கரிச்சான்குஞ்சு, 19-ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். காவிரி வளம் சூழ்ந்த இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே உள்ள சேதனீபுரத்தில் 1919-ம் ஆண்டு பிறந்தவர் இவர். நாராயணசாமி என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், கு.பா.ரா.வின் மீதான பேரன்பால், அவரது புனைபெயரான கரிச்சானை நினைவுபடுத்தும்விதமாக, கரிச்சான்குஞ்சு என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல தளத்திலும் இயங்கிய கரிச்சான்குஞ்சு, ‘பசித்த மானிடம்’ என்ற ஒரே ஒரு புதினத்தையும் படைத்தார். தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக இன்றும் அது கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டைக் கடக்கும் கரிச்சான்குஞ்சின் நினைவாக, தி.ஜானகிராமன் பற்றி அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இனிய உதயம் இங்கே வழங்குகிறது. இந்தக் கட்டுரை, தி.ஜா.பற்றி மட்டும் அல்லாது அன்றைய சில எழுத்தாளர்கள், அவர்தம் வாழ்க்கை, ரசனை, உளவியல் என பலவற்றையும் விரித்துப்பேசி, அன்றைய நாட்களை மூடுதிரை இன்றி நம் கண்முன்னே கொண்டுவருகிறது.)
வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன் (தி.ஜானகிராமன்).
மன்னார்குடியில் இருந்த மஹோமஹோ பாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர், புராணம் சொல்லும் தொழிலை மேற்கொண்டு பொருளும், வசதியும் பெற்றனர். மாயவரம் சிவராம சாஸ்திரிகள், சிமிழி வெங்கடராம சாஸ்திரிகள், தேவங்குடி தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர்கள் அம்மூவர்.
தியாகராஜ சாஸ்திரிகளின் குமாரர்கள் இருவரில், ஜானகிராமன் இளையவன். சிமிழி சாஸ்திரிகளின் குமாரர்கள் நால்வரில் இரண்டாமவர் “ஆத்ரேயன்’’. தஞ்சாவூரில் ஜானகிராமன் தந்தையும், ஆத்ரேயன் தந்தையும் புராணப் பிரசங்கம் செய்து வந்தனர்.
ஜானகிராமன் ஹைஸ்கூல் படிப்பு தஞ்சையில். காலேஜ் படிப்பு கும்பகோணத்தில். என் தந்தை, ஜானகிராமன் தந்தையாருக்குச் சீடன் போன்றவர். உறவும் உண்டு. ஆனால் 1928-லேயே இறந்து போனார்.
எங்கள் குடும்பம் வறுமை நிறைந்த ஒன்று. பரம்பரைப் புரோஹிதர் குடும்பம். ஆகவே நான் எனது எட்டாவது வயதிலேயே வேதாத்யயனம் செய்வதற்கு அனுப்பப்பட்டேன். “அம்மா வந்தாளி’’ல் வரும் பாடசாலையில்தான் எனது ஆரம்ப காலப்படிப்பு. பிறகு பெங்களூருக்குப் போய்ச் சேர்ந்தேன். பள்ளிப் படிப்பென்றால் இன்னதென்றே தெரியாமல் 1935 முடிய அங்குக் கற்று, ஒருவாறு முடித்துக்கொண்டு, முறித்துக்கொண்டு என்று கூடச் சொல்ல வேண்டும், கும்பகோணம் வந்தேன். இந்த ஆண்டுகளில் அவ்வப்போது ஜானகிராமனைப் பார்த்ததுண்டு. 1936-ல் நான் கும்பகோணம் ராஜாபாடசாலையில் சேர்ந்து “ஓரியண்டல் என்ட்ரன்ஸ்’’ பரிக்ஷைக்காகப் படித்தபோது, ஜானகிராமன் காலேஜில் படித்து வந்தான்.
*
தனியே ரூமில் இருந்தான். அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் சந்திப்பதுண்டு. எப்படியோ என்னிடம் அவனுக்கு ஒரு ஆழமான அன்பு பிறந்தது. எனக்கு அவன் படிக்கும் ஆங்கில நூல்களைப் பற்றியும் ஆங்கில இலக்கிய விவரங்களும் சொல்வான். படிக்கும் வடமொழிப் புத்தகம் பற்றி என்னைச் சொல்லச் சொல்லிக் கேட்பான். 1937இல் நான் மதுரை, ராமேசுவரம் தேவஸ்தானப் பாடசாலையில் வித்வான் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். 1940 வரை விடுமுறை நாட்களில் நாங்கள் சந்தித்து இரவு பகல் எந்நேரமும் பேசிக்கொண்டிருப்போம். அவன்தான் நிறையப் பேசுவான். நான் படிக்கும் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றிக் கேட்டறிவான். புதிய தமிழ் இலக்கியம் - சிறுகதை பற்றி வியந்து கூறி என்னையும் படிக்கத் தூண்டுவான். எனக்கு மிகுந்த ஆவல் தோன்றும் வகையில் “மணிக்கொடி’’ பற்றிக் கூறுவான். மணிக்கொடியின் கடைசி வாரிசான ஸ்ரீ எம்.வி.வி.(எம்.வி.வெங்கட்ராமன்) கும்பகோணம் காலேஜில் இறுதியாண்டு படித்தார் அப்போது. ஓரிரு தடவை நானும் அவனும் எம்.வி.வியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்ததுண்டு. அவரை அப்போது பார்த்ததை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் இன்பமாய் இருக்கிறது. தூய வெள்ளை வேஷ்டி, முழுக்கைச் சட்டை, முகத்தில் அமைதி நிறைந்த, அறிவும், சிந்தனையாழமும் சேர்ந்த கம்பீரமான இளைஞன். நல்ல சிவப்பு நிறம். பட்டு நூல்காரர்கள் என்று அந்த நாளில், இப்போது ஸௌராஷ்டிரர்கள் எனப்படும் வர்க்கத்தில் பிறந்தவர். அவர்களில் மிகப் பெரிய பணக்காரர்களான புடவை உற்பத்தியாளர் கோறா பட்டு வியாபாரிகள் ஒருபுறம், நெசவு நெய்யும் தொழிலாளிகளான ஏழைகள் ஒருபுறம். இந்த இரண்டு வகையினரிலும் எல்லோருமே காலேஜ் படிப்பு, ஏன் ஹைஸ்கூல் படிப்புக்கூடப் படிக்காதவர்களே. பணக்காரர்களான மைசூர் குடும்பத்து ஸ்வீகாரப் பிள்ளை. அந்த நாட்களில் “மணிக்கொடி’’ கதைகள், தணிகாசலம் என்பவர் எழுதிய “சாவே வா’’ போன்ற கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. கு.ப.ரா., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் கதைகளையும் படித்துச் சுவைத்தேன். பாரதி நூல்களை எனக்குக் கொடுத்துப் படிக்கச் சொன்னான் ஜானகிராமன். அது பெரிய கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டது என்னை.
*
மதுரையில் நான் படித்த பாடசாலை அப்போது சனாதனக்கோட்டை, சிரோமணி வகுப்பு, ஆசிரியர்களைத் தவிர தமிழ் வித்வான்களை உருவாக்கிய தமிழ்ப் பேராசிரியர்கள்கூட வைதீக சிகாமணிகளாய் விளங்கினர். நான் பாரதி நூல்களைப் படித்துக் கூறுவதும், பாடுவதும் பெரிய குற்றமாகிவிட்டது. எனக்கு இரண்டு நாட்களுக்குச் சாப்பாடு (இலவசச் சோறு) கிடையாதென்றும், பாடசாலையில் இருக்கக்கூடாதென்றும், பாரதி நூல்களை உடனே எறிந்துவிட வேண்டும் (நல்லவேளை எரித்துவிடுமாறு கூறவில்லை) என்றும் தண்டனை தரப்பட்டது.
ஆனால் பாடசாலை முதல்வர் பகிரங்கமாக என்னைக் கடிந்து கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டார். பாரதியார் நூல்கள் பறிக்கப்பட்டன. இந்த முதல்வர் அப்போதே அறுபதை எட்டிக்கொண்டிருந்த முதியவர். பெரிய அறிவாளி. சிந்தனை உள்ளவர்.
அதற்குப் பிறகு இரண்டு வருஷம் என்னைத் தனியே அழைத்துச் சென்று, சரித்திரம், ஸமூஹஇயல், அரசியல்சூழ்நிலை முதலியவை பற்றிப் போதித்துக் கண் திறந்த நல்லாசிரியர் ஆனார். அவர் பாரதியாரின் இளைய தாயாருக்குச் சகோதரர் சுப்பிரமணிய அய்யர் என்பவர். பாரதியாருடைய கருத்துகள், ஆவேசம் முதலியவற்றை நன்கு அறிந்தவர். ராஜாஜி முதன் மந்திரியானபோது ஆலயப் பிரவேசம் வந்த காலத்தில் எங்கள் பாடசாலை முதல்வர் சீர்திருத்தம் பேசி அதனால் பட்ட கஷ்டங்கள் பல. அந்தக் காலம் எனக் கும் பல இடையூறுகள். ஒரு நல்ல நாவலுக்கான விஷயம். பிழைத்துக்கிடந்தால், 1983-இல் இதை நான் எழுதும் உத்தேசம் உண்டு.
*
1940-ல், நான் சென்னையில் தமிழாசிரியன் உத்தியோகம் பெற்றுக் குடியேறினேன். ஜானகிராமன் 39-ல் அல்லது 40-ல் பி.ஏ. முடித்து வேலை தேடினான். கிடைக்கவில்லை. என்னைவிட ஒன்றரை வருஷம் வயதில் சிறியவன் என்று ஞாபகம். ஜானகிராமனின் தந்தையார் தஞ்சையைவிட்டுக் குடிபெயர்ந்து வலங்கிமான் அருகே கீழவிடையல் என்ற கிராமத்தில் குடியேறினார். அப்போதுதான் அவனுக்குத் திருமணம் நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிக்கப்போனவன், விரைவில் உதறிவிட்டு, மீணடும் வேலை தேடி அயர்ந்து, எல்.டி. படிக்கச் சென்னைக்கு வந்தான். எல்.டி. முடித்தபின் சென்னையில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தான். அந்த இரண்டு மூன்று வருஷங்கள் என்னால் என்றுமே மறக்க இயலாதவை. மாம்பலத்தில் ரூமில் சேர்ந்தோம். ஹோட்டல் சாப்பாடு. எனக்கு 25 ரூபாய் சம்பளம். அவனுக்கு 35 அல்லது 40 ரூபாய். அதிருசியான சாப்பாடு அப்போதெல்லாம். 10 ருபாய்க்கு 60 சாப்பாடுகள். நாங்கள் இருவருமே ருசி பார்த்துச் சாப்பிடுகிறவர்கள். மிகவும் சுகமான நாட்கள், பாட்டு, படிப்பு, சர்ச்சைகள், பழைய இலக்கியம், புது இலக்கியம், ஸம்ஸ்கிருத நாடகங்கள், வாய்விட்டு நடிப்பதைப் போலவே படித்து ரஸிப்பது, நல்ல கோஷ்டி.
*
எனக்குச் சென்னையில் மாமனார் வீடு உண்டு. ஆனால் மனைவி தீராத நோயாளி. 19 வயதில் கல்யாணம் ஆயிற்று. ஆனால் பிரம்மச்சாரிதான். மலிவான காலம். மிக நன்றாக உடுத்து, உண்டு வாழ்ந்தேன். பெண்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஸம்ஸ்கிருத பண்டிதன் நான். மாம்பலம் பள்ளி 15-16 வயதுள்ள பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளி. என் ஏக்கங்கள் வேதனை விம்மல்கள் யாவும் ஜானகிராமன் உடனிருப்பதால் அறவே என்னைவிட்டு அகன்றன.
ரவீந்திரநாதர் டாகூர் இறந்த செய்தி வந்ததும் உடனே பள்ளி முழுவதும் கூடியது. டாகூர் பற்றிப் பேச வேண்டும். ஆங்கிலம் படித்த ஆசிரியைகள் யாருமே முன்வரவில்லை. என் தலையில் அக்ஷதை விழுந்தது. தைரியமாகப் போய் நின்று 45 நிமிஷம் பேசினேன். டாகூரின் சிறுகதைகள், நாவல் சில ஹிந்தியில் படித்திருந்தேன். பாரதியார் மொழிபெயர்த்த கட்டுரைகள் சிலவும் தெரியும். ஜானகிராமனுக்கு காலேஜ் நாட்களிலிருந்தே டாகூரைப் பிடிக்காது. போலிக் கவிதை என்பான். இது அவனுடைய இங்கிலீஷ் புரபஸர் பழமார்நேரி ஸ்ரீ தாராமய்யரும் பகிர்ந்துகொண்ட அபிப்ராயம். என்னிடம் அவன் கீதாஞ்சலிப் பாடல்கள் சிலவற்றை விவரித்து விமர்ஸனம் செய்ததுண்டு. இதுபோன்ற பலங்களால் அன்று நன்றாகவே பேசிவிட்டேன் போல் இருக்கிறது. அன்றிலிருந்த அந்தப் பள்ளியில் நான் ஒரு “ஹீரோ’’. என்னைத் தேடிக்கொண்டு பெண்கள், என் மாணாக்கியர் சிலர் வரத்தொடங்கினார்கள். நான் மிகவும் சங்கடப்படுவேன் அந்த நேரங்களில்.
ஜானகிராமன் அவர்களுடன் நெருங்கிப் பேசிப் பழகிக் குதுகுதுப்படைவான். அவன் இளமைப் பருவத் திலிருந்தே பருவத்தை, அழகை, பெண்மையை வயதுக்கு மீறி விரும்பி நேசிக்கும் இயல்புடையவன். மூன்றா வது புருஷார்த்தத்தில் அவனுக்கு எல்லையில்லா வேகம் உண்டு. அது நிறைவேறியதும் உண்டு. என்னைத் தேடி என் ரூமுக்கு வரும் பெண்களில் ஒருத்தி என்னைக் கேட்டு என் திருமண அவலத்தைப் புரிந்துகொண்டவள், என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று பச்சையாகச் சொல்லிவிட்டாள். எனக்குத் தைரியமில்லை. வசதிகளும் இல்லை. ஸமூக பயம் வேறு. எடுத்துரைத்து அவளை விலகச் செய்தேன். ஆனால் அவள் அதற்குப் பிறகும் என்னிடம் நேசத்தை மிகுதியாகவே காட்டினாள். ஜானகிராமன் நான் அவளை மணந்து கொள்ளத்தான் வேண்டுமென்றும், என் தாயாரிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் தானே எல்லாம் சொல்லி ஏற்பாடு செய்வதாகவும் ஒற்றைக் காலால் நின்றான். நான் மறுத்துவிட்டேன். அதற்காக நான் வருந்தவும் இல்லை. அவன்தான் மிகவும் வருத்தப்பட்டான். நான் மனோவேகங்களை அடக்கி ஒடுக்க நிறையப் படித்தேன். முக்கியமாக அன்றும் இன்றும் நான் ஆர்வத்துடன் படிப்பது உபநிஷத்துக்களே. அதற்குப் பிறகு ரொம்ப நாள் வரை ‘வைதீகம்’, ‘சாமியார்’ என்று என்னை அவன் பரிகாசம் செய்து கொண்டே இருப்பான்.
அன்று விடியற்காலையில் எங்களுக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று மறக்க முடியாதது. நாங்கள் திருநாகேஸ்வரம் அருகே சென்றபோது கும்பகோணம் போகும் ரயில் வரும் நேரம். ஆகவே அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவதற்காக குறுக்கே ஸ்டேஷனுக்கு எதிரே சாலையிலிருந்து கிழக்கே இறங்கினோம். இடையில் ஒரு வடிகால் நீர்த்தேக்கம். அவசரத்தில் இருவரும் அதைக் கடக்க இறங்கினோம். ஜானகிராமன் நாலடி தள்ளி நான் இப்புறம். ஆழமே இல்லை. முழங்காலளவு இருக்கும். அவ்வளவுதான். ஆனால் நான் இறங்கிய இடத்தில் உளை சேறு. என் கால்கள் புதைந்து கீழே, கீழே போய்க்கொண்டே இருந்தேன். இடுப்பளவுப் புதையுண்டுவிட்டேன். மேலும் உள்ளே இறங்குகின்றன கால்கள். இதற்குள் அவன் தாண்டிவிட்டிருந்தான். நான் வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் மரண பயத்தால் ஸப்த நாடியும் ஒடுங்கி எப்படியோ ஆய்விட்டிருந்தேன். இறந்துவிட்டது போலவே தேசலாக ஓர் நினைவு ஓடியது ஞாபகம் இருக்கிறது. மனம் என்பதே மாய்ந்து விட்டது. மறுகணம் ஜானகிராமனையோ மற்ற எதையுமோ நினைவில்லை எனக்கு. சில நிமிஷங்களுக்குப் பின் நான் கரையில் ஈரம், சேறு தோய்ந்த நிலையில் பிரக்ஞை பெற்றபோது, நாலைந்துபேர் என்னைச் சூழ்ந்திருந்தனர். ஒரு கயிற்றைப் பற்றிக் கொண்டிருந்தேன். ஜானகிராமன் கலக்கத்துடன் என்மீது படிந்திருந்த சேற்றை வழித்து எறிந்துகொண்டே கண்ணீர் ததும்ப ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். அவன் “ஐயோ, ஐயோ’’ என்று மிகவும் உரத்த குரலில் கத்தினானாம். சிலர் ஓடிவந்தது என் தோள்களுக்கடியில் கயிறு போட்டுத் தூக்கினார்களாம்.
*
கு.ப.ரா. கும்பகோணத்தில் இருப்பதை அறிந்து, நாங்கள் இருவரும் சென்னையிலிருந்து உத்யோகத்தை விட்டுவிட்டு அவருடன் இருக்க என்றே கும்பகோணம் சென்றோம். இது முதல் கு.ப.ரா. இறந்ததுவரை ஜானகிராமன் தனக்கே உரிய பாணியில் வாசகர் வட்டம் “சிறிது வெளிச்சம்’’ என்ற புத்தகத்தின் பின்னுரை யில் எழுதியிருந்தான். என்னிடம் அது இல்லை. நண்பர்கள் அதை அவசியம் படித்துப் பார்த்தல் வேண்டும்.
“அமரர் கு.ப.ரா.’’வாம். பெரிய கண்றாவி. அவர் அந்த நாட்களில் அடைந்த கஷ்டங்கள், வறுமை, ஏமாற்றங்கள் உரிய மதிப்பைத் தர மறுத்த மறுத லித்த இலக்கிய ஆஷாடபூதிகள் ஆகியவற்றால் அவர் மனம் புண்பட்டு இறந்தார். தகுந்த சத்துணவும், மருந்துகளும் பெற இயலாத வறுமை - மானம் அவரைக் கொன்றது. ஜானகிராமன், அவர் இறந்தபின் இதைச் சொல்லிச் சொல்லி வருந்துவான். இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. கு.ப.ரா. பற்றி எங்கள் மூலம் முன்பு ஜானகிராமனுடைய தந்தை கேள்விப்பட்டிருந்தார். ஜானகிராமன் அவருடன் பழகுவது தைரியத்தைத் தழுவும் முயற்சி என்று அவர் கசந்துகொண்டதுண்டு. கு.ப.ரா.
இறந்த பிறகு ஜானகிராமனிடம் நேரிடையாக இதைத் தகப்பனார் கூறத் தொடங்கினார். “கதை எழுதுவது என்றால் கார் வைத்துக் கொண்டிருக்கும் கல்கி மாதிரி ஆகமுயலுதல் வேண்டும். பணமும் இல்லை, புகழும் இல்லை, இதென்ன தரித்திரக் கும்பல்,’ என்ற அளவுக்குப் போய்விட்டார் அவர். என்னைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு அம்மாதான் உண்டு. மாதம் முப்பது ரூபாய் சம்பாதிக்கும் நான்தான் வீட்டு எஜமானன். கு.ப.ரா. இறந்தபிறகு, இரவு நேரங்களைப் பெரும்பாலும் ஜானகிராமன் என் வீட்டிலேயே கழிப்பான். காரணம், அவர்கள் குடியிருந்த வீடு சிறியது. நான் இருந்தது தர்ம சத்திரம், வாடகை இல்லாமல் கிடைத்த பிதிரார்ஜிதம், எனக்கு விசாலமான ரேழி.
அப்போது என் வாழ்க்கையில் பெரிய பிரச்சினை கல்யாணம். இரண்டாம் கல்யாணம். மூத்தாள் நோய் வாய்ப்பட்டுக்கிடந்தாள். பெண் இருக்க பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. மேலும் நான் பரம்பரை பரம்பரையாய் ஏழை. இதில் எனக்கு ‘ காம்ப்ளெக்ஸ்’ அறவே என்றும் கிடையாது. யதார்த்த நிலை உணர்வு இது. எனக்கு எப்படியாவது இரண்டாவது தாரம் தேடிப்பிடித்துவிட வேண்டும் என்று ஜானகிராமனுக்குப் பிடிவாதம். என் மனத் தில் அந்த ஆசையைத் தூண்ட அவன் அளித்த தூண்டுதல்கள் மிகவும் அந்தரங்கமானவை. நானும் மனைவியாசை கொள்ளத் தொடங்கியிருந்தேன். மன்னார்குடியில் பெண் பார்ப்பதற்காக அவனுக்கு வேண்டிய ஒரு சாதாரண குடும்பம் ஐந்தாறு பெண்கள் உள்ள விதவைத் தாயார் ஒருத்தி எனக்கு ஒருத்தியைக் கொடுக்க முன்வந்து பெண் பார்க்கவும் அழைத்தாள். என்னுடைய தாயார் பல ஜோஸ்யர்களிடம் கேட்டு இன்னும் சில மாதங்களில் மூத்தாள் போய்க் கழிந்துவிடுவாள் என்று தெரிந்து காத்திருந்தாள்.
அப்படியானால் காத்திருப்பதில் என்ன பயன் என்பது ஜானகிராமன் என்ன கதறியும் என் தாயாருக்குச் சம்மதம் இல்லை. நாங்கள் இருவரும் சென்றோம். மன்னார்குடியில் எங்கள் உறவுக்காரர் வீட்டுப் பெண்மணியுடன் பெண் பார்க்கப் போனோம்.
ஐம்பது ரூபாய் சம்பளம் எனக்கு. மிக விரைவில் கதைகள் எழுதி நிறையச் சம்பாதிக்கப் போகிறான் என்றெல்லாம் கதையளந்தான் ஜானகிராமன். தாயாருக்கு முழுச் சம்மதம். ஆனால் அந்தப் பெண் நான் குடுமி வைத்துக்கொண்டிருந்ததால் என்னை மணக்க மறுத்துவிட்டாள். “சரி நாளைக்கு இவன் ‘கிராப்’ வைத்துக் கொள்வான்’’ என்றான் ஜானகி. நான் மறுத்துவிட்டேன். ஒரு பெண்ணின் திமிருக்கு நான் பணிந்து போவதா? இந்த விபரம் நண்பர்களுக்குத் தெரிந்துவிட்டது. பின்னால் நான் என் திருமணப் பத்திரிகையைப் புதுமாதிரியாய் நானே அழைப்பதுபோல் போட்டு நண்பர்களுக்கு அனுப்பியபோது ஸ்ரீ ‘சிட்டி’ அவர்கள், “மிக்க மகிழ்ச்சி, வந்து சேருகிறேன். நீ இன்னும் குடுமிதான் வைத்துக் கொண்டிருக்கிறாயா?’’ என்று கேட்டு எழுதினார். (நான் இன்னும் குடுமிதான் வைத்துக்கொண்டிருக்கிறேன்.)
*
கோயம்புத்தூரில் நடந்த முதல் எழுத்தாளர் மகாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். “வசந்தம்’’ என்று பத்திரிகை நடத்திய ஆர்.திருஞானம், “ரதி’’ ஆர்.ஷண்முக சுந்தரம் இருவரும் ஜி.டி.நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் ஆகியோர் ஆதரவுடன் நடத்தியது அது. மிகவும் நல்ல ஏற்பாடுகள். கல்கி தலைமை. எழுத்தாளர் ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து தங்களைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். ஜானகி என்னையும் இழுத்துக்கொண்டு மேடைக்குப் போனான். “நாங்கள் புத்தம் புதிய எழுத்தாளர்கள் - தமிழ் இலக்கியத்தின் பர்னாட் ஷாவாக மலரப் போகிறவர்கள்,’’ என்று தொடங்கினான். ஒரே கைதட்டல். “நாங்கள் எழுதும் ஒவ்வொரு வாக்கியமும் ‘ஒரிஜினல்’, என்றதும் ஆரவாரம் அதிகம் ஆயிற்று. விஷயம் என்னவென்றால் அப்போது கல்கி, ஸி.என்.அண்ணாத் துரையை பர்னாட்ஷா என்று எழுதியிருந்தார். புதுமைப் பித்தன், “ரஸமட்டம்’’ வைத்துக் கல்கி எழுத்தின் மூலங்களைக் காட்டிச் சாடியிருந்தார். ஜானகிராமன் அறிமுக வார்த்தைகள் கல்கியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அவர் தன் பேச்சில் இதையே பல தடவை தன் கிறிச்சுக் குரலில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். “ஆமாம் டூமாஸ் (டூமா), ஸ்காட் முதலியவர்கள் எனக்குக் குருநாதர்கள். மனித வாழ்க்கையில் மிகவும் ஒளிமறைவுச் சங்கதிகளான ஆண் பெண் உறவு சங்கதிகளை எழுதுவது பெரிய இலக்கியமாகிவிடுமோ?’’ என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டார். ஆனால் அவர் பிற்காலத்தில் எங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டத் தவறியதே இல்லை.
ஜானகிராமனும் பிற்காலத்தில் இதையெல்லாம் “காம்ப்ரமைஸ்’’ செய்துகொள்ளும் பக்குவம் பெற்றுவிட்டான். ஜானகிராமன் தன் புதிய சீர்த்திருத்தக் கருத்துக்களை, கணவனை இழந்த பெண்களுக்கு முடிகளைதல், சாவுக்குப் பிறகு வரும் சடங்கு, சாப்பாடுகள் ஆசாரம், அனஷ்டானம் போலியான வைதீகம் முதலியவற்றில் அவனுக்கிருந்த ஆக்ஷேபணைகளை, அவனுடைய தகப்பனார் இருந்தவரை வெளிக்காட்ட முடியாமல் குமுறிக் கொண்டிருந்தான். அவன் குடும்பத்திலும், நெருங்கிய என் குடும்பம் போன்றவற்றிலும் இவை நேர்ந்ததைப் பொறுக்க முடியாமல் அவன் ஆத்திரப்பட்டதுண்டு. அவனுடைய இளைய சகோதரி மூத்த ஸகோதரியின் புருஷரையே மணக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தபோது அவர்கள் குடும்பத்தில் அது பெரிய குழப்பத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடந்து பொறுமினான் இவன். தந்தையாரிடம் இருந்த மரியாதையால் அடங்கினான். ஆனால் பிற்பாடு அந்த ஸகோதரிகள் இருவருடைய கணவனாய் இருந்தவர் இறந்த பத்தாவது நாள் கழுத்தில் புடவை போடுவது வேண்டாமென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து துடிதுடித்தான். புரோஹிதர் வயதானவர் ஒருவரைத் திட்டியும் விட்டான். அப்போது சமாதானம் செய்யப்போன என்னையும் அடித்துவிட்டான்.
ஜானகிராமனுடைய குடும்பம் நன்கு உலகை அறிந்த, பண்பட்ட, அநுபவம் மிக்க குடும்பம்.
அரட்டை அடிப்பது அவர்களுக்குக் கைவந்த விஷயம். ஒரு தட்டு நிறைய வெற்றிலை, சீவல், வாசனைப் பாக்கு, ஏலக்காய், கிராம்பு முதலியவற்றுடன் உட்கார்ந்தால், இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அவனுடைய மூத்த ஸகோதரி பேசாமல் கேட்கும் வகை. அடுத்தவள் எப்போதும் தாம்பூலம் நிறைந்த அழகான சிரிப்பு தவழும் முகம். மிகவும் நயமாகப் பேசுவாள். இளையவள் உலகத்தை மிக நன்றாகப் பார்த்து அறிபவள். மற்றொருவரைப்போலவே பேசி நடித்துச் சிரிக்க வைப்பவள். ஊர், அக்கம் பக்கத்து வம்புகள் - வதந்திகள் - உண்மை நடப்புகள் யாவும் அடிபடும். பேஷான அரட்டை. அத்தனையும் அவனுடைய நாவல்களுக்குத் தாய்ச் சரக்கு.