விளையாட்டுப் போட்டிகளுக்கு ஓர் ஒலிம்பிக் என்பதுபோல... புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந் தோறும் நடத்தப்பட்டாலும், சென்னை புத்தகக் கண்காட்சி தான் அனைத்துத் தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர் களும் எதிர்பார்க்கக்கூடிய திருவிழா இந்த சென்னை புத்தகக் கண்காட்சியை இலக்காக வைத்து, நூல்களைப் பதிப்பிக்கும், வெளியிடும் தமிழ் எழுத்தாளர்கள், பதிப் பாளர்கள் அதிகம் உண்டு.
அதற்கேற்ப பார்வையாளர்கள் எண்ணிக்கையும், வாங்கும் தன்மையும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அதிகம் என்பதே இதன் சிறப்பு.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக, இந்த 2023ஆம் ஆண்டுக்கான, 46-வது சென்னை புத்தகக் கண்காட்சி, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜனவரி 6 முதல் 22ஆம் தேதிவரை நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். தமிழக முதல்வருடன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
புத்தகக் கண்காட்சித் தொடக்க விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023 மற்றும் பபாசி விருதுகளை தமிழக முதல்வர் வழங்கி, விழாப் பேருரையாற்றினார். பின்னர் புத்தகக் கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். தமிழக அரசின் சார்பாக "இல்லம் தேடிக் கல்வி' திட்டத்துக்கான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன, இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டன. இம்முறை, சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. இதேபோல, "புத்தக தானம்' என்ற பெயரில், சிறைத் துறை சார்பாக அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, புத்தக வாசகர்களிடமிருந்து புத்தகங்கள் தானமாகப் பெறப்பட்டு சிறையிலுள்ள கைதிகளின் பயன்பாட்டுக்காக சேகரிக்கப்பட்டன!
சிறைச்சாலைகளில் கைதிகளாக இருப்பவர் களை நல்வழிப்படுத்த நூல் வாசிப்பு உதவுமென்ற எண்ணத்தோடு, விரும்புபவர்கள் புத்தகங்களைத் தானமாகக் கொடுக்கலாமென்று அறிவிக்கப்பட்டது. இந்த அரங்கு, சிறையைப் போலவே அமைக்கப் பட்டுள்ளது பலரையும் ஈர்த்தது. தமிழகத்தின் சிறைச் சாலைகளிலுள்ள நூலகங்களிலுள்ள புத்தகங்கள் மிகவும் பழையனவாக இருக்கிறதென்றும், எண்ணிக்கை யும் குறைவாக இருப்பதாலும், சிறைவாசிகளின் வாசிப்புக்காக புதிய நூல்களைச் சேகரிப்பதற்கு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டது தமிழக சிறைத்துறை. இந்த அரங்கின் உன்னத நோக்கமறிந்த எழுத்தாளர்களும், பார்வையாளர்களும் மிகுந்த விருப்பத்தோடு நூல்களைத் தானமாக வழங்கினார்கள். இந்த அரங்கு குறித்து பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைத் தளங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புக்காக, அரசுப் பள்ளி நூலகங்களில் சேர்ப்பதற்காக நூல்கள் தானமாகப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறைவாசிகளுக்கான அரங்கைப் போலவே பால்புதுமையினருக்கான அரங்கு ஒன்றும் இம்முறை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக இடம் பெற்றது. பால்புதுமையினர் குறித்த புரிதலையும், அவர்கள் கடந்து வந்த பாதை குறித்தும் மக்களிடம் உரையாடுவதற்காகவும், அவர்களின் படைப்புகளை, அவர்களைப் பற்றிய படைப்புகளைக் காட்சிப் படுத்தவும் குயிர் பப்ளிஷிங் ஹவுஸ் சார்பாக அரங்கு அமைக்கப்பட்டது. இந்த அரங்குக்கும் மக்களின் பேராதரவு கிடைத்தது.
இயக்குநர் சீனு ராமசாமியின் புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை, கவிஞர் தமிழ்தாசனின் "தமிழின் மகுடத்தில் கிறித்தவ உரைநடை மணிகள்', முனைவர் மஞ்சுளாவின் "கண்சிமிட்டும் காகிதங்கள்', முனைவர் ஆதிரா முல்லையின் "உலகைச் செதுக்கிய சிற்பிகள்', எழுத்தாளர் கே.ஏ.ஜவஹரின் "உணர்வுகள் உறங்குவதில்லை', கவிஞர் புனித ஜோதி யின் "மௌனக்கூத்து' , "நிழல்களின் இதயம்', குடந்தை அனிதாவின்"நினைவுக் குமிழிகள்', கவிஞர் பிருந்தா சாரதியின் "முக்கோண மனிதர்கள்', கவிஞர் உமா மோகனின் "மிதக்கும் வரை அலங்காரம்', கவிஞர் கனகா பாலனின் "பாறைக் குளத்து மீன்கள்', மற்றும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் 13 நூல்கள் உட்பட ஏராளமான நூல்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை புத்தகக் கண்காட்சியில் முதன்முயற்சி யாக ஜனவரி 16, 17, 18-ஆம் தேதிகளில் புத்தகக் கண்காட்சி வளாகத்துக்கு அருகிலேயே சர்வதேசப் புத்தகக்கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, சர்வதேச எழுத்தாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மிகக்குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபோதும், சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், இஸ்ரேல், அர்ஜென்டினா, இத்தாலி, தாய்லாந்து, கத்தார், போர்ச்சுகல், அசர்பைஜின், உகாண்டா, வங்காள தேசம், அர்மீனியா, மலேசியா, டான்சானியா, துருக்கி, ஜார்ஜியா, ஓமன், யு.ஏ.இ., பக்ரைன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் பங்கெடுத்தனர்.
அந்தந்த நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற பதிப்புகள் இந்த அரங்கங்களில் இடம்பெற்றன.
இந்த சர்வதேச புத்தகக் காட்சியின் ஒருங்கிணைப் பாளராக ஆழி செந்தில்நாதன் செயல்பட்டார். இந்த அரங்கில் நூல்கள் விற்பனை செய்யப்படவில்லை. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மட்டும் தொழில் முறையாக ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் விதத்தில் அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச புத்தகக் கண்காட்சி, கடந்த 18ஆம் தேதி நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச்செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தொகையாக 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், உலகளாவிய நூல்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யவும், தமிழ் நூல்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவும், பதிப்பகங்கள் முகவர்களிடையே 350-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முதன்முறை நடைபெற்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சியிலேயே இவ்வளவு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பது சாதனையாகும். விழா அரங்கிலும் சிற்றரங்கிலும் தினம் தினமும் இலக்கிய சொற்பொழிவு மற்றும் நூல்வெளியீட்டு நிகழ்வுகள் களைகட்டின.
வழக்கம்போல் இந்த ஆண்டும் நமது நக்கீரன் பதிப்பகத்தின் அரங்கை நோக்கி வாசகர்கள், புத்தக ஆர்வலர்கள் குவிந்தனர். இந்த ஆண்டில், நக்கீரனின் புதிய வரவுகளாக, நக்கீரன் ஆசிரியரின் போர்க்களம் 3ஆம் பாகம், சித்ரவதை 2ஆம் பாகம், சின்ன குத்தூசியாரின் படைப்புகள், பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளான கடமை கண்ணியம் கட்டுப்பாடு, திராவிட நாடு, உரிமைக்குரல் ஆகிய நூல்கள், பெண்ணியம் போற்றிய பெரியார், தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு, ஜெகத் கஸ்பார் எழுதிய வீரம் விளைந்த ஈழம், அட்டைக்கட்டு நூலாக பொன்னியின் செல்வன் நாவல், கி.வா.ஜகந்நாதன் எழுதிய பாரிவேள், நினைவோ ஒரு பறவை 2ஆம் பாகம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வாசகர்களைக் கவர்ந்தன. நக்கீரன் ஆசிரியருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டும், கையெழுத்தைப் பெற்றுக்கொண்டும் மிகுந்த ஆர்வத்துடன் பலரும் நூல்களை வாங்கிச் சென்றார்கள்.
மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்ததாகவும் 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாகவும் தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையும் விற்பனையும் கடந்த ஆண்டைவிட சற்று அதிகமென்பது, நூல் வாசிப்பில் பொதுமக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
-தெ.சு.கவுதமன்