ஏங்க வச்ச அரிசிச் சோறு சில நாட்களில் அம்மா வேலைக்குப் போயிட்டு ராத்திரி ஏழு எட்டு மணிக்குதான் வீட்டுக்கு வரும். அம்மாவுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்ல மண்ணு தூக்குற வேலை. ஒரு நாளைக்கு சம்பளமுன்னு பாத்தா அப்ப 6 ரூவா கெடைக்கும். அதுலதான் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய், மல்லி, இதெல்லாம் வாங்கிக்கணும்.
ஒரு கிலோ டி.கே. நாயன் அரிசி 2 ரூவா. பொன்னி அரிசி 4 ரூவா. டி. கே. நாயன் அரிசி குண்டு குண்டா, பழுப்பும், செகப்பும் கலந்த மாதிரி "செம்மண்" கலர்ல இருக்கும். சோறு ஆக்கறதுக்கு முன்னாடி அரிசியை மூணு நாலு தடவ நல்லா தண்ணிய விட்டுக் கழுவனும்.
அதுக்கப்புறம்தான் அரிசியை உலையில போடனும். நல்லா கழுவுலேன்னா சோத்துல ஒரு மாதிரி ’கப்பு’ வாடை வரும். குழம்ப அதுல போட்டுப் பிசைஞ்சோம்னா, குழம்பும், சோறும் ஒன்னோடு ஒன்னு ஒட்டாது. அந்த சோறு ஒரு மாதிரி கொழகொழன்னு இருக்கும். ஒரு வாய் அள்ளி வச்சோம்னா சோத்தை முழுங்க முடியாது. சோறு, பெருசு பெருசா இருக்கும். வேற வழி இல்ல. டி.கே. நாயன் அரிசிதான் விலை கம்மி.
ரேஷன் கடையில கொடுக்கிற அரிசியில சமைக்கிற சோறு...
அது ஒரு மாதிரி களிம்பு வாசனை வரும். இல்லன்னா தண்ணி தேங்கி கிடக்கிற குட்டையில ஒரு வாடை வருமுல்ல, அது மாதிரியான ஒரு வாடையா இருக்கும். என்ன வாடை அடிச்சாலும், நெல்லுச் சோத்துக்கு அப்ப அவ்வளவு மவுசு.
கூழு, கஞ்சியக் குடிக்கிறத்துக்கு பதிலா நெல்லுச் சோறு சாப்பிடலாம் அப்படின்னு நெனைச்சாலே, அவ்வளவு ஆசை ஆசையா இருக்கும்.
அதிகபட்சம் பார்த்தோம்னா கம்பஞ்சோறு, கேழ்வரகு கூழ், சோளச்சோறு இதுதான் தெனைக்கும் இருக்கும். இதெல்லாம் காசு கொடுத்து வாங்கமாட்டாங்க. சோளக் கதிரு ஒடிக்கப் போகும்போது, கம்பு ஒடிக்கப் போகும்போது, கேழ்வரகு அறுக்கப் போகும்போது கேழ்வரகு, கம்பு, சோளம் இதத்தான் கூலியா குடுப்பாங்க. அதை அப்படியே சாப்பாட்டுக்கு வச்சிப்போம்.
கேழ்வரகுக் கூழ் செய்யனுமுன்னா முந்தின நாளு ராத்திரியே செஞ்சு, அதை ஆப்பையால உருண்ட உருண்டையா புடிச்சு, இன்னொரு மண் பானையில இருக்கிற பச்ச தண்ணியில அம்மா போட்டு வச்சிரும்.
அடுத்த நாள் காலையில எந்திரிச்சு, காலை உணவுக்கு ஒரு உருண்டை எடுத்து ஒரு சில்வர் குண்டான்ல போட்டு, தயிர அதுல ஊத்தி, அதோட கொஞ்சம் உப்புப் போட்டு பிசைஞ்சு, பச்சை மிளகாயையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ கடிச்சிகிட்டு குடிச்சோம்னா, ஏசி தண்ணி மாதிரி அந்த கூழ், குடலுக்குள்ள குளு குளு குளு குளுன்னு போகும்.
ஆடிக் காத்துல அம்மியே பறக்கும் அப்படிம்பாங்க. இந்தக் கூழ குடிச்சிட்டு எதுர் காத்துல நடந்து போனோம்னா, அம்மியே பறந்தாலும் நம்மள யாரும் அசைக்க முடியாது.
சித்திர வெயிலு நெருப்ப அள்ளிப்போட்டாலும், நம்ம உடம்ப, அந்த சூடு எதுவுமே பண்ணாது.
கம்மஞ்சோறும் இதே மாதிரிதான். மண்பானையில முந்தின நாளே அம்மா ஆக்கி வச்சுடும். நாங்க அடுத்த நாள் காலையில எந்திரிச்சு கம்மஞ்சோத்து பானையை பார்த்தோம்னா, அது மேல தோசை மாதிரி அப்டியே காஞ்சி போயி இருக்கும். அதை எடுத்து வெறுமனே வாயில போட்டோம்னா, ஆஹா பழனி பஞ்சாமிர்தமாவது, தேவலோகத்து தேனாமிர்தமாவது, இதற்கு மிஞ்சி எதுவுமே இல்ல அப்படிங்குற அளவுக்கு அவ்வளவு சுவையா இருக்கும்.
சோளச் சோறும் அப்படித்தான். இதுக்கு எல்லாத்துக்குமே தயிரோ, மோரோ சேரும்போதுதான் அதோட சுவையே வேற லெவல்ல இருக்கும்.
ஆனா அப்போ இதெல்லாம் சாப்பிடறதுக்குப் பிடிக்காது. நெல்லுச் சோத்த எப்ப பார்ப்போம், நெல்லுச் சோறு எப்ப கிடைக்கும் அப்படின்னு ஒரே ஏக்கம் ஏக்கமா இருக்கும்.
காலையில கம்பு ஊறவெச்சு, சாயங்காலம் அதை இட்லி பானைல வச்சு அவிச்சி, அதுல வெல்லம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டோம்னா, எவ்வளவு ஆனந்தமா இருக்கும் தெரியுமா? சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம் அப்படிங்கிற மாதிரி, அவ்வளவு சுவையா இருக்கும்.
அது மாதிரி, அம்மா ஒடிச்சிட்டு வந்த கம்பங் கதிர எடுத்துட்டு வந்து, தோட்டத்துல செத்தைய போட்டு எரிச்சு, அதுல அந்த கம்பம் கதிர சுடுவோம். அது கொஞ்சம் லேசா பொரிஞ்ச உடனே எடுத்து, மொரத்துல வச்சு, ரெண்டு கையாலையும் தேச்சு, அந்த கம்பு உமியை முறத்தால புடைச்ச விட்டுட்டு, உமி எல்லாம் போனோன, அந்த கம்பை அள்ளி மென்னு சாப்பிட்டோம்னா அதுவும் அவ்வளவு வாசமா, நல்லா இருக்கும்.
மழைக்காலத்துல சோளத்தை மண்ணுச் சட்டியில் போட்டு வறுத்து, அதை அம்மா ஆளுக்கு கொஞ்சமா எங்களுக்கு அள்ளிக் கொடுக்கும். அத நாங்க ஒரு துண்டுல வச்சிக்கிட்டு, திண்ணையில் உட்கார்ந்து அந்த குளிர்ல ஒன்னு ஒன்னா வாயில போட்டு மென்னு சாப்பிடுவோம்.
வறுத்த சோளம் சாப்பிடறதுல ஒரு டெக்னிக் இருக்கு. மாடு புல்லு திங்கிற மாதிரி, ஒரு ஒரு சோளமா கடிச்சு வாயில் ஒரு பக்கமா சேர்த்து வச்சுப்போம். நல்லா கொரடுல ஃபுல்லா சோளத்தை மொன்னு வச்சுக்கிட்டு, அதுக்கப்புறம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மறுபடியும் மென்னு முழுங்குவோம். அந்த வறுத்த சோளம் வாசனையோட அவ்வளவு ருசியா இருக்கும்.
இப்பதான் கேழ்வரகு, கம்பு, சோளம், பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு இந்த சிறுதானியங்கள்ல கிடைக்கிற சத்துதான் மனித உடம்புக்கு ஆரோக்கியம் அப்படின்னு சொல்றாங்க. இதெல்லாம் தெரியாமலேயே, இந்த சத்துள்ள உணவை வேற வழியில்லாம அப்ப சாப்பிட்டோம்.
இந்த கேழ்வரகுக் கூழ், கம்பஞ்சோறு, சோளச்சோறு, இது எல்லாமே பசி ஆத்துற அளவுக்கு நெறையவும் கிடைச்சிடாது. அதையும் வயிறுமுட்ட சாப்பிட்டோம் அப்படின்னும் இருக்காது. அதுக்கும் தட்டுப்பாடுதான். ஏதோ ஆளுக்கு ஒரு கரண்டி இல்லைன்னா ரெண்டு கரண்டி சோறுதான் கிடைக்கும். எப்போதுமே அரைவயிறு, கால்வயிறுதான்.
இதை சொல்லும்போது "கவிப்பேரரசு வைரமுத்து'' ஐயாவோட கவிதை ஒன்னு நினைவுக்கு வருது.
பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு.
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை.
யோகம் என்பது
வியாதி தீர்க்கும்
வித்தை என்று சொல்லுங்கள் டாக்டர்
உயிர்த் தீயை உருட்டி உருட்டி
நெற்றிப் பொட்டில்
நிறுத்தச் சொல்லுங்கள்
சுவாசிக்கும் சுத்த காற்று
நுரையீரலின்
தரை தொட வேண்டும்
எத்தனை பாமரர் இஃதறிவார்?
எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்
பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?
மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?
எத சாப்பிடணும் அப்படிங்கிறதையும், எவ்வளவு
சாப்பிடணும் அப்படிங்கறதையும் எங்களுக்கு தெரியாம
லேயே நாங்க அதை சரியா கடைப்பிடிச்சிக்கிட்டு வந்தோம்.
வைரமுத்து ஐயா சொல்ற மாதிரி வயிறு முட்ட சாப்பிட வழியில்லை. நாங்கள் பசியோடுதான் உட்கார்ந்தோம். பசியோடுதான் எழுந்தோம்.
நாங்க கூட பரவாயில்லை. ராத்திரிக்கு, அம்மா சோறு வடிக்கிற கஞ்சியில உப்பப் போட்டு அதைக் குடிச்சிட்டு அப்படியே படுத்துக்கும். மிச்சம் இருக்குற சோத்துல தண்ணிய ஊத்தி வச்சுக்கும். அந்தப் பழைய சோறுதான் அடுத்த நாளு எங்களுக்கு காலை சாப்பாடு.
நாங்க பழைய சோத்துல தயிர் ஊத்தி சாப்பிடுவதைவிட, அப்பா பழைய சோத்துல தயிரை ஊத்தி, உப்புப் போட்டு பிசைஞ்சு, அதை எங்களுக்கு ஒரு ஒரு வாய் ஊட்டி விடும்போது ஆஹா என்ன ஒரு சுவையா இருக்கும் தெரியுமா?
தேன்ல, பலாச் சுளைய ஊற வச்சு, அப்படியே தேனு சொட்ட சொட்ட அதை எடுத்து வாயில வச்சா என்ன ஒரு ஏகாந்தமா இருக்குமோ, அது மாதிரி அப்பா பிசைஞ்சு கொடுக்கிற தயிரு சோறு மட்டும் தேவாமிர்தம் மாதிரி அவ்வளவு ருசியா இருக்கும்.
கடைசியில இந்த பழைய சோத்துல போட்டு பிசைஞ்ச தயிர் தண்ணிய அப்பா ஆளுக்கு கொஞ்சமா கொடுப்பாங்க. அது மல்கோவா மாம்பழம் கணக்கா, கமகம கமகமன்னு அவ்வளவு வாசமா இருக்கும். ச்சே என்ன வாழ்க்கை அது!
இப்பவும் பழைய சோறு மிச்சம் ஆயிடுச்சுன்னா, அப்பா எங்களுக்கு கொடுத்த மாதிரியே, பழைய சோத்துல தயிரை போட்டு, கொஞ்சம் உப்புப் போட்டு பிசைஞ்சு, என்னோட பொண்ணுங்களுக்கு அதை ஊட்டிவிடுவேன், இட்லி தோசையைவிட, அதை அவங்க அவ்வளவு ஆர்வமா வந்து சாப்பிட்டு, அந்த தயிர் தண்ணிய குடிப்பாங்க.
இப்போ உள்ள பசங்க எல்லாம் பீட்சா, பர்கர்தான் சாப்பிடுறாங்க அப்படின்னு நாமதான் தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்கோம்.
ஆனா இப்ப உள்ள பசங்களும் அந்த தயிர்ல பிசைஞ்ச பழைய சோத்த விரும்பிச் சாப்புடுற ஆர்வத்தை பார்த்தா, அவங்களுக்கு பழைய சோறு பிசைஞ்சு கொடுக் கறதுக்கு, எந்த அப்பா அம்மாவுக்கும் தெரியலையோ, இல்ல பிசைஞ்சு கொடுக்கிறதுக்கு அவங்களுக்கு நேர காலம் இல்லையோ அப்படின்னுதான் தோணுது.
சாப்பிடுவதற்கு பிள்ளைங்க தயாராதான் இருக்கி றாங்க. ஆனால் அத கொடுக்கறதுக்கு நாமதான் தயாரா இல்லை.
என் புள்ள பழைய சோறு எல்லாம் சாப்பிடாது. அப்படின்னு பெருமையா பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டு, அந்த காலத்து உணவு முறைய பிள்ளை களுக்கு கொடுக்காம நாமதான் புறக்கணிக்கிறோம்.
பழைய சோத்துல அவ்வளவு சத்து நிரம்பி இருக்கு. அமெரிக்கா போன்ற மேலை நாடுகள்ல, ஸ்டார் ஹோட்டல்ல, மண்ணு கலயத்துல வச்சிருக்கிற பழைய சோறு, வெங்காயம், பச்சை மிளகாய்தான் விலை அதிகமா இருக்குதாம்.
இப்ப உள்ள ஜெனரேஷன் பசங்க எல்லாம் மாறிட்டாங்க, மாறிட்டாங்க அப்படிங்கிறோம். ஆனா அவங்க மாறல. நாமதான் எதை அவங்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற தெளிவு இல்லாம அவங்கள மாத்திட்டோம்.
பால் சோறும், பருப்பு சோறும், உழுந்தங் களியும், கம்பு, கேழ்வரகு சோளச்சோறு, திணை, சாமை, வரகு இதுமாதிரி உணவுகள் கொடுக்கறத தவிர்த்து நாமதானே அவங்களுக்கு ஹார்லிக்ஸ், காம்ப்ளான், போன்விட்டா, பூஸ்ட்டு எல்லாம் கொடுத்தோம். பால் குடிக்கிற வயசுல பிள்ளைகளா இதெல்லாம் கேட்டாங்க?
இப்பவும் பிள்ளைகளுக்கு பச்சைப்பயிறு, தட்டப்பயிறு, மொச்சை, இதுல கொஞ்சம் உப்போ, இல்லைன்னா நாட்டுச் சர்க்கரையைப் போட்டு பிசைஞ்சு கொடுத்தா எவ்வளவு ஆர்வமா அவங்க சாப்பிடுறாங்க தெரியுமா?
இன்னொன்னு கூட எனக்கு சொல்லனுமுன்னு தோணுது. இப்ப இருக்கிற பிள்ளைகள் எல்லாம் டமால், டுமால்னு வார்த்தை புரியாத இசைப்பாட்டுகள்தான் கேக்குறாங்க அப்படின்னும் ஒரு தப்பான கணக்கையும் நாம போட்டு வெச்சிருக்கோம்.
ஏன்னா இப்ப வருகிற பாடல்கள் எல்லாமே வார்த்தைகள் புரியாம, இசையை முன்னிறுத்திதான் பாடல்களை கொடுக்கிறாங்க. வேற வழி இல்லாமதான் இப்ப உள்ள பிள்ளைகள் அதைக் கேட்கக் கூடிய சூழலுக்கு தள்ளப்படுறாங்க.
ஆனா அதுவும் ரெண்டு நாளைக்குதான். அப்புறம் பார்த்தோம்னா எங்க வீட்டு டி.வி.யில எம்.எஸ். விஸ்வநாதன் பாட்டும், இசைஞானி இளையராஜா பாட்டுதான் ஓடிக்கிட்டு இருக்கு.
என்னுடைய பொண்ணுங்ககூட இளையராஜா பாட்டையும், எம்.எஸ்.வி. பாட்டையும்தான் விரும்பி விரும்பிப் பார்க்கிறாங்க. கேக்குறாங்க.
ஒரு நாலு நாளைக்கு முன்னாடி என்னோட பொண்ணு எங்கிட்ட ஓடி வந்துச்சு. அப்பா அப்பா இந்த பாட்டைக் கேளேன். எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா? இது உனக்கும் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு, என்னோட ரசனையை அது கண்டுபிடிச்சு சொல்லுச்சு. அப்படியான்னு நானும் அந்த பாட்டை போடச் சொல்லி கேட்டேன்.
ஆஹா என்ன ஒரு அற்புதமான பாட்டு. என் மகளின் கை குலுக்கினேன். உச்சி முகர்ந்தேன். கேட்க கேட்க இன்பத்தேன் வந்து பாயுதடா காதினிலே என்று மெய்மறந்து என்னோட பொண்ணு கிட்ட சொன்னேன்.
அது...
இந்த பாட்டுதான்…
வழி நெடுக காட்டுமல்லி…
யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
இது ”இளையராஜா” சார் ”விடுதலை” அப்படிங்ற
படத்துல, அவரோட இசையில, அவரே எழுதி, அவரே பாடுன பாட்டு.
எனக்கே ஆச்சரியமா இருந்துச்சி. இப்போ உள்ள பிள்ளைகள் இளையராஜா பாட்ட எவ்வளவு விரும்பிக் கேட்குறாங்க அப்படின்னு, நானே திகைச்சுப் போயிட்டேன்.
சாப்பாடு மாதிரியே, கலை, கலாச்சாரமுன்னு பிள்ளைகளுக்கு நாம எதை எதைக் கொடுக்கணும்னு சரியா கொடுக்காம, அவங்க மாறிட்டாங்க, அவங்க மாறிட்டாங்க அப்படின்னு நாமதான் தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்கோம்.
நம்ம பிள்ளைங்க தங்கமான பிள்ளைங்க. எம்.எஸ்.வி பாட்டையும், இளையராஜா பாட்டையும் கேட்கக்கூடிய அந்த ரசனை நம்ம பிள்ளைகளிடம் இப்பவும் இருக்கத்தான் செய்யுது.
மரபணுவிலேயே ஊறிப்போன நம்முடைய நாட்டுப்புற இசை கலாச்சாரத்தை ஒதுக்கிட்டு, அவ்வளவு எளிதா மேலைநாட்டு இசை கலாச்சாரத்துக்கு நம்ம பிள்ளைகள் மாறிவிடுவார்களா என்ன?
தங்கபஸ்பம் மாதிரி, எப்படி பிள்ளைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டச்சத்து உணவு அப்படின்னு பார்த்து பார்த்து வழிநடத்துறோமோ, அதேமாதிரி உணவாக இருந்தாலும் சரி, ஊக்கமா இருந்தாலும் சரி, பிள்ளைகளுக்கு எதை, எப்படி கொடுக்கணும் அப்படிங்கறத நுணுக்கத்த நாமதான் அவங்களுக்கு பாத்து பாத்துக் கொடுக்கணும்.
முதல்ல நாம நல்ல பாதையில் நடந்து போகணும். நாம நியாய தர்மத்தை கடைப்பிடிக்கணும். நாம போற பாதையிலயும், போட்டுக் கொடுக்கிற பாதையிலயும்தான் நம்ம பிள்ளைங்க பயணிக்கிறாங்க. பெற்றோர்களாகிய நாமதான் நல்ல பாதைய போட்டுக்கொடுத்து, எல்லாத்துக்குமே முன்னுதாரணமா இருக்கணும்.
பிள்ளைகளை பிரகாசமா வைக்கிறதும், சகதியில தள்ளி விடுறதும் பெற்றோர்களாகிய நம்ம கையிலதான் இருக்கு.
“நீதிக்கு தலைவணங்கு” அப்படிங்கிற படத்துல ஐயா “புலமைப்புத்தன்” அவர்கள் எழுதிய பாடல் வரிகள்தான் இப்போது எனக்கு நினைவுக்கு வருது.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
இந்தபச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவினில்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்கின்ற
சமூக அக்கறை பெற்றோர்களுக்கும், சமூக ஊடகங்களுக் கும்தான் இருக்கு அப்படிங்கிறத நாம எப்போதுமே மறுக்க முடியாது.
வறுமையிலயும் பிள்ளைகளை எப்படி வளர்க்க ணும், எப்படி காப்பாத்தனும் அப்படிங்கறதுக்கு எங்க அப்பா அம்மாதான் சாட்சியா கண்ணுக்கு முன்னாடி நிக்கிறாங்க.
காலையில 3 மணிக்கு எந்திரிக்கிற அம்மா அந்த அலுமினிய குண்டான்ல சாணிய கரைச்சி, வாசலுக்குத் தெளிச்சி, கோலம் போட்டு, கோலத்து நடுவுல கொஞ்சம் சாணியை வச்சி, தோட்டத்துல பூத்துக் கிடக்கிற பூசணிப்பூ ஒன்னு பறிச்சிட்டு வந்து அந்த சாணி மேல செருகி வப்பாங்க. அதை பார்க்கும்போது குளத்துல தாமரைப் பூ பூத்த கணக்கா வாசலே கோலத்தோட அவ்வளவு அழகா இருக்கும். அப்புறம் வீட்டை சாணி போட்டு மொழுகிட்டு தோட்டம் தொறவெல்லாம் கூட்டி முடிச்சுட்டு வர்றதுக்கு அம்மா வுக்கு அதிகாலைப் பொழுதே விடிஞ்சு போயிடும்.
அப்புறம் கஞ்சியோ, கூழோ எங்களுக்கு போட்டுக் கொடுத்துட்டு, மிச்சம் இருக்கிறத அம்மா ஒரு வாலியில ஊத்தி எடுத்துக்கிட்டு, வேலைக்கு போயிடும்.
மண்ணு கூட தூக்கிதான் அம்மா எங்களை வளத்துச்சி. பொண்டாட்டி வீட்ட பாத்துக்கணும். புருஷன் வெளியில பார்த்துக்கணும் அப்படிங்கறதுதான் நம்மளோட பண்பாடா காலம் காலமா இருந்தது. அதை ஏழைபாளைகளால் எப்படிக் கடைப் பிடிக்க முடியும்? அம்மா வேலைக்குப் போனாதான் எங்களுக்கெல்லாம் சாப்பாடு அப்படிங்கற நிலைமை எங்களுக்கு வந்தது. இதுக்கு எங்க அப்பாவே காரணமா இருந்துட்டாரு.
(வண்டி ஓடும்)...