வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
-என்பது வள்ளுவப் பேராசானின் எச்சரிக்கை.
வருகிற ஆபத்தை உணர்ந்து, முன் கூட்டியே தடுத்துக் கொள்ளாவிட்டால், நெருப்பின் அருகே வைக்கோலைப் போல் எரிந்து அழியவேண்டிவரும் என்பதுதான் இதன் பொருள்.
இந்த எச்சரிக்கை உணர்வு ஆள்வோர்க்கு இல்லாததால்தான் இன்று நாட்டையே மரண அச்சம் தனக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது.
*
கொரோனா என்கிற சீனா பற்றவைத்த வைரஸ் நெருப்பு, உலக நாடுகளை எல்லாம் பதறவைத்துக் கொண்டி ருக்கிறது. குபீர் குபீரென மின்னல் வேகத்தில் பரவும் நோய்த்தொற்றால் கொத்துக் கொத்தாய் மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த உயிர்க்கொல்லி நோய், இப்போது இந்தியாவிற்குள்ளும் அடாவடியாக நுழைந்து உயிர்வேட்டையை ஈவு இரக்கமில்லாமல் நடத்திக்கொண்டிருக்கிறது கொரோனா.
மகாராஸ்டிரா, கேரளாவுக்கு அடுத்து இப்போது நம் தமிழகம் கொரோனா தொற்றில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகம் இதில் முதலிடத் துக்குப் போய்விடுமோ என்ற பதைப்பு, நம் எல்லோரிடமும் மிகுந்திருக்கிறது.
நம் வக்கற்ற ஆட்சியாளர்களின் அலட்சியத்தால்தான் இந்தக் கொடூர கொரோனா, இந்தியாவிற்குள் நுழைந்திருக் கிறது. சீனாவில், அது தன் அதகள ஆட்டத்தை ஆரம்பித்த போதே மோடி அரசு, சுதாரித்துக் கொண்டிருக்கவேண்டும். வெளிநாட்டிலிருந்து கொரோனா நோயாளிகள் இங்கே நுழையாதபடி பாதுகாப் புக் கோட்டையை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைபடாத மோடி அரசு, இந்த நேரத்தி லும் மதவெறிகொண்டு, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை அடாவடியாய் ஒடுக்குவதிலேயே தீவிரம் காட்டியது. இது போதா தென்று, மிதமிஞ்சிய தன் அதிகார வெறியால், கொரோனா நேரத்திலும், மத்திய பிரதேசத்தில் இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே கவனமாக இருந்தது. இது எவ்வளவு பெரிய ஜனநாயகப் படுகொலை?
*
கொரோனா, திடீரென்று இங்கே குதித்துவிடவில்லை. அது, ஜனவரியிலேயே இந்தியாவிற்குள் காலெடுத்து வைத்துவிட்டது. சீனாவில் உள்ள வூகான் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த கேரளா வைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நோய்வாய்ப்பட்ட நிலையில், ஜனவரி மத்தியில் இந்தியா திரும்பினார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை ஜனவரி 20-ஆம் தேதியே அரசு உறுதிசெய்துவிட்டது. அந்த நொடிலேயே மோடி, நாட்டைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தை அமைத்திருக்க வேண்டாமா? கடந்த இரண்டரை மாதமாக எந்தத் தடையும் இல்லாமல் கொரோனத் தொற்றைப் பரவ விட்டுவிட்டு, இப்போது திடீரென விழித்தெழுந்து, மார்ச் 24-ந் தேதி ஊரடங்கை பிறப்பித் திருக்கிறார் மோடி.
பிப்ரவரி தொடக்கத்திலேயே மோடி அரசுக்கு கொரோனாவின் வீரியம் தெரியும். அதனால்தான், பிப்ரவரி 10-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையில் பேசிய இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன்.. தானாக முன்வந்து ஒரு எச்சரிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்...
நமது நாட்டில் இதுவரை கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சீனாவின் வூஹானி லிருந்து வந்தவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் மனிதர்களின் இருமல், தும்மல் மூலம் இது பரவுகிறது. அதனால் ஜனவரி
18-ல் இருந்தே விமானப் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டதோடு,
வருவதோடு, நோவல் கொரோனா வைரஸ் மத்திய அரசு, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து பரவுவதைத் தவிர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என்று அப்போதே நோயின் தன்மை பற்றியும் அது பரவும் வேகம் பற்றியும் தெரிவித்திருக்கிறார். அதன்பின்னும் கூட, இது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை.
*
கடந்த 24-ந் தேதி, 21 நாள் முடக்கத்தைத் திடீரென அறிவித்த மோடி, நாடு முழுக்க அங்கங்கே உள்ள வெளியூர் மக்கள், தங்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்லக் கூட அவகாசம் தரவேண்டும் என்று நினைக்க வில்லை. இதனால் மக்கள் அங்கங்கே அச்சத்தோடு திரளும் மோசமான நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, டெல்லியில் கூலிவேலை செய்து பிழைத்து வந்த லட்சக் கணக்கான வெளி மாநிலக் கூலித் தொழிலாளர்கள், 21 நாள் எங்கே போய் முடங்குவது என்று தெரியாமல் தவித்தார்கள். அவர்களைக் கணக்கெடுத்து முறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பீதியுற்ற அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் தப்பியோடும் மன நிலையில், டெல்லி ஆனந்த் விஹார் பேருந்துநிலையத்தில் லட்சக்கணக்கில் முண்டியடித்ததை ஊடகங்களில் பார்த்து நாடே பதறியது. அந்த நெரிசலில் கொரோனா எந்த அளவிற்கு அவர்களிடையே பரவியது என்பது இனிமேல்தான் தெரியவரும். அதே போல் அன்று உ.பி. மாநிலத் தலைநகரான லக்னோவில் இருந்து பரேலி நகருக்கு சிறப்புப் பேருந்துகளில் சென்ற கூலித் தொழிலாளர்களை, குடும்பம் குடும்பமாக நடுரோட்டில் உட்காரவைத்து, வஜ்ரா வாகனம் மூலம் ரசாயனக் கிருமி நாசினியை அவர்கள் மீது அடாவடியாகப் பீய்ச்சியடித்தது போலீஸ். மிருகங்களைப் போல் அந்தக் கூலித்தொழிலாளர் குடும்பங்கள் நடத்தப்பட்ட விதம், மிகக்கொடூரமான உரிமை மீறலாகும். இப்படி முடக்கத்தின் போதே அன்றாடங் காய்ச்சிகளைப் பாடாய்ப்படுத்திய அதிகாரவர்க்கம், மற்றவர்கள் பல்வேறு நிகழ்ச்சி களுக்காகக் கொரோனாக் காலத்திலேயே கூடிக் கும்மியடித்ததைத் தடுக்கவில்லை.
*
மார்ச் 13, 14,15 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இஸ்லாமிய தவ்பீக் அமைப்பினர், ஆயிரக் கணக்கில் திரண்டு, மூன்று நாள் மாநாட்டை நடத்தினர். அதில் மலேசியா, இந்தோனேசியா, ஈரான், அபுதாபி, துபாய், கிர்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மார்க்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டை மோடி அரசும் டெல்லி அரசும் எப்படி அனுமதித்தது என்பதற்கு பதிலில்லை?
ஆனால் இப்போது, அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான், கொரோனாத் தொற்று இந்தியா முழுக்கப் பரவியதாக சித்தரிக்க முனைகிறார்கள். இங்கு நிகழும் கொரோனா பாதிப்பிற்கும், அது ஏற்படுத்தும் மரணங்களுக்கும், இவர்களை மட்டுமே குற்ற வாளியாக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இப்படியொரு பிண அரசியலையும், மத அரசியலையும் கையில் எடுப்பதை அதிகாரவர்க்கம் உடனடியாகக் கைவிடவேண்டும்.
டெல்லி நிஜாமுன் மசூதியில் கூடியவர்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் பேர்கள்தான். ஆனால் கொரோனா இந்தியாவிற்குள் ஜனவரியிலேயே காலெடுத்துவைத்த நிலையில், பிப்ரவரி 24-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரெம்ப், இந்தியாவுக்கு வந்தாரே... அவருடன் அவரது அமெரிகக்க் குழுவினர் 350 பேரும் அணிவகுத்து வந்தார்களே... அவர்களை வரவேற்று, ஆமதாபாத்தில் லட்சக்கணக்காணவர்களைத் திரட்டிவைத்துக் கொண்டு "நமஸ்த்தே டிரம்ப்' நிகழ்ச்சியைப் பெரும் கொண்டாட்டமாக நடத்தினாரே மோடி, அது எவருக்கும் நினைவில் இருக்காது என்று அதிகரவர்க்கம் மனப்பால் குடிக்கிறது. இப்போது, ட்ரெம்ப் ஆளும் அமெரிக்காவில்தான் கொரோனா அதிகமான பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அங்கே இந்த 2-ந் தேதி நிலவரப்படியே ஏறத்தாழ 2 லட்சம் பேர் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. 25 கோடி மக்கள் அங்கே வீட்டுக்குள் அச்சத்தோடு முடங்கியிருகிறார்கள். ட்ரெம்ப் இங்கே வந்தபோது அந்த அமெரிக்க டீமில் எவருக்கும் கொரோனா இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
ஆனால் குற்றச்சாட்டை அந்த சிறுபான்மை சமூகத்தினர் தலையிலேயே வைக்கப் பார்ப்பது எப்படி சரியானது? அதுமட்டுமல்ல, பிப்ரவரி 21-ல் ஒன்றரை லட்சம் பேரை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் தனது ஈஷா மையத்தில் திரட்டிவைத்துக் கொண்டு, மகா சிவராத்திரி கொண்டாட்டம் என்று ஜக்கி போட்ட ஆட்டத்தை நாடே பார்த்தது. அதில் ஏராளமான வெளிநட்டவர்கள் கலந்துகொண்டு. கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். அங்கே கொரோனா வைரஸ்கள், ஜக்கியின் கொண்டாட்டத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்குமா? ஆனால் ஜக்கி தரப்போ, "எங்கள் தரப்பில் எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை' என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டது. அங்கே கூடிய அத்தனை பேருக்கும் கொரோனா பரிசோதனையை நடத்திவிட்டாரா ஜக்கி? அவர் யாருக்குக் காது குத்துகிறார்?
இப்படி கோரொனாவைத் தோரணம் கட்டி எல்லோருமாக வரவேற்றுவிட்டு, பழியை ஒரு சமூகத்தின் மீது மட்டும் போடுவது கேடுகெட்ட அரசியலாகும். இது "ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு' என்பது போன்ற மன நிலையாகும்.
சீனாவில் கொரோனா ஆட்டம் போட்ட போதே நாட்டின் எல்லைகளை மூடாமல் கொட்டாவிவிட்டுவிட்டு, "அவர்களால்தான் கொரோனா, இவர்களால்தான் கொரோனா' என்று கூப்பாடு போட்டு, மலின அரசியலைக் கையில் எடுப்பது வெட்கக்கேடானது.
*
நாடே பேராபத்தில் சிக்கியிருக்கும் இந்த நேரத்தில் மத அரசியலையும் பிண அரசியலையும் கை விட்டுவிட்டு, நாட்டு மக்களை எல்லாவகையிலும் பாதுகாப்பதே அறிவுடைமை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகார வர்க்கம் உடனடியாகக் கையில் எடுக்கவேண்டும்.
*
கொரோனா விவகாரத்தில் தமிழகத்தின் நிலவரமும் நாளுக்கு நாள் ஆபத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலவரம். இங்கே மருத்துவர் களும் செவிலியர்களும் சுகாதாரப் பணியாளர்களும், காவல்துறையினரும் இரவு பகலாகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு, கொரோனா வுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மன நெகிழ்வோடு நாம் பாராட்ட வேண்டும்.
எனினும், இங்கே பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் போதுமான அளவிற்கு எடுக்கப்படவில்லை. கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடங்கி இத்தனை நாள் ஆகியும் 2-ந் தேதி வரை ஏறத்தாழ 2,800 பேருக்குதான் கொரோனா பரிசோதனையே நடத்தப்பட்டிருக்கிறது. அதில்தான் மொத்தம் 309 பேருக்கு கொரோனாவை உறுதிசெய்ததாக அறிவித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கைக் கிடுகிடுவென உயரும் என்று மருத்துவத் துறையினரே அஞ்சுகிறார்கள். போதுமான மருத்துவ உபகரணங்கள் இன்னும் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் நிதியை வாரி வழங்கவேண்டிய மத்திய அரசின் கருணை பார்வையும், தமிழகத்தின் பக்கம் இன்னும் திரும்பவில்லை. இன்னொரு பக்கம், அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் மக்களுக்கு, இன்னமும் கூட முகக் கவசமான "மாஸ்க்' கிடைக்கவில்லை. எல்லா இடத்திலும் தட்டுப்பாடு நிலவுகிறது. சுத்தமாகக் கைகழுவச் சொல்லி ஓயாமல் பிரச்சாரம் செய்கிறார்களே ஒழிய, அதற்குத் தேவையான கிருமி நாசினியான "சானிட்டரைசரை'க் கூட மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யவில்லை.
ஒரு பக்கம் அரசாங்கங்களே இங்கே கொரானாவை நுழைய அனுமதித்துவிட்டு இன்னொரு பக்கம் ஊரடங்கு முடக்கம் என்று மக்களை அவரவர் வீடுகளில் தனிமைச் சிறையில் வைத்திருக்கிறது. அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை தினமும் மதியம் 2 மணிவரை வாங்கலாம் என்று அறிவித்ததால்,அந்த நேரத்தில் வீடடங்கி இருந்தவர் களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கும்பலாய்த் திரளவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. இவற் றைத் தடுத்து, பொதுமக்களுக்குத் தேவையானதை அவர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக் கும் திட்டம் எதுவும் இன்னும் கூட உருவாக்கப்படவில்லை.
இந்த நேரத்தில் ரேசன் கார்டு தாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண நிதி அறிவித்திருக்கிறது எடப்பாடி அரசு. இதை ரேசன் கடைகளில் வழங்கினால் பெரும் கூட்டம் முண்டியடிக்கும். அது இன்றைய சூழலில் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அதை வீடுவீடாகச் சென்று வழங்கவேண்டும் என்று, வழக்கொன்று நீதிமன்றத்தில் காத்திருக்கிறது.
நிவாரண உதவிகளையும் கூட தொற்றுக்கு இடமளிக்காத வகையில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. எனினும், அன்றாடம் காய்ச்சிகளையும் பாமரர்களையும் பாதுகாக்கும் நிவாரணத் திட்டங்கள் இங்கே இன்னும் வகுக்கப்படவில்லை என்பது பெரும் வருத்தத்திற்குரியது.
இதற்கிடையே அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்வோரையும் சில இடங்களில் வழிமறிக்கும் காவலர்கள், அவர்களை மிரட்டித் துரத்துவதற்கு பதிலாக, அவர்களை அடித்து உதைத்துச் சித்திரவதை செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகிறது.
கூலித்தொழிலாளிகள், வீடற்றவர்கள், சாலையோர வாசிகள் என பாமரமக்கள் எல்லோரும் வேலையின்றியும் கூலியின்றியும் இப்போதே அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடுகிறார்கள்.
அவர்களுக்கான வாழ்வாதாரம் பற்றிப் பேச இங்கே யாருமில்லை.
கொரோனாவில் இருந்து இப்படிப்பட்ட பாமரர்கள் தப்பினாலும், பசி என்னும் கொடூர அரக்கன், அவர்களை வேட்டையாடக் காத்திருப்பதைக் கூட ஆட்சியாளர்கள் இன்னும் உணரவில்லை.
-கவலையோடு,
நக்கீரன்கோபால்