ss

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப்படும்.

-என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நீதிநெறியுடன் அரசைச் செலுத்துவதோடு, மக்களுக்குச் செய்யவேண்டியதைச் செய்து, அவர்களைக் காப்பாற்றுகிறவரே, மக்களால் உயர்ந்த தலைவராகக் கொண்டாடப்படுவார் என்பது இதன் பொருள்.

Advertisment

இந்த குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார், புதிதாகப் பொறுப் பேற்றிருக்கும் நம் தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின்.

கட்சி பேதங்களைக் கடந்தும், வயது பேதங்களைக் கடந்தும் தமிழக மக்கள், முதல்வர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மனதால் கொண்டாடிவருகிறார்கள். காரணம் நீதிவழியில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு செல்கிறது. அதனால் தான், ஒரு பக்கம் குற்றவாளிகளும், சாமியார் வேடமிட்டுப் பெண் களுக்கு வன்கொடுமை இழைத்தவர்களும், இணையதள மன்மதர் களும் சிறைச்சாலைக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நிவாரண உதவிகள், பெண்களுக்கு இலவசப் பேருந்து உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், தனிப்பட்ட வர்களின் குறைதீர்ப்புக் காட்சிகள், குழந்தைகளின் மனதறிந்தும் அவர்களுக்கான அன்பளிப்புகள் என்று அன்றாடம் நம் கண்ணெ திரே கருணை ததும்பும் காட்சிகள் அரங்கேறியபடியே இருக்கின்றன.

Advertisment

அதிகாரம் இருப்பதே சொகுசாக வாழவும், முடிந்தவரை வாரிக் குவிக்கவும், பொதுமக்களை இயன்றவரை வருத்தவும்தான் என்று, கடந்த ஆட்சியாளர்கள் ஆடிய ஆட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து மனதெல்லாம் தழும்பேறிக் கிடந்த மக்கள், இப்போதுதான் ஒத்தடமும் ஆறுதலும் தரும் புதிய காட்சிகளைப் பார்க்கிறார்கள்.

"இப்படி எல்லாம்கூட ஆளமுடியுமா? இவ்வளவு வேகமாக மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் சக்தி, ஆட்சி அதிகாரத்திற்கு உண்டா?' என திகைப்பில் இருக்கிறார்கள் மக்கள். இதற்குமுன் கூமுட்டைகள் ஆட்சியில் இருந்தபோது, கெட்டவை மட்டும்தானே அணிவகுத்து வந்தன. அரசு ஊழியர்கள் தொடங்கி விவசாயிகள் வரை போராடிக்கொண்டே இருந்தார்கள். அப்படிப்பட்ட இருண்ட நிலை இப்போது மாயாஜாலம்போல் மாறிவிட்டது. புதிய புதிய திட்டங்கள் வடிவெடுத்து வருகின்றன. மக்கள் திகைக்கும் அளவிற்கு சாதனைகள் கண்ணெதிரே அரங்கேறியபடியே இருக்கின்றன.

st

அந்த வரிசையில், ஊடகத்துறைக்கும் மகத்தான பரிசொன்றைத் தந்திருக்கிறார் முதல்வர். குழந்தையின் முகக்குறிப்பை அறிந்து சாலப் பரிந்தூட்டும் தாயைப்போல், தான் ஒரு பத்திரிகையாளரின் மகன் என்ற வகையில்.. யாரும் கோரிக்கை வைக்கும் முன்பாகவே, "கடந்த ஆட்சியில் பத்திரிகைகள் மீது போடப்பட்ட அத்தனை அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்படும்' என்று கடந்த 24-ஆம் தேதி சட்டமன்றத்திலேயே அறிவித்து, இத்தனை நாளாய் மயங்கிக் கிடந்த ஊடக சுதந்திரத்தின் முகத்தில் நீர்தெளித்து, அதன் மயக்கத்தை மெல்லக் கலைத்தி ருக்கிறார் ஸ்டாலின்.

இதற்கு நன்றி சொல்லாவிட்டால் எப்படி? தமிழர்களின் உயரிய பண்பே, நல்லவற்றைப் பாராட்டுவதும் உரிய நலப்பணி களுக்கு நன்றி தெரிவிப்பதும்தான்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் படாதபாடு பட்டது. நக்கீரன் மீது எண்ணற்ற வழக்குகளை புனைந்து, கொரோனாவை விடவும் கொடூரத்தை இழைத்தார்கள். நக்கீரனைப் போலவே இன்னும் பல பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் அவதூறு வழக்குகளைச் சந்தித்தன. கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் கேள்விக்குறியாக மாற்றப் பட்டது. இந்த நிலை மாறாதா? என்று எல்லோரும் ஏங்கி நின்ற நேரத்தில், இப்படியொரு நல்லாட்சி மலர்ந்திருக்கிறதே என்ற பூரிப்போடும், அதுவும் ஊடக சுதந்திரத்தை மதிக்கிற ஒரு பெருந்தன்மைமிக்க முதல்வர் கிடைத்துவிட்டாரே என்ற மகிழ்வோடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க நினைத்தோம். அந்த வகையில் "ஊடக சுதந்திரத்திற்கான கூட்டமைப்பின் சார்பில் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டோம். அதன்படி 27-ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டமைப்பின் தலைவர், அன்புச் சகோதரர் என்.ராம், தலைமையில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோரோடு நானும் சென்றேன்.

ஆட்சியாளர்களைக் குட்டுவது மட்டுமே ஊடக ஜனநாயகம் இல்லை. அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளைப் பாராட்டுவதும் ஊடகக் கடமையாகும். இதை நக்கீரன் உறுதியோடு கடைப்பிடித்து வருகிறது.

முகம் மலர வரவேற்ற முதல்வர், ஏறத்தாழ 45 நிமிடங்கள் எங்களோடு உரையாடினார். அந்த சந்திப்பின்போது மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும், எங்களிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் ஊடகத்தினரின் நலம் பேணப்படும் என்றும் அவர் உறுதிமொழியையும் கொடுத்தார்.

இப்போதைய தி.மு.க. அரசு எந்த அளவிற்கு, பத்திரிகை உள்ளிட்ட ஊடகச் செய்திகளுக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் முக்கியத்துவம் தருகிறது என்பதற்கு இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் 19-ல் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ்.-பென்னிக்ஸ் என்ற அப்பா, மகனை, அங்கிருந்த காவலர்கள் ஈவு இரக்கமின்றி மனிதாபிமானமே இல்லாமல் கொடூரமாக அடித்து விதவிதமாகச் சித்திரவதை செய்ததில், அவர்கள் அடுத்தடுத்து 22-ஆம் தேதி அநியாயமாக மரணத்தைத் தழுவினர். இதைவிடக்கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய அன்றைய எடப்பாடி அரசோ, குற்றவாளிகளைக் காப்பாற்றிவிடத் தீவிரமாகக் களமிறங்கியது.

அப்போது தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரதீபன், "ஜெயராஜ் பென்னிக்ஸை ஸ்டேசனுக்கு அழைத்தபோது, அவர்களாகத் தரையில் உருண்டு புரண்டதில் படுகாயமடைந்து இறந்துவிட்டனர்' என்று, சிறுவர்களுக்கான கதைபோல ஒன்றைச் சொன்னார்.

லோக்கல் அமைச்சரான கடம்பூர் ராஜு "அது லாக்கப் டெத்தே இல்லை. லாக்கப் டெத் என்றால் லாக்கப்பிலேயே இறந்திருக்க வேண்டும். இவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு உடல் நலக்குறை வால் இறந்தவர்கள்' என்று லாக்கப் டெத்துக்கு புது விளக்கவுரை கொடுத்தார். இதைத் தொடர்ந்து அன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ "முதலில் நான் டி.வி.யில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என்றார். அதன்பின், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத் திணறல் காரண மாகவும், ஏற்கனவே இருந்த உடல்நலப் பாதிப்பு காரணமாகவும் உயிரிழந்திருக்கிறார்கள்' என்று கூச்சமில்லாமல் சொன்னார்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே முதல்வராக இருந்த வர் இப்படி வழக்கைத் திசைதிருப்பும் வகையில் பேசினார்.

ஆனால் நக்கீரனோ, இது பச்சைப் படுகொலை.. மோசமான நரவேட்டை என்பதை அம்பலப்படுத்தியது. சாத்தான்குளம் காவல் நிலைய லாக்அப் அறையின் சுவரிலும், அங்கிருந்த டேபிளிலும் அந்த இருவரின் ரத்தம் தெறித்திருந்ததையும், அங்கிருந்த லத்திக் கம்புகளில் ரத்தக்கறை படிந்திருந்ததையும் ஆரம்பக் கட்ட விசாரணையிலேயே நக்கீரன் அம்பலப்படுத்தியது. யார் யார் தாக்குதல் நடத்தியது என்று உள் விசாரணை மூலம் பட்டியல் தந்தது. மேலும் காயத்தோடு கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜையும் பென்னிக்ஸையும் கொண்டு சென்றபோது, அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், அவர்களின் பின்புறம் உட்பட அவர்களின் உடலில் படுகாயம் அதிகமாக இருந்தது குறித்து, பச்சை இங்கால் எழுதிய காகிதக் குறிப்பையும், நக்கீரன் தேடிப்பிடித்து, சித்திரவதை நிகழ்ந்ததை அம்பலப்படுத்தியது.

அதுமட்டுமின்றி இருவரின் உடலையும் பரிசோதனை செய்தபோது, அவர்களின் பின்பக்கம் தோல் உரிக்கப்பட்டு, சதையே இல்லாமல் இருந்ததையும், உடம்பெங்கும் கடுமை யான காயங்கள் இருந்ததையும் பகிரங்கப்படுத்தியதோடு, போஸ்ட்மார்ட்டக் காட்சிகளின் வீடியோவையும் ரகசியமாக எடுத்து, நக்கீரன் காவல்துறையினரையே அதிரவைத்தது. அந்த உடல்கூறு ஆய்வின்போது உடனிருந்த ஜெயராஜின் மருமகன்கள், ஜெயராஜ்- பென்னிக்ஸுக்கு நேர்ந்த கொடூரத்தைக் கண்டு அழுது துடிக்கும் காட்சிகளும், உணர்வியல் சாட்சிகளாக அந்த வீடியோவில் இருந்தது அனைவரையும் கலங்கச்செய்தது.

இப்படி எல்லா வகையிலும் நக்கீரன் திரட்டித் தந்த ஆதாரங்கள்தான், குற்றவாளிகள் எளிதில் தப்பிக்கமுடியாதபடி செய்தன. அன்றைய ஆட்சியாளர்கள் அந்தக் கொலைகாரக் காக்கிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நிலையிலும், நக்கீரன் உண்மையை மிகுந்த போராட்டத்துக்கிடையே வெளிக்கொண்டு வந்தது. அதனால்தான் குற்றவாளிகள் உச்சநீதிமன்றம் போயும், இன்றுவரை அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சாத்தான் குள விவகாரத்தில் ஆட்சியாளர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததால், நீதியை நிலைநாட்ட நக்கீரன், வெகுவாகப் போராட வேண்டியிருந்தது.

இன்றும் அதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியது. ஆனால் குற்றவாளிகளுக்கு அரசுத் தரப்பு ஆதரவுக்கரம் நீட்டவில்லை.

கடந்த 22-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் இருக்கும் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், தனது நண்பர்கள் இருவரோடு மது அருந்திவிட்டு வரும்போது, பாப்பநாயக்கன்பட்டி செக்போஸ்ட்டில் அவர்களை வழிமறித்த போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். அப்போது முருகேசன் கோபமாகப் பேசிய பேச்சால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. பெரியசாமி என்பவர், லத்தியால் அவரை நடுரோட்டிலேயே கண்மண் தெரியாமல் தாக்க, முருகேசனுடன் வந்த அவரது நண்பர்கள் அவரை விட்டுவிடும்படி கெஞ்சியிருக்கிறார்கள்.

அப்போதும் எஸ்.ஐ. மனமிரங்கவில்லை. அந்தக் கொடூர தாக்குதலில் அப்படியே சாலையில் முருகேசன் மயங்கிவிழுந்துவிட்டார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தும், பலனில்லை. இந்த மிருகத்தனமான தாக்குதல் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி, மக்கள் மத்தியில் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.. மந்திரம் போட்டது போல் உடனடி நடவடிக்கைகளை சடசடவென எடுக்கத் தொடங்கியது அரசு. அன்று இரவே, முருகேசனை அடித்துக் கொன்ற எஸ்.ஐ. பெரியசாமி, கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு அப்போதே 10 லட்ச ரூபாய் நிவாரணம் என்ற அறிவிப்பையும் முதல்வர் அறிவித்தார். அதனால் இந்த விவகாரம், சட்ட ரீதியாகவும் நீதியை நோக்கி வேகமாக நகர்கிறது. இதற்குக் காரணம், செயல்திறன் மிக்க நம் முதல்வர். இந்த மின்னல்வேக நடவடிக்கையைக் கண்டு வியப்படைகிறோம். v இப்போது எடப்பாடி ஆட்சியில் இருந்திருந்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். முருகேசனைத் தாக்கிய எஸ்.ஐ. காப்பாற்றப்பட்டிருப்பார். முருகேசனே எஸ்.ஐ.யிடம் இருந்து லத்தி யைப் பிடிங்கி, தன்னைத் தானே தாக்கிக்கொண்டு உயிருக்குப் போராடினார் என்று எடப்பாடி கதை எழுதியிருப்பார். நக்கீரனின் புலனாய்வுக்கும் அதிக வேலை இருந்திருக்கும். நல்லவேளை, எடப்பாடிக் கும்பலிடம் இருந்து தமிழகம் தப்பித்துவிட்டது. அதனால் நீதிதேவதை நிமிர்ந்து உட்கார்ந்து விட்டாள்.

அதேபோல், எடப்பாடிக் கும்பல், தமிழகத்தை எரிமலைக்கு நடுவே விட்டுச் செல்வதுபோல், கொரோனா ஆபத்துக்கு நடுவே தமிழகத்தை நிறுத்தி விட்டுச் சென்றது. எங்கும் கொரோனா பீதி- மருத்துவமனையில் இடமில்லை என்ற கதறல்- ஆக்சிஜன் பற்றாக்குறை- மூச்சுத் திணறிய மரணங்கள்- கொரோனா நோயாளி களுக்குப் படுக்கை இல்லை என்ற கை விரிப்பு- மருத்துவமனை வாசல்கள்தோறும் ஆம்புலன்ஸுகளிலேயே நோயாளிகளின் காத்திருப்புகள்- தடுப்பூசி நெருக்கடிகள் -ஆம்புலன்ஸ்களிலேயே அரங்கேறிய மரணங்கள்- மயானங்களில் பிண வரிசை - எல்லாப் பக்கமும் மரண பீதி. இப்படி யொரு நிலையை எடப்பாடி டீம், உருவாக்கிய தோடு, தமிழகத்தின் நிதி ஆதாரத்தையும் முழுதாக வழித்துத் துடைத்துவிட்டுச் சென்று விட்டது. அதனால், நாடு என்ன ஆகப்போகிறதோ? தமிழகமே மயான மாக மாறிவிடுமோ? என்ற பயம் எல்லோரிடமும் இருந்தது.

இந்த நிலையில்தான் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறியது. ஸ்டாலின் முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். அவர் நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? ஆக்சிஜன் பற்றாக்குறையை எப்படி தீர்க்கப்போகிறார்? ஆயிரக்கணக்கில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை எப்படி அவர் ஏற்படுத்தப்போகிறார் என்று எல்லோரது விழிகளும் அரசின் மீதே இருந்தது. ஆனால், பதவி ஏற்ற நொடியிலிருந்தே முதல்வர் ஸ்டாலினும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு.வும் ஊனுறக்கம் மறந்து கடுமையாகக் களமிறங்கி, இயன்றதை எல்லாம் செய்தார்கள். அதிரடித் திட்டங்களைத் தீட்டினார்கள்.

மருத்துவர்களின் எண்ணிக்கையையும் கொரோனா வார்டுகளின் எண்ணிக்கையையும் பெருக்கினார்கள். தொழில்துறை மந்திரி தங்கம் தென்னரசு, நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் திரட்ட பெரும்பாடு பட்டார். ராணுவ விமானத்தை உதவிக்குக் கேட்டு, அதில் ஆக்ஸிஜனைக் கொண்டுவந்து பற்றாக்குறையைச் சரிசெய்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கே உடனடியாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தும் உயிரிழப்பு களைத் தவிர்த்த மின்னல்வேக செயல்பாடுகள் பாராட்டப் பட்டன. அவர்களின் சாகசங்களால், கொரோனாவின் கொடுங்கரங் களில் இருந்து தமிழகம் மின்னல் வேகத்தில் மீண்டுவந்திருக்கிறது.

ஒரு மாநில முதல்வரே, கொரோனா வார்டுக்குள் துணிச்ச லாகச் சென்று நோயாளிகளின் நலம் விசாரித்த அதிசயமும், இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில் மட்டும்தான் நடந்தது.

தி.,மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற மே 7-ஆம் தேதி, தமிழகத்தில் நாளொன்றுக்கான கொரோனாத் தொற்றின் எண்ணிக்கை, 36 ஆயிரம் பேரைத் தாண்டியிருந்தது. இந்தத் தலையங்கத்தை எழுதுகிற இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 4230 . படுக்கை பற்றாக்குறை இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.

மக்கள் மத்தியில் இருந்த மரண பீதியும் காணாமல் போய்விட்டது.

முதல்வரைப் போலவே அவரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் பங்குக்கு தங்கள் வீரியத்தைக் காட்டி வருகின்றனர்.

அறநிலயத்துறை அமைச்சரான சகோதரர் சேகர்பாபு, பதவி ஏற்ற வேகத்திலேயே, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 250 கோடி ரூபாய் மதிப்பிலான, வடபழனி கோயிலுக்குச் சொந்தமான 5.5. ஏக்கர் நிலத்தை அதிரடியாக மீட்டிருக்கிறார்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் தொடர்கிறது. அனைத்துச் சாதி அர்ச்சகர்களையும் கோயில் களில் நியமிக்க நடவடிக்கை எடுபோம் என்று சொன்னதோடு, பெண்களும் அர்ச்சகராக வழி செய்வோம் என்று கூறி, சனாதனக் கும்பலை மிரள வைத்திருக்கிறார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்ற உடனேயே, அன்புத் தம்பி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, நீட் தேர்வு கூடாது என்பதில் அரசு உறுதியான முடிவில் இருக்கிறது என்று அதிரடியாக அறிவித்து நிமிர வைத்திருக்கி றார். அதேபோல் ப்ளஸ் டூ தேர்வு எப்படி?

எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், வழி காட்டுதல் குழுவின் மூலம் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கிறார், அதன்படி, பிளஸ் டூ மாணவர்களுக்கு, 30: 20: 50 என்ற சதவீதக் கணக்கின் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்பட இருக்கிறது. அதாவது பிளஸ் டூ வகுப்புக்கு 30 மார்க், பிளஸ் 1 வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 20 மார்க், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 50 சதவீதம் என்று கணக்கில் கொள்ளப்பட இருக்கிறது. இது, அரசுப்பள்ளி மாணவர்களையும் கிராமப்புற மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மனித வளம் மற்றும் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பாரம்பரியம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். உண்மை யான நேர்மையான ஆன்மீகவாதி. அதனால்தான் அவர் பதவி யில் அமர்ந்ததுமே, வனநிலத்தை அபகரித்த கார்ப்பரேட் சாமியாரான ஜக்கிவாசுதேவுக்கு எதிராக வாள் சுழற்றினார். வனத்தை வளைத் தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று எச்சரித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் தன்னைப் பற்றியும் தனது ஆட்சியைப் பற்றியும் குறிப்பிடும்போது...

"நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா; பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்; முத்தமிழறி ஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்' என்ற வகையில் தன்னை வடிவ மைத்துக் கொண்டிருப்பதோடு, ஒரு சுயமரியாதை மிக்க பெருமைக் குரிய முதல்வராகவும் அவர் தனது பயணத்தைத் தொடங்கியிருக் கிறார். அதனால் அவரை தமிழக மக்களின் சார்பில் இதயம் மகிழ வாழ்த்துகிறோம்..