அப்பதான் ஜேம்ஸ் வசந்த் ஒரு சாங் கொடுக்கி றார்.
வானத்தில் சுடர்விடும் சூரியன் போலே
ஆனந்தப் புன்னகை முகம் நிறைய
வாருங்கள் மகிழ்ந்து ஆடிடுவோம்
பூத்தது மங்களத் திருவிழா - ஆகா
பூத்தது மங்களத் திருவிழா
அப்படிங்கிற பாட்டு தான் பாட வைக்கிறாரு.
அப்ப அத பாடின உடனே, அத அப்படியே சசிகுமார் சாருக்கு அனுப்புறாரு.
அனுப்பிட்டு உடனே அவருக்கு போன் பண்ணி, நம்ம திருவிழா பாட்டுக்கு ”மதுர குலுங்க” அப்படின்னு ஒரு பாட்டு பண்றோம்.
அதுக்கு இந்த வாய்ஸ் ஓகேவா அப்படின்னு கேக்குறாரு. ஓகேதான் நீங்க சொன்னா கரெக்டுதான் அப்படின்னு சசிகுமார் சார் சொல்லிட் டார்.
இப்பதான் மதுர குலுங்க பாட்டு கவிஞர் யுகபாரதி எழுத, சித்ரா அம்மா ஸ்டுடியோவுல ஃபர்ஸ்ட் டைம் எல்லா இன்ஸ்ட்ருமென்ட்ஸும் லைவா பண்ற மாதிரி லைவா வச்சி லைவாவே பாடுறோம். பாடி முடிச்ச உடனே ஜேம்ஸ் வசந்த் சாரு ஒரு 500 ரூபாய் கொடுத்தாரு. நான் வாங்கிக்கிட்டேன். அப்ப ஜேம்ஸ் வசந்த் என்ன சொல்றாரு, "நீங்க இத யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம். படம் வந்தாலும் வரலாம் வராட்டினாலும் போகலாம். எனக்கும் மியூசிக் வந்தாலும் வரலாம் வராட்டியும் இல்லை. அதனால் இதை அப்படியே விட்டுடுங்க" அப்படின்னு சொல்லிட்டாரு. நானும் பாடிட்டேன். அதுக்கப்புறம் ஒரு எட்டு மாசம் கழிச்சு போன் வருது "சுப்பிரமணியபுரம்” அப்படிங்ற படத்துல நீங்க பாடுன பாட்டுக்கு ஆடியோ லான்ச் சத்யம் தியேட்டரில் நடக்குது. அங்க வாங்க அப்படின்னு சொல்றாங்க.
அப்ப முதன்முதலில் அந்த புரோக்ராமுக்கு எங்க அண்ணனைத்தான் அழைச்சிக்கிட்டுப் போறேன். அப்பா அம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். என்ன பண்றது அதுக்கு நம்மளுக்கு கொடுத்துவைக்கல. அந்த நிகழ்ச்சியில 100-க்கும் மேற்பட்ட பத்திரிகைக்காரர்கள். அப்புறம் வந்து "முள்ளும் மலரும்” எடுத்த டைரக்டர் மகேந்திரன், அப்புறம் டைரக்டர் பாலா, அமீர், சேரன், கௌதம் வாசுதேவ்மேனன் இப்படி ஒரு பெரிய பட்டாளமே அங்க இருக்குது. அங்க அப்ப அந்த மேடையில என்னை அறிமுகம் பண்ணிட்டு நான் பாட்டு பாடினத சொல்லி எல்லாரும் பேசுறாங்க.
2008 ஜூலை நாலாம் தேதி படம் ரிலீஸாகுது. நான் எப்படி தைப்பூசத்துல பிறந்தேனோ, வேல்முருகன்னு எனக்கு எப்படி பெயர்வைத்தார்களோ அதே மாதிரி நான் முதல் முதல பாடின படத்தோட பேரு ”சுப்பிரமணியபுரம்.” திருவிழாவுல பிறந்தத னாலேயோ என்னமோ பாட்டும் திருவிழா பாட்டு.
அதாவது இங்கே இருந்து, அப்படி அங்க ஒரு கனெக்ட் ஆகும். அங்க இருந்து இப்படி இங்க ஒரு கனெக்ட் ஆகும். நான் எது செஞ்சாலும் அது அப்படியே அங்கு ஒரு கனெக்டிவிட்டியா முடியும்.
இப்ப நம்மளும் சினிமாவுல பாடி ஆடியோ ரிலீஸ் ஆயிடுச்சு. இப்ப பாட்டுப் புத்தகத்தில நம்ம பேரும் வந்துரும். அதாவது சி.டி.யில பேர் வரும்.
அதுக்கப்புறம் நமக்கு பணமும் ஒரு கச்சேரியில் ஒரு 4000, 5000 கிடைக்கும். இனிமே நமக்கு லைஃப்ல பிரச்சனை இல்லப்பா அப்படின்னு ஆரம்பிச்ச வாழ்க்கைதான் இது.
எப்பவுமே நான் நினைச்சுப் பார்க்கிறது என்ன அப்படின்னா என்னுடைய வளர்ச்சிக்கு எல்லாத்துக்குமே மூலகாரணமாக இருந்தது அந்த அம்மா பாட்டுதான். அதுக்காக அண்ணன் இளையகம்பன் அவர்களுக்கு காலம்காலமா நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
உலகமெல்லாம் இன்று புகழ்பெற்ற பாடலாக விளங்குகிற "பத்து மாசம் என்ன சுமந்து” அப்படிங்கற அம்மா பாடல் அம்மாவுடைய பெருமைகளை, அம்மாவுடைய தியாகத்தை அண்ணன் எழுதி, நான் பாடிய அந்த அனுபவத்தை, 'இனிய உதயம்' வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காக சொல்ல விரும்புகிறேன்.
2022 என்று நினைக்கிறேன். திரைப்பட பாடல் பாடணும் அப்படின்னு நான் தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்த காலகட்டம் அது. இயல் இசை கல்லூரி சென்னையில முறையான இசை படிச்சு, அதுல முதல் வகுப்புல நான் தேர்வாகி பட்டம் எல்லாம் வாங்கினதுக்கு அப்புறம், பல போராட்டங்களுக்கு இடையில் எப்படியாவது திரைப்படத்தில் பாடல் பாடணும் அப்படின்னு தீவிரமா நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். தனிமனிதனா சென்னைக்கு வந்து, ஒவ்வொரு இசையமைப்பாளர்கள்கிட்டயும், ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், நான் வீதி வீதியா அலைஞ்ச காலகட்டம் அது. அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்திலதான் திரைப்பட பாடல் ஆசிரியர் அண்ணன் இளையகம்பனை சந்திக்கக்கூடிய ஒரு அற்புதமான தருணம் எனக்கு வாய்த்தது.
அந்த வாய்ப்பு என்னென்னா நம்மளுடைய அருமை இயக்குனர் வ. கௌதமன் அதாவது "கனவே கலையாதே” அப்படிங்கிற படத்துடைய இயக்குனர்.
அவருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
அப்ப அவர்கிட்ட பேசிகிட்டு இருக்கும்பொழுது இதுவரைக்கும் வெளிவராத ஒரு புகழ்பெற்ற அம்மா பாடலை நீங்க பாடுனா நல்லா இருக்கும் அப்படின்னு நான் விரும்புறேன். அந்தப் பாடலை ஒரு நல்ல பாடலாசிரியர் எழுதினால் சிறப்பா இருக்கும் அப்படின்னு இயக்குனர் கௌதமன் அவருடைய விருப்பத்தை என்கிட்ட சொன்னாரு. அப்ப நான் உடனே சொன்னேன் இன்னைக்கு திரைப்பட பாடல் ஆசிரியர்கள்ல ஒரு கருத்தியல் கவிஞரா, புரட்சிகரமான சிந்தனை உள்ளவரா இருப்பவர் அண்ணன் இளையகம்பன். அவருகிட்ட எனக்கு பழக்கம் உண்டு நான் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன். அவர் எழுதினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் அப்படின்னு சொன்னேன்.
அதுக்கு இயக்குனரும் அற்புதமான தேர்வு வேல்முருகன். நானும் கவிஞரிடம் அலைபேசியில் தொடர்புகொள்கிறேன் அப்படின்னு சொன்னார். அதனால் அவரைத் தேடிச்சென்ற நான், கேகே நகர்ல இருக்கக்கூடிய பிளஸ்ஸோ ஒலிப்பதிவுக் கூடத்துல சந்திச்சேன். அவர் பாடல் ஒலிப்பதிவு நடந்துக்கிட்டு இருந்தது.
அவரிடம், அம்மா பாடல் ஒன்னு செய்யணும் அண்ணே. அதை நான் பாடுவதற்கு எனக்கு வாய்ப்புத் தந்திருக்காங்க. இயக்குனர் கௌதமன்தான் என்ன அனுப்பி வச்சாரு. அந்த அம்மா பாடலை நீங்க எழுதினா நன்றாக இருக்கும் என்று இயக்குனர் விரும்புகிறார். என்னுடைய விருப்பமும் அதுதான். நீங்க எழுதிக் கொடுக்கமுடியுமா? அப்படின்னு கேட்டேன். சரி தம்பி எழுதிக் கொடுக்கிறேன். இது சம்பந்தமா நம்ம பிறகு பேசுவோம் அப்படின்னு சொல்லிட்டு என்னுடைய அலைபேசி எண்ணை வாங்கிட்டாரு அண்ணன். பிறகு அண்ணன் ஒலிப்பதிவு பணியில் மூழ்கிட்டாரு. நானும் அண்ணனிடம் விடைபெற்றுக் கிளம்பிட்டேன்.
ஒரு இரண்டு நாள் கழிச்சு அண்ணன் என்னை அலைபேசியில் அவர் வீட்டிற்கு அழைத்தார். அது ஒரு அதிகாலை மார்கழி மாதப் பொழுது.
அப்படியே லேசா தூறல் போட்டுக்கிட்டே இருக்கு.
அண்ணன் வீட்டுக்குப் போறேன். அன்பா வரவேற்றாரு.
அப்படியே ஒரு தேனீர் சாப்பிட்டு அந்த பாடலைக் கையில எடுத்துக்கிட்டு அசோக் நகர் வீதிகள்ல பொடி நடையா என்னை அழைச்சுக்கிட்டுப் போறாரு. அந்த அதிகாலைப் பொழுது தூறல்ல நாங்க நனைஞ்சுக்கிட்டே போறோம். அங்கு ஒரு புன்னை மரம், அந்த மரத்து நிழல்ல அப்படியே ஓரமா நின்னோம். அண்ணனுடைய அந்தப் பாடல் வரிகளை நான் கேக்குறதுக்கும் படிச்சுப் பாக்கறதுக்கும் ஆர்வமா இருந்தேன். ஆனா அங்க நடந்தது எனக்கு ரொம்ப வியப்பா இருந்துச்சு.
அண்ணன் அந்த பாடலை எனக்கு படிச்சு காட்டப்போறாரு அப்படின்னு நினைச்சேன். ஆனா அண்ணன் அந்தப் பாட்டுக்கு ஒரு அற்புதமான மெட்டமச்சி அந்த பாடல எனக்கு பாடியே காமிச்சாரு. அதுக்கு முன்னாடி அவர் பாடுவார்னு எனக்கு தெரியும், இருந்தாலும் அன்னைக்கு அவர் பாடும்போதுதான் அவரோட அந்த குரல் வளத்தை, இனிமையையும் நான் கேட்டு மெய்மறந்து போனேன். அதுக்கப்புறம் அந்த பாடல் உருவான விதத்தை ஒவ்வொரு வார்த்தையா படிச்சு என்கிட்ட காட்டினார். அந்தப் பாடலை கேட்கும்போது என் கடைக்கண் வழியாக என்னையும் அறியாமல் கண்ணீர் வடியுது. அப்பதான் எனக்கு நம்முடைய ஒவ்வொரு துளி கண்ணீரும்தான் இந்த பாடலோட வெற்றி அப்படின்னு தோணுச்சு.
அதுக்கு காரணம் என்னன்னா இந்த பாடல் உழைக்கின்ற வர்க்கத்தைச் சார்ந்த தாய்மார்கள், பாட்டாளி வர்க்கத்தை சார்ந்த தாய்மார்கள், விவசாய நிலத்தில் வேர்வை சிந்தி உழைக்கின்ற தாய்மார்கள், எந்தெந்த தேசத்தில் எங்கெல்லாம் இருக்காங்களோ அந்தந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களுக்கும் பொருந்துற மாதிரி ஒரு பாடல் அது. நாங்க ரெண்டு பேருமே நேரா இயக்குனர் வ. கௌதமன்கிட்ட போனோம். அவரும் அந்த பாடலை பாத்துட்டு ரொம்ப பெருமிதப்பட்டாரு. நான் நெனச்சது சரியாயிடுச்சு வேல்முருகன். யார்கிட்ட கொடுத்தா இந்த பாடல் சிறப்பாக இருக்கும் அப்படின்னு நினைச்சோமா, அதே கவிஞர் நமக்கு அந்த பாடலை சிறப்பாக எழுதிக் கொடுத்துட்டாரு. அந்தப் பாடலை விரைவாக ஒளிப்பதிவு செய்வதற்கான பணிகளை நாம தொடங்கணும் அப்படின்னாரு.
இதுக்கு பின்னணி இசை சேர்ந்தால் நல்லா இருக்கும் அப்படின்னு பேசும்போது கவிஞர் அண்ணனே, நான் இப்ப இயக்குனர் ஆதித்யனுக்கு பாட்டு எழுதிக்கிட்டு இருக்கேன். இந்தப் பாடலுக்கு ஆதித்யன் பின்னணி இசை கொடுத்தால் நல்லா இருக்கும் அப்படின்னு என்னை அவரிடம் அழைச்சிக்கிட்டுப் போனாரு.
கவிஞர் அண்ணன் எப்படி பாடுனாரோ, அதே மாதிரி அந்த ஸ்ருதி மாறாம, வரி மாறாம இசையமைப்பாளர் ஆதித்யன் மெட்டமைச்சார்.
இசையமைப்பாளர் ஆதித்யன் சீவலப்பேரி பாண்டி படத்துக்கு இசை அமைத்தவர். கோவில்பட்டி வீரலட்சுமி, அமரன்னு நிறைய வெற்றிப் படங்களுக்கு இசையமைச்சவர். இயக்குனர் செல்வமணி சாருக்கும் இயக்குனர் பிரதாப்போத்தனுக்கும் நிறைய படங்கள் பண்ணியிருக்காரு.
அவர் உடனே அந்த பாட்டுக்கு இசையமைச்சுக் கொடுத்தாரு. அந்த பத்து மாசம் அம்மா பாடல் தான் இன்னைக்கு பெரும் புகழ்பெற்ற பாடலா அமைஞ்சிருக்கு.
இந்த அம்மா பாடலை இயக்குனர் கௌதமன் தனியா ஒலிப்பதிவு செஞ்சு மக்கள் தொலைக்காட்சியில் ஒலிக்க வச்சாரு. அது மக்கள் மத்தியில மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நான் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை கவிஞர் இளையகம்பன் எழுதியவைதான்.
அதுக்கப்புறம் ஓராண்டு கழிச்சி "தாய்ப்பாசம்” அப்படின்னு ஒரு குறுந்தகடு தயார் செஞ்சோம். அதுல அண்ணன் ஒரு பத்து பாடல்கள் எழுதி இருந்தாரு. இந்த பத்து பாட்டுக்கு உள்ள பாடுபொருளையும் அண்ணனே முடிவுசெஞ்சாரு. அதாவது சமூகம், விடுதலை, இந்திய ஒற்றுமை, பெண் விடுதலை, இந்திய விவசாயம், இந்திய விவசாயிகளுடைய பெருமை, உழைப்பு, குழந்தை நலன் அப்படின்னு அண்ணனே பிரித்து பாடல்களை வகுத்துக் கொடுத்தாரு. அந்த பத்து பாடல்களில்ல ”பத்து மாசம் என்ன சுமந்து” அப்படிங்கற பாட்டும் இடம்பெற்று இருந்துச்சு.
இந்த தாய்ப் பாசம் அப்படிங்கற குறுந்தகடை 2005 இல் வெளியிட்டோம். அவர் எழுதின பத்துப் பாடல்களையுமே நாந்தான் பாடினேன். அந்த பாடல்களுக்கு பெண் குரலா "சின்ன பொண்ணு” அவங்களும், புகழ்பெற்ற பிண்ணனிப் பாடகி அனுராதா ஸ்ரீராமும் குரல் கொடுத்திருந்தாங்க. மத்த ஒன்பது பாடல்களுக்கும் இசையமைப்பாளர் ஜெய்க்கி அவர்கள்தான் இசையமைச்சுக் கொடுத்தாரு.
இந்தப் பாடல்களை புகழ்பெற்ற தொழிலதிபர், உழைப்பால் உயர்ந்தவர், மதிப்பிற்குரிய டி.கே.வி. பாலன் வெளியிட்டார். இன்னைக்கு அந்த பாடல் தொகுதி உலகமெல்லாம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அந்தக் குறுந்தகட்டில் இருக்கிற அம்மா பாடலை ராஜ் டி.வி தொலைக்காட்சியில் நேர் காணல்ல பாடக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அந்த அம்மா பாடலை, "யார் மனசுல யாரு உங்க மனசுல யாரு அவங்க பேர கூறு” அப்படிங்குற நிகழ்ச்சியில நான் பாடினேன்.
அந்தப் பாடலை பாடும்போது இயக்குனர் தொடங்கி, அந்த நிகழ்ச்சியில நடுவராக இருந்த மனோ சார், அனுராதா ஸ்ரீராம் எல்லாருமே கண்ணீர்விட்டு அழுதாங்க. நானும் அழுதுக்கிட்டுதான் அந்தப் பாடலை பாடுனேன். அரங்கமே நிசப்தத்தில் மூழ்கிக்கெடந்துச்சு. நான் பாட்டு பாடி முடிச்ச உடனே அனுராதா ஸ்ரீராம் மேடைக்கு வந்து, கண்ணீர் மல்க என்னை கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டாங்க. இதுக்கப்புறம் நிறைய பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.
பாட்டு வண்டி வரும்...