ண் மூடி இருப்பது தியானம் என்றால், உறங்குவது கூட தியானம் தான். அதனடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களாவது தியானத்தில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். எல்லாரும் ஒரு விழாவில் எழுந்து நிற்கும்போது, ஒருவர் மட்டும் உட்கார்ந்தபடி கண்கள் மூடி இருக்கிறார் என்றால் அது தியாகம் அல்ல, ஆணவத்தின் அடையாளம்.

stalin

நாடு முழுவதும் தேசிய கீதம் பாடப்படுகிறது. திரையரங்குகளிலும் இசைக்கப்படுகிறது. எந்த மாநிலத்தவராக இருந்தாலும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டியது குடிமக்களின் கடமை. நாட்டுப் பண் என்பது வங்காள மொழியில் உள்ளது. நோபல் பரிசு பெற்ற கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் எழுதியது. அதன் அர்த்தம் என்ன என்று தெரியாவிட்டாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து எல்லாரும் எழுந்து நிற்பது வழக்கம்.

இந்தியா என்பது ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். மாநிலங்களுக்கென அரசு, சட்டம், உரிமைகள் ஆகியவை உண்டு. தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் இருந்தபோது, மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் தமிழ் மொழியின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார்.

1891ல் பேராசிரியர் சுந்தரனார் வெளியிட்ட மனோன்மணியம் நாடகக் காப்பியத்தில், ‘தமிழ்த் தெய்வ வணக்கம்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற ‘நீராருங் கடலுடத்த’ என்ற பாடலை, தமிழறிஞர் உமாமகேசுவரனாரின் கரந்தை தமிழ்ச் சங்கத்திலும் தமிழ் அமைப்புகளிலும் 1914ஆம் ஆண்டு முதல் பாடி வந்தனர். தமிழறிஞர்கள்-ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அதனைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக தேர்வு செய்து, 23-11-1970 அன்று அதற்கான அரசாணையை வெளியிட்டது கலைஞர் தலைமயிலான அரசு.

அந்தப் பாடலில், ‘எத்திசையும் புகழ் மணக்கும் தமிழ் அணங்கை‘ வாழ்த்துவதுடன், எல்லையில்லாப் பரம்பொருள் போல தமிழ் மொழி நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது என்று போற்றி, “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்தே உதித்தே ஒன்று பலவாகிடினும், ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து-ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து வாழ்த்துதுமே’ என்றும் பாடியுள்ளார் சுந்தரனார்.

நம் மொழியை வாத்தும்போது, இன்னொரு மொழி அழிந்து போன கதையைச் சொல்லித் தாழ்த்த வேண்டாம் என்பதால் அந்த வரிகள் தவிர்க்கப்பட்டன. அதனால், ‘எத்திசையும் புகழ் மணக்கும் இருந்த பெரும் தமிழணங்கே‘.. என்ற வரியைத் தொடர்ந்து, ‘உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்ற வரிகளுடன் தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டது.

Advertisment

ee

இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். கர்நாடக இசைக்குயில் எனப் பாராட்டப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியை பாட அழைத்தபோது அவர் தயங்கினார். பாட விரும்பவில்லை. தமிழ்த் திரையிசையால் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்த டி.எம்.சௌந்திரராஜனும் பி.சுசீலாவும் பாடினார் கள். தமிழ்த்தாய் வாழ்த்து இசை வடிவ மானது. அது அரசு விழாக்கள், கல்வி நிலையங்களில் இசைக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றது.

ஜன கன மன பாடலின் அர்த்தம் தெரியாவிட்டாலும், அதற்குரிய மதிப்பை உணர்ந்து நாம் எழுந்து நிற்பதுபோல, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்ட தமிழ் மொழியை அறியாத எவராக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நின்று மரியாதை செய்தனர். இது, தமிழுக்கு கிடைத்த மேலும் ஒரு சிறப்பு. கலைஞர் அரசு உருவாக்கிய, மாநில உரிமைக்கான அடையாளம்.

கடந்த 50 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி ஏறத்தாழ 30 ஆண்டுகள் நடைபெற்ற நிலையிலும், அந்த ஆட்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, அதற்குரிய மரியாதை வழங்கப்பட்டது. எளிமையாக சொல்வதென்றால், ‘நீராருங் கடலுடத்த’ என்பது தமிழ்நாட்டின் தேசிய கீதம்.

அத்தகைய வாழ்த்து ஒரு விழாவில் இசைக்கப்பட்டபோது, காஞ்சி மட தலைவர் விஜயேந்திரர் எழுந்த நிற்கவில்லை. உட்கார்ந்து கொண்டு கண் மூடியிருந்தார். இது அவமதிப்பு எனத் தொடரப்பட்ட வழக்கில், “அவர் கண்மூடி தியானத்தில் இருநதார். அவமதிக்கவில்லை” என வாதம் செய்யப்பட்டது. “தமிழ்த் தாய் வாழ்த்து என்பது இறை வணக்கப் பாடல் போன்றதுதான். அது தேசிய கீதம் அல்ல. அது இசைக்கப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை” என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் டிசம்பர் 17ஆம் நாள் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதன்படி, “நீராருங் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட் அனைத்து பொது அமைப்பு களின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்கும் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். 55 நொடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்), மூன்றன் நடையில் பாடப்பட வேண்டும். (இப்போது பாடுகின்ற அதே முறைதான்).

தனியார் நிறுவனங்களின் நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும். பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணை போதுமா? சட்டம் தேவைப்படுமா? மாநில அரசுக்கு தனியாகப் பாடல் உண்டா? அதில் நீக்கப்பட்ட வரிகள் சேர்க்கப்படுமா? என்றெல்லாம் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டுக் கதறுகிறவர்கள் உண்டு. அவர்களின் கதறலை அரசு பார்த்துக் கொள்ளும் நாம் செய்ய வேண்டியது, இசைவட்டுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காமல், ஒவ்வொருவரும் அதை முழுமையாகப் பாடுகின்ற பயிற்சியை அளிப்பதாகும். பாடிப் பழகும்போது நாவில் இனிக்கும் நற்றமிழ். அடுத்தடுத்த தலைமுறைகளிலும் சீரிளமைத் திறத்துடன் சிறந்தோங்கட்டும் நம் தமிழ்.