ஓடி வந்து சேரும் காதலர்களின்மீது அன்பு வைத்திருக்கும் மாயா மோகினி... அழகு தேவதை.... நித்திய கன்னி... அவள் தனியாக இருக்கும் ஆலயத்தில் வாழ்கிறாள்.
ஆலயமோ...
கோட்டையோ....
குகையோ.... காதல் கூடமோ? தெளிவாகத் தெரியவில்லை.
அவளைத் தேடித்தான் அவர்கள் இருவரும் அலைந்து திரிகின்றனர்.
வைசாக மாதத்தின் சுக்லபஞ்சமியில் வரும் சாயங்கால வேளை... தனியாக இருக்கும் தீவிலுள்ள பழமையான சுடுகாட்டிற்கு மிகவும் அருகில் அமைந்திருக்கும் இரண்டு மாடி கட்டிடம்... வெண்மைக் கல்லில் கட்டப்பட்டது. அந்த மாளிகையில்தான் அவள் வசிக்கிறாள்.
ஆயிரம் பாதுகாவலர்கள் அவளின் அடிமைகளாக மாளிகையின்கீழ் தளத்திலிருக்கும் இருண்ட அறைகளில் வசிக்கிறார்கள் என்பதுதான் பேச்சு.
மாளிகையின் மேல் மாடியில் மூன்று அறைகள் இருக்கின்றன. அந்தப் பக்கத்திலும் இந்தப் பக்கத்திலும் உள்ள அறைகள், யாருக்கும் தெரியாமல் வந்துசேருபவர்கள் தங்குவதற்கு.
மத்தியிலுள்ள அறையில் அவள் மட்டும் தனியாக... இப்போது இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் இருக்கும் அறைகளில் இரண்டு நபர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஒருவன் ஓவியன். இன்னொரு மனிதன்... எழுத்தாளன்.
வர்ணங்களின்மூலம் பெண்ணின் வாசனைகளையும் சிற்பங்களையும் உருவாக்கக்கூடிய ஓவியன்...
வார்த்தைகளின்மூலம் உருவத்தையும் உணர்வையும் படைக்கக்கூடிய எழுத்தாளன்... சொந்தமான பார்வைகளும் நம்பிக்கையும் உள்ளவர்கள்.
ஒருவன் இன்னொருவனை மறைத்து வைக்கி றான்.
பகையால்... கண்கட்டு வித்தையால்... பொறாமையால்.
எழுத்தில் மூழ்கி, எழுத மட்டுமே செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன்தான் அந்த மனிதன் ஆள் அரவமற்ற வெண்மை நிறக் கற்களால் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் காலியாகக் கிடந்த அறைக்குள் வந்து தங்கினான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அந்த கட்டிடத்தில் வேறொரு உயிரினமும் வசிக்கிறது என்ற விஷயமே அவனுக்குத் தெரிய வந்தது.
அவளை முதல் முறையாகக் சந்திக்க நேர்ந்தபோது, அவனுடைய மனதிற்குள் வியப்பு உண்டானது.
அதற்கு முன்னால் அப்படிப்பட்ட ஒரு உருவத்தை அவன் பார்த்ததில்லை.
நெருப்பில் சுட்டெடுத்த அழகுச் சிலை. உடல் முழுவதும் செம்பருத்திப் பூவின் நிறத்தைக் கொண்டிருந்தது.
அவளை மனதில் நினைத்தவாறு அவன் உறக்க மற்ற இரவுகளைத் தள்ளி நீக்கினான். அவள் அவனுக்கு போதை நிறைந்த இசையாக இருந்தாள்.
அவனுடைய மனவோட்டம் ஏதோ நீரோட்டத்தில் சிக்கியதைப் போல கனவு எனும் சமாதியில் கரைந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு நிமிடமும் அவளைப் பற்றிய சிந்தனையால் மனம் உருகியது.
"சந்தோஷத்திலும் துக்கத்திலும் நீ ஒரே மாதிரி எனக்குத் துணையாக இருப்பாயா?- அவன் யாரிடம் என்றில்லாமல் கேட்டான்: "மரணப் படுக்கைக்கு அருகிலாவது நீ வரவேண்டும். வந்து மூடிக்கொண்டிருக்கும் கண்களிலும் வறண்டு காய்ந்த நிலையிலிருக்கும் உதடுகளிலும் குளிர்ந்து கொண்டிருக்கும் நெற்றியிலும் முத்தமிடவேண்டும்.
சடையைப்போல சிதறிக்கொண்டும் பறந்து கொண்டும் அடர்த்தியாகவும் கிடக்கும் செம்பு நிறத்திலிருந்த முடி இழைகளை வருடியவாறு, தகர்ந்த தம்பூராவில் பாடலை உருவாக்கு... குளிரின் நடுக்கத்திலும் வெப்பத்தின் கடுமையிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிறகுகளை அடித்து கூட்டினை உடைக்க முயற்சிக்கும் ஆன்மாவின் மெல்லிய முனகலுக்கு மத்தியில் சுய உணர்வற்று தளர்ந்து கிடக்கும்போது, நீ இந்த வறண்ட உதடுகளில் இனிய ரசாயன திரவத்தைப் பரிமாறு. ஆன்மாவின் வீணையை மீட்டு... ஐந்து இந்திரியங்களிலும் மோகம் நிறைந்த பல்லாயிரம் பூக்களையும் மலரச் செய்...நெருப்பு மலர்களும் நெருப்புப் பட்டாம்பூச்சிகளும் வெப்பத்திலிருந்து பச்சிளம் குழந்தைகளைப் போல மீண்டும் பிறக் கட்டும்...''
அவன் தளர்ந்து கிடந்தான்.... ஒரு எழுத்தாளனாக பிறந்த தற்கான கவலையுடன்...
"இன்றில்லாவிட்டால் நாளை நான் உனக்குச் சொந்தமாக ஆவேன். இல்லாவிடில்... நான் உன்னை மீண்டெடுப்பேன்.... சொந்த முயற்சியில்.சுதந்திர தாகமெடுத்த எனக்கு மரணம் என்பது புல்லுக்கு நிகரானது.
நான் எழுத்தாளன்.
எழுத்தின்மூலமாக இருண்ட கூடம்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் பட்சம், நான் அதை ஏற்றுக் கொள்வேன்.
விலங்குகள் எனக்கு வீரச்சங்கிலி... இன்றைய வேதனைகள் நாளைய சன்னிதியின் சிவப்பு மலர்கள்.
அழுத்தி வைக்கமுடியாத விருப்பங்களுக்குப் பின்னால் சுற்றித் திரிந்துக்கொண்டும் தாழ்ந்து உயர்ந்துகொண்டும் கைப்பிடியிலிருந்து நழுவிக் கொண்டும் இருக்கக்கூடிய மனமே... இனிமேல் உன்னை நான் அடிமைப்படுத்தப் போகிறேன்.''
சாராயமும் கஞ்சாவும் ஆட்சி செய்து முடிந்த போதை நிறைந்த இரவு வேளைகளில் வர்ண ஜாலக்காரன் நித்திய கன்னிக்காக காத்திருந்தான்.
அவனுக்கு பைத்தியம் பிடித்திருந்தது.
கையில் வர்ணம் கிடைத்தால் வெளிப்படுத்தும் கில்லாடித்தனங்கள்..
"வர்ணங்களைக்கொண்டு நீ ஏன் எப்போதும் இந்த போதை நிறைந்த செயலைச் செய்து கொண்டிருக்கி றாய்? உன் குருதியில் காம அம்சங்கள் கொண்ட அணுக்கள் நிறைந்து கிடக்கின்றனவா? வெள்ளை அணுக்களைவிட சிவப்பு அணுக்கள் அதிகமாக இருக்கின்றனவா? பிரியமானவனே...
உண்மையிலேயே எனக்குத்தான் பயமாக இருக்கிறது. ஒரே இலக்கை நோக்கி வேறுபட்ட வழிகளின்மூலம் பயணிப்பவர்களாக இருந்தாலும், நமக்கிடையே ஏதோ பூர்வ பந்தங்கள் இருப்பதைப் போல தோன்றுகிறது.
நீ படைத்த இந்த நிறங்களும் உருவங்களும் என்னை உன்னுடன் மிகவும் நெருக்கமாக ஆக்கி யிருக்கின்றன. உனக்கு கஞ்சாவின் மீது பைத்தியம். எனக்கு சாராயத்தின்மீது... முந்திரிப் பழச் சாறில் உண்டாக்கப்பட்ட சாராயத்தில் இஞ்சிப் புல் எஸென்ஸை ஊற்றிய பிறகு வருகிறதே... அதன் மீதுதான் எனக்கு அதிக விருப்பம்.
ஸிஞ்சுபரீஸோ....
புல் தைலச் சாறோ... பெயர் சரியாக தெரியவில்லை. பல முறைகள் பருகியிருக்கிறேன்.
அவனுடைய மனம் கவரும் இசை... அந்த இசையில் நான் கரைந்து போகிறேன். ஆன்மப் பெருங்கடலில் இரண்டறக் கலக்கிறேன்.
அறையிலிருக்கும் டின்களிலிருந்தும் ட்யூப்களிலிருந்தும் வழிந்து வெளியே பாயும் வர்ணங்களின்...
பெயின்ட்களின்...
லின்ஸீட் எண்ணெய்யின்...
டர்பன்டைனின்...
வாசனை பைத்தியம் பிடிக்கச் செய்கிறது. அந்த வாசனையில் நான் புதைந்துபோகிறேன்.
ஒன்றுமற்ற ஏதோவொன்றாக காற்றில் கரைந்து போகிறேன்.
நண்பனே....
என்னையே அறியாமல் நான் உன் உலகத்திற்குள் எட்டிப்பார்த்து விட்டேன். நீ வரைந்த நிர்வாணப் படங்களின் வர்ணக் கலவைகள் என்னை உன்மத்தம் பிடிக்கச்செய்கின்றன. பல வகைகளிலும் நீ என்னை விட எவ்வளவோ பெரிய ஆள் என்பதையே இப்போதுதான் அறிகிறேன்.
இருவரும் ஒருவரோடொருவர் ஈர்க்கப்பட்டார்கள்.
நடுவிலுள்ள அறையிலிருக்கும் பேரழகியைப் பற்றி இருவரும் கனவு கண்டார்கள்.
அவளைப் பார்த்த ரகசியத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை.
மனதிற்குள் யாருக்கும் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவளை இருவருமே ஆழமாகக் காதலித்தார்கள்.
அவன் வாசனைகளின் உலகத்திற்குள் நுழைந்து சென்றான். வர்ணக் கலவைகளின் தாள லயங்களில் கரைந்து வழிந்தான். இனம்புரியாத கனவுகள்... பலமான உருவகங்கள்...
பழமையான பொய் முகங்கள்... கருங்கல் தூண்கள்... யானை முகங்கள்... அபிஷேக தீர்த்தம் வரும் கல் வாய்க்கால்கள்... பாசி படர்வுகளுக்கு மத்தியில் தெளிந்த நீர் பாய்ந்து வரும் நீரோட்டங்கள்...
அஸ்திக் கலசங்கள்... எதுவுமே புரியவில்லை.
மலர்ந்திருக்கும் வெண்ணிற ஆம்பல் மலரில் நிர்வாணமாக இருக்கும் ஆதிபராசக்தியைப் பார்த்ததும், கை குவித்து வணங்கினான்.
"தேவி.... அம்மா...''- தன்னையே அறியாமல் முணுமுணுத்தான்.
"நீங்க என்ன எழுதுறீங்க? யாரை நினைத்து நீங்க நேற்று இரவு தேம்பி அழுதீங்க? நெருப்புக்கு மத்தியில்... நெருப்புக் காயங்களுக்கு மத்தியில் உங்களுக்கு எப்படி இந்த தேம்பி அழும் மனம் கிடைத்தது?''
"பாறையின் இடுக்குகளிலிருந்து தெளிந்த நீர் வருவதைப் பார்த்திருக்கேல்ல? சேற்றில் தாமரை மலர்கிறது. குப்பைக் குழியிலும் துளசிச்செடி வளர்வதில்லையா? நீங்கள் ஒரு உண்மையைத் தேடும் நபரா?''
"இல்லை... தாகமெடுத்த பக்தன்.அனைத்து வகை யான தாக மோகங்களும் எனக்குள் இருக்கின்றன.''
"என்னிடமும் இந்த தாகம் இருக்கிறதா?''
"இருக்கிறது...
செல்லமே! இருக்கிறது.
தணியாது.. கண்ணு.
தணியாது.''
ஓவியன் மறைந்து நின்று கொண்டு உரையாடலைக் கேட்டான்.
மத்தியிலிருந்த அறையில் வசிக்கும் நாக மோகினி யுடன்தான் உரையாடல்...கருத்துப் பரிமாற்றம்....
ஓவியன் அவளை மனதிற்குள் கொண்டு வந்தான். புகைந்து கொண்டிருக்கும் கஞ்சாவின் போதையில் தன்னைத்தானே மறந்து ஒரு ஓவியம் வரையும் கடுமையான முயற்சி... அவன் பைத்தியம் பிடித்தவனாக
மாறும் நிமிடங்கள்...
அப்போது யாராவது அறைக்குள் நுழைந்து வரும் விஷயத்திலும், உரையாடலில் மூழ்குவதற்கு விருப்பம் உண்டாவதிலும் வெறுப்பை வெளிப்படுத்தினான்.
பொதுவாகவே அவன் உணர்ச்சி வசப்படும் மனதைக்கொண்டவன்.
ஆனால், கலைஞனின் பணி செய்யும் இடத்தில், தியானத்தில் மூழ்கிய நிலையில் உருவங்களை உருவாக்கும்போது, அனைத்தையும் மறந்து விடுவான். அங்கு...
தனிமைச்சூழல் இருக்கும். தியான நிலைக்கான நிமிடங்களை அடையலாம்.
பலவிதப்பட்ட நோக்கங்களை மனதில் வைத்துக் கொண்டே அங்குவந்து சேர்ந்தான். செல்வச்செழிப்பில் மிதக்கும் பேரழகியின் மாளிகை அது என்ற விஷயம் ஏற்கெனவே அவனுக்குத் தெரியுமோ? ஆனால், அவளை இவ்வளவு சீக்கிரம் சந்திப்போம் என்று நினைக்கவில்லை.
அவளுக்கொரு ரகசிய காதலன் இருக்கிறான் என்பதையும் முதல்முறையாகத் தெரிந்து கொண்டான்.
ஒரே பெண்ணை இருவரும் காதலிக்கும் ரகசியத்தை ஒருவரோடொருவர் மறைத்து வைத்துக்கொண்டார்கள்.
வரையும் வர்ணங்கள் ஒன்றோ டொன்று விளையாட்டு நடத்திக் கொண்டி ருந்தது.
ஓவியன் இவ்வளவு காலம் முழுவதும் சுற்றித் திரிந்துகொண்டிருந்தான். சிறிது காலம் யாசித்து நடந்தான்.
கரிக்கட்டைகளையும் பச்சிலைகளை யும் செங்கற்களையும் அவன் வர்ணங் களாகப் பயன்படுத்தினான். பொடிகளை வைத்து அவன் மோகினி- கந்தர்வர்களை ஓவியமாக வரைந்தான். மலர் காயங்களையும் மஞ்சள் தூளையும் கரித்தூளையும் அரிசிப் பொடியையும் மைலாஞ்சிப் பொடியையும் அவன் உருவங்களுக்கு வர்ணங்களாக வாரி வீசினான்.
கண்ணுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் அவன் ஓவியங்களை வரைந்தான்.
உருவங்களுக்கு உயிர் கொடுத்தான்.
ஆலயங்களின் சுவர்களில், ஆட்களற்ற தெருக்களில் காலியாகக் கிடக்கும் வீடுகளின் சுவர்களில், இடிந்த நிலையிலிருக்கும் சுவர்களில், நகரத்தின் பொதுச் சுவர்களில், விபச்சார வீடுகளின் கதவுகளில்...
அவன் தன் கலை வேலைப்பாடுகளைக் காட்டிவிட்டு ஓடி மறைந்து கொண்டிருந்தான்.பைத்தியம் பிடித்த ஓவியன் என்ற பெயரைச் சம்பாதித்தான்.
அவனைப் பார்த்து பலரும் பலவற்றையும் கூறினார் கள்.
நல்லவற்றையும் தீயவற்றையும் குணத்தையும் தோஷத்தையும்...
இரண்டிற்குமே காதுகளைக் கொடுக்கவில்லை.
அவன் தன் பாதையில் நடந்தான். பசியுடனும் சிரமங்களுடனும் பல திசைகளிலும் விழுந்திருக்கி றான்.
உணவு சாப்பிடாத நாட்களிலும் அவன் கலையை வழிபட்டிருக்கிறான். அவன் ஒரு மனிதன் என்பதையும் பசியும் தாகமும் உள்ளவன் என்பதையும் நினைக்கக் கூடியவர்கள் அவனுக்கு இரண்டு அணாக்களையும் நான்கு அணாக்களையும் அன்றைய கால நிலைமைக்கேற்ப எறிந்து தந்தார்கள். அவன் காசின் மீது நாட்டம் வைக்கவில்லை.
கிடைத்த காசை கிடைத்தவுடனே செலவழித்து விட்டே அவன் இரவு வேளையைக் கழித்திருக்கிறான்.
கீரிகள் ஒன்றோடொன்று இணையக் கூடிய... கோவில் புறாக்கள் முட்டையிட்டு குஞ்சுகளை வெளிவரச் செய்த... ஆலய கோபுரத்தின் சந்தனத் தாலான சிற்பங்கள் செதுக்கப்பட்ட வாசலில் அவன் உறங்கினான். பகல் முழுவதும் அவன் ஆலயத்தின் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
நீண்ட நேரத்தை அப்படிப்பட்ட கண்காட்சிகளுக்காக செலவிடுவான்.
நிறைய இரவுகளில் அவன் கோவில் கோபுரத்தின் சிலைகளின் கலை வேலைப் பாடுகளைக் கனவு கண்டவாறு படுத்து உறங்கியிருக்கிறான். பொன் நிற சிறகு களைக் கொண்ட அழகிய கன்னிப் பெண்கள் சொர்க்கத்திற்கு வலிய அழைத் தார்கள்.
பூமியில் சபிக்கப்பட்ட தேவதைகள், அகல்யாக் களாக மாறி ஆலயத்தின் கோபுரத்திற்கு வெளியே காவலாக இருந்தார்கள்.
இருட்டின் கல் படிக்கட்டுகளின் வழியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த மோகினிகளின்...
கந்தர்வர்களின்...
தேவதைகளின் பாத ஓசைகள் கேட்டன. தொடர் அலைகளின் சிறிதும் நிற்காத ஆரவாரம்...
பேரிரைச்சலில் அடி பதறாமல் நின்றுகொண்டி ருக்கும் கும்ப கோபுரம்....
தங்கத்தாலான தாழிகக் குடங்கள்...
வெளிச்சத்திற்காக இருட்டில் தவமிருக்கும் ஆண் துறவிகள்...பெண் துறவிகள்...
தேவதைகள்... நிலவு வெளிச்சத்தில் நிர்வாண நடனமாடும் மலர்கள் சூடிய, நறுமணம் கமழும், அழகிய இளம்பெண்கள்...
அவன் தேம்பி அழுதான்... பசியால்... தாகத்தால்.
ஆதிபத்மம்... நாபிக் குழியிலிருந்து வெளியே வந்த பொன் தாமரை... அழகான இதழ்கள்... அசுர குணத்தால் அடி தவறி நிலைகுலைந்த அசுரர்கள்...சாந்த குணம் படைத்த பிரகாசமான தேவர்கள்...
தேவதைகள்...
சிலைகளைக் கொத்தி உருவாக்கிய சிற்பிகளின் திறமையையும் கலையின் மீது கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டையும் தெரிந்துகொண்டான்.
ஆலயத்தின் கலாச்சாரத்துடன் மனம், கலந்து கரைந்தது.
மிகப் பெரிய கோவில்களிலேயே மிகப் பெரிய கோவில்களாக இருக்கும் அனைத்தையும் சுற்றி பயணித்தான்.
தன்னுடைய பைத்தியம் பிடித்த மாய உருவங்களை கல்லிலும் மண்ணிலும் புழுதியில் வரைந்துவிட்டு, நடைபயணத்தைத் தொடர்ந்தான். தான் படைத்த மக்களின் எதிர்காலம் என்ன என்பதைப் பற்றி நினைக்க வில்லை.
வரைவதில் இருக்கக்கூடிய ஆர்வத் துடன் நடந்தான். பின்னால் திரும்பிப் பார்க்காமல்... கற்பனை எனும் காதலி பிரசவிக்கும் நேரமெல்லாம், நிரந்தர பொழிவை நிலைநிறுத்தும் கற்பக மரத்தைப் போல தழைத்து வளர்ந்தான். அவளை மட்டும் விடாமல் சந்தித்தான்.
பிரசவ வலியை அனுபவிக்கும் கற்பனை, இருளைக் கிழித்துக் கொண்டு கூறியது: "மக்களை விட்டுட்டு வரலாமா?
அவர்களை வேண்டிய வகையில் வளர்க்க வேண்டாமா?'' காலம் பதில் கூறட்டும்.
தகுதியுள்ளவர்கள் காலத்தைக் கடந்து வாழ்வார்கள். வாய் உள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
ஏராளமான பிள்ளைகளின் வேதனை கலந்த முனகல்கள் நிறைந்த, சூடான மண்ணின் வழியாகத்தான் நாம் பயணிக்கிறோம்.
பிள்ளைகள் அழட்டும்.
நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் குடிசையிலும் அரண்மனையிலும் பள்ளிவாசலிலும் கோவிலிலும் தேவாலயத்திலும் விபச்சாரம் நடக்கும் வீட்டிலும் பசுக்களின் தொழுவத்திலும் புற்களால் வேயப்பட்ட குடிலிலும் இருண்ட கட்டிடத்திலும் பாலைவனத்திலும் கிடந்து....
புனிதப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் அங்கு வந்து சேர்ந்திருக்கிறான். இனிமேல் அங்கிருந்து முன்னோக்கி நடைபெறும் சோதனைகள்...
தோல்வியிலும் வெற்றியிலும் போய்ச் சேரக்கூடிய சோதனைகள்...
ஒருவகையான ஆன்ம பலிக்கு தயாரான நிலையில் இருக்கிறான்.
இரண்டிலொன்றை அறிந்து கொள்ளப் போகிறான்.
நடுவிலுள்ள அறையில் வசிக்கும் அந்த பேரழகி தனக்குச் சொந்தமாக ஆக மாட்டாளா?
ஒருநாள் மத்தியில் இருக்கும் அறையில் உள்ள கன்னிப்பெண் ஓவியனை அழைத்து ரகசியமாகக் கூறினாள்: "நீங்கள் இங்கு நிரந்தரமாக தங்கிக் கொள்ளுங்கள்.
ஆனால், அருகிலுள்ள அறையில் வசிக்கக்கூடிய பைத்தியக்காரனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஆளிடம் ஏதோ வசீகரிக்கும் சக்தி இருக்கிறது. அவன் மற்றவர்களுக்கு தொல்லைகள் தருபவனாக இல்லையெனினும், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதில் விருப்பமுள்ளவனாக இருக்கிறான்.
நமக்கிடையே இப்படியொரு தனிப்பட்ட உரையாடல் நடந்திருக்கிறது என்ற விஷயத்தை அந்த மனிதன் எந்தச் சமயத்திலும் தெரிந்து கொள்ளக் கூடாது.'' அவள் கூறுபவை அனைத்தையும் ஓவியன் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் நீண்ட நேரம் அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தான்.
பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள்....
வசீகரிக்கக்கூடிய புன்சிரிப்பு... நீல வானத் தில் சிராவண சாயங்கால வேளையில் மலர்ந்த வசந்த பஞ்சமி... ஓவியன் தன் அறையைத் திறந்தான்.
மரணமடைந்து விட்ட ஒரு புனித ஆன்மாவின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருப்பதைப் போல உணர்ந்தான்.
அறையில் நிறைய காய்ந்த பூ மாலைகள் சிதறிக் கிடந்தன. இடிந்து விழுந்த புதிய கட்டுமானங்களைப் போல... அழகை ரசிக்கக் கூடிய ஏதோ ஒரு மனிதன் அந்த அறையில் சிறிது காலம் வசித்திருக்கலாம்.
மலர்களை நேசித்தவன்...
ஓவியன் சிந்தனையில் மூழ்கியவாறு அறைக்குள் கண்களை ஓட்டினான்.
சிங்கத்தின்.... ஆட்டுக்குட்டியின் உருவத்தைக் கொண்டிருந்த புல்லால் ஆன பாய் விரிக்கப் பட்டிருந்தது. அறையின் மூலையில் காலியான ஒரு புட்டி...இரண்டு ஒயின் க்ளாஸ்கள். தகர்ந்து கிடக்கும் ஒரு வீணை..
ஜெயதேவரின் கீதகோவிந்தத்தின் பழைய... செல்லரித்த கையெழுத்துப் பிரதி...
ஓவியன் அறையில் மூட்டையையும் சுமையையும் இறக்கி வைத்தான்.தரையை வாரிப்பெருக்கினான்.
காய்ந்த பூக்களை எடுத்து முகர்ந்து பார்த்தான். சில பூக்கள் காய்ந்து போயிருந்தாலும், அதன் வாசனை முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை.
காய்ந்த பூக்களில் வாசனை இருப்பவையும் இல்லாதவையும் எது என்பதை அறியக்கூடிய ஆர்வத்துடன் ஒவ்வொரு பூக்களையும் மிகவும் கவனமாகப் பொறுக்கியெடுத்து பத்திரமாக தன் துணிப் பைக்குள் போட்டான்.
மனதிற்குள் உறுதிப்படுத்திக் கொண்டான்: சிலவற்றை ஆழமாக இங்கு வைத்தே வரைய வேண்டும். ஏற்ற இடம்... எனினும், இதற்கு முன்பு இந்த அறையைப் பயன்படுத்தியது யார் என்பதை அறியக்கூடிய ஆர்வம் மனதில் நிறைந்து நின்றிருந்தது.
தகர்ந்து போயிருந்த வீணையின் தொங்கிக் கொண்டிருந்த கம்பிகளை முறுக்கிக் கட்டினான். ஒரு அபஸ்வரத்தை மீட்டினான்.
அன்று இரவு அவன் அங்கு உறங்குவதற்காக படுத்தான். படுத்தாலும், உடனடியாக எழுந்து விட்டான். தூக்கம் வரவில்லை.
நேப்பாளத்தில் அவனுக்கு ஒரு ஆட்டிடையன் பரிசாகத் தந்த சிவப்பு கஞ்சாவைத் தூளாக்கி அவன் தான் எப்போதும் பயன்படுத்தக்கூடிய புகைக் குழாய்க்குள் இட்டு நான்கு "தம்' இழுத்தான்.
தீப்பெட்டி மரத்தின் பசையும் கற்றாழையும் கரிந்த ஒரு தனித்துவ வாசனை அறையெங்கும் பரவியது. சிவந்த கஞ்சாவின் மகத்துவ அற்புதங்களைப் பற்றி அந்த ஏழை ஆட்டிடையன் கூறிய கதைகள் ஞாபகத்தில் வந்தன. பனி எனும் மாபெரும் கடலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த போது, ஆட்டிடையன் முதலில் பாறையின் உச்சியில் அமர்ந்து சிவப்பு கஞ்சாவின் போதையை அனுபவித்தான்.
கழுத்துப் பகுதி ஒடுங்கிப் போயிருக்கும் குழல்... காட்டுச் செடியின் தண்டால் உண்டாக்கப்பட்ட குழல்... காட்டு அரக்கு பசையைக்கொண்டு உறுதி செய்யப்பட்டது. இமயமலையின் சிகரத்திலிருந்து பாய்ந்து வரும் குளிர்ந்து மரத்துப் போன நீர்... பனி உருகி மரத்துப் போகச் செய்யும் தீர்த்த ஜலம்... கங்கை நீரை மேலும் மேலும் குழலில் நிறைத்துத் தந்தான். சிவந்த கஞ்சாவின் மஞ்சள் நிற மலர்கள் தூரத்திலிருந்த பள்ளத்தாக்கில் மலர்ந்து காட்சியளிப்பதைச் சுட்டிக் காட்டினான். நிறைந்த புகைக் குழலில் சிவப்பு கஞ்சா எரிந்தது. புகை பரவியது. குளிர் ஓடி விலகியது. அன்று சொர்க்கத்தைப் பார்த்தான். பூமியின் சொர்க்கம்...
பள்ளத்தாக்கின் சொர்க்கம்... மலைத்தொடர்களுக்கு மத்தியில் தெரிந்த பிரபஞ்சத்தின் மாய சக்தி...
மலையின் உச்சியிலிருந்து பாய்ந்தோடி வரும் அருவித் தேனான முலைப் பால் மூடுபனியின் பால் கடலாக பள்ளத்தாக்குகளை மூடியது. தூரத்தில் மலைத் தொடர்களை மூடியவாறு நின்றுகொண்டி ருக்கும் நீல வானத்தின் விளிம்பு.... மேய்ந்து நடந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள்...
நிமிடங்கள் தோறும் நிறங்களும் வடிவங்களும் மாறி... மாறித்தோன்றுகின்றன.
பசுமையான மரங்களின் வரிசை....
தேவதாரு, ரோஸ் உட், கடம்பம், அத்தி, இத்தி, ஆலமரம், மதிப்புமிக்க மூலிகைகள் தாமே உண்டாகக் கூடிய புண்ணிய பூமி... பூத்துக் கிடக்கும் கஞ்சா நிறைந்த காடு... அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சத்தங்கள்...
பறவைகளின் இனிய கீதங்கள்...
மோகினிகளின், கந்தர்வர்களின், தேவதைகளின் நிசப்தமான பாடல்கள்...பலவித வர்ணங்களின் மாய உலகம்... இரவுப் பறவைகளின் இசை...
ஆட்டிடையனின் புல் வேயப்பட்ட குடிசையில் செலவிட்ட சொர்க்கத்திற்கு நிகரான இரவு... மகளா, இரண்டாவது மனைவியா என்று தெரியவில்லை. இரவு வேளையில் உடன் இருப்பதற்கு அவள் படுக்கையறையில் இருந்தாள். அன்று இரவு சிவந்த கஞ்சாவின் போதையில் மூழ்கி உறங்கிக் கரைந்தான்.
அனுபவிக்காத சொர்க்கத்தின் கோபுர வாசலைப் பார்த்துவிட்டு, புலர்காலைப் பொழுதில் கண் விழித்தான்.
குளித்தான்.
தீர்த்தங்கரர்களைப் பார்த்தான்.
தொழுதான்.
மீண்டும்... இதோ...
இன்னொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறான்.
மறந்துவிட்ட நினைவுகளின் பலி பீடத்தில் ஆன்மாவை அர்ப்பணம் செய்வதற்கு முன்னால் மனதில் கற்பனை பண்ணி வைத்திருக்கும் சொர்க் கத்தின் சிறகுகள் பறந்து உயரட்டும்! ஆன்மாவின் இசையை எழுப்பும் இசைக்கருவியின் இதயத்தில் பாதுகாத்து வைத்த சிவப்பு கஞ்சாவின் பளிங்கு செப்பைத் திறந்தான்.
இமயத்தைப் பற்றிய கனவு... இந்துவின் முகம் நினைவில் வந்தது.
தூர்ஜடி தேவனை வழிபட்டது உமா. தன் வாழ்வை அர்ப்பணம் செய்த காமன்... சதி... ரதி...
இனிய பதினேழின் கன்னத்தில் அடர்ந்த சிவப்பு சாயத்தைப் போல கஞ்சாவைக் குழலுக்குள் வைத்தான்.
மென்மையான வாசனையுடன் மூன்றாம் கண் பிரகாசித்தது. இனி சமாதியில்தான்...
அருகிலிருந்த அறையின் கதவு அசைந்தது. தேம்பல் சத்தம் கேட்டது.
பைத்தியக்காரன் அழுகிறானோ? எழுந்தான்.
சுவரிலிருந்த ரகசிய துவாரத்தின் வழியாகப் பார்த்தான். அறையில் வெளிச்சம் தெரிந்தது.
பெட்ரோலில் தேங்காய் எண்ணெய் கலந்த ஒரு வாசனை நாசித் துவாரத்தின் வழியாக உள்ளே நுழைந்தது.
பயன்படுத்துவது நவஸாரமா? இல்லாவிட்டால்...
இஞ்சிப் புல் எஸென்ஸில் கலக்கப்பட்ட முந்திரிச் சாறா? பூசணிக்காயை வேக வைத்து தயாரிக்கப்படும் நவஸாரம் சேர்த்த பேட்டரி வீரனோ, பூச்சி மருந்தோ? என்ன ஒரு கடுமையான வாசனை! அருகிலிருக்கும் அறையில் வசிக்கும் பைத்தியக்காரனும் போதைக்கு அடிமையோ? தானும் போதைக்கு அடிமையான மனிதன்தானே? அவன் பட்டைச் சாராயம் குடிக்கிறான்.
தான் புகைப்பது... கஞ்சா.
இரண்டுமே போதைப் பொருட்கள்தான்.
இல்லை... இனிமேல் எந்தச் சமயத்திலும் மது அருந்துவதில்லை.
இந்த புகைக் குழலை ஆயுட்காலம் முழுவதும் வைத்திருக்கவேண்டும். சிவப்பு கஞ்சாவின் அடர்த்தியான வாசனை கொண்ட பூக்களை யார் பறித்துத் தருவார்கள்? திரும்பத் திரும்ப சுவரிலிருந்த துவாரத்தின் வழியாக எட்டிப் பார்த்தான்.
வாசனையையும் உருவத்தையும் உணரக்கூடிய அளவிற்கு தாடியும் தலையும் ஒரே மாதிரி வளர்ந்து கிடந்தன. பிரகாசமான கண்கள்... பரிதாபமும் ஆசையும் சோகமும் கோபமும் தங்கி நின்றிருக்கும் முகம்... நெற்றியில் மறைந்து விட்டிராத வரிகள்...கண்களில் வற்றாத கண்ணீர்த்துளி...
கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு மடக்காக குடிப்பதுடன் சேர்ந்து அந்த கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.
அறைக்குள்ளிருந்து சுவர்க்கடிகாரத்தின் நாடித் துடிப்புகள் தெளிவாக கேட்டன. சுவரிலிருந்த அலமாரி யில் நிறைய புத்தகங்கள் இருந்தன.
பெரியவையும் சிறியவையுமான ஏராளமான நூல்கள்.. பழக்கம் உள்ளவையும் பழக்கம் இல்லாத வையும்...
இரட்டைக் கட்டில்... விரித்துப் போடப்பட்ட படுக்கை... பூக்கள் பின்னப்பட்ட விரிப்பு...விரிப்பில் முல்லைப் பூக்கள் சிதறி விடப்பட்டிருந்தன.
முன்பு ஓவியனிடம் ரகசியமாகப் பேசிய அழகி திடீரென பைத்தியக்காரனின் அறையில் இருப்பதைப் பார்த்ததும், அவன் சற்று ஆச்சரியப்பட்டான்.
அவள் எங்கிருந்து இவ்வளவு வேகமாக ஓடி வந்தாள்? இதுவரை எங்கு இருந்தாள்? பைத்தியக்காரன் அவளை மறைத்து வைத்திருக்கிறானோ.... தன் கட்டிலுக்குக் கீழே?
அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.ஓவியன் சுவரிலிருந்த ரகசிய துவாரத்தில் கண்களை அழுத்தி வைத்தான்.
மிகவும் அருகிலிருக்கும் அறையில் இருப்பவன் பைத்தியக்காரன் என்றும், அவனிடம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அவன் ஒரு எழுத்தாளன் என்றும் தன்னிடம் உறுதியான குரலில் கூறியவள் இவள்தானே? இந்த நித்திய கன்னி... மாயா மோகினி...
தன்னையும் அவனையும் ஒரே மாதிரி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாளோ?அந்த மனிதன் ஒரு பைத்தியக்காரன் என்று அவள் கூறியதற்குக் காரணம் என்ன? ஒருவரையொருவர் நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவா? சந்தேகங்களுடன் சேர்ந்து இதயம் அதிக வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.
"நான் தினமும் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன? என்னுடைய இந்த காத்திருப்பிதற்குப் பின்னால் உள்ள பொறுமையைப் பற்றி நீ எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறாயா? முடியாது...என்னால் இதைத் தொடரமுடியாது. ஒன்று... நான் இங்கிருந்து மீண்டும் பழைய மாதிரியே தெருவிற்குள் வெறும் கையுடன் வெளியேறிச் செல்வேன்.
இல்லாவிட்டால்.... நீ என்னை என்றென்றைக்கு மாக விட்டெறிந்து விட்டுச் செல்ல வேண்டும்! எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நிறைந்த இந்த வாழ்க்கை எனக்கு வெறுத்து விட்டது. நீ இல்லாமல்....''
அவனுடைய வளர்ந்த தாடி அவளுடைய கன்னத் தில் பட்டது.
"மிகவும் அவசரம். அனைத்தும் வேகமாக நடக்கணும்.
நடக்காவிட்டால்... கவலை உண்டாகும்.
குற்றச்சாட்டு உண்டாகும். நேற்று வரை ஒரு மனிதனுக்குத்தான் பயப்பட வேண்டியதிருந்தது. இப்போதுமேலும் ஒரு ஆள் இங்கு வலிய நுழைந் திருக்கும் செயல் நடந்திருக்கிறது.
மிகவும் அருகிலுள்ள அறையில் ஒரு பைத்தியக் காரன் வந்து சேர்ந்திருக்கிறான்.
அந்த ஆளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.''
அவள் நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டிய வாறு கவலையையும் கிண்டலையும் கலந்தவாறு கூறுவதை மறைந்து நின்று கேட்டான்.
"எங்கே?.. அந்த ஆள்?''- ஆர்வத்துடன் தாடிக்காரன் கேட்டான்.
"அவசரப்பட வேண்டாம். நீங்கள் ஒருவரை யொருவர் இன்றில்லாவிடினும், நாளை சந்திப்பீர்கள். ஒரு ஆள் வர்ணங்களின் மூலம் வாழ்வை ஓவியமாக தீட்டுவது நடக்கிறது.
இன்னொரு ஆள் அதைச் செய்வது- வார்த்தைகளின் மூலம். அந்த ஆளிடம் நெருங்கும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்கணும்.'' இதைக் கூறிவிட்டு அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள்.
"பரவாயில்லை... அந்த ஆளும் என்னைப் போலவே உன்னைக் காதலிக்கலாம். அதனால், என்னைக் காதலிப் பதைப் போலவே அந்த ஆளையும்....''
"அய்யோ.... அதை மட்டும் என்னிடம் சொல்லாதீங்க...''
நினைத்துப் பார்த்தான். அவள் இறுதியாக என்ன கூறினாள்? அதை மட்டும் கூறக் கூடாது என்று தானே? என்ன அது?அது... அது மட்டும் புரிய வில்லை.
அது... அனைத்து பெண்களும் ஒருமுறை...
இல்லாவிட்டால்... இன்னொரு முறை ரகசியமாக கூறக்கூடிய ஒரு மந்திரமல்லவா? தந்திர மல்லவா? அதையும் தாண்டிய அர்த்தம் அந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கிறது அல்லவா? அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள உறவு... அது புனிதமானதா? எனினும், அவளுக்கு அவனையும் அவனுக்கு அவளையும் பிடிக்கும். பெண்கள் கிட்டத்தட்ட பெரும்பாலும் அப்படித்தான்.
பார்த்தால்...
பார்த்ததன் மீது ஒரு விருப்பம்... வெறி...
பலவற்றையும் நினைத்தவாறு ஓவியன் திகைத்து நின்றிருந்தான்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த அந்த இரவிற் குப்பிறகு ஓவியன் சரியாக உறங்குவதில்லை.
எழுத்தாளனுக்கும் அழகிக்கும் இடையே உள்ள ஆழமான உறவை நினைத்து ஓவியனின் மனம் வேதனைப்பட்டதோ? அவனும் அவளுக்காக தவம் இருந்தானே? அவளுடைய நெருக்கம் அவனுக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை?
"மலரும் புன்சிரிப்புடன் நீ ஏன் என் அறைக்குள் நுழைந்து வரவில்லை? நானும் உனக்காக தவம் இருந்தேனே... ஆசை நாயகியே?''
நீண்ட நாட்களின் காத்திருப்பிற்குப் பிறகு காதலின் சின்னமான தேவதை ஓவியனின் அறைக்குள் அதிக உணர்ச்சிகளுடன் நுழைந்து வந்தாள்.
ஓவியன் அவள் அணிந்திருந்த ஆடையை இடுப்பிலிருந்து இழுத்து விலக்கினான்.
முழுமையான நிர்வாணத்துடன் முன்னால் மல்லாந்து படுக்க வைத்தான்.ஒரு மந்திரவாதியைப் போல அவன் அவளை ஆக்கிரமித்தான்.
அவனுடைய மந்திரக் கோலுக்கேற்றபடி அவள் செயல்பட்டாள்.
அப்போது அவள் அனைத்தையும் மறந்து விட்டாள். தன்னைத் தானேயும்...வர்ண அழகில் தன்னை இதற்கு முன்பு மூச்சுவிடாமல் செய்த அந்த எழுத்தாளனையும்...
ஓவியனின் மாய வசிய சக்தியில் அவள் தளர்ந்து படுத்திருந்தாள்.
அவன் தூரிகையையும் சாயங்களையும் எடுத்து முன்னால் வைத்தான். சிவப்பு கஞ்சாவின் மருந்து நிறைக்கப்பட்ட புகைக் குழலில் எரியும் நெருப்பைப் படர வைத்தான்.
காண்டாமிருகத்தின் பசும் சாணம் பற்றியெரிந்த வாசனை அறையில் நிறைந்தது.
அருகிலிருந்த அறையின் கதவு ஓசை உண்டாக்கியது.
ஓவியனின் அறையை எழுத்தாளன் எட்டிப் பார்த்தான்.
ஓவியன்தான் பணியாற்றும் இடத்தில் தவத்தில் மூழ்கினான். தனக்கு மட்டுமே சொந்தம் என்று எழுத்தாளன் நினைத் துக்கொண்டிருந்த அவள் இப்போது பாதி சுய உணர்வில்...
ஓவியனின் அறையில்...
முழுமையான நிர்வாண நிலையில்... படுத்திருந்தாள்.
வரைதலும் வர்ணமும் அவளுக்கு அந்நியம் இல்லை என்ற சிறப்பு குணத்துடன்...
எழுத்தாளன் புதிதாக வடிவம் எடுக்கும் ஓவியனின் வர்ணஜாலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பல நிறங்களைக் கொண்ட சாயங்கள்... வழிந்துகொண்டும் சேர்ந்து கொண்டும் இருக்கக்கூடிய சாயங்களின் சேர்க்கை... கர்ப்பப் பாத்திரத்தின் இருளில் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் சிவப்பு நிறம்... வர்ண வரிசை... கடும் பச்சையில் கருப்பு கலந்த நீலம்.... அடர்த்தியான கருப்பு... நீல வானம்... உருண்டு உயர்ந்த மலைகள்...
அழகான பூக்களில் ஊறியிருக்கும் தேனின் சிவப்பு கலந்த நீலம்... தொப்புள் கொடிக்குக் கீழே பாய்ந்தோடும் நதி... இடுப்புப் பகுதியில் வரையப்பட்ட பாறைக் கற்கள்... உருண்டு, பிரகாசிக்கும், திரிகோண வடிவத்திலிருக்கும் மரகதப் புற்று...தொப்புள்...
படைப்பின் ஆதிபத்மம்.
வர்ணங்களின் சங்கமத்தின் மூலம் வடிவமெடுக்கும் அந்த ஓவியத்தையும், மல்லாந்து படுத்திருக்கும் இனிய இளமையையும் மாறி... மாறிபார்த்தான்.
ஓவியனுக்கு எதுவுமே தெரியாது. தன் அறையில்...
இன்னொரு ஆள் இருக்கும் சுய உணர்வே அவனுக்கு இல்லை.
எழுத்தாளனுக்குப் புதிய ஒரு ஆவேசம் உண்டானது. அவன் ஏதோ ஒரு தரிசனத்தின் வெளிப்பாட்டில் காகிதத்தில் அபயம் தேடினான்.
வரிகளை எப்படி வர்ணங்களில் கொண்டு வருவது? வரிகளை வர்ணங்களில் பகிர வேண்டுமெனில், அவன் கலைஞனாக ஆகவேண்டும்.
கலாகாரனாக ஆக வேண்டுமெனில், கலைகளின் உபாசகனாக ஆக வேண்டும்.
மண்ணிலும் கல்லிலும் சாயத்திலும் பேனாவிலும்...
பேனாவில் மையை நிறைத்துக் கொண்டும் ஊற்றிக் கொண்டும் சரிய விட்டுக்கொண்டும் இருப்பவன்! தன்னைத் தானே மறப்பவன்...
பைத்தியக்காரன்...
ஒற்றை மனிதன்... தனியன்...
சபிக்கப்பட்டவன்...
நிலையற்ற சிந்தனையாளன்...
காலத்தின் பொருத்தமான ஓட்டத்தில் சாயங்கள் நிறங்களின் சேர்க்கைகளை உண்டாக்குகின்றன.
நிறங்களின் சங்கமங்களின்மூலம் வர்ணங்கள் உருவம் எடுக்கின்றன.
வர்ணங்களுக்கு சாயம் வேண்டும்.
சாயங்கள்...
சாயங்களாக மாறாமலிருக்கவேண்டுமெனில், வரிகள் வர்ணங்களாக வடிவமெடுக்கவேண்டும். ஆணும் பெண்ணும் இணைசேர வேண்டும். படைப்பு நடக்கவேண்டும். மக்கள், பிரசவமாகி பெருகவேண்டும்.
பெருகுபவை அனைத்தும் இறந்து காணாமல் போகும். இறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருப்பவர்களின் கதைதான் சாயங்கள்.
சாயங்களுக்கு உருவமும் வாசனையும் இருக்கின்றன. உருவத்தையும் வாசனையையும் படைப்பதற்கு உதவாத சாயங்கள் நீரில் வரையப்படும் கோடுகள்...
உயிரற்றவை...
அர்த்தமற்றவை..
உருவமற்றவையும் தொடர்பற்றவையும்...
கஞ்சாவும் கள்ளும் படைத்த இனம் புரியாத போதையில் வரைந்தவை வர்ணங்களில் மூழ்கிப் போயின. சாயங்கள் மோதி சாய்ந்து கோலங்கள் கோமாளித்தனமாக ஆயின.