ன்னைப் பற்றிய வரலாற்றுப் புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் மலரும் நினைவுகளோடு ரசித்துப் பார்த்தார். அங்கே அமைக்கப்பட்டிருந்த மிசாக்கால சிறைக் கொட்டடிக்குள் சற்று நேரம் அமர்ந்து அந்த நாட்களின் துயரத்தை அசைபோட்டார். அங்கிருந்த குறிப்பேட்டில் பார்வையாளர்கள் எழுதிய குறிப்புகளை எல்லாம் ஆற அமரப் படித்தார்.

அவருடைய புதல்வரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் ஒருமுறை அந்தப் புகைப்படங்கள் மூலம் படித்துவிட்டு, பிரமிப்பாக இருக்கிறது என்று மகிழ்ந்தார். ஸ்டாலினின் துணைவியார் துர்க்கா, தன் குடும்பத்தினருடன் வந்து ஒவ்வொரு படத்தையும் நெகிழ்வோடு ரசித்தார். முதல்வரின் சகோதரி செல்வி, அந்தப் புகைப்படங்களில் ஸ்டாலின் பட்டுவந்த காயங்களின் குரலைக் கேட்டு கண்ணீர் வடித்தபடியே, கண்காட்சியைச் சுற்றிவந்தார்.

stalin

Advertisment

இதே கண்காட்சி மதுரை நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் அமைக்கப்பட்ட போது, நடிகர் வடிவேலு, அதைப் பார்த்துவிட்டு, “முதல்வரின் படங்களைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் தாங்கி முதல்வர் ஸ்டாலின் உயர்ந்துள்ளார். தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு அவரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு படங்களும் வரலாறைச் சொல்கிறது” என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்.

இப்படி கலைஞர் குடும்பத்தினர் தொடங்கி பொதுமக்கள், மாணவ- மாணவியர் என சகல தரப்பினரையும் ஈர்த்திருக்கிறது முதல்வர் ஸ்டாலின் வரலாற்றைச் சொல்லும் அந்தப் புகைப்படக் கண்காட்சி. இது முதலில் சென்னையில்தான் கடந்த மாதம் நடத்தப்பட்டது.

அது என்ன கண்காட்சி? யார் அமைத்தது?

முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இதை திரைப்பட நடிகரும் கவிஞருமான ஜோமல்லூரி நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தார்.

இந்தக் கண்காட்சியை பிப்ரவரி 28-ஆம் தேதி திறந்து வைத்த மக்கள் நீதி மய்யத் தலைவரான நடிகர் கமல் “ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்து ஸ்டாலின் செய்த சாதனைகளையும், அதனால் அவர் சந்தித்த சவால்களையும் இந்த புகைப்படக் கண்காட்சி விளக்குகிறது” என்று பெருமிதக் குரலில் பாராட்டிவிட்டுச் சென்றார்.

கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு, திராவிட இயக்க வரலாறாகவும், தமிழகத்தின் அரசியல் வரலாறாகவும் ஃப்ரேம் ஃப்ரேமாக கண்முன் விரிந்தன. இளமைக்கால கலைஞரின் குடும்பப் படத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும், பால் முகத்தோடு கைகூப்பும் ஸ்டாலினின் பிஞ்சுப் பருவ புகைப்படம் எடுத்த எடுப்பிலேயே மனதைக் கொள்ளையடித்தது.

stalin

Advertisment

முரசொலி மாறனுடன் சிறுவனாய், பின்னர் மீசைகூட முளைக்காத மாணவராய், அரும்பு மீசை இளைஞராய், இளைஞரணி வீரராய், மேயராய், துணை முதல்வராய், தமிழ்நாட்டின் நல்லாட்சி நாயகராய், அவருடைய படிப்படியான வளர்ச்சியை கேமரா மொழியில் அத்தனை படங்களும் உணர்த்தின.

நின்றபடியும், சைக்கிள் ஓட்டும்படியும் அமைக்கப்பட்டிருக்கும் அச்சு அசலான ஸ்டாலினின் சிலைகள் முன், பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில், ஸ்டாலின் கெத்தாக மாட்டு வண்டி ஓட்டுகிறார், ரயில் மறியல் போராட்டத்துக்கு கொடியுடன் அணிவகுத்து நடைபோடுகிறார், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் வரிந்துகட்டி களப்பணி ஆற்றுகிறார், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்தியைத் தார்பூசி அழிக்கிறார், பல்வேறு போராட்டங்களில் கைதாகிறார். மேடைகளில் முழக்கமிடுகிறார், கேமராவில் கோணம் பார்க்கிறார். முதல்வராகப் பதவி ஏற்கிறார். மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு நடுவில் சிரிக்கிறார். மாணவலி மாணவிகளின் உற்சாகத்துக்கு மத்தியில் மலர் முகம் காட்டுகிறார். மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறார். கொரோனா வார்டுகளுக்குள் கவச உடையுடன் நுழைகிறார். சாலையோர மக்களிடம் இறங்கிவந்து மனு வாங்குகிறார்... இப்படி அவரது ஒவ்வொரு செயல்பாடுகளையும் படங்கள் மறக்காமல் ஒப்பித்தன.

ஸ்டாலின் திருமணக்காட்சியும், அவர் துணைவியார் அவருக்கு வாஞ்சையாய் உணவு பரிமாறும் காட்சியும், அவர்களின் கையில், கைக் குழந்தையாக தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் உதயநிதி அமர்ந்திருக்கும் காட்சியும், முதல்வரின் இல்லற முத்திரையாகத் திகழ்ந்தன.

ss

திருமணமான ஐந்தே மாதத்தில் புது மாப்பிள்ளையான ஸ்டாலின் மிசாவில் கைதானபோது, கலைஞரின் மகன் என்பதற்காகவே, சிறைக் காவலர்கள் அவர் மீது கொடும் தாக்குதலை நடத்தினர். பதறவைக்கும் அந்த நிமிடங்களைக் கண்முன் நிறுத்தும் வகையில், அவர் அடைபட்டிருந்த 9 ஆம் எண் சிறைக் கொட்டடியும் அங்கு அமைக்கப்பட்டிருக்க, உள்ளே தரையில் அமர்ந்த நிலையில் இருக்கும் ஸ்டாலினின் மார்பில் ஒரு காவலர் ஷு காலால் எட்டி உதைப்பது போன்ற காட்சி தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கிறது. அதேபோல் அவரை லத்தியால் காவலர்கள் தாக்குகிற காட்சிகளும் அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டிருக்க, வலி தாள முடியாத ஸ்டாலின் மூச்சிரைப்போடு அலறுவது போன்ற ஓசைகளும் அங்கே பின்னணியில் ஒலித்து நம்மை திகிலில் ஆழ்த்தின. வலி நிரம்பிய அவரின் வரலாற்றை உணர்த்தும் இந்த சிறைக்கொட்டடி முன், பார்வையாளர்கள் பலரும் உருக்கத்தோடு படம் எடுத்துக்கொண்டதைப் பார்க்க முடிந்தது.

உதயநிதி பிறந்தபோது, இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டிய வழக்கில் கைதான கலைஞர், சென்னை மத்திய சிறையில் அடைபட்டிருந்தார். தனக்குப் பேரன் பிறந்ததைக் கேள்விப்பட்ட அவர், 28.11.1977 அன்று, தன் மகனான ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்... “1953-ல் நான் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று இருந்தபோது, நீ கைக்குழந்தை. பார்க்க வருபவர்களோடு, குழந்தையாக நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (1976), சென்னை சிறையில் மிசாக் கைதியாக நீ இருந்தபோது, நான் உன்னைக் காண வந்துகொண்டிருந்தேன். இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமை யானவை பார்த்தாயா?”என்று எழுதிய எழுத்துக்களும் பெருமிதமாய் நெகிழவைத்தன.

சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்தபோது முதல்வர் நிவாரண நிதியாக தி.மு.க. சார்பில் 2005 ஜனவரி 10 ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெ.வை கோட்டையில் சந்தித்து தி.மு.க. சார்பில் 21 லட்ச ரூபாயை ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஒருவரை ஒருவர் புன்னகையோடு வணங்கி நலம் விசாரித்துக் கொள்ளும் அந்த ஆச்சரிய நொடியும், அங்கே புகைப் படமாக வைக்கப்பட்டிருந்தது. பலரும் அங்கே வியப்போடு நின்று நிதானித்துவிட்டுச் செல்வதையும் நம்மால் காணமுடிந்தது.

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்களுடன் ஸ்டாலின் இருக்கும் படங்கள் கண்களைப் பெருமிதப் படுத்துகின்றன. அதேபோல் அகில இந்திய அரசியல் பிரபலங்களான சோனியா காந்தி, ராகுல், மன்மோகன்சிங், சரத்பவார், மம்தா, சீதாராம் யெச்சூரி, மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடனும் காட்சிதந்து, இந்தியாவின் எதிர்காலப் புன்னகையைச் சிந்தினார் ஸ்டாலின்.

கலைஞரின் காவிரி மருத்துவமனை நாட்களின் பதிவுகளும் இடம்பெற்று கலங்க வைக்கின்றன. அப்போது மருத்துவமனைக்கு வந்த பிரபலங்கள் பலரது புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

நாம் சென்ற நேரத்தில், அமைச்சர் உதயநிதி வருவ தாகத் தகவல் வர, அமைச்சர் சேகர்பாபு அவரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தார். கண்காட்சியைச் சுற்றிப் பார்த்த அவர், ‘எல்லாம் பிரமிப்பா இருக்கு. சேகர்பாபு அண்ணன், எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கிறவர். இதையும் நல்லாவே ஏற்பாடு செய்திருக்கி றார். தலைவரின் வரலாற்றைச் சொல்லிக்கொடுக்கும் வகுப்பறைபோல் இந்தக் கண்காட்சி இருக்கிறது. மாணவ- மாணவிகள் வந்துக்கிட்டே இருக்காங்க. மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் உற்சாகமாக. கண்காட்சியைப் பார்வையிட வந்திருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், உதயநிதியைக் கட்டித்தழுவி வாழ்த்தினார்.

stalin

அப்போது அங்கு வந்த நடிகர் பார்த்திபன், முதல்வர் ஸ்டாலினின் பெரிய சைஸ் ஓவியமென்றை உதயநிதியிடம் வழங்கினார். கண்காட்சியைச் சுற்றிப் பார்த்த பார்த்திபன் “மகத்தான வரலாறு. பார்க்கும்போது எமோஷனாக இருக்கிறது” என்று நெகிந்தார்.

இந்தக் கண்காட்சிக்கு தி.மு.க.வினரோடு பொதுமக்களும் மாணவ மாணவிகளும் திரள் திரளாக வந்துகொண்டே இருக்கின்றனர். நாம் இருந்த நேரத்தில் மண்ணடி மியாஸ் பள்ளி இஸ்லாமிய மாணவியரும், சி.எஸ்.ஐ. ஆண்டர்சன் பள்ளி மாணவர்களும் வரிசையில் வந்து கண்காட்சியைக் கண்டு களித்தனர். அப்போது ஆண்டர்சன் பள்ளி மாணவியான ஹரிணி ’கண்கட்சியைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பா சிறையில் அவரை போலீஸ் நெஞ்சில் உதைக்கிற காட்சியைப் பார்த்ததும் பயந்துட்டேன். எவ்வளவு கஷ்டங்களை நம் சி.எம். சந்திச்சிருக்கார்ன்னு எங்களுக்குப் புரியுது. ஹி ஈஸ் கிரேட்” என்றார். இதுபோன்ற தாக்கங்கள் கண்காட்சியின் வெற்றியை உணர்த்துகின்றன.

இந்தக் கண்காட்சியில் 174 படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் பேசுகின்றன. சொல்லப் போனால் திராவிய இயக்க வரலாற்றில் முதல்வர் ஸ்டாலினின் ஒட்டுமொத்த நாட்களும், பின்னிப் பிணைந்திருப்பது குறித்து உரையாற்றுகின்றன என்றே சொல்லலாம்.

மொத்தத்தில், 50, 60 ஆண்டுகளாக நாம் அவரோடு சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வை, இந்தக் கண்காட்சி ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

திராவிட இயக்க வரலாற்றை நினைவுகூரும் இந்தக் கண்காட்சி, ஸ்டாலின் என்ற ஆளுமை திடுமென உருவாகிவிடவில்லை என்பதை அழுத்த மாக உணர்த்தியது.

அங்கு வைக்கப்பட்டவை புகைப்படங்கள் அல்ல;

வரலாற்றின் குரல்.

-நாடன்