பொருளாதார ஏற்றத் தாழ்வின் கொடும் விளைவுகளை இன்னும் ஆழமாக்குகிறது இந்தக் கொரோனா வைரஸ் தாக்குதல் - நியூயார்க் டைம்ஸ் (மார்ச் 25, 2020).
வருமானம் குறைந்த நிலையில் உள்ள மக்கள்தான் பல்வேறுவகைகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப் படுவார்கள் என்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
நியூயார்க் டைம்சின் இந்தக் கூற்றை நாம் இப்படித் தலைகீழாக மாற்றிச் சொன்னாலும் பொருந்தும். கொரோனா வைரஸ் தாக்குதலின் கொடும் விளைவுகளை இன்னும் அதிகமாக்குகிறது இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வு. இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்க சமூக அரசியல் பின்னணியில் அவர்கள் இதைச் சொல்கின்றனர். எனினும் இங்கும் அது பொருந்தும்.
நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களில் வருமானம் குறைந்த எளியவர்கள்தான் அதிகம். ஒருவேளை அவர்கள் நோய்த் தாக்குதலிலிருந்து தப்பித்து இருந்தாலும் பணி இழப்பின் விளைவாகக் குடும்பத்தோடு துன்புறுபவர் களாகவும் அவர்கள்தான் உள்ளனர் என்கின்றனர் இக் கட்டுரை ஆசிரியர்களான மேக்ஸ் பிஷரும் எம்மா புபோலாவும்.
கொரோனோ வைரஸின் பரவலிலும், அதன் உயிர் பாதிப்புத் திறன் பெருகிக் கொண்டே போவதிலும் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெரும்பங்கு வகிப்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. இன்ஃப்ளூயென்சா பரவல் குறித்து ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் ஏழ்மை, சமத்துவ மின்மை ஆகியன நோய்த் தொற்றுப் பரவலிலும் இறப்பு வீத அதிகரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதை நிறுவியுள்ளன.
அது மட்டுமல்ல. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள இது தொடர்பான ஆய்வு மையம் ஒன்றின் இயக்குனர்களில் ஒருவரான பொது நலத்துறை அறிஞர் (public health expert) நிகோல் ஏ. எர்ரட், “ஏற்கனவே உள்ள சமூக ஏற்றத் தாழ்வினால் ஏற்படும் பாதிப்புகள், இப்படியான பேரழிவுகளின் ஊடாக மேலும் மோசமாகின்றது’’ என்கிறார். இது எப்படி.?
ஒவ்வொரு வருமானம் குறைந்த குடும்பமும் இப்படியான கொள்ளை நோய்ப் பரவலின் போது உள்ள பாதுகாப்பு எச்சரிக்கைகளை எல்லாம் மீறிச் செயல்பட பல்வேறு சமூகக் காரணங்களால் உந்தித் தள்ளப்படுகின்றனர் என்பதுதான். இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளல் அவசியம். நீங்கள் கட்டுப்பாடுகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என அவர்கள் மீதே நாம் எளிதாகக் குற்றம் சுமத்தி அகன்றுவிட இயலாது..
கொரோனா தாக்குதலில் இன்று வயதானவர்களும், ஏற்கனவே பல்வேறு வகைகளில் நோய்களின் தாக்குதலுக்கு ஆட்பட்டு இருப்பவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிவோம். தற்போது சில நாடுகள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்த் தாக்குதலால் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியைக் கைவிடுவது குறித்த செய்திகளும் கடந்த சில வாரங்களாக வந்துகொண்டுள்ளன.
கொரோனா தாக்குதலால் மரணம் அடையும் வாய்ப்பு அதிகமானவர்கள் பட்டியலிலும்கூட ஏற்கனவே நோய்த் தாக்குதல்கள், வயது மூப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாகப் பொருளாதார நிலையில் தாழ்ந்து உள்ளவர்கள்தான் உள்ளனர் என்பதும் இன்று பலராலும் சுட்டிக் காட்டப்படுகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இந்நோய்த் தாக்குதல் ஏற்படுத்தும் விளைவுகளைப் பத்து மடங்குவரை அதிகமாக்குகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது, இந்தத் தாக்குதலால் பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிக உயிர் ஆபத்து ஏற்படுத்துகிறது எனச் சொல்லப்பட்டாலும் எதார்த்தத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்குமே கோரோனா தாக்குதல் ஏற்படும்போது உயிராபத்து அதிகமாகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியல் வளர்ச்சியின் ஊடாக முன்னர் குணமாக்குவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்த நோய்களுக்கும் கூட இப்போது மருந்துகள் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன என்பது உண்மைதான். ஆனால் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக நாம் இந்த நோய்களை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாதவர்களாகவே தொடர்கிறோம் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு உரிய நலப்பாதுகாப்புகள் அளிப்பது இன்று நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நவதாராளவாத மாற்றங் கள் (Neo Liberal Economic Policies) இதற்குக் காரணமாகியுள்ளன. சமீபத்தில் இதை எதிர்த்து இத்தாலியின் மிலன் நகரில் வேலைநிறுத்தம் நடந்ததை நியூயார்க் டைம்ஸ் இதழ் சுட்டிக்காட்டுகிறது. இந்திய, தமிழகச் சூழல்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வெளி மாநிலங்களிலிருந்து வந்து எந்தப் பாதுகாப்பும் இன்றி உழைக்கும் தொழிலாளிகளின் நிலை இன்னும் மோசம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரையை நான் தட்டச்சு செய்து கொண்டுள்ளபோது சென்னை மகிந்திரா சிட்டியில் ஜார்கண்டைச் சேர்ந்த 25 தொழிலாளிகள் பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதாகவும் உடனடியாக ஏதும் உதவிகள் செய்யுமாறும் நண்பர்களிடமிருந்து தகவல் வருகின்றது. கொரோனாவை முன்னிட்டு எந்த முன்னேற் பாடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகளும் இன்றி இன்று அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதும், ஒட்டுமொத்தமாகச் சமூக முடக்கம் ஆணையிடப்பட்டுள்ளதும் இத்தகைய நிலக்குக் காரணமாகியுள்ளன. சமூக முடக்கம் இன்று தவிர்க்க இயலாதது என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் அது அடித்தளமக்கள் மத்தியில் ஏற்படுத்த உள்ள உடனடி மற்றும் நீண்டகாலப் பாதிப்புகள் பற்றிய கவலை ஏதும்
அரசுகளுக்கு இல்லை.
கொரோனா வைரஸ் குறித்து முதலில் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று இது ஒரு “great Leveller’’ என்பது. அதாவது இந்த வைரஸ் பணக்காரர் / ஏழை; ஆதிக்க சாதியினர் / தாழ்ந்த சாதியினர் ; ஆண்கள் / பெண்கள் என்றெல்லாம் வேறுபாடு காட்டாமல் எல்லோரையும் சமமாகத் தாக்குவதன் ஊடாக மிகப்பெரிய சமத்துவத்தை நிலைநாட்டும் கருவியாக அமைகிறது எனக் கூறப் பட்டது. இங்கிலாந்து பிரதமர் உட்பட இந் நோய்த் தாக்குதலுக்கு ஆட்பட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இப்படிச் சொல்வதெல்லாம் படு அபத்தம்.
நோய்த் தாக்குதலுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழலுக்குள் யார் வந்தாலும் அவர்களை இந்நோய்க் கிருமிகள் தாக்கும் என்கிற வகையில் மட்டுமே இது உண்மை. மற்றபடி இப்படியாக வேண்டிய பொருள்களைச் சேமித்து வைத்துக் கொண்டு, வீட்டில் வீடியோ பார்த்துக் கொண்டும், செல்போன்களை நோண்டிக் கொண்டும் நேரத்தைக் கடத்தும் சொகுசு இன்று யாருக்கு வாய்க்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். உடல் நலம் தொடர்பாக ஊதியத்து டன் கூடிய விடுப்புகளைப் (sick leave) பெறும் நிலை இன்று பெரும்பாலான தொழிலாளிகளுக்குக் கிடையாது. மூடப்பட்டுள்ள கடைகள், ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் யாருக்கும் இப்படிக் கடைகள் மூடப்பட்ட காலத் திற்கு ஊதியம் கொடுக்கப்படு வதில்லை. துப்;புறவு செய்பவர்கள், தெருக்களில் காய்கறிகள் விற்போர் முதலியவர்கள் உடல்கவசம் முதலான குறைந்தபட்ச பாதுகாப்புகளும் இல்லாமல்தான் இன்று வீதிகளில் அலைகின்றனர்.
“Social distancing’’, “self isolation’’, “stocking up’ - முதலானவையும் இன்று வெற்று வசனங்கள்தான். ஓரளவேனும் வசதி உள்ளவர்கள்தான் இதை எல்லாம் சாதித்துக் கொள்கின் றனர். பொருள்களை வாங்கி “ஸ்டாக் பண்ணுவது என்பதெல்லாம் அன்றா டம் காய்ச்சிகளுக்குச் சாத்திய மில்லை. கிராமப்புற மக்களிடம் முதல் ஒருவாரத்திற்குப் பின் கையில் அன்றாடச் செலவுகளுக்குக் காசில்லாமல் இருப்பதை நான் நேரில் பார்த்துக் கொண்டுள்ளேன். சென்ற நிதி ஆண்டு குறித்த ‘ஆக்ஸ்ஃபாம்’ அறிக்கையின்படி இந்தியாவில் அக் காலகட்டத்தில் உருவான சொத்தில் 73% சமூகத்தில் மேல்தட்டில் உள்ள 1% மக்களுக்கே போய்ச் சேர்ந்துள்ளது. இந்நிலையில் ‘குவாரன்டைன்’ எனும் கருத்தாக்கம் எல்லாம் உண்மையில் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகத்தான் உள்ளது. வீடுகளும், குடும்ப ஆதரவுகளும் அற்று வீதியில் வாழ்பவர்களின் நிலை குறித்துச் சொல்லவேண்டியதில்லை.
கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களின் நிலை இன்னும் மோசமானது. நமது சிறைகள், மனநோய்விடுதிகள் முதலியன குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் இல்லாதவை. மிக நெருக்கமாக இங்கே மக்கள் அடைக்கப் பட்டுள்ள னர். social distancing, self isolation என எதுவும் இங்கே சாத்தியமில்லை. 4.5 இலட்சம் பேர்கள் இன்று இந்திய சிறைச்சாலைகளில் அடைபட்டுள் ளனர். இன்று உச்சநீதிமன்றம் ஏழாண்டுகள் வரை தண்டனை பெற்றுச் சிறையில் அடைபட்டுள்ள வர்களைப் பிணையில் விடுதலை செய்ய ஆணையிட்டுள்ளது. ஆனால் இது எந்தப் பெரிய பலனையும் சிறைக்கைதிகளுக்கு விளைவித்து விடவில்லை. ஒட்டுமொத்தத்தில் சில ஆயிரம் பேர்களே இன்று இந்தியா முழுவதும் விடுதலை செய்யப்பட்டுள் ளனர், அதிலும் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படக் கூடிய நிலையையும் பார்த்தோம்.
வயது மூத்தவர்களை இந்த நோய் அதிகம் பாதிக்கும் என அறிவோம். சிறையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இயற்கை வயதைக் காட்டிலும் பத்தாண்டுகள் கூடுதலாக மூப்படைந்து விட்டவர்கள் எனும் அளவிற்குப் பலவீனமாக இருப்பார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மன நோய் விடுதிகளின் நிலை குறித்து இங்கு யாரும் பேசுவது இல்லை. சமீபத்தில் கொரோனா காலத் தில் மனநோய்விடுதிகளில் உள்ளவர் களின் பிரச்சினைகள் குறித்து டாக்டர் அரவிந்தன் சிவகுமார் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல வேளையாக இந்தக் கொரோனா தாக்குதல் இந்தியாவில் பெரிய தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்த நேர்ந்தால் என்ன மாதிரி விளைவுகள் இப்படிச் சிறைச்சாலைகள், மனநோய் விடுதிகள் ஆகியவற்றில் விளைவிக்கும் என்பதை யோசித்தால் அச்சமாக உள்ளது..
இந்திய நகர்ப்புறங்களில் 40 இலட்சம் பேர்கள் வீடற்று வாழ்கின்றனர். 70 இலட்சம் பேர்கள் அனுமதியற்ற குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இங்கு ஆதாரங்களாகச் சுட்டிக் காட்டியுள்ள கட்டுரைகளில் ஒன்றில் ஒரு மருத்துவர் அன்று தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்மணி பற்றிச் சொல்லியுள்ளது பதிவாகியுள்ளது. அந்த வயதான பெண்மணிக்கு முதல் பரிசோதனையில் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. வீட்டில் அவரைத் தனியே வைக்கச் சொல்லி அந்த மருத்துவர் பரிந்துரைக்கிறார். தன் வீட்டில் தனி அறைகள் ஏதும் கிடையாது. எல்லோரும் குடிசைக்குள் ஒன்றாகத் தான் படுத்து உறங்க வேண்டும். வெளியில் படுக்க வைத்தாலும் தேள், பாம்புகளின் ஆபத்து இருப்பதால் அதுவும் முடியாது என்கிறார் அவரைச் சிகிச்சைக்கு அழைத்து வந்த அவரது மகள். மொத்தத்தில் நோய்த் தாக்குதல் உடையவர்களைத் தனிமைப்படுத்தப்படுவது என்பது இப்படிச் சென்னை போன்ற பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகள், ஒண்டுக் குடித்தன வீடுகள் எல்லாவற்றிலும் கூட சாத்தியமே இல்லை. கிராமப்புறங்களிலும் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளிலும் இது சாத்தியமில்லை.
இது குறித்து யோசிக்கும்போது குடிசைகளில் விபத்துக்கள், வெளியேற்றங்கள் முதலான பிரச்சினை களை ஒட்டி அது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க அம்மாதிரியான பகுதிகளுக்குச் சென்றபோது கண்ட காட்சிகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்தின. சென்னையில் உள்ள சேரிப் பகுதிகளில் ஒன்றான மக்கீஸ் கார்டன் போன்ற இடங்களில் கூவம் நதிக் கரையில் அப்படித் தான் நெருக்கமாக இடைவெளி இல்லாமல் குடிசைகள் உள்ளன. எந்த வசதிகளும் அற்ற இந்தக் குடிசைகளில் நெருக்கமாக வாழும் இந்த எளிய மக்களிடம் “social distancing’ என்றெல்லாம் உச்சரிக்க எத்தனை இரும்பு நெஞ்சம் நமக்கு இருக்க வேண்டும்?
இன்று உச்சரிக்கப்படும் இன்னொரு வசனம் “Work From Home (WFH)’ அதாவது வீட்டிலிருந்து கொண்டு வேலைசெய்வது. ஆனால் இது முழுக்க முழுக்க அலுவலக மேசைகளில் அமர்ந்து வேலைசெய்யும் white collar jobs இல் உள்ளவர்களுக்குத்தான் சாத்தியம். வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று வேலைக்கு வரவேண்டாம் என அனுப்பப் படுகிறார்கள். அவர்கள் மூலம் நோய்த் தொற்று ஏதும் பரவிவிடக் கூடாது என்கிற அச்சம் வீட்டுக்காரர்களுக்கு. அத்தகைய அச்சம் நியாயம் என்றே கொண்டாலும் வீட்டுக்காரர்களில் எத்தனை பேர்கள் அவர்களுக்கு அந்த இடைக்காலத்திற்கான ஊதியம் அளிக்கப் போகிறார்கள்? துப்புறவுத் தொழிலாளிகளுக்குக் குறைந்தபட்சம் முழுமையான உடற் கவச ஆடைகளையாவது நமது நகர நிர்வாகங்கள் அளித்துள்ளனவா?
வீடுகளுக்குள் இல்லாமல் வெளி வேலைகளைச் செய்யும் வேலையாட்களாக இருந்தபோதும் இந்தப் பணியாளர்கள் ஊரடங்குக் காலத்தில் வேலைக்குச் செல்ல வாய்ப்பில்லை.. தினம் அவர்கள் தங்களின் வீடுகளிலிருந்து பணி இடத்திற்குச் செல்ல இப்போது பஸ், இரயில் போக்குவரத்துகளும் கிடையாது.
கொரோனா தாக்குதல் தனக்கு உள்ளதா என ஐயப்படுவோர் அதை உறுதி செய்துகொள்வதும் எளிதாக இருப்பதில்லை. எனக்குத் தெரிந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனை தவிர வேறு எந்தத் தனியார் மருத்துவமனையும் இலவசச் சோதனை எதனையும் அறிவிக்கவில்லை. குறைந்தது 4000 ரூ இந்தச் சோதனைக்குத் தொடக்கத்தில் வசூலிக் கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் சோதனைகள் செய்தாலும் அங்கு சோதனைக்கு வருகிறவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்ததற்கு ஏதேனும் ஆதாரம் காட்ட வேண்டும் எனத் தொடக்கத்தில் கோரப்பட்டது நினைவிருக்கலாம். ஏதோ இன்றளவும் இந்த நோய் ஐரோபிய நாடுகளைத் தாக்கியுள்ளது போல இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளில் தன் வீரியத்தைக் காட்டவில்லை. அப்படியான தாக்குதல் ஏற்பட்டிருந்தால் இங்கு என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை.
நமது நாட்டில் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு, அமெரிக்காவிலேயே முழு இன்சூரன்ஸ் பாதுகாப்பு உடையவர்கள் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் குறைந்தவர்கள்தான். இங்கு இது மிகக் குறைவு, தவிரவும் இது போன்ற கொள்ளை நோய்கள் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களின் விதிகளுக்குள் வருவதில்லை நமது நாடு ஏற்கனவே மதம், சாதி, தீண்டாமை எனப் பிளவுற்றிருக்கும் ஒன்று. கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் வெறும் உடல் சார்ந்த தாக்குதல்களோடு நிறுத்திக் கொள்வதில்லை. இப்படி இங்கு அது ஏற்கனவே உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் ஊதிப் பெருக்குவதற் கும் இது இட்டுச் செல்லும். இங்குள்ள பொருளாதார, சாதீய ஏற்றத் தாழ்வுகளெல்லாம் இதனூடாக மேலும் அதிகமாகும். மதவாத இந்துத்துவ சக்திகள் இன்று கொரோனோ தாக்குதலையும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினையாக ஆக்கியிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.
மக்கள் அவர்கள் ஏழைகள் ஆனாலும் பணக்காரர்கள் ஆனாலும், பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள், அடித்தளச் சாதியினர், மேல்தட்டினர் என்றெல்லாம் பார்க்காமல் யார் பாதிப்புக்குள்ளானாலும் சிறந்த மருத்துவம் அளித்துப் பாதுகாத்தல்தான் எல்லா மக்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் ஆய்வாளர் ஸ்வென் எரிக் மாமெலுன். 1918-ல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய ஸ்பானிஷ் ஃப்ளூ குறித்து விரிவாக ஆய்வு செய்தவர் அவர். அந்த இன்ஃப்ளூயென்சா தொற்று முதலில் தாக்கியது ஏழை எளியவர்களைத்தான். ஆனால் இரண்டாவது அலைத் தாக்குதல் நிகழ்ந்தபோது மிகப் பெரிய அளவில் பணக்காரர் கள் பலியாயினர். ‘சமூக ஏற்றத் தாழ்வுகளை அரசியலாரும் பொது நல அதிகாரவர்க்கமும் கணக்கில் கொள்ளாததே அந்த மிகப் பெரிய அழிவுக்குக் காரணமானது.“ என மாமெலுன் கூறியுள்ளது கவனத்துக்குரியது.