சின்னகுத்தூசி அறக்கட்டளை விழாவும், நக்கீரனுடன் புனே ஸ்ரீபாலாஜி சொசைட்டி இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியின் பரிசளிப்பு விழாவும் ஒருசேர ஜூன் 15 அன்று காலை, அடையாறு முத்தமிழ்ப்பேரவை அரங்கில் கோலாகலமாக நடந்தது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சின்னகுத்தூசி மீது அன்புகொண்டோரும் இலக்கிய ஆர்வலர்களும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.
10.15 மணிக்கு விழா தொடங்க, தொடக்க நிகழ்ச்சி யாக சின்னகுத்தூசியார் குறித்த குறும்படம் திரையிடப்பட்டு அவையினரை நெகிழவைத்தது.
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், மின்னல் வரிகளுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நம் ஆசிரியர் நக்கீரன் கோபால் வரவேற்புரையாற்ற வந்தார். அரங்கமே அவர் உரையைக் கேட்க தியான அமைதி பூண்டது. சின்னகுத்தூசியார் பற்றிய மலரும் நினைவுகளோடு தன் உரையை நெகிழ்வாய்த் தொடங்கிய அவர்....
""அய்யா சின்னகுத்தூசி அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு இந்த நிகழ்ச்சி நம்மை அழைத்துச் செல்கிறது. அவருடனான நினைவுகள் நமக்கு வழிகாட்டுகின்றன. அவருடைய கடைசிக் காலத்தில் அவரை நக்கீரன் ஏற்றுக்கொண்டு பராமரித்தது என்பதைவிட, அவர் நக்கீரனின் பராமரிப்பை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் நமக்குப் பெருமை தரக்கூடியது. இதழியல் துறையில் பலருக்கும் வழிகாட்டிய அய்யா அவர்கள், என் குடும்பத்தில் ஒருவராக இருந்தார். எங்கள் குடும்பத்தில் எந்த ஒன்றுக்கும் அவரிடம்தான் ஆலோசனை கேட்போம். அவரைப் போன்ற ஒரு மாமனிதரை பார்க்கமுடியாது'' என்றார் அழுத்தமாக.
விழாவுக்குத் தலைமை ஏற்ற மூத்த வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் ""சின்னகுத்தூசி அவர்கள் கட்டுரை எழுதும்போது, ஒரு சிறிய விஷயம் கிடைத்தால்கூட அதை முன்னும் பின்னுமாக ஆராய்ந்து, அதை சிறப்பாக எழுதக்கூடியவர். பாமரருக்கு பாமரராகவும், எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர்களாகவும் தன் எழுத்தை கையாண்டவர். அவர் போன்ற பத்திரிகையாளரைப் பார்ப்பது அரிது'' என புகழாரம் சூட்டினார்.
இதைத் தொடர்ந்து சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருதுகள் வழ

இதைத் தொடர்ந்து சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருதுகள் வழங்கும் வைபவம் தொடங்கியது. விருதாளர்களுக்கு, புனே பாலாஜி சொசைட்டியின் சேர்மன் கர்னல் டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் கவிப்பேரரசு வைரமுத்து விருதுகளையும் பரிசுகளையும் பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் வழங்கினார்.
அதன்படி பொதுவுடைமை இயக்கக் கவிஞர் கே.ஜீவபாரதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. கட்டுரையாளர்கள் முனைவர் கே.செல்வகுமார் அரசியல் பிரிவிலும், கோ.ஒளிவண்ணன் சமூகம் -பண்பாட்டுப் பிரிவிலும், எஸ்.பால கணேஷ் பொருளாதாரப் பிரிவிலும் தேர்வானதால், அவர்களுக்கு சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருதும் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நக்கீரனுடன் புனே ஸ்ரீபாலாஜி சொசைட்டி இணைந்து, நம் "இனிய உதயத்தில்' நடத்திய கல்லூரி மாணவர்களுக்காக கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவக் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், கவிதைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர் ச.பிரபாகரனுக்கு, ரூ.1 லட்சம் ரூபாய் பரிசையும் "கவி இளவரசர்' பட்டத்தையும், கவிப்பேரரசு வைரமுத்து வழங்கினார். மேலும், இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நட்சத்திரக் கவிஞர்களாகத் தேர்வுசெய்யப்பட்ட மாணவக் கவிஞர்கள் மு.வீரசுபாஷ், மு.சங்கீதா, சே.ஸ்ரீதேவி, ஐ.மலர்க்கொடி, ஞா.சித்தநாதன், ர.ரஞ்சு, ந.ஸ்டாலின், செ.தண்டபாணித் தென்றல் ஆகிய எட்டு கவிஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
போட்டிகளை ஒருங்கிணைத்த ஆரூர் தமிழ்நாடன், ஈ.பா.பரமேஸ்வரன், சுப்பிரமணியன், மற்றும் சின்னகுத்தூசி ஆவணங்களைத் தொகுத்த நக்கீரன் ஒளிப்பதிவாளர் பெலிக்ஸ், பார்த்திபன் ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டனர்.
இதையடுத்து உரைவீச்சுகள் தொடர்ந்தது. விழாவிற்கு முன்னிலை வகித்த மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, தனது உரையில் ""பாரதிக்கு இருக்கிற ஆவேசம், பாரதிதாசனுக்கு இருக்கிற மிடுக்கு, கம்பதாசனுக்கு இருக்கிற படிப்பாற்றல், ச.து.சு.யோகிக்கு இருக்கிற உரை வளம், கண்ண தாசனுக்கு இருக்கிற கருத்துத் துணிவு ஆகிய அனைத்தையும் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து. ஒரு கவிஞனுக்கு, சமூக அவலத்தைப் பார்க்கிறபோதும், தாய்மொழிக்கு இழுக்கு நேர்கிறபோதும் ஆவேசம் வரவேண்டும். அது கவிப்பேரரசுக்கு உண்டு'' என்றார் உறுதியான குரலில்.
அடுத்து விழாவின் சிறப்பு விருந்தினரான, கர்னல் டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியன் தன் எழுச்சி உரையை கம்பீரமாகத் தொடங் கினார்.
""தமிழகத்தின் தலைமைக் கவிஞராக, திராவிட இயக்கத்தின் தலைமைக் கவிஞராகத் திகழ்பவர் நம் கவிப்பேரரசு. அவர் இங்கே வருகை தந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் விருதாளர்களுக்கும் தன் கையால் வழங்குவது சிறப்பானது. கவிப்பேரரசு நம் இனத்தின் அடையாளம். அவர் மீது கை வைக்க எவர் நினைத் தாலும் விடமாட்டோம். வீறுமிகும் தமிழினம் அவர் பின்னால் அணிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அய்யா சின்னகுத்தூசி மிகப்பெரிய அரசியல் அறிஞர். அவரது கட்டுரைகள் எல்லாமே அரசியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளாகத் திகழ்பவை. அவரது கட்டுரைகளில் நிறைய தகவல்கள் இருக்கும். அதிலே உண்மை இருக்கும். இன உணர்வு இருக்கும். அவருடைய கட்டுரைகளுக்காகவே நான் முரசொலியைப் படித்தேன். விரும்பிப் படித்தேன். அவர் என்றைக்கு எழுதுவதை நிறுத்தினாரோ அதிலிருந்து நான் படிப்பதில்லை. அவரைப்போல் எழுதுகிறவர்கள் குறைந்துவிட்டார்கள். இங்கே இருக்கும் மாணவர்களும் இளைஞர்களும் எழுதவேண்டும். நாளைய உலகம் இளைஞர்களான உங்கள் கைகளில் என்பதை மறந்துவிடாதீர்கள். நான் சாமானியமான ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எதையாவது சாதிக்க வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்தேன். பட்டாளத்தில் சேர்ந்தேன். அங்கும் நிறைய படித்தேன். நான் கல்லூரி தொடங்கியபோது கையில் காசில்லை. தன்னம்பிக்கை மட்டும்தான் இருந்தது. ஓயாது உழைத்தேன். இன்று கல்லூரிகளை நடத்துகிறேன். முயன்றால் முடியும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு. வெற்றியைத் தேடுங்கள்'' என்றார் ஏக உற்சாகமாக.
வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற கவிஞர் ஜீவபாரதி, ""சின்னகுத்தூசி என்மீது தனி பாசம் காட்டினார். அவர் ஒரு அற்புதமான மனிதர். அவருடன் பழகிய எழுத்தாளன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளமாட்டான். அதே சமயம், அவன் எழுத்து அவனுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்'' என்றார்..
நன்றியுரை ஆற்றிய செ.அருள்செல்வன், ""மதவாத சக்திகள், மனுநீதி, அர்த்த சாஸ்திரம் இவை மேலோங்கும் இந்தக் காலத்தில் சின்னகுத்தூசி அவர்களின் எழுத்துக்கள்தான் நமக்கான ஆயுதம். அவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். நம்மைப் போராளிகளாக ஆக்கிக்கொள்ளவேண்டிய காலம் இது'' என்றார் ஆவேசமாய்.
நிறைவாக தன் சிறப்புரையைத் தொடங்கிய கவிப்பேரரசு வைரமுத்து, அரசியலைத் தொடாமல் முழுக்க முழுக்க இலக்கிய உரையாகவே தன் உரையை ஆக்கிக்கொண்டார்.
""நம்முடைய கர்னல் டாக்டர் ஏ.பாலசுப்பிர மணியம் அவர்கள் இங்கே வந்திருக்கும் நேரத்தில், அவருடைய ஸ்ரீபாலாஜி சொசைட்டி கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ பாலாஜி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக ஆகியிருக்கிறது. கல்வி நிறுவனங்களின் சேர்மனாக இருந்த நம் கர்னல், இன்று பல்கலைக்கழக வேந்தராக உயர்ந்திருக் கிறார். அதற்கு நம் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்வோம்'' என்று வாழ்த்திவிட்டு, ""சின்னகுத்தூசி அவர்களுக்கான பெருமை என்னவென்று நான் யோசித்து யோசித்து கண்டுபிடித்த ஒரு செய்தி என்னவென்றால், அவர் பற்றற்றவர் என்பதுதான். ஒருவன் அறிவாளியாக இருப்பது பயிற்சியால் வந்துவிடும். சொற்பொழிவு என்பது நாப்பழக்கம். சித்திரம் என்பது கைப்பழக்கம். உறங்காமலிருப்பது படித்தலின் மேலிருக்கும் வேட்கை. ஆனால், பற்றற்றவனாக இருப்பது பயிற்சியினால் முடியாது. உயிர் ஏற்கனவே அதற்கு தயாரிக்கப்பட்டிருந்தால் ஒழிய ஒருவன் பற்றற்றவன் ஆகமுடியாது.
எனக்கு ஒரு ஐயப்பாடு என்றால் நான் சிலரைக் கேட்பேன். இன்றோ நான் ஐயம் கேட்கும் ஆட்களெல்லாம் காலத்தால் கவரப்பட்டு விட்டார்கள்;…தனிமைப்பட்டு நிற்கிறோம். எனக்கு என்ன சோகமென்றால், தமிழகத்தில் தண்ணீர்ப்பஞ்சம் என்கிறார்கள். இதைவிட இந்த நாட்டில் தமிழறிஞர்களுக்குப் பஞ்சம், பெரியமனிதப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மேடைக்குத் தலைமைதாங்க ஆளில்லை. நான் நக்கீரன் கோபாலை பாராட்டுகிறேன். காரணம், தன்னுடைய தந்தையைப் போல் அவர் சின்னகுத்தூசியை தாங்கிப் பிடித்தார். சின்னகுத்தூசிக்கு நல்லவேளை திருமணம் ஆகவில்லை. ஆகியிருந்தால்கூட நக்கீரன் கோபாலை போன்ற ஒரு பிள்ளை அவருக்கு கிடைப்பாரா என்பது சந்தேகம். கல்கிக்கு தொடர்ந்து விழா எடுக்க அவருக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது. சின்னகுத்தூசிக்கு எந்த ஒரு நிறுவனமும் இல்லை.
அவருக்கு நக்கீரன்கோபால் என்ற மாமனிதர் இருக்கிறார். அதனால் அவர் மறைந்து 8 வருடங்களுக்குப் பிறகும் அவர் கொண்டாடப் படுகிறார்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது அமைச்சரவைக் கூட்டம் 11:00 மணிக்கு முடிந்து ஒரு ஒன்றரை மணி நேரம் அவர் கையில் இருக்குமானால்... அவர் அதை செலவழிக்க விரும்பிய இடம், முரசொலி. காரணம் அங்கே இருக்கும் சின்னகுத்தூசியிடம் உரையாட வேண்டும் என்று விரும்புவார். அத்தகைய உரையாடல்கள் சிலவற்றில் நான் இருந்திருக்கிறேன். அப்போது அவர்கள் உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருப்பேன். காரணம் நான் பிறப்பதற்கு முன்பான அரசியலைப் பற்றி, உலகத்தைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். இங்கே கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு என் கையால் விருது கொடுத்ததை பெருமையாக எண்ணுகிறேன். மாணவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்... என்ன பரிசு வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல. போட்டியில் பங்கேற்கிறோம் என்பது முக்கியம். ஒரு கவிஞன் ஒரு போட்டியில் தன் கவிதைக்கு மூன்றாம் பரிசு வாங்கினான். அந்தக் கவிதை "செந்தமிழ் நாடென்னும் போதினிலே...' என்பது. அதை எழுதிய கவிஞன் பாரதி. மூன்றாம் பரிசு வாங்கிய பாரதி, காலத்தால் நிற்கிறான்.
இதையெல்லாம் மாணவர்கள் உணர்ந்து உற்சாகத்தோடு தங்கள் எழுத்துவேள்வியைத் தொடரவேண்டும்'' என மகிழ்வோடு வாழ்த்தினார்.
வருகை தந்தோருக்கு பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனால் இயற்கை உணவு விருந்தும் வழங்கப்பட்டது.
சின்னகுத்தூசி அறக்கட்டளை விழா, ஒரு கடும் கோடைப் பகலை இலக்கிய மழையால் குளிரவைத்துவிட்டது.
- சூர்யா
படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்