யார் ஆசிரியர்?

ஆசிரியர் என்பவர் குற்றங்களை நீக்குபவர். குற்றங்களை அகற்றுபவர் குற்றமற்றவராக இருக்க வேண்டும். எந்தப் பணியும் ஆசிரியப் பணிக்கு ஈடாகாது. மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறவர் அப்பணியில் இருக்கும்போது மதிக்கப்படுவார். பணி ஓய்வுக்குப்பின் ஏவலர்கள் இல்லாமல் தனித்து வரும்போது, அவரை யார் அறிவார்? என்ன மதிப்பு கிடைக்கும்? காவல்துறையில் மேல்நிலை அதிகாரியாக இருந்தாலும் பணியிலிருந்து விடுபட்டபின் அவரை அறிந்து போற்ற யாரும் இருப்பதில்லை.

ஆனால், ஓர் ஆசிரியர் எந்நாளும் மதிப்பிற்குரிய வராகவே இருப்பார். முதியவராக ஆனபிறகும், அவரின் மாணவர்கள் கண்டுவிட்டால், பெரிதும் மதித்துப் போற்றுவதை எங்கும் காணலாம். ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் தனிச்சிறப்பு அது.

ஆசிரியர்களை, அவருடைய மாணவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும், வந்து பணிந்து போற்றுவதைக் காணமுடியும்.

Advertisment

அண்ணாவும் ஆசிரியரும்

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, காஞ்சிபுரம் போகிறார். அவர் படித்த பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்குத் தலைமையேற்க அண்ணா வின் தமிழாசிரியர் திருநாவுக்கரசு என்ற புலவரை வேண்டி இசைவு பெற்றிருந்தார்கள். காஞ்சியில் தன் வீட்டில் அண்ணா குளித்துவிட்டுக் குளியலறையிலிருந்து வெளியில் வருகிறார். பார்த்தால், வயது முதிர்ந்த திருநாவுக்கரசு ஐயாவை அழைத்துவந்து உட்கார வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களிடம் அண்ணா கூறினார், "அவர் எவ்வளவு பெரியவர், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், அவரை அழைத்துவந்து என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா? அவரை அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துப் போகவேண்டும். அவர் வீட்டுக்கு முதலிலில் அவரை அழைத்துச் செல்லுங்கள்.'

Advertisment

அதன்படியே புலவரை, அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பழங்கள் கொண்டுபோய் ஆசிரியருக்குக் காணிக்கையாகத் தந்து அவரை வணங்கினார் அண்ணா.

"தாங்கள் தந்த தமிழ்தான் என்னை வாழவைக்கிறது' என்று போற்றிப் புகழ்ந்து, தன் காரிலேயே அவரை விழாவுக்கு அழைத்துச் சென்றார்.

அண்ணா முதலமைச்சராக ஆனபோதும் ஆசிரியரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். ஆசிரியப் பதவி அந்த அளவுக்கு மேன்மையானது.

கலைஞரும் ஆசிரியரும்

அண்ணாவிடம் பயின்ற கலைஞரிடமும் அந்த அருங்குணம் இல்லாமல் போய்விடுமா?

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தொடக் கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு திருவாரூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றி னார் கலைஞர். அப்போது முதல்வர் கலைஞரின் கண்கள் தன் ஆசிரியரைத் தேடின. அவர் வந்திருக்கி றாரா என்று மாநாட்டாளர் களிடம் கேட்டார். ஓய்வு பெற்றுவிட்டதாகச் சொன் னார்கள். "ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா? அழைத்து மரியாதை செய்யக்கூடாதா?' என்று கேட்டார்.

உதவியாளர்களிடமும் தென்னன் என்னும் உயிர் நண்பரிடமும், "போகும் போது, சேதுராமய்யர் வீட்டுக்குப் போவோம்' என்று சொல்லிவைத்தார்.

அவ்வாறே சென்றார்கள். காவலர் கள் மற்றும் உதவியாளர்கள் என்று திடீரென்று போனதும், சுவாமி மடத் தெருவிலிருந்த ஆசிரியப் பெருமகனார் சேதுராமய்யர் திகைத்துவிட்டார்.

கட்டுரை ஏடுகளைக் கொடுக்க ஆசிரியர் வீட்டுக்குப் போன கதையை யும் அப்போது அவர் ஏழாம் வகுப்புப் படித்ததையும், ஆசிரியர் துணைவி யார் கொடுத்த காப்பியையும் அது போன்ற நல்ல காப்பியை முதன் முதலாகத்தான் அந்த அம்மையார் கையால் வாங்கி அருந்தியதையும் நினைவுகூர்ந்தார்.

ஆசிரியர் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய நன்மைகளைத் தானே ஆராய்ந்து உதவினார் என்பது கூடுதல் செய்தியாகும்.

இவ்வாறு, பெரும்பதவியில் இருப் பவர்களும், தங்கள் தொடக்கப்பள்ளி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களைப் போற்றி வணங்கும் பெருமைக்குரிய பணி ஆசிரியப் பணியாகும்.

எதனால் மதிப்பு?

ஆசிரியர்களுக்கு இவ்வாறாக மதிப்பு கிடைக்கக் காரணம் என்ன? "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்கிறார்கள்.

ஆசிரியர்கள் பணம் படைத்தவர் களாக இருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

நல்லதை நமக்குக் கற்பித்தவர்கள் ஆசிரியர்களே, வெறும் அறிவை மட்டும் வளர்ப்பவர்கள் அல்லர் அவர்கள். வாழும் வகையுணர்ந்து சமுதாயத்துக்கு உதவும் சீர்மிகு மனிதனாக நம்மை உயர்த்தும் பெருமைக்குரியவர்களும் அவர்களே.

என் ஆசிரியர் எனக்குக் கற்பித்தவை ஏராளம். ஒரே ஓர் எடுத்துக்காட்டு. ஒருநாள் வகுப்பில் அவர் சொன்னது இதுதான்.

அம்மாவுக்குச் செலவுக்குப் பணம் கொடுக்காதே நட்ட வயலுக்கு வேலிலி போடாதே தெரிந்த கேள்விக்குப் பதில் எழுதாதே.

நான் திகைப்பும் வியப்பும் அடைந்தேன். பிறகு அவர் விளக்கினார்; நான் தெளிவடைந்தேன்.

அம்மா நம்மிடம் அவ்வப்போது செலவுக்குப் பணம் கேட்பதும், நாம் அவர்களுக்குக் கொடுப்பதும் முறையல்ல.

நாம் சம்பாதிக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவைத்து, அவ்வப்போது செலவுக்கு அவர் களிடம் நாம் பணம்கேட்டு- அவர்கள் தந்து செலவிடும் வழக்கம் வரவேண்டும். முதுமையில் தாயார், தன் மகன் இப்போதும் தன்னிடம் பணம் கேட்டு வாங்கிச் செல்வதை எண்ணிப் பெருமைப்படுவார். அந்த நிலை வேண்டும்.

நட்ட வயலுக்கு வேலிலி போடாதே. ஆம், வேலிலி கட்டி விட்டு அதன் பின்னரே வயலில் நாற்று நடவேண்டும்.

நட்டபிறகு வேலிலிபோடலாம் என்று இருந்தால், அதற்குள் ஆடுமாடுகள் மேய்ந்துவிடும்.

வருமுன் காத்தலை வலிலியுறுத்துவதே நோக்கம்.

தெரிந்த கேள்விக்குப் பதில் எழுதாதே என்பது, வினாத்தாளை வாங்கியதும் தெரிந்த கேள்வி தெரியாத கேள்வி என்று எண்ணும் நிலை கூடாது. எல்லா வினாக்களுக்குமே விடை தெரிந்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் எந்தப் பகுதியையும் விடாமல் படித்திருக்க வேண்டும்.

அவ்வப்போது அத்தனையையும் படித்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதே நோக்கம்.

இவ்வாறு நல்ல ஆசிரியர்கள் தரும் அறிவுரைகள் வாழ்நாளின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு வரும். அப்போது ஆசிரியரின் நினைவும் கூடவே வந்து நிற்கும்.

மகாவித்துவானும் உ.வே.சா.வும்

தமிழ்த் தாத்தா உ.வே.சா., மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்கச் சென்றார்.

நெடுநாட்கள் மகாவித்துவானிடம் நேரடியாகப் பாடம் கேட்க முடியாமல் வருந்தினார் உ.வே.சா.

சவேரிநாதப்பிள்ளையை விட்டுப் பாடம் சொல்லச் சொன்னார் மகாவித்துவான். உ.வே.சா.வுக்கு நேரடியாகப் பாடம் கேட்க ஆசை. ஆசிரியரின் மனத் தைக் கவரவேண்டும். என்ன செய்வது? சிந்தித்தார்.

ஆசிரியர் ஒவ்வொருநாள் அதிகாலையிலும் கொல்லைப்பக்கம் சென்று செடிகொடிகளைப் பார்க்கிறார். புதிதாக உண்டாகியிருக்கும் துளிரை, மொட்டை, பிஞ்சினைக் கண்டு உள்ளம் மகிழ்கிறார். வாட்டமுற்றிருக்கும் செடிக்கு நீரூற்றுகிறார்.

இவையெல்லாம் உற்றறிந்து உணர்ந்தார் உ.வே.சா. அதன்பின், ஆசிரியருக்கு முன்னதாகவே மாணவர் எழுந்து தோட்டத்துக்குச் சென்று செடிகொடிகளைப் பார்த்து வளர்ச்சியைப் பார்த்து வைத்துக்கொள்கிறார்.

ஆசிரியர் வந்ததும், அவருக்குப் புதிதாகத் தோன்றி யிருக்கும் துளிர், பூ முதலிலியவற்றைக் காட்டினார், வாடிய செடிகளுக்கு நீர் ஊற்றுகிறார்.

மகாவித்துவான் இவற்றைக் கண்டு உள்ளம் மகிழ்கிறார். உவே.சா.வின் விருப்பத்தைக் கேட்டறிந்து, அதன்பின் அவரே பாடம் நடத்துகிறார். ஆசிரியர் மனமறிந்து அவரை மகிழ்வித்து அவரிடம் பாடம் கேட்டு வாழ்வை உயர்த்திக்கொண்டார் தமிழ்த் தாத்தா.

குருபக்தி

ஒருவர் உ.வே.சா.விடம் பேசிக்கொண்டிருக்கும் போது "சோறு உண்டேன்' என்று கூறினார்.

""சோறு என்னய்யா சோறு? சாதம் என்று சொல்லய்யா.'' என்று உ.வே.சா. அவரைக் குறை கூறினார்.

இதற்கு மறுமொழியாக, ""உங்கள் ஆசிரியர் மகாவித்துவானே எழுதும்போது, ""சோறு மணக்கும் மடங்கள் எல்லாம்'' என்றுதானே குறிப்பிடு கிறார், நீங்கள் சொல்வதுபோன்று "சாதம் மணக்கும்' என்று எழுதவில்லையே!'' என்றார் அந்த நண்பர்.

அவ்வளவுதான்! அப்படியே அவர்காலிலில் விழுந்து, ""ஆசிரியரின் உள்ளத்தை உணராமல் பேசிவிட்டேன். என்னை மன்னியுங்கள்,'' என்று தழுதழுத்துப் பேசினார் உ.வே.சா.

குருநாதர்மேல் தமிழ்த்தாத்தா கொண்டிருந்த பக்தியின் பெருமையை இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது.

குருநாதரின் நிலை தாழும்போது...

வாய்த்த குருவும் நல்லவராக, வந்துசேர்ந்த மாணவரும் நல்லவராக இருந்துவிட்டால் சிறப் பின்மேல் சிறப்பு நிறைந்தவாறு இருக்கும்.

இதில் மாறுதல் நேர்ந்தால் நிலைமை தலைகீழாகும்.

நல்ல குருநாதராக இல்லாது போனால், மாணவர் களால் அவர்கள் மதிக்கப்பட மாட்டார்கள்.

திருக்கோட்டியூர் நம்பி குருநாதர். இராமானுஜர் மாணவர். 18 முறை திருவரங்கத்திலிலிருந்து திருக் கோட்டியூருக்கு நடந்துசென்று கேட்டும், சொல்லாத மந்திரத்தை, 19 ஆவது முறையும் விடாமுயற்சியுடன் வந்து கேட்டதால் "ஓம் நமோ நாராயணாய' என்று செவியில் சொல்லி, யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஆணையிட்டார்.

கேட்டுவந்த உடனே திருக்கோட்டியூரிலேயே கோவிலிலில் எல்லோரையும் அழைத்துச் சொன்னார். எல்லாரையும் "நமோ நாராயணாய' என்று முழங்கச் செய்தார்.

நம்பி அழைத்து, "உனக்கு நரகம்தான் கிடைக்கும்' என்றார்.

"பரவாயில்லை இத்தனை பேருக்கு சுவர்க்கம் கிடைக்கும்போது, என் ஒருவனுக்கு நரகம் கிடைப்பதால் ஒன்றும் மோசமில்லை' என்று விடையிறுத்தார்.

குருநாதருக்கே அப்போதுதான் ஞானம் பிறந்தது. "இந்த உயர்ந்த மனம் உனக்கு வாய்த்தது போன்று எனக்கு வாய்க்கவில்லையே!' என்று கூறி மனம் நெகிழ்ந்தார்.

மகாபாரதத்தில் வரும் குருநாதர்கள் துரோணாச்சாரியாரும் பரசுராமரும் நிலைதாழ்ந்து நிற்கிறார்கள்.

தன் படத்தை எழுதிவைத்து, அவரை குருவாக எண்ணி வில்வித்தை கற்ற ஏகலைவன், தன் மாணவன் அர்ச்சுனனைக் காட்டிலும் ஆற்றலில் சிறந்தவனாக இருப்பதை அறிந்து, அவனிடம் கைக்கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்று, அவனைப் பழிவாங்கும் ஆசிரியர் துரோணாச்சாரியார்.

"பார்ப்பனருக்கு மட்டுமே சொல்லிலிக்கொடுப்பேன்; அரசர்களுக்குச் சொல்லிலித் தரமாட்டேன்'. என்று வைராக்கியமாக இருந்த பரசுராமரிடம், பார்ப்பனச் சிறுவன்போல் சென்று கற்றான் கர்ணன். உண்மை தெரிந்ததும் "கற்பித்தவை அனைத்தும் ஆபத்துக் காலத்தில் பயன்படாமல் போகட்டும்' என்று சாபமிட்ட பொல்லாதவர் பரசுராமர்.

டியூஷன் நடத்திய ஆசிரியர் டியூஷன் சம்பளம் தரவில்லை என்பதற்காகத் தேர்வு எழுத முடியாமல் செய்யும் இழிநிலையாக இந்நிகழ்ச்சி நமக்குத் தோன்றுகிறது.

இராமனும் விசுவாமித்திரனும்

இராமாயணத்தில் கம்பர் காட்டும் வசிட்டர், ஆசிரியர் என்ற நிலையிலிலிருந்து வழுவும்போது, இராமனாகிய மாணவன், அவரை இடித்துரைக்கும் காட்சி ஒரு சுவையான காட்சியாகும்.

வசிட்டர், இராமனுக்கு மட்டுமன்று, அவன் தந்தை தசரதனுக்கும் ஆசிரியர். அவர்களின் குலகுருவாக விளங்கிவருகிறார். விசுவாமித்திரன் இராமனை வேள்வி காக்க காட்டுக்கு அனுப்புமாறு, தசரதனிடம் வேண்டினான். தசரதன் தன உயிரினும் மேலான இராமனைக் கானகம் அனுப்ப விரும்பவில்லை.

அப்போது, விசுவாமித்திரன் சினங்கொண்டான். வசிட்டர்தான், தசரதனை இணங்கச் செய்து, விசுவாமித்திரனோடு இராமனை அனுப்பிவைத்தார். இவ்வாறு, எல்லாச் செய்திகளிலும் வசிட்டனே இறுதி முடிவு செய்பவனாக மேன்மை பெற்று விளங்கினான்.

kalaingarவிசுவாமித்திரனின் வேள்வியைக் காக்கச் சென்ற இராமனை அம்முனிவன், தாடகை என்ற அரக்கியைக் கொல்லுமாறு சொன்னான். முதன்முதலாகப் போரிடும்போது, அப்போர் ஒரு பெண்ணைத் தாக்குவதாக அமைவது முறைதானா என்று இராமன் நினைத்தான். "பெண்ணெனப் பெருந்தகை மனத் திடை எண்ணினான்.' என்கிறார் கம்பர்.

இராமனின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட முனிவன், "அவள் பெண்ணின் தோற்றத்தில் இருக்கும் பாதகி, அவள் மனிதர்களையே தின்பவள். என்னைத் தின்னாமல் விட்டிருப்பதற்கு, என் உடம்பில் வெறும் எலும்பும் தோலுமே இருக்கிறதே ஒழிய தசையே இல்லை என்பதே காரணம்.' ""கோதென உண்டிலள்'' என்று சொன்னான். குரு சொல்வதைச் செய்வோம் என்று தன் கன்னிப்போரை ஒரு பெண்ணிடம் நடத்தி அவளைக் கொன்றான்.

இதுவே பின்னால், இராமனுக்கு வசையாக ஆயிற்று, மந்தரை என்னும் கூனி பேசுகிறாள்.

ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத் தாடகை என்னும் தையலாள் பட கோடிய வரிசிலை இராமன் ஆண்கள் இகழ, ஆண்மை மாசுபடத் தாடகை என்னும் பெண்ணைக் கொன்றதால் இராமனின் வீரம் மாசுபட்டதாகப் பேசுகிறாள்.

குருநாதர் பேச்சைக் கேட்டதால் இராமன் அடைந்த இகழ்ச்சி இது.

இராமனும் வசிட்டனும்

கைகேயி அனுப்ப, இராமன் வனவாசம் சென்றான்.

ஆனால், கைகேயி நினைத்தவாறு, பரதன் நாட்டை ஆளவிரும்பவில்லை. முறையின்றிப் பெற்ற ஆட்சியைத் துறக்க எண்ணினான். அண்ணனுக்கே ஆட்சியைத் தர நினைத்தான். காடுசென்று அண்ணனிடம் நாடு திரும்பி ஆட்சிசெய் என்று பலமுறையும் வேண்டி மன்றாடினான்.

தந்தை வரத்தால் தாயின் ஆணையால் தான் வனவாசம் வந்திருப்பதாகவும் அதை மதிக்காமல் நாடு திரும்பி ஆட்சி புரிவது அறம் ஆகாது. எனவே, தான் பதினான்கு ஆண்டுகளும் காட்டில் வாழுவதே முறை என்றான் இராமன்.

அப்போது குலகுருவான வசிட்டன் குறுக்கிட்டுப் பேசினான். ""தாய் தந்தை எனும் குரவர்களைவிட இம்மை மறுமை எனும் இருமைக்கும் உதவும் கல்வியைத் தந்த ஆசிரியனே உயர்ந்தவன் நான் உனக்கு அவ்வாறு கற்பித்தவன். எனவே நான் சொல்வதைக் கேள். மறுக்காதே. நாடு திரும்பி ஆட்சிக் கட்டிலிலில் அமர்ந்து ஆட்சி புரிவாயாக,'' என்றான்.

இதவியல் இயற்றிய குரவர் யாரினும்

மதவியல் களிற்றினாய்! மறுவில் விஞ்சைகள்

பதவிய இருமையும் பயக்க, பண்பினால்

உதவிய ஒருவனே உயரும் என்பரால்

என்றலால் யானுனை எடுத்து விஞ்சைகள்

ஒன்றலாதன பல உதவிற்று உண்மையால்

அன்றெனாது இன்றெனது ஆணை ஐயா! நீ

நன்று போந்து அளி உனக்குரிய நாடு என்றான்.

விசுவாமித்திரன் சொன்னபோது, குருவின் வார்த்தை யைத் தட்டாமல், தாடகையைக் கொன்ற இராமன், இப்போது முதிர்ச்சி அடைந்திருக்கிறான். அதனால், ஆசிரியரே சொன்னாலும் அறம்பிறழக் கூடாது என்ற தெளிவுடன் இருக்கிறான். அதனால் வசிட்டனின் ஆணைக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை.

மறுத்துப் பேசுகிறான். குருநாதரை இழித்துப் பேசுகிறான். எப்படி?

""பெரியோர், பெற்றோர், தாய் போன்ற அன்பு டையோர், தம் பிள்ளைகள் முதலிய எவரிடத்தும் ஒன்றைச் செய்வதாக உறுதி செய்துவிட்டால், அதனைப் பிறகு மறுப்பது முறையா? தேன்தரு தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் புதல்வனாகிய வசிட்டனே நீ கூறுவாயாக.'' என்கிறான் இராமன்.

சான்றவர் ஆகத் தன்குரவர் ஆகத் தாய் போன்றவர் ஆக மெய்ப்புதல்வர் ஆக- தான் தேன்தரு மலருளான் சிறுவ- செய்வென் என்று ஏன்றபின் அவ்வுரை மறுக்கும் ஈட்டதோ?

இதுதான் இராமனின் பதிலுரையாகக் கம்பன் காட்டும் பாடல். இதில் வசிட்டரை இராமன் எவ்வாறு விளிக்கிறான்? "மதிப்பிற்கும் வணங்குதற்கும் உரிய குருநாதரே' என்று அழைக்கவேண்டும்.

ஆனால் அவ்வாறு அவன் குருநாதரைக் குறிக்கவில்லை. அடைமொழிகள் எதுவும் இல்லாமல் "ஆசிரியரே' என்றாவது குறித்திருக்கலாம். அப்படியும் கூறவில்லை.

பின் எப்படித்தான் விளிக்கிறான்?

"தேன்தரு மலருளான் சிறுவ' என்கிறான். என்ன பொருள்?

"தேன் பிளிற்றும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் சிறுவனே'! என்கிறான். மதிப்புத் தந்து பேசுவதாக இது இல்லை. பிரமனின் மகன்தான் வசிட்டன். அதை அப்படிக் கூறுவது முறைதானா? ஆசிரியரை அவர் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் மகனே என்பது எப்படிச் சரியாகும்?

மாணவனை ஆசிரியர் அப்படிக் கூறலாம். தவறில்லை. என்னுடைய ஆசிரியர் முதிர்ந்த வயதினர்.

அவர் என் தந்தையாருக்கும் ஆசிரியராக இருந்து பாடம் நடத்தியவர். அவர் என்னை "ரத்தினசாமி மகனே வாடா' என்று அழைப்பார். அவர் அவ்வாறு அழைப்பது எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

வசிட்டன் அதுபோன்று இராமனை "தசரதனின் மகனே' என்று அழைத்திருக்கலாம். இராமனுக்கும் அது உவப்பாக இருந்திருக்கும். ஆனால், நடந்திருப்பது வேறாக அல்லவா இருக்கிறது!

வசிட்டனாகிய ஆசிரியனை இராமனாகிய மாணவன் "பிரமனின் மகனாகிய (சிறுவனே) வசிட்டனே!' என்கிறான். ஆசிரியரை மதிக்கவேண்டும் போற்றி வழிபட வேண்டும் என்பதை அறியாதவனா இராமன்?

"மலருளான் சிறுவ' என்று முறை தவறிப்

பேசுகிறானே அது ஏன்?

உணவுப் பொருளை வீணாக்கக் கூடாது, சோறு காலில் படக்கூடாது என்று கையால் எடுத்துக் கவனமாக வைப்பார்கள். அதே உணவுப் பொருள் கெட்டுப்போயிருந்தால் சிறிதும் தயக்கம் இல்லாமல் தூக்கி வீசுகிறார்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும், அதற்குரிய தரத்தோடு இருந்தால் அதற்குரிய மரியாதை கிடைக்கும். தரம் தாழ்ந்தால் மதிப்பும் அந்த விகிதத்தில் குறையவே செய்யும்.

இங்கும் அதுதான் நடந்தது.

வசிட்டன் குருநாதன்தான். மதிப்பில் எந்தக் குறைவும் இல்லாமல் அதுநாள்வரை மதிப்பு தந்தவன்தான் இராமன்.

ஆனால் இன்றோ? தந்தையின் வரத்தைப் பெற்ற கைகேயியாகிய தாய், பதினான்கு ஆண்டுகள் காட்டில் சென்று தவம்புரியுமாறு ஆணையிட்டாள். அவ்வாணையை நிறைவேற்றவே காடுவந்திருக்கி றான் காகுத்தன்.

அந்தத் தாய் தந்தையருக்கு- அவர்களின் ஆணைக்கு- கட்டுப்பட்டு வந்திருப்பவனிடம், "அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீ நாடு திரும்பி ஆட்சி செய்' என்று குருவே சொன்னால், அது என்ன அறம்?

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

தந்தைசொல் மிக்க மந்திரமில்லை

என்று கற்பித்த ஆசிரியனே, "அவர்கள் சொல்லை மதிக்காதே. நான் சொல்வதைக் கேள்' என்பானா னால் அவன் ஆசிரியனா? சொல்வது வேறு செய்வது வேறு என்று வாழ்பவன் ஆசிரியன் ஆவானா?

அதனால்தான், இராமன் ஆசிரியன் நிலையில் நின்று, ஆசிரியனை மாணவன் நிலைக்குத் தாழ்த்திப் பேசுகிறான்.

ஆசிரியர்கள் சமுதாயத்தில் மதிப்பிற்குரியவர்கள் என்பது முழுக்க முழுக்கச் சரியானதுதான். ஆனால், அந்த ஆசிரியர் சொல்லும் செயலும் ஒன்றுபட்டவராக வாழவேண்டும். நல்லதைக் கற்பித்த ஆசிரியரே, அதன்படி நடக்காமல் தீய வழியில் நடந்தால், சமுதாயம் அவரை மதித்துப் போற்றாது. இக்கருத்தை வலிலியுறுத்தவே, கம்பர் இவ்வாறான நாடகத்தை நடத்திக் காட்டுகிறார். இதையே பொதுமறையில் திருவள்ளுவர்,

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு

என்பது பறைசாற்றுகிறார். ஆம், சொல்வேறு செயல்வேறு என்று இருப்பவர்களைக் கனவிலும் தொடர்புகொள்ளக்கூடாது.

ப்