உன் பிள்ளைக்கு கையில அருவா பட்டுட்டா கூட உசுர விட்டுடுவியே அம்மா. இப்படி என் ராமுவ கொன்னுட்டீங்களே! என் உசுர நான் எங்க போய் தேடுவேன்” -அப்படின்னு ஓ… ன்னு அழுதேன்.
அப்ப அம்மா சொன்னுச்சு, “என்னப்பா பண்றது. அப்பாவ ஜெயில்ல போட்டுட்டாங்க. கைல காசு இல்ல. எப்படி பொழப்பு நடத்தப் போறோமுன்னு திக்கு தெச தெரியல. கண்ண கட்டி காட்டுல விட்டமாதிரி இருந்துச்சு. இந்த புள்ளங்கள ஒத்த பொம்பளையா நின்னு எப்படி காப்பாத்த போறோமுன்னு தெகைச்சுப் போயி நின்னப்பதான், ஆபத்துக்கு பாவமில்லையேன்னு, அந்த ஒரு ஆட்டை, புத்திகெட்டு வித்துப்புட்டேன்” .
“சரி வித்த. அதை ஏன் மாணிக்கத்து மாமா வெட்னாரு?” அப்படின்னு அழுதேன்.
“அப்புறம் என்னப்பா பண்றது? கெடாவ வாங்கறவங்க வளக்கணும்னா வாங்குவாங்க. அதை வெட்டுனா அவங்களுக்கு நாலு காசு வருமேன்னுதானே வாங்குவாங்க’ அப்படின் னுச்சு அம்மா.
எனக்கு அழுகை தொண்டையைக் கட்டுது. அம்மாகிட்ட நான் கத்திக் கதறுறேன். “ராமுவ இப்படி எல்லாரும் சேர்ந்து கொன்னுட்டீங் களேம்மா” அப்படின்னு அழுதேன்.
அப்ப எனக்கு வயசு 13 இருக்கும். நான் அம்மாகிட்ட சொன்னேன், “நான் ஏம்புள்ள மாதிரி அதை வளர்த்தேன். என் புள்ளையை வெட்டி எல்லாரும் கூறு போட்டுட்டுட் டாங்களே .”
அம்மா என் பக்கத்துல வந்து, “அழாதடா கண்ணா. நீ ராமு மேல இவ்வளவு பாசம் வச்சிருப்பேன்னு எனக்குத் தெரியாம போச்சே.
இல்லைன்னா பஞ்சத்துல செத்தாலும் சாவோமே அப்படின்னு நான் அதை வித்திருக்க மாட்டேன்” அப்படின்னு சேல முந்தானை எடுத்து என் கண்ணைத் தொடச்சிவிடுது.
அம்மாவுக்கும் கண்ணு கலங்குது.
ஒவ்வொரு ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஒரு வாசம் இருக்கும். அந்த வாசம் அது பக்கத்துல போனா... நமக்கு நல்லாத் தெரியும்.
அன்னைக்கு வீடே கறிக் குழம்பு வாசம். எனக்கு மட்டும் என் ராமுவோட வாசம் உசுருக்குள்ள போயி என்னென்னமோ பண்ணுச்சு. அப்படியே திண்ணையில சாஞ்சு உக்காந்துட்டேன். அப்புறம் அப்படியே கீழே சுருண்டு போய்ப் படுத்துத் தூங்கிட்டேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா வந்து எழுப்பிவிட்டுச்சு, ’வாடா தம்பி சாப்பிடலாம் அப்படின்னு’ எனக்கும் பசி தாங்கல. எப்போதுமே கறிக் குழம்புண்ணா பக்கத்துத் தோட்டத்தில் போய் வாழை இலை பறிச்சுக்கிட்டு வந்து அன்னைக்கு மட்டும் இலையில சாப்பிடுவோம். பசியில நானும் போய் உட்கார்ந்தேன். அம்மா இலையில சோறு போட்டுச்சு. அந்த சோத்துல அம்மா கறிக் குழம்பு ஊத்தி இருந்துச்சி. அதுல ராமுவோட சதை துண்டு துண்டா வெட்டிக் கெடக்கு. அதைப் பார்த்த உடனே என் கண்ணுல இருந்து தார தாரையா தண்ணி வடியுது.
இலையில் இருந்து எந்திரிச்சேன்.
அன்னைக்கு முடிவு பண்ணினேன். இனிமே நாம எந்த உயிரையும் கொன்னு சாப்பிடக் கூடாது அப்படின்னு. என் ராமு என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து நான் மாமிசங்கள் சாப்பிடுவதையே விட்டுட்டேன்.
மனுசன் மட்டும் தனக்கு அப்பா அம்மா வேணும், பிள்ளைங்க வேணும், யாரும் சாகாம நம்ம கூடவே இருக்கணும் அப்படின்னு நினைக் கிறான். ஆனால் ஆடு, மாடுகளும், கோழிக் குஞ்சுகளும், பறவைகளும், விலங்குகளும் அப்படி நினைக்காதா என்ன? இந்த மனுசன் அதுங்கள விட்டு வச்சாதான் என்னா? மத்த உயிரினங்கள் பசியாறுற மாதிரி, மனுசன் பசியாற ஏதோ புல்லோ பூண்டோ, செடியோ, தழையோ கிடைக்காமலா போயிடும்.
அப்படின்னு நினைச்சிக்கிட்டேன்.
நாமதான் இப்படி இருக்கோம்னா, நாய் மட்டும் என்ன சும்மாவா இருந்துச்சு. அப்பா ஆசை ஆசையா வளர்த்த ரெண்டு கிளிய, எங்க வீட்டு நாய் லபக்கு லபக்குனு கடிச்சு, ஏய் ஏய்ன்னு சத்தம் போட்டு துரத்திகிட்டு ஓடிப் போயி புடிக்கறதுக்குள்ள தூக்கிக்கிட்டு ஓடிப்போய் அந்த ஜெகநாதன் மாமா வீட்டு சந்துல, முழுசா முழுங்கிடிச்சி.
நாய் வளர்த்தோம். புறா வளர்த்தோம். ஆனா எல்லாத்துக்குமே பாதி ஆயுசுதான். ஏன்னா மனுசன் மாதிரி, எதையாவது ஒன்ன, ஏதாவது ஒன்னு அடிச்சு சாப்டுக்கிட்டுதான் இருக்கு.
இதைத்தான் மருதகாசி அப்பவே பாடி வெச்சாரு…
மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது மாறுவதெப்போ தீருவதெப்போ தம்பிப்பயலே விலங்குகள்தான் ஒன்ன ஒன்னு அடிச்சு சாப்பிடு துன்னா, மனுசன் உலகத்துல உள்ள ஒரு உசுரயும் விடுறது இல்ல. தன்னோட சுயநலத்துக் காக எல்லா உசுரையும் கொன்னு திங்கிறான். இங்க உள்ளவன் ஆட்டு மாட்ட அடிச்சு சாப்பிடுறான்னா, சைனாவுல உள்ளவன் கரப்பான் பூச்சி, பல்லியெல் லாம் சாப்பிடுறான். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் அப்படிங்குறோம். ஆனா இன்னொருத்தன் அந்த பாம்பையே அடிச்சு சாப்பிடுறான். யப்பா மனுசன் பொல்லாத வம்ப்பா. இதுல வேற அறிவு ஆறு இருக்குன்னு வேற சொல்லிக்குறானுவ. அதனால மனுசன பாத்தா ஏதோ எமனை பாத்தா மாதிரி எல்லா உசுரும் பயந்து ஓடுது.
இதையெல்லாம் பாத்ததுக்கு அப்புறம்தான் தோணுச்சு, நாம எதுக்கு இதுங்கல வளக்கணும். அதுங்க பாட்டுக்க அது வாழ்க்கைய எங்கேயாவது வாழ்ந் துட்டுப் போகட்டுமே, நம்மள மாதிரி அப்பா அம்மா கூட, அக்கா தங்கச்சிகூட சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே அப்படின்னு தோணுச்சு.. அதுக்கப்புறம் தான், நாம இனிமே எந்த விலங்குகளையும், பறவை களையும் புடிச்சுகிட்டு வந்து வளக்க கூடாது அப்படின்னு முடிவு பண்ணினேன்.
நாமளும் விலங்குகள் மாதிரி இந்த பூமி மேல தற்காலிகமாக வந்து போற ஒரு பிராணி அவ்வளவு தான். நம்மளுக்கு இருக்கிற உரிமை மத்த உயிரினங் களுக்கும் இந்த மண்ணு மேல இருக்குல்ல. ஆனா மனுஷன் மட்டும் ஏன் மற்ற உயிருங்கள வளக்கணும், அடிக்கணும், சாப்பிடணுமுன்னு நினைக்கிறான். அது தப்பு.
அப்புறம் அப்பாவைக் கூப்பிட்டு, எதுக்குப்பா இதையெல்லாம் நாம வளர்க்கப் போவ, அதை ஏதாவது சாப்பிட்டு, அந்த பாவம் நம்மள வந்து சேரணுமா அப்படின்னு சொன்னேன். அதிலிருந்து அப்பாவும் எந்த விலங்கையோ, பறவையோ வீட்டுக்கு பிடித்துக்கொண்டு வர்றது இல்ல.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.
அப்படின்னு வள்ளுவர் சொன்னமாதிரி கிளிகளையும், முயலையும் கூண்டுக்குள்ள போட்டு வளத்ததினால்தானோ என்னவோ, அந்த பாவம் இன்னைக்கு அப்பாவ கூட்டிட்டு போயி ஜெயிலுக் குள்ள போட்டுட்டுச்சி.
முன்னெல்லாம் அப்பஞ் செஞ்ச பாவம் புள்ளைய போய்ச் சேரும், பேரப் புள்ளைங்களைச் போய்ச் சேரும் அப்படிம்பாங்க. இப்ப எல்லாம் அவங்க அவங்க செய்ற பாவத்துக்கான தண்டனையை அவங்க அவங் களே அனுபவிக்கிற மாதிரி ஆயிடுச்சு. காலம் அப்படி சுருங்கிப் போச்சு.
அப்பா பாட்டுக்கு போய் ஜெயில்ல உட்கார்ந்துகிட்டாரு.
அம்மாதான் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆபீசுக்குமா அலையா அலையுது. அம்மா ஆபீஸ்ல போய் கேட்டுச்சு.
என்னோட புருஷனுக்கு வேலை இல்லாததால் பிள்ளைகள் எல்லாம் பசிப்பட்டினியில கெடக்கு ஐயா. எனக்காவது ஏதாவது ஒரு வேலை கொடுங்க ஐயா அப்படின்னு கேட்டுச்சு.
மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காத அம்மா வுக்கு, என்ன பெரிய ஆபிஸர் வேலையா கொடுத்திடப் போறாங்க.
மண்ணு தட்டு தூக்குற வேலை இருக்கு செய்றீங் களா அப்படின்னு அம்மாவை கேட்டிருக்காங்க. அம்மா வும் ஏதோ கஞ்சி கூழுக்கு ஆகுமேன்னு சரின்னு சொல்லிட்டு வந்துருச்சு.
காலையிலேயே வீடு வாசல், தோட்டம் தொறவு எல்லாம் கூட்டி, சாணி தெளிச்சு ஒரு வாளியில கஞ்சியோ, கூழோ எடுத்துக்கிட்டு கிளம்புற அம்மா வர்றதுக்கு ராத்திரி இருட்டு ஆயிடும்.
வரும்போதே அரிசிய மடியில கட்டிக்கிட்டு, வெறக தலையில சுமந்துகிட்டு, ஒரு கொடத்துல தண்ணிய தூக்கி இடுப்புல வச்சுக்கிட்டு அம்மா வரும். ஆறு மணி ஆச்சுன்னாலே அப்பெல்லாம் இருட்டாயிடும். அப்ப எல்லாம் ஒன்பது மணி அப்படின்னாலே நடுநிசி அப்படின்னு சொல்லுவாங்க.
நான் பொறந்த காலகட்டத்தில எல்லாம் கிராமங் கள்ல தண்ணியே கிடைக்காது. அப்படி தண்ணி புடிக்கணும்னா எங்கேயாவது மோட்டார் போட்டாங் கன்னா அங்க போயி தண்ணி புடிச்சுக்கலாம். இல்லன்னா எங்கேயாவது குளம் குட்டையை தேடித்தான் போகணும். இல்லன்னா ஊத்து தோண்டி காத்திருக்கனும். நாலு கணக்கா உக்காந்து இருந்தாகூட அதுல தண்ணி ஊறி வந்தாதான் உண்டு.
அப்பல்லாம் மண்பானைதான் அதிகமா புழக்கத்தில இருந்துச்சி, இல்லன்னா ஈயக் குண்டான், பித்தல சொம்பு இதெல்லாம் வச்சிருப்பாங்க. ஏதோ ரெண்டு பானையும், குண்டானையும் எடுத்துக்கிட்டு விடிய காத்தால நாலு மணிக்கு போனா ஏரியில தண்ணீர் தெளிஞ்சு இருக்கும். அதுல கொடத்தால மேல இருக்குற தூசிய விலக்கிவிட்டு கொடத்த முக்கி அதுல தண்ணி புடிச்சுகிட்டு வருவாங்க. இந்த தண்ணிய பாத்திரம் விளக்குறதுக்கு, அப்புறம் மத்த தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்திக்கலாம். குடிக்கிறதுக்குப் பயன்படுத்த முடியாது. ஏன்னா சுத்து பக்கத்தில உள்ள சனங்க எல்லாம் பாய் துவைக்கிறதுக்கும், குளிக்கிறதுக்கும், துணி துவைக்கிறதுக்கும், ஆடுமாட்டைக் குளிப்பாட்டறதுக்கும்... இப்படி சகலத்துக்கும் பயன்படுத்துவாங்க. அதனால அந்த தண்ணிய குடிக்க முடியாது.
அம்மாவுக்கு எங்கெல்லாம் ஊத்து தோண்டி இருக்கு அப்படின்னு தெரியும். அதனால அவங்க வேலைக்குப் போயிட்டு வரும்போது காட்டுக்குள்ள வர்ற வழியிலேயே தண்ணி புடிச்சுகிட்டு, அந்த காட்டுல ஏதாவது காஞ்ச விறகை ஒடிச்சு எடுத்து கட்டிக்கிட்டு வருவாங்க. ஊருல நெறைய பேரு வேலைக்குப் போக மாட்டாங்க. அம்மாவோட நாலஞ்சு பேரு, இல்லன்னா அம்மா மட்டும் தனியாவே வேலைக்குப் போயிட்டு ஒன்பது பத்து மணிக்கு ராத்திரில தனியாவே வீட்டுக்கு வரும். வந்துச்சுன்னா வந்தவுடனே எங்க வயிற்றை தான் பாக்கும். எங்க வயிறு எல்லாம் அப்படியே தொவண்டு போய் கெடக்கும்.
வரும்போது கடையில ஆட்டுக்கால் உண்ட ஏதாவது கிடைச்சதுன்னா வாங்கிட்டு வரும். அதை நானும் என்னோட அண்ணனும் சாப்பிடுவோம்.
அதுக்கப்புறம் அம்மா சோறு வடிக்கும். எங்களுக்கு ஆளுக்கு கொஞ்சம் சோறு கொடுத்துட்டு, அம்மா அந்த சோறு வடிச்ச சூடு கஞ்சியில உப்பு போட்டு குடிச்சிட்டு படுத்துக்கும். மிச்ச சோறு இருந்துச்சுன்னா அதுல தண்ணி ஊத்தி வச்சுரும். ஏன்னா அடுத்தநாள் காலையில பிள்ளைகளுக்கு சோறு வேணுமே அப்படின்னு. அந்த பழைய சோறுதான் எங்களுக்கு அடுத்த நாளு காலை சாப்பாடு. அதிலிருந்து அம்மா ஒரு சோத்து பருக்கையைக் கூட சாப்பிடாது.
நாலஞ்சு வருஷம் இப்படியே போச்சு ஒரு வழியா அப்பாவ ஜெயில்ல இருந்து விடுவிக்கிறாங்க.
வந்தவரு வந்து சும்மாவா இருந்தாரு?
மன உளைச்சல் அப்படின்னு சொல்லிட்டு டெய்லி குடிக்க ஆரம்பிக்கிறாரு. சம்பந்தமே இல்லாம அம்மாவ போட்டு அடிப்பாரு.
அப்பாவை பெருசா ஒன்னும் குறையும் சொல்லமுடியாது. அவர் நல்ல மனிதர்தான். அவருக்கு ஒரு மன விரக்தி, மனவேதனை, மன கஷ்டம் நம்மள எல்லாரும் இப்படி ஏமாத்திட்டாங்களே… இதை யாருகிட்ட போயி சொல்றது அப்படின்னு, வர்ற கோபத்தை அம்மாகிட்டதான் காட்டுவாரு.
வருசா வருசம் ஊர் திருவிழா நடக்கும்போது சாமி தெருவை சுத்தி வரும். அப்ப கரகாட்டம், வாண வேடிக்கை இதெல்லாம் நடக்கும். திருவிழாவுக்கு மறு நாள் மஞ்ச வெளையாட்டு. அடுத்த நாளில் இருந்து தெருக்கூத்து, நாடகம் இதெல்லாம்தான் இருக்கும்.
அப்போ கர்ணமோட்சமுன்னு ஒரு நாடகம் நடக்கும். அப்புறம் கட்ட கட்டி நாடகம், அரிச்சந்திரன் நாடகம், சம்பூர்ண மகாயனம், இது இல்லாம தெருக்கூத்து எல்லாம் நடக்கும்.
கோயில்ல சாமி கும்பிடும்போது சுண்டல் வெச்சு கும்பிடுவாங்க. அந்த சுண்டல் வாங்குறதுக்காகவே நாங்க கோவிலுக்குப் போவோம். அந்த சுண்டலை வாங்கிட்டு வந்து வீட்டில கொடுத்து ஆளுக்கு கொஞ்சமா சாப்பிடுவோம்.
விளையாட்டுன்னு பாத்தா நொண்டி விளையாடு றது, கபடி, கோக்கோ கண்ணாமூச்சி விளையாட்டு, அப்புறம் உப்பாரி விளையாடுறது. திருடன் போலீஸ் விளையாட்டு, பஸ் மாதிரி கயித்த இடுப்புல கட்டி அந்த மூலையில அவன் இருப்பான், பின்னாடி நாங்க ஒரு பத்து பதினஞ்சு பேரு பேப்பர் எல்லாம் கிழிச்சு டிக்கெட் மாதிரி வச்சுக்கிட்டு, வாங்க வாங்க பஸ் வந்துருச்சு அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஓடுவோம். பஸ் ஓட்டுறோம் அப்படிங்கற பேர்ல ஊரெல்லாம் சுத்தவேண்டியது. அப்புறம் மரத்துல ஊஞ்சல் கட்டி ஊஞ்சல் ஆடுறது.
ராட்டினம் ஆடுறது. அந்த சமயத்துல குச்சி மிட்டாய், பஞ்சு மிட்டாய் இதெல்லாம் வாங்கிச் சாப்பிடுறது.
அப்புறம் கிளி ஜோசியம் பார்க்க வர்றவங்க, கரடி தாயத்து கட்டறது, குடு குடுப்பைக்காரன் வர்றது, பூனை பிடிக்கிறவன் வர்றது இதெல்லாம்தான் எங்களுக்கு பொழுதுபோக்கு.
திருவிழா காலங்கள்ல ஸ்லோ சைக்கிள், கோலப் போட்டி, சடை பின்னுற போட்டி, கும்மி அடிக்கிறது, குலவை போடுறது, அப்புறம் வட்டமடித்துப் பாடுறது, நாலு பேரு கிராஸ் கிராஸா உக்காந்து நாலு பேரு பாதத்த ஒன்னா சேத்து பாட்டுப் பாடறது.
காயே கருப்பாங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா ஊரே புளியங்கா உப்பு வச்ச நெல்லிக்கா கேட்டுக்கறவங்க எல்லாம் கேட்டுக்கலாம் அப்படின்னு சொல்லுவாங்க. இவங்கிட்டதான் குச்சி இருக்குன்னு சொல்லுவாங்க. இல்லைன்னா அவனுக்கிட்ட குச்சி இருக்குன்னு சொல்வாங்க.
அவங்கிட்ட குச்சி இல்லன்னா அவன் அவுட்.
அதுக்கப்புறம் மணல நீட்டா குவிச்சு அதுக்குள்ள குச்சியை வச்சி இரண்டு கையும் கோர்த்து அந்த மணல கையாள மூடனும். அதுல குச்சி இருந்ததுனா ஜெயிச்சுட்டாங்கன்னு அர்த்தம். குச்சி இல்லன்னா தோத்துட்டாங்க இப்படி கிச்சு கிச்சு தாம்பூலம் விளையாட்டு விளையாடுறது. அப்புறம் பம்பரம் ஆடுறது. கொம்பு வச்சுக்கிட்டு அடிக்கிறது. சைக்கிள் டயர உருட்டிக்கிட்டே ஓடுறது. 3 குழி விளையாடுறது. தாயம் விளையாடுறது. இதெல்லாம்தான் அந்தக் காலத்து பிள்ளைகளோட தேசிய விளையாட்டு....
(வண்டி ஓடும்)