சிறப்பு அந்தஸ்தை இழந்து, தனக்கானக் கொடியையும் இழந்திருக்கிறது ஜம்மு-காஷ்மீர் மாநிலம். ஆனால், கர்நாடக மாநிலத்திற்கெனத் தனி கொடியை அங்குள்ள அமைப்புகள் வைத்துள்ளன. அதுபோல, தமிழ்நாட்டுக்கும் ஒரு கொடியை உருவாக்கும் முயற்சியில் இங்குள்ள அமைப்புகள் இறங்கின.

அந்தக் கொடியை ஏற்றுவதற்கு தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அனுமதிக்கவில்லை.

நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அரசே கொண்டாடும்போது, கொடியேற்றுவதற்கு தடை என்பதும், மீறினால் கைது நடவடிக்கை என்பதும் ஜனநாயக அரசியலின் இன்னொரு பக்கம்.

flags

Advertisment

வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற இந்தியாவில் 15 மாகாணங்கள் இருந்தன. பரம்பரை மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட பல சமஸ்தானங்கள் இருந்தன. பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் போன்ற பிற ஐரோப்பிய நாட்டினரால் ஆளப்பட்டு வந்த பிரதேசங்களும் இருந்தன. இவற்றுடன் விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதில் மிக முக்கியமானது நேரு ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மொழிவாரி மாகாணங்கள் பிரிப்புதான். இதில் நமது இன்றைய தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணம் மிக முக்கியமானதாகும்.

சென்னை ராஜதானி (Madras Province) என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம் 1801ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளரால் உருவாக்கப்பட்டது. அதில் குமரி மாவட்டம் நீங்கலான இன்றைய தமிழகம், ஹைதராபாத் சமஸ்தானம் நீங்கலான ஆந்திரா, கேரளாவின் மலபார், தென் கன்னடம், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் ஆகிய பகுதிகள் இணைந்திருந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர்.

இந்த மாகாணத்தில் இருந்த தெலுங்கு பேசும் பகுதியினர் தனி மாநிலக் கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் தனி மாநிலக் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இதன் காரணமாக, தனி மாநிலப் போராட்டம் வேகம் எடுத்ததன் விளைவாக 1953ல் ஆந்திரா தனி மாநிலமானது.

Advertisment

இதனையடுத்து, இந்தியாவின் பிற மாகாணங்களிலும் மொழிவாரியான மாநிலப் பிரிவினைக் கோரிக்கை வலுப்பெற்றது. பிரதமர் நேரு தொடக்கத்தில் இந்தியாவை பல பிரதேசங்களாகப் பிரிக்க முயற்சித்தார். எடுத்துக்காட்டாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்ற பகுதியாக உருவாக்க நினைத்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பல மாகாணங்களிலும் மொழிவாரியான பிரிவை வலியுறுத்திக் குரல்கள் ஒலித்தன. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, பீகாரிலிருந்து ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலம் 1936ஆம் ஆண்டிலேயே மொழிஅடிப்படையில் பிரிட்டி ஷாரால் தனி மாநிலமாகப் பிரிக்கப்ப்டடிருந்தது.

இந்நிலையில், நேரு ஆட்சிக்காலத்தில் மொழிவாரி யாக மாநிலங்களைப் பிரிப்பதற் காக மாநில மறுசீரமைப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஃபசல் அலி இருந்தார். உறுப்பினராக எச்.என்.குன்ஸ்ரூ, கே.எம்.பனிக்கர் ஆகியோர் இடம்பெற்றனர். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் இந்த ஆணையத்தின் மேற்பார்வையாளராக இருந்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநில எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு 1956ஆம் ஆண்டில் மொழிவாரியாகப் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பபட்டன.

சென்னை மாகாணத்திலிருந்து ஏற்கனவே பிரிந்திருந்த ஆந்திர மாநிலத்துடன், 1956ல் ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைக்கப்பட்டன. சென்னை மாகாணத்தின்(Madras State) எல்லைகள் சுருங்கின.

1956 நவம்பர் 1ஆம் நாள் கர்நாடக மாநிலம் உருவானது.

சென்னை மாகாணத்துடன் இருந்த தென் கன்னடம் அந்த மாநிலத்தில் இணைந்தது. அதுபோல சென்னை-மாகாணத்துடன் இருந்த மலபார் பகுதி, திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானம் உள்ளிட்டவை அடங்கிய கேரள மாநிலம் உருவானது.

lenin

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர்கள் நிறைந் திருந்த நாஞ்சில் நாட்டை (கன்னியாகுமரி மாவட்டம்) சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கானப் போராட்டமும் ஏற்கனவே நடைபெற்று வந்தன. துப்பாக்கிச் சூட்டுக்குத் தமிழர்கள் பலியானார்கள். பலர் சிறைப் பட்டார்கள். தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது தமிழகத்தின் தெற்கு எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. இந்த வெற்றியில் மார்ஷல் நேசமணி தலைமையிலான போராட்டக்காரர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியும் சென்னை மாகாணத்துடன் இணைந்தது.

அதே நேரத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து (முல்லைப்பெரியாறு அணை, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, கண்ணகி கோட்டம் அடங்கிய பகுதிகள்) ஒலித்த போராட்டக்குரல்கள் புறக்கணிக்கப் பட்டன. சென்னை மாகாணத்துடன் இணையவேண்டிய அந்தப் பகுதிகள் கேரளாவுக்குச் சொந்தமாயின. பாலக்காடு மாவட்டத்தை ஒட்டிய தமிழர் பகுதிகளின் நிலையும் இதுதான்.

அதுபோலவே, ஆந்திரா மாநிலத்துடன் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட தமிழர்கள் நிறைந்த பகுதிகள் இணைக்கப் பட்டன. திருப்பதியை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் எனத் தமிழர்கள் போராடிய நிலையில், ’மதராஸ் மனதே’ என சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க தெலுங்கர்கள் குரல் கொடுத்தனர். திருப்பதியை இழந்து, சென்னையைத் தக்க வைத்தது சென்னை மாகாணம். அதே நேரத்தில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை இழக்காமல் பாதுகாக்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையிலான அமைப்பினர் தீவிரமாக நடத்தி வெற்றி கண்டனர். கோலார், கொள்ளேகால் போன்ற தமிழர் பகுதிகள் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டன. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றுடன் சென்ற தமிழர் பகுதிகள் போக, மீதமிருப்பதுதான் இன்றைய தமிழகம்.

மதராஸ் ஸ்டேட் என்றழைப்பட்ட இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி காந்தியவாதி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டில் 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. 1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு, மதராஸ் ஸ்டேட் என்றழைக்கப்பட்ட இந்த மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. இதற்கானத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் அண்ணா நிறைவேற்றினார். தமிழ்நாடு என்று மூன்று முறை பேரவையில் அண்ணா சொல்ல, அத்தனை உறுப்பினர்களும் கட்சி மாறுபாடின்றி வாழ்க எனச் சொல்லித் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இழந்த பகுதிகள்-விட்டுக்கொடுத்த பகுதிகள் போக மிச்சமுள்ள நிலப்பரப்பைக் கொண்டுதான் தமிழ்நாடு சமூக நீதியிலும் சமூக நலத் திட்டங்களிலும் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உள்ளது.

1956ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்தியாவில் புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 1960ஆம் ஆண்டில் மகாராஷ்ட்ராவிலிருந்து குஜராத் தனி மாநிலமானது. 1966ஆம் ஆண்டில் பஞ்சாபிலிருந்து ஹரியானா பிரிக்கப்பட்டது. பின்னர் கோவா, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களும் மாநில அந்தஸ்துகளைப் பெற்றன.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் பெரிய மாநிலங்களில் நிர்வாகச் சிக்கல்கள் நீடித்தன. தங்கள் பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக குரல்கள் ஒலித்தபடியே இருந்தன. அதன்காரணமாக 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர், உத்தரபிரதேசத்திலிருந்து உத்தரகாண்ட், பீகாரிலிருந்து ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமான ஆந்திராவின் தெலங்கானா பகுதி மக்கள் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்திப் பல போராட்டங்களை நடத்தினர்.

அதன் விளைவாக 2013ஆம் ஆண்டில் தெலங்கானா தனி மாநிலமானது.

கர்நாடகாவிலிருந்து குடகு, மகாராஷ்ட்ராவிலிருந்து விதர்பா, உத்தர பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், புத்தல்கண்ட், மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களுக்கானக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மொழி எல்லைகளைக் கடந்தும் பல எல்லைகள் உருவாகியதன் விளைவே, புது மாநிலக் கோரிக்கைகளின் அடிப்படைக் காரணமாகும்.