மிழால் இணைவோம்' என்ற முழக்கத்துடன் இந்து தமிழ்த் திசை நாளிதழ் ஆண்டுதோறும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. தமிழை மறந்து வரும் தலைமுறைக்குத் தமிழை மறுஅறிமுகம் செய்துவருகிறது. தமிழ் இலக்கியச் சாதனையாளர்களை விருதளித்துச் சிறப்பித்து வருகிறது. பிப் 17-2019 அன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடத்திய 'யாதும் தமிழே' என்ற நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் விருதுக்குரியவராகக் கோவை ஞானி அவர்களைத் தெரிவு செய்தது. தமிழ் இலக்கியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மூன்று இலட்சம் பரிசுத் தொகையையும் வழங்கி அவரைச் சிறப்பித்தது. "அவருக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கியிருக்க வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு விருதுகள் சென்றடையாத சூழலில் நாங்கள் அளிக்கும் இவ்விருது பத்து கோடித் தமிழ் மக்களின் நன்றியறிவிப்பு' என்று நடுப்பக்கக் கட்டுரையாளர் சமஸ் குறிப்பிட்டார். அவருடன் சமகாலத் தமிழ் இலக்கிய சாதனையாளர்களுக்கான விருது எழுத்தாளர் பா. வெங்கடேசன், கவிஞர் விக்கிரமாதித்யன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

award

வாழ்நாள் சாதனையாளராகக் கோவை ஞானி கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் பல உண்டு. நாற்பதாண்டுகளுக்கு மேலாக மார்க்சியம் - தமிழியம்- பெரியாரியம்- தலித்தியம்- பெண்ணியம் என்று அவர் தொட்டுத் துலக்காத துறைகளே இல்லை. மாந்த விடுதலை என்ற புள்ளியில் அனைத்திற்கும் தனித்துவமிக்க விளக்கமளித்தார். கவித்துவ நடைக்குச் சொந்தக்காரரான ஞானி தனது கலகச் சொற்களால் சமதருமக் கவியாகவும் சாமானியருக்கான தமிழ் மார்க்சியராகவும் இலக்கிய நேயராகவும் தன்னை நிறுவிக் கொண்டவர். "நிகழ்' சிற்றிதழையும் "தமிழ்நேயம்' சிற்றிதழையும் பல்லாண்டுகள் இடைவிடாது நடத்தியவர். தமிழ் மக்களுக்குத் தேவையான சிந்தனைக் கருவூலங்களைத் தமிழ் மார்க்சியப் பன்னோக்கு இதழ்களாக வழங்கியவர். ஞானி கி. பழனிச்சாமி அவர்களின் "எழுத்து'- "வானம்பாடி' சிற்றிதழ்களோடு கொண்டிருந்த நெருக்கமும் தானே முன்னின்று தோற்றுவித்த "புதிய தலைமுறை' -"பரிமாணம்' -'நிகழ்' இதழ்களை நடத்தியதால் வந்த பட்டறிவும் சேர்ந்து தமிழ்நேயம் இதழை ஈடிணையற்றதாகத் தொடரச் செய்தது. ஞானியின் சிற்றிதழ் தமிழ் மக்களின் ஆன்மாகவும் மனக்குரலாகவும் ஒலிக்கிறது. ஜெயமோகனின் கொற்றவையும் எஸ்.பொ.வின் பன்முகப்பார்வையும் தோழர் எஸ். நாகராசனின் கீழை மார்க்சியமும் இதழைக் கனக்கச் செய்கின்றன. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் தனது பெண்ணிய நோக்கை விரிவாக்கியதாக ஞானி கூறுகிறார்.

தமிழரைச் சுரண்டுகிறது சர்வ தேசியம். தமிழரை வஞ்சிக்கிறது இந்திய தேசியம். தமிழரின் விடுதலையைச் சாதிப்பது தமிழ்த் தேசியம். தமிழ் மார்க்சியர் எனப்படுவோர் இரசியாவிற்கும் சீனாவிற்கும் காவடி தூக்குவோராக இருக்க முடியாது. தமிழ்த் தேசிய மார்க்சியராகவே அவர்கள் வேரூன்ற முடியும் என்றவர். தமிழ் மொழி அல்ல. அது நமது அடையாளம். தமிழ் என்றால் அன்பு. ஒப்புரவு. அறம். வாழ்வு. விடுதலை. புரட்சி என்று பாரதிதாசன் மரபில் தமிழுக்குப் பல்பொருள் கண்டவர். தமிழர் போற்றி வளர்த்த அன்பின்-அறத்தின் ஒருங்கிணைந்த உயிர்த் துடிப்பாம் புறநானூறு இலக்கியத்தைத் தமிழரின் முதன்மைப் பேரிலக்கியம் என்று அறிவித்தவர். அது சுரண்டும் உடைமைவெறிச் சூழலில் மறையாத நம் முன்னோர்களின் ஆதிஅறம் என்று அறிவித்தவர். சாதியில்லாமல் சமயநோக்கு இல்லாமல் ஆதிக்கமும் சுரண்டலும் இல்லாமல் தமிழர்கள் சமத்துவராய் சமதருமம் போற்றி வளர்த்தோராய்ப் பன்னெடுங்காலம் வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள் என்பதை இடைவிடாமல் சுட்டிக்காட்டியவர். வறட்டுவாதங்களைத் தனது கூர்மையும் நேர்மையும் மிக்க வாதங்களால் தவிடுபொடியாக்கியவர். மேல்கட்டுமானம் என்று வானத்திற்கு வீசப்பட்ட பண்பாட்டுக் கருத்தியல்களைக் கைபிடித்து மண்ணுக்குக் கொண்டுவந்தவர். தேவை, சுரண்டலை ஆதரிக்கும் ஆதிக்கப் பிற்போக்கு அறிவுக் கொளுந்துகள் அல்ல. முடைநாற்றமெடுக்கும் கடைநிலைக் கசடுகளை மடைதிறக்கும் மாற்றத்தின் அறிவாளிகளே நம் காலத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தியவர்.

புறநானூற்றைத் தமிழரின் மூலமுதல்ப் பேரிலக்கியமெனப் புதிய பார்வையால் புரட்டிப் போட்டுள்ளார். அது தமிழர் போற்றி வளர்த்த அறத்தின் ஒருங்கிணைந்த உயிர்த் துடிப்பு. மனிதநலச் சிந்தனைகளையும் சமகால நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் ஏந்தி நிற்கும் மாந்த இலக்கியம் புறநானூறு. பாத்தூண் மரபு போற்றும் சங்க இலக்கியங்கள் தரமான உலக இலக்கியங்களின் முன்வரிசைப் பட்டியலில் இடம் பெறத்தக்கவை என்பதைச் சுட்டியவர். அளவற்ற அறிவு மகளிரையும் வீரப் பெண்டிரையும் சங்கம் வழங்கியதைக் கவனித்து பெண் முதன்மைச் சமுதாயத்தின் தேவை என்றும் மார்க்சியமும் பெண்ணியமும் வேறு வேறு அல்ல என்பதையும் தெளிவாக்கினார்.

வாழ்வைக் கொண்டாடிய ஆதித் தமிழனையும் நிறைவாய் வாழ்ந்த இடைத் தமிழனையும் மறந்து விட்டுத் தற்காலத் தமிழன் எங்கெங்கும் அந்நியப் பட்டுத் தன்னைத் தொலைத்து விட்ட கதையை ஞானி தமிழருக்குச் சொல்கிறார்.