அடையாளம் இல்லாத தொண்டன்
அறிவாலயம் வந்தபோதும்
அவனைப் பெயர் சொல்லி
அழைத்தாய்
கண்ணுக்குத் தெரியாத
ஒரு மகுடம் முளைத்தது
அவன் தலையில்.
வகுப்பறையில் உட்கார்ந்து
தமிழ் படிக்காத எங்களை
உன் பொதுக்கூட்டங்களில்
இரண்டு மணி நேரம்
நிற்க வைத்துத்
தமிழ் சொல்லிக் கொடுத்தாய்.
கரகரவென்ற
உன் குரலின் இனிமையில்
சரசரவென்று
சேகரமாயிற்று
சங்கத் தமிழ் எங்களுக்குள் .
உன் உதடுகளில் உச்சரிக்கப்படும்
ஒவ்வொரு பெயரும்
தமிழ் நாட்டின் வரலாற்றில்
இடம் பெற்றது.
ஆகவே உன்னை எதிர்த்தாவது
தம் பெயரை நிலைக்கவைக்க
உன் எதிரிகள்கூட
தவம் கிடந்தனர்.
துரோகங்கள் உன்னை
நிழல் போல் துரத்தின.
நீயோ அவற்றை
மிதித்துக்கொண்டே நடந்தாய்.
வெயிலுக்கோ மழைக்கோ
உனக்குக் குடைகள்
கிடைத்ததில்லை .
ஆனால் எங்கள் மீது
வெயிலும் மழையும்
படாதிருக்க
நீயே குடையாய் ஆனாய்.
தமிழ்நாட்டின்
வெண்கொற்றக் கொடை
அல்லவா நீ.
2000 ஆண்டுப் போருக்கு
20 வயது இளைஞனாய்
இருந்தபோதே
முரசொலி கொட்டினாய்.
போர் என்றால்
வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு
முதல் ஆளாய்க்
களத்தில் நிற்பாய்.
புயல் மழை வந்தால்
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு
முதல் ஆளாய்
நிலத்தில் நிற்பாய்.
போருக்கு நெருப்பாகவும்
வேருக்கு நீராகவும் இருந்தவன் நீ.
பேருக்குத் தலைவன் இல்லை நீ
அதனால்தான்
ஊருக்குள்
யாருக்கும் உன் போல் புகழில்லை.
காயங்களையே
அலங்காரமாக்கிக் கொண்ட
களப்போராளியே
ஆதிக்க வெறியோடு
நுழைய முயன்ற ரயில்களை
தண்டவாளத்தில்
தலைவைத்துப் படுத்துத்
தடுத்தாய் .
பெரியாரின் மூளையையும்
அண்ணாவின்
இதயத்தையும்
ஒருசேர பெற்றவன் நீ.
உன் கல்லறையும்
தமிழ்ப் பகைவர்களின்
சிம்மசொப்பனம்.
எங்களுக்கோ அது அன்பகம்.
உன் பேனாவுக்குள்தான்
எத்தனை கற்பனைகள்
ரோமாபுரி முதல்
சமத்துவபுரம் வரை?
கருக் கொடுத்த
எல்லாவற்றுக்கும்
உன் காலத்திலேயே
உருக் கொடுத்தாய்.
காட்சிகளை எழுதிய
உன் பேனாவால்தான்
ஆட்சிகளையும் எழுதினாய்.
அதுவே தமிழரின் மீட்சியானது.
வள்ளுவத்தை
முதலில்
குறளோவியமாக
ஏட்டில் எழுதியாய்.
பின்
வள்ளுவர் கோட்டமாக
சென்னையில் கட்டினாய் .
பிறகு
வானுயர்ந்த சிலையாக
குமரியில் எழுப்பினாய்.
தமிழ்க் கப்பலுக்கு அதுதான்
கலங்கரை விளக்கு என்று
எளிதாய் உணர்த்தினாய்
எங்களுக்கு.
இறவாப் புகழ் பெற்றவனே
தமிழ்நாட்டின்
தலைமைச் செயலகம் நீ
தமிழ் இலக்கியத்தின்
அறிவாலயம் நீ.
பேருந்தில் வரும்போது
குமரியில் இருந்து
சென்னை வரும் வரை
பாலங்களில் எல்லாம்
உன் பெயரைப்
பார்த்துக்கொண்டே வருவேன்.
அது டெல்லி வரை
நீள வேண்டும் .
நீ அமைத்த
வள்ளுவர் சிலையின் நிழல்
நாடாளுமன்றத்தின் மீதும்
விழவேண்டும்.
ஐ.நா. வையும்
தமிழ் ஆள வேண்டும்.
தமிழன் தலைநிமிர்ந்து
வாழவேண்டும்.