✶ பூமிப் பந்தின்மீது நான் 25,355 நாள்கள் வாழ்ந்தாயிற்று.

✶ நான் பிறந்த 1948-ல்தான் முதல் கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதப்படுகிறது. முதல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்படுகிறது.

✶ நான் பிறந்து 19 நாளில் (ஜூன் 30, 1948) புதுமைப்பித்தன் காலமாகிறார். அதன்பிறகு தமிழில் இன்று வரை புதுமைப் பித்தன் போன்ற இன்னொரு தமிழ் எழுத்தாளன் ஜனிக்கவேயில்லை. தமிழின் முதன்மைச் சிறுகதைப் படைப்பாளியாக புதுமைப்பித்தனை அங்கீகரிக்க க.நா.சு, ரா.ஸ்ரீ.தேசிகன், அசோகமித்திரன் ஆகியோர் மறுத்தார்கள் என்பதை ஆய்வாளர் வீ. அரசு நிரூபிக்கிறார். புதுமைப்பித்தன் புத்தம் புதிய புனைவு மொழியைக் கண்டுபிடித்தவர் என்றுசிதம்பர ரகுநாதன் முன்நிறுத்துகிறார்.

✶ 1948-ல் நான் பிறந்தபோது “"சுதந்திர ஜோதி'’’ நாவல் மூலம் எழுத்துலகில் நுழைகிறார் ராஜம் கிருஷ்ணன்.

Advertisment

✶ 1949-ல் எனக்கு ஒரு வயதாகும்போது சிதம்பர ரகுநாதன் எழுதிய "முதலிரவு' தடை செய்யப்படுகிறது. இந்த நாவல் காந்தியின் பிரம்மச்சரியம் குறித்த விமர்சனமாக அமைந்தது. காந்தி ஜனவரி 1948-ல் சுடப்பட்ட நிலையில் நிலபிரபுத்துவ மனநிலையே காந்தியின் மனநிலை என்று சிதம்பர ரகுநாதன் துணிச்சலாக வாதிட்டார். 1950-ல் ’’"கன்னிகா'’’ ஆகிய நாவல்களின் மூலமாக பெண்களை முதன்மைப்படுத்தி எழுதினார். கு.ப.ரா, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமுக்கு முன்னால் பெண்களைப் பற்றி எழுதியவர் சிதம்பர ரகுநாதன்தான். நெசவுத் தொழிலாளர் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட “"பஞ்சும் பசியும்' நாவலை 1950-ல் எழுதி புகழ்பெற்றார். 1954-ல் "சாந்தி' இதழின் மூலம் பல முக்கிய இலக்கிய பங்களிப்புகளைச் செய்து இருந்தார். மாக்சிம் கார்க்கியின் ’’"தாய்' “நாவலை மொழிபெயர்த்தார். இந்த சிதம்பர ரகுநாதன், த.கோவேந்தன் கே.சி.எஸ். அருணாசலம் ஆகியவர்கள்தான் எனக்கு 18 வயது இருக்கும்போது பாரதியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக முதன் முதலாக என்னை மேடை ஏற்றினார்கள்.

✶ ஒன்றரை வயது குழந்தையாக நான் இருந்தபோது இந்தியா குடியரசாக மாறுகிறது. அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. எனக்கு இன்று 70 வயது ஆகும்போதுகூட, “தீண்டாமை ஒரு குற்றச் செயல் என்பது யார் மனசாட்சிக்கும் உறைக்கவே இல்லை.

✶ எனக்கு 3 வயதாகும்போதுதான் முதல் வணிகக் கணினி விற்பனைக்கு வருகிறது. ஆனால் 55 வயதில்தான் வீட்டில் சொந்த மாக கணினி வாங்க முடிகிறது.

Advertisment

✶ 4 வயது குழந்தையாக இருந்தபோது தான் இந்தியாவின் முதல் தேர்தல் நடந்தது. முதல் தேர்தலிலேயே சாதிவாரியாக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தனது சுயசரிதையில் வருத்தப்பட்டு எழுதுகிறார். எனக்கு 70 வயது ஆகும் போதுகூட இந்த நிலை இன்னமும் மோசமாகி இருக்கிறதே தவிர சீரடைய வில்லை. இப்போது சாதிக்கொரு கட்சி களே வந்துவிட்டன.

✶ எனது 6 வயதில் முதல் அணுசக்தி நிலையம் மாஸ்கோவில் தொடங்கப் படுகிறது.

enthiran

✶ 13 வயதில் வான்வெளியில் முதல் மனிதன் யூரி ககாரின் பறக்கிறான்.

✶ 14 வயதில் 1962-ல் இந்தோ- சீனா போர். "சிங்கநாதம் கேக்குது.. சீன நாகம் ஓடுது' எனும் எஸ்.டி.சுந்தரம் பாட்டு சிறுவர்கள் மத்தியில் பிரபலமாகிறது.

✶ எனது 15 வயதில் வான்வெளியில் கால்வைத்தார் முதல் பெண் வாலண்ட்டீனா டெரஷ்கோவா.

✶ நிலவில் முதல் முதலாக மனிதனின் (நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.) கால் படுகிறபோது எனக்கு 21 வயது. பக்கத்து வீட்டு சிறுவன் சிவராஜ் கேட்கிறான். ""அண்ணா சிவன் தலையில்தானே நிலா இருக்கிறது. மனிதன் நிலாவில் கால் வைத்தான் என்றால் அவன் சிவன் தலையில் கால் வைத்தானா?''’’

✶ ஆனால் இந்தியன் வங்கியில் என் கால் படுவதற்கு 22 வயதாகி விடுகிறது.

✶ 28 வயதில் எனக்கும் வாணிக்கும் திருமணம். பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. என் துணைவியார் என் குடும்பத்துக்கு மட்டுமின்றி என் இலக்கிய வாழ்க்கைக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

✶ 29 வயதில் (1969) இன்டர்நெட் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அதனை நான் பயன்படுத்துவதற்கு எனக்கு 48 வயதாகி விடுகிறது.

✶ எனது 27வது வயதில் (ஜூன் 26, 1975) இந்திரா காந்தி எமெர்ஜென்சி கொண்டு வருகிறார். அச்சு ஊடகத் தணிக்கையினால் லட்சம் மக்கள் சிறையில்- முரசொலி அடியாரின் பத்திரிகையான “"நீட்டோலை'’’ இதழில் ஞானம்பாடி என்ற பெயரில் நான் எழுதிய “"கருஞ்சிறுத்தைகள் கவிதை பாடுகின்றன' என்ற என் கட்டுரை தணிக்கைக்கு உட்படுகிறது.

✶ எனது 36வது வயதில் (1984 ) போபாலில் யூனியன் கார்பைட் விஷவாய்வுக் கசிவினால் 6500 பேர் சாகிறார்கள். உலகின் மாபெரும் தொழில் துறை சேதம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு எத்தனையோ ஆண்டுகள் தள்ளிப் போடப்படுகிறது.

✶ எனது 43வது வயதில் (மே 21, 1991) பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி எல்.டி.டி.யி.னால் தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்படுகிறார்.—

✶ எனது 44-ஆவது வயதில் (டிசம்பர் 6 , 1992) அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு.

✶ இன்று எனது 70 வயதில் ஜனநாயக ஆட்சி செய்யும் அரசு , ஸ்டெர்லைட் ஆலையால் ஆரோக்கியம் கெடுகிறது என்று போராடிய அப்பாவி மக்களை வாயில் சுட்டுக் கொல்கிற மாபெரும் அநீதி இந்த மண்ணில் நிகழ்கிறது.

✶ எல்லாவற்றையும் கோர்த்த கைவிரல்களோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையோடும் உத்தமத்தோடும் வாழத் துடிப்பவர்களுக்கு உத்தரவாதமளிக்கும் ஓர் உலகம் பிறக் குமா? அதைக் கட்டி எழுப்ப என் எழுத்து ஒரு துளியாவது பங்காற்றுமா? இன்று சந்தேகங்களால் சூழப்பட்டிருக்கிறேன்.