கொரோனா கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். கொரோனாவை விடவும், கொரோனா ஏற்படுத்தும் பீதி பெரும்பாலானோரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது. இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆறாவது முறையாய் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் கூட, அதில் ஆயிரத்தெட்டு தளர்வுகளை அறிவித்துக்கொண்டே இருப்பதால், ஜூன் இறுதியிலேயே கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. உயிர்ப்பலியும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு, நம்பிக்கையூட்ட, கொரோனாவில் இருந்து மீண்டுவந்தவர்களின் கதையை அவர்கள் குரலிலேயே இனிய உதயம் இங்கே தொகுத்துத் தருகிறது. இவர்களின் வாக்குமூலங்கள், பலருக்கும் அனுபவப் பாடமாக அமையலாம். ஆறுதலூட்டலாம். கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிகரமாய் கடக்கும் ஆற்றலைத் தரலாம்.
-நாடன்
பயற்சி மருத்துவர் ஆனந்தி பிரபாகர்:
நான் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யின் பயிற்சி மருத்துவர். 'சமூக இடைவெளி'யென ஊருக்கு உபதேசமளித்தாலும், நிறைய நோயாளிகளைத் தினந்தினம் நெருங்கிப் பரிசோதிக்க வேண்டிய, மருந்து அளிக்க வேண்டிய பணியும் கடமையும் எங்களுடையது. அப்படி கொரொனா பாசிடிவ் ஆன ஒரு நோயாளியிடமிருந்து எனக்கும் என் சக நண்பர்களுக்கும் வந்திருக்கும் என நினைக் கிறேன்.
ஜூன் 11ஆம் தேதி இரவு மருத்துவமனையில் நைட் ஸ்டே. எனக்கு அன்று மாலையிலிருந்து இலேசான உடல் அசதி இருந்தது. இரவு காய்ச்சலும் சேர்ந்து கொண்டிருந்தது. வார்டிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு இரவைக் கழித்தேன்.
அடுத்தநாள் ஜூன் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காய்ச்சல் குறையவேயில்லை. தசைவலி. கெண்டைக் காலில் ஆரம்பித்து அப்படியே மொத்த உடம்பும், என்னால் எழ முடியாத அளவு, வலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அறிகுறிகளைக் கொண்டு எனக்கும் பாசிட்டிவாக இருக்கலாம் என நான் யூகித்துக் கொண்டதால், என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன்.
நேரமாக நேரமாக தலைவலியும் இருமலும் சேர்ந்து கொண்டது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போவது, அதுவும் காய்ச்சல் இருமல் வருவதென்பதெல்லாம் அரிதிலும் அரிதாக நிகழ்பவை. எனவே நிச்சயம் கொரொனா தான் என்பது எனக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது.
அடுத்தநாளே ஸ்வாப் டெஸ்ட்டுக்கு கொடுத்து விட்டு, மீண்டும் வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இந்த நான்கு நாட்களும் என் அறிகுறி களுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஜூன் 14 அன்று ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தது. எனக்கு மட்டுமல்ல.என்னோடு படிக்கும் ஆறு பேருக்கு. நாங்கள் அனைவரும் கொரொனா தனிமைப்படுத்துதலுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டோம்.
நான் ஏற்கனவே கொஞ்சம் யூகித்து வைத்திருந்த தால், ரிசல்ட் என்னை அப்போது பெரிதாக பாதிக்க வில்லை. அடுத்தடுத்த நாட்களில் நீண்ட நேர தனிமையும், தொடர் இருமலும் அதனால் ஏற்ட்ட நெஞ்சுவலியும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தின. பிறகு இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரைகள் போட்டு, தூக்கத்தோடு தான் இரவும் பகலும் கழிந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நுகர்வறியும் திறன் எப்போது போனது என்பதே தெரியவில்லை. அனோஸ்மியா (ஆய்ர்ள்ம்ண்ஹ) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மணம், துர்நாற்றம் எதுவுமே தெரியாது. பற்றாக்குறைக்கு சுவையும் தெரியவில்லை.
'சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு'
என்பான் வள்ளுவன். இதில் நமக்கு இரண்டு அவுட். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டி சாப்பிடவேண்டிய தாக தான் இருந்தது. ஆனாலும் சாப்பிட்டேன்.
12 நாட்களுக்குப் பிறகு, இரண்டு ஸ்வாப் டெஸ்ட் பாஸிட்டிவ்களுக்குப் பிறகு, மூன்றாவது டெஸ் நெகட்டிவ். இப்பொழுது தனி அறையில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது ஏழு நாட்களுக்குத் தொடரும்.
கொரானா வந்தால் என்னென்ன லாம் சாப்டணும் என்று நீங்கள் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை. உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள், மூன்று வேளை உணவு, எலுமிச்சை இஞ்சி புதினா கலந்த ஜூஸ் (அல்லது) மிளகு கலந்த சூப், இரண்டு வேளை டீ,பால், மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள், மிளகு, மஞ்சள் தூள் கலந்த பால், தினம் ஒரு முட்டை, தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு), வெந்நீர், கபசுரக் குடிநீர், முகத்துக்கு மாஸ்க் என எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.
இதில் நம்முடைய வேலை 'ஐயோ. சாப்பிட முடியலையே' என்று ஒதுக்கி வைக்காமல் எல்லா வற்றையும் சாப்பிடுவது தான்.
இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை நான் தனியாக வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டேன். வார்டிற்கு வருபவர்கள் வரும்போது தேவையான துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்த முடியுமோ,
அந்த அளவுக்கு குறைவான துணிகள் போதும். மூன்று செட் எடுத்துப் போவதே போதுமானதாக தான் இருக்கும். இது இல்லாமல் ஹேண்ட்வாஷ்,
அவசரத்திற்கென கொஞ்சம் மாஸ்க், குளிக்க துவைக்க சோப், டூத்ப்ரஷ், பேஸ்ட், சீப்பு, வெந்நீர் பிடித்துக் கொள்ள ஃப்ளாஸ்க், டம்ளர் செல்போன், சார்ஜர் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஹெட்போன், புத்தகங்கள், தலையணை,போர்வை, தட்டு, துணி காயப்போடும் ஹேங்கர் எடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பதிற்குட்பட்டது. உங்களுக்கு வெந்நீர் அடிக்கடி அவசியம் தேவைப்படும் எனும் பட்சத்தில் உங்களிடம் 'கெட்டில்' இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையில் இதற்கென தனியாக இன்டக்சன் ஸ்டவ் வைத்திருந்தார்கள்.
கட்டாயம் செய்ய வேண்டி யவை:
கொரொனா நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சுற்றத்திற்கு, குடும்பத்திற்கு, நண்பர் களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி. அறிகுறிகள் இருப்பின் தயங்காது அருகாமையில் உள்ள மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பாசிடிவ் வந்தால், வார்டில் சேர வரும்போது, மேலே குறிப்பிட்டுள்ள 'அவசியம் எடுத்து வர வேண்டிய பொருட்களை' எடுத்துவாருங்கள்.
உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருப்பின்,
அறுவை சிகிச்சை செய்திருப்பின் அதற்கான குறிப்பு அட்டைகள், நோட்டுகள், மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்து வாருங்கள். உங்கள் மருத்துவர் களிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.
முக்கியமான ஒன்று, வார்டிலும் உங்களை நீங்கள் தனிப்படுத்திக் கொள்ளுதலே சாலச் சிறந் தது. திருவிழாவுக்கு வந்ததைப் போல ரவுண்டு கட்டி உட்கார்ந்து சாப்பிடுபவர்களைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் முறையாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் ஸ்ரீழ்ர்ள்ள் ண்ய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய் க்கு வழிவகுத்து, உங்களுக்கு குணமடைய நாட்கள் அதிகமாகலாம்.
மற்ற வார்டைப் போல இங்கே நம்மைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தினர் இருக்க மாட்டார் கள். உங்களைப் பார்க்க உறவினர்கள் பார்க்க மாட்டார்கள். கொஞ்சம் கடினமான சூழல் தான்.
உங்கள் மனஇறுக்கத்தைப் போக்கிக் கொள்ள புத்தகங்கள், பாட்டு என மடைமாற்றிக் கொள்ளுங் கள். உடல்நலத்திலும் மனநலத்திலும் என்ன பிரச்சனையென்றாலும் அங்குள்ள மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள். இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல் போல தான். முறையான மருந்துகளோடும், சரியான உணவோடும் நம்மால் இதை எளிதில் கடந்து வர முடியும் என்கிற நம்பிக்கை மிக முக்கியம். இன்றைய சூழலில் உடல்நிலையை விட, மனநிலை மிக முக்கியம். பொருளாதாரம், அடுத்த மாச செலவு என எல்லா சுமைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுங்கள். உடல்நிலை சரியானதும் அந்தப் போராட்டத்தை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம்.
மீண்டும் சொல்கிறேன். 'நாம் உயிரோடி ருக்கிறோம்' என்பதே மிகப் பெரிய விசேஷம் தான். உறவினர்களுக்கு, நண்பர் களுக்கு: 'பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலையே' ன்னு வருத்தப்படாதீர்கள். அதற்கு பதிலாக அவ்வப் போது அவர்களை அலைபேசியில் அழைத்து பேசி உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் மனநலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்."" நாங்கள் இருக்கிறோம். மீண்டு வருவாய்"" என்ற நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்துங்கள்.
ஏனெனில், நம்பிக்கை.. அதானே எல்லாம்.
*
புதுவை வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளர்- கவிஞர் உமா மோகன்:
மார்ச்சில் பரவலாக கொரோனா பற்றி பேசத் தொடங்கிய நாளிலிருந்து கவனமுடன் தகவல் கள்,குறிப்புகள்,அலசல்கள் எனத் தேவையானவற்றை எப்போதும் தொடர்ந்து கொண்டேயிருந்தேன்.ஊடகவியலாளர் என்ற முறையில் தொடர்ந்து இதுசார்ந்து இயங்கியும் வந்தேன். நீரிழிவு,உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளால் அவ்வப்போது சிணுங்கும் நலன் கூட சமீபம்வரை நன்றாகத்தான் இருந்தது. இடைப்பட்ட இந்த நாட்களில் கபசுரக் குடிநீர்,நிலவேம்புக்குடிநீர் உள்ளிட்டு கிட்டத்தட்ட அன்றாடம் ஏதோ ஒரு கசாயவகை பருகி வந்திருக்கி றேன். ஆயுர்வேத ,சித்தா,அக்குபிரசர் மருத்துவமுறைகளை வர்மா மருத்துவர் உழ் ஜெயகாந்தன் கையாண்டு எனது பல சிக்கல்களைக் கட்டுப்படுத்தியுள்ளார்.
எனவே ஆங்கில மருந்துகளோடு இவற்றை எடுப்பதில் எனக்கு பிரச்சினையில்லை.
வெளிப்புழக்கம் குறித்து மிகுந்த கட்டுப்பாடு களையும் கடைப்பிடித்தே வந்தேன். வீட்டுக்கு வெளியிலேயே வாளித்தண்ணீர்,வைத்து உள்ளே நேரடியாக குளியலறை சார்ந்து என்று அத்தனையும் உண்டு.
புழக்கத்துக்கு மிகக் குறைவான ஆடைகளையே வைத்தி ருந்தேன். சில்வியா பிளாத் ஆரம்ப கட்டத்தில் எழுதிய போதிருந்தே தோடு மோதிரம் கூடப் போடுவதில்லை.
லேசாக உடல் கோளாறு எனத் தோன்றிய இரண்டு முறையும் உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு சரியானதை உணர்ந்தபிறகே பணிக்குத் திரும்பினேன். வீட்டருகே உள்ள சிறு வகைக் கடைகளில் மட்டுமே மளிகை,காய்கறி.அவற்றையும் கழுவி காயவைத்து என்று பல பிராசஸ். அங்கு இடைவெளி குறைவது போலத் தோன்றும்போது,வலியுறுத்தியோ, அறிவுறுத்தியோ வருவதும் உண்டு. இவ்வளவு தாண்டி எங்கேயோ உட்கார்ந்திருந்திருக்கிறது என்னைப் பற்றிய தொற்று!
பலருக்கும் இப்படி நேர்வதை இங்கே உணர்கிறேன்.
எச்சரிக்கையாக இருங்கள்.எங்காவது குறை இருந்தால் எடுத்து சொல்லுங்கள்.யாராவது சொல்லும் போது கள்ளமௌனம் சாதிக்காதீர்கள். குறைகளை, பிழைகளை நிவர்த்தி செய்யுங்கள்.
மற்றபடி தொற்று வந்தவர்கள் யாரும் குற்றவாளிகளல்ல .அறியாமையானால் அல்லது பிறர் அலட்சியத் தால் மட்டுமல்லாத பல சாத்தியங்களும் இங்கு நிகழ்கிறது.
மூன்றுமாதக் குழந்தைக்கு தொற்று.தாய் உட்பட வேறு யாருக்குமில்லை.நல்லவேளை நேற்று குணமாகி வீட்டுக்கு அனுப்பினார்கள்.இன்னொரு ஒரு வயதுகூட நிரம்பாத குழந்தைக்கு தொற்று அங்கும் தாய் உட்பட யாருக்குமில்லை.இந்தக்குழந்தைகளைப் பராமரிக்க இவ்வளவு தொற்றாளர் நடுவே இருந்துவிட்டு நெகடிவாகவே வெளியில் போகிறார் கள் அன்னையர்.
உண்மையில் இது மர்மதேசம் தான்.
*
விளம்பர நிறுவன உரிமையாளர் மனோ பாரதி:
இந்த அனுபவத்தை எழுதலாமா அல்லது இது பலரை பயமுறுத்திவிடுமா என்று பல சிந்தனைகளுக்கு பிறகு இந்த எழுத்து யாரோ ஒருவருக்கு பயனுள்ள தாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதி இதனை இங்கே பதிவு செய்கிறேன்.
நான் மனோபாரதி. அடையாறில் ஒரு 'ப்ராண்டிங் ஏஜென்சி' நடத்தி வருகிறேன். மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கும் முன்பிருந்தே கோவிட்-19 தொடர்பான எல்லா விஷயத்திலும் ரொம்பவே கவனமாகவும் சூதனமாகவும் இருக்க பழகிக்கொண்டோம். லாக்டவுன் அறிவித்த பின்பு மே மாதம் வரை அலுவகத்திற்கு தேவையான அத்தியாவசிய வேலைகளை மட்டும் தேவையான நபர்களை வைத்து செய்து கொண்டோம். யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. அரசு சில தளர்வுகளை கொண்டுவந்த பின்பு மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து நான்காவது வாரம் வரை மட்டும் அலுவலகத்திலிருந்து வேலை செய்தோம்.
மே 29ம் தேதி மாலை எனக்கு லேசான காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு உள்ளுக்குள் ஏற்பட்டது. பயத்தின் காரணமாக அன்று இரவு திருவான்மியூரில் நான் எப்போதும் செல்லும் மருத்துவரிடம் சென்று செக்-அப் செய்துகொண்டபோது எனது உடலில் 97.1டெம்பரேச்சர் இருந்தது. ஜுரம் இல்லை, சளி இல்லை, தலைவலி இல்லை, இருமல் இல்லை. டாக்டர் மூச்சு விடச் சொல்லி பார்க்கும்போது 'மூச்சு விடும்போது தொந்தரவு இருக்கா?' என்று கேட்டார்.
'அப்படி எதுவும் இல்லை டாக்டர். உங்களுக்கு எதுவும் தெரியுதா? கோவிட் இல்ல-ல்ல' என்று பதட்டத்துடன் கேட்டேன். 'ஆன்டி-பயாடிக் தர்றேன். ஜுரம் இல்ல. அதனால இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது' என்று கூறி ஒரு ஊசியும் சில மாத்திரைகளும் கொடுத்தார்.
மே 30ம் தேதி உடலில் சோர்வு ஏற்பட்டது. வீட்டில் சமைத்த உணவின் ருசி தெரியவில்லை. சமைக்கும் வாசனையும் சரியாக உணர முடியவில்லை. அன்று முழுவதும் உடல் சோர்வாகவே இருந்தது. பயம் அதிகரித்திருந்தது. அதன் காரணமாக வீட்டில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு எதுவும் பரவிட கூடாது என்பதற்காக என்னை தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக் கென தனி தட்டும், நான் பயன்படுத்தும் கழிவறையை வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், தனியாக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்தும் வைத்துக்கொண்டேன். அன்று மாலை ஒரு அரை மணி நேரத்திற்கு உள்ளுக்குள் ஜுரம் இருப்பதாக உணர்ந்தேன். நெற்றியில் கழுத்தில் கை வைத்து பார்த்தபோது உடலில் உஷ்ணம் எதுவும் இல்லை.
அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. முனகிக்கொண்டும் அனத்திக்கொண்டும் இருந்தேன். மறுநாள் மே 31 காலை 5 மணி முதல் 7:30 மணிவரை தூங்கினேன்.
மே 31 காலை 8.30 மணிக்கு, முன்னர் சென்ற அதே டாக்டரிடம் சென்றேன். தூக்கமில்லை என்றும் அவ்வப்போது ஜுரம் வருவதுபோல் ஒரு உணர்வு இருப்பதையும் சுவையோ வாசனை உணர்வோ இல்லை என்பதையும் இரவில் தூக்கமில்லாமல் தவிப்ப தையும் சுட்டிக்காட்டினேன். 98.3 டெம்பரேச்சர் இருந்தது. மூச்சு விடுவதில் சிக்கல் எதுவும் இல்லை தெளிவாக இருப்பதாக டாக்டர் சொன்னார். மீண்டும் 'கோவிட் 19' இருக்கிறதா என்று கேட்டேன். அதிகமான ஜுரம் மற்றும் 'ரன்னிங் நோஸ்' இருந்தால் மட்டும் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கூறினார்.
ஊசி போட்டுக்கொண்டேன். சில மாத்திரைகளை மாற்றி எழுதினார். தூக்கம் வர மாத்திரை கேட்டேன். வேணாம் என்று கூறி, 'நிறைய தண்ணீர் குடிங்க. நல்லா சாப்புடுங்க' என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார். அன்றிரவு தூக்கம் சரியாக இல்லை. இரவில் புலம்பியதாக நண்பன் கூறினான். பயம் அதிகமாக இருந்தது.
ஜூன் 1 மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டேன். முந்தைய தினம்போன்றே காலை 5 மணிமுதல் 8:30 மணிவரை தூங்கி னேன். அதற்குமேல் உடல் சோர்வாக இருந்தது. பகல் முழுதும் சுறுசுறுப்பாக இருந்தேன். இரவில் மீண்டும் தூக்கம் வரவில்லை. ஜுரம் இல்லை. சளி இல்லை. தலைவலி இல்லை. சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லை. இருமல், தும்மல் இல்லை. விடிந்ததும் ஊருக்கு கிளம்பிவிடுவது என்று முடிவெடுத்துக்கொண்டேன். எனக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சொந்த ஊர்.
ஜூன் 2. காலையில் டிராவல்ஸ்-ல் பேசி வாடகை கார் ஒன்று பேசிவிட்டு அதன் தகவல்களை வைத்து இ-பாஸ் அப்ளை செய்தேன். 30 நிமிடத்தில் கிடைத்தது. மதியம் 2.30 மணிக்கு தேவையாக உடை, லேப்டாப், ஏற்கனவே வாங்கிய மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
கும்பகோணம் தாண்டி திருப்பனந்தாள் என்னும் ஊரில் கார்-ஐ நிறுத்தி இரண்டு இட்லி சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கொண்டேன். வலங்கைமான் செக்-போஸ்ட்-இல் போலீஸ் நிறுத்தினார்கள். இ-பாஸ்க்காக நான் கொடுத்த என்னுடைய அத்தனை தகவல்களையும் மீண்டு மொருமுறை சரிபார்த்தார்கள். என்னுடைய அம்மா நீடாமங்கலத்தில் துணை வட்டாட்சியராக இருந்ததாலும், அப்பா நீடாமங்கலத்தில் இந்தியன் வங்கியில் துணை மேலாளராக இருந்ததாலும் அங்கே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு எங்கள் குடும்பத்தை ஏற்கனவே பரிட்சயமாக தெரிந்திருந்தது. சென்னையிலிருந்து வந்திருந்த காரணத்தினால் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று டெம்பரேச்சர் செக் செய்துவிட்டு வீட்டுக்கு செல்லும்படியும் செய்யவில்லையென்றால் மறுநாள் காலை மருத்துவ குழு வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்லும் என்றும் அறிவுறுத்தினார்கள். அதனால் என் அப்பாவுக்கு போன் செய்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன்.
மன்னார்குடி வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.30. அங்கே எனக்கு டெம்பரேச்சர் 98.4. என்னுடைய தகவல்கள் மீண்டும் ஒருமுறை சரி பார்க்கப்பட்டது. நான் வந்த காரை அனுப்பிவிட்டு நானும் அப்பா வும் மட்டும் அங்கே கோவிட்-19 டூட்டி-யில் இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்தோம். அவரும் அப்பாவுக்கு நன்றாக தெரிந்தவர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு இருப்பதனால் கோவிட்-19 சோதனை கிட் அவர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருக் கிறது என்றும் உடனடியாக நாங்கள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். மணி 11 ஆகிவிட்டதால், காலை செல்லலாம் என்று நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்.
ஜூன் 3. காலை 10 மணி. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம். பரிசோதனைக்கு வந்திருப்பதாக பெயரை பதிவு செய்துகொண்டோம். டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வரும்வரை இரண்டு நாள் அங்கேயே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
அதற்கு தயாராகவே வந்திருந்ததால் அங்கேயே தங்கிவிட்டேன். மதியம் 3.15 மணியளவில் கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். அன்றிரவு தூக்கம் சரியாக வரவில்லை. சரியான நேரத்தில் சாப்பாடு தந்தார்கள். இத்தனை பெரியவர்களையும் குழந்தைகளையும் டெஸ்ட் செய்யும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமாக பராமரிப்பட்டிருக்கலாம்.
ஜூன் 4. மதியம் 4.30 மணி. ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. கோவிட்-19 பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்சில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து திருவாருர் மெடிக்கல் காலேஜ்-க்கு அழைத்து செல்வார்கள் என்றும் கூறினார்கள்.
அதற்கு முன் என் சென்னை முகவரி, ஆபிஸ் முகவரி, மன்னார்குடி வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். அதே போல் நான் சந்தித்த நபர்கள், கூட தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோருடைய தகவல்களும் வாங்கிக்கொண்டார்கள். 6:30 மணிக்கு திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தனி வார்டு-ல் சேர்த்தார்கள்.
எனக்கு ரிசல்ட் வரும்வரை இருந்த பதட்டம் ரிசல்ட் வந்ததும் இல்லை. சரி. பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. இனி சரியாவதை பற்றி யோசிப்போம் என்று மட்டும் நினைவில் நிறுத்திக்கொண்டேன்.
ஜூன் 4ம் தேதியிலிருந்து ஜூன் 13ம் தேதி வரை திருவாரூர் மெடிக்கல் காலேஜில் தங்கி சிகிச்சை பெற்றேன்.
ஜூன் 4. உடல் சோர்வைத்தவிர எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. பசி இல்லை. முக்கியமாக எனக்கு சத்து இல்லை. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக சாப்பிடாததால் உடம்பு ரொம்ப சோர்வாக இருந்தது. இன்னொன்று மாத்திரை எடுத்துக்கொண்டதால் வாய் கசப்பாகவும் அதனால் சாப்பிட முடியாத நிலைமை இருந்தது. அன்றிரவு இசிஜி, எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட், பிரஷர், டெம்பரேச் சர் எடுத்தார்கள். எல்லாமே நார்மல்.
ஜூன் 5. டாக்டர்களிடம் சென்று பசிக்காகவும் உடல் சோர்வுக்காகவும் மருந்து கேட்டேன். இந்த ப்ராசஸ்-ல் இது வரத்தான் செய்யும், பல்லை கடித்துக்கொண்டு நன்றாக சாப்பிட்டுவிடுங்கள் சரியாகிவிடும் என்று கூறினார்கள். அன்றிரவுதான் வாழ்க்கையின் கோரமான பூதத்தை சந்தித்தேன். இருமல் ஆரம்பமானது. இருமல் என்றால் பேய் தனமான இருமல். இருமினால் எல்லோருக்கும் தொண்டையை அட்ஜஸ்ட் செய்த திருப்தி இருக்கும் அல்லவா. இது அப்படியில்லை. நெஞ்சில் துப்பாக்கி யால் துளைத்ததுபோல ஒரு வலி, எவ்வளவு இருமினா லும் போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி சளி இருக்கா இல்லையா வெளியே வருமா வராதா என்ற சந்தேகத்தில் இருமி இருமி இரண்டு கண்களும் பிதுங்கி வெளியே நின்றது. சாதாரண ஜுரத்துக்கே நமக்கு யாரவது ஒத்தாசையாக இருந்து பார்த்துக்கொண்டாள் நன்றாக இருக்கும் என்றிருக்கும். இது ஒரு கையறு நிலை. யாரும் நெருங்ககூட முடியாது.
ஜூன் 6. எனக்கு வயது 31. இத்துணை வருடத்தில் இப்படி ஒரு கோரமான கொடூரமான ஒரு இருமலை நான் உணர்ந்ததே இல்லை. கிட்டத்தட்ட மரணம் நெருங்குகிறது என்று ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நான் தீர்க்கமாக நம்பினேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக இருமினால் என் உயிர் பிரிந்துவிடும் என்று பயம் வலுத்துக்கொண்டே இருந்தது. நெஞ்சு வலி வேறு. இரவு உறங்கச் சென்றால் தூக்கத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று பயமாக இருந்தது. இருமலுக்கு மாத்திரை தந்தார்கள். சீக்கிரமே தூக்கமும் வந்துவிட்டது. நீண்டநாட்களுக்கு பிறகு ஆழ்ந்த உறக்கம்.
ஜூன் 7. இந்த ஒரு நாளில் மட்டும் நான் வாழ்வது அன்றுதான் கடைசி என்று என்னவோ சொல்லிக் கொண்டே இருந்தது. இருமலுடன் சேர்ந்து சளியும் வெளிவரத்துவங்கியது. சளியுடன் ரத்தம் அதிகமாக வந்தது. அதுதான் பயத்தை அதிகமாக்கி பீதியின் உச்சத்துக்கே கொண்டுசென்றுவிட்டது. பல நேரங்களில் இதுபோல் நடக்கும். வானிலை மாற்றம், பனிக்காலம் என பல சந்தர்ப்பங்களில் இப்படி ரத்தம் வரும். ஆனால் கொரோனாவை சிவப்பு கலரிலேயே நிறைய இடத்தில் காட்டிவிட்டதால் பீதியாகிவிட்டது. இருமல், மரணபயம், பசியின்மை, உடல் சோர்வு, மாத்திரை, தூக்கம்.
ஜூன் 8. இருமல் வெகுவாக குறைந்திருந்தது. கால்களை தரையில் ஊன்றினால் நிதானமாக நடக்க முடிந்தது. கொஞ்சம் வலிமையாக இருப்பதாக உணர்ந்தேன். ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. முட்டையும் மதிய உணவும் சாப்பிட்டு நன்றாக தூங்கினேன். எழுந்து இரவு உணவு சாப்பிட்டு மீண்டும் தூங்கினேன்.
ஜூன் 9. ஜுரம் இல்லை. இருமல் இல்லை. சளி இல்லை. சுவாசப் பிரச்சனை இல்லை. பசித்தது. உடல் ஆரோக்கியமாக மாறுவதாக உணர்ந்தேன். நன்றாக சாப்பிட்டேன். மாத்திரை எடுத்துக்கொண்டேன். நன்றாக தூங்கினேன்.
ஜூன் 10 முதல் ஜூன் 12ம் தேதி வரை எல்லாமே மாறிவிட்டது. நன்றாக சாப்பிட்டேன். முழுக்க எனெர்ஜியுடன் இருந்தேன். எல்லோருக்கும் போன் போட்டு நன்றாக இருப்பதாக சொன்னேன். தூக்கம் வரும்போது தூங்கினேன். ஜூன் 12ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு இரண்டாவது டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஜூன் 13ம் தேதி காலை நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அன்று மதியம் 12 மணிக்கு திருவாரூரிலிருந்து கிளம்பி 1:00 மணிக்கு மன்னார் குடிக்கு 108 ஆம்புலன்ஸ்-ல் டிராப் செய்தார்கள். நிம்மதியாய் ஒரு குளியலை போட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டு தூங்கினேன். வாழ்க்கை வழக்கம் போல் மீண்டும் அழகானது.
*
பாடலாசிரியர் அதிரை இளையா:
கடந்த ஒரு மாத காலமாக நான் கொரோனோவோடு குடும்பம் நடத்தி விட்டு, இப்போதுதான் என் சொந்த இல்லம் திரும்பினேன்.
""ஐய்யய்யோ வைரஸ் தொற்று வந்துவிட்டதே நான் செத்துருவேனோ?""
என அதிகம் யார் அதிகம் பயப்படுகிறார் களோ, அவர்கள்தான் அதற்குப் பலியாகிறார்கள் என்று எனக்குப் படுகிறது . பொதுவாக குரோனோ வைரஸுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உறுப்பு நுரையீரல். அது பலவீனமாக உள்ளவன் கூட பயமின்றி சிகிச்சையை மேற்கொண்டால் பிழைக்கி றான். நான் திருவாரூர் கொரோனா முகாமில் சில நாட்களாக இருந்து விடுதலையான வரை அங்கே நல்லதொரு கவனிப்பான சூழலையே என்னால் உணரமுடிந்தது. அங்கே குரோனோ நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் சாப்பாடு மற்றும் அதன் சுவை எப்படி? என்பதை ஆராய்வதை விட்டு அங்கே எப்படி நம்மை கையாள்கிறார்கள்? நம்மை கவனிக்கிறார்கள்? என்பதை மட்டும் பார்ப்போம்.
குரோனோ முகாமுக்கு சென்ற அன்று ஒரு புது தலையணை மற்றும் படுக்கை விரிப்பு, பனியன் மற்றும் உள் பனியன், செருப்பு, துண்டு, குளியல் சோப்பு, உப்பு சோப்பு, பற்பசை, சோப் டப்பா, பவுடர் டப்பா, சீப்பு, இந்த அத்தனையும் கொடுத்துவிடுகிறார்கள்.
இடம் சுத்தமாக இருந்தால் நோய் அண்டாது என்பார்கள் அது உண்மைதான் இன்று நான் குரோனோ பாஸிட்டீவிலிருந்து நெகட்டிவாகி திரும்பியிருக்கி றேன் என்றால் அந்த குரோனோ தடுப்பு முகாமில் நிலவிய சுத்தமான சூழ்நிலையும் ஒரு காரணம். துப்புரவுத் தொழிலாளர்கள் அர்ப்பணிப்போடு அந்த முகாமில் பணிபுரிந்ததை என்னால் கண்கூடாக காண முடிந்தது.. அங்கே போதாததுக்கு, குரோனோ நோயாளிகள் மன மகிழ்வோடு பொழுதைக் கழிக்க தியேட்டர் வளாகம் ஒன்று உண்டு. தினம் சினிமா படங்கள் காட்டப் படுகின்றன. இப்படியான நல்ல கவனிப்பு மற்றும் நல்ல வசதிகள் மற்ற மாவட்ட குரோனா சிகிச்சை மையத்தில் இருக்குமா? என என்னால் சொல்ல முடியவில்லை!
கவிஞர் மு.வித்யா பெனோ
ஊருக்குப் போன வெள்ளிக்கிழமை மதியம் காரில் கிளம்பினேன். அந்தப் பயணம் புது அனுபவமாக இருந்தது. ஜூன் மாத பூக்கள் எப்போதும் இஷ்டம். நெடுஞ்சாலை முழுக்க மஞ்சள் சிகப்புப் பூக்கள். 10 மணி நேரப் பயணம். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிலிருப்பேன் என்று நினைத்துக் கொண்டு சென்றபோது, ஒரு செக்போஸ்ட்டில், வழிமறித்து கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்கள். சரி என்று ஸ்வாப் டெஸ்ட் எடுத்தேன். எடுத்த பிற்பாடு ரிசல்ட் வரும்வரை நீங்கள் இங்கு தான் இருக்க வேண்டும், இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். எனக்கு என்னடா இது என்றாகிவிட்டது. வீட்டுக்குப் போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் , இப்படிச் செய்கிறார் களே என்று எரிச்சல் வந்தது. நான் என்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. வீட்டில் அம்மா எனக்காகக் காத்துக் கொண்டு இருந்தாள். இவ்வளவு கிட்ட வந்தாச்சு ஆனா வீட்டுக்குப் போக முடிலயே என்ற ஏக்கமும் எரிச்சலும் எனக்குள் நிறைந்திருந்தது.
எங்கே தங்க வைப்பீர்கள் என்று கேட்டேன். ‘ஒரு காலேஜில், தனி அறை கொடுக்கப்படும். பத்திரமாக இருப்பீங்க. ரிசல்ட் வந்ததும் நீங்கள் செல்லலாம்’ கொட்டிக் கொடுத்தாலும் திகில் கலந்த, இரண்டு நாள் குளிக்காமல் சமாளித்த, எரிச்சலில் தொடங்கி நிறைவில் முடிந்த இப்படியான மறக்கமுடியாத அனுபவம் எனக்கு நிச்சயம் கிடைத்திருக்காது தான். Life is all about making memories.