படி கொரோனா பற்றிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாதவர்கள்தான் தமிழகத்தை ஏகபோகமாக ஆண்டுகொண்டிருக்கி றார்கள். இவர்களை நம்பித்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
*
கொரோனாவால் வாழ்வாதாரம் முடங்கி விட்டதால், மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி வருகிறார்கள். இதைவிடவும் ஒரு மோசமான நிலைமை இல்லை என்கிற நிலையில் அவர்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் கூலித் தொழிலாளர்களும் அன்றாடங் காய்ச்சிகளும் பாடுகிற பாடு, மிகவும் கொடுமையானது.
மக்கள் இப்படி ஒவொரு நிமிடத்தையும் நகர்த்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் போது, அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த் தால்... வேதனையும் வெட்கக்கேடும் உண்டாகிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், இங்கிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி, கேரளாவைச் சேர்ந்த சௌமியா என்ற பெண்மணி, பேசி வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவே சாட்சி. இந்த வீடியோவையும் நக்கீரன்தான் தமிழக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் அந்த சௌமியா என்ன சொல்லவருகிறார்? அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, தான் மிக நெருக்கம் என்று சொல்லும் அந்தப் பெண்மணி, அவரோடு சேர்ந்து பல்வேறு பிஸ்னஸ் தொடர்பில் இருப்பதாகவும் சொல்கிறார். விரைவில் அமைச்சரைப் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாகவும், அவருக்கு தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் அந்த வீடியோவில் சொல்கிறார்.
மக்கள் வறுமையோடும் கொரோனாவோடும் உயிர்ப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் போது, விஜயபாஸ்கரைப் போன்றவர்கள், தாங்கள் இங்கே பதவியை வைத்து "மஞ்சள் குளித்து', அதன் மூலம் பெற்ற லாபத்தை முதலீடாக்கிக்கொண்டிருக்கிறார் கள். பதவி மூலம் அமைச்சர்கள் சாதித்துக்கொண்டிருப்பது, இப்படிப்பட்ட லாபங்களைத்தான். இன்னொரு அமைச்சரான வேலுமணி, ஈஷா மையத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் மூலம், அடுத்த முதல்வராக, இப்போதே காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறா ராம். அமைச்சர் தங்கமணியோ, லாக்டவுனால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மக்களிடம் இருந்து, மூன்று மடங்கு, நான்கு மடங்கு, மின் கட்டணத்தை வசூலித்து, "எரிகிற வீட்டில் பிடிங்கியதுவரை லாபம்' என்று தன் பங்கிற்கு, மின்துறை மூலம் மக்கள் வாழ்வை இருள வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட பணங்கொத்திக் கழுகுகளிடம் சிக்கிக்கொண்டு சீரழிந்து வருகிறது தமிழகம்.
இந்த நிலையில்தான்... கொரோனாத் தொற்றும், அது தொடர்பான மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை மிரளவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், கொரொனா விடம் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய மோடியும், எடப்பாடியும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஊரடங்கில் முழுத் தளர்வை அறிவித்து, பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்தையும் இப்போது திறந்து விட்டு விட்டார்கள். இதானல் எல்லாப் பக்கமும் மரண பீதி முற்றுகையிட்டிருக்கிறது.
மோடியும் எடப்பாடியும் நினைத்திருந்தால் முதல் இரண்டு மூன்று ஊரடங்கு காலத்திலேயே மக்களின் நடமாட்டத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவம் உள்ளிட்ட உரிய மருந்துகளைக் கொடுத் திருந்தாலே கொரோனா முடிவுக்கு வந்திருக்கும். கொரோனாவின் தாய் பூமியான சீனாவிலேயே கொரோனா எப்போதோ ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஊரடங்குகளில் தளர்வு என்ற பெயரில் பெரிய பெரிய ஓட்டையைப் போட்டு, கொரோனாத் தொற்றை பட்டிதொட்டி வரை பரவ வைத்துவிட்டு, அதன் மூலம் ஆபத்தான பள்ளங்களை உருவாக்கி "இப்போது நீங்கள் சுதந்தரமாக நடமாடலாம்' என்று முழுத் தளர்வை இப்போது அறிவித்துவிட்டார்கள்.
உலகிலேயே இந்தியாவில்தான் நாள் தோறும் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவிக் கொண்டிருக்கிறது என்பது இப்போதைய அச்ச நிலவரம். இதுவரை 35 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏறத்தாழ 65 ஆயிரம் பேரின் உயிரைக் கொரோனாவிடம் தாரை வார்த்திருக்கிறது மோடி அரசு. விளக்கேற்றியும், கைதட்டியும், வெட்கமில்லாமல் மோடி நிகழ்த்தியிருக்கும் சாதனை இதுதான்.
இதேபோல் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே, இதுவரை ஏறத்தாழ நான்கே கால் லட்சம் பேருக்கு தொற்றுப் பரவலை ஏற்படுத்தியிருக்கிறது எடப்பாடி அரசு. தினசரி 7 ஆயிரம் பேர் வரை தொற்றுக்கு ஆளாகிவருகிறார் கள். இதேபோல் ஏறத்தாழ 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை எடப்பாடி அரசு கொரோனா வுக்குத் தாரை வார்த்திருக்கிறது. கொரோனாவை அதிகரிக்கச் செய்வதன் மூலம், அதற்காக ஒதுக்கப் பட்ட நிதியை சுருட்டுவது ஒன்றுதான் அவர்கள் நோக்கம் .முடிந்தவரை சகல விதத்திலும் கொள்ளை அடித்துவிட்டார்கள். டெல்லியிலும் இதே கதைதான். அதனால் தான் இப்போது கொரோனா வுக்கு முழுத் தளர்வு மூலம், திறப்பு விழா நடத்தி விட்டார்கள்.
இப்படி, பார்க்கும் இடங்களில் எல்லாம் நீக்கற கொரோனா நிறைந்திருக்கும் , டேஞ்சரஸ் நிலையில்தான், 30- 8- 2020 அன்று நமது முதலமைச்சர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்…
* நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காத்து, உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அரசு.
* பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.
* வேலை வாய்ப்பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது.
* சென்னையில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்ட நேரத்தில் "நோய்ப்பரவல் கட்டுப்பாட்டிற் குள் உள்ளது' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
* பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது என்கிறார். அதே அறிக்கையில் நான்காவது பத்தியில், ""பொருளாதாரத்தை மீட்டெடுக்க 30-09-2020 வரை ஊரடங்கு நீட்டிப்பு'' என்கிறார்.
* நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில், அறிக்கையின் கடைசி பத்தியில் ""மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று கடைசியில் கையும் விரித்து விட்டார். முடிவாக அதே அறிக்கையில்...
* "நீங்களே கொரோனாவிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என்று, சகல கதவுகளையும் முழுத்தளர்வு என்று திறந்து வைத்துவிட்டார்கள். இதனால் கொஞ்ச நஞ்ச தடையும் விலக்கப்பட்டு விட்டதால், இனி கொரோனா ஜோதியில் முழுமையாகச் சங்கமிக்கப் போகிறது நாடு.
தெருவுக்குத் தெரு கொரோனா என்ற நிலை மாறி... இனி வீட்டுக்கு வீடு கொரோனா...
அங்கங்கே மரணம் என்ற பேரழிவு நிலை உருவாகப் போகிறது. நிலைமை கைமீறிப் போகும் நாளில், இந்தக் கையாளாகாதவர்கள் மீண்டும் முழுமையான லாக்டவுன் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
கொடுங்கோலர்கள் ஆண்டால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு வள்ளுவர்...
‘இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்’
-என்பார். வறுமையைக் கூட சமாளித்துவிடலாம். கொடுங்கோலர்கள் ஆண்டால், வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பத்தை அனுபவிக்க வேண்டிவரும் என்பது இதன் பொருள். அதைத்தான் இப்போது நாடு அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது.
பெரும் கவலையோடு...
நக்கீரன்கோபால்