சிற்றம்பலம் அரசியல் சதுரங்கக் காய்கள்! -கோவி. லெனின்

/idhalgal/eniya-utayam/chirambalam-political-chess-pieces-g-lenin

லக்கிய உலகில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள் தனி வகையானவை. அரசியல் தலைவர்களே மிரண்டு போகிற அளவுக்கான அரசியலை இலக்கிய கர்த்தாக்களின் குழுவாதங்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றன.

அரசியலில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என்ற நிலைப்பாடுகள் இருக்கும். இலக்கிய வட்டங்களில் அந்தந்த எழுத்தாளரும் அவரவர் வாசகர்களும் ஆளுங்கட்சியினர்தான். மற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் அவர்களுக்கு எதிர்க்கட்சியினரே! இப்படித்தான் ஒவ்வொரு எழுத்தாளரும் அவரைச் சார்ந்த வட்டத்தினரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் செய்கின்ற அரசியல் விளையாட்டுகளைக் கடந்து, அவர்களின் படைப்புகள் பேசுகின்ற அரசியல் என்ன என்பதுதான் இலக்கிய உலகில் முக்கியத்துவம் பெறும். எத்தனையோ இசங்கள் இருக்கின்றன. இசங்கள் இல்லாத இசம் என்கிற வகைமையை உருவாக்குகின்ற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களின் எழுத்து எங்கேயாவது தனது ஒப்பனையைக் கலைத்து, உண்மை உருவத்தைக் காட்டிவிடும். அவர்களின் படைப்பு யாருக்கான குரலாக இருக்கிறது என்பதும் அம்பலமாகிவிடும்.

d

குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் எழுத்துகள் வலிமையானவை. வலி மிகுந்தவை. அதிகாரத்தையும்-மேட்டிமைத்தனத்தையும் அசைத்துப் பார்ப்பவை. அப்படிப்பட்ட எழுத்துகளை, படைப்புகளாக ஏற்கமாட்டோம் என காலந்தோறும் ஒரு கும்பல் உலவிக்கொண்டிருக்கும். இந்த இலக்கிய நாட்டாண்மைகளின் தாதாத்தனத்தை மீறித்தான், ‘பிரச்சார எழுத்த

லக்கிய உலகில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள் தனி வகையானவை. அரசியல் தலைவர்களே மிரண்டு போகிற அளவுக்கான அரசியலை இலக்கிய கர்த்தாக்களின் குழுவாதங்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றன.

அரசியலில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என்ற நிலைப்பாடுகள் இருக்கும். இலக்கிய வட்டங்களில் அந்தந்த எழுத்தாளரும் அவரவர் வாசகர்களும் ஆளுங்கட்சியினர்தான். மற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் அவர்களுக்கு எதிர்க்கட்சியினரே! இப்படித்தான் ஒவ்வொரு எழுத்தாளரும் அவரைச் சார்ந்த வட்டத்தினரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் செய்கின்ற அரசியல் விளையாட்டுகளைக் கடந்து, அவர்களின் படைப்புகள் பேசுகின்ற அரசியல் என்ன என்பதுதான் இலக்கிய உலகில் முக்கியத்துவம் பெறும். எத்தனையோ இசங்கள் இருக்கின்றன. இசங்கள் இல்லாத இசம் என்கிற வகைமையை உருவாக்குகின்ற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களின் எழுத்து எங்கேயாவது தனது ஒப்பனையைக் கலைத்து, உண்மை உருவத்தைக் காட்டிவிடும். அவர்களின் படைப்பு யாருக்கான குரலாக இருக்கிறது என்பதும் அம்பலமாகிவிடும்.

d

குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் எழுத்துகள் வலிமையானவை. வலி மிகுந்தவை. அதிகாரத்தையும்-மேட்டிமைத்தனத்தையும் அசைத்துப் பார்ப்பவை. அப்படிப்பட்ட எழுத்துகளை, படைப்புகளாக ஏற்கமாட்டோம் என காலந்தோறும் ஒரு கும்பல் உலவிக்கொண்டிருக்கும். இந்த இலக்கிய நாட்டாண்மைகளின் தாதாத்தனத்தை மீறித்தான், ‘பிரச்சார எழுத்துகள்’ எனக் கொச்சைப்படுத்தப்பபடும் படைப்புகள், பாமர மக்கள் வரை சென்று சேர்ந்து, சமூகத்தில் அசைவை ஏற்படுத்தியிருக்கிறது.

படைப்புகளின் வழியே கலகக்குரல் எழுப்பும் எழுத்தாளர்களில் இமையம் தனக்கான தனி பாணியை கடைப்பிடிப்பவர். கோவேறு கழுதைகள் புதினத்தின் வாயிலாக இலக்கிய உலகில் முத்திரை பதித்தவர் இமையம். அவருடைய ‘பெத்தவன்’ கதை வெளியாகி பலத்த அதிர்வை ஏற்படுத்திய நிலையில்தான் அந்தக் கதையைப் போலவே ஆனது இளவரசன்-

திவ்யா காதல் விவகாரம். சாதிய உணர்வின் நுண்ணிய புள்ளிகளை அடித்தளமாக வைத்து, அதன் கோர முகத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுததியது பெத்தவன் கதை.

‘கட்சிக்காரன்’ என்கிற நீண்ட சிறுகதை, இமையத்தின் இன்னொரு சிறந்த படைப்பு. பொதுவெளிக்கு வரும்போதும், மேடைகளில் உரையாற்றும்போதும் கறுப்பு-சிவப்பு கரைவேட்டி கட்டி கலந்துகொள்ளும் வெளிப் படையான எழுத்தாளரான இமையம், தனது கட்சிக் காரன் சிறுகதையில், அந்த கறுப்பு-சிவப்பு கட்சியைச் சார்ந்த ஒரு தொண்டனின் உண்மை யான மனநிலையை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியிருப்பார். தனது உயிரினும் மேலான தலைவர் மீது அளவற்ற பாசம் கொண்ட உடன்பிறப்பான அந்தத் தொண்டனின் மகிழ்ச்சியான-நெருக்கடியான- விரக்தியான-நெகிழ்ச்சியான பலவித மனநிலைகளின் வழியாக, அரசியல் களத்தின் சூதாட்டத்தை கனக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் இமையத்தின் எழுத்து.

கொரோனா கால நெருக்கடியில் படைப் பிலக்கியங்கள் புத்தகமாவது தடைப்பட்டிருந்த நிலையிலும், இமையம் தனது புதிய படைப்பினை க்ரியா பதிப்பகத்தின் வழியாகக் கொண்டு வந்திருப்பது சிறப்புக்குரியது. ‘வாழ்க..வாழ்க’ என்கிற அவருடைய புதிய குறுநாவல், அரசியல்வாதிகள் தங்களின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதையும் அதனால் கட்சித் தொண்டர்களும் சாதாரண பொதுமக்களும் என்னென்ன நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதையும் விரிவாகவும் விறுவிறுவெனவும் சொல்கிறது, ‘வாழ்க.. வாழ்க’ செல்வாக்குமிக்க அந்தக் கட்சியின் தலைவி ஹெலிகாப்டரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிறார். மிகப் பெரிய மைதானத்தில் பகல் நேரப் பொதுக்கூட்டம் அது. லட்சக்கணக்கில் நாற்காலிகள் போடப் பட்டிருக்கின்றன. அதை நிரப்பியாக வேண்டிய பொறுப்பு கட்சி நிர்வாகிகளுக்கு இருக்கிறது. அதற்காக தனது பகுதியிலிருந்து ஆட்களைத் திரட்டும் வெங்கடேசப் பெருமாள் ஒவ்வொரு வீடாக ஆட்களைப் பிடிக்கிறார். பொதுக்கூட்ட நாற்காலிக்கு ஆள் சேர்க்காவிட்டால் கட்சியில் தனக்குள்ள நாற்காலி காலியாகிவிடும் என்ற பதற்றம் அவருக்கு.

தனது மகளின் குழந்தைக்கு குளிர்சுரம் வாட்டுகிறது. டாக்டரிடம் கூட்டிச் செல்ல வேண்டுமென்றால் காசு வேண்டும். மகள் தவிப்பதைப் பார்க்கிறார் ஆண்டாள்.

அப்போதுதான், கூட்டத்துக்கு ஆள் வேண்டும் என வீடு வீடாக வந்து உறவு முறை சொல்லி உரிமையோடு கூப்பிடுகிறார் வெங்கடேசப் பெருமாள். குறிப்பாக, பெண்கள்தான் டவுனில் நடக்கும் கூட்டத்திற்கு ஆர்வமாக வருவார்கள் என்பதால் அவர்களை அழைக்கிறார். காசு கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் பெற்றதும், மகளின் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு பயன்படுமே என்ற நம்பிக்கையுடன் வேனில் ஏறுகிறார் ஆண்டாள். அவரைப் போலவே, அந்த வேனில் திணிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்மணிக்கும் ஏதேனும் ஒரு தேவை-ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பிரம்மாண்டமான கூட்ட ஏற்பாடுகள், அலங்காரங்கள், ஆகாயத்தில் வட்டமடிக்கும் ஹெலிகாப்டர், மேடையிலும் பெரிய திரையிலும் தெரியும் குலுக்கல் நடனம் எல்லாமும் கிராமத்து மக்களை வாய்பிளக்க வைக்கிறது. பொட்டல் திடலில் மொட்டை வெயிலில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் இடம் பிடிப்பதில் தொடங்கி, தாகம் தணிப்பதற்கான தண்ணீர்பாக்கெட், பசி நேரத்து உணவுப் பொட்டலம், இயற்கை உபாதை எல்லாமும் அந்த எளிய மக்களை அல்லாட வைக்கிறது.

ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் நடைபெறும் தேர்தல் நேர பிரம்மாண்டங்களின் பின்னணியில் உள்ள சோகத்தை, வேதனையை, நெருக்கடியை, மனிதாபிமானமற்றத் தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இமையத்தின் வாழ்க.. வாழ்க.

அரசியல் சதுரங்கத்தில் எதிரெதிர் காய்கள் வெட்டப்படும் நிலையில், முதல் பலியாவது சிப்பாய்களான அப்பாவித் தொண்டர்கள் வரிசைதான் என்பதை ஒரு பொதுக்கூட்ட நிகழ்வின் வாயிலாக இயல்பான மொழியில் சொல்கிறது இமையத்தின் கதை.

“வெளிய போயிட்டு வரலாம் ஆயா’‘ காயத்ரி சொர்ணத்தைச் சிறுநீர் கழிப்பதற்காகக் கூப்பிட்டாள்.

“இருக்கிற கூட்டத்தில் எப்பிடிப் போவ முடியும்?’’

“போவலாம் வா.. அர்ஜண்டா வருது’’

“வெளியே போனா சனங்க நெரிச்சே கொன்னுடுவாங்க. பேசாம அப்படியே தரயில குந்திப் போயிடு என்று சொர்ணம் சொன்ன தும் “சீ.. ஒனக்கு வெக்கமில்ல என்று சொல்லி விட்டு தீபிகாவுடன் திரும்பப் போய் நாற்காலி யில் உட்கார்ந்து கொண்டாள் காயத்ரி.

“பத்து ஊர் நீட்டுக்கு கட்அவுட்டு பேனர்னு வச்சிருக்கானுவ. ஒரு ஊர் அளவுக்கு மேட போட்டுருக்கானுவ. தெருவே தெரியிற மாறி பெருசு பெருசா டி.வி.யக் கொண்டாந்து வச்சிருக்கானுவ. வேன வச்சி, பஸ்ஸ வச்சி, கார வெச்சி நாட்ல உள்ள சனங்களையெல்லாம் ஆடுமாடுவுள அள்ளியாந்து கொட்ற மாறி கொண்டாந்து குத்த வச்சிட்டானுவ. என்னா செஞ்சி என்னாத்துக்கு ஆச்சி? பொட்டச்சிவோ ஒதுங்கி நின்னு மூத்தரம் வுடுறதுக்கு ரவ எடமில்லையே. என்னா கட்சி பண்றானுவ?’’ என்று கட்சிக்காரர்களைத் திட்டினாள் சொர்ணம். அவளுக்குப் பதில் சொல்வது போல ஆண்டாள் சொன்னாள்.

“காலத் தூக்கி நடுத்தெருவுல நாய் மூத்தரம் வுடுற மாதிரி சண்ட எடுத்துல வேட்டியத் தூக்கி வுட்டுட்டுப் போற பயலுவதான? அவனுவளுக்கு எப்படித் தெரியும் பொட்டச்சியோட கஷ்டம்?’’

அப்போது ஒலிபெருக்கியில்..

“தங்கத் தலைவியே.. தர்மத் தலைவியே..

உலகெமல்லாம் போற்றும் உத்தமத் தலைவியே..

நாங்கள் வணங்கும் தெய்வமே.. தெய்வத்தின் தெய்வமே வாழ்க.. வாழ்க என்று பாட ஆரம்பித்தது.

-குறுநாவலின் மொத்த சாரத்தையும்- அதிகாரப் பசிமிக்க அரசியலின் அப்பட்டமான முகத்தையும் சொல்லிவிடுகின்றன இமையத்தின் இந்த சில வரிகள்.

uday011020
இதையும் படியுங்கள்
Subscribe