முன்பு மய்யழியில் ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். சார்லி துரையென்று அவரையழைத்தார்கள். அவர் நூறு சதவிகிதம் வெள்ளைக்காரராக இல்லை. ஒரு ஆங்கிலோ இந்தியரைப்போல அவரும் ஐம்பது சதவிகிதத்தை நெருங்கிய அளவு தோற்றத் திலிருந்தார். அவரைப் பற்றி எனக்கு மங்கலான ஒரு நினைவு மட்டுமே இருக்கிறது. எனினும், அவர் மய்யழியில் வாழ்ந்தார் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். எந்தக் காலத்திலும் உயிருடன் இல்லாதவர்களை நாம் நினைத்துப் பார்க்க முடியாதல்லவா?
கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்னுடைய ஒரு பலவீனம். மய்யழியைச் சேர்ந்த கலப்பினக் காரர்களைப் பற்றி நான் கதைகளும் புதினங்களும் எழுதியிருக்கிறேன். அவர்களில் சிலர் உயிருடன் இல்லாதவர்கள். அதாவது- எழுத்தாளரின் கற்பனையில் உயிர்பெற்றவர்கள். எனினும், பெரும்பாலானவர்கள் வெள்ளியாங்கல்லிருந்து மய்யழிக்கான வண்டுகளாக வந்தவர்கள்தான். "தெய்வத்தின் விக்ருதிகள்' புதினத்தில் வரக்கூடிய அல்ஃபோன்ஸச்சனைப் போன்றவர்கள், வேர்களே இல்லாதவர்கள். அவர்கள் நிரந்தரமாக ஒரு சுய அழிவின்மூலம் கடந்து போய்க்கொண்டிருந் தவர்கள். அதனால்தான் நான் அவர்களைப் பற்றி திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அறுபதுகளின், எழுபதுகளின் இலக்கியத்தில் "சுயத்தைத் தேடல்' என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருந்ததல்லவா?
சார்லி துரையின் வீடு மய்யழியின் அருகில் இருந்தது. சாலையிலிருந்து சற்று உட்பகுதியில் அது இருந்தது. சிறிய வாசலைக்கொண்ட ஒரு சிறிய, சாதாரண ஓடு வேய்ந்த வீடு... சாலையிலிலிருந்து பார்க்கும்போது, அதன் மேற்பகுதி மட்டும் தெரியும். நான் பார்க்கும்போது, அந்த வீடு மிகவும் பழமையானதாக இருந்தது. மேற்கூரையில் போடப்பட்டிருந்த ஓடுகளின் நிறம் மங்கிப்போய்க் காணப்பட்டது. வாசலிலிருந்து உள்ளே செல்லக்கூடிய கதவின் இரு பக்கங்களிலும் இரண்டு சாளரங்கள் இருந்தன. அந்த வீட்டைப் பற்றி இப்படி சில விஷயங்களை மட்டுமே என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. காலம் எவ்வளவோ கடந்து சென்றுவிட்டனவே!
முற்றத்திலிருந்து சாலைக்குச் செல்வதற்கு ஒரு நீளமான பாதை இருந்தது. மழைக்காலத்தில் அதன்வழியாக தேங்கிய நீர் ஓடிக்கொண்டிருக்கும்.
அதன் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகளும் மரங்களும் இடைவெளியில்லாமல் வளர்ந்து கிடந்தன.
எனக்கு மூன்றரை... நான்கு வயது நடக்கும் போதுதான் நான் முதன்முறையாக சார்லி துரையின் வீட்டிற்குச் சென்றேன். என்னை அங்கு கையைப் பிடித்து அழைத்துச் சென்றவர் என் தந்தை. நான் வீட்டைவிட்டு வெளியேறி தந்தையுடன் சார்லி துரையின் வீட்டிற்கு நடந்துசெல்லும் அந்த காட்சியை என்னால் இப்போதும் மனதில் பார்க்கமுடிகிறது. இப்போது... இரண்டு நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற காரியங்களைக்கூட என்னால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. ஆனால், ஆறரை பத்தாண்டு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களைத் தெளிவாக நினைத்துப் பார்ப்பதற்கு சிரமமே இல்லை. மூன்றாவது வயதில் தந்தையின் பாம்பு வளையம் கொண்ட தங்க மோதிரத் தினால், நீட்டப்பட்ட என் நாக்கின்மீது மாமா "ஹரிஸ்ரீ' எழுதியதை எந்த அளவிற்குத் தெளிவாக நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!
சலவை செய்து இஸ்திரி போடப்பட்ட அரைக்கால் சட்டையையும், மேல்சட்டையையும் அணிவித்து, என்னை தந்தையுடன் சார்லி துரையின் வீட்டிற்குப் போகுமாறு அம்மா அனுப்பும்போது, அப்பாவும் அம்மாவும் என்ன பேசியிருப்பார்கள்?
"சேட்டை செய்யற பிள்ளைகளைத்தான் சார்லி துரைகிட்ட அனுப்பி வைப்பாங்க... இவன் சாதுவான குணம் கொண்டவனாச்சே?'
"சும்மா இருக்குறப்போ, பையன் போயி நாலு எழுத்துக்களைக் கத்துக்கட்டும்.'
"படிக்குற அளவுக்கு என் மகனுக்கு வயசு வந்திருச்சா? விளையாடித் திரிய வேண்டிய வயசுதானே ஆகியிருக்கு?'
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வயது வந்திராத பிள்ளைகள் வீட்டில் குறும்புத்தனங்கள் செய்து கொண்டிருந்தால், தாய்- தந்தையர்கள் அவர்களை சார்லி துரையிடம் அனுப்புவார்கள். மழைக்காலத்தில் அவர்கள் குழந்தைகளைக் கையில் தூக்கிக் கொண்டு குடையைப் பிடித்தவாறு பள்ளிக் கூடத் திற்குப் பின்னால் துரையின் வீட்டிற்குச் செல்வார்கள்.
சார்லி துரைக்கு மனைவி இருந்தாள். ஆனால், எவ்வளவு முயற்சிசெய்தும், அவளுடைய உருவத்தை ஞாபகத்தில் கொண்டுவரவே முடியவில்லை.
அவளுடைய பெயர்கூட மனதில் தோன்றவில்லை. திரும்பத்திரும்ப முயற்சித்தபோது, தடிமனான கால்களும் கணுக்கால்கள்வரை தொங்கிக் கொண்டிருக்கும் கசங்கிய ஆடையும் மட்டும் மனதில் தோன்றுகிறது. அந்த கால்களும் ஆடையும் இடையில் அவ்வப்போது உள்ளே செல்லும் வாசற்படியில் வந்து நிற்பதைப் பார்க்கலாம்.
சார்லி துரையின் உருவம் இப்போதும் தெளிவாக என் மனதில் இருக்கிறது. அதிக எடையற்ற மெலிலிந்த மனிதராக அவர் இருந்தார். கால் சட்டையையும் பழைய கோட்டையும் அணிந்திருப்பார். வெள்ளைக்காரர்களிடம் இருப்பதைப்போல கண்கள் நூறு சதவிகிதம் நீலநிறத்தில் இருந்தன. ஆனால், அந்த நீலநிறக் கண்கள் எப்போதும் அழுவதைப்போல கலங்கிக் காணப்பட்டன. கையிலிருக்கும் குச்சியை தரையில் ஊன்றியவாறு, ஒருபக்கமாக சாய்ந்து கொண்டே நடப்பார். நான் முதன்முறை பார்த்தபோதே துரைக்கு வயதாகிவிட்டிருந்தது.
துரையின் வீட்டில் பத்து... பன்னிரண்டு வயது இருக்கக்கூடிய ஒரு சிறுமி இருந்தாள். செம்பு நிறத் திலிருந்த தலைமுடியை இரு பக்கங்களிலும் கட்டிவிட்டு, கழுத்தில் சிலுவை மாலை அணிந்து, இறக்கம் குறைவான ஆடையை அணிந்து நடந்து திரியும் ஒரு சிறுமி... அவள் ஃப்ரெஞ்ச்சும் மலையாளமும் ஒன்றோடொன்று கலந்து பேசினாள்.
ஒருமுறை வாசலுக்குச் செல்லும் கல்லாலான படியில் அமர்ந்து அவள் என்னை அருகில் அழைத்து, என் பெயரைக் கேட்டாள். என்னைத் தூக்கி மடியில் உட்காரச்செய்தாள். அப்போது வெட்கம் காரணமாக நான் உருகிப்போயிருந்தேன்.
மிகவும் வயதான சார்லி துரைக்கு அப்படியொரு மகளிருக்க வாய்ப்பில்லை. வேறு யாருடைய மகளாக இருந்தாலும் அங்குவந்து வசிப்பதற்குப் வாய்ப்பில்லை. யாரும் அப்படிப்பட்ட ஒரு சிறுமியைப் பற்றி கூறிக் கேட்டதில்லை.
அப்படியென்றால்... அவள் யார்? அவள் என்னுடைய கற்பனையில் உருவானவளாக இருக்கவேண்டும்.
என் சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.
வாசலிலின் வலதுபக்கத்தில் மூன்று... நான்கு பழைய பெஞ்சுகள் இருந்தன. ஒரு பெஞ்சின் முன்பக்க கால் ஒடிந்து, பெஞ்ச் முன்னோக்கி சாய்ந்திருந்தது.
அதற்கு சார்லிலி துரையிடம் இருந்ததைப்போல ஊன்றுகோலிலின் தேவை இருந்தது. அந்த பெஞ்சுகளில்தான் சிறுவர்களான நாங்கள் இருந்தோம். யாருக்கும் நிரந்தரமாக ஒரு இடமில்லை. விருப்பப்பட்ட இடத்தில் அமரலாம்.
"ஆ பே ஸே தே...'
ஃப்ரெஞ்ச் எழுத்துகளை சாக்பீஸால் கரும்பலகையில் எழுதிக்கொண்டே சார்லி துரை கூறினார்.
"ஆ பே ஸே தே...'
காலொடிந்த பெஞ்சில் அமர்ந்து மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து நான் திரும்பக் கூறினேன்.
எழுத்துகளும், சிறிய சிறிய வார்த்தைகளுக்கும் அப்பால் சார்லி மாஸ்டர் வேறு எதையும் கற்றுத் தரவில்லை. நர்ஸரியோ ப்ளே பள்ளிக்கூடமோ... எதுவுமே இல்லாமலிருந்த காலமது.
வாஷிங் மெஷினும் மிக்ஸியும்... எதுவுமே இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் காலையில் தாய்மார்களுக்கு வீட்டில் கடுமையான வேலையிருக்கும். உட்பகுதியையும் வாசல் பகுதியையும் பெருக்கி சுத்தப்படுத்துவதற்கும், சலவை செய்வதற்கும், சமையல் செய்வதற்கும்.. எதற்குமே நேரம் போதாமல் அவர்கள் பாய்ந்து ஓடிக்கொண்டிருப்பார்கள்.
அப்போது சேட்டைகள் செய்யும் பிள்ளைகளின்மீது கண்களைப் பதிப்பதற்கு அவர்களுக்கு எங்கு நேரம் கிடைக்கும்? சலவை செய்யும் வேலையும், சமையல் செய்வதும் முடியும்வரை, வீட்டிலிலிருந்து விலக்கி வைப்பதற்காகத்தான் பிள்ளைகளை சார்லி துரையிடம் கொண்டுபோய் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதைப்போன்ற ஒரு சூழலில்தான் என்னையும் சார்லி துரையிடம் கொண்டுபோய் விட்டிருப் பார்களோ! பால்ய வயதில் நானொரு சாது குணம் கொண்டவனாக இருந்தேன். அவ்வாறு பலரும் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
குழந்தை ஒன்றுக்கு மாதக்கட்டணம் நான்கு அணா. அந்த வருமானத்தை வைத்துதான் சார்லி துரை குடும்பத்தை நடத்தினார். யாரும் ஒழுங்காகக் கட்டணத்தைச் செலுத்துவதில்லை. சில குழந்தைகள் முற்றிலும் கொடுக்கவில்லை. அதைப்பற்றி சார்லி துரைக்கு புகார் இல்லை.
கரும்பலகையின்மீது இரண்டு எழுத்துகளை எழுதிக் கற்றுத்தந்துவிட்டு, சார்லிதுரை உள்ளே செல்வார். குளிப்பதற்காகவோ காலை உணவு சாப்பிடுவதற்காகவோ அது இருக்கலாம். துரை திரும்பிவரும்வரை சிறுவர்களான நாங்கள் சண்டை போட்டுக்கொண்டிருப்போம். சிறுமிகளின் கட்டப்பட்ட தலைமுடியைப் பிடித்து இழுப்பதுதான் ஆண் பிள்ளைகளின் முக்கிய விளையாட்டாக இருந்தது. அவர்களுடைய அழுகையைக் கேட்டதும், துரையின் மனைவி வாசலுக்கு வந்து அவர்களுக்கு கேக் தருவாள்.
சில சிறுமிகள் கேக்கிற்காக வேண்டுமென்றே அழுவார்கள்.
சிறிது நேரம் படித்தபிறகு, சார்லி துரை சிறுவர்களான எங்களை வாசலுக்குக் கொண்டு சென்று நிறுத்துவார். வீட்டின் முன்பகுதியிலிருக்கும் செடிகளுக்கும் மரங்களுக்கும் நாங்கள்தான் நீர் ஊற்றுவோம். சார்லி துரை செடிகளையும் மலர்களையும் கொஞ்சிக்கொண்டிருப்பார்.
"இந்தப் பூவின் பெயர் என்ன... பிள்ளைகளே?' சார்லி துரை கேட்பார்.
"அலரிப்பூ.' சிறுவர்களான நாங்கள் கூறுவோம்.
"இதன் பெயர்?'
"கூடாரப் பூ'.
"இது என்ன புல்?'
வாசல் பகுதியையும் நிலத்தையும் பிரிக்க அடுக்கப்பட்டிருக்கும் கல்லுக்கடியில் புற்கள் வளர்ந்து கிடந்தன.
பரந்து வளர்ந்திருந்த ஒரு சிறிய புல்லைப் பறித்து, சார்லி துரை எங்களிடம் கேட்டார்: "இது என்ன புல்?'
"அது... புல்...'
"இது முத்தங்காய்ப் புல்.'
முத்தங்காய்ப் புல்லை துரை எங்களுக்குக் காட்டினார். குழந்தைகளை வரிசையாக வாசலில் நிறுத்தி, சார்லி துரை பூக்களைப் பற்றியும் செடிகளைப் பற்றியும் கற்றுத்தருவார்.
எங்களுக்கு எழுத்துகளைக் கற்றுத்தருவதற்கு மத்தியில் அடுக்கப்பட்டிருக்கும் கல்லுக்கு மேலேயோ செடியின் கிளையிலேயோ ஒரு பறவை வந்து அமர்ந்தால், சார்லி துரையின் கவனம் அந்தப் பக்கமாக திரும்பும்.
"அதோ... காராடன் சாத்தான்.'
காராடன் சாத்தானை சார்லி துரை அறிமுகப் படுத்திக் கொடுப்பார்.
சார்லிலி துரை கற்றுத்தந்தது எழுத்துகளை மட்டுமல்ல. பறவைகளைப் பற்றியும் செடிகளைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் துரை எங்களுக்கு விளக்கிக் கூறினார். ஊர்ந்து செல்லும் உயிரினங் களைப் பற்றியும் பிராணிகளைப் பற்றியும் துரை எங்களுக்கு அறிவு புகட்டினார். கீரியும் பாம்பும் பகைவர்கள் என்பதையும், புழுவால் முன்னோக்கியும் பின்னோக்கியும் ஊர்ந்துபோக முடியும் என்பதையும், தேள் தன் வாலைக்கொண்டு குத்தும் என்பதையும், பச்சோந்தி பெரிய மறதிக்காரன் என்பதையும் எங்களுக்குக் கூறியது சார்லி துரைதான். முன்பு எந்தக் காலத்திலும் பார்த்திராத பல ஊர்ந்துசெல்லும் உயிரினங்களையும் புழுக் களையும் துரை எங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
"பிள்ளைகளே... பாருங்கள் அதோ... குழியானை வருகிறது' குழியானையை துரை காட்டியபோது, நான் திகைப்படைந்து விட்டேன். குழியானைக்கு யானை அளவுக்கு சரீரம் இருக்குமென்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது பார்த்தது- கட்டெறும்பு அளவில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு உயிரினத்தை...
எழுத்துகளைக் கற்றுத்தருவதற்கு மத்தியில் இயற்கையை நேசிப்பதற்கும் சார்லி துரை பிள்ளைகளுக்குச் சொல்லிலிக்கொடுத்தார். "இயற்கைச் சூழல்' என்ற வார்த்தையைக்கூட யாரும் கேட்டிராத ஒரு காலம் அது. பத்து... அறுபத்தைந்து வருடங்களுக்குமுன்பு...
இப்போதும் ஒரு பேசாத பிராணியைக்கூட வேதனைப்பட வைக்க என்னால் முடியாது.
எனக்குள் இருக்கும் எழுத்துகளின்மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டிற்கும், உயிரினங்களின்மீது வைத்திருக்கும் அன்பிற்கும் மண்ணிலிருந்து எப்போதோ மறைந்து போய்விட்ட சார்லி துரைக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.