இன்றைய செய்தி நாளைய வரலாறு என்றால் நேற்றைய செய்தி இன்றைய வரலாறுதானே. ஒரு நாட்டின் சமுதாய, அரசியல், பொருளாதார மற்றும் தனிமனித வாழ்க்கையைப் பற்றிய காலக்குறிப்புகள் அனைத்து வரலாறுகளே. Storyஎன்றால் புனைவு, History என்றால் வரலாறு. வரலாற்றுக்குள் புனைவுள்ளது. வரலாற்றுப் புனைவுகளேHistorical Novels.
ஜார்மூர் நாம் வாழும் காலத்திய சமுதாயச் சூழலின் சரியான முழுமையான வார்ப்பாகும். எனவே, நாவல்கள் சமகாலச் சரியான வரலாறாகும், என்பார் 1878-1910 எனும் முப்பதாண்டுக் காலத்திய ஆங்கில நாகரிகமும் பண்பாடும் அலைகளாக வந்து தமிழ்க் கரையைத் தாக்கின. அப்போது ஆங்கிலம் கற்று, அரசுப் பணிகளில் ஈடுபட்ட தமிழர்கள் ஆங்கில மோகத்தாலும் நமக்குரிய மரபுகளையும் பண்பாடுகளையும் காக்கவேண்டும் எனும் தமிழ்த் தாகத்தாலும் புதினங்களைப் படைத் தனர்.
வால்டர் ஸ்காட், இராபர்ட் கிரேவ், வெல்ஸ், ஹக்ஸிலி, ஆர்வெல் முதலிய ஐரோப்பியக் காலனித்துவ எழுத்தாளர்களைத் தழுவித்தான் தமிழில் வரலாற்றுப் புதினங்களைப் படைத்தனர்.
தமிழக வரலாறு அவர்களுக்குக் கைகொடுத்தது. கி.த. சரவணமுத்துப் பிள்ளையின் "மோகனாங்கி' (1895) முதல் சரித்திர நாவலாக இருக்கலாம். இது, நாயக்க மன்னர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. மங்கம்மாள் வரலாற்றினை எஸ். கூடலிங்கம் 1903-ல் எழுதினார். 1879-ல் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியாரின் கதையைச் சரித்திரமாக் கினார். தொடர்ந்து கமலாம்பாள், பத்மாவதி, அசன்பே என்று பல சரித்திரப் புதினங்கள்.
கல்கியைத் தொடர்ந்து சாண்டில்யன், சோமு, கோவி மணிசேகரன், ஜெகசிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி, விக்கிரமன் என்று சங்ககாலம் தொடங்கி நாயக்கர் காலம் வரையிலான வரலாற்றுக்குறிப்புகளால் நாவல்கள் எழுதினர். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், இராசமாணிக் கனார், கா.அப்பாத்துரையார், கனகசபை முதலிய அறிஞர்கள் எழுதிய தமிழ் மறுமலர்ச்சி - இயக்கத்தின் விளைவாக தமிழ்மொழி, பண்பாடு, அரசியல் கலைகள் ஆகியவற்றின் வரலாற்றைக் கட்டமைக்கும் நூல்கள் வரலாற்று நாவலுக்கு வழியும் வலிமையும் தந்தன.
வரலாற்று நாவல்களைச் சந்தைக்கான சரக்கு, கற்பனைச் சரடு என்றும் மணிக்கொடி எழுத்தாளர்களும். மார்க்சிய எழுத்தாளர்களும் கிண்டல் செய்தனர்.
சிட்டி சிவபாத சுந்தரம் ஆகியோரும் நிகழ்கால அரசியலைப்பற்றி எழுத முடியாத - எழுத விரும்பாத - எழுத அஞ்சுகிற எழுத்தாளர்கள் பண்டைய வரலாற்றுக்குள் பாதுகாப்புக்காக ஒளிந்து கொண்டு பழம் பெருமை பேசுபவர்கள். இலக்கியத் தரமிக்க சொந்தக் கதை எழுதுவதைவிட வரலாற்றுக் கதை விடுவது எளிமையானது. இது தமிழ் இலக்கியத்தையும் இலக்கிய ரசனையையும் சமூக உணர்வையும் பாதித்து வருகிறது என்றும் சிலர் குறிப்பிட்டனர்.
பிரெஞ்சுக்காலனித்துவ அரசிடம் பணியாற்றிய ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பினை ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சன் "வானம் வாசப்படும்', "மானுடம் வெல்லும்', "கண்ணீரால் காப்போம்' என எழுதினார்.
புதுச்சேரிக்கும் பிரெஞ்சுக் காலனித்துவத்திற்கும் இருந்த தொடர்பை மையப்படுத்தி பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் "நீலக்கடல்', "மாத்தாஹரி', கிருஷ்ணப்ப நாயக்கரின் "கௌமுதி' ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.
பின்காலனித்துவக் கோட்பாட்டில் வரலாறு என்ற கருத்தாக்கம் காலனித்துவவாதிகளின் ஆதிக்கம் மிக்கது. வரலாற்றை மட்டும் விஞ்ஞானத்தன்மை கொண்டது என்றும் மற்றவர்களுக்கு வரலாறே கிடையாது என்றும் கூறி எல்லோரையும் வெளியே நிறுத்துவது. ஒன்றைச் சேர்ப்பதும் விலக்குவதும் காலனித்துவவாதிகளின் வரலாற்றுக் கல்வியின் குணம். ஆனால், காலனித்துவச் சமூகத்தில் வரலாற்று நாவல்கள் எழுதுவது என்பது காலனித்துவவாதிகளின் வரலாற்றைக் கட்டுடைத்து நாட்டுப்பற்றைக் கட்டமைக்கின்ற நுண்அரசியலைச் சார்ந்தது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் வரலாற்று நாவல்களின் சிறப்பை அறிந்துகொள்ளலாம். எனவேதான், பின்காலனித்துவ சமூகங்களில் இன்றும் வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டும், வாசிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் வருகின்றன. இன்றும் பொன்னியின் செல்வர்கள் குறையவில்லை. சாண்டில்யனின் சரசமும் சல்லாபமும் சாகசமும் விலைபோகின்றன. பாலகுமாரர்களுக்கும் பஞ்சம் இல்லை. இது பிரபஞ்ச உண்மையாகும்.
1930-கள் வரை உலகின் பெரும்பகுதி நிலப்பரப்பு (84.6விழுக்காடு) காலனிய ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே இங்கிலாந்து இதில் முனைப்பாக ஈடுபட்டது. இங்கிலாந்தைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
காலனித்துவம் என்ற சொல் கலோனியா எனும் ரோமானியச் சொல்லிலிருந்து பிறந்தது. இதற்குப் பண்ணை அல்லது குடியிருப்பு என்பது பொருளாகும். தங்கள் குடியுரிமையை இழக்காமல் அடுத்தவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் குடியேறலாம். எனினும், தங்கள் தாய்நாட்டோடும் இணைக்கப்பட்டிருக்கலாம்.
காலனித்துவ ஆட்சி, எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. ஆனாலும், திணைக்குடிகளை அடக்கி ஒடுக்குவதில் அது ஒரே மாதிரிதான் செயல்பட்டது. புதிய நிலத்தில் சமுதாயத்தை அமைத்தல் எனும்போது ஏற்கனவே அங்கு வாழ்ந்த சமுதாயத்தைப் புனரமைத்தல் அல்லது சீர்செய்தல் எனும் மறைமுகப் பொருளைத் தருகிறது. சீரமைப்பு எனும் வார்த்தையில் வணிகம் செய்தல், சூறையாடுதல், பேரம்பேசுதல், குடிகளை அழித்தல் அனைத்தும் அடங்கும். காலனித்துவம் என்பதற்கு மற்றவர் நிலங்களையும் வளங்களையும் அடக்கல் அல்லது அபகரித்தல் என்பது பொருளாகும்.
தொடக்க காலக் காலனித்துவம் முதலாளித்துவத்திற்கு முந்தையது. நவீனக் காலனித்துவம் ஐரோப்பிய முதலாளித்துவத்தோடு தொடர்புடையது. காலனித்துவ நாட்டு வளங்களைச் சுரண்டுவது, அடிமைகள் மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டுபோய் சரக்குகளாக மாற்றிக் காலனிய நாடுகளை அவற்றை விற்கும் சந்தையாக்குவது, இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொண்டுபோய் துணியாக்

தொடக்க காலக் காலனித்துவம் முதலாளித்துவத்திற்கு முந்தையது. நவீனக் காலனித்துவம் ஐரோப்பிய முதலாளித்துவத்தோடு தொடர்புடையது. காலனித்துவ நாட்டு வளங்களைச் சுரண்டுவது, அடிமைகள் மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டுபோய் சரக்குகளாக மாற்றிக் காலனிய நாடுகளை அவற்றை விற்கும் சந்தையாக்குவது, இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொண்டுபோய் துணியாக்கிக் கொண்டுவந்தது. கொள்ளை இலாபம் பெற்றது. அத்துடன் மக்களின் மொழி, இலக்கியம், பண்பாடு, மரபு ஆகியவற்றின்மீது இடையீடு செய்து அறிவுசார் வன்முறையை நிகழ்த்தியது.
பிரிட்டிஷ் அரசு நாகரிகமயப்படுத்தும் சமயப் பரப்புக்குழு’ என்ற பெயரில் கிளம்பியது. காலனித்துவ நாடுகள் காட்டுமிராண்டித்தனமானவை, நாகரிகமற் றவை என்று பிரச்சாரம் செய்தது. அறிவியல் தொழில் நுட்பத்தையும் இலக்கியத்தையும் தந்தது என்று புனைவு செய்தது. காலனித்துவவாதிகளின் கருத்துகள் பயன்மிக்கவை, நுண்மாண் நுழைபுலம் மிக்கவை என்றும் நம்ப வைத்தது. உட்கட்டமைப்பு, கல்வி நிறுவனம் தனிநபர் உளவியல் ஆகியவற்றைச் சிதைத்துத் தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்தியது.
காலனித்துவ வாதிகளின் இலக்கிய வடிவங்களைக் கற்க நேர்ந்ததன் விளைவாக, தங்கள் தாய்மொழிகளில் அந்தப் புத்திலக்கியங்களைப் படைத்தளித்தனர்.
இதனைத் தாய்மொழித் தொண்டாகக் கருதினர். இம்முயற்சிகள் இருவகைப்பட்டன.
1. இந்திய மேட்டுக்குடிகள் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக எழுதியவை.
2. காலனித்துவத்திற்கு எதிரான மனப்பான்மையை வடிவமைக்க எழுதியவை பிரிட்டிஷ் அரசில் பணியாற்றும் தமிழ் மேல்சாதி யினர் (ஐயர், ஐயங்கார், முதலியார், பிள்ளை) வரலாற்று நாவல்களை வடித்தளிக்க முயன்றனர். இராஜபாஷை ஆங்கிலத்தில் இராஜ விசுவாசத்தோடு எழுதியும், மொழியாக்கம் செய்தும் வந்தனர். வேதநாயகம் பிள்ளை ஆங்கில அரசாங்க முன்சீப்பாகப் பணியாற்றியவர். இவர் ஏற்கனவே காலனித்துவ அரசிடம் மொழிபெயர்ப் பாளராக இருந்தவர். ஆங்கில இலக்கியம் வழியாகக் காலனித்துவ மனப்பான்மையை உள்வாங்கிக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த கல்வியறிவும் தாய்மொழிப் பற்றும் மிக்கவர். எனினும், ஆங்கிலேயரை உய்விக்க வந்த உத்தமர்கள் என்றும் ஆங்கில இலக்கியத்தை உத்தமமானவை என்றும் நம்புகிறவர். தமிழில் உரைநடை இலக்கியம் இல்லை என்ற குறையைத் தீர்ப்பதற்காகவும் மக்களுக்கு அறநெறியைப் போதிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார்.
இவர் தன் நாவலில், நாட்டுப்புறக் கதைகளையும் பழமொழிகளையும் பல்வேறு துணைக் கதைகளையும் தனது கலைச்செயலுக்குப் பயன்படுத்திக் கொண்டவர். ஆங்கிலம் மூலம் அறிந்த கிரேக்கம், ரோம், இங்கிலாந்து முதலிய நாட்டு வரலாறுகளிலிருந்தும் தத்துவ ஞானங் களில் இருந்தும் எடுத்துரைத்து நவீன அழகைச் சேர்த்துள்ளார். காலனித்துவச் சமூகம் வழங்கிய பெண்கல்வி, பெண் விடுதலை, சமய ஒற்றுமை, தாய்மொழிப் பற்று ஆகிய கருத்தாக்கங்களையும் நாவலில் பதிவுசெய்துள்ளார். அத்துடன் இவர் வழக்காடு மன்றங்களில் வழக்குகள் தாய்மொழியில்தான் விசாரிக்கப்பட்டு விவாதிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது ஆசை இன்றும் கூட நிறைவேறவில்லை. அதற்கும் பின்காலனித்துவ மனப்பான்மைதான் அதாவது ஆங்கிலச் சொற்கேற்பத் தமிழ்ச்சொற்கள் இல்லை எனும் வாதம்தான் காரணம். ஆனால், பகுத்தறிவு சார்ந்த நாத்திகவாதத்தை-வேத விரோதிகளைக் கண்டிக்கிறார்.
இவரிடம் தன் நாவல் தமிழர்களுக்கு நவீன வாழ்க்கையை - அறிவை - மரபுணர்வை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காலனித்துவவாதிகளும் தமிழ்மனம் குறித்த அறிவு ஏற்பட வேண்டும் என்றும் விரும்பினார். எனவே, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இங்கிலாந்தின் பார்வைக்கு வைத்தார். ஆகவே, இது முதல் சமூக வரலாற்று நாவலாயிற்று.
அ. மாதவையா, நெல்லை மாவட்ட மத்தியதர பிராமணக் குடும்பத்தில் தோன்றி, ஆங்கில இலக்கியப் பிணைப்பின் விளைவால் கோட்பாட்டுடன் பத்மாவதி சரித்திரம் படைத்தார். வாசகரை மகிழ்விப்பதும், நல்லறிவூட்டுவதும் இவரது எண்ணம். காலனித்துவ முதலாளியத் தொழில்முறை, பாரம்பரிய நிலவுடைமை போன்றவை மாற்றம் பெற்ற காலம் மூன்று பெரும் குடும்பங்களைப் பழமை, புதுமைக்குள்ளாக மாறுவதையும் சிதைவுறுவதையும் சித்தரிக்கிறார்.
முத்து மீனாட்சி, பாரிஸ்டர் பஞ்சநாதன், சத்தியனந்தா, கிளாரிந்தா, தில்லை கோவிந்தன், சாவித்திரி சரித்திரம் என நாவல்கள் எழுதினார். காலனிய மொழியிலும் எழுதினார். தான் சார்ந்த பிராமண சமூகத்தின் வாழ்வியல் மதிப்பீடுகளை விமர்சனம் செய்வதும் பெண்ணுரிமை அடிப்படையில் பெண்களுக்கு எதிரான அடிமைத்தனங்களின் கொடுமைகளைக் காட்சிப்படுத்தினார். காலனித்துவ சமூகத்தில் முளைவிட்ட தனிமனிதத்துவத்தை-
அடையாளமின்றி ஆக்கப்பட்ட பெண்ணின் தனித்து வத்தைப் படைத்துள்ளார். இதனை, தந்தைவழிச் சமூகத்தில் ஆண்களாலும் காலனித்துவவாதிகளாலும் இரண்டுமுறை அடக்குமுறைக்கு உள்ளாவதால் இதனை இரட்டைக் காலனித்துவம்’ என்றும் குறிப்பிடுவர்.
1915-ல் இவர் எழுதிய கிளாரிந்தாவும் ஒரு வரலாற்று நாவல்தான். 18-ஆம் நூற்றாண்டில் தஞ்சை மகாரஷ்டிர மன்னர் ஆட்சியில் கிறிஸ்டியன் பிரடெரிக் எனும் ஜெர்மனிய மிஷனரி சோழ நாட்டில் கிறித்துவத்தை வளர்த்தார். இவரும் இதில் ஒரு கதாபாத்திரம். குழந்தைமணம், சதி, மூடப் பழக்கவழக்கங்கள், கொடுமைகள் ஆகியவற்றை எதிர்த்துப் பெண்ணினத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுக்கிறார் அ.மா.
1904-ல் எழுதப்பட்ட கோவிந்தனில், மேனாட்டுக் கல்வி கற்று, அதனால் கொண்ட இலட்சியங்களோடு தங்கள் வாழ்க்கையைச் சம்பந்தப்படுத்த இயலாது சங்கடப்பட்டதைக் கூறும் அருமை நாயகத்தின் "மீதி இருள்'(1898) நாவலில் காலனித்துவமும் அதுகொண்டு வந்த கிறித்துவமும் தமிழ்ச்சமூகத்தின் மனப்பரப்பில் பண்பாட்டு வழியில் வேகமாக இடம்பெற்றது தமிழ்ச் சூழலில் வைதீகமும் சைவமும் முரண்பட்டு மோதுகையில் காலனிய மதமான கிறித்துவ வருகையால் மதம் குறித்த உரையாடல் தமிழ்நிலப் பரப்பில் நடந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியர்களை உய்விக்கக் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்ற காலனித்துவ அதிகாரமொழி அப்பட்டமாக இந்நாவலில் சொல்லப்படுகிறது. ஐரோப்பியர்களையும் கிறித்துவ மதத்தையும் இருளாகப் புனைகிறது. மதம் மாறியும் பலர் இந்துமத இருளிலேயே இருப்பதாக முடிவுசெய்கிறது.
நடேச சாஸ்திரி ‘தீன தயாளு’ நாவலில் காலனித் துவவாதியின் புதிய ஆட்சிமுறை அமைப்பினால் புதிதாக உருவான அரசாங்கப் பதவிகளுக்குப் போட்டிபோட்டுக்கொண்டு இடம்பிடிக்கும் மனப் பான்மை பின்காலனித்துவ தமிழ்ச் சமூகத்தில் உருவானதைப் பதிவு செய்துள்ளார். இவர் காலனித்துவ அரசாங்கப் புதைபொருள் அகழ்வாராய்ச்சிப் பிரிவில் பணியாற்றினார். காலனித்துவத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். காலனித்துவ மொழியைக் கற்பது என்பது பண்பாட்டையும் உள்ளே அனுமதிப்பதுதான் பின்காலனித்துவக் கோட்பாடு. மாணிக்கமும் புதிய பெண்ணாகிறாள். சாஸ்திரி பண்பாட்டுக் கவலையும் கொள்கிறார். காலனித்துவவாதிகளின் வரலாற்றையும் எடுத்துரைப்புகளையும் திருப்பி எழுதும்போது காலனித்துவவாதிகள் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்குள்ளேயே போய்ச் சிக்கிக்கொள்ளுகிற அபாயம் இதுதான்.
காலனித்துவ கொடுமைகளுக்கு எதிராக எழுதப்படுகிற நாவல்களை 1. காந்திய நாவல்கள், 2. பண்பாட்டு நாவல்கள் 3. இனவரைவியல் நாவல்கள் 4. உலகப்போர் நாவல்கள் எனப் பகுத்துக்கொள்ளலாம்.
தேசிய விடுதலை, சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் எனும் காந்தியின் கருத்தாக்கங்கள் இந்திய மரபிலிருந்தும், தான் கற்ற - வாழ்ந்த புதிய காலனித்துவச் சூழலிலிருந்தும் பெற்றவை.
காலனித்துவவாதிகளிடமிருந்து அவர்களுக்கு எதிராகவே திருப்புவது என்பது பின்காலனித்துவக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க ஒரு கூறாகும்.
காலனித்துவச் சமூகங்களில் காலனித்துவத்தின் ஆதிக்கத்திற்கு எதிர்மன நிலையைக் கட்டமைப்பதில் தேசியம் என்ற கருத்தாக்கம் மிக வலுவான ஒன்று. காந்தி இதனைக் காந்தியத் தேசியமாக மாற்றினார்.
காலனிவாதிகளை வெறுக்காமல் மனிதர்களாக நேசித்துத் திருத்த முயல்கிறது. மேலச்சிவபுரி பச்சையப்ப செட்டியாரின் "காந்திமதி' (1927)யில் இதனைக் காணலாம்.
சத்தியம் தனிமனித ஒழுக்கத்தோடு மட்டுமல்லாமல் சமூக அரசியலிலும் அது பின்பற்றப்பட வேண்டும் என்பது காந்தியம். சத்தியமும் அகிம்சையும் தனது இரு நுரையீரல்கள், அகிம்சை கோழைத்தனமல்ல என்றார். 1910-ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. இதனைக் காந்தியப் பின்புலத்தில் அவரது கொள்கைகளைப் படைப்புவழி காட்ட வ.ரா.வும் முற்பட்டார்.
சத்தியாக்கிரத்தைச் சாத்வீக எதிர்ப்பாகக் காந்தி கையாண்டார். வன்முறைக்கு வன்முறை தீர்ப்பாகாது எனும் இவரின் வழிமுறை காலனித்துவவாதிகளை ஆட்டிப் படைப்பது. உண்ணாவிரதம், இடம்பெயர்தல், வேலைநிறுத்தம், அமைதி மறியல், சட்டமறுப்பு, ஊர்வலம் என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லோருக்கும் நன்மை, எல்லோர்க்கும் உயர்வு என்பதுதான் சர்வோதயம். கடையனுக்கும் கதிமோட்சம் எனும் எண்ணம் கிராமப் பொருளாதாரம், தர்மகர்த்தா முறை, கிராமப் பஞ்சாயத்து ஆகியவை இதன் அடிப்படை.
அரங்கசாமி அய்யங்காரின் சபேசன் அல்லது சுதந்திர ரட்சகன் (1922) நாவலில் கள்ளுக்கடை மறியலால் சபேசன் கைதாகிறான். விடுதலை ஆனதும் சபர்மதி ஆசிரமத்தில் காதலி ஜானவியைச் சந்தித்து மணம்செய்து கொள்கிறான். கதர், மதுவிலக்கு, வரதட்சணைக் கொடுமை இதில் பேசப்படுகிறது. பச்சையப்ப செட்டியாரின் மணிவாசகன் (1926) காந்திமதி (1927), வெ. துரைசாமியின் காந்தியின் உண்மைச்சீடன் அல்லது லோகநாயகி’ (1927), வை.மு. கோதைநாயகியின் ஸாராமதி (1931), தியாகக்கொடி (1934), தேசபக்தன் கந்தன்’ (1932), எஸ்.சீதாராமையாவின் காட்டூர் ராமு’ (1934), ய.லட்சுமி நாராயணனின் சாகாவரம்’ (1943), கல்கியின் தியாகபூமி’ (1939), மகுடபதி (1943), அகிலனின் பெண்’(1947), சாண்டில்யனின் புரட்சிப்பெண் (1934), சங்கரராமின் மண்ணாசை, யோகி சுத்தானந்த பாரதியின் அன்பு நிலையம்’ (1941), ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் (1942), ஆர்.வி.யின் சவீதா போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள்.
டி.எஸ். கனகசபையின் வீர சுதந்திரம், சுதந்திரப் போர் அல்லது உப்பள முற்றுகை நாவல்கள் அகாந்திய நாவல்கள் எனலாம். சமூக வேறுபாடுகளுக்குக் காந்தியமே காரணம் என்றன. ர.க.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம்’ பழிக்குப்பழி என்பதை வலியுறுத்துகிறது. ஆஷ் துரையைக் கொன்றிட வாஞ்சிநாதனுக்குத் தங்கமணி உதவுகிறான். சுபாசின் பாரத மாதா சங்கத்தை ஏற்படுத்துகிறான். இறுதியில் காந்தியத்திற்குத் திரும்புகிறான்.
காலனித்துவவாதிகளின் பிடியிலிருந்து வரலாற்றை மீட்டெடுக்கவும் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான, தரங்குறைந்தது என வருணிக்கின்ற ஐரோப்பியர்களின் எழுத்துமுறைக்கு எதிரான ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கவேண்டிய அவசியம் காலனித்துவத்துக்குட்பட்ட படைப்பாளிகளுக்கு உண்டாகிறது. தங்கள் பண்பாட்டு, இனவரைவியல் விழுமியங்களை வலியுறுத்தித் தம் வரலாற்றைத் தாங்களே எழுத முற்பட்டனர். 1857-ல் சிப்பாய் கலகம் என்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவதை இந்திய வரலாற்றாசிரியர்கள் முதல் சுதந்திரப்போர்’ என்று அறிவித்தனர். எழுத்தாளர்களின் தன் வரலாற்றுப் படைப்புகள் தன்னிலைகளின் அடையாளங்களை நோக்கிய தேடலாக அமைந்தன. தங்களுடைய வாழ்வியல் பண்பாடுகள் குறித்துக் காலனித்துவாதிகள் கட்டி எழுப்பியிருக்கும் மாயைகளை, தொன்மங்களை உடைத்து எறிவனவாய் இருக்கும்.
இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம்’ (1896) தன் பிராமண சமூகத்தில் மனிதர்களை-
தனக்குப் பிடித்தமான வேதாந்த உண்மைகளையும் அறிவுரைகளையும் பதிவுசெய்துள்ளார். பின்காலனித்துவ சமூகத்தில் வேகமாகப் பரவிய கிறித்துவ மதத்தின் செல்வாக்கினால் தங்களுடைய மதம் பின்தங்கி விடுமோ? எனும் அச்சம் ஐயரிடம் ஏற்பட்டது. தான்சார்ந்த வேதாந்தத் தத்துவங்களை எடுத்துச்சொல்ல வேண்டும் என்கின்ற பண்பாட்டு வரலாற்று நெருக்கடியின் விளைவாகத் தன் நாவலில் பெரும்பகுதியைச் செலவழிக்கிறார். பின்காலனித்துவ சமூகத்தில் நிகழ்ந்த இடப்பெயர்ச்சிகளால் மனித வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதும், மரபார்ந்த வாழ்க்கை சிதைக்கப்படுவதும். உயர்சாதி அறிவாளிகளைப் பாதித்தது. இவர் இந்நாவலில் காலனித்துவப் பண்பாடு குறித்த அச்சத்தையும் சுய பண்பாட்டைக் காக்கும் கவலையையும் பதிவு செய்துள்ளார்.
குருசாமி சர்மா பிரேம கலாவதியம்’ (1893) நாவலில், புதிய காலனித்துவத்தின் வருகையால் கிடைத்த விழிப்புணர்ச்சியின் அடிப்படையில் பிராமணக் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்களையும் மாற்றாந்தாய் கொடுமைகளையும் கதையாக்கியுள்ளார். தன் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைப் பதிவுசெய்யும் ஆர்வமே இந்நாவல் என்பார் த.வே.வீராசாமி.
பின்காலனித்துவ சமூகத்தால் தமிழ் மன்னர் களையும் ஆண்ட நிலப்பிரபுக்களையும் பின்னணியாக வைத்து உரையாடல் நிகழ்த்துவதே ஒரு வகையான மண்சார்ந்த நினைவுகளைப் புதுப்பிக்கிற முயற்சிதான். தி.ந.கனகசுந்தரம் பிள்ளையின் மோகனாங்கி (1895) பின்காலனித்துவ சமூகத்தில் வரலாற்று உணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது.
அ. மாதவையாவின் விஜயமார்த்தாண்டம் (1903) நாவல் சிங்கம்பட்டி மறவர் ஜமீனின் முரட்டு வாழ்வைப் பற்றியது. காலனியவாதிகளும் கிறித்துவமறைப் பரப்பாளர்களும் உயர்வெள்ளை அதிகாரிகளும் இனவரைவியல் நூல்களையும் கட்டுரைகளையும் கையேடுகளையும் கெசட்டியர்களையும் வெளியிட்டபோது மாதவையா மறவர் இனவரைவியல் நாவலை எழுதினார். காலனிய அரசை இனவரைவியல் அரசு என்றும் அழைத்தனர். இது காலனிய ஆதிக்கத்தின்போது தென்னாட்டு மறவர்களின் ராணுவ சேவை அல்லது காவல் கடமையைப் பற்றி விளக்கும். மறவர் பாளையங்கள் தமிழ்ப் பாளையங்கள். களக்காடு முதல் ராஜபாளையம் வரை மறவர்கள் பரவி இருந்தனர். இவர் புலிப்பட்டி ஜமீன் வாரிசுப் போரையும் காதலும் கற்புமாகக் கதை சொல்லியிருக்கிறார்.
பிரிட்டிஷார் 1803-ல் மெட்ராஸ் பிரசிடென்சியை உருவாக்கியதும் மறவர்களின் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வேண்டினர். 1816-ல் காவல் எனும் நிறுவன அமைப்பு அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டது. என் பெயர் வீரமாகாளித் தேவர். என் தகப்பன் பெயர் சங்கரபாண்டித் தேவர், மறச்சாதி. நான் கொஞ்சகாலமாகக் கொள்ளைக்காரர்களோடு சம்பந்தப்பட்டிருப்பது வாஸ்தவமே. ஒரு மாதத்திற்குமுன் என்னைத் தலைவன் ஆக்கினார்கள்; என்கிறான் ஒரு மறவன்.
வேல.ராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை (2007) கள்ளர், மறவர் மீது வெள்ளைக் காலனித்துவவாதிகளால் 1917-ல் குற்றப்பரம்பரைச் சட்டம் கொண்டு வந்து, அவர்களை அடக்கி, காவல் செய்தவர்களைக் காவல் நிலையத்தில் இரவு தங்கவைத்துக் கைரேகை வைக்கச் சொன்னது. கொற்றப் பரம்பரை குற்றப்பரம்பரை ஆக்கப்பட்டது காலனித்துவ அதிகாரத்தால்தான். இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள், பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், வீடுகள் எரிக்கப்பட்டன. தன் மக்கள் மீது பேரன்பும் காலனித்துவம் மீது பெருங்கோபமும் கொண்டவை இவரது எழுத்துக்கள். இவரது பட்டத்து யானை (2009)யும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போரிட்டு மாண்ட மறவனின் கதை. 1795 பிப்ரவரி 8-ல் சேதுபதி மன்னர் கைது செய்யப்பட்டதும் மயிலப்பனின் ""ஆப்ப நாட்டு மறவர் படை கச்சேரிகளைத் தாக்கி ஆயுதங்களை அள்ளி, பண்டகச் சாலைகளைச் சூறையாடுகிறது. ஆப்ப நாடு என்றால் வறட்சி, களவு, வெட்டுக் குத்து, கொலை எனும் திட்டமிட்ட கற்பிதங்களைப் பொடியாக்கி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரில் ஆயிரமாயிரம் வீரர்களை அள்ளிக்கொடுத்த தியாக பூமியின் மறைக்கப் பட்ட வரலாற்றை எழுத நான் முனைகிறேன்'' என்பார் ஆசிரியர்.
டாக்டர் மு.இராஜேந்திரன், இ.ஆ.ப. எழுதிய 1801 (2016) நாவல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மருதுபாண்டியரின் பங்களிப்பைச் சித்தரிக்கிறார். பூலித்தேவர், கட்டபொம்மன், வேலு நாச்சியார், ஊமைத் துரை, தீரன் சின்னமலை, வரிசையில் மருது பாண்டியர்களும் போராடி 1801-ல் தூக்கிலிடப்பட்டதை நாவலாக்கியுள்ளார். இவரை முதல் சுதந்திரப் போராளி என்று வரலாற்றைக் கட்டமைக்கின்றார்.
கோபல்ல கிராமம் (1976) ப. பூர்வ காலம்- துலுக்கர் யள் இந்து ஆந்திரர் 2. குடியேற்ற காலம் - தெலுங்கர் இயற் 3. கும்பினியர் வரவுக்கு முந்திய கோட்டையார் காலம் 4. சுதந்திரப் போராட்ட ஆரம்பகாலக் கிராமம் என நான்காகப் பகுப்பார் ராஜ்கௌதமன்.
கட்டபொம்மு காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் குடி கிளம்பி வந்து தமிழ்நாட்டில், குருமலைச் சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டு மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்நாவல் என்பார் பேரா.வானமாமலை. நாட்டார் அவர்களது கிராம வரலாற்றை எப்படிக் காண்கிறார்கள் என்பதை விளக்குகிறது. இவர்களுக்கு மன்னர்கள் வரலாறு அல்ல, வரலாறு ஒலி வழியாக பரவும் தங்கள் முன்னோர் களது போராட்ட வரலாறு. உண்மையைக் கற்பனையாக மாற்றி அமைத்த உருவம் கொண்டது இதில் சாதி வரலாறு, குடியேறிய வரலாறு, தெய்வங்களின் வரலாறு, ஆங்கில வரலாறுகளின் தொகுப்பாக உள்ளது.
கட்டபொம்மன் தூக்கில் ஏற்றப்பட்ட பின்னர் புதிய சக்தி கிராமத்தினுள் நுழைகிறது. இங்கிலீஷ்காரன் முதலில் ஒரு கருப்பு அதிகாரியோடு வந்து, கோட்டையார் வீட்டு கோவிந்தய்யாவை மணியக்காரர் ஆக்குகிறான்.
ஆதிக்கம் வகிக்கும் ஆங்கிலேயனோடு ஒத்துப் போகிறான். கூட்டத்தை அடக்குவதில் உதவிசெய்த ஆங்கில அதிகாரம் ஊர்மக்களைச் சுமைதூக்கும் கூலியாக்கியதை வெறுக்கின்றனர். இராணுவ பலத்தால் சிவில் அதிகாரம் அமல்படுத்தப்படுகிறது. நெசவாளிகளின் கட்டைவிரல்களை வெட்டுவது அறிந்து வெறுப்பு எதிர்ப்பாகிறது. 1848-ல் மகாராணி விக்டோரியா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அவளை ராணி மங்கம்மாவைப் போல் ஏற்றுக்கொள்கின்றனர்.
கதை முடிவில், நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் நம்பிக்கை சிதிலமடைந்ததையும் நாட்டின் சுதந்திர ஆவேசம் நீறுபூத்த நெருப்பாக இருந்ததையும் வெள்ளை ஆட்சி கண்டுகொள்ளவில்லை. வருங்கால சுதந்திர எழுச்சியை நீறு பூத்த நெருப்பாக குறிப்பிடுகிறார் என்பார் நா.வா.
ஜோ.டி.குரூஸின் கொற்கை (2009) தூத்துக்குடிப் பரதவர்களின் இன வரைவியல் நாவல். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்து சமயப் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவற்றைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் என்பார் அரவிந்தன்.
பா.விசாலத்தின் "உண்மை ஒளிர்கவென்று பாடவோ' (2000) நாவலும் காலனித்துவச் செல்வாக்குள்ளது. தமிழ்நாட்டின் தென்கடைக்கோடியில் நிகழும் சம்பவங்கள்தான் வரலாற்றுப் பின்னணியில் கூறப்படு கின்றன என்பார் இந்திரா பார்த்தசாரதி. வடக்கன்குளத்தில் வேளாள மற்றும் நாடார் கிறித்துவர்கள் தங்களுக்குள் முரண்பட்டு மோதிக்கொள்கின்றனர். மதமாற்றத்தால் சாதிய ஏற்றத்தாழ்வு மறையவில்லை. அதாவது, கிறித்துவம் இருட்டைப் போக்கி ஒளிவீசவில்லை என்பதைக் காட்டும்.
பொதுவாகப் போர் என்றாலே புலம்பெயர்தல், அகதிகள் உருவாகுதல், வறுமை, பற்றாக்குறை, பதுக்கல், கள்ளக்கடத்தல் என நிகழும்.
ஜெகசிற்பியனின் ஜீவகீதம்
மு. வரதராசனின் அந்த நாள்’
பா. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி’
ஆகியவை உலகப்போர் சூழலைத் தமிழர்கள் எதிர்கொண்ட வரலாற்றினை விளக்கும் எஸ். பிரபாகரன் ஒஉஊந அவர்களால் இக்கதை ஒரு நூற்றாண்டு -
முதல் உலகப்போர் நினைவாக எழுதப்பட்ட வரலாற்று நாவல். முதல் உலகப் போரின் காலகட்டம் என்பது வரலாற்றுப்பின்னணி. பாண்டி என்பவன் இராமநாதபுரம் சமஸ்தானம் வழியாக மதுரைக்குச் சென்று வைகையாற்றுப் படுக்கையில் சிலம்பம் கற்று சிப்பாய் ஆகி செவ்வந்தியை மணந்து இரயிலில் சென்று வெலிங்டன் வழியாக மதராஸ் செல்கிறான்.
பின் பம்பாய் கடல் வழியாக இங்கிலாந்து சென்று காத்தீன் காதலை மறுத்து, ராபர்ட், ரோவர் போன்ற துரைகளுக்காக உயிர் கொடுத்து தியாகி பாண்டித்துரையாகிறான். பாண்டியின் பேரன் சாம், ரோவரின் பேத்தி இசபெல்லாவின் காதலனாகி மணம் செய்கிறான். சுடுகாட்டில் தொடங்கி கதை இடுகாட்டில் முடிகிறது.
1914-1918 ஆண்டுகளில் முதலாம் உலகப்பொரில் பிரிட்டிஷ் கையைப் பலப்படுத்த ஏறக்குறைய 15 இலட்சம் சிப்பாய்கள் ஈடுபட்டனர். 62000 பேர் மாள, 67000 பேர் காயமுற்றனர். ஆனால் இது சரியான கணக்கில்லை. இதனை முடக்கப்பட்ட வரலாறு என்றும் அழைப்பர்.
1945-ல் இரண்டாம் உலகப்போர் முடிந்தது. அதையொட்டியே இந்தியாவின் விடுதலையும் சாத்தியமாயிற்று. இத்தகைய சூழலில் பின்காலனித்துவத் தமிழ்ச்சமூகத்தில் உலகப்போர் நிகழ்த்திக் காட்டிய பல்வேறு நிகழ்ச்சிகளை அடிப்படையாககொண்டு நாவல்கள் தோன்றியுள்ளன.
இந்தியாவில் வெள்ளையர்கள் ஆட்சி உறுதிப்பட்டு வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்திமுறை, இங்கு வேரூன்றிப் பல சமூக மாறுதல்களை உருவாக்கின. இவை பாரம்பரியமான பல சிந்தனை மரபுகளின் மாறுதலினால் மத்திய தர வர்க்கம் என்று ஒன்று உருவாகி மேனாட்டுக் கல்வியின் தாக்கத்தின் புதிய சிந்தனைகள் தோன்றியதால் நாவல் இலக்கியம் மலர்ந்தது என்பார் தோத்தாத்திரி. விடுதலைக்கு முன்னும் பின்னும் நாவல்கள் காலனித்துவதாக்கம் பெற்று விளங்கின. இன்னும் இதன் செல்வாக்கும் குறையவில்லை.
காலனித்துவச் சமுதாயத்தில் திராவிட இன திராவிட மொழிகளின் ஒப்பிலக்கியம் அடையாளம் கட்டமைக்கப்பட்டதற்கு கால்டுவெல் (1856) அயோத்திதாச பண்டிதர் ஆதித் திராவிட மகாஜன சபை (1892) பாண்டித்துரைத் தேவர் தமிழ்ச்சட்டம் (1991) தமிழவேள் உமாமகேஸ்வரனார் (1911), நீதிக்கட்சி (1916), குடியரசு (1928), திராவிடர் கழகம் (1944), திராவிட முன்னேற்றக் கழகம் (1949), தமிழிசை இயக்கம் (1942), தமிழரசுக் கட்சி (1946) போன்றவை காரணிகள் ஆகும். தமிழ்ச்சமூக, அரசியல் பண்பாட்டு வெளிகளில், சமஸ்கிருத, இந்தி ஆகிய ஆதிக்க மொழிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர். பிராமணர்களுக்கு எதிராக கடவுள் மறுப்பு, சடங்கு சாத்திர மறுப்பு, மனு தரும எதிர்ப்பு, புராண இதிகாச மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, கோவில் நுழைவு எனத் தொடங்கி பெரியார் செய்த சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுக்கு முதன்மை தந்தது. இந்த நோக்கில் காலனிய அரசை ஆதரிக்கவும், விடுதலை நாளைத் துக்க நாளாகக் கொண்டாடவும் செய்தது. இத்தகைய கருத்தாடல்கள் பின்காலனித்துவத் தமிழ்ச் சமூகத்தின் இயக்கப் போக்கை நடத்திச் சென்றன என்பார் பேரா. க. பஞ்சாங்கம்.
கிரிஜா தேவியின் மோகன ரஞ்சனி அல்லது சமூகத் தோற்றம் (1931), மூவலூர் ஆ.ராமாமிர்தம்மாளின் தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் (1931), டி.பி.ராஜலட்சுமியின் கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்’ (1931), அண்ணாவின் கபோதிபுரக்காதல் குமரிக்கோட்டம்’ போன்றவை பகுத்தறிவு பேசுவன. பின்காலனித்துவச் சமூகங்கள் பலவற்றும் தங்கள் தாய்மொழி, பண்பாடு குறித்தும் விழிப்புணர்வு பெறுகிற சூழலில் இத்தகைய எழுத்து முறைகள் தோன்றுவது இயல்பாகிறது. திராவிட இயக்க சிந்தனைகளும் காலனித்துவத்தின் கொடை. அதனால்தான் அது இந்திய நாட்டுப்புற வழிபாட்டு நம்பிக்கைகளையும் சடங்கு முறைகளையும் வரித்துக் கொள்ளவில்லை.
காலனித்துவத்துக்கு ஆதரவான நிலைப்பாடு, எதிரான நிலைப்பாடு எனும் இருவகை போக்கு முதன்மையானவை. ஆதரவிலும் கூடத் தம் சாதி, மதம், மரபு பற்றிய ஆதங்கம் உள்ளது. எதிரான நிலைப்பாட்டில் காந்தியக் கதைகள், அகாந்தியக் கதைகள். பண்பாட்டுக் கதைகள், இனவரைவியல் கதைகள், விடுதலைப் போராட்டக் கதைகள் என்றும் பகுத்துப் பார்க்க முடிகிறது. பண்பாட்டைக் காக்கும் முயற்சியில் காலனித்துவத்துக்கு உட்பட்டோர் ஈடுபடும்போது அதனைத் தகர்க்கும் முயற்சியில் காலனித்துவவாதிகள் ஈடுபடுகின்றனர். கல்கியின் நாவல்கள் இதற்கான, இன்றைக்குமான சான்றுகள். கலப்பினத் தன்மையை உருவாக்குவது பின்காலனித்துவச் சமூகங்களில் காலனித்துவ நாடுகளின் குறிக்கோளாகும். கட்டாயப்படுத்திப் புலம்பெயரச் செய்வதும் பண்பாட்டு நடவடிக்கைகளில் குறுக்கிடுவதும் அவற்றின் நோக்கமாகும். இதனால், காலனித்துவவாதிகளின் தூய இனம் எனும் எண்ணத்தை உடைக்க விரும்புகின்றனர்.
உலகமயமாதல், சந்தைப்பொருளாதாரம், ஊடக ஆதிக்கம் ஆகியவற்றால் புதிய காலனித்துவமும் கலப்பினச் சிந்தனையும் அமைந்துள்ளன. கமலாம்பாள் சரித்திரத்தில் இதற்கான சான்றுகளைக் காணலாம். காலனித்துவம் தனக்கான ஆதரவைச் சேர்த்துக்கொண்டது போலவே எதிரிகளையும் உருவாக்கிவிட்டதுதான் சரித்திரச் சாகசம்.