ஐந்தாம் வகுப்பில்... ஒன்பது வயது...
பள்ளிக்கூடத்திற்குச் செல்வதாக கூறிவிட்டு வெளியேறினான்.
அவனுடன் தங்கை இருந்தாள். அவள் இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அருமையான காரக்காய்...
சந்தனத்தின் நிறத்தைக்கொண்ட காரப்பழம்... நன்கு பழுத்த பழத்திற்கு மஞ்சள் குங்குமத்தின் வாசனை...
அதைச் சிறிதும் எதிர்பாராமல் பார்த்தான். கிழக்கு திசையிலிருக்கும் கொக்கறணிக்குளத்தின் கரையில்.... குளத்தின் சரியான மத்தியை நோக்கி சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் கிளையின் ஊஞ்சலாட்டத்தில் காரக்காய் பழுத்து இருக்கிறது. அந்த கிளையின்மீது ஏறுவதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. ஏறிச்செல்வது சிரமமானது.
ஏராளமான கட்டெறும்புகள்....
கட்டெறும்புகளின் கடியைச் சகித்துக்கொண்டு அதன்மீது ஏறிச்சென்று, குளத்தின் நடு மையத்தில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருக்கும் கிளையில் ஏறி காரப்பழத்தைப் பறிப்பது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய காரியமல்ல.
கிளிகளும் குருவிகளும் காரப்பழத்தைச் சுற்றி பறந்து திரிந்து அலகுகளில் ஒவ்வொன்றாக பொறுக்கிக்கொண்டு சென்றன.
உண்ணிமோன் என்ற முட்டாளை அங்கு குழுமியிருந்த அனைவரும் தூண்டினார்கள்.
அதன்மீது ஏறி காரப்பழத்தைப் பறித்துக்கொண்டு வந்து தந்தால், காசு தருவதாகக் கூறினார்கள். கரன்சி தருவதாக கூறினார்கள். கடலை வாங்கலாம்.பொரி உருண்டை, சர்க்கரை, உப்புப் போட்டு அவித்த வேர்க்கடலை, அவித்த வாத்து முட்டை...
உண்ணிமோனின் வாயில் எச்சில் ஊறியது. அந்த காரப்பழம் முழுவதையும் ஒன்றைக்கூட மீதம் வைக்காமல் பறித்துக்கொண்டு கீழே இறங்கினால், அங்கு குழுமி நின்றுகொண்டிருக்கும் பிள்ளைகள் அனைவரும் அவனுடைய ரசிகர்களாக மாறிவிடுவார்கள்.
அவர்களின் கையில் எது இருப்பினும், அதை புத்திசாலித்தனமாக பெற்று விடமுடியும்.
உண்ணிமோன் நினைத்தான்.
இனிமேலும் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. வகுப்பு ஆரம்பிப்பதற்கு இன்னும் அதிக நேரமில்லை.
சூரியன் வானத்திற்கு மேலே நெருப்பைச் சிதறவிட்டுக்கொண்டிருந்தது.ஒளிக்கீற்றுகள் நீரில் விழுந்து கொண்டிருந்தன. உண்ணிமோன் சட்டையை அவிழ்த்தான். சிலேட்டையும் புத்தகத்தையும் தங்கையிடம் கொடுத்துவிட்டு, சட்டையை அவளுடைய தோளில் போட்டான்.
"அண்ணா... நீங்க கார மரத்தில் ஏறவேண்டாம். கிளை முறிஞ்சு நீரில் விழுந்து விடும். செத்துப் போனால், யாருக்குமே தெரியாது. கட்டெறும்பு புற்று வைத்திருக்கும் காரமரத்தில் நீங்க ஏறப் போறீங்கன்னு நான்போய் அம்மாகிட்ட சொல்லட்டுமா?''- பின்விளைவுகளை முன்கூட்டியே கண்டுகொண்டதைப்போல தங்கை அவனிடம் கூறினாள்.
"உன் மோசமான வார்த்தைகளைக் கொஞ்சம் நிறுத்து. நான் இதோ வந்திடுவேன். பத்து நிமிடங்களுக்குள்... நீங்க யாரும் எங்கும் ஓடிப்போகக்கூடாது. இங்கேயே இருக்கணும்.நான் காரப்பழத்துடன் சீக்கிரம் வந்திடுவேன். நாம எல்லாரும் சேர்ந்து காரப்பழத்தைச் சாப்பிடுவோம்.
மீதியுள்ளதை வகுப்பறைக்குக் கொண்டு போய் விற்போம்.'' -உண்ணிமோனுக்குச் சிறிதும் தயக்கமில்லை.
அனைத்திற்கும் தயாரான நிலையில்தான் வந்திருக்கிறான்.
அவனுடைய நடவடிக்கையைப் பார்த்தால் யாருக்கும் அப்படித்தான் தோன்றும்.
"அண்ணா... எனக்கு பயமா இருக்கு. நீங்க விழுந்துட்டா....'' -தங்கை அழுவதற்காக தேம்பினாள்.
"அண்ணனுக்கு எதுவுமே நடக்காதுடா கண்ணு. எனக்கு அவித்த முட்டை கிடைத்தால், முக்கால்வாசியை உனக்குத் தர்றேன்டா கண்ணு.'' -உண்ணிமோன் அவளைத் தேற்றினான். வாத்து முட்டையின் மீதிருக்கும் விருப்பத்தாலோ, அண்ணனின்மீது வைத்திருக்கும் பாசத்தாலோ அவள் எதுவும் பேசவில்லை.
எல்லா பிள்ளைகளும் கொக்கறணிக் குளத்தின் கரையில் காவல் காத்து நின்றிருந்தார்கள்.
உண்ணிமோனின் தங்கையையும் சேர்த்து அவர்கள் ஏழு பேர் இருந்தார்கள். அங்கு வந்தவர்கள் இருபது பேர் இருந்தார்கள்.
மற்றவர்கள் பயம் காரணமாக இடத்திலிருந்து கிளம்பிவிட்டார்கள். மணி அடித்தால் நேரமாகும். வீட்டில் அறிந்தால் அடி கிடைக்கும்.
உண்ணிமோன் இறந்தால், அனைவரையும் போலீஸ் பிடிக்கும். பயத்தால் அவர்கள் ஓடி விட்டார்கள்....
திரும்பிப் பார்க்காமல்.
உண்ணிமோன் மனதில் நினைத்தான்:
"போனவர்கள் யாருக்கும் காரப்பழம் தரக்கூடாது. காத்து நின்றிருப்போருக்குத் தரலாம். அவர்கள் விரும்பும் அளவிற்குச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் விற்கவேண்டும். எனினும், நல்ல ஒரு ஆதாயம் இருக்கும்.''
இரண்டு ஆழாக்கு காரக்காய்க்கு ஒரு அவித்த வாத்து முட்டை...
இரண்டு அவித்த வாத்து முட்டை கிடைத்தால், கையிலிருக்கும்.... பறித்த காரப்பழங்கள் முழுவதையும் கொடுப்பதற்கு தயார். கிளியின் முகத்தைக் கொண்டிருக்கும் அச்சுவைப் பிடித்தால் போதும்.
காரப்பழமென்றால், அவனுக்கு உயிர். காசுக்கு எந்தவொரு பஞ்சமும் இல்லாத கிளியின் முகத்தைக் கொண்ட அச்சு வகுப்பில் படிக்கும் காலம்வரை காரப்பழம் விலைபோய் விடும். அவன் வாத்து முட்டை வாங்கித்தராமல் இருக்கமாட்டான்.
உண்ணிமோன் காரமரத்தின் மீது இறுகப் பற்றியவாறு ஏறினான்.
காரமுட்களின் ஊசி முனைகள் அவனுடைய சரீரத்தில் பட்டு கீறல் உண்டாயின. எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை.
ஓராயிரம் கட்டெறும்புகள் அவனுடைய சரீரத்தில்