ரலாற்றைத் திரிப்பது- பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்துவது- மொழி ஆதிக்கம் செலுத்துவது- இலக்கியத்தில் இடைச்செருகல் செய்வது இவை ஆரியத்தின் அடிப்படைப் ‘பண்புகளாக விளங்குகின்றன. ஆரியத்தை உயர்த்திப் பிடித்த ஹிட்லர் முதல், அந்த ஹிட்லரின் இந்தியப் பதிப்புகளாக உள்ள ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வரை இந்த ‘பண்பு’ மாறவேயில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டிய இடத்தில் சரஸ்வதி வந்தனத்தை திணிப்பார்கள். தமிழ் நமக்குத் தாய்மொழி என்று சொன்னால், சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்பார்கள். இந்திய அரசியல் சட்டத்தின்படி ‘தேசிய மொழி’ எனத் தனியாக ஒன்று இல்லை என்றாலும், ‘இந்தி’தான் தேசிய மொழி என எளிதாக நம்பச்செய்வார்கள். தமிழின் முதுபெரும் இலக்கியங்கள் வடமொழியின் தழுவல் என்பார்கள். சந்து கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் சிந்து பாடுவார்கள்.

வடமாநிலங்களைப் போல தென்மாநிலங்கள் இவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு என்பது ஏன், எப்படி என்று கேள்வி கேட்கக்கூடிய மாநிலம். அதனால், வழக்கமான சூத்திரத்தைக் கைவிட்டு, ‘மண்ணின் மைந்தர்கள்’ போல வேடமிடும் சூத்திரத்தைக் கையில் எடுப்பது ஆரியத்தின் வழக்கம். வடமாநிலங்களில் மதவெறி ஊர்வலங்களில் திரிசூலத்தைக் கையில் எடுத்தவர்கள், மதநல்லிலிணக்க மண்ணான தமிழகத்தில் சூலத்தைத் தொடாமல் வேல் எடுத்து யாத்திரை போகிறார்கள்.

tvv

Advertisment

வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு ‘பகவத் கீதை’ கொடுக்கும் பிரதமருக்கு தமிழ்நாட்டின் ஞாபகம் வந்து விட்டால், திருக்குறள் சொல்லிலி கைத்தட்டல் வாங்குவார். பிறப்பின் அடிப்படையில் நால் வருணங்களை உருவாக்கியது நானே என கடவுளே சொல்வது போன்ற ஸ்லோகங்களைக் கொண்டது பகவத்கீதை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற பேதமற்ற சமுதாயத்தைப் போற்றும் உயர்ந்த அறநெறி நூல் திருக்குறள். ஆரியத்தின் சனாதன வருணாசிரம வேத மரபை எதிர்க்கும் சமூக நீதிக் குரலே குறட்பாக்கள்.

இந்த உண்மை, ஆரியத்திற்கு கசக்கும். அதனால், வரலாற்றைத் திரிக்கும். ‘அடுத்துக் கெடுப்பது’ என்கிற திரிதராஷ்ட்ர ஆலிலிங்கனம் ஆரியத்திற்கு அத்துப்படி. வடநாட்டிலிருந்து தருண் விஜய்க்கள், திருக்குறளின் பெருமையைப் பேசுவார்கள். திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்பார்கள். நமக்கு உச்சி குளிர்ந்துவிடும். அரசாளும் ஜனநாயகப் பேரரசர்கள், இலக்கியத்தை ஆளும் கவிப்பேரரசுகள் உள்ளிட்டோர் புளகாங்கிதமடைந்து விடுவார்கள். வள்ளுவரை கங்கை கரைக்கு கொண்டுசெல்வதாகக் கூறி, பசப்பு வார்த்தை பேசும் ஆரியம். அதை நம்பி, நம்மவர்கள் ஆர்வத்துடன் வள்ளுவர் சிலையை அனுப்பி வைத்தால், சனாதன வருணாசிரமக் கூட்டம் அதைக் குப்பைத் தொட்டியில் வீசும். இதுதான் அவர்களின் உண்மையான உள்ளம்.

நான்கு வேதத்தின் கருத்துகளை உள்ளடக்கிய தமிழ் நெறியே திருக்குறள் எனத் திடீர் ஆய்வுகளைத் தமிழகத்தைச் சேர்ந்த தங்களின் இலக்கியக் கூலிப்படைகளை வைத்து வெளியிடுவார்கள். ‘மனுநீதியை தடை செய்ய வேண்டுமென்றால் திருக்குறளையும் தடை செய்யவேண்டும்’ என்று எழுத வைப்பார்கள். அத்துடன், நிற்கமாட்டார்கள். வள்ளுவருக்கு காவி பூசுவார்கள். பூணூல் போடுவார்கள். மொட்டை அடித்து குடுமி வைப்பார்கள். கடைசியில், வள்ளுவரை ஆரியத்தின் வடிவமாக்கிவிடுவார்கள். இதுதான் தமிழ் மீதும், திருக்குறள் மீதும் அவர்கள் காட்டுகிற அக்கறையின் உள்நோக்கம்.

Advertisment

tt

தமிழ்நாட்டில் வள்ளுவருக்கு காவி கட்டியபோது, தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆரியம் வாங்கிக் கட்டிக்கொண்டது. அதனால், மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் 8-ஆம் வகுப்பு புத்தகத்தில் ‘வள்ளுவர்-வாசுகி’ கதை என்ற பெயரில் வள்ளுவருக்கு காவி உடுத்தி, பட்டை போட்டு, பூணூல் அணிவித்து, மொட்டை அடித்து, குடுமியும் வைத்தது போன்ற படத்தை வரைந்து, மாணவர்களின் மனதில் தங்கள் வரலாற்றுத் திரிபை பதியம் போடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு தமிழகத்தின் கல்வியாளர்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, “வள்ளுவர் எப்படி இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா? அவரை எப்படி வரைந்தால் என்ன?’’ என்று எகத்தாளமான கருத்துகளை தனது கூலிக்குரல்களால் வெளிப்படுத்தியது ஆரியம்.

திருவள்ளுவர் எப்படி இருந்தார் என்பது எவருக்கும் தெரியாது.

ஆனால், அவர் தமிழ்ப் புலவராக இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆரியத்தின் சனாதன கருத்துகளுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் மானுடத்தைப் போற்றும் அறநூலான திருக்குறளைத் தமிழில் எழுதினார் என்பதை உலகம் அறியும். எனவே, தமிழ்ப் பண்பாட்டில் அடிப்படையில் அவருடைய உருவம் வரையப்பட்டது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்திலிலிருந்தே வள்ளுவருக் கான உருவம் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திராவிட மொழிகள் குறித்தும் திருக்குறள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்ட பிரிட்டிஷ் அதிகாரி எல்லீஸ், வள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டு சிறப்பு செய்தார். அந்த வள்ளுவர் உருவம் தற்போது நாம் பரவலாகக் காணும் வள்ளுவர் வடிவத்தைப் போன்றதல்ல. அது சமண-பவுத்த துறவியர் போன்ற தோற்றம் தரக்கூடியது. அதன்பின் வெவ்வேறு வடிவங்களில் வள்ளுவரின் உருவத்துடனான திருக்குறள் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

தற்போது காணும் உருவம் என்பது ஓவியர் வேணுகோபால சர்மா வரைந்ததாகும். தமிழறிஞர்களாலும் அரசியல் தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு வடிவத்திலானது, வேணுகோபால சர்மா வரைந்த ஓவியம். தலையில் கொண்டை, தாடி, உடம்பின் குறுக்கே வெள்ளைத் துண்டுடன் சம்மணமிட்டு அமர்ந்து எழுத்தாணியையும் ஓலைச் சுவடியையும் கைககளில் வைத்திருப்பது போன்ற அந்த ஓவியமே, 1964ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் பக்தவத்சலம் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும்.

தமிழக அரசின் ஏற்பினைப் பெற்ற அந்தப் படம்தான், இந்திய அரசு வெளியிட்ட திருவள்ளுவர் அஞ்சல் தலையிலும் இடம்பெற்று ஒன்றிய அரசின் ஏற்பிற்குரியதாகவும் உள்ளது. அத்துடன், தமிழ் மக்கள் மனதில் நிலைத்து நின்ற திருவள்ளுவரும் அந்த ஓவியத்தில் உள்ளவரேயாவார். காரணம், நம் பண்பாட்டின் அடையாளங்கள் அதில் வெளிப்பட்டன. அரசு அலுவலகங் களில், பள்ளிகளில், அரசுப் பேருந்துகளில் என தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்தது வள்ளுவரின் தோற்றம்.

அமர்ந்த நிலையில் உள்ள வள்ளுவர், எழுந்து நின்றால் எப்படி இருக்கும் என்பதனை பேரறிஞர் அண்ணா தலைமையிலான தமிழக அரசு 1968-ல் சென்னை யில் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது கடற்கரையில் திறக்கப்பட்ட சிலை எடுத்துக்காட்டியது.

உலகம் போற்றும் அறநூலைத் தமிழில் தந்த வள்ளுவரைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டின் தென்முனையும், இந்தியாவின் தெற்கு எல்லையுமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் கடல் பகுதியில் உள்ள பாறையின் மீது 133அடி உயரத்திற்கான, நின்ற நிலையிலான கம்பீரமான வள்ளுவர் சிலையை சிற்பி கணபதி ஸ்தபதியின் கைவண்ணத்தில் உருவாக்கி, புத்தாயிரம் ஆண்டின் தொடக்க நாளில் (1-1-2000) திறந்து வைத்தார் தமிழகத்தின் முதல்வரான கலைஞர்.

தமிழர்கள் குமரி முனை வள்ளுவரை பெருமிதத்துடன் பார்த்துப் பரவசமடைகிறார்கள். ஆரியமோ அதைப் பார்த்து அலறுகிறது. காரணம், 133 அடி உயர வள்ளுவர் சிலை நிறுவப்படுவதற்கு முன்பு வரை அங்கே பார்வையாளர்களை ஈர்த்தது விவேகானந்தர் மண்டபம். அதன் மீது காவிக்கொடி பறக்கும். இப்போதும் அது அப்படியே இருக்கிறது. ஆனால், அதனைவிட சிறப்பும் பெருமையும் மிக்க வள்ளுவர் சிலையை திராவிடக் கட்டடக் கலையின் நுணுக்கத்துடன் தமிழர்களின் அடையாளமாக நிறுவிவிட்டார் கலைஞர். அதுதான் ஆரியத்தின் வயிற்றெரிச்சலுக்கு காரணம். அதனால், வள்ளுவருக்கு காவி பூசி, குடுமி வைத்து இழிவுபடுத்த நினைக்கிறது. அட மூடர்களே.. வள்ளுவருக்கு காவி கட்டினால், குடுமி வைத்தால் ஆரியராகிவிடுவாரா? அவர் என்றென்றுத் தமிழினத்தின் உலக அடையாளம்.

வள்ளுவர் மீது கைவைக்கும் ஒவ்வொரு முறையும் தமிழர்கள் பொங்கி எழுகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் வரையப்பட்ட வள்ளுவர் படத்திற்கும் அதே எதிர்ப்புதான். உடனே, “இது தனியார் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். இதனை பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் திருப்புகிறார்கள்’’ என்ற ஓலம் கேட்டது.

‘நூல்’ விட்டு ஆழம் பார்க்கும் ஆரியத்தின் சூதுகளைத் தமிழகம் நன்றாகவே அறிந்திருக்கிறது. அதனால்தான், எதை நோக்கி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ அதை நோக்கித் தெரிவித்தது. மக்கள் மனதில் நிறைந்த வள்ளுவர் படத்தை வரைந்த ஓவியர் சாமிநாத சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா, குடுமி வைத்த வள்ளுவர் படத்தை வெளியிட்ட மேக்மிலன் பதிப்பகத்திற்கு கண்டனக் கடிதம் எழுதினார். தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் கேட்டது. இதனையடுத்து, அந்தப் பதிப்பகம், குடுமி வள்ளுவரை நீக்கிவிட்டு, வெள்ளைத் துண்டு அணிந்த வள்ளுவரைப் பதிப்பித்திருக்கிறது.

உள்ளத்தில் நிறைந்த வள்ளுவரின் உருவத்தை மாற்ற நினைக்கும் ஒவ்வொரு முறையும் தன் உண்மை உருவத்தின் கோரத்தன்மையைக் காட்டிவிடுகிறது ஆரியம்.