இந்தியாவின் அரசியல் தலைவர்களில், இந்தியாவின் இன்று வரையிலான முதல்வர்களில் வரலாறு அவரையே முதல்வராக முன்மொழிகிறது. மிகச்சிறந்த தனி மனிதனாகவும் மிக உன்னதமான பொது மனிதனாகவும் தன் இறுதி மூச்சுவரை சமுதாயத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து காட்டிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை குறித்த ஓர் ஆவணப் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குநர் எஸ்.ராஜகுமாரன்.
கிடைத்த ஆவணங்களின்படி தொகுத்து உருவாக்கப்பட்ட ஒரு எளிய முயற்சி தான் இந்த ஆவணப்படம் என்று தொடங்குகிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் அரசியல் காரணங்களாலும் வாழ்வியல் தேவைகளுக்காகவும் ஆந்திராவில் இருந்து பல்வேறு இனக் குழுவினர் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.
ஆந்திராவின் நெல்லூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பண்டுரெட்டியார் என்னும் இனத்தவர் தமிழ்நாட்டின் தென்னாற்காடு பகுதியில் குடியேறினர்.
அப்படிக் குடியிருந்த விவசாயிகளான ரெட்டியார்கள் மரபில் வந்த முத்துராம ரெட்டியார் அரங்கநாயகி அம்மாள் தம்பதியினரின் புதல்வராக 1895ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி ராமசாமி பிறந்தார்.
சிதம்பரம் திருக்கோயில் அமையப் பெற்ற அன்றைய புகழ்மிகு மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்தின் வட கோடியில் அமைந்துள்ள முக்கிய நகரம் கேடிலம் . அதிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கிளியனூர் வழியாக புதுச்சேரி செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ஊரின் பெயர் ஓமந்தூர்.
ஓமந்தூராரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் பதிவு கூட இல்லை.
பாடப்புத்தகத்தில் அவரைப் பற்றிய ஒரு சிறு பதிவு கூட இல்லை. அவர் பதவி விலகியபோது நிகழ்ச்சியான தலையங்கம் எழுதிய விடுதலை நாளிதழில் பெரியாரால் எழுதி இடம் பெற்ற வரிகள் இவை 'யோக்கியனுக்கு அரசியல் அதிகாரத்திற்கு அதிகாரத்தில் இடமில்லை'.
அப்படிப் பொதுவாழ்வில் நேர்மையாகவும் தூய்மையாகவும் வாழ்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றிய ஆவணப்படம் என்ன சொல்கிறது?
அவர் சென்னை மாகாணத்தை ஆண்டது என்னவோ இரண்டு ஆண்டுகள்தான். ஆனால் அதற்குள் பல்லாண்டுகள் ஆட்சி செய்பவர்கள் செய்யவேண்டிய சாதனை எல்லாம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். தலித்துகள் ஆலய நுழைவு, இந்து அறநிலையத்துறை உருவாக்கியது, முழு மதுவிலக்கு கொண்டு வந்தது போன்ற எண்ணற்ற திட்டங்களையும் சீர்திருத்தங்களை நிறைவேற்றியவர்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். தானே தேடி வந்த முதல்வர் பதவியைக் கூட உடனே அவர் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தவர், தயங்கியவர்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஒருவர் முதல்வர் பதவியை அலங்கரிப்பது என்பது எளிதில் கிடைத்துவிடாது.
அவரது சுயநலமற்ற உழைப்பும் போராட்டக் குணமும் தான் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியைத் தேடி கொடுத்திருக்கிறது என்பதை இந்த ஆவணப்படம் அழகாகச் சொல்கிறது.
சுதந்திர இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையில் கொடியை ஏற்றியவர் அவர்தான்.
இரண்டு ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளம் அமைத்தவர்.
ஆரம்பத்தில் அவர் அமைத்துக் கொடுத்த ஓடு பாதையில் தான் இந்த மாநிலத்தின் வளர்ச்சி வாகனம் விரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
தன்னலம் கருதாத அந்தக் தலைவர் தன் சாதனைகளுக்குச் சாட்சிகளை வைத்து விட்டுச் செல்லவில்லை.
சரியான ஆதாரங்களும் சாட்சிகளும் வரலாறுகளும் இல்லாது போதாமை நிலவிய போதும் கூட படத்தின் இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் சிரமப்பட்டு விவரங்களைத் தேடியும் சாட்சிகளைப் பார்த்தும் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்தும் பல இடங்களுக்கு அலைந்து சென்று உறவினர் நண்பர்கள் என்று பலரையும் சந்தித்தும் அவரைப்பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்கி இருக்கிறார் .
ஓமந்தூரார் பிறந்த ஊர் ,படித்த பள்ளி ,பழகியவர்கள் காட்சிகளாக விரிவது மட்டுமல்ல தற்கால அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர் கள், பத்திரிகையாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். படத்தை பார்க்கும் போது இப்படியெல்லாம் ஒரு தலைவர் இருந்திருக் கிறார் என்கிற வியப்பு நமக்குள் விரிந்து கொண்டே போகிறது.படத்தில் தொழில்நுட்ப போதாமையை உணர முடிகிறது. அதற்கு பட்ஜெட் காரணமாக இருக்கலாம். எளிமையான மனிதர் ஓமந்தூராருக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்ய ஆட்கள் மட்டும் கிடைப்பார்களா என்ன?
அரிதிலும் அரிதாக வாழ்ந்தவர்கள் தங்கள் வரலாற்றை எழுதி வைத்து விட்டுச் செல்வதில்லை; காலத்தின் கரங்களில் கொடுத்து விட்டுச் செல்கிறார்கள் .அதை நாம்தான் எடுத்து ஆவண மாக்கவேண்டும் .அதைச் செய்திருக்கிறார் எஸ். ராஜகுமாரன். முயற்சியின் நோக்கத்திற்காக அவரைப் பாராட்டலாம்.
-அபூர்வன்