உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்க ளின் கூட்டமைப்பு, சிக்காகோ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய பத்தாவது உலகத்தமிழ் மாநாடு சிறப் பாக நடந்தேறியது. அமெரிக்கவாழ் தமிழர்களின் தன்னார்வ நிறுவனங்கள் இப்படி ஒரு மாநாட்டை நடத்தியிருப்பது ஒரு சாதனைதான். தமிழக அரசு தங்கள் பங்கை அளித்ததும், மைய அரசு விளிம்பளவில் இசைவு அளித்த தும் ஒரு வகையில் ஆறுதல் தந்ததாக விழாக்குழுவினர் தகவல் தெரிவித்த னர். இதுபோன்ற மாபெரும் விழா வினை நடத்துவது அரிய சாதனை என்றாலும், அதற்கான உழைப் பின் பின்னணி ஒரு அசுர வேகத் தைத்தான் காட்டியது. ஆனாலும் கடைசி நிமிடம் வரை விழாவில் பங்கேற்போருக்குத் தக்க நேரத்தில் உடனுக்குடன் செய்தி தெரிவிப்பதி லும், பயண ஏற்பாட்டிலும் சில சிக்கல் இருந்திருப்பதை நம்மால் உணர முடிந்தது.
"கீழடி நம் தாய்மடி', அகழாய்வு, மாநாட்டின் மையப்பொருளாக அமைந் தது குறிப்பிடத்தக்கது. தமிழரின் தொன்மையை முன்னெடுத்துச் செல்லும்படியான அகழாய்வுக் கருத்துகளும், அங்குக் கண்டெடுக்கப் பட்ட பழம்பொருள்களின் மாதிரி களும் கண்காட்சியில் இடம்பெற்றன. இது மாநாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாய் அமைந்தது. சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மை குறித்துப் பேசப்பட்ட கட்டுரைகள் சிறப்பிடம் பெற்றன. சிந்துவெளிச்சின்னங்கள் பற்றிய கட்டுரை குறிப்பிடும்படி அமைந் தது. குமரிக்கண்டம் பற்றிய கட்டுரை யும் சுட்டிக்காட்டத்தகுந்தது.
விழாவில் பொதுமக்களைக் கவரும் வகையில் நிகழ்ந்த நிகழ்ச்சி களுக்குக் கூடிய கூட்டமோ மூவாயிரத்துக்கும் மேல்! ஆயின் கருத்தரங்க நிகழ்விற்குக் காது கொடுத்தோர் சிலரே!! கருத்தரங்கு அறைகள் நிரம்பியதாகத் தெரியவில்லை. இது விழாக் குழுவினரின் தவறு இல்லை. ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் எங்கு நடப்பினும் இதுதான் நிலை. கருத்தரங்க அறையைக் காட்டிலும் வெளியில் கூடி அளவளாவிய கூட்டம் கூடுதலான எண்ணிக்கையில் இருந்தது.
விழாவின் தொடக்க நாளன்று பேசியோர் அனைவரும் உலகத் தமிழர் ஒன்றுபட்டிருக்கும் நிலையை எடுத்துரைத்தனர். தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு எப்படி எடுத்துச்செல்லவேண்டும் என்ற வகையில் நிகழ்ச்சிகளின் தொடக்கம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்டிமன்றம், கவியரங்கம், இசை நிகழ்ச்சி இவற்றிற்குப் பொது மக்களிடையே வரவேற்பு இருக்கும்தானே! விழா தொடர்பான மாபெரும் பேரணி ஒரு வகையில் பிரம்மாண்டம். மெய்சிலிர்ப்பு. இந்தப் பேரணி உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கான அடையாளமாகக் கருதப்பட வேண்டும். உலகம் முழுவதும் தமிழர் பரவியிருக்கும் பெருமையைப் பறைசாற்றும்படியான பேரணி.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் ஆய்வு தொடர்பான கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஆய்வரங்கத்தின் மையக்கருத்தினை முனைவர் பென்சர் வெல்சு அவர்களும், இலக்கியப் பார்வையில் ஆய்வரங்கத்தின் செயல்முறைகளை முனைவர் சார்சு யார்டு அவர்களும் நிகழ்த்தினார்கள். சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டின் நிலைகள் குறித்து முனைவர் வசந்த் சி.சிண்டே நிகழ்த்தினார். ஆய்வரங்குகளில் சுமார் எழுபதுக்கு மேற்பட்ட கட்டுரைகள் காணொலிக் காட்சி உரை களாக நிகழ்ந்தன. ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் பெரும்பான்மையானவை தமிழின் தொன்மை வரலாறு, தொல்லியல், அகழாய்வு, சுவடி, கல்வெட்டு பற்றியன. அவை எண்ணிக்கையில் இருபதுக்கு மேல். தொன்மை இலக்கியம் பற்றியவை பத்து, இலக்கணம் பற்றியவை எட்டு, ஒப்பாய்வு தொடர்பானவை ஆறு, குறள் தொடர்பானவை ஏழு, கலை சம்பந்தப்பட்டவை ஏழு, கணினி பற்றியவை இரண்டு, தற்கால இலக்கியம் மற்றும் நாட்டுப்புற இலக்கியம் ஆகியவை தலா ஒன்று, பொதுவான ஆய்வுக் கட்டுரைகள் என்ற வகை யில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
தொன்மைத்தமிழ்ப் பண்பாடு குறித்து ப.மருதநாயகத்தின் கட்டுரை தனித்தன்மை மிக்கதாய் அமைந்திருந்தது. தொல்காப்பியம் குறித்த கட்டுரைகள் சுட்டிக்காட்டத்தக்கன. தொல்காப்பியத்தை ஒப்பியல் நோக்கில் வாசித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கதாய் இருந்தன. வி. முருகன், உலகச் செவ்வியல் பார்வையில் தொல்காப்பியம் பற்றிய பேச்சு குறிப்பிடத்தகுந்தது. இராம. குருநாதன் தொல்காப்பியக் கவிதையியலை சமசுகிருத, கிரேக்கக் கவிதையியல்களோடு ஒப்பிட்டுக் காணொலி வாயிலாக எடுத்துரைத்தார். சேது பாண்டியன் மலையாள இலக்கண நூலான லீலா திலகத்தில் தொல் காப்பியத்தின் தாக்கம் பற்றி உரைநிகழ்த்தி னார். தொல் காப்பிய விதி யின்படி கணினியில் கூட்டுச் சொற்கள் - பிரிப்பதற்கான கூறுகள் பற்றிய கட்டுரை புதிய அணுகுமுறையாக அமைந் திருந்தது. மதன் கார்த்திக்கோடு இணைந்து எழுதப்பட்ட இக்கட்டுரை தமிழாய்வுக்குப் புதிய வரவு. திலகவதி தொல்காப்பியத்தில் கலைக்கூறுகள் குறித்த பார்வையை அவையினரிடம் பகிர்ந்து கொண்டார். சூசை தொல் காப்பிய இலக்கணக் கலைச்சொல் மொழிநிலை என்பது பற்றிக் கட்டுரை வாசித்தார். அடியார்க்கு நல்லாரின் தொல்காப்பியப் புலமை குறித்து மு. இளங்கோவன் பேசினார். தற்காலத்தில் தொல்காப்பியத் தமிழிலக்கணக் கூறுகளின் பயன்பாடும் வளர்ச்சியும் பற்றிய இல.சுந்தரத்தின் கட்டுரை குறிப்பிடத்தகுந்தது.
அறிவியல் நோக்கில் இலக்கியத்தைப் பார்ப்பது என்பது வளர்ந்து வருகிறது. அந்த அடிப்படையில் தொல்காப்பியம் கூறியுள்ள பிறப்பியல் தொடர்பான சிந்தனையை மருத்துவ நோக்கில் குரல் நாண் மாறுபாட்டோடு ஒப்பிட்டு விளக்கமாகப் பேசினார் மருத்துவர் எம். குமரேசன். தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் பற்றி மருத்துவர் வி. சொக்கலிங் கத்தின் கட்டுரையும், சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை குறித்து எடுத்துரைத்த மணவழ கன் கட்டுரையும் குறிப் பிடத் தகுந்தவை. சங்க இலக் கியங்களும் நீர் வேளாண்மை யும் பற்றிய கட்டுரை அரிய செய்திகளைக் கொண்டிருந்தது.
சங்கப் பாடலை யப்பானிய மன்யோசுப் புறப்பாடல் களோடு ஒப்பிட்டுப் பேசிய இலங்கைத் தமிழறிஞர் மனோன் மணிசண்முகதாசு கட்டுரை சுட்டிக்காட்டத்தகுந்தது. ஆற்றுப்படை மரபும் பன்முகநோக்கும் பற்றிய சிங்கப்பூர் தமிழறிஞர் ஸ்ரீலட்சுமி படித்த கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது. திருக்குறள் பற்றி வாசித்தளிக்கப்பட்ட உலகநாயகி பழநி கட்டுரையும், வி.ஜி.சந்தோஷம் கட்டுரையும் சுட்டிக் காட்டத்தகுந்தவை. சட்டவியலைச் சங்க இலக்கியத் தோடு ஒப்புநோக்கிய மு.முத்துவேலுவின் கட்டுரை தனித்தன்மை வாய்ந்தது. தமிழரின் கலைகள் பற்றிய இராஜாவின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. ஆசிவகம் பற்றிய கா. நெடுஞ்செழியனின் கட்டுரை, தமிழரின் அறிவுக்கோட்பாடு பற்றிய சி. மகேந்திரனின் கட்டுரை ஆகியன வரவேற்புப் பெற்றன.
தமிழ் என்றால் பக்தி மொழி என்பதை அறிவோம் ஆயின் அது பற்றிய கட்டுரைகள் இடம்பெறவில்லை என்ற கருத்து நிலவியது. .மாநாட்டுக் கட்டுரை களில் பழைய பார்வையும், புதிய நோக்கும் இடம் பெற்றிருந்தன. அரைத்த மாவையே அரைக்காமல் புதிய போக்கில் அமைந்த கட்டுரைகள் பாராட்டப்படும்படி இருந்தன. புதிய புதிய கோணங்களில் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் உற்றுநோக்கும்படியான கட்டுரைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு விருந்தாயின.
மாநாட்டின் அனைத்துப் பொறுப்பாளர்களும் இரவுபகல் பாராது உழைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. எனினும் தமிழறிஞர்களைப் பின்னுக்குத் தள்ளும்படியான போக்கை வெகுசன கலை நிகழ்ச்சிகளூடே காணமுடிந்தது. விருந்தோம்பல் பண்பு தமிழர்க்கே உரியது. அதனைச் சிறப்புடன் பொறுப்பாளர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள்.
அமெரிக்க வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், அங்கு சிறப்பாகத் தொழில் புரிந்துவரும் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய அளவில் நடத்திய மாநாட்டி னைப் பாராட்டவேண்டும். மாநாட்டைக் குறை கூறுவோரும் உண்டு. வெளிநாட்டில் நிகழும் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் குறை இருந்திருக்கலாம். அதனைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
அமெரிக்க வாழ் தமிழர்களின் அரிய பணிகளையும், தமிழுணர்வுக்காகத் தொண்டு செய்துவரும் அவர்களின் அமைப்புகளையும் பற்றிய மாநாட்டு மலர் வெளியிடப் பட்டது. ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பும் நூலாக வெளியிடப்பட்டிருக்குமாயின் மாநாட்டுக்கு மேலும் சிறப்புச் சேர்ந்திருக்கும். பின்னர் அதனை வெளியிடப்போவதாகச் சொல்லப்பட்டது.
ஆய்வுக்குழுத் தலைவர் பிரான்சிஸ் சவரிமுத்து, ஆய்வுக்குழு இணைத்தலைவர் மருதநாயகம், அரசர் அருளாளர், சரவணக்குமார், இரவி பாலா, வீரா வேணுகோபால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் த.மாரிமுத்து, துணைத்தலைவர் மு.பொன்னவைக்கோ, உலகத்தமிழாராய்ச்சி செயலர் உலகநாயகி பழநி முதலியோர் மாநாட்டைச் சிறப்புற நிகழ்த்த துணைநின்றவர்களாவர்.
சிக்காகோ என்றால் விவேகானந்தர் நினைவுக்கு வருவார். இனி 10 ஆவது உலகத்தமிழ் மாநாடும் நினைவுக்கு வரும்.
மொத்தத்தில் மாநாடு உலகத் தமிழரின் பெருமிதம்!