இருபத்தியோரம் நூற்றாண்டில் இந்த உலகையே அச்சுறுத்திய ஒற்றைச் சொல்… கொரோனா.
அதன் முதல் அலையிடமே பல முக்கிய கலை முகங்களை நாம் இழந்தோம். இந்த வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைப் பரவல் தமிழகத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய ஏப்ரல் மாதத்தின் இறுதியிலிருந்தே மனம் இனம்புரியாத தவிப்பிற்கு ஆளானது.
அகாலத்தில் அழைத்த நண்பர்களின் செல்பேசி அழைப்புகளும், முகநூலைத் திறந்ததும் யாருடைய படம் தெரிந்தாலும் லேசான அச்சமும் உள்ளுக்குள் எழுந்தது. கொரோனா தொற்றின் பாதிப்பாலும், மாரடைப்பாலும் நிறைய நண்பர்களை இந்தச் சூழலில் நாம் அனைவருமே இழந்து நிற்கிறோம்.
மரணத்திற்கு இதயமில்லை’ என்பதைக் காலம் மீண்டுமொருமுறை அழுத்தமாகச் சொல்லிச் சென்றுள்ளது. செல்பேசி அழைப்பை ஏற்காமலிருப்பதாலும், முகநூல் பக்கமே சில நாள்கள் செல்லாமல் இருப்பதாலும் மட்டும் மரணத்தைத் தவிர்க்க முடியுமா என்ன..? கொரோனாவின் கொடுங்கரங்கள் அள்ளிச்சென்ற உயிர்களில் தமிழின் சில முக்கியமான படைப்பாளுமைகளும் அடங்குவர் நாம் பல உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கின்றோம். நம் மனசுக்கு நெருக்கமானவர்களின் மரணம் நமக்குத் துயரத்தைத் தருவதைவிட இன்னொரு பெருந்துயரம், கடைசிப் பயணத்தில்கூட இறந்தவரின் முகம் பார்க்க முடியாமல் போகிறதே என்பதுதான். உயிரிழப்பு, பொருளாதாரச் சீர்குலைவு என பல சரிவுகளை நாடும், தனிமனிதரும் சந்தித்தாலும் மீண்டும் நம் மனதில் துளிர்க்கும் அந்த ஒற்றை வரி… ‘இதுவும் கடந்துபோகும்’ என்பதே.
அந்த நம்பிக்கையை நெஞ்சிலேந்தி, இம்மண்ணை விட்டுப் பிரிந்த நம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு நம் கண்ணீரைக் காணிக்கையாக்குவோம். அவர்கள் இந்த மண்ணில் காண விரும்பிய கனவை நனவாக்கும் முயற்சிகளில் நாமும் கலப்போம்.
சிற்றிதழ்களோடு கரங்கோர்த்தும், இலக்கிய அமைப்புகளில் இணைந்தும் செயலாற்றிக் கொண்டி ருந்த நான்கு கவிஞர்கள், கடந்த மே மாதத்தில் இறந்து போயினர். அவர்களை நம் நினைவில் நிறுத்தி, நம் அஞ்சலி மலர்களைத் தூவுவோம்.
சிகரம்’ ஆசிரியர் பழ.அன்புநேசன்:
2001 (நவம்-டிசம்)-ஆம் ஆண்டில் ஈரோட்டிலிருந்து வேளாண்மைத் துறையில் பணி செய்து கொண்டிருந்த சந்திராமனோகரனும், சேமங்கி சண்முகமும் (பழ.அன்புநேசன்) இணைந்து வெளி யிட்ட இரு மாத இதழ் ‘சிகரம்’. 20 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வெளிவரு
இருபத்தியோரம் நூற்றாண்டில் இந்த உலகையே அச்சுறுத்திய ஒற்றைச் சொல்… கொரோனா.
அதன் முதல் அலையிடமே பல முக்கிய கலை முகங்களை நாம் இழந்தோம். இந்த வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைப் பரவல் தமிழகத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய ஏப்ரல் மாதத்தின் இறுதியிலிருந்தே மனம் இனம்புரியாத தவிப்பிற்கு ஆளானது.
அகாலத்தில் அழைத்த நண்பர்களின் செல்பேசி அழைப்புகளும், முகநூலைத் திறந்ததும் யாருடைய படம் தெரிந்தாலும் லேசான அச்சமும் உள்ளுக்குள் எழுந்தது. கொரோனா தொற்றின் பாதிப்பாலும், மாரடைப்பாலும் நிறைய நண்பர்களை இந்தச் சூழலில் நாம் அனைவருமே இழந்து நிற்கிறோம்.
மரணத்திற்கு இதயமில்லை’ என்பதைக் காலம் மீண்டுமொருமுறை அழுத்தமாகச் சொல்லிச் சென்றுள்ளது. செல்பேசி அழைப்பை ஏற்காமலிருப்பதாலும், முகநூல் பக்கமே சில நாள்கள் செல்லாமல் இருப்பதாலும் மட்டும் மரணத்தைத் தவிர்க்க முடியுமா என்ன..? கொரோனாவின் கொடுங்கரங்கள் அள்ளிச்சென்ற உயிர்களில் தமிழின் சில முக்கியமான படைப்பாளுமைகளும் அடங்குவர் நாம் பல உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கின்றோம். நம் மனசுக்கு நெருக்கமானவர்களின் மரணம் நமக்குத் துயரத்தைத் தருவதைவிட இன்னொரு பெருந்துயரம், கடைசிப் பயணத்தில்கூட இறந்தவரின் முகம் பார்க்க முடியாமல் போகிறதே என்பதுதான். உயிரிழப்பு, பொருளாதாரச் சீர்குலைவு என பல சரிவுகளை நாடும், தனிமனிதரும் சந்தித்தாலும் மீண்டும் நம் மனதில் துளிர்க்கும் அந்த ஒற்றை வரி… ‘இதுவும் கடந்துபோகும்’ என்பதே.
அந்த நம்பிக்கையை நெஞ்சிலேந்தி, இம்மண்ணை விட்டுப் பிரிந்த நம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு நம் கண்ணீரைக் காணிக்கையாக்குவோம். அவர்கள் இந்த மண்ணில் காண விரும்பிய கனவை நனவாக்கும் முயற்சிகளில் நாமும் கலப்போம்.
சிற்றிதழ்களோடு கரங்கோர்த்தும், இலக்கிய அமைப்புகளில் இணைந்தும் செயலாற்றிக் கொண்டி ருந்த நான்கு கவிஞர்கள், கடந்த மே மாதத்தில் இறந்து போயினர். அவர்களை நம் நினைவில் நிறுத்தி, நம் அஞ்சலி மலர்களைத் தூவுவோம்.
சிகரம்’ ஆசிரியர் பழ.அன்புநேசன்:
2001 (நவம்-டிசம்)-ஆம் ஆண்டில் ஈரோட்டிலிருந்து வேளாண்மைத் துறையில் பணி செய்து கொண்டிருந்த சந்திராமனோகரனும், சேமங்கி சண்முகமும் (பழ.அன்புநேசன்) இணைந்து வெளி யிட்ட இரு மாத இதழ் ‘சிகரம்’. 20 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வெளிவரும் அந்த இதழின் ஆசிரியராக பழ.அன்புநேசன், 2015 செப்டம்பரில் பொறுப்பேற்கிறார்.
பழகுவதற்கு இனிய மனிதர்; மிக எளிமையானவர்.
எந்த ஒரு படைப்பும் நன்றாக இருந்தால், எழுதியவர் அறிமுக எழுத்தாளராக இருந்தாலும் உடனே அழைத்துப் பாராட்டுவார். ‘சிகரம்’ இதழினை தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதோடு, ஆண்டு தோறும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் போட்டிகள் நடத்தி, ‘சிகரம் விருதுகளை’ கடந்த 19 ஆண்டுகளாக வழங்கி வந்தார். மேலும், சமூக சேவைகளைச் செய்வதி லும் ஈடுபாடுகொண்டு, நிறைய அறப்பணிகளை நண்பர் களோடு சேர்ந்து செய்தார். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். 2018-ஆம் ஆண்டில் ‘தைப்புரட்சி - 2017’ எனும் ஹைக்கூ நூலினை வெளியிட்டார். அந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஹைக்கூ;
‘மலக்குழியில் தொழிலாளி
உபயோகித்தவனோ
மூக்கைப் பிடித்தபடி.’
தனது இரண்டாவது ஹைக்கூ நூலுக்கான கவிதைகளைத் தொகுத்துக்கொண்டிருந்த கவிஞர் பழ.அன்புநேசனை, கரோனா பெருந்தொற்று அவரது 57-ஆவது வயதில் கடந்த மே 16-ஆம் தேதி ஈவிரக்கமின்றிப் பறித்துச் சென்றுவிட்டது. ‘சிகரம்’ தொட்டவர் விண்ணேறிச் சென்றுவிட்டார்.
கவிஞர் மல்லிகைதாசன் :
கவிஞர் மல்லிகைதாசன் என்றதுமே என் நினைவுகள், இரண்டாயிரத்தின் தொடக்கத்திற்குச் சென்று திரும்பும். வாலாஜாப்பேட்டையிலிருந்து அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தவாசிக்கு வந்தார். வயது ஐம்பதுக்கும் மேலிருக்கும்.
என்னோட பேரு பழனிச்சாமி. நீங்கள் எழுதுன ஹைக்கூ கவிதை நூலை நூலகத்திலே படிச்சேன். ஹைக்கூ எழுதணுங்கிற ஆர்வத்திலே நானும் அப்பப்ப எழுதுறேன்…” என்று சொல்லும்போதே, அதில் பணிவும் சற்றே கூச்சமும் கலந்திருந்தன. அப் போது தமிழில் வெளிவந்திருந்த சில ஹைக்கூ நூல்களை ஆர்வத்தோடு என்னிடமிருந்து வாங்கிப்போனார்.
சரியாய் 16 ஆண்டுகள் கழித்து, செல்பேசியில் என்னை அழைத்தார். “நான் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். என்னோட ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து வச்சிருக்கேன். நீங்க தான் அதை ஒரு நூலாகக் கொண்டு வரணும்” என்று சொல்லிவிட்டு, அஞ்சலில் ஒரு நோட்டுப் புத்தகத்தை அனுப்பியிருந்தார். அதில் ஹைக்கூ, சென்ரியு கவிதைகள் என நிறையவே இருந்தன. அவற்றைத் தொகுத்து ‘கோபுர உச்சியில் அரச மரம்’ எனும் நூலாக 2017-இல் வெளியிட்டேன். அந்த நூலில் நான் ரசித்த ஹைக்கூ ஒன்று;
ஓய்வெடுக்க நினைக்கும் இலைகள்
மெல்ல அசைத்துப் பார்க்கும்
காற்று.’
இந்த ஹைக்கூ நூல் பலரின் பாராட்டைப் பெற்றதோடு, ‘பொதிகை மின்னல்’ வழங்கும் சிறந்த ஹைக்கூ நூலுக்கான பரிசினையும் வென்றது. மிகுந்த உற்சாகத்தோடு கவிதைகளையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் எழுதத் தொடங்கினார். தாம்பரத் திலிருக்கும் அவரது மகனின் வீட்டிற்கு வரும்போதெல் லாம், எனது அலுவலகத்திற்கும் வந்து, எழுதியவற்றையெல்லாம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். 2018-இல் ‘வானத்தின் முகவரி’ ஹைக்கூ நூலும், ‘இலவசமா சிரிங்க’ ஜோக்ஸ் நூலையும் வெளியிட்டார்.
29.03.1954 அன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பேட்டை கிராமத்தில் பிறந்த மல்லிகை தாசன், எம்.காம்., எம்.எட்., எம்.ஃபில்., படித்துவிட்டு, முதுகலை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார். 22 ஆண்டுகால கல்விப்பணியில் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 9 ஆண்டுகளாக பணிபுரிந்து, 2012-இல் ஓய்வுபெற்றார். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலராக 13 ஆண்டுகள் செயலாற்றி, 9 கிராமங்களில் 10 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்திய பெருமைக்குரியவர்.
கல்லூரியில் படிக்கிறபோதே நூலகத்திற்குச் சென்று, நூல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர், ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதி, அவை பத்திரிகை களில் 1974-ஆம் ஆண்டிலேயே வெளியாயின. ‘கண்ணஞ்சல்’ எனும் ஹைக்கூ கவிதை நூலும், ‘சிரிப்போம் ஜெயிப்போம்’ எனும் நகைச்சுவைத் துணுக்கு நூலும் 2019-இல் வெளியானது.
நகைச்சுவை மன்றம் என்ற அமைப்பை வாலாஜா பேட்டையில் தொடங்கி, அதன் தலைவராக இருந்து, மாதந்தோறும் கூட்டம் நடத்தினார். மேலும், வாலாஜா அரசு கிளை நூலக வாசகர் வட்டத் தலைவராக 20 ஆண்டுகாலமாகச் செயல்பட்டும் வந்தார். அவரது நான்காவது ஹைக்கூத் தொகுப்பாக ‘பூச்சூடும் நீர்க்குமிழி’ எனும் நூலை ஆர்வத்துடன் தொகுத்துவந்தவர், கடந்த 2021 மே-20-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். ‘ஓய்வென்பது அரசுப் பணிக்குத்தான், எனது பணிக்கில்லை’ என்கிற எண்ணத்தில் உற்சாகத்தோடு எழுதியும் இயங்கியும் வந்த கவிஞர் மல்லிகைதாசனுக்கு மரணம் நிரந்தர ஓய்வைத் தந்துவிட்டது.
கவிஞர் கா.அமீர்ஜான் :
இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டில் பிறந்து, உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கவிதைகளைக் கடந்த ஐம்பதாண்டுகளாக எழுதி வந்தவர் கவிஞர் கா.அமீர்ஜான். கவிதைத் தளத்தில் தீவிரமாக இயங்கிய இவரின் கவிதைகள், தமிழகத்திலிருந்து வெளிவரும் அனைத்துச் சிற்றிதழ்களிலும் இடம்பெற்றன. சென்னையில் படைத்துறை உடைத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தையல் தொழிலாளர்கள் சங்கம் நடத்திய ‘உலக தையற்கலைஞன்’ இதழ் தொடங்கி, சுந்தர சுகன், கவிதை உறவு, இனிய உதயம், இனிய நந்தவனம், ஏழைதாசன், சங்கு என இவர் எழுதாத இதழ்களே இல்லை எனலாம். திரைப் படங்களிலும் சில பாடல்களை எழுதியுள்ளார். 2016-ஆம் ஆண்டில்தான் இவரது முதல் கவிதை நூல் ‘வசப்படாத வார்த்தைகளுடன்…’ வெளியானது. ‘அன் பென்று எதனையும் சொல்…’ என்று முதல் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும், ‘என் பிள்ளைகளின் நிமித்தம் எழுதப்படா நாட்குறிப்பாய் நானும்…’ என்று கடைசிக் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும் மட்டுமில்லாமல், தொகுப்பு முழுவதுமான கவிதை களில் உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து எழுதியிருப்பார். படிமங்களாய் நீளும் கவிதை களில் அழகியலும் அரசியலும் சேர்ந்தே பயணிக்கும் அழகை, அமீர்ஜானின் கவிதைகளில் கண்டு ரசிக்க லாம். செறிந்த வார்த்தைகளால் சுருக்கென முடிவடைந்து, மேலும் நாம் யோசிக்க இடமளிக்கும் கவிதைகளைப் படைத்தவர் கா.அமீர்ஜான். 2021-இல் ‘குடையற்றவனின் மழை’ எனும் இவரது கவிதை நூலினைப் படைப்புக்குழுமம் வெளியிட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க திருநின்றவூர் கிளையின் தலைவராக இருந்து சிறப் பாகச் செயல்பட்டார். ஹைக்கூ கவிதைகள் குறித்த தெளிவும் புரிதலும் கொண்டவர்.
நிலா இரசிக்குமோ
முறியும் கிளையில் பறவை
ஓவிய அலையில் படகு’ -எனும் இவரது ஹைக்கூ கவிதை, கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டியில் பரிசினை வென்றது.
இளைய வயதினரிடம் கூட மிகுந்த அன்புட னும் மரியாதையுடனும் பேசும் பண்பாளர். கடந்த மே 24 அன்று தனது 70-ஆவது வயதில் மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.
கவிஞர் செல்லம் ரகு :
ரகுராமன் எனும் இயற்பெயரு டைய கவிஞர் செல்லம் ரகு, ஒரு ஹோமியோ மருத்துவர். கடந்த 25 ஆண்டுகளாகத் திருப்பூரில் இமினோ லேப் & ஹெல்த் கேர் மருத்துவ நிலையத்தை நடத்திவந்தார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவருட னான நட்பு எனக்கு ஏற்பட்டது என்றாலும், நீண்டகாலமாகப் பழகிய நண்பரைப்போல் மிகவும் நெருக்கமாகிப் போனார்.
செல்லம் ரகு எழுதிய ‘நினைக்க முளைக்கும் சிறகுகள்’, ‘இனிதினும் இனிது காதல்’ ஆகிய கவிதை நூல்களை எனக்கு அனுப்பி யிருந்தார். படித்துவிட்டு நானும் எனது விமர்சனத்தைப் பகிர்ந்து கொண்டேன். தமிழில் புதிதாக ஹைக்கூ கவிதை நூல் எது வந்தாலும் அவருக்கும் அனுப்பி வைப்பேன். மிகுந்த ஆர்வத்தோடு படித்தவர், ஹைக்கூ கவிதைகளை எழுதத் தொடங்கினார். ‘விடியலின் முகவரிகள்’ ஹைக்கூ கவிதை நூலை 2018-ஆம் ஆண்டில் கொண்டுவந்தார். அந்த நூலுக்கான முன்னுரையை நான் எழுதினேன்.
‘பள்ளத்தில் சரிந்த லாரி
பாய்ந்தோடுகிறது ஆறாக
பிறப்பிடத்தை நோக்கி தண்ணீர்.’
என்ற கவிஞரின் ஹைக்கூ கவிதையொன்று, இன்றைக்கு தாகம் தணிக்கும் குடிநீர், வியாபாரப் பொருளாகிப்போன அவலத்தைச் சரியாகச் சு (கு)ட்டுகிறது.
‘இகரமுதல்வி’ (வடுகப்பட்டி) எனும் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தும், தேனியில் செயல்படும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தலைவராக இருந்தும் பல இலக்கிய நிகழ்வுகளைத் திறம்பட நடத்தினார் திருப்பூருக்கு 2019-ஆம் ஆண்டு சனவரில் நான் சென்றிருந்தபோது, என்னை அன்போடு உபசரித்து நட்பு பாராட்டினார். ஆண்டுதோறும் திருப்பூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், திருப்பூரைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்களுக்கெனத் தனியாக ஒரு அரங்கினை அமைத்து, அவரே உடனிருந்து அதைக் கவனித்துக்கொண்டார். கண்காட்சிக்கு வருவோரிடம் பிறர் எழுதிய நூல்களையும் ஆர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். தமிழகம் முழுவதுமுள்ள படைப்பாளர்கள் அனைவரோடும் இனிய நட்புறவை வளர்த்தார்.
ரென்கா, சென்ரியு, ஹைக்கூ கவிதைகளடங்கிய ‘இனி எல்லாம் சுகமே’ எனும் நூலினை 2020-இல் வெளியிட்டார். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் 2020-இல் ‘மீண்டெழத் துணிவோம்’ எனும் கூட்டுத் தொகுப்பொன்றையும் வெளியிட்டார். ஹைக்கூ தொகுப்பு நூலொன்றை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மே 27-ஆம் தேதி மாலை கவிஞர் செல்லம் ரகு காலமானார் என்றறிந்தபோது, மனம் கலங்கிப்போனது. இதுபோல் இலக்கியப் பேரிழப்புகளையும் நாம் சந்தித்தபடியே இருக்கிறோம்.
‘மனிதர்களைக் கொன்றழிக்கும் கொரோனாவே… உனக்கு மரணம் எப்போது?’ என்று கோபத்தோடு கேட்பதைத் தவிர வேறென்ன செய்வது..?