வெண்பா பாடுவதில் புகழேந்தியாருக்கு இணை யாக எவருமில்லை எனத் தமிழில் ஒரு வழக்குண்டு. புகழேந்தியார் கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.

Advertisment

மகாபாரதத்தில் உள்ள கிளைக் கதைகளில் ஒன்று நளன்-தமயந்தி கதையாகும். இதைத் தனியாக வடமொழியில் அர்ஷ கவி என்பார் நைஷதம் என ஒரு காவியமாக்கினார்.

இதனைப் பின்பற்றிப் புகழேந்தியார் தமிழில் நளவெண்பா எனும் காவியம் செய்தார். புகழேந்திக்குப் பிறகு தமிழில் அதிவீரராம பாண்டியன் என்பார் நைடதம் எனும் பெயரில் நளன் கதையைச் செய்துள்ளார். ஆனால் நைடதம் நளவெண்பாவைப் போலத் தமிழில் அவ்வளவாகப் பேசப்படவில்லை.

புகழேந்தியார் பண்புகள்

புகழேந்தியார் கம்பரைப்போல் நன்றியுணர்ச்சி மிக்கவர். கம்பர் எப்படித் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பாடினாரோ அதைப்போலப் புகழேந்தி யும் தம்மை ஆதரித்த சந்திரன் சுவர்க்கியை நளவெண்பா வில் ஆறு இடங்களில் (பா 24, 64, 287, 306, 381, 427) புகழ்ந்து பாடித் தம் நன்றியைத் தெற்றெனக் காட்டியுள்ளார்.

சங்க நிதிபோல் தருசந்திரன் சுவர்க்கி

வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் (306)

Advertisment

"சங்க நிதி எனும் குறையாத நிதியை உடையவன் சந்திரன் சுவர்க்கி. அவன் தன் பெருஞ்செல்வத்தால் வறுமையில் வாடியவர்களின் வாட்டத்தைப் போக்கியது போல' என்பது இப்பாடற்பொருள்.

புகழேந்தியார் இப்பாடலில் சந்திரன் சுவர்க்கி தன் செல்வத்தால் ஏழைகளின் துயரத்தைப் போக்கியவன் என்று வாயாரப் புகழ்ந்துள்ளதைப் பார்க்கலாம்.

கம்பன், பாரதி, பாரதிதாசனைப்போலப் புகழேந்திப் புலவரும் தாய்மொழியாம் தமிழின்மீது எல்லையிலாப் பற்று உடையவர். தம் பாடல் ஒன்றில் தென்தமிழையும் தேன்தமிழ்ப் புலவர்களையும் ஏற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இதோ பாடல்.

வண்தமிழ்வா ணரப் பிழைத்த வான்குடிபோல் தீத்தழல்மீ

மண்டு கொடுஞ்சுரத்தோர் மாட்டிருந்து- பண்டையுள (311)

Advertisment

வண்டமிழ்ப் புலவர்களுக்குக் கேடு செய்தவர்கள் வறுமையுற்றுத் துயருறுதல் போல' என்பது முதலடி தரும் பொருள்.

தமிழுக்கும் தமிழ்ப் புலவர்க்கும் ஊறு செய்தவர்கள் வறுமையுற்று வருந்துதல்போல என்னும் புலவரின் கூற்றுக்கு எதிர்மறையாகத் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் புரப்பவர்கள் செல்வம் பெருகிச் சிறப்பாக வாழ்வர் என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு புகழேந்தியார் தமிழ்ப் பற்றை வித்தியாசமாகப் புலப்படுத்தியுள்ள பாங்கு எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

புகழேந்தியார் காலத்துப் புலவர்கள் தம் நூல்களில் தாம் வழிபடு கடவுளையே வாழ்த்தி மகிழ்வார்கள். ஆனால் புகழேந்தியார் சமய சமரசத் தன்மையைப் பின்பற்றியுள்ளது வியப்பை அளிக்கிறது. அவர் விநாயகர், நம்மாழ்வார், திருமால், சிவன், முருகன் எனப்பல கடவுளரையும் வேறுபாடு இல்லாமல் வாழ்த்தியுள்ளார்.

தமயந்தியின் அரசு

நளவெண்பாவின் கதைத் தலைவி தமயந்தி. தமயந்தி அழகை வர்ணிக்க வந்த புகழேந்தி தமயந்தி ஓர் அரசு போன்றவள் என அழகொழுக வர்ணிக்கிறார்.

வெண்பாக்களில் அவ்வர்ணனை வெண்பா தலைசிறந்த வெண்பாவாகக் கருதப்படுகிறது.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா

ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா- வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை அரசு. (பா. 39)

தமயந்தி பெண்மை ஆகிய அரசை ஆளுகிறாள். அவ்வரசுக்கு அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் பெண்மைக்குரிய நான்கு குணங்களும் தேர், யானை, குதிரை, காலாள் எனும் நான்கு படைகளாக உள்ளன. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளும் அமைச்சர்களாக உள்ளன. தமயந்தி காற்சிலம்பு ஒலிலிக்கும் முரசு. இரண்டு கண்களும் வேல்படையும் வாள் படையுமாக உள்ளன. முகமாகிய நிலவு குடையாக உளது.

ஒரு நேரிசை வெண்பாவில் தமயந்தியின் உருவத்தையே அரசு உறுப்புகளாக உருவகம் செய்த புகழேந்தியின் புலமையை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

உரையாடல் அழகு

venba

வெண்பாவில் வர்ணனை அமைப்பதும் இலக்கிய அழகுகளைச் சேர்ப்பதும் உவமை உருவகம் காட்டுவதும் எளிது. ஆனால் உரையாடல் அமைப்பது சற்றுக் கடினம். அதையும் புகழேந்தியார் செம்மையாகச் செய்து காட்டியுள்ள திறத்தை நினைத்து நினைத்து வியக்கும்படியாக உள்ளது.

தமயந்தியைப் பிரிந்த நளன் உருவமும் பெயரும் மாற்றிக்கொண்டு இருதுபன்னன் நாட்டில் வாழ்ந்தான். தமயந்தி இரண்டாம் சுயம்வரம் நடத்துகிறாள் எனக் கேள்விப்பட்டு தமயந்தி இருக்குமிடம் வந்தான் தன் மன்னனோடு.

அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் தன்

பிள்ளைகளைப் பார்த்து மனம் நடுங்கிப் பெருமூச்சு

விட்டு "என் மக்களைப் போல் உள்ளீர்கள். நீங்கள் யார்?' எனக் கேட்டான்.

"என்மக்கள் போல்கின்றீர் யார் மக்கள்?' -பா. 390

நளன் கேட்ட கேள்விக்குப் பிள்ளைகள் "நிடத நாட்டு மன்னன் நளன் பிள்ளைகள் நாங்கள்' என்று சொல்லி அழுதனர்.

"மன்னு நிடத்தார் வாள்வேந்தன் மக்கள்யாம்' -பா. 391

"உங்கள் நாட்டை வேறு ஒருவன் ஆள நீங்கள் வேற்று நாட்டில் வாழ்வது இழுக்கில்லையா?' என வினவினான் நளன்.

"உங்கள் அரசு ஒருவன் ஆளநீர் ஓடிப்போந்து

இங்கண் உறைதல் இழுக்கன்றோ?' -பா. 393

நளன் கேள்வி

யால் சிறுவன் ஆத்திரப் பட்டுச் சினத்தோடு "சமையல் தொழில் செய்யும் மடையனே, உன்னைத் தவிர வேறு யாரும் இப்படிக் கேட்க மாட்டார்கள்' என்றான்.

"நெஞ்சால்இம் மாற்றம் நினைந்துரைக்க நீ அல்லால்

அஞ்சாரோ மன்னர் அடுமடையா? -பா. 394

இவ்வாறு தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் யாரென்று அறியாமல் நிகழ்த்தும் உரையாடல் செறிவாகவும் இலக்கிய நயம் சொட்டச் சொட்டவும் புகழேந்தியார் வெண்பாவில் அமைத்துள்ள பாங்கு அவருக்கு மட்டுமே கைவந்த கலை எனலாம்.

மேலாடை வீழ்ந்தது தமயந்தி இரண்டாம் சுயம்வரம் வைத்தாள் என்பதை அறிந்த மன்னன் இருதுபன்னன் தமயந்தியை மணக்க அங்குச் சென்றான். உடனே தன் தேரோட்டி வாகுகன் பெயரில் இருக்கும் நளனைத் தேரை ஓட்டச் சொன்னன். வாகுகன் (நளன்) தன் மனைவி இரண்டாம் சுயம்வரம் வைத்துவிட்டாளே என மனம் நொந்து தேரை மிக விரைவாக ஓட்டினான்.

அப்போது இருதுபன்னன் தன் மேலாடை காற்றில் பறந்துபோது வாகுகனிடம் "மேலாடை விழுந்துவிட்டது. தேரை நிறுத்து' என்று கட்டளையிட்டான்.

இதற்கு நளன் "பத்துக்காத தூரம் வந்துவிட்டோமே' என்று பதற்றத்துடன் கூறினான்.

தோள் துண்டு விழுந்ததை மன்னன் சொன்னபோது பத்துக்காத தூரம் (1 காதம் 10 மைல்) வந்துவிட்டோம் என்பதில் உயர்வு நவிற்சி அணி அமைத்துள்ள புகழேந்தியின் திறமையை அறிந்து சொக்குகிறோம்.

"மேலாடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில் நாலாறு காதம் கடந்ததே' -பா. 378

எல்லாக் காப்பிய புலவர்களும் ஆசிரியப் பாவிலும் விருத்தப் பாவிலும் செய்ததை ஆசிரியர் புகழேந்தி வெண்பாவில் செய்துள்ள புதுமையை இலக்கியச் சுவைஞர்கள் மாந்தி மாந்தி இன்புறலாம்.

புகழேந்தியார் தம்மொழியாம் தண்டமிழ்மீது கொண்டிருந்த பற்றையும் சமய சமரசவாதியாகத் திகழ்ந்த பெருந்தன்மையையும் வெண்பாவில் அவர் நிகழ்த்திக் காட்டிய பல்வேறு புதுமைகளையும் கண்டு மகிழ்ந்தோம். 