ப்பல்லாம் வீடுகள்ல திண்ண இருக்கும். அது ஏன்னா வழிப்போக்கர்கள் யாராவது,எண்ணெ விக்க வர்றவங்க, தயிர் விக்க வர்றவங்க, மாங்கா விக்க வர்றவங்க, கிளி ஜோசியம் பாக்க வர்றவங்க, இப்படி யாராவது வந்தா... அந்த திண்ணையில உட்கார்ந்து இளைப்பாறிட்டுப் போவாங்க.

அப்புறம் அந்த திண்ணை தட்டியில துணி காயப்போடுறது, அப்புறம் திண்ணையில கெடக்குற கொடக்கல்லுல இட்லிக்கு மாவாட்டுறது... அப்புறம் அம்மிக்கல்லு எல்லாம் கூட இந்த திண்ணையிலதான் கெடக்கும்.

அப்புறம் பொண்ணுங்க ஏதாவது வயசுக்கு வந்தாலும் அந்தத் திண்ணையிலதான் பச்சை தென்னங்கீத்து பின்னி, அதுல மறவாடங்கட்டி 16 நாளு உட்கார வைப்பாங்க. அப்புறம் நாலு பேரு உட்கார்ந்து பஞ்சாயத்து பேசறதினாலும் அதுல உட்கார்ந்துதான் பேசுவாங்க. இப்படி திண்ண ரொம்பவும் பயனுள்ளதாக இருந்துச்சு.

ரெண்டு வயசு, மூணு வயசுல இந்த திண்ணைய புடிச்சிகிட்டுதான் நான் நடப்பேன். இந்த திண்ணையை புடிச்சு நடந்து நடந்துதான் இப்ப நான் சென்னை வந்து அடைஞ்சிருக்கேன்.அங்க தொடங்குன பயணம்தான் இப்ப உலக நாடுகள் முழுக்க சுத்திவர வைக்கிது.

Advertisment

அப்ப எல்லாம் ஒப்பாரிப் பாட்டு நிறைய கேட்டிருக்கேன். வீட்ல ஒரு தலமான் போயிட்டா, ஐயோ தலமான் போயிட்டானே அப்படின்னு வருத்தப்பட்டு விவசாயத்தையும், அந்த தலமானையும் சேர்த்து ஒப்பாரிப் பாட்டு பாடுவாங்க.

’நான் பாவக்கா பந்தலிட்டன்

பாவக்கா பந்தலிட்டேன்

Advertisment

அந்தப் பாவக்காவ இப்ப

பாழும் காத்து வந்து

பாதியிலே சாச்சுதம்மா’

இன்னொன்னு கணவன் இறந்துட்டா பொம்பளைங்க வைக்கிற ஒப்பாரி ரொம்பவும் கொடுமையா இருக்கும். அவங்க ராத்திரி ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சா விடியிற வரைக்கும் ஒப்பாரி வச்சு அழுது தீத்துடுவாங்க. எல்லாரும் வந்து கேப்பாங்க, மணி என்னடி ஆகுது எல்லாமே முடிஞ்சுபோச்சு. எதுக்கு இப்படி தனியா புலம்பித் தவிக்கிறே, அப்படின்னு கேப்பாங்க.

அவளுக்கு ”அந்த” ஆசை வந்துடும். அந்த ஆசையில அவ என்ன பண்றதுன்னு தெரியாம சொல்லி சொல்லி அழுவா. இப்ப மாதிரி காலகட்டம் அப்ப இல்ல. இப்ப என்ன ஒரு செல்ல பாக்குறது. வேற யார்கிட்டயும் போன்ல பேசுறது. அப்படின்னு எல்லாத்துக்குமே வழிவகைகள் இருக்கு.

ஆனா அந்த காலத்துல அப்படி எதையுமே சீக்கிரமா பண்ணிடவும் முடியாது. அது உடனே நாளைக்கு தீயா பத்திக்கும். பிரச்சனை ஆயிடும். ஆபத்துல முடிஞ்சிடும். பஞ்சாயத்து ஆயிடும். அவங்க சந்தோஷத்தை எப்படி நிவர்த்தி பண்றது அப்படின்னு தெரியாம அந்த மன வருத்தத்தை குமுறிக் குமுறி ராத்திரி பூரா ஒப்பாரியிலேயே அவர் வாங்கிக் கொடுத்ததையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுவாங்க.

நீ நாலணா சீப்பு வாங்கித் தந்து

என்ன தலைவாரி விட வெச்சி

கட்டுன மஞ்ச கயிறு போச்சுதடா என் சாமி…

நான் மல்லிகைப்பூ வைக்கயில

நான் மஞ்ச பூசி குளிக்கையிலே

நான் வெறும் பொணமா நடக்குறேனே

என்ன விட்டுப் போனியே ஏன் சாமி

இப்படின்னு விடிய விடிய விடிய விடிய கைய கோத்துக்கிட்டு போனது, கரும்புக் காட்டுல நடந்தது. பஸ்ஸில ஏறிப் போனது. மாட்டு வண்டியில் போனது. ஏரியில ஒன்னா துணி தொவச்சி குளிச்சது. பைப்ல தண்ணி அடிச்சு குடத்தைத் தூக்கிட்டு வர்றதுன்னு ஆரம்பிச்சி, கூடமாட இருந்ததிலிருந்து …எல்லாத்தையும் சொல்லிமுடிச்சிடுவாங்க.

பக்கத்து வீட்ல படுத்து இருக்கிறவங்க எல்லாம் என்ன செய்வாங்கன்னா, 'ஏடி விடுடி. இந்த நேரம் சாம நேரம்டி. பாருடி நாயா கத்துதுடி, நரி கூவுதடி.’ அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அதையும் கேட்கமாட்டாங்க அப்பதான் இன்னும் ஆம்ம் க்கும்., ஆம்ம் க்கும் அப்படின்னு மூக்கைச் சிந்தி சேல முந்தானை எடுத்து தொடப்பாங்க. இப்படி சொல்லித் சொல்லி ராத்திரி முச்சூடும் அழுதாலும் காலையில எந்திரிச்சி கொல்ல வேலைக்குப் போவாங்க.

இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன் நல்லதோ கெட்டதோ, நம்ம சுத்தி இருக்கிற ஓசைகளும், நாதங்களும் அந்த காலத்துல இசையா காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அந்த ஓசைகள்தான் நான் பாட்டுப் பாட காரணமா இருந்துச்சு.

எண்பதுகளில் பிறந்ததுனால நிறைய டெக்னாலஜி எல்லாம் வந்துருச்சு. இல்லன்னா நம்ம இன்னும் நிறைய கத்துக்கிட்டு இளையராஜா சார் மாதிரி நிறைய விஷயங்களை உள்ள கொண்டுவந்து செஞ்சிருக்கலாமோ அப்படின்னு அப்பைக்கு அப்ப தோணும்.

நம்மளும் 40கள்ல 50கள்ல பொறந்து இருக்கக்கூடாதா அப்படின்னு தோணும்?

இப்ப இருக்கிற டெக்னாலஜிக்கு ஈடு கொடுக்க முடியாம, நான் இப்போ ஒரு கிராமியப் பாடகராவே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.

அப்பவே பொறந்திருந்தா நாம இன்னும் நிறைய இன்ஸ்ட்ரூமெண்ட் கத்துக்கிட்டு, நிறைய பண்ணி அப்படியே வந்து கடைசியில நம்மளும் ஒரு பெரிய பிம்பமா மாறி இருக்கலாமோ அப்படின்னு சில நேரங்களில் தோணும்.

vv

சரி கடவுள் என்ன நினைக்கிறாரோ, எப்ப நம்மள உருவாக்கணும்னு நினைக்கிறாரோ, அப்பதான் எதுவா இருந்தாலும் நடக்கும்... அப்படி சொல்லி என்னை நானே தேத்திக்குவேன்.

இப்படியா ஒப்பாரி கேட்கிறது. குடுகுடுப்பைக் காரனுடைய குரலைக் கேட்கிறது. அப்புறம் அந்த பூம்பூம் மாட்டுக்காரன் உருமி வாசிக்கிறத கேட்கிறது. அந்த உருமி சவுண்டோட அவன் பாடுற பாட்ட கேக்குறது.

அப்புறம் வந்து இந்த கோடாங்கி குறி சொல்றவன் அவன் பாடுறத கேக்கிறது, இதையெல்லாம் அப்படியே காதுல வாங்கி வாங்கித்தான் அதை அப்படி பாட ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் தான் பாட்டுப் பாடணும் அப்படிங்கிற ஆர்வம் எனக்கு வந்துச்சு. அதுக்கப்புறம்தான் ஏதாவது பள்ளிக்கூடத்துல நிகழ்ச்சிகளில் பாடணும் அப்படிங்கற மிகப்பெரிய ஆர்வம் வந்துச்சு.

யாராவது தாலாட்டுப்பாட்டு பாடுனாலும் அதைக் கவனமாக் கேட்பேன்.

ஆராரோ ஆரிராரோ

என் கண்ணே ஆராரோ ஆரிரரோ

அந்த மாமன் அடிச்சாரோ

என் கண்ணே மல்லிகைப்பூ செண்டாலே

அந்த அத்தை அடிச்சாரோ

என் கண்ணே அந்த அரளிப்பூ செண்டாலே

அதையும் பாடிப் பாடிப் பாப்பேன்.

விளையாடப் போகும்போதெல்லாம் பாட்டு வந்து என் உதட்டுல ஒட்டிக்கும்.

அப்பல்லாம் பொழுது போக்குறதுக்கும் நெறைய வழிவகை இருந்துச்சு. பசங்ககூட கம்பு ஒடிக்கப் போறது. முந்திரிப் பழம் பறிக்கப் போறது. அதுக்கப்புறம் நவாப் பழம் பறிக்கப் போறது. புளியம்பழம் பறிச்சு கடைத் தெருவில விக்கிறது. அப்புறம் முந்திரித் தொழும்பு பறிக்கிறது. வேப்பம்பழம் பொறுக்கிக்கிட்டு வந்து மிதிச்சு அந்த கொட்டைய விக்கிறது.

அப்புறம் காஞ்சி போன எள்ளு கொள்ளு, சங்காயத்தை அரிஞ்சுகிட்டு வந்து அத மாட்டுக்குத் தீனியா போடறது. அப்புறம் வயல்ல நெல்லு பொறுக்குறது. வீட்டு வாசலை மொழுவறதுக்கும், ராட்டி தட்டறதுக்கும் சாணம் அள்ளிக்கிட்டு வர்றது. இப்படி பொழுது போறதே தெரியாது. அப்ப நான் பாடுற பாட்டுதான் எனக்குத் தொணையா இருக்கும்.

சமயத்துல அப்பாகிட்ட பைசா இல்லைன்னா அம்மா களை வெட்டிக்கிட்டு வர்ற காச வச்சு பள்ளிக்கூடத்துக்கு எதுக்காச்சும் பீஸ் கட்டணம்னா கட்றது.

அதுல பாத்தீங்கன்னா காலையில களை, மத்தியானம் களை, அந்திக்களை சாயங்காலம் களை அப்படின்னு μப்ட் μப்டா களவெட்டப் போவும் அம்மா.

அதுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு அப்பாவுக்கு திரும்ப வேலை கிடைக்குது. மறுபடியும் அப்பா என்.எல்.சி. எம்ப்ளாயா ஆகிறார்.

அதுக்கப்புறம்தான் முதல் முதல்ல வீட்டுக்கு கரண்ட் எடுக்குறாங்க. டி.வி. வாங்குகிறாங்க. அப்போல்லாம் பிளாக் அண்ட் ஒயிட் ஓனிடா டிவி ரொம்ப பேமஸ். அப்புறம் கிரைண்டர், டிவிஎஸ் 50 அப்படின்னு ஊர்ல இப்பதான் நாங்க ஓரளவு வசதியை அனுபவிக்கிறவங்களா ஆகுறோம். அப்படியே போயிட்டு இருக்கு வாழ்க்கை.

அப்பா,அப்ப ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவார். தன்னுடைய மனைவி கஷ்டப்பட்டு நமக்கு வேலை வாங்கிக் கொடுத்து இருக்கா. இனிமேலும் நம்ம திருந்தி வாழனும் அப்படின்ட்டு அப்பா திருந்த ஆரம்பிச்சாரு. அவர் திருந்தறதுக்கு அம்மாவோட எதிர்பார்ப்பு இல்லாத கடின உழைப்புதான் காரணமா இருந்துச்சு. முதல்ல சைக்கிள்ல வேலைக்குப் போனாரு. அப்புறம் டி.வி.எஸ். 50ல வேலைக்குப் போனாரு. இப்பதான் நான் எட்டாவது பள்ளிக்கூடத்தில் சேர்றேன்.

அப்பல்லாம் மாமரம்தான் எங்களுக்கு ஸ்கூல். அதாவது ஒரு கிளாசுக்கு ஒரு மாமரம். ஆறாவதுன்னா ஒரு மாமரம். ஏழாவதுன்னா ஒரு மாமரம். எட்டாவதுன்னா ஒரு மாமரம். அந்த மாமரத்துல முக்கோணம் மாதிரி ஒரு ஸ்டாண்ட் வச்சி, அதுல கருப்பு போர்டு வெச்சு வகுப்பு எடுப்பாங்க. மழை பெஞ்சா வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். ஏன்னா எங்களுக்கு வகுப்பறைன்னே எதுவும் கிடையாது.

ஜெய்பீம் படம் வந்ததே... அதுல வரும் மனிதர்கள் யாருன்னா,எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற குறவர்கள்தான். அது எங்க பக்கம் நடந்த கதை.

சாமிக்கண்னு அப்படிங்குறவரு நகையைத் திருடிட்டார் அப்படின்னு சொல்லிட்டு காமாபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிச்சி அவர கொன்னுடுறாங்க. பாம்பு பிடிக்க வீட்டுக்குப் போகும்போது நகையைத் திருடிட்டாரு அப்படின்னு கேஸ் போடுறாங்க. இதுதான் அந்த படத்தோட கதைக் கரு.

இதப்போல எங்க கதையை படமா எடுத்தாலும் அது சக்கப் போடு போடும்.அவ்வளவு அனுபவங்கள் எங்க வாழ்க்கைல இருக்கு.ஒன்னும் இல்ல, ஒரு சின்ன பிரச்சினையில் அப்பா மாட்டிக்கிறாரு. அவருக்கு வேலை போயிடுச்சு. அவருக்கு வேலை வாங்குறதுக்கு, அம்மா எப்படி போராடி அந்த வேலையை வாங்கினாங்க. அதுக்கப்புறம் அப்பாவுக்கு எப்படி வேலை கிடைச்சுது? உடனே இந்தக் குடும்பம் எப்படி சந்தோசமா மாறுச்சு..? வளந்துச்சு?. அப்பா எப்படி திருந்தினாரு? இதுவே ஒரு திரைக்கதைதான். இத வச்சு அருமையா ஒரு படம்கூட பண்ணலாம்.

எலிபெண்ட் விஸ்பரர் அப்படின்னு ஒரு படம் எடுத்தாங்க. அதாவது முதுமலைத் காட்டில் யானை வளர்க்கிற தம்பதிகளை வைத்து அந்த படம் எடுக்கப்பட்டது. இன்னைக்கு ஆஸ்கார் விருது வாங்கிடுச்சில்ல. அது என்ன வாழ்க்கையின் வித்தியாச அனுபவக்கதை தானே?

சரி நம்ம கதைக்கு வருவோம். அதாவது அந்த மாமரத்தடியில் இருக்கும் வகுப்பறை போர்டை அழிக்கறதுக்கு நாங்க கோவக்கா தழையைத்தான் பயன்படுத்துவோம். அந்தத் தழைய பறிச்சுக்கிட்டு வந்து, கையால கசக்கி, அந்த சாறை எடுத்து அந்த கரும்பலகையில தடவுனா கரும்பலகை அப்படியே கன்னங்கரேர்ன்னு ஆயிடும்.

அந்த கரும்பலகையில, வகுப்புக்கு வருகை தந்தோர், வராதோர், நாள், கிழமை, இன்னைக்கு என்ன பாடம்ங்கிற தலைப்பு, அதுக்கு முன்னாடியே அதுல ஒரு திருக்குறள்ன்னு பலதையும் எழுதி இருப்போம்.

இதுல நம்ம கிட்ட ஜாமெட்ரி பாக்ஸ் இருக்கணும். நோட்டு புத்தகம் வச்சிருக்கணும், காக்கி கால் சட்டை, மேல் சட்டை போட்டு இருக்கனும். இப்படிதான் வாழ்க்கை ஓடுச்சு.

இதுக்கிடையில் சில விளையாட்டுப் போட்டி, சில பாட்டுப் போட்டி இதெல்லாம் நடக்கும். அப்புறம் இலக்கிய மன்ற விழா, வருசம் முடியறதுக்கு முன்னாடியே ஆண்டு விழா, அப்படின்னு ஒவ்வொரு வருசமும் கோலாகலமா இருக்கும்.

நான் ஒண்ணாவதுல இருந்து அஞ்சாவது படிக்கிற வரைக்கும் ரமேஷ் அப்படின்னு ஒரு பையன் லீடரா இருந்தான். அவனை கூழையன் கூழையன் அப்படின்னு கூப்பிடுவோம்.

கூழையன் அண்ணனுக்கு விரல் நசுங்கி இருக்கும்.அவங்க அம்மா நெல் குத்துன நேரத்தில் அதைத் தள்ளி விடும்போது, உலக்கை தவறுதலா கைல பட்டு,ரமேμன் ஒரு விரல் போயிடுச்சு. அதனாலதான் அவனை கூழையன் அப்படின்னு கூப்பிடுவோம். அவன் ஆளு நல்லா உயரமா இருப்பான். அவங்க அம்மா மாதிரி ரொம்ப போல்டா பேசுவான். அதனாலதான் அவன் லீடர்.

அதுக்கப்புறம் சதீஷ்ன்னு ஒரு பையன். அவன் வந்து பார்த்தோம்னா பிறந்ததிலிருந்து கடைசி வரைக்கும் கஷ்டம்னா என்னன்னே தெரியாதவன். இவங்க எல்லாம் யாருன்னா எங்க சித்தப்பா பசங்க. பெரியப்பா பசங்க. அப்புறம் எங்க தாத்தாவுக்கு வீரபாண்டின்னு ஒரு பையன். அவனுடைய பட்டப் பெயர் தங்கம். அப்புறம் கோவிந்தராசு இவங்க எல்லாருமே பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னுடைய தோஸ்துங்க.

அப்பல்லாம் கூடையில மண்பானை வச்சு, அதுல தயிர் வித்துக்கிட்டு வருவாங்க. அது தடதட தடதடன்னு ததும்பும். அப்படியெ கமகமன்னு இருக்கும். அந்தத் தயிரை சாப்பிட்டோம்னா 200 வருஷம் வாழலாம்.

அந்தத் தயிர சோத்துல போட்டுப் பிசைஞ்சு, கப்புல வச்சு கொடுப்பாங்க. மேல கொஞ்சூண்டு இந்த அட மாங்கா ஊறுகா, இல்லன்னா ரெண்டு மோர் மிளகா, இல்லன்னா வறுத்த பட்ட மிளகாய், அது இல்லன்னா கொத்தமல்லி தழையும் புளியும் வச்சு அரைச்ச துவையல்.அதுவும் இல்லன்னா புளியும் கருவேப்பிலையும் வைச்சு அரைச்ச ஊறுகா.. இப்படி ஏதாவது ஒன்னு அந்த தயிர் சாதத்துக்கு அம்மா ஊறுகாயா வச்சுக் குடுக்கும். என்னைக்காவது அத்தி பூத்த மாதிரி புளிச்ச கீரையும் கொடுப்பாங்க.

இன்னைக்கு சொல்றாங்க புளிச்ச கீரை மாதிரி உலகத்துல சத்துள்ள கீரை எதுவுமே கிடையாது அப்படின்னு. அதை தின்னா அயன் சத்துங்கிறான், எலும்பு சத்துங்கிறான், மூட்டு சத்துங்கிறான், முக்கோண சத்துங்குறான், மூலம் வாதம் எல்லாத்துக்குமே அதைத் தின்னுட்டா போதும், உலகத்துல எத்தனை வருஷம் வாழ போறோமுன்னு உனக்கே தெரியாது அப்படிங்கிறான்.

புளிச்சக்கீரையை பறிச்சிட்டு வந்து தண்ணியில போட்டு அலசனும்.ஏன்னா மண்ணா இருக்கும். மண் சட்டியில கொஞ்சம் எண்ணை ஊத்தி, கொஞ்சம் வெந்தயம், கடுகு, ஒரு நாலு பட்டமொளகா, ஒரு அஞ்சு பல்லு பூண்டு போட்டு தாளிச்சு, அதுக்கு அப்புறம் அலசுன கீரைய போட்டு நல்லா வேகவிட்டு, வெந்தோனையே மத்தால நல்லா கடைஞ்சி, சோத்துக்கு தொட்டுக்கிட்டு சாப்பிட்டா ஆகா என்னா சுவையா இருக்கும் தெரியுமா? ஐயோ அந்த புளிச்சகீரையோட புளிப்பு இப்ப நெனைச்சாக்கூட நாக்குல எச்சில் ஊறுதுண்ணே.

அப்ப வந்து பாத்தீங்கன்னா அம்மிக்கல்லு, கொடக்கல்லு, நெல் குத்த உரலு, ஒலக்கை இதையெல்லாம் அரைக்கிறதுக்கு பயன்படுத்துவோம்.

நெல் குத்தும்போது பாத்தீங்கன்னா ரெண்டு பேரும் சேர்ந்து மாத்து ஒலக்க போடுவாங்க எப்படின்னா, ஒருத்தவங்க ஒரு உலக்கை போடுவாங்க. அவங்க அந்த உலக்கை எடுக்கும் போது இன்னொருத்தவங்க அவங்க உரல்ல ஒலக்கைய போடுவாங்க. இப்படி மாத்தி மாத்தி நெல்ல குத்தி அரிசியை எடுப்பாங்க. அத கரெக்டா அந்த டைமிங்ல கையாள தள்ளிவிட்டு அந்த உலக்கையை குத்துவாங்க அடடா உலகத்துல எவ்வளவு மிμன் கண்டுபிடித்தாலும் இந்த கைக்குத்தல் பக்குவம் எத்தனை பேருக்கு வரும். டைமிங்ல கரெக்டா தள்ளி கரெக்டா ஒலக்க போடணும். இல்லன்னா கை போயிடும். கை விரல் போயிடும்.

அதே மாதிரி பார்த்தீங்கன்னா அந்த அம்மியை அரைக்கும் போது முதல்ல புளியை வச்சி, கொஞ்சம் உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை போட்டு தண்ணிய ஊத்தி முதல்ல அரைப்பாங்க. அரைச்சிட்டு கொஞ்சமா பட்ட மிளகாய் வைத்து நசுக்கி அரைச்சி, அப்படியே தொட்டு நாக்குல தடவுவாங்க. எத்தனை சைடிஷ் வந்தாலும் இதுக்கு இணையா எதையாவது சொல்ல முடியுமா?

அந்த அம்மி கல்லுல கொஞ்சம் பழைய சோத்தை புழிஞ்சு போட்டு பெரட்டி உருட்டி சாப்பிட்டா அய்யய்யயோ முடிஞ்சு போச்சுங்க வாழ்க்கை. அத தின்னுட்டு அப்படியே அந்த சந்தோசத்துல தூங்குனா, அதுவும் தண்ணி தெளிச்ச வாசல்ல சாக்கு போட்டோ, இல்லைன்னா பாய் போட்டோ, இல்லைன்னா வெறும் தரையிலயோ இல்லைன்னா துண்டை விரிச்சுப் போட்டும் படுப்பாங்க. சில பேரு மணல் மோடு இருந்துச்சுன்னா அதுல போய் படுத்துப்பாங்க.

இப்படி தூங்கி எழுந்திருச்சா காலையில நாலு மணி அஞ்சு மணிக்கெல்லாம் கொக்கரக்கோன்னு கோழி கூவும்போது எனக்கு உடம்பு சரியில்ல அப்படின்னு ஒருத்தனும் சொல்ல மாட்டான். சோம்பலா இருக்குன்னு எவனும் சொல்ல மாட்டான்.

இன்னும் கொஞ்சம் தூங்கிட்டுப் போறேன்னு சொல்ல மாட்டான். அவன் பாட்டுக்கு எந்திருச்சு, அவன் பாட்டுக்கு துண்ட எடுத்து தலப்பா கட்டிக்கிட்டு, கலப்பையைத் தூக்கி தோள்ல வச்சுக்கிட்டு ரெண்டு மாட்ட ஓட்டிக்கிட்டு, வேப்பங்குச்சியை ஒடிச்சு பல்லு விளக்கிட்டே அவன் பாட்டுக்கு நேரா கொல்லைக்குப் போயிடுவான். ரெண்டு வேப்பங் கொழுந்தை பறிச்சு வாயில போட்டு மென்னுக்கிட்டே வயல்ல வேல பாக்க ஆரம்பிச்சுடுவான். அப்பவும் கிராமத்துக்காரங்க காதுல குயிலும் பறவைகளும் பாடுற பாட்டுதான் கேட்கும். வயலுக்குப் போனா ஓடைகளும் பாடும்.இதெல்லாம் கூட எனக்கு பாட்டைச் சொல்லிக் கொடுத்துச்சு.

(வண்டி ஓடும்)