Leo

கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார். அவரின் கையில் மின்சாரத்தால் செயல்படக்கூடிய ஒரு எந்திரம் இருந்தது. அதை பயன்படுத்தி, மின்சாரம் என்றால் என்ன என்பதை மாணவர்களுக்கு விளக்கிக் காட்டுவார்.

சில்க் துணியைக்கொண்டு ஸ்படிகத்தில் தேய்த்து, தொடர்ந்து ஸ்படிகத்திற்கருகில் ஒரு பித்தளையாலான கதவின் கைப்பிடியைக் கொண்டு வந்து, ஸ்படிகத்திலிருந்து பித்தளையாலான கதவின் கைப்பிடிக்கு ஒரு மின்சக்தியை அவர் வரவழைத்தார்.

Advertisment

முத்திரை வைப்பதற்கு பயன்படக்கூடிய அரக்கு, மஞ்சள் நிற பிசின் (ஆம்பர்)...இவற்றிலிருந்தும் இதைப் போல் மின்சக்தி உண்டாகும் என்பதை அவர் விளக்கிக் கூறினார். தூவல்களும் காகிதத் துண்டுகளும் மின்சக்தியால் ஈர்க்கப்படவோ விலக்கப்படவோ செய்யும் என்பதை நிரூபித்துக் காட்டி, அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை விளக்கவும் செய்தார். மின்சக்தியைக் கொண்டு அனைத்து வகையான சோதனைகளையும் நடத்தி, அவற்றை அவர் மாணவர்களுக்குக் காட்டினார்.

ஒருநாள் அவருடைய மனைவிக்கு உடல்நல பாதிப்பு உண்டாகி விட்டது. அவர் ஒரு மருத்துவரை வரவழைத்து, அவளை எப்படி குணப்படுத்துவது என்பதைப் பற்றி ஆராய்ந்தார். அவளுக்கு ஒரு தவளை சூப் உண்டாக்கிக் கொடுக்குமாறு மருத்துவர் அவரிடம் கூறினார். சாப்பிடும் வகையில் இருக்கக்கூடிய தவளைகளைப் பிடிக்கும்படி கால்வனி உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் தவளைகளைப் பிடித்துக்கொன்று,அவருடைய மேஜையில் கொண்டு வந்துவைத்தார்கள்.

தவளைகளுக்காக சமையல்காரர் வந்து சேர்வதற்கு முன்னால், கால்வனி தன் மின் எந்திரத்தை மாணவர்களுக்குக் காட்டினார். அதன்வழியாக மின்சக்தி பாய்ந்து கொண்டிருந்தது. திடீரென மேஜையின் மீதிருந்த இறந்து விட்ட தவளைகளின் கால்கள் அசைவதை அவர் பார்த்தார். அவர் கூர்ந்து கவனித்தபோது, ஒவ்வொரு முறையும் எந்திரத்தின் வழியாக மின்சக்தி பாயும்போதெல்லாம் தவளையின் கால்கள் அசைவதைப் பார்த்தார். பல தடவைகள் பலமான காற்று கடந்து சென்றாலும், தவளைகள் அசையவில்லை.

Advertisment

கால்வனி அவற்றைக் கீழே வைப்பதற்கு முயற்சித்தபோது, ஒரு தவளையின் கால் இரும்புக் கழிவு நீர்குழாயில் தட்ட, உடனடியாக அதுஅசைந்தது. அதைக் கீழே கொண்டு வந்து, கால்வனி ஒரு சோதனையை நடத்தினார்.

செம்புக் கொக்கியில் ஒரு இரும்புக் கம்பியை இணைத்தார். தொடர்ந்து தவளையின் கால் பகுதியை கம்பியைக் கொண்டு தொட்டபோது, அது அசைந்தது. உயிரினங்களில் மின்சக்தி இருக்கும் காரணத்தால் தான் அவை உயிருடன் இருக்கின்றன என்பதை கால்வனி உறுதிப்படுத்திக் கொண்டார். மின்சக்தி மூளையிலிருந்து உடலின் சதைக்குப் பாய்கிறது என்றும், அது உயிரினங்களின் அசைவிற்குக் காரணமாக இருக்கிறது என்றும் அவர் கருதினார்.வேறு யாரும் இதற்காக முயற்சி செய்யாத காரணத்தால், இதைப் பற்றி அதிகமாக எதுவும் யாருக்கும் தெரியவில்லை.

அதனால், அவர்கள் அனைவரும் கால்வனியை நம்பினார்கள். ஆனால், அதே நேரத்தில்... நிறைய படித்த வேறொரு மனிதரான வோல்டா தன்னுடைய பாணியில் சோதனைகள் நடத்தி, கால்வனி தவறாகக்கூறிவிட்டார் என்று அனைவருக்கும் முன்னால் தெளிவுபடுத்தினார். கால்வனி சோதனை செய்ததிலிருந்து வேறுபட்ட முறையில் தவளைகளைத் தொடவும் செய்தார்.அதாவது... இரும்பு கம்பியிலிருந்த செம்பு கொக்கியால் அல்ல. வேறு மாதிரி... செம்புக் கம்பியிலிருந்த செம்புக் கொக்கியாலும், இரும்புக் கம்பியிலிருந்த இரும்புக் கொக்கியாலும் தவளைகளைத் தொட்டுப் பார்த்தார். அப்போது தவளைகள் அசையவேயில்லை. செம்புக் கம்பியுடன் இணைக்கப்பட்ட இரும்புக் கம்பியைக்கொண்டு தொட்டபோது மட்டுமே தவளைகள் அசைந்தன.

மின்சக்தி, இறந்த தவளைகளில் அல்ல... இரும்பிலும் செம்பிலும்தான் என்று வோல்டா கருதினார். வோல்டா அதை மீண்டும் சோதித்துப் பார்த்து,அதுதான் சரியானது என்பதையும் கண்டுபிடித்தார். இரும்பையும் செம்பையும் சேர்த்து வைத்துப் பார்த்தபோதெல்லாம் மின்சக்தி உண்டானது. இந்த மின்சக்திதான் தவளைகளின் கால்கள் அசைந்த செயலுக்குப் பின்னால் இருந்திருக்கிறது. முன்பு தயாரித்த முறையிலிருந்து வேறுபட்ட முறையில் மின்சக்தியை உண்டாக்க வோல்டா முயற்சித்தார். ஸ்படிகத்தையோ முத்திரை பதிக்க பயன்படும்அரக்கையோ வைத்துத்தான் அவர்களுக்கு இதுவரை மின்சக்தி கிடைத்துக் கொண்டிருந்தது.

ஆனால், இரும்பையும் செம்பையும் சேர்த்து வைத்தபோது, வோல்டாவிற்கு மின்சக்தி கிடைத்தது. இரும்பும் செம்பும் அல்லாமல் வேறு உலோகங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து வைத்து வோல்டா மின்சக்திக்காக முயன்றார். வெள்ளி, ப்ளாட்டினம், துத்தநாகம், ஈயம், இரும்பு ஆகிய உலோகங்களை வேறுபட்ட வகையில் சேர்த்து மின்சக்தியை உண்டாக்கினார். வோல்டாவிற்குப் பிறகு, உலோகங்களுக்கு மத்தியில் நீரையும் அமிலத்தையும் பல வகைப்பட்ட திரவங்களையும் நிறைத்து, கிடைக்கக்கூடிய மின்சக்தியின் அளவை அதிகரிக்கும் முயற்சியைஅவர்கள் நடத்தினார்கள். இந்த திரவங்கள் மின்சக்தியை மேலும் அதிகரிக்கச் செய்தன.

பொருட்களை ஒன்றோடொன்றுடன் உரசி, மின்சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை தேவையில்லை என்றாகிவிட்டது. பலவகைப்பட்ட உலோகங்களை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் திரவத்தை நிறைத்தால், அந்த பாத்திரத்தில் மின்சக்தி உண்டாகும். பிறகு....கம்பிகளிலிருந்தும் மின் அலைகள் புறப்படும். இப்படிப்பட்ட மின்சக்தியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து மக்கள் அதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மின்சக்தியைக் கொண்டு பொன், வெள்ளி ஆகியவற்றைப் பூசக்கூடிய ஒரு முறையைஅவர்கள் கண்டுபிடித்தார்கள்.

மின்விளக்கையும், தொடர்ந்து மின்சாரத்தை பயன்படுத்தி மிகவும் தூரத்திலுள்ள இடத்துடன் தகவல் தொடர்பு கொள்வதற்குரிய செய்திகளை அனுப்பக்கூடிய முறையையும் கண்டுபிடித்தனர். இதற்காக பலவகைப்பட்ட உலோகங்களின் துண்டுகளை பாத்திரங்களில் வைத்து, அதில் திரவத்தை ஊற்றுகிறார்கள். இந்த பாத்திரங்களில் மின்சக்தி சேகரிக்கப்படுகிறது. பாத்திரங்களிலிருந்து கம்பிகளின் வழியாக மின்சக்தி வேண்டிய இடத்தை அடைகிறது. தொடர்ந்து அங்கிருந்து கம்பி கீழே வருகிறது. மின்சக்தி தரையிலிருந்து பாத்திரத்திற்குப் பாய்கிறது. பூமியிலிருந்தும்...பிறகு... இன்னொரு கம்பியின் வழியாக அது செல்கிறது.

இவ்வாறு மின்சக்தி சுற்றிக்கொண்டேயிருக்கும். ஒரு வளையத்தைப் போல...கம்பியிலிருந்து தரைக்கு... தொடர்ந்து தரையின் வழியாக கடந்து வேறொரு கம்பியின் வழியாக பாய்ந்து.. சுற்றி...மீண்டும் பூமிக்கு. மின்சக்தி எந்த திசைக்கும் பயணிக்கும்... ஒரு ஆளுக்கு எந்த திசைக்கு அதை அனுப்ப வேண்டும் என்பதைப் பொறுத்து.. முதலில் கம்பியின்வழியாக சென்று அதுவால் பூமிக்குத் திரும்பி வரமுடியும். இல்லாவிட்டால்...முதலில் பூமிக்குச் சென்று விட்டு, பிறகு கம்பியின் வழியாக திரும்பி வர முடியும்.

கம்பிக்கு மேலே... சில சின்னங்கள் இருக்குமிடத்தில்...ஒரு கைகாட்டி இருக்கிறது. மின்சக்திகம்பியின் வழியாக கடந்து... பிறகு...பூமியின் வழியாகவும் கடந்து திரும்பி வரும்போது, கைகாட்டி ஒரு திசையை நோக்கி அசைகிறது. அதேபோல மின்சக்தி பூமியின் வழியாக கடந்து மீண்டும் கம்பியின் வழியாக திரும்பி வரும்போது, மறு திசையை நோக்கி அசைகிறது. இந்த கைஅசையும் இடங்களில் சில சின்னங்கள் இருக்கின்றன. இந்த சின்னங்களை பயன்படுத்தித்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குடெலிக்ராஃப் வழியாக தகவல்களைஅனுப்புகின்றனர்.

-லியோ டால்ஸ்டாய்

தமிழில்: சுரா