தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’
என்பது வள்ளுவர் வாக்கு. மனசாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரை அவரது மனசாட்சியே தண்டிக்கும் என்பது இதன் பொருள். ஆனால் இதற்கு மாறாக மனசாட்சியே இல்லாமல் பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. அதனால் காலம்தான் அவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று மக்கள் சபியாய் சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்றும் அது சமூகப் பரவலாய் மாறவில்லை என்றும் திரும்பத் திரும்ப அபாண்டமாய்ப் புளுகிக் கொண்டிருக்கிறார் மோசடி முதல்வரான எடப்பாடி. ஆனால் உண்மை நிலையோ அதிரவைக்கும் அளவிற்கு மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதயத்தைப் பிடித்துக்கொண்டு படியுங்கள். உள்ளத்தைப் பதறவைக்கும் உண்மையான நிலவரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். .
கடந்த மாதத்தில மட்டும், அதாவது ஜூன் 30-ந் தேதியில் இருந்து ஜூலை 30 வரையிலான ஒரே மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் ஒரே மாதத்தில் கொரோனா நோயாளிகளாக ஆகியிருக்கிறார்கள். அதைவிடவும் அதிர்ச்சிச் செய்தி என்னவென்றால், இந்த ஒரு மாதத்தில் மட்டும்... 2,636 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகி இருக்கிறார்கள். அட வெட்கம் கெட்டவர்களே! இதுதான் கொரோனா கட்டுக்குள் இருக்கும் லட்சணமா? இந்தப் படுபாவிகள், தங்கள் பிழைப்பிற்காகவும் சுரண்டிக் கொழுப்பதற்காகவும் எல்லா வகையிலும் கொரோனாவை உரம்போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிற்குள் ஜனவரி இறுதியிலேயே கொரோனாத் தொற்று நுழைந்தாலும், அது மார்ச் 4 வரையில் தமிழகத்திற்குள் நுழையவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்திலாவது கொரோனா தமிழகத்தில் நுழையாதபடி தனது வாசல்களைப் பாதுகாப்பாக எடப்பாடி அரசு மூடியிருக்கலாம்.
அப்படிச் செய்யாததால் மார்ச் 5-ல் காஞ்சிபுரம் நபர் மூலம் இங்கே கொரோனத் தொற்றுக் கணக்கு ஆரம்பமானது. இந்த எண்ணிக்கை, கடந்த ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி தமிழகம் முழுக்க 90 ஆயிரத்து 167 பேர் என எகிறியிருந்தது. நாம் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டபடி அது ஒரே மாதத்தில் ஜூலை 30-ந் தேதி 2 லட்சத்து 39 ஆயிரத்து 978 என்ற எண்ணிக்கையை அசுரவேகத்தில் தொட்டிருக்கிறது.
அதேபோல் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா மரண எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், ஜூன் 30-ந் தேதிவரை 1,201 என்று இருந்தது.
அதுவும் ஒரே மாதத்தில் ஏறத்தாழ 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அதாவது 3 ஆயிரத்து 838 பேர் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. ஜூலை 30-ந் தேதி மட்டும் 97 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இப்படி இதுவரை மட்டும் ஏறத்தாழ நான்காயிரம் குடும்பங்களின் தாலியை அறுத்த பெருமையை இதன் மூலம் எடப்பாடியின் கொலைகார அரசு எட்டிப்பிடித்திருக்கிறது. இப்படி தாலியறுத்து 4 அயிரம் குடும்பங்களைக் கதறவிட்டிருக்கும் மாபாவிகள் நன்றாக இருப்பார்களா?
*
மக்களைக் கொரோனா ஆபத்தில் தொடர்ந்து சிக்க வைத்தபடியே, தனது கலெக்ஷன் திருவிழாவை கேடுகெட்ட எடப்பாடி அரசு நடத்திக் கொண்டே இருக்கிறது. இன்று கொரோனா, பெரும் உயிர்வேட்டையைத் தாறுமாறாக நடத்திக்கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முழுமுதல் காரணம் எடப்பாடியும் அவரது வில்லங்க ஆட்சியும்தான். ஊரடங்கைத் தளர்த்தினால் கொரோனாத் தொற்றின் வேகம் அதிகமாகும் என்பது தெரிந்தும், இந்த சுயநல சுரண்டல் அரசு, எந்தக் கவலையும் இல்லாமல் தளர்வு என்ற பெயரில் ஆபத்தின் கதவுகளைத் திறந்துகொண்டே இருக்கிறது.
இப்போது ஏழாவது முறையாக ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி 30-ந் தேதி அறிவித்திருக்கும் இந்த ஊரடங்கும், உண்மையான ஊரடங்குதானா? என்ற சந்தேகம் வருகிறது.
ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டிருக்கும் இந்த ஏழாவது ஊரடங்கில்... ரயில், பஸ், விமான போக்குவரத்தைத் தரவிர ஏறத்தாழ அனைத் திலும் தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஓட்டல்களில் இனி உட்கார்ந்து சாப்பிடலாம். கடைகளை இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம். சிறு வழிபாட்டுத் தலங்களில் வழிபடலாம். என்றெல் லாம் எடப்பாடியின் அறிக்கை மக்களின் உயிரோடு விளையாட்டு காட்டுகிறது.
கொரோனாவை வைத்துக் கொண்டு அதன் சாக்கில் இவர்கள் எல்லோருமாகக் கூடிக் கும்மியடித்து, தில்லுமுல்லுத் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கொரோனாவை முழுமையாக ஒடுக்கவேண்டுமே என்ற அக்கறை கேடுகெட்ட எடப்பாடி அரசுக்கு இல்லவே இல்லை.
நம்மால் இன்னும் கொரோனாவைத் தடுக்க முடியவில்லையே என்ற வெட்கம் கூட இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களை முடக்கி வைத்திருக்கிறோமே என்ற மன உறுத்தல் கூட இல்லாமல், ஏழாவது முறையாக ஊரடங்கை அறிவித்திருக்கிறது எடப்பாடி அரசு.
ஏழாவது முறையும் இங்கு ஊரடங்கு தேவை என்கிற போதே, ஆறுமுறை பிரகடனம் செய்யப்பட்ட இந்த ஊரடங்குகளால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. ஏன் இவர்களால் கொரோனா வைக் கட்டுப்படுத்த முடியவில்லை?
கொரோனா நோயை உண்டாக்கும் கோவிட் 19 வைரஸ், தானாகத் தேடிச் சென்று மனிதர்களை வேட்டையாடுவதில்லை. அந்தக் கிருமியை யாராவது அப்பிக் கொண்டு, அதை முகத்துக்கு அருகே கொண்டு சென்றால்தான், அது சுவாசத்தின் மூலம் நுரையீரலில் புகுந்து கொண்டு அவர்களைத் தாக்குகிறது.
அது தானாக வீடு வீடாக விருந்தாடியாகச் செல்லக் கூடிய நோய் அல்ல. நோயாளிகள் நடமாடும்போது அவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அது எச்சில், சளி ஆகியவற்றின் மூலம்தான் பரவுகிறது. நோய்ப்பட்ட நபரை, எங்கும் நகராமல் ஒரே இடத்தில் முடக்கிவைத்து சிகிச்சை கொடுத்தாலே அவரும் குணமாவார் அடுத்தவருக்கும் கொரோனா பரவாது. சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும் உண்மை யாகும் .
கொரோனா பரவலைத் தடுக்கும் எண்ணம் உண்மையிலேயே இந்த அரசுக்கு இருக்குமானால், மக்களின் நடமாட்டத்தை முழுதுமாக தடுத்திருக்க வேண்டும். தடுத்த நிலையில் அதிரடி மருத்துவ சிகிச்சையைப் பாதிக்கப்பட்டோருக்கு கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இரண்டாம் மூன்றாண்டாம் ஊரடங்கிலேயே கொரோனாப் பரவலை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு, நம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கலாம்.
இதெல்லாம் தெரிந்தும், ஊரடங்கில் தளர்வு களை ஏற்படுத்தி, எல்லோரையும் கண்டபடி வேண்டு மென்றே நடமாட விட்டு நோயைப் பரவவிட்டு இருக்கிறது ஏடாகூட எடப்பாடி அரசு. ஏனென்றால் நோய் பெருகப் பெருகத்தான், அதன் பேரில் செலவுக் கணக்கை வரம்பில்லாமல் எழுதலாம். கொள்ளையடிக்கலாம். அதற் காகத்தான் கொரோனாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாய், கொரோனா பெருக தளர்வுகளை ஏற்படுத்தி, அதற்கு வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.
உபகரணக் கொள்முதலில் இஷ்டத்துக்கும் இவர்கள் நடத்திய விளையாட்டை உச்ச நீதிமன்றமே கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இப்படிப்பட்ட தில்லுமுல்லுகளை நடத்தியே, இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாகக் கணக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இவர்கள் இந்த 10 ஆயிரம் கோடியை விழுங்குவதற்காக இதுவரை 4 ஆயிரம் பேரின் உயிரை விலையாகக் கொடுத்திருக்கிறது தமிழகம். கொரோனா மூலம் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் குடிக்கப்போகிறதோ இந்த எமகாதக அரசு? எடப்பாடி அரசு. இதில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கினார்களோ, அந்தக் கொரோனா வுக்கே வெளிச்சம்.
இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் மட்டும் நாளொன்றுக்கு 2 கோடி ரூபாய்வரை சுருட்டுகிறார்கள் என்கிறது, விபரமறிந்தவர்கள் தரப்பு. கொரோனா வுக்கான பாதுகாப்பு உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் என எல்லாவற்றிலும் கொள்ளையடித்துவருவதோடு, இப்போது தமிழகத்தில் இருக்கும் 2 கோடியே 10 லட்சம் ரேசன் கார்டுகளுக்கும், அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா 2 மாஸ்க் வீதம் விநியோகிக்கப் போவதாகவும் இந்த ஊழல் அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான மாஸ்க்கை யாரிடமிருந்து என்ன விலைக்கு, எவ்வளவு வாங்கப்போகிறார்கள் என்பதெல்லாம் மூடு மந்திரம். இதில் எவ்வளவு விழுங்கப் போகிறார் கள் என்பதற்கெல்லாம் கணக்கே இல்லை. அவர்கள் சொல்வதுதான் கணக்கு.
*
சென்னை கோயம்பேட்டில் கொரோனா பஸ்டர் ஆகிறவரை ஏறத்தாழ ஒரு மாத காலம், கைகட்டி வேடிக்கை பார்த்தது அரசு. பின்னர் சென்னை முழுக்க நடமாட்டத்தை அனுமதித்து சென்னையும் அதைச் சார்ந்த மாவட்டங்களையும் கொரோனா மண்டலங்களாக மாற்றியது இந்தக் கேடுகெட்ட அரசு.
அதனால்தான், சென்னையில் இருப்பவர்களை பரிசோதித்து அனுப்ப வேண்டுமே என்ற அறிவு கூட இல்லாமல், பல லட்சம் பேரை தங்கள் சொந்த மாவட்டங்களுக்கும் ஊர்களுக்கும் அனுப்பியது இந்த புத்தி கெட்ட அரசு. சென்னைப்பகுதியில் இருந்தால் கொரோனாவிடமிருந்தும், இந்த அக்கறைற்ற அரசிடமிருந்தும் உயிர் பிழைக்க முடியாது என்று பயந்த பலரும் குடும்பம் குடும்பமாக வீடுகளைக் காலிசெய்துவிட்டுத் தங்கள் ஊர்களுக்குகே திரும்ப ஆரம்பித்தனர். அப்படிபோகும் போதே கொரோனா கிருமிகளைத் தங்களுடனேயே அவர் கள் எடுத்துச்சென்று அனைத்து மாவட்டங்களை யும் கொரோனா மாவட்டங்கலாக மாற்றி விட்டார்கள். இந்த நிலைக்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்?
எடப்பாடி அரசின் ஊரடங்குத் தளர்வுகள் தானே?
இவர்கள் அறிவிக்கும் ஊரடங்குத் தளர்வுகளின் பின்னணியில், ’நீங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு அரசிடம் நிவாரண உதவிகளைக் கேட்காதீர்கள். ஊரடங்கைத் தளர்த்துகிறோம். நீங்கள் உங்கள் பிழைப் பைப் பார்த்துக்கொண்டு, உங்களைக் காப்பாற்றிக் கொளுங்கள். நாங்கள் எங்கள் பிழைப்பைப் பார்க்கி றோம்’ என்கிற கருத்துதான் தொக்கி நிற்கிறது.
அதேபோல் எடப்பாடி தனது ஊரடங்கு அறிவிப்பில்...’ஆகஸ்ட் 15ஆம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். கொரோனாவைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எந்த கூட்டத்தையும் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கும் அரசு, சுதந்திர தினக் கொண்டாட்டங்களை எப்படி நடத்துகிறது? சுதந்திர தின விழாவில் மட்டும், நாங்கள் பரவமாட்டோம் என்று கொரோனா வைரஸ்கள் எடப்பாடி அரசிடம் சென்று வாக்குறுதி கொடுத்திருக்கிறதா? என்று தெரியவில்லை.
அதேபோல், ’குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்றும் சொல்கிறது எடப்பாடியின் ஊரடங்கு அறிவிப்பு. ஆனால், எடப்பாடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் மட்டும் நாள்தோறும் அடிக்கல் நாட்டுவிழா, நலத்திட்ட விழா என்று நடத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமாம். இப்படி இவர்கள் நடத்தும் விழாக்களில் கொரோனா பரவவே பரவாதா?
கொரோனா ஊரடங்கு என்பது அவர்களைத் தவிர மற்றவர்களுக்குதான். குறிப்பாக இந்த ஊரடங்கே, எதிர்க்கட்சிகள் கூட்டம் போட்டு தங்கள் ஊழல் முகத்திரையைக் கிழித்துவிடக் கூடாது என்பதற்காகவும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் வரை இப்படியே ஊரடங்கு சாக்கில் எதிர்க்கட்சிகளை ஊமையாக்கிவிடலாம் என்று கனவு காணுகிறது இந்த ஜனநாயக விரோத அரசு.
இப்படி எல்லாவற்றிலும் முரண்பாட்டு மூட்டையாக, இருக்கும் இந்த மனிதாபிமானமற்ற அரசு, இவ்வளவு நாட்களாக முடக்கிவைக்கப்பட்டி ருக்கும் மக்கள் சோற்றுக்கு என்ன செய்வார்கள்? என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. இப்போதே பசி, பட்டினிப் புலம்பல்கள் கேட்கின்றன. ஆனால், இந்த சாத்தான்களின் அரசோ மக்களின் கண்ணீரில் மஞ்சள் குளித்துக்கொண்டிருக்கிறது.
இந்த லட்சணத்தில், மத்தியில் இருக்கும் மோசடி அரசான மோடி அரசு... மக்கள் கொரோனா பீதியில் வீடடங்கி இருக்கும் நேரத்தில்...எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம், என்று மக்கள் எதிர்த்த சட்டங்களை எல்லாம் அவசரகதியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
சுற்றுச் சூழல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் இனி பொதுமக்களின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்கிற, பொது மக்களின் உரிமையைப் பறிக்கும் ’ஈ.ஐ.ஏ.-2020’எனப் படும் சுற்றுச் சூழல் குறித்த சட்ட வரைவை கொண்டு வந்திருக்கிறது.
இந்த அதிர்ச்சி விலகும் முன்பே, குலக்கல்வி முறைக்கு வழி செய்கிற, இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் வால் பிடிக்கிற, இந்துத்துவாவுக்குக் கவரி வீசுகிற, தனது புதிய கல்விக் கொள்கைக்கும் மோடி அரசு, அவசர அவசரமாக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்து சொல்ல ஜூலை 31 வரை காலம் இருக்கும் நிலையிலேயே, மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்த புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது.
இப்படியாக ஒரு பக்கம் மக்களின் உயிரோடு விளையாடும் எடப்பாடி அரசிடமும், இன்னொரு பக்கம் மக்களின் உரிமையோடு விளையாடும் பாசிச மோடி அரசிடமும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது பொதுமக்களின் வாழ்க்கை.
இவர்களிடம் இருந்து மீள என்ன வழியென்று மக்கள் பரிதாபமாக விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
-கவலையோடும் துயரத்தோடும்...
நக்கீரன்கோபால்