தமிழகம் கடந்தும் இந்திய அளவில் அறியப்பட்ட தமிழாளுமை, இந்திய ஆட்சிப் பணியாளர் வெ.இறையன்பு.1963 ஆம் ஆண்டு செப்டம்பர்- 16 அன்று சேலம் மாவட் டத்திலுள்ள காட்டூரில் வெங்கடாசலம் -பேபி சரோஜா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தவர். தேர்ந்த படிப்பாளி, சிறந்த ஆட்சிப் பணி அதிகாரி, கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாளர் என பன்முகத் திறனுடன் இயங்கி வருகிறவர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றிருக்கும் இவர்,சற்றும் சோர்வுறா மல் தொடர்ந்து இலக்கியக் களமாடி வருகிறார். 4 முதுகலைப் பட்டங்கள், 2 முனைவர் பட்டங்கள், ஒரு முது முனைவர் பட்டம் என படிப்பிலும் தனித் திறனைக் காட்டிய இவர், 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்த சிறப்புக்குரியவர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இறையன்பு அவர் களுடன் உரையாடுவதென்பது, ஒரு அறிவுசார் நூலகத்திலுள்ள பல்துறை சார்ந்த நூல்களையும் ஒருசேரப் படிப்பதற்கு ஒப்பானது.
இனி அவரது சிந்தனைகளோடு...
புத்தக வாசிப்பு எனும் விதை உங்களுக் குள் எப்போது, எப்படி, எவரின் வழியே விழுந்தது?
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாசிப்பே பொழுதுபோக்கு. அவ்வப்போது வானொலியில் வரும் நாடகங்களே எங்களுக்கு இளைப்பாறுதல். திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் தேன்கிண்ணத்திற்காகவும், நீங்கள் கேட்டவைக் காகவும் நாங்கள் தவமிருந்தோம். அதனால் கிடைத்த நூல்களையெல்லாம் படித்துமுடிப்பதில் பேரானந் தம் கொண்டோம்.
எங்கள் இல்லத்தில் இருக்கும் அனைவருக்குமே படிப்பில் ருசிவர பெற்றோரும் காரணம். குறிப்பிட்ட நேரத்தில் வீடே அமைதியான வாசிப்பில் ஆழும். பேச்சுப் போட்டிகளில் பெற்ற பரிசு நூல்களை விடுமுறை நாட்களில் இடைவிடாமல் வாசித்தோம். அவற்றை எங்களுக்குள் உரையாடி மகிழ்ந்தோம். வாசிப்பு தொடர்ந்தது, வாசிப்பின் அடர்த்தி மட்டும் வயதுக்கு ஏற்ப வளர்ந்தது.
புத்தக வாசிப்பில் ஆர்வத்தோடிருந்த தங்களுக்குள் எழுத வேண்டுமென்கிற ஆர்வம் எப்போது எழுந்தது?
இரண்டாம் வகுப்பிலேயே எழுதும் ஆர்வம் துளிர்த்தது. என் வயதுக்கேற்ற சிறுகதை ஒன்றை எழுதினேன். நாங்கள் மூன்றாம் வகுப்புவரை தமிழ் ஊடகத்திலேயே படித்ததால் பிழையின்றி எழுதப் பிரயாசை தேவைப்படவில்லை. எண்ணங்களைக் கோவையாக எழுத பள்ளிப் படிப்பே பக்கபலமானது. வகுப்பில் கொடுக்கப்படும் பொதுக் கட்டுரை களைச் சுயமாக எழுதி சமர்ப்பிக்கும் வழக்கம் ஆறாம் வகுப்பிலிருந்தே ஆரம்பமானது. ஏழாம் வகுப்பில் சந்தக் கவிதைகளை எழுதமுயன்றேன். "ஏடெடுத்து எழுதுகிறேன், ஏனென்றால் என்னை நாடெடுத்து நற்கவியாய் நல்குமென அல்ல' என்ற வரிகளோடு என் முதல் கவிதை முகிழ்த்தது. கல்லூரி வருகிறபோது கவிதைப் போட்டிகள் அதிகம் நடப்பதை அறிந்து அவற்றில் கலந்துகொண்டு எழுதும் ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டேன்.
கோவையில் மாதந்தோறும் நடக்கும் பூங்காக் கவியரங்கங்கள் எங்கள் பார்வையை விசாலப் படுத்தின. அவற்றில் வாசித்த கவிதைகள் சமூக அக்கறையை எங்களுக்குள் விதைத்தன. பேருந்தில் செல்லும்போது தோன்றுகிற சிந்தனைகளையெல் லாம் குறித்துவைக்கும் பழக்கம் அப்போதுதான் தொடங்கியது. நாங்கள் எங்கள் கல்லூரியைத் தாண்டி நண்பர்களைப் பெறவும், அவர்களிடமிருந்து இலக்கியத்தை அறியவும் கல்லூரிப் பருவம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அது எங்கள் வாசிப்பின் எல்லைகளை விரிவுபடுத்தியது.
யாருடைய படைப்புகள் உங்கள் மனத் திற்கு மிக நெருக்கமாக இருப்பதாக உணர்கிறீர்கள்?
இனிய படைப்புகள் அனைத்தையுமே இனம் பிரிக்காமல் நுகர்வதே சரியென்ற எண்ணத்தால் கிடைக்கிற மிகச் சிறந்த படைப்புகளையெல்லாம் வாசிக்க முயல்கிறேன். சில நேரங்களில் அது நண்பர்களின் பரிந்துரைகளாலும், சில நேரங்களில் சுயதேடலாலும் நிகழ்கிறது. பல்வேறு தலைப்புகளில் வாசிப்பதை நான் 2001 முதல் மேற்கொள்கிறேன். இலக்கியம், சரித்திரம், விஞ்ஞானம், விலங்கியல், மானுடவியல், உளவியல், தத்துவம், பயணம் போன்றவற்றில் வாசிக்கும் சிறகுகள் விரிந்த தால் உலகை உயரத்திலிருந்து உற்றுநோக்க முடிகிறது.
படைப்பு இலக்கியத்தில் பெரிதளவு நான் வாசித்ததில்லை. இப்போது ஓய்வு பெற்றிருப்பதால் வாசிக்க இயலும் எனக் கருதுகிறேன். எழுத முடிவெடுத்த நூலுக்கேற்றவாறு வாசிப்பு தொடர் கிறது. சிலவற்றை வாசித்து முடித்துவிட்டோம் என்று வரையறை செய்ய முடியாது. அவை வாழ் நாளெல்லாம் நம் நினைவில் இருக்க வேண்டியவை. அதனால் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் அவையே நெஞ்சுக்கு நெருக்கமானவை.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை இதில் எவ்வகை எழுத்தை எழுதும்போது மிகுந்த மனநிறைவை அடைகிறீர்கள்?
எழுதுகிற எழுத்து நமக்குள்ளேயே ஒரு ரசவாதம் நிகழ்த்தினால் அதுவே சிறந்த எழுத்து என நான் கருதுகிறேன். அந்த வகையில் எழுதப் பட்ட படைப்பின் செறிவைப் பொருத்தே மனநிறைவு ஏற்படுகிறது. சமயத்தில் நான் எழுதிய வைகறை வாழ்த்து வளமாக அமைந்தால்கூட நாளையே அது உற்சாகப்படுத்திவிடுவதுண்டு. இருந்தாலும் ஒரு படைப்பின் ஒட்டுமொத்த தன்மை (ர்ழ்ஞ்ஹய்ண்ஸ்ரீ ன்ய்ண்ற்ஹ்) புதினத்தில் மிகவும் முக்கியம். அதனால் புதினத்தை எழுதி முடிக்கும்போது உயர்ந்த மலையை ஏறி இறங்கிய ஓர் உன்னத உணர்வு உள்ளத்தில் உண்டாகிறது. மற்ற நூல்களை எழுதும்போது அது எளிதில் கிடைத்துவிடுவதில்லை.
விவசாயக் கல்லூரியில் படித்தவர் நீங்கள். இந்திய குடிமைப்பணி (யு.பி.எஸ்.சி.) தேர்வை எழுதும் முயற்சியில் ஈடுபட்டதைப் பற்றி?
கல்லூரிப் படிப்பில் இரண்டு பேராசிரியர் களும், சில மூத்த மாணவர்களும், வகுப்புத் தோழர் ஒருவரின் சகோதரரும் நான் அத்தேர்வை எழுதி னால் வெற்றி பெறலாம் என்று முன்மொழிந்தார்கள். அப்போது எனக்கு இலக்கியத்தின் மீதே அதிக நாட்டம். முழு நேர இலக்கியப் பணி செய்யவேண்டும் என்பதே இலக்காய் இருந்தது. ஆனால் பணிக்காகக் காத்திருந்த காலத்தில் என் வகுப்புத் தோழர் ஒருவர் நான் இல்லாத நேரத்தில் இல்லத்திற்கு வந்து நான் எழுதினால் வெற்றிபெறுவேன் என்று சொல்ல, அதை நோக்கிய பயணத்தில் நான் ஈடுபட நேர்ந்தது. எங்கள் கல்லூரியில் பல மாணவர்கள் அதற்காகப் படித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அது எனக்குப் பெரிய அவாவை ஏற்படுத்தவில்லை.
ராயக்கோட்டையில் வேளாண் அலுவலராகப் பணியாற்றியபோது, ஒருங்கிணைந்த தர்மபுரியில் பின்தங்கிய பகுதிகளை நேரடியாகப் பார்த்தபோது நிச்சயம் இத்தேர்வில் வெற்றிபெற வேண்டும், நம்மால் முடிந்த நற்பணிகள் ஆற்ற வேண்டும், நலிந்தோருக்காக நாம் உழைக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வைராக்கியம் என்னை அதை நோக்கித் தீவிரப்படுத்தியது. அண்மை யில் ஓசூர் புத்தக விழாவிற்குச் சென்றபோதுகூட திரும்பி வரும் வழியில் ராயக்கோட்டையில் நான் தங்கிய இடங்களையெல்லாம் பார்வையிட்டு 40 ஆண்டுகளுக்கு முன்னர் உணவருந்திய அதே கடையில் சிற்றுண்டியை முடித்து பழைய நினைவு களில் நீந்தினேன்.
35 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிப் பணியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எனும் உயர்பொறுப்பிலும் செயலாற்றி, தற்போது பணி ஓய்வு பெற்றிருக்கிறீர்கள். தாங்கள் செய்த பணிகளில் மிக சவாலான - மிக நிறைவான பணியென எதைச் சொல்வீர்கள்?
இந்த வினாவிற்குச் சற்று விரிவாக விடை யளிக்க விரும்புகிறேன்.
இந்திய ஆட்சிப் பணியைப் பொருத்தவரை நாம் எவ்வளவு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படுகிறோம் என்பதைப் பொருத்தே நம் பணிகள் சவாலானவையாக அமைகின்றன.
அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளைப் பார்க்கிற பணிகளைவிட களத்தில் நின்று காரியமாற்றும் பணிகள் முக்கியமானவை. அவை ஏற்படுத்துகின்ற தாக்கம் வாழ்நாள் முழுவதும் வழித்துணையாய் இருக்கும்.
நான் சாராட்சியராகப் பணியாற்றியபோதும், கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றியபோதும், மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோதும் ஆற்றிய களப்பணிகள் இன்றும் இதயத்தில் ஈரமாக எஞ்சியிருக்கின்றன.
களப்பணியில் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியா னது. நாம் ஆணை வழங்கி நம் கண் முன்னாலேயே புதர்மண்டிக் கிடந்த ஒரு வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதில் தெளிந்த நீர் ஓடும்போது நாமே அதில் வழிந் தோடுவது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். பள்ளிக் கட்டடம் ஒன்று புது மெருகுடன் கட்டப்பட்டு குழந்தைகள் அதில் குதூகலத்துடன் குடிபுகும் போது ஏற்படும் ஆனந்தம் அலாதியானது. வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கிற ஒரு குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய அது முன்னேறுவதைப் பார்க்கும்போது ஏற்படும் திருப்தி அளவிடற்கரியது. குண்டும் குழியுமாக இருக்கிற சாலை பளிங்குத்தரை போல போடப்படும்போது உண்டாகும் பரவசம் சொற்களைத் தாண்டியது. அதனால்தான் களப்பணி எப்போதும் களிப்பூட்டுவதாக இருக்கிறது.
சவாலான பணிகள் என்றால் 1995-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பு அலுவலராக இருந்தது. அனைத்துக் குழுக்களையும் ஒருங்கிணைத்து குறுகிய காலத்தில் அதை நடத்திமுடிப்பது அரும் பணியாக அமைந்தது. நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் அலுவலகத்திலிருந்து கிளம்பமுடியும். தலைமைச் செயலகத்தில் அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கும். வீட்டிற்குச் செல்ல இருளில் படிகளில் மெதுவாக இறங்கி கீழே வரவேண்டும். அந்த மாநாடு அரசு விழாக்களை எப்படி நடத்தவேண்டும் என்பதற்குக் கற்றுக் கொடுத்த பாடம் இப்போதும் கைக்குழல் விளக்காக இருக்கிறது.
ரசித்துச் செய்த இன்னொரு முக்கியமான பணி தஞ்சாவூரில் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை 2010-ஆம் ஆண்டு முன்னின்று நடத்தியது. தஞ்சையில் அவ்விழா சின்னப் பிசிறில்லாமல் நடந்து முடிந்தது. "தஞ்சை தாங்குமா?'
என்று நாளிதழ்கள் முதலில் தங்கள் கவலையை தலையங்கத்தில் தெரிவித்தன. ஆனால் விழா முடிந்த தும் அவை பாராட்டியதோடு துக்ளக் போன்ற வார இதழ்களும் ஒரு பக்கத்திற்கு அவ்விழாவை உயர்த்தி எழுதின. அதற்கு முக்கியக் காரணம் அவ்விழாவில் ஒரு கட்சிக்கொடிகூட எங்கேயும் பறக்க வில்லை. விரிவான ஏற்பாடுகள் அனைத்திற்கும் செய்யப்பட்டன. அன்றாடம் முதலமைச்சரிடம் கலந்து பேசும் வாய்ப்பும் இருந்தது. எனவே, ஒவ்வோர் அசைவும் திட்டமிட்டுத் தீர்மானிக்கப் பட்டன.
சுற்றுலா-பண்பாட்டுத் துறை மிகுந்த நிறைவைத் தந்த துறையாக இருந்தது. அதில் எண்ணற்ற புது முயற்சிகளை மேற்கொண்டோம். சுற்றுலா நட்பு வாகனங்கள், விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும், எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் போன்ற புதுமைகள் பயணிகளிடையே வரவேற் பைப் பெற்றன. தீவுத்திடல் ஆண்டு முழுவதும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது.
வனம் சுற்றுச்சூழல் துறையில் இருந்தபோது வனத்துறை மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பு அனுப்பி னேன். அப்போது அது நடக்கவில்லை. ஆனால் தலைமைச் செயலாளரானதும் அப்பணி செவ்வனே நிறைவேறியது. வனம் தொடர்பான பிரச்சினைகள் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
எல்லாப் பணிகளுக்கும் மேல் அதிக அனுபவத் தைத் தந்தது தலைமைச் செயலாளர் பணி. நாம் கடிதம் எழுதினால் அது களத்தில் நிறைவேறுவதைக் கண்ணெதிரே பார்க்கும் மகிழ்ச்சி அப்பணியில் கிடைத்தது. தண்டோரா ஒழிப்பு, பட்டியல் வகுப்பு ஊராட்சித் தலைவர்கள் உள்ளாட்சியில் கொடியேற்றுவது போன்ற சமூகப் பணிகளை நிறைவேற்றமுடிந்தது. அத்துடன் வளர்ச்சிப் பணிகளையும் முடுக்கிவிட முடிந்தது. ஒவ்வொரு நாளும் பணி முடிந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் இல்லம் திரும்பும்போது இரண்டு நாள் பணிகளை ஒரே நாளில் செய்த திருப்தி ஏற்பட்டது.
எந்த நேரத்தில், எந்த சூழலில் எழுதுவது உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்?
அன்றாட அலுவலகப் பணி முடிந்ததும் கிடைக்கிற ஓய்வு நேரத்தில்தான் எழுத முடியும் என்பதால் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் நேர்வுகள் நிகழவில்லை. பெரும்பாலும் வார இறுதிகளும், விடியற்பொழுதுகளுமே எழுதுவதற்கான இருக்கையை எனக்கு எடுத்துக் கொடுத்தன. நல்ல மனநிலை வேண்டும் என்றெல்லாம் நான் பிடிவாதம் பிடித்ததில்லை. அலுவலகக் கடிதங்களைக்கூட அழகாக எழுத வேண்டும், அவை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று நான் முனைந்ததுண்டு. தலைமைச் செயலாளராக இருக்கும்போது புதிதாகச் சேரும் மாவட்ட ஆட்சியர்கள் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்று 12 பக்கங்களுக்கு ஒரு கடிதத்தை வரைந்து அனுப்பினேன். கொடிநாள் வசூலுக்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு சிப்பாய்களின் சீரிய பணியை விளக்கி மடல் எழுதினேன். இவை யெல்லாம் நமக்காகக் காத்திருக்காத பணிகள். எழுதுவதற்கென்று நான் பெரிதாக இதுவரை பிரயத்தனப்பட்டதில்லை.
தமிழ் நூல்களை மட்டுமின்றி, உலக இலக்கிய நூல்களையும் விரும்பிப் படிப்பவர் நீங்கள். உங்களைக் கவர்ந்த உலக இலக்கியம் எது?
நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியதைப்போல சிறந்தவையெல்லாம் பிடித்தவையாக இருக்கின்றன. நிறைய வாசிப்பதற்கு இதுநாள்வரை பணி இடம் கொடுக்கவில்லை. கிடைத்த நேரத்தில் நல்ல புத்தகங் களாக வாசித்திருக்கிறேன். அதேபோன்று எழுதுகிற தொடருக்கு ஏற்ப புத்தகங்களைத் திரட்டி நூல்களை உருவாக்கியிருக்கிறேன். சின்ன வயதில் படித்த தலைசிறந்த நூல்களை இப்போது படிக்கிறபோது அவை முற்றிலும் வேறு பொருள் தருவதாகத் தோன்றுகிறது. வாசிப்பு நம் வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. கவர்ந்தவற்றைக் கூறினால் மிகப் பெரிய பட்டியலே உருவாகி விடும். எது சிறந் தது என விவாதிக்காமல் வாசிப்பதே நம் அறிவை அகலப்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
செய்தி - மக்கள் தொடர்புத்துறை இயக்கு நராக இருந்த சமயத்தில் தமிழக அரசு வெளியிட்ட 'தமிழரசு' மாத இதழை, ஓர் இலக்கிய இதழுக்கான அடர்த்தியோடு கொண்டுவரும் எண்ணம் உண்டானது குறித்து 1997-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக நான் செய்தித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டபோது இரண்டு முக்கியப் பங்களிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று, ஒவ்வொரு வாரமும் வெளியான ‘அரசு செய்தி.‘ அப்போதைய தேவையாக அது இருந்தது. இரண்டாவது பங்களிப்பு, இலக்கிய மலர். நல்ல இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் மகத்தான பணியும் அரசுக்கு உண்டு என்கிற எண்ணம் இருந்ததால் அது உருவானது. அனைத்துவிதமான எழுத்தாளர்களிடமிருந்தும் படைப்புகளைக் கோரினோம். சிலர் அனுப்பமறுத்தனர். சிலர் அடுத்த நாளே அளித்தனர். அதன் விளம்பரங்களைக்கூட வித்தியாசமாக உலகப்புகழ் வாய்ந்த ஓவியங் களுக்குக்கீழ் அச்சிட்டு அழகுபடுத்தினோம். இலக்கிய மலரை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தலைமைச் செயலாளராக இருக்கும்போது வலியுறுத்தியதன் அடிப்படையில் அண்மையில் ஒன்று வெளியானது. அதில் பெரிய அளவில் என் பங்களிப்பு எதுவுமில்லை. இலக்கிய மலரின் தொடர்ச்சிதான் எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம் வழங்கும் அரசின் நடவடிக்கையும்.
தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக் கான பரிசினை "வாய்க்கால் மீன்கள்' எனும் கவிதை நூலுக்காகப் பெற்றிருக்கும் நீங்கள், பிறகு கவிதைத்தளத்தில் தொடர்ந்து இயங்கா மல் போனது ஏன்?
வாய்க்கால் மீன்களைத் தொடர்ந்து "வைகை மீன்கள்' என்கிற ஒரு நீள்கவிதையையும் எழுதி னேன். இலக்கிய வடிவத்தை நாம் தேர்ந்தெடுப்ப தில்லை. அதுதான் அவ்வப்போது தேவைக்கேற்ப நம்மைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
எழுத்தில் மட்டுமின்றி, பேச்சிலும் ஆழமான சிந்தனைகளை விதைத்து வருபவர் நீங்கள். இரண்டு தளங்களிலும் வெற்றிக்கொடி நாட்ட முடிந்தது எப்படி?
எதுவும் திட்டமிட்ட முயற்சி அல்ல. வருகிறது. வருகிற வரை வரட்டும். ஆனால், நான் வெற்றிக்கொடி நாட்டியதாக ஒருபோதும் நினைப்ப தில்லை. அணுவளவுகூட சாதனை செய்ததாக நான் எண்ணவில்லை. கடந்து செல்லவேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது.
எந்த மேடையில் ஏறினாலும் சிறுகுறிப்பும் வைத்துக்கொள்ளாமல் நினைவடுக்கில் இருந்தே கவிதைகளை, மேற்கோள்களை, சம்பவங்களை, ஆண்டு, தேதிவாரியாகச் சரியாகச் சொல்கிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?
குறிப்புகள் வைத்துக்கொண்டால் பேச்சு தடுமாறும். மேலும் சூழலுக்கு ஏற்ப பேச்சைக் கட்ட மைக்க முடியாமல் போய்விடும். முன்னால் பேசியவர் களுடைய உரையையும் என் அனுபவங்களோடு தொடர்புபடுத்தி பேசினால்தான் அரங்கம் உயிர்ப்பு டன் இருக்கும். சங்கிலித்தொடராகச் சிந்தனைகளை மனத்தயாரிப்புச் செய்வதால் அது சாத்தியமாகிறது. மருத்துவக் கருத்தரங்கங்கள், குறிப்பிட்ட தலைப்பில் பேசும் நேர்வுகள் ஆகியவற்றிற்காக சில உரைகளை முன்கூட்டித் தெளிவாகத் தயாரிப்பதும் அவசியம்.
அது அவையைப் பொருத்தும், சூழலைப் பொருத் தும் அமைகிறது.
நீங்கள் எழுதிய நூல்களில் உங்களுக்குப் பிடித்தமான நூலாக எதைச் சொல்வீர்கள்?
இதுவரை எழுதிய நூல்கள் அனைத்துமே பிடித்தமான நூலை எழுதும் முயற்சிதான். என்றா வது எழுதிவிடுவேன் என்று நம்புகிறேன்.
தலைமைச் செயலாளராக இருந்தபோது பள்ளிகளில் "வாசிப்பு நேரம்' (ரீடிங் டைம்) என்ற ஒரு செயல்பாட்டை முன்னெடுக்கச் சொல்லி, நீங்கள் ஒரு கடிதம் எழுதினீர்கள். பல பள்ளிகளில் இன்றைக்கு "வாசிப்பு நேரம்' செயல்பட்டு வருகிறது. இந்தச் சிந்தனை உருவாக என்ன காரணம்..?
நிறைய காரணங்கள் உண்டு. முதலாவதாக, வாசிப்பின் மூலம் மாணவர்களின் மொழிவளம் செறிவடையும். இரண்டாவதாக, வாசிப்பைப்போல பயனுள்ள பொழுதாக்கம் எதுவுமில்லை.
மூன்றாவதாக, அவர்களுடைய சிந்தனைகள் விரிவடையும். அதனால் செயற்கையாகச் சமூகம் திணித்த பிரிவினைகள் கரைந்து விடும். நான்காவதாக, அவர்களுக்குள் உயர்ந்த இலக்கு உதயமாகும். ஐந்தாவதாக, கவனச்சிதறல் குறையும். ஆறாவதாக, அவர்கள் படிப்பும் மேம்படும். ஏழாவதாக, வாசிப்பின் மூலம் அவர்கள் தங்கள் படைப்புத் திறனையும், உருவாக்கும் திறனையும், தீர்க்கமாகச் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்திக் கொள்வார்கள். எட்டாவதாக, அவர்களுடைய தகவல்தொடர்பு விரிவடையும். ஒன்பதாவதாக, ஆசிரியர்களும் படிக்கத் தொடங்குவார்கள். பத்தாவதாக, வாசிப் பைப்போல ஒரு மனிதனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவது வேறெதுவுமில்லை.
நூற்றுக்கணக்கான நூல்களை நீங்கள் எழுதியிருந்தாலும், ஒரு வாசகனாக உங்களின் எழுத்தில் என்னை மிகவும் ஈர்த்தவை "இலக்கியத்தில் மேலாண்மை', "மூளைக்குள் சுற்றுலா', "என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?" ஆகிய மூன்று நூல்கள். இந்த நூல்கள் உருவாக எது பின்புலமாக இருந்தது..?
வர்த்தக மேலாண்மையில் முனைவர் பட்டத் திற்காக நான் செய்த ஆய்வின் தலைப்பு "திருக்குறளும் மனிதவள மேலாண்மையும்' என்பதே.
அப்போதே இலக்கியங்களில் இருக்கும் மேலாண் மைக் கருத்துகளைத் தொகுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
மூளை குறித்து ஆறேழு ஆண்டுகளாக வாசிக்க நேர்ந்தது. அப்போது புதிய புதிய தகவல்கள் ஏற்கெனவே நம்பப்பட்ட தகவல்களைத் தகர்த்து எறிவதைப் பார்க்க முடிந்தது. மூளையின் செயல் பாடுகளை எளிய மொழியில் எழுதினால் என்ன என்ற எண்ணம் பிறந்தது. அதனடிப்படையில் மூளைக்குள் சுற்றுலா உருவானது. உடல்நலத்தைப் பராமரிப்பதைப்போல மூளையின் நலத்தையும் பராமரிக்கும் வழிமுறைகளை, மூளைக்கான உணவுப் பொருட்களை, மூளைக்கான பயிற்சிகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும், காலை உணவு - உறக்கம் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற உந்துதலே அந்நூலை எழுதத் தூண்டியது. முதலில் அது சாத்தியமா என்று பலரும் என்னிடம் கேட்க அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் ஒரு தேநீர் மேசைப் புத்தகமாக அதைத் தயாரித்தேன்.
தகவல் பரிமாற்றம் என்பது நீர்த்துப்போவதை இன்று காண முடிகிறது. நாங்கள் பள்ளியில் படித்த போது ஆண்டுக்கு ஐம்பது, அறுபது பேச்சுப் போட்டிகள் நடக்கும். இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டன. அதோடு மாணவர்களின் ஆர்வமும் குறைந்துவிட்டது. தனிப்பட்ட உரையாட லில்கூட ஒரு பண்பாடு இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை.
நான் இரண்டாம் வகுப்பிலிருந்து மேடையில் பேசத் தொடங்கினேன். ஏறத்தாழ 53 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் மேடைப்பேச்சு எப்படி யெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். சர்வதேசக் கருத்தரங்கங்களிலிருந்து தலைமைச் செயலாளர்கள் மாநாடுவரை பலவற்றில் கலந்துகொண்டு பங்களித்த அனுபவம் எனக்கு உண்டு. இருபதுக்கும் மேற்பட்ட பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றியிருக்கிறேன்.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் தொலைபேசி உரையாடல் முதல் தொடர் சொற் பொழிவு வரை எவ்வாறு தகவல் பரிமாற்றத்தைக் கட்டமைப்பது என்று கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று கருதினேன். அதனடிப்படையில் எழுதப்பட்டதுதான் ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது.’ இந்த நூல்கள் உங்களை ஈர்த்திருப்பதற்கு நான் காரணம் அல்ல, நீங்கள்தான் காரணம்.
ஒவ்வொரு மேடையிலும் கூறியது கூறாமல், புதுப்புது கருத்துக்களை, செய்தி களைச் சொல்கிறீர்கள். இதற்காக எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொள்கிறீர்கள்..?
முதலில் என் உரை எனக்கே அலுப்புத் தட்டுவ தாக அமையக் கூடாது. நாம்தான் நம் சொற்பொழி வின் முதல் விமர்சகர் என்பதை மறக்கக் கூடாது.
நம்முடைய மூளை சோம்பேறி மூளை. அது பழக்கப்பட்ட பாதையில் பயணப்படுவதே பாதுகாப்பானது என்று எண்ணக்கூடியது. ஆனால் ஏற்கெனவே சென்ற பாதையில் சென்றால் திகில் இருக்காது, சுவாரசியம் இருக்காது. அதனால் புதிய தலைப்புகளில் பேசுவதன் மூலமாகவும், புதிய கருத்துகளை உரைப்பதன் மூலமாகவும் எனக்குள் நிகழ்கிற சுய தேடல் பேரின்பமாக இருக்கிறது.
அதை நான் இழக்கச் சம்மதிப்பதில்லை. இரண்டு இடங்களில் ஒரே தலைப்பில் நான் நடுவராக இருந்து பங்கேற்ற பட்டிமண்டபத்தில் வெவ்வேறு தீர்ப்புகளைச் சொல்லி அந்த நிகழ்ச்சியைச் சுவையாக்கிக் கொண்டேன். புதிய முயற்சிகளைச் செய்கிறபோது மூளை சுறுசுறுப்பாகி விடுகிறது.
புத்தகங்களே இல்லாதுபோனால் இந்தப் பூமி எப்படியிருக்கும்..?
புத்தகங்களின் எடையால்தான் இந்த பூமிக் காகிதம் பறந்து போய்விடாமல் இருக்கிறது.
திரைப்படப் பாடலாசிரியராகவும் இருந்து பாடல்களையும் எழுதியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?
கல்லூரிப் பருவத்திலிருந்தே சில பாடல்களில் மெட்டுக்கு ஏற்ப அதே சூழலுக்குத் தகுந்தவாறு பாட்டு எழுதிய பழக்கம் உண்டு. அது சொற்களைப் பயன்படுத்துவதற்குக் கற்றுத் தந்தது. சுற்றுலாத் துறையில் இருக்கும்போது அலைபேசிகளில் அழைப்பு ஒலியாக ஒலிக்க ‘கலைகளின் பிறப்பிடம் தமிழ்நாடு, அழகுகள் இருப்பிடம் தமிழ்நாடு’ என்கிற குறும்பாடலை எழுதினேன்.
மாமல்லபுரம் நாட்டிய விழாவிற்காக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழ்ப் பண் பாட்டை வெளிநாட்டிலிருந்து வருகிற பார்வை யாளர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஆதிகால இசையிலிருந்து பாரதி யார் பாடல்வரை ஒரு சித்திரத்தை நடனங்களுடன் கூடிய வகையில் வசனம் எழுதி தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டேன். அது நல்ல வரவேற் பைப் பெற்றது. அதில் சில பாடல்களை எழுத பரத்வாஜ் நேர்த்தியாக இசையமைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.
"புத்திரன்' என்கிற படத்திற்காக ஒரு பாடலை எழுதினேன். பிறகு "பியூட்டி' என்கிற படத்திற்காக இரண்டு பாடல்கள். இரண்டு படங்களுமே மக்களுக்கு அதிகம் பரிச்சயமில்லை. அண்மையில் தலைமைச் செயலாளராக இருக்கும்போது அயலகத் தமிழர் கள் தினத்திற்காக "தாயால் பிறந்தோம் தமிழால் வளர்ந்தோம்' என்ற பாடலை எழுதினேன். மதன்பாப் இசை அமைத்தார். நான் எழுதிய பாடல் இசையோடு இனிமையாக ஒலிக்கும்போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படவே செய்கிறது.
தங்கள் சகோதரரும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி (வெ.திருப்புகழ்), சகோதரி ஓர் எழுத்தாளர், பேச்சாளர் (வெ.இன்சுவை). இப்படி குடும்பத்திலுள்ள அனைவருமே சமூகப் பணியிலும், இலக்கியத் தளத்திலும் இயங்கு வது ரொம்பவும் அபூர்வம். இது எப்படி நிகழ்ந் தது..?
நாங்கள் சிறு வயதில் குடியிருந்த பகுதி அதிகம் யாரும் குடியேறாத பகுதி. எதிரே இருந்த மாட்டு வண்டி ஓட்டுபவர்கள், கட்டடப் பணியாளர்கள் ஆகியோரே எங்களுக்கு அந்நியோன்யம். அவர்கள் எந்தச் சிக்கலாக இருந்தாலும் எங்கள் தந்தை யைத்தான் தேடி வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை களில் அதை அவர் தீர்த்து வைப்பார். அவர்களிடம் எங்கள் குடும்பமே அனுசரணையாக நடக்கும்.
அப்போது மின்விளக்கு இல்லை. அதிக பாம்புகள் புழக்கம். நாங்கள் கைவிளக்கோடு வெளியே வந்தால் அக்கறையோடு அவர்கள் ஓடிவந்து விடுவார்கள். எளிய மக்களின் மீது ஏற்பட்ட அன்பும், கனிவும் இப்போதும் தொடர்கிறது. யாராவது வழி கேட்டு வந்தால் நாங்கள் அவர்களை அந்த வீடுவரை அழைத்துச்சென்று விடவேண்டும் என் தந்தை அனுப்பி வைப்பார்.
நான் ஏற்கெனவே கூறியதைப்போல நாங்கள் அனைவருமே நிறைய வாசிப்போம். சின்ன வயதிலேயே சூடு பறக்க விவாதம் நிகழ்த்துவோம். அது இப்போதும் பேச்சாகவும், எழுத்தாகவும் தொடர்கிறது.
இன்றைய இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்துபோக என்ன காரணம்..?
வாசிக்கவில்லை என்று சொல்ல முடியாது. வாசிக்கிப்படுபவை மாறியிருக்கின்றன. சுருக்க மாகவும், அடர்த்தியாகவும் வாசிக்கிறார்கள். தேவைக்கேற்ப வாசிக்கிறார்கள். பணிக்காக நிறையப் படிக்கிறார்கள். பொதுச் செய்திகளில் அவர்களுக்கு விருப்பம் குறைகிறது. மாநகர மாணவர்கள் பலர் தமிழில் வாசிப்பதே இல்லை. ஒரு பக்கம் அதிதீவிர வாசகர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் தேடித் தேடிப் படிக்கிறார்கள். எப்போது நாம் மாணவர்களுக்குள் உரையாடலையும் விவாதத் தையும் முறையாகத் தொடங்கி வைக்கவேண்டும். அப்போது அவர்கள் நிறைய வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இளைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி இளைய தலைமுறையினர் பலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பங்காற்றுகிறார்கள்.
வித்தியாசமான கதைக்களன்களைத் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்கள். சமூகப் பார்வையை மட்டுமில் லாமல் அக உணர்வுப் பார்வையையும் அவர்கள் படைப்புகளில் காணமுடிகிறது.
"இனிய உதயம்' இதழ் உங்களின் பார்வையில்..?
அதன் ஆசிரியராக திரு. மா. முருகன் இருந்ததி லிருந்தே நான் கவனித்து வருகிறேன். உலக இலக்கியங் களையும், பிறமொழி இலக்கியங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் ஒப்பற்ற முயற்சியை அது தொடர்ந்து மேற்கொண்டு வருவது பாராட்டத் தக்கது. சிறந்த நேர்காணல்கள், அழகான அச்சமைப்பு, நேர்த்தியான வடிவமைப்பு என்று அளவில பெரிதாக வெளிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. நம் தமிழ்நாட்டுப் படைப்புகளும் உலக இலக்கிய வரிசையில் இடம்பெறுவதற்கான முழு முயற்சி என்று இதை நாம் கருத வேண்டும்.