யித்துப் பூச்சிக்கு தஞ்சாவூராம் பூண்டு அப்படின்னு ஒரு செடி உண்டு. அதோட இலை கருவேப்பிலை மாதிரி சின்னதா இருக்கும். அதோட விதை கொட்டமுத்து (அதாவது ஆமணக்கு) விதை மாதிரியே சின்னதா இருக்கும். அந்த இலையை பறிச்சி அம்மியில நல்லா அரைச்சு, ஒரு நெல்லி−க் காய் சைசுக்கு காலையில வெறும் வயித்துல, வாயில போட்டு முழுங்கிடனும். அது கொஞ்சம் கசப்பா இருக்கும். அதுக்கு கொஞ்சம் அரிசியை வாயில போட்டு மென்னு சாப்பிட்டோம்னா அந்தக் கசப்பு பெருசா ஒன்னும் தெரியாது.

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு தடவை வயிற்றால போகும். மறுபடியும் வயிற்றால போச்சுன்னா ஒரு டம்ளர் மோர் குடிச்சோம்னா போறது படக்குனு நின்னுடும். அதுக்கப்புறம் ஒரு வருசத்துக்கு வயித்துல பூச்சியே வராது.

ஆடுங்க இந்த தஞ்சாவூராம் பூண்ட விரும்பி விரும்பிச் சாப்பிடும்.

ஒரு தடவ நான் எங்க ஆயாவ கேட்டேன், “ஏன் ஆயா ஆடு, மாடு, கோழி எல்லாம் நாம அடிச்சு சாப்பிடுறோமே. அதெல்லாம் பாவமில்லையான்”னு. அதுக்கு ஆயா நல்லா ஒரு கதை சொன்னிச்சு.

Advertisment

ஆடு, மாடு, கோழி எல்லாம் இலை, தழை எல்லாம் சாப்பிடும். சாப்பிடும்போது மருத்துவ குணம் உள்ள இலைகளையும் சேர்த்துச் சாப்பிடும். அதனால ஆடு மாடு கோழிங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கும். எந்த ஆடு மாடு கோழியும் டாக்டர்கிட்ட போறது இல்ல. அதுங்களுக்கு தெரியறதுகூட நமக்குத் தெரியறது இல்ல. அந்த இலையை போய் நாம பறிச்சு சாப்பிட முடியாது. எந்த இலைய சாப்பிடனுமுன்னும் நமக்குத் தெரியாது. நமக்கு தெரிஞ்சது எல்லாம் அரக்கீர, மொளைக்கீரை, புளிச்சக்கீரை, பொன்னாங் கண்ணி கீரை இவ்வளவுதான்.

கல்யாண முருங்கை இலைய பறிச்சு கையில வச்சு கசக்கி ஒரு 5 மில்லி சாறு எடுத்து தண்ணியில கலந்து காலையில வெறும் வயித்துல குடிச்சோம்னா பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான குறைகள் எல்லாமே சரியா போயிடும். பல நாள் மாதவிலக்கு பிரச்சினை இருக்குற பிள்ளைகளுக்கு இது குடிச்சதுக்கு அப்புறம் மாதவிலக்கு பிரச்சினையே இல்லாம போயிடும். இது நம்ம எத்தனை பேருக்குத் தெரியும். நோய் வராம இருக்குறதுக்கு எந்த இலைய சாப்பிடனுமுன்னு ஆடு மாடுங்களுக்கு சரியா தெரியும்.

அதனாலதான் வைரமுத்து ஐயா ”ஐந்து பெரிது ஆறு சிறிது” அப்படின்னு ஒரு கவிதை எழுதினாரு.

Advertisment

சீ மிருகமே!

என்று

மனிதனைத் திட்டாதே

மனிதனே

எந்த விலங்கும்

இரைப்பைக்கு மேலே

இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை.

எங்கேனும்

தொப்பைக் கிளியோ

தொப்பை முயலோ பார்த்ததுண்டா?

எந்த பறவையும்

கூடு கட்டி

வாடகைக்கு விடுவதில்லை

எந்த விலங்கும்

தேவையற்ற நிலம்

திருடுவதில்லை

கவனி மனிதனே!

கூட்டு வாழ்க்கை இன்னும்

குலையாதிருப்பது

காட்டுக்குள்தான்

கர்ப்ப வாசனை

கண்டு கொண்டால்

காளை பசுவைச்

சேர்வதில்லை

ஒருவனுக்கொருத்தி

உனக்கு வார்த்தை

புறாவுக்கு வாழ்க்கை

பூகம்பம் வருகுதெனில்

அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்

பறவைகள்

மாண்டால்

மானின் தோல் ஆசனம்

மயி−லின் தோகை விசிறி

யானையின் பல் அலங்காரம்

ஒட்டகத்தின் எலும்பு ஆபரணம்

நீ மாண்டால்

சிலரை

நெருப்பே நிராகரிக்கும்

என்பதால்தானே

புதைக்கவே பழகினோம்

ஒன்று கேட்கிறேன்

எல்லா விலங்கும்

மனிதனுக்குப் பாலூட்டும்

எவளேனும் ஒரு தாய்

விலங்குக்குப் பாலூட்டியதுண்டா?

சீ மிருகமே!

என்று

மனிதனைத் திட்டாதே

மனிதனே

கொஞ்சம்பொறு

காட்டுக்குள் என்ன சத்தம்

ஏதோ ஒரு மிருகம்

இன்னொரு மிருகத்தை

ஏசுகிறது

சீ மனிதனே!

என்று ஒரு கவிதை எழுதியிருப்பார். ஐந்து தான் பெரியது என்பதற்கு இதைவிட ஆதாரம் என்ன தேவை இருக்கிறது

மனிதன் ஒரு ஒட்டுண்ணி. அவனால எதையுமே சார்ந்திராமல் வாழவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. தான் தனித்து வாழ்ந்திடமுடியாது என்பது தெரிந்தும் மனிதனிடம் அகங்காரமும் ஆணவமும் தலைவிரித்து ஆடுகிறது.

இதத்தான் நம்ம கவிஞர் மருத காசி ஒரு பாட்டுல எழுதி இருப்பாரு

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே

அது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே

இது தகாதுன்னு எடுத்துத் சொல்லி-யும் புரியலே

dss

அதாலே,

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே

அது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

அதனால நாம இந்த பூமியில இன்னொன்ன நம்பித்தான் பொழப்ப நடத்தனுங்குறத தெளிவா புரிஞ்சுக்கணும்.

அதனால ஆயா என்ன சொன்னுச்சுன்னா இந்த இலை தழை எல்லாம் நாம காட்டுக்குள்ள போயி சாப்பிடமுடியாது. அதனால அது சாப்பிடுற ஆடு, மாடு, கோழி இது எல்லாத்தையும் நாம சாப்பிட்டோம்னா, அந்த மாமிசத்தில் இருக்கிற எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைச்சிடும். அதனாலதான் நாம ஆடு, மாடு, கோழி எல்லாம் சாப்பிடுறோம் அப்படின்னு பாட்டி சொல்லி-ச்சு.

இருந்தாலும் பாட்டி சொன்னத என்னால ஏத்துக்க முடியல. உயிருன்னா எல்லாம் உயிரு தானே?

சொந்தபந்தம் சாகும்போது ஒப்பாரி வைக்கிற நாம, மத்த உயிரினங்கள மட்டும் கொன்னு சாப்பிடுவது எந்த விதத்தில நியாயம். ஒரு ஆடு செத்துப் போன அதோட புள்ளைங்க அம்மாவ காணு முன்னு தேடாதா? அப்பாவ காணுமுன்னு தேடாதா?

தம்பி தங்கச்சிய காணுமுன்னு தேடாதா? மனுசனுக்கு உள்ள உணர்வு மத்த விலங்குகளுக்கும் இருக்கத்தானே செய்யுது.

எங்க வீட்ல ஒரு 12 மாடு, ஏழு எட்டு ஆடு இருந்துச்சு. அதுல ஒரு ஆட்டுக்குட்டிக்கு ராமுன்னு பேரு. அது என்மேல ரொம்ப பாசமா இருக்கும். நான் அதுக்கு போய் தலையெல்லாம் சொறிஞ்சுவிடுவேன். முதுகெல்லாம் தடவிக் கொடுப்பேன். உன்னிய எடுத்து விடுவேன். உன்னி அப்படிங்கறது ஆடு, மாடு முடி உள்ளார கருப்பா தோள்ல கடிச்சுட்டு இருக்கும். ஆட்டு மாட்டோட ரத்தத்தை அது உறிஞ்சி குடிக்கும்.

மாடு குளிப்பாட்ட போகும்போது அந்த உன்னிய எடுத்துவிட்டோம்னா மீனுங்க வந்து லபக்கு லபக்குனு சாப்டுட்டுப் போவும். மாடுகளைக் குளிப்பாட்டுற மாதிரி ஆடுகளை குளிப்பாட்டுற பழக்கம் கிடையாது. ஏன்னா அது ஈரத்தைத் தாங்காது. குளிர்ல ரொம்ப நடுங்க ஆரம்பிச்சுரும். அதனால ஆடுகளை ரொம்ப குளிப்பாட்ட மாட்டாங்க. அது எப்ப தண்ணியில நனையுமுன்னா மேச்சலுக்கு போயிட்டு வரும்போது மழை பெஞ்சா அப்ப முழுசா நெனையும். இல்லைன்னா அத வெட்ட போறப்ப அதுக்கு மாலை போட்டு, ஒரு குடம் தண்ணி எடுத்து மேல ஊத்தி கற்பூரம் காட்டுவாங்க அப்ப கொஞ்சம் அரையும் குறையுமா நனையும்.

நான் ராமுவ பாசம் பாசமா வளர்த்தேன். நான் உட்கார்ந்து இருந்தேன்னா அது என் மடியில் வந்து படுத்துக்கும். நான் அதைத் தடவி கொடுக்க தடவிக் கொடுக்க அப்படியே மடியிலேயே தூங்கும். என்னைவிட என் மேல அது அதிகமா பாசம் வச்சிருந்துச்சு. அது வளர்ந்து ஆளாச்சு எனக்கு மாரளவுக்கு வந்துடுச்சு.

நான் எங்கேயாவது போயிட்டு வந்தா ஆட்டுக் கொட்டாயில் போயி ராமுவ பாத்துட்டுதான் வீட்டுக்குப் போவேன்.

அப்பா ஜெயிலுக்குப் போனதுக்கு அப்புறம் கையில எதுவும் காசு பெயரல. காசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால ஆட்டை மாட்டை எதையாவது வித்து பொழப்பு நடத்தலாமா அப்படின்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

ஒரு நாள் நான் பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். தோட்டத்துக்கு போனேன். ஆடு மாடு எல்லாம் கட்டி இருந்துச்சு. ராமுவ காணும். என்ன ஆச்சு எங்க போயிருக்கும் அப்படின்னு பக்கத்து வீட்டுத் தோட்டத்தில எல்லாம் போய்ப் பார்த்தேன். ஒவ்வொரு ஆட்டு மாட்டுக்கும் மொளைக் குச்சி அடிச்சி, அதுல கயித்தைக் கட்டி, ஆட்டு கழுத்துலயோ மாட்டு கழுத்துலயோ ஒரு முடிச்சுப் போட்டு கட்டிடுவோம். மேச்சலுக்குப் போகும்போது அந்த கயித்தை அவுத்துவிட்டோம்னா போதும். நான் வீட்டுக்கு வந்து தோட்டத்துல போய் பார்க்கும்போது ராமு கட்டிருந்த அந்த மொளைக்குச்சியில கயிறு மட்டும் இருந்துச்சு. ராமுவ காணும். யார் வீட்டு வயல்லயாவது மேஞ்சு யாராவது பட்டியில கிட்டியில கொண்டுகிட்டு போயி அடைச்சிட்டாங்களோ, என்னமோ தெரியலையே அப்படின்னு புலம்பிக்கிட்டே தெருவுல போய் பட்டியில எல்லாம் பாத்தேன். அங்கேயும் ராமுவ காணும்.

என்ன ஆச்சுன்னு தெரியலையேன்னு சொல்லி-ட்டு புலம்பிக்கிட்டே வீட்டுக்கு போனேன். போய் அம்மா கிட்ட கேட்டேன். எங்கம்மா ராமுவ காணுமுன்னு கேட்டேன். அம்மா சொன்னுச்சு அடுத்த வாரம் பொங்கல் வருதுல செலவுக்கு காசு இல்ல ராசா. அதான் அந்த மாணிக்கத்து அண்ணங்கிட்ட சொன்னேன். 1200 ரூவா காசு கொடுத்துட்டுப் புடிச்சுகிட்டுப் போயிடுச்சு. மணி 12 இருக்கும் மாணிக்கத்தண்ணன் ஒரு கிலோ கறிய தூக்கிட்டு ஓடிவந்துச்சி. ஆடு கொடுத்தவங்களுக்கு ஒரு கிலோ கறி எனாமா குடுக்குறது பழக்கமாம். அதான் எடுத்துக்கிட்டு வந்தேன் அப்படின்னுச்சி. அதைத்தான் கண்ணு குழம்பு வைச்சிருக்கேன். போய் கைகால் கழுவிகிட்டு வந்து சாப்பிடு அப்படின்னுச்சி அம்மா. எனக்கு அழுக தொண்டை கட்டுது. அம்மா நான் ராமுவ ஆசை ஆசையா வளத்தேன். அதைப் போய் வித்து இப்படி வெட்டிப் புட்டீங்களே…

உன் பிள்ளைக்கு கையில அருவா பட்டுட்டா கூட உசுர விட்டுடுவியே அம்மா. இப்ப என் ராமுவ கொன்னுட்டீங்களே! ஏன் உசுர நான் இப்ப எங்க போய் தேடுவேன்.

அப்படின்னு ஓ…ன்னு அழுதேன்.