புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கொரோனா பேரிடர் காலத்தை முன்னிட்டு தடை செய்துள்ளது அரசாங்கம். கொண்டாட்டமில்லாமல் எப்படி புத்தாண்டு என்று இளவட்டங்களின் மனநிலை வாட்டத்துடன் வெளிப்படுகிறது. கிரிகோரியன் ஆண்டான ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடுவது நமக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் வழக்கமாகிவிட்டது. அது இயல்பு. அதே நேரத்தில், ஆங்கிலப் புத்தாண்டுக்கு இரண்டு வாரங்கள் கழித்து வரும் நமக்கான புத்தாண்டு பற்றி நாம் கவனம் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

va

நமக்கானப் புத்தாண்டு என்றால் சித்திரை 1ஆம் தேதி வருமே? அந்த தமிழ் வருஷப் பிறப்புதானே என்று கேட்பது வழக்கம். ‘வருஷம்’ என்பதே தமிழ் அல்ல. அது எப்படி தமிழர்களின் புத்தாண்டாக இருக்கும்? அதுவும் பிரபவ, விபவ எனத் தொடங்கும் 60 ஆண்டு சுழற்சி முறைக் கணக்கில் உள்ள ஆண்டுகளில் ஒன்றுகூட தமிழ்ப் பெயரைக் கொண்டதில்லை. அந்தக் கணக்கின்படி தற்போது நடைபெறுவது ‘சார்வரி’ ஆண்டு. இது தமிழ்ச் சொல் அல்ல. 60 ஆண்டுக் கணக்கும், அந்த ஆண்டுகளுக்காக சொல்லப்படும் புராணக் கதையும் தமிழ்ப் பண்பாட்டைச் சார்ந்ததுமல்ல.

ஆரியப் பண்பாட்டின் வழிவந்த இந்த 60 ஆண்டுக் கணக்கிலிருந்து, தனித்த அடையாளம் கொண்ட தமிழ் ஆண்டுக் கணக்குத் தேவை என்பது தமிழறிஞர்களின் விருப்பமாகவும் தேடலாகவும் இருந்தது. பழங்காலக் கல்வெட்டுகளில் உள்ள ‘கலி’ ஆண்டுக் கணக்கு, ‘சக’ ஆண்டுக் கணக்கு, ‘விக்ரம’ ஆண்டுக் கணக்கு, ‘குப்த’ ஆண்டுக் கணக்கு உள்ளிட்டவையும் தமிழ் மரபு சார்ந்தவையல்ல. தமிழ் மன்னர்களைப் பொறுத்தவரை பிற்காலச் சோழர்கள்-பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சிக் கால கல்வெட்டுகளில் அம்மன்னர்கள் முடிசூடிய ஆண்டு-மாதம்-அதற்கான நட்சத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘யாண்டு’ என்ற கணக்கு கையாளப்பட்டுள்ளது.

தற்காலச் சூழலுக்கேற்ப தமிழுக்கான ஆண்டுக் கணக்கு ஒன்றை நடைமுறைப்படுத்த தமிழறிஞர்கள் 1920 முதலே முயற்சிகளை மேற்கொண்டனர். சாதி-மத பேதமின்றி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை உலகத் தமிழ் அடையாளமாகக் கொண்டு, ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. வைகாசி மாதம் அனுடம் நட்சத்திரமே வள்ளுவர் பிறந்தநாள் என தமிழறிஞர் கா.பொ.ரத்தினம் உள்ளிட்டோர் கடைப்பிடித்த னர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தை மாதமே வள்ளுவர் பிறந்தநாள் என்று வலியுறுத்தினார். வைகாசியா- தையா என்பதில் தமிழறிஞர்களிடையே கருத்து மாறுபாடு கள் இருந்தாலும், சித்திரை 1ஆம் நாளை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படும், 60 ஆண்டு கணக்கு முறையிலான தமிழ வருஷப் பிறப்பு என்பது ஆரியப் பண்பாடே என்பதில் உறுதியாக இருந்தனர்.

1930களில் தொடங்கி 1950களின் இறுதிவரை தமிழறிஞர் கள் திரு.வி.க, மறைமலை அடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் உள்ளிட்ட பலரும் தமிழுக்கான ஆண்டுக் கணக்கை வலியுறுத்தினர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற முழக்கமும் வலுப்பெற்றது. திருவள்ளுவரின் பெயரிலான தமிழ் ஆண்டுக் கணக்கு குறித்த கருத்தாக்கங்கள் வெளிப்பட்டன.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால்-தமிழறிஞர்களின் பங்கேற்புடன் பொங்கல் விழாவை தமிழர் திருநாளாகக் கொண்டாடும் வழக்கம் பரவலானது. ஆரியப் பண்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடாக பொங்கல் எனும் பண்பாட்டு ஆயுதம் கைக்கொள்ளப்பட்டது. ‘தை’ சிறப்பிடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, திருவள்ளுவர் பிறப்பு குறித்து ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகளும் கவனத் தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

திருவள்ளுவரின் காலக் கணிப்பினை இலக்கியத் தரவுகளின் அடிப்படையிலும், திருக்குறளில் கையாளப் பட்டுள்ள சொற்களின் அடிப்படையிலும், ஓலைச்சுவடி கள்-கல்வெட்டுகள் ஆகியவற்றின் ஆய்வுகள் வழியாகவும் தமிழறிஞர்கள் மேற்கொண்டனர். இறுதியாக, இயேசு பிறப் பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாகப் பிறந்தவர் வள்ளுவர் என்ற முடிவுக்கு வந்தனர். அதனடிப்படையிலேயே திருவள்ளு வர் ஆண்டுக் கணக்கு கடைப்பிடிக்கப்பட்டது.

அதாவது, திருவள்ளுவர் பிறந்தது கி.மு. 31 எனக் கொண்டால், கிரிகோரியன் நாட்காட்டி அடிப்படையிலான ஆங்கிலப் புத்தாண்டுக் கணக்குடன் 31ஐக் கூட்டினால் அதுவே திருவள்ளுவர் ஆண்டாகும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலப் புத்தாண்டு 2021 என்றால், திருவள்ளுவர் ஆண்டு (2021+31) 2052 ஆகும். டிசம்பர் 25 இயேசு பிறந்த கிறிஸ்துமஸாகவும், ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டா கவும் கொண்டாடப்படுகிறது. அதுபோல, திருவள்ளுவர் நாளாக தை 2ஆம் நாளும், தை மாதம் தொடக்கம் முதல் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்காகவும் கடைப் பிடிக்கப்படுகிறது.

தமிழறிஞர்களின் ஆய்வுகளையும் கோரிக்கையினையும் ஏற்று, கி.பி.1971ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை அரசு நாட்குறிப்பில் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு (1972) முதல் அரசிதழி லும் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு வெளியிடப் பட்டது. 1981ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தின் போது அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கடைப்பிடிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இது தமிழர்களுக்கான தனித்துவமான ஆண்டுக் கணக்காக அமைந்தது. சித்திரை முதல் நாளினைத் தொடக்கமாகக் கொண்ட 60 ஆண்டு சுழற்சி முறைக் கணக்குக்கு மாற்றாக, திருவள்ளுவர் ஆண்டு, அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரியப் பண்பாட்டு வழி வந்த சித்திரை தமிழ் வருஷப் பிறப்புக்குப் பதில், தமிழர்களின் அறுவடைத் திருநாளான தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற தமிழறிஞர்களின் கோரிக்கையினை கி.பி.2008ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் ஏற்று, நடைமுறைப்படுத்தினார். எனினும், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சித்திரை முதல்நாளே தமிழ் வருஷப் பிறப்பு என செல்வி.

ஜெயலலிதா தலைமையிலான அரசு மாற்றி விட்டது.

தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்களா-சித்திரை மாதமா என்பது இன்றளவும் மரபியல்-வானியல் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தமிழர்களுக்காக தனித்துவமான ஆண்டுக்கணக்கான திருவள்ளுவர் ஆண்டு நடைமுறை என்பது ஆட்சி மாற்றங்களாலும் மாறவில்லை. தற்போதும் அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து அலுவல்களிலும் அது நடைமுறையில் உள்ளது.

நமக்கான ஆண்டுக் கணக்கு என ஒன்று உள்ளது, அது அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதுகூட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அறியவில்லை. வள்ளுவருக்கு காவி பூசும் கூட்டத்தார் கைகளிலிருந்து தமிழையும் வள்ளுவத்தையும் காத்திட, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் சிறப்பை உணர்ந்து, அதனைக் கடைப்பிடிப்பதும்கூட ஆரியப் பண்பாட்டிற்கான எதிரான ஆயுதம்தான்.