"மேகமாய் வந்து போகிறேன்... வெண்ணிலா உன்னை தேடினேன்'- என்ற பாடலை கோடிக்கணக்கானோர் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அதை எழுதிய கவிஞர், அண்மையில் அனாதைபோல் இறந்து அழக் கூட ஆளின்றி சிதையேறி எரிந்து, கரிந்து, புகைந்து, மேகத்தோடு மேகமாய்க் கரைந்துபோயிருக்கிறார்.

அவருடைய இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மொத்தமே ஒரு நான்கைந்து பேர் தான். முத்துவிஜயனின் அண்ணன் அருளானந்தன், கவிஞர்கள் தமிழமுதன், குகை மா.புகழேந்தி, இயக்குநர் இளவரசு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்டவர்களே அவர்கள். தம் வாழ்நாளில் ஒருமுறைகூட சந்தித்திராத ஓர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்தான் முத்துவிஜயனின் பூதவுடலை எரியூட்டுவதற்கு உதவி செய்வார் என்று தன்போக்கில் பயணித்த முத்துவிஜயனும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

புகழ்பெற்ற பாடல்களாய் பலரின் நாவில் ததும்பும் அந்த பாடலாசிரியர் வலிமிகுந்த மரணத்தைத் தழுவி யிருப்பது, ஒரு பாடலாசிரியனான எனக்கு பெரும் துயரத்தைத் தருகிறது.

*

Advertisment

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் கற்பாளையத்தைச் சேர்ந்த முத்துவிஜயன், பத்தாம் வகுப்பு முடித்த கையோடு தனது மாமாவின் மெடிக்கல் லைனில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். எப்படியோ சினிமா ஆசை வந்து, சென்னை போகவேண்டுமென்று வீட்டில் கேட்க, அவர்கள் முடியாது என்று சொல்ல, ஒத்தைக்காலில் நின்று 1993-ல் பெரும்கனவுகளோடு சென்னை வந்து சேர்ந்துள்ளார் அவர்.

டீக்கடை, ஓட்டல்கள் என்று வேலை பார்த்து, தனது இருப்பை நிறுவி, மெல்ல மெல்ல முயன்று பாடலாசிய ராக உயர்ந்த முத்துவிஜயனின் இயற்பெயர் விஜயானந் தன். முதல் இரண்டு பாடல்களான ’"மேகமாய் வந்து போகிறேன்' பாடலையும், விஜய் நடித்த ’நெஞ்சினிலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற "அன்பே என் அன்பே..

எங்கே நீ எங்கே' என்ற பாடலையும் விஜயன் என்ற பெயரிலே எழுதியிருக்கிறார். அப்போது இங்கே பா.விஜய் புகழ்பெற்று வந்ததால், தன் பெயருடன் தனது அம்மாவின் பெயரான முத்துலட்சுமியின் பெயரைச் சேர்த்து முத்துவிஜயன் என்ற பெயரில், பின்னர் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

Advertisment

தொடர்ந்து’ "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா,' "வத்தலகுண்டு கொடியே கொடியே வெத்தலக்கொடியே', விஜயகாந்த நடித்த தென்னவன் திரைப்படத்தில் இடம்பெற்ற "வட்ட வட்ட நிலவுக்கு றெக்க முளைக்க', வாஞ்சிநாதனில் இடம்பிடித்த

"அமுல்பேபி அமுல்

பேபி' என்பது போன்ற

பாடல்களைச் சரசர

வென எழுதிய அவர், பரத்

வாஜ் இசையில் நந்தி என்ற படத்திற்கு முழுப் பாடல்களையும் எழுதினார்.

"எங்கள் அண்ணா' திரைப் படத்தில் "ஆச அரசா.. அல்லி ராணி புருசா'வும் "கால்கிலோ காதல் என்ன விலை ..கடைகளில் கேட்டேன் கிடைக்கவில்லை' என்றெல்லாம் சினிமா பாடல்கள், தனிப்பாடல்கள் என எண்ணூறு பாடல் களை எழுதினார். எண்ணற்ற வெகுசன மனங்களைக் கவர்ந்த பாடலாசிரியராக இருந்ததோடு மட்டுமல்லாமல், சக பாடலாசிரியரான கவிஞர் நா.முத்துக்குமாருக்குப் பிடித்த பாடலாசிரியராகவும் இருந்துள்ளார்.

*

தனது அப்பா நடேசன் 2000-ஆம் ஆண்டும், அம்மா முத்துலட்சுமி 2008-ஆம் ஆண்டும் இறந்து போக, தனது ஒரே அண்ணன் அருளானந்தன் மட்டுமே ஆறுதலாக இருந்துள்ளார். அவரை ஒரு நாள் தொடர்புகொண்டு, "நாளை எனக்குத் திருமணம்' என்று தகவலை மட்டுமே சொலியிருக்கிறார் முத்துவிஜயன். அந்த சூழலில் வரமுடியாமல் போனதிற்காக இப்போது வருந்துகிறார் அருளானந்தன். பெண் கவிஞர் ஒருவரை காதல் மணம் புரிந்துகொண்ட முத்துவிஜயனுக்கு, அந்தத் திருமண வாழ்க்கை வெற்றியளிக்கவில்லை. அதனால் அவரிடம் இருந்த மதுப்பழக்கம் அதிகமாகி, பாட்டிலும் கையுமாகவே மாறிவிட்டார். தன்னைத் தானே அந்தக் கவிஞன், மேகமாய்க் கலைக்க முன்வந்துவிட்டான்.

கடந்த இரண்டே கால் வருடத்திற்கு முன்பு திருப்பூர் தங்கும் விடுதியிலிருந்து முத்துவிஜயனின் அண்ணனுக்கு தகவல் வருகிறது. அடித்துப் பிடித்து ஓடிப்போய்ப்பார்க்க, அங்கு சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறார் முத்துவிஜயன். அங்கு எதற்கு, ஏன் வந்தார் என்று கேட்கக்கூட நேரமில்லாமல், ஆளைத் தூக்கி வந்து திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார்.

அப்போதுதான் தெரிந்திருக்கிறது முத்துவிஜயனின் கல்லீரல் பழுதடைந்திருக்கிற விவரம். ஓரளவிற்கு சரி செய்தும் இன்னும் ஐந்து வருடங்கள்தான் உயிருடன் இருப்பார் என்றும் அறிவித்திருக்கிறார்கள் அப்போதே மருத்துவர்கள். கனத்த மனதுடன் அருளானந்தன், தம்பி முத்துவிஜயனுக்கு சில அறிவுரைகளைச் சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

மீண்டுவரும் முடிவோடு முத்துவிஜயன், மீண்டும் பாடல்களுக்கான தேடலில் இறங்கினார். சினிமா கொடுக்கும் நெருக்கடிகளைத் தாங்குபவர்கள் யாரோ, அவர்களே காலத்தைத் தாண்டுகிறார்கள். நெருக்கடிக்குள் மாட்டுபவர்கள் யாரோ, அவர்கள் சினிமா என்னும் ஒரு நெருக்கடிக்குப் பயந்து அல்லது தற்காத்துக்கொள்ள வேறு வழிகளில் சிக்கி பல நெருக் கடிகளில் மாட்டிக்கொள் கிறார்கள். கவிஞர் முத்துவிஜயனும் அதற்கு விதிவிலக்கல்ல.

*

கடந்த 6-ஆம் தேதி, மீண்டும் அருளானந்தனுக்கு பாடகர் பிரசன்னா மூலம் தகவல் வரவும், திருப்பூரில் நடந்தது போன்றுதான் தம்பிக்கு உடலுக்கு முடியாமல் போயிருக்கும், மீண்டும் திருச்சிக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்க்கலாமென்று திருச்சியிலிருந்து நண்பர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் வந்து பார்த்தபிறகுதான் தெரிகிறது. தம்பிக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனையுடன் ஹெர்னியா என்ற குடல் பிரச்சினையும் இருந்து, அது தீவிரமாகி உயிர் போராட் டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது. ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்கள். பேண்ட் சர்ட்டோடு படுத்துக் கிடந்த தம்பியை அவர் முத்து முத்து என அழைத்துப் பார்த்தபோது, முத்துவிஜயன் வெறுமனே கண்களால் கூர்ந்து தன் அண்ணனைப் பார்த்திருக்கிறார். வார்த்தை கள் ஏதும் அங்கு புழங்கப்படவில்லை. பாடல்களுக்கு வார்த்தைகளைத் தேடித்தேடி கோர்த்து அழகு செய்த கவிஞன் தன் கடைசி நிமிடத்தில் வார்த்தைகள் ஏதும் அகப்படாமல் தவித்தது என்னவொரு முரண். ஆம்புலன்ஸ் வண்டி வருமுன் கவிஞர் முத்துவிஜயனின் உயிர் பிரிந்துபோய்விட்டது.

முத்துவிஜயனின் அண்ணன் அருளானந்தன் தன்னுடைய தம்பியைப் பற்றி நினைவுகூரும்போது, முத்துவிஜயனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவ அறிக்கைகள் மட்டுமே அவர் நினைவாக தற்போது கையில் உள்ளதாக மனம் கனக்கிறார். இவ்வளவு கடினமான நேரத்தில்கூட யாரிடமும் உதவி கேட்டுப் போகவில்லை என்பதையும், அவர் பாடல் வாய்ப்புக் கேட்டும் எந்த படியும் ஏறவில்லை என்பதையும் குகை மா.புகழேந்தி வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார். கவிஞரின் திருமணத்திற்கு இவர் மட்டுமே தனது குடும்பத்தோடு போய் வந்திருக்கிறார்.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன், ""முத்துவிஜயன் குறித்த வேதனையை வேறொரு கோணத்தில் கூறினார். முத்துவிஜயன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தங்குவதற்கு இடமில்லா மல் என்னிடம் வந்தார். நான் சங்க அலுவலகத்தில் தங்கிக் கொள்ளச் சொன்னேன். தங்கிக்கொண்டார். பின்பு கொஞ்ச காலம் தங்கியிருந்து பாடல்கள் தேடலில் இருந்து விட்டு மீண்டும் கிளம்பிவிட்டார். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் போய்சேர்ந்திருக்கிறார். ஒரு நல்ல கவிஞனை அவனது வாழ்க்கையும் ஏமாற்றங்களும் அதனால் ஏற்பட்ட மதுப் பழக்கமும் சின்னாபின்னமாக்கிவிட்டது'' என்கிறார் வலியோடு.

முத்துவிஜயன் மருத்துவமனையில் இருக்கும் தகவல் கவிஞர் பழனிபாரதி மூலம் கவிஞர் இளையகம்பனிடம் சொல்லப்பட்டு, அதன்பிறகு இளையகம்பன் தமிழமுதனி டம் சொல்ல, மருத்துவமனை போய் தேடிப் பிடித்து கவனித்திருக்கிறார்.

அங்கிருந்த மருத்துவர்கள் ஒரு வாரம்தான் தாங்கும் என்று முத்துவிஜயனுக்கு நேரம் குறித்திருக்கிறார்கள். இதைக்கேட்ட முத்துவிஜயன், ""இதுபோல பலமுறை எனக்கு நேரம் குறிக்கப்பட்டது. ஆனாலும் நான் மீண்டு வந்திருக்கேன். இப்போதும் நான் மீண்டு வருவேன். மறுபடியும் திரையுலகில் வலம் வருவேன்'' என்று அந்த நிலையிலும் நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். ஆனால் காலம் கொடூரமானதாயிற்றே.

அரசு மருத்துவமனையில் சரியாக வைத்தியம் பார்க்கவில்லை என்று வெளியேறிய முத்துவிஜயன், ஜாபர்கான் பேட்டையில், பாடகர் பிரசன்னாவிடம் வேலை பார்க்கும் ஒருவரின் பாதுகாப்பில் ஓர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்துதான் முத்துவிஜய னின் அண்ணனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

lll

முத்துவிஜயன் இறந்ததையறிந்த வீட்டு உரிமையாளர், அவரின் உடலை அங்கு வைக்க அனுமதிக்காமல் உடனே எடுத்துச் செல்லும்படி வற்புறுத்தியிருக்கிறார். அருளானந்தன், தமிழமுதன் உள்ளிட்டவர்கள், கவிஞர் முத்துவிஜயனின் உடலை ஓர் ஆம்புலன்ஸில் ஏற்றி, ஒரு சாலையோரம் வைத்துக்கொண்டு... அடுத்து என்ன செய்யலாமென்று விவாதித்திருக்கிறார்கள். அந்த உடல் சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்படும் நிலையில் இல்லை என்பதால், சென்னையிலயே அடக்கம் செய்துவிடலாம் என முடிவு செய்து, அந்தக் கவிஞனின் உடலை அஞ்சலிக்கு வைக்கக்கூட இடம் கிடைக்காததால், திடீர் முடிவெடுத்து சுடுகாட்டைத் தேடிக் கண்டடைந்திருக்கிறார்கள். ஆம் கண்டடைந்திருக் கிறார்கள். என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் அது மாலை ஆறு மணியை கடக்கும் நேரம். ஆறரை மணி வாக்கில் அனைத்து சுடுகாடுகளையும் சென்னையில் மூடி விடுவார்களாம். புண்ணியம் செய்தவருக்கு பொணத்து மேல மழை என்பார்கள். மழையும் வந்தது.

முத்துவிஜயன் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.

"நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்.. நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்' என்று எழுதிய கவிஞன் இறப்புக்கு இந்த இயற்கை அழுதது.

ஆம் அன்று சென்னையில் மழை பெய்தது.

எந்த இடுகாட்டில் அடக்கம் செய்யலாம் என தமிழமுதன் உள்ளிட்ட சிலர் ஆங்காங்கே சிலரை தொடர்பு கொண்டு விசாரிக்க, எங்கும் வழி திறக்கவில்லை. முடிவாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரிடம் பேசி, வளசரவாக்கம் சுடுகாட்டில் இறுதி மரியாதை செய்து எரித்திருக்கிறார் கள். ஒரு கவிஞனுக்கு; ஒரு பாடலாசிரியனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது குறித்து தமிழ்ச் சமூகத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும்.

கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்த, முத்துவிஜயனின் உடலை எங்கு பதப்படுத்தி எப்படி ஊருக்கு கொண்டுசெல்வது? உடலை ஏன் ஊருக்கு கொண்டு வரவில்லை? என்ற உறவினர்களின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்றெல்லாம் குழம்பினாலும் வேறுவழி யின்றிதான் அப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் கள்.

பொருள் தேடி புலம்பெயரும் எவரும் தன் சொந்த மண்ணில் உறங்க முடியும் என்று எந்த உத்திர வாதத்திற்கும் இங்கு வழியில்லை. ஒருவேளை முத்து விஜயனுக்கு மனைவி மக்கள் இருந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கலாம்.

*

கவிஞர் முத்துவிஜயன் தன் போக்கில் பயணிப்பவ ரென்றும், எவரையும் எளிதில் உதாசீனப்படுத்தும் போக்கும், யாரையும் நம்பாமலும் எவரொருவரிடமும் பிடிப்பில்லாமலும், நடந்து கொள்வார் என்றும் சிலர் கூறக் கேட்டேன். காலம் அவரை அப்படி நடந்துகொள்ள நிர்பந்தித்திருக்க வேண்டும். இல்லையென்றால் ‘ "நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே' என்று எழுத முடியுமா..? இவ்வளவு இலகுவான மனதுடைய கவிஞரை, இந்த சினிமா அல்லது மனிதர்களால் ஏற்பட்ட கசப்புகள் அப்படி மடைமாற்றி வைத்திருக்கிறது!

நான் 2005-06-ம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஒரு ’கேம்ஷோவில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அந்த ’கேம்ஷோவில் சினிமா பாடலாசிரியர்களை அவர்கள் எழுதிய பாடல்களோடு தொடர்புபடுத்தி சில கேள்வி பதில்கள் பெறவேண்டியது இருந்தது. அந்த நேரத்தில் கிடைத்த கவிஞர்களான, இளையகம்பன், யுகபாரதி, முத்து விஜயன் போன்றவர்களையும், இன்னும் சில பாடகர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரையும் சந்தித்து படம்பிடித்து ஒளிபரப்பு செய்தோம்.

அந்த கேம் ஷோவில் கவிஞர் முத்துவிஜயனை அவர், எழுதிய பாடல்கள் குறித்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்று ஒளிபரப்பினோம். அதன்பிறகு பார்க்கு மிடங்களில் எல்லாம் என்னிடம் வாஞ்சையோடு பேசுவார்.

அப்போது பிரபல வார இதழில் கவிஞர் நா.முத்துக்குமார் படம் இயக்கப்போவதாக ஒரு செய்தி வந்தது அதனைப் பார்த்துவிட்டு கவிஞர் முத்துவிஜயனிடம் நான், "என்னை நா.முத்துக்குமாரிடம் உதவி இயக்குராக சேர்த்துவிடறீங்களா?'னு கேட்டேன். அவர் ரொம்ப இயல்பா, "ஆமாம் அவனும் ஒரு அஸிஸ்டண்ட் வேணும்னு எங்கிட்ட சொல்லியிருந்தான், நான் ரெண்டு, மூணு நாள்ல அவனப் பார்ப்பேன், கேட்டுச் சொல்றேன்'னு சொன்னார். நம்பிக்கையாய் இருந்தது.

சரியாக 2007 நவம்பர் நாலாம் தேதி காலை பத்துமணிக்கு 21, கே.கே. சாலை, சாலிகிராமத்தில் இருந்த கவிஞர். நா.முத்துக்குமார் அலுவலகத்துக்குள் இருவரும் நுழைந்தோம். சற்று நேரத்தில் வந்தார். கவிஞர்.முத்துக்குமாரிடம் கவிஞர் முத்துவிஜயன் என்னை அறிமுகப்படுத்தி னார். என்னை விசாரித்த முத்துக்குமார் ஒரு பேப்பரை யும் பரீட்சை அட்டையும் கொடுத்து எழுதச் சொன்னார்.

எழுதிக் காட்டினேன். ஒரு இருக்கையைக் காட்டி, "அது தான் உங்கள் இடம் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள்' என்றார்.

அதன்பிறகு அதே காலகட்டத்தில் இரண்டு முறை முத்துக்குமார் அண்ணனோடு கவிஞர் முத்துவிஜயனை சந்தித்தேன். நான் முத்துக்குமார் அண்ணனிடம் சேர்ந்த ரெண்டாவது மாதம் பொங்கல் விழா வந்தது. "ஊருக்கு போய்ட்டு வாங்க தம்பி' என்று கொஞ்சம் பணம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார். ஒரு வாரத்தில் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினேன். என் கிராமம் என்னை ரெண்டு மூன்று வாரத்திற்குப்பிறகே சென்னைக்கு அனுப்பி வைத்தது அதற்குள் இங்கு பெரிய களேபரமே நடந்திருந்தது. ’அலுவலகத்தின் சாவியை நீங்களே எடுத்துட்டுப் போய்ட்டு வாங்க’ என்று சொல்லியிருந்தார். அப்போதுதான் சீக்கிரம் வருவான் என்பதாக இருக்குமோ என்று தெரியாது. ஆனால் எனக்கு அந்த நினைவே இல்லாமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்து விட்டேன். அப்போது என்னிடம் செல்ஃபோன் ஏதும் இருக்கவில்லை.

கடைசியாக கவிஞர். முத்துவிஜயனை நேரில் சந்தித்தது முத்துக்குமார் அண்ணனின் இறப்பில்தான். நான் எங்கோ போய்க்கொண்டிருந்தேன். அவர் எங்கோ போய்க்கொண்டிருந்தார். ஏதோ ஒரு பயணத்தில் பார்த் தோம், நான் போகும் பாதையை ஒரு வழிகாட்டியைப் போல் எனக்கு காட்டிவிட்டு அவர் எங்கோ போய் விட்டார்.

மனதிற்கு நெருக்கமான ஒரு மனிதரை வாழ்க்கையில் ஓரிருமுறைதான் சந்திக்க முடியும் என்பதை, அவ்வளவு கச்சிதமான வரையறையாக வகுத்து வைத்திருக்கும் இந்த காலம்தான் எவ்வளவு பெரிய பொறியாளராக இருக்கிறது.

"மரணம் ஒரு கறுப்பு ஆடு, அது சில சமயம் நமக்குப் பிடித்த ரோஜாக்களையும் தின்றுவிடுகிறது.' என்று எழுத் தாளர் சுஜாதா மரணத்திற்கு இரங்கல் எழுதினார்.

அண்ணன் நா. முத்துக்குமார். அதனையே இங்கும் நினைவுகூருகிறேன்.

"நேரம்' திரைப்படத்தில் நான் எழுதிய, "காதல் என்னுள்ளே' பாடலைக் கேட்டுவிட்டு "நல்லா இருக்கு நிறைய எழுதுங்க' என்றார். அதன்பிறகு எங்கேயும் சந்திக்கவில்லை "எனக்குள் ஒருவன்' திரைப் படத்திற்கு நான் வசனம் எழுதியது தெரிந்து போன் செய்தார். அப்போது நானும் சக கவிஞரான முத்துவேலும் பெசண்ட்நகர் பீச்சில் பேசிக்கொண்டிருந்தோம். படம் இயக்க முயற்சி பண்றாராம், முடிவானதும் கூப்பிடுறேன் வாங்க சேர்ந்து வேலை பார்க்க லாம்’ என்று சொல்றார் என்று முத்துவேலுவி டம் சொன்னேன். ஒரு அரை மணி நேரம் கழித்து அதே நம்பரிலிருந்து மீண்டும் போன்’ "சொல்லுங்கண்ணே' என்றேன். எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல். என்னை யார் எவரென்று விசாரித்து, ’முத்துவிஜயன் என்ன பேசினார் என்றார். நான் அவரை யார் எவரென்று விசாரிக்காமல் கவிஞர் சொன்னதை அப்படியே சொன் னேன். "ம்க்கும்.. படம் டைரக்ட் பண்ணப்போறாராமா...' என்று கிண்டல் தொனியில் கேட்டுவிட்டு போனை வைத்தார்.

ஒரு வருடத்திற்கு முன் இருக்கும், ஃபோன் பண்ணி பேசினேன். தேனியில் வீடெடுத்துத் தங்கியிருப்பதாக சொன்னார். "இந்தப் பக்கம் வந்தால், வீட்டுக்கு வாங்க' என்று சொன்னார். சினிமா எல்லாம் சென்னையில் உள்ளது இவர் தேனியில் என்ன செய்கிறார் என்று எனக்கு விசித்திரமாக பட்டது.

நா. முத்துக்குமாருக்குப் பிடித்த பாடலாசிரியர் கவிஞர் முத்துவிஜயன் தான் என்று நான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொன்னதைக்கூட அவரிடம் சொல்ல வில்லை. அவர் இறந்துபோனதாக வந்த செய்திக்குப் பிறகு அவர் எண்ணிற்கு அழைத்துப் பார்த்தேன். அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. யாரிடமாவது பேச வேண்டுமென்று தோன்றினால் அது எந்த நேரமாக இருந்தாலும் பேசிவிட வேண்டும். ஏனென்றால் மீண்டும் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம்.